Sunday, April 24, 2011


ஸ்ரீ சத்ய சாய்பாபா இன்று மறைந்தார்.  

தன்னுடைய காலத்தில் கோடானு கோடி மக்களின் அன்புக்கும்,  பக்திக் கும் பாத்திரமாக இருந்திருக்கிறார்.  பல்லாயிரக்கணக்கானவர்கள்  
சாய்பாபாவை 'குரு' வாக பாவித்துக் கொண்டுள்ளனர்.  ஆன்மீகத் தலைவர், சமூக சேவகர். 

சாதாரணர்கள் ஆரம்பித்து பல்வேறு துறை பிரபலங் கள் வரை பலரது அன்பினைப் பெற்றவர்.

வறண்ட 'புட்டப்பர்த்தி' என்னும் கிராமத்தை உலகறியச் செயதவர். 
பிரசாந்தி நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு மருத்துவ மனைகள், குடி நீர்த்திட்டங்கள், கல்விக் கூடங்கள், பொது சுகாதாரம், விளயாட்டு என
பல துறைகளுக்கும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பல உதவிகளை 
செய்தவர்.  அவருடைய போதனைகள் பலவும் உண்மை, அமைதி, அன்பு, 
அகிம்சை,ஒழுக்கமான, அர்த்தமுள்ள வாழ்க்கை ஆகியவற்றை வலியுறுத்துவதாக இருந்தன.

ஊழல் செய்வதற்காகவே திட்டங்கள் போடும் அரசியல் வாதிகள் உலாவும் இக்காலத்தில் ஒரு "தனி நபர் நிறுவனமாக" ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியவர். சென்னையின் தாகத்தை தீர்க்கும் தெலுங்கு கங்கை திட்டத்திற்கு ஏராளமாக உதவி செய்தவர். 

அவருடைய நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிய கருத்துக்கள் எவ் வாறாயினும் ஒழுக்க நெறிகளும், மற்றவர்களுக்கு உதவ நிணைக்கும் மனோபாவமும் அருகி வரும் இந்த நாட்களில் நல்லொழுக்கத்தை போதித்தவரும்,  இக்கருத்துக்கள் அதிக எண்ணிக்கையான மக்களிடையே செல்லும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவரும், சிறந்த சமூக சேவகருமான 'சத்த சாய் பாபா' வின் மறைவு சமீப காலங்களில் ஈடு செய்யமுடியாதது.

Wednesday, April 20, 2011

Justice delayed is justice denied


நினவிருக்கிறதா? சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி கொலை செய்யப்பட்டார்.  இவ்வழ‌க்‌கி‌‌ல் ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு, March 11, 1998 அன்று கடலூர் கோர்ட்டில் இர‌ட்டை ஆ‌யு‌ள் 
த‌ண்டனை வழங்கப்பட்டது.  இவ்வுத்தரவினை ரத்து செய்தது செ‌ன்னை உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌ம்.  இப்போது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உயர் நீதிமன்ற தீர்ப்பினை ர‌த்து செ‌ய்துள்ளது.


வழக்கை சரியாக விசாரிக்காமல் ஜான் டேவிட்டின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.


‌(செ‌ன்னை ப‌ல்கலை‌க்கழக மு‌ன்னா‌ள் துணைவே‌ந்த‌‌ர் பொ‌ன்னுசா‌மி‌‌யி‌ன் மக‌ன் நாவரசு. இவர் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசுவை, 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல் காணவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடினர். விசாரணையில் அதே கல்லூரியில் படித்து வந்த ஜான் டேவிட் என்ற மாணவர் தான் நாவரசுவை ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார். ஜான் டேவிட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சென்னை தாம்பரத்தில் ஒரு பஸ்சில் இருந்த சூட்கேசில் இருந்து நாவரசுவின் உடல் துண்டுகளை கைப்பற்றினர். இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் செசன்ஸ் நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது)

ஜல்லிக்கட்டு

"கிரஹப்பிரவேசத்தில்" வீட்டிற்குள் முதலில் 'மாட்டையும் கன்றையும்' ஓட்டிச் செல்லவேண்டும் என ஒரு சம்பிரதாயம் உள்ளது.  இந்த காரியத்தை எந்த புண்ணியவான் எதற்காக ஆரம்பித்து வைத்தார் என தெரியவில்லை. எனது உடனுறை நன்பர் ஒருவர் சமீபத்தில் "கிரஹப்பிரவேசம்" நடத்தினார்.  இந்த நிகழ்ச்சிக்கு மாடு பிடிக்கும் வேட்டை அவ்வளவு சுலபமாக அமையவில்லை.  தெரிந்த இடங்களில் ஏற்கனவே 'புக்' ஆகிவிட்டது அல்லது "மாடு இருந்தால் கன்று இல்லை".  எனவே இவ்விஷயங்களில் சற்று அனுபவப்பட்ட "பாண்டிய மன்னனுடன்"  "மாடுபிடி" உலா கிளம்பினார் நன்பர். வெகு நேர அலைச்சலுக்குப்பின் ஒரு இடம் அகப்பட்டது போலும்.  நன்பரிடமிருந்து "கால்" வந்தது!.

"சார்..மாடும் கன்றும் கிடைத்துவிட்டது.  ஆனால் கருப்பு மாடு பரவாயில்லையா?"

"கருப்போ ..வெளுப்போ அது பசுமாடுதானே" 
(எனக்கு அது எருமை மாடாக இருந்துவிடுமோ என அச்சம்!)

"ஆமாம்"

"பிறகென்ன..புக் பண்ணி விடுங்கள்"

"சரி சார்"

வெற்றிக் களிப்புடன் மாடுபிடி வேட்டை முடிந்து வந்து சேர்ந்தார் நன்பர்.

"என்ன சொன்னார் மாட்டுக்காரர்?"

"ரொம்ப கஷடமாப்போச்சு சார்.. ஒரு ஆள் இதற்கெல்லாம் மாடு கொடுத்தால் மாடு செத்துவிடுமாம் என்ற விபரீத காரணமெல்லாம் சொன்னார். கடைசியில் பிரபு என்று ஒரு ஆள் அகப்பட்டார்.  ஐநூறு ரூபாய் சார்ஜ்.. நூறு ரூபாய் அட்வான்ஸ்.."

"காலையில் ஓட்டி வருவானா இல்லை முதல் நாள் இரவே வந்து கட்டிவிடுவானா?"

"இல்லை சார்.. தங்கமான ஆள்...இந்த பிரபு கை நீட்டி அட்வான்ஸ் வாங்கிவிட்டான்
என்றால் மாடு உங்களுடையது... சொன்ன நேரத்திற்கு மாடும் கன்றும் வந்து சேரும்..அதுதான் சார் இந்த பிரபு - நீங்கள் கவலைப் படாமல் போங்கள் என்றல்லாம் சொன்னான்"

எனக்கு இந்த வசனங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.  

'புரோகிதரை அழைத்து..மாடும் கன்றும் கிடைக்காவிட்டால் என்ன செய்வது"  என கேட்டு வைத்தேன்..

"கிடைக்காவிட்டால் பரவாயில்லை...மாற்றாக கொஞ்சம் "கோமியம்" எடுத்துக் கொண்டு செல்லலாம்..  வாஸ்த்து ஹோமத்தில் சரியாகிவிடும்." என்ற பதில் சந்தேகத்திற்கிடமாக இருந்தாலும்,  இதற்கு 
மேல் ஆராய  விரும்பாததால் விட்டுவிட்டேன்.

ஆயிற்று...காலை மூன்றரை..(குறித்த நேரம் நாலரை-ஆறு) மாடும் கன்றும் வந்த பாடில்லை..பிரபு செல்போனில் "ஆன்ஸர்" இல்லை.  ஆஹா...மாட்டிக் கொண்டோமா..மாற்று ஏற்பாடாக "கோமியத்துக்கு" இந்த நேரத்தில் எங்கே போவது?

சற்றும் கவலைப்படாமல் எங்களது நன்பர்கள் களமிறங்கிவிட்டனர்.  ரோட்டில் படுத்துக் கிடக்கும் மாட்டையெல்லாம் எழுப்பி.."நீ பசுவா..காளையா?" என விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.  நான் நம்பிக்கை இழக்க ஆரம்பித்த போது.. போன் கால்..

"சார்...வேறு ஒரு மாடும் கன்றும் கிடைத்து விட்டது..வந்து கொண்டே இருக்கிறோம்"

ஜல்லிக்கட்டு வீரர்கள் மாட்டைப்பிடித்து விட்டனர்.

"சபாஷ்... சீக்கிரம் வாருங்கள்"

வீட்டிற்கு வெளியே நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். ஒரு வழியாக மாடும் கன்றும் வந்து சேர்ந்தது.

மாட்டின் கண்களில் தூக்கக் கலக்கம். சந்தேகப் பார்வையுடன் தயங்கியபடி வந்தது.

புரோகிதர்,  நன்பரின் இல்லத்தரசியிடம் "மாட்டிற்கு சந்தனம்..குங்குமப் பொட்டு வையுங்கள்.. நேரம் ஆகிறது"  என்றார்.

நன்பரின் மனைவிக்கு மாடு என்பது நாலு காலும் ஒரு வாலும் உள்ள பிராணி என்பதைத் தவிர வேறொன்றும் தெரியாது.  கொம்பு வேறு கூர்மையாக இருந்தது.  நான் நன்பரை நோக்க அவர் "தேமே" வென கிழக்கே பார்த்துக் கொண்டிருத்தார்.  மாடு தலையை-கிலையை ஆட்டிவைத்து விடுமோ என்ற அச்சத்தில், நானே "சுவீகரித்துக் கொண்ட" பொறுப்பு உந்த,  அம்மனிக்கு 'எஸ்கார்ட்' ஆனேன். மாட்டிற்கு பொட்டு 
வைத்தாகி விட்டது.  

"மாட்டின் பின்புறமும் பொட்டு வையுங்கள்."

போச்சுடா!   காலையோ வாலையோ சுழற்றி விட்டால்..?.. மாட்டின் பின்புறமும்  போய் நின்று கொண்டேன். ஒரு வழியாக எல்லா   சடங்குகளும்  முடிந்து, மாட்டை உள்ளே ஓட்டிச் செல்ல முயன்றனர்.  


வீட்டின் 'சிட் அவுட்டினுள்'  மாட்டைப் பிடித்து, கிட்டத்தட்ட தள்ளினர். வீடு 'டைல்ஸ்' போடப்பட்டிருந்தது.  மாடு முன்னிரண்டு கால்களை வைத்ததும் அதன் கால்கள் விபரீத கோணத்தில் 'சர்ர் ...ரென விரிந்து கொண்டது' .  மாடு கண்களில் பீதியுடன், டென்ஷனாக சாணி போட ஆரம்பித்தது.


'போதும்..போதும்..இதுவே போதும்..' புரோகிதர் உட்பட அனைவரும் கோரஸாக அலறினோம்.

ஆனால் மாட்டின் சொந்தக்காரர், எந்த காரணத்தாலோ முழு மாட்டையும் வீட்டின் உள்ளே தள்ள முயன்று கொண்டிருந்தார்.  

பின்னாலிருந்து ஒரு குரல் "ஒரு பெரிய ஜமக்காளத்தை விரித்து..அதன் வழியே மாட்டை சாமி ரூம வரை  அழைத்துச் செல்லலாம்"  என இலவச 
ஆலோசனையாக வந்தது.

இந்த ஆலோசனை அனைவரையும் கலவரப்படுத்த, உடணடியாக நமது 'ஜல்லிக் கட்டு வீரர்கள்' களத்தில் மீண்டும் இறங்கி,  மாட்டுக் காரரையும், மாட்டையும் வெளியே அனுப்ப எத்தனித்தனர்.

"இன்னும் ஒரு ஐம்பது ரூபாய்" போட்டுக் கொடுங்க சார்..." - மாட்டுக் காரர்.

இவர் முழு மாட்டையும் உள்ளே செலுத்த பிரயத்தனப் பட்டதன் காரணம் இப்போது புரிந்தது.

கதை இத்தோடு முடியவில்லை என்பதை வாசகர்கள் யூகித்திருப்பீர்கள்.

ஒரு மணி நேரம் கழித்து, முன்பு புக் செய்த அந்த 'பிரபு' மாட்டுக் காரர் வந்தார். 

ஏற்கனவே மாட்டின் நெற்றியில் சந்தனம்...குங்குமம்..

ஆஹா...இரண்டு இடத்தில் 'அட்வான்ஸ்' வாங்கிவிட்டார்.

'மாழு ழெடி ஷார்... உழ்ழே அல்சிகினு வர்ட்டா ஷார்...? இந்த பிழபு ஷொன்னா ஷொன்னபடி நழந்துகுவான் ஷார்! கொழ்ஞம் லேட்டாகிடிச்சு  ஷார்  '

மீண்டும் நமது ஜல்லிக் கட்டு வீரர்கள் அவசரமாக களத்தில் இறங்க 
வேண்டிய வேளை வந்து விட்டது..  'பிழபு' வெற்றிகரமாக வெளியேற்றப் பட்டார்.