Sunday, December 11, 2011

சிறார்களுக்கு (10)

        10. சண்டைக் கோழி

தற்செயலாக, ஒரு சேவல் சண்டையினைப் பார்க்க நேர்ந்த பண்ணையார் ஒருவருக்கு, தானும் ஒரு சண்டைச் சேவலை வளர்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது. சேவல் ஒன்றினை வாங்கி, பயிற்சியாளரிடம் கொடுத்தார். பயிற்சியாளர் ஒரு மாதம் கழித்து வந்து சேவலைப் பார்க்குமாறு வேண்டினார்.

ஒரு மாதம் கழித்து வந்தார் பண்ணையார். அவரைப் பார்த்ததுமே, ஆவேசமாக சிலிர்த்துக் கொண்டு, இறகுகளை அடித்துக் கொண்டது சேவல். பண்ணையாருக்கு பரம திருப்தி. ஆனால் பயிற்சி யாளரோ, சேவல் இன்னும் தயாராகவில்லை; அடுத்தமாதம் வாருங்கள் என, பண்ணையாரை அனுப்பிவிட்டார்.

அடுத்த மாதம் வந்து பார்த்தபோது, போன மாதம் அளவுக்கு சீறி எழ வில்லை சேவல். எழுந்து நின்று ‘கெக்..கெகே ..கெக்..என்றது. சந்தேகமாகப் பார்த்தார், பயிற்சியாளரை. அவரோ அலட்டிக்கொள்ளாமல், மீண்டும் அடுத்த மாதம் வந்து பார்க்கும்படி சொல்லி விட்டார்.

மூன்றாம் முறை பண்ணையார் வந்தபோது, சேவல் எழுந்திருக்கவே இல்லை! இந்த பயிற்சியாளரை நம்பி மோசம் போனோம் என வருந்தினார் பண்ணை. ஆனால் பயிற்சியாளர், சேவல் இப்போது முற்றிலும் தயார்; எடுத்துச் செல்லுங்கள் என்றார்.

ஒன்றும் புரியாமல் விழித்த பண்ணைக்கு விளக்கினார். “முதல் மாதம் வந்தபோது, சேவல் தன்னை யாரோ தாக்க வருவதாக பயந்து சிலிர்த்துக் கொண்டது. இரண்டாவது மாதம்,  பயம் கொஞ்சம் போய்விட்டது!  எனினும் படபடப்பு நீங்கவில்லை. மூன்றாவது மாதம்,  முழுமையாக நம்பிக்கையும், திறனும் பெற்றுவிட்டசேவல் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை!  இதுவே சரியான பக்குவம் என்றார்!

 ======================================================================
நீதி: அரைகுறைகள் மட்டுமே, சுயதம்பட்ட தம்பிரான்களாக இருப்பர். அலட்டிக் கொள்ளுவர். முழுத்திறமையாளிகள் அமைதியாகவே காணப்படுவர். நிறைகுடம் தளும்பாது.
=================================================================

1 comment:

  1. மிகவும் சரியான அறகருத்து பாராட்டுகள் சிறப்பு தொடர்க

    ReplyDelete