Sunday, July 31, 2011

எங்கேதான் தப்பித்து ஓடுவது?

பல்வேறு வகையான 'பொல்யூஷன்' களைப் பற்றி உலகமே கவலைப் படும் போது, இந்தியர்களாகிய நாம் 'Noise Polution'  என்று வரும்போது,  அலட்டிக் கொள்வதேயில்லை! ஏனெனில் நாம் பொதுவாக சப்தம் விரும்பிகள்.  கூடுதல் சப்தம் கூடுதல் குஷி. 


குடியிருப்பு பகுதிகளில், பகலில் 55db  ஆகவும்- இரவில் 45 db ஆகவும், அரசாங்கம், சப்தத்தின் அளவை நிர்ணயித் துள்ளது.  யார் இதுபற்றி கவலைப் படுகிறார்கள்?இந்த வருடம் மார்ச் மாதம், மத்திய வன-மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகம், இந்தியாவின் முக்கிய நகரங்களில்,(தில்லி,மும்பை, கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத்) 'நாய்ஸ்' பொல்யூஷன் பற்றிய தகவல்களை திரட்டியது.  இத்தகவல்கள் முடிவுகள்,  வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சப்தங்களின் அளவு, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அளவைத் தாண்டி, அரசாங்கம் நிர்ணயித்த சப்த் அளவையும் தாண்டி அபாயகரமாக அளவை எட்டியுள்ளதை சுட்டிக் காட்டியது. 


சப்தம் எப்படி உடல் நலத்தினை பாதிக்கும் என்கிறீர்களா? 


பிரச்சினையே அதுதான். இந்த "NOISE POLLUTION" பற்றி பெரும்பாலான மக்களுக்கு விழிப்புனர்வு இல்லை 


மிகுந்த சப்தம், உயர் ரத்த அழுத்தம்,  உயர் இருதய துடிப்பு, மன ரீதியான பாதிப்பு, எரிச்சலைடைவது போன்றவற்றை உருவாக்கும்.  மிக முக்கியமாக நாம் அமைதியினை இழக்கிறோம்.


உதாரணமாக சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, நமது பேருந்துகளின் அலறும் "ஹார்ன் சப்தம்"  நம்மை என்ன பாடு படுத்துகிறது?  


நமது மட்டமான,  'டிரைவிங் கலாச்சாரம்' , நாய்ஸ் பொல்லியூஷன் பற்றிய விழிப்புனர்வின்மை, நாளும் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, அதற்கேற்ற வகையில் அகலமான சாலைகள் இல்லாதது ஆகிய யாவும் 'நாய்ஸ் பொல்லியூஷனை' அதிகரிக்கின்றன.  


சூரியன் உதயமாகும் போதே, காது கிழிபடும் சப்தங்களும் துவங்கி விடுகிறது. ஆடி மாதம், கார்த்திகை மாதம் என்றால் விடியற் காலை மூன்று அல்லது நான்கு மணிக்கே, இந்த இரைச்சல் துவங்கிவிடும். கோவில் களைத்தான் சொல்கி றேன்!! 


தெருமுழுக்க 'கோன்' 'ஸ்பீக்கர்களை' நிறுவி,  "எல்.ஆர். ஈஸ்வரி யிலிருந்து"  துவங்கி இன்றைய புது பாடகர்கள் வரை ஓயாமல் அலறுவார்கள்.  இரவு எத்தனை நேரம் வரையிலும் கத்தலாம். கேட்பாரில்லை. 


கோயில்களுக்கிடையே 'அலறல்' போட்டி இருக்கும் போலிருக்கிறது. ஒருவர் இருபது 'ஸ்பீக்கர்' கட்டினால் மற்றோருவர் 30 .  கோயில் என்பது அமைதியாய் இருக்க வேண்டிய இடம் என்பதை இவர்களுக்குச் யார் சொல்லுவார்கள்? கொஞ்ச நேரம் ஆடாமல் நின்றால் நமது காதிலும் ஒரு 'கோன்' 'ஸ்பீக்கரை கட்டிவிட்டு சென்றுவிடுவார்கள் போல!


"ஆடி மாத அலறல்" ஒரு மாதம் என்றால்,  'கார்த்திகை' பிறந்துவிட்டால், இந்த சங்கடம், தை மாதம் - பொங்கலையும் தாண்டி கூட மூன்று மாதத்திற்கும் மேலாக நீடிக்கும். பிளாட்பாரக் கோயில் ஆரம்பித்து அனைவரும் 'ஸ்பீக்கர்' கட்டி 'ஐயப்பன்' பாடல்களை ஆரம்பித்து விடுவார்கள்.   அதுவும் சினிமா பாடல் 'ஸ்டைலில்' சரணம் இருந்து விட்டால், 'ஆஹா.. 'ரிபீட்' ஆகிக்கொண்டே இருக்கும்!  இப்போ தெல்லாம் MP3 சி.டி க்கள் இருப்பதால், ஒரு சி.டியைப் போட்டுவிட்டு மறந்து விடலாம். குறைந்த பட்சம் 3 மணி நேரம் பேய்க்கத்தலாக அனுபவிக் கலாம். அமைதியே உருவான ஐயப்பன் இப்படியா 24 மணி நேரமும் கத்தச் சொல்லிறார்?


படிக்கும் குழந்தைகளையோ, முதியவர்களையோ அல்லது என்போன்ற அமைதி விரும்பிகளையோ எவரும் ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள் போல! திருமண மண்டங்கள் உள்ள தெருக்களில் உலா வந்திருக்கிறீர்களா? இந்த தெருக்களில் வசிப்பவர்களுக்கு, அடுத்த பிறவி என்பதும்,  நரகம் என்பதும் கிடையாது. அனைத்து வேதனைகளையும், 'ஒலிபெருக்கிகள்' மூலம்,  இப்போதே அனுபவித்துவிட சபிக்கப் பட்டவர்கள் இவர்கள்.

நான் வேலை செய்யும் அலுவலகத்தின் வாசலில் ஒரு மாரியம்மன் ஆலயம் இருக்கிறது.  இக்கோயிலைச் சுற்றி, ஒரு 100 மீட்டருக்குள் ஒரு அரசினர் தலைமை மருத்தவு மணை, மூன்று பெரிய தனியார் மருத்துவ மணைகள், ஏராளமான கிளினிக்குகள் மற்றும் பல அலுவலகங்கள்!  அதனால் என்ன?  'ஸ்பீக்கர்கள்' தலைவிரி கோலத்தில் 24 மணி நேரமும் உச்ச 'ஸ்தாயியில்' கத்தித் தீர்க்கின்றன. 


கோயில் திருவிழாக்களில், 'இரவு 11 மணிக்கு மேல் 'சினிமா' பாடல்களை "மியூஸிக் டிரூப்கள்" பாடியாக வேண்டும் என சட்டம் இருக்கிறது. பக்கத்து தெருவரை 'ஸ்பீக்கர்கள்' கட்டி விடிய விடிய பாஆஆஆஆஆஆஆஆஆஆடித் தீர்ப்பார்கள்!.  


கோயிலில்  ஐயர் மந்திரம் சொல்லும் போது காலர் மைக் வைத்துக் கொள்வார் போலும்! சாமிக்கு மட்டுமல்லாமல் அந்த ஊருக்கே கேட்கும்! 


"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது இக்காலத்தில் தப்பு. "கோயில் இருக்கும் தெருவிலிருந்து தூர ஓடிப்போ!" என்பது தான் சரியாக இருக்கும்.


'எலக்ஷன் டைம்' என்றால் கேட்கவே வேண்டாம். அம்மா, ஐயா, அண்ணண்,அன்னை என் பலபேர் 'வோட்டுக்களை தாருங்கள்.. தாருங்கள் என ' காதைத் திருகுவார்கள்'.  "எலக்ஷன் கமிஷன்" சாட்டையை சுழற்றி யதால், இரவு 10 மணியோடு விட்டார்கள்.


நம்மில் எவரேனும் பிரயாணம் செய்யாமல் இருக்க முடியுமா? தற்போதெல்லாம் பேருந்தில் 'சக்கரம்' இருக்கிறதோ இல்லையோ சவுண்ட் சிஸ்டம் இருந்தாக வேண்டும்.  ட்ரைவர் எனப்படுபவர் கையில்தான் அதன் கண்ட்ரோல்.  ஆபத்தான வளைவு, கடுமையான டிராபிக் -இதைப்பற்றியெல்லாம் கவலையின்றி, சி.டி மாற்றுவதில் மும்முரமாய் இருப்பார்.  மீதி வேலையெல்லாம் சி.டி மாற்றிய பின் தான். அதுவும் 'வால்யூம்' எப்படி? இதற்கு மேல் திருகமுடியாது என்பது வரை வால்யூமை திருகி, ரிவிட் வைத்துவிடுவார். விடியோவும் இருந்து விட்டால் இன்னும் பிரமாதம்.   நரக வேதனை!!


 பிரயாணம் என்பது அமைதியாக இருக்கக் கூடாதா என்ன?  இந்த காது கிழியும் அலறல் குறித்து எவரும் புகார் கூறுவதாக இல்லை. மாறாக இன்னும் - இன்னும் சவுண்ட் வைக்கக் கோரி 'ஆர்ப்பாட்டம்' நடத்துகிறார்கள்.


இந்த மஹா இரைச்சலுக்கு பயந்து பல பிரயாணங்களை தவிர்த்து விடுகிறேன்.  தவிர்க்க இயலாத போது டாக்ஸி.  ரெகுலர் டாக்ஸி என்பதால் என்னைப் பார்த்ததும் மியூஸிக் சிஸ்ட்டத்தை ஆஃப் செய்து விடுவார் டிரைவர்.


இந்த 'ஸ்பீக்கர்' கலாச்சாரம் நமது நாட்டின் தனிப்பட்ட அடையாளம்.  குழந்தை பிறந்தால் 'ஸ்பீக்கர்'. பெயர் வைக்க 'ஸ்பீக்கர்'. பெண்ணாக இருந்தால் வயதுக்கு வந்ததும் 'ஸ்பீக்கர்'. திருமணத்திற்கு இரண்டு நாள் 'ஸ்பீக்கர்'. கடைசியில் செத்துபோனா அதற்கும் 'ஸ்பீக்கர்'. பத்தாவது நாளும் 'ஸ்பீக்கர்'. 


கோயிலில் 'ஸ்பீக்கர்', ஆபீஸில் 'ஸ்பீக்கர்', மீட்டிங்கில் 'ஸ்பீக்கர்' - இவைகளைத்தாண்டி வீட்டிற்கு வந்தால் அக்கம் பக்கத்து வீடுகளில் 5.1 பேரிரைச்சல்.   தெருவில் உள்ள வீடுகளில்,  எவரேனும் ஒருவருக்கு காது சற்று மந்தமாக இருந்து விட்டால், அந்த வீட்டில், அந்த நபர் பார்க்கும் சீரியலை தெருவே கேட்டாக வேண்டும்!


செல்போன்களில் கூட நம்மவர்களில் பலருக்கு, பேசியெல்லாம் பழக்கமில்லை. இரைச்சலாக அலறித்தான் பழக்கம்.  


காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு படுத்தால், இரவில் வீட்டில் உள்ளவர்கள்,  400db ல் விடும் "பெருங்குரட்டை" !! 


எங்கேதான் தப்பித்து ஓடுவது? 


-0-

Wednesday, July 27, 2011

தெய்வத்திருமகள் - சினிமா விமரிசனம்.

விஜய் மற்றும் விக்ரம்-ன் வெற்றிக் கூட்டணிப் படம் இது! 'ஐ யாம் சாம்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் (காப்பி?)இந்த 'தெய்வத்திருமகள்' என்பது ஊரறிந்த ரகசியம். போகட்டும் விடுங்கள். இப்படத்தினை விமரிசிக்கும். முன், படத்தில்  கீழ்க்கண்ட "இல்லை" களை சொல்லி விடுவது நலம்.

முதலில் நாயகிகளின் "வலிப்பு நடனங்கள்" இல்லை!  நாயகனும் - நாயகியும் டூயட் பாட, சடுதியில்,ஆஸ்திரேலியாவுக்கோ, 
சுவிட்ஸர்லாந்துக்கோ புறப்பட்டுப் போவதும், பின்னனியில் ஒரேமாதிரி உடை உடுத்தி அசைந்தாடும் அந்த நாற்பது 'பெண்களும்' இல்லை.

நாயகன் நூறு பேரை வீழ்த்தும் சினிமா சூரத்தனம் இல்லை. 

ஆபாசங்கள் இல்லை. நாயகியின் "நாபிக்கமல" தரிசனங்கள் இல்லை!
ரத்தக் களேபரங்கள் இல்லை. இன்னும் பல "தமிழ் சினிமாத்தனங்கள்" இல்லாததினாலேயே, "பார்க்க வேண்டிய படம்"  தகுதியினை இப்படம் பெற்றுவிடுகிறது.

கொஞ்சம் மெதுவாக செல்லும் திரைக்கதை.

விக்ரம் மன நிலை பாதிக்கப் பட்டவர். மனைவியை இழந்தவர். தனது குழந்தையை 'கவர்ந்து' செல்லும் பணக்கார மாமனாரிடமிருந்து "தனது இயல்பான" மன நிலையில் குழந்தையை பார்த்துவிட துடிக்கிறார்.  பார்த்தும் விடுகிறார். 

இண்டர்வல் வரை, யூகிக்க முடிந்தாலும், கதை கொஞ்சம் பிடிமானம் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறாற்போல் இருக்கிறது. முதல் 10 நிமிடங்களுக்குள் ஆடியன்ஸை 'நாட்டுகுள்'  (naught) கொண்டுவர வேண்டாமா?

இண்டர்வெலுக்குப் பின் அடுத்த அரைமணி நேரம், படம் புல்லட் ட்ரெயின் வேகம்.

விக்ரம் தனக்கு கொடுக்கப் பட்ட ரோலுக்கு ஏற்றாற்போல அடக்கி வாசித்து, பாத்திரத்திற்கு நியாயம் செய்கிறார். அவரது கேரக்டரை உணரவைக்க, டைரக்டர் தேர்ந்தடுத்திருக்கும் காட்சிகள் பிரமாதம். (பறவை குஞ்சு-ரெட் சிக்னல்-குழந்தையோடு கொஞ்சுவது,குழாயில் ஒழுகும் தண்ணீ­ர் etc..)

பல காட்சிகள் நினவில் நிற்கின்றன. 

விக்ரம், தன் குழந்தை நிலாவின் கேள்விகளுக்கு, தனக்கு தெரிந்த முறையிலேயே பதில் சொல்வதாக அமையும் காட்சிகள்;

பாட்டி வடை சுட்ட கதையை-ராஜா மந்திரி கதையுடன் கிராஃபிக்ஸில் கலந்து சொல்லுவது; 

அமலாபாலும், நிலாவும் சந்திக்கும் காட்சிகள்;

இது போன்ற பல இடங்களில் இயக்குனரின் திறமை அடையாளம் காட்டப் படுகிறது.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு ஒரு ஒவியம் போல இருக்கிறது. 

மிக இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தக்கூடிய நாசர் அவர்கள், "கௌரவம்" சிவாஜி கணேசன் (பாரிஸ்டர் ரஜினிகாந்த்) போல் நடிக்க முயன்று பரிதாபமாகிறார். இன்னும் அழகாக,  இயல்பாக அவரால் செய்திருக்கக் கூடும்.

படத்தின் உயிரூட்டம் என்றால் அது விக்ரமின் குழந்தை நிலா(சாரா) தான். அற்புதமான முகபாவம்!

 ப்ரியா (அஸிஸ்டெண்ட்) நிச்சயம் கவனிக்கப் பட வேண்டியவர். 

அமலா பாலுக்கு நடிக்க சந்தர்ப்பமில்லை! மிக அழகாக வந்து போகிறார்.

ஒய்.ஜி.மகேந்திராவின் நடிப்பில் அனுபவம் மிளிர்கிறது.

தேவையேயில்லாமல், வணிக நோக்கத்தோடு, அனுஷ்காவை கட்டிப்பிடித்ததும் வரும் 'டூயட்' மாதிரியான கனவு பாட்டு கதையோடு ஒட்டவே இல்லை. இந்த படத்திற்கு நியாயம் செய்வதாகவும் இல்லை. ஆனால் இந்த காட்சியில் காமிரா விளையாடுகிறது. அனுஷ்காவையும், மழைத்துளிகளையும், இதைவிட அழகாக, இவ்வளவு குளோசப்பில் காட்டவே முடியாது. ஆனால் கதையோடு ஒட்டாததால் ரசிக்க முடியவில்லை. 

ஒரு பைத்தியத்தின் மேல் பரிதாபம் கொள்ளலாம்! அனுதாபம் காட்டலாம்! உதவலாம். ஆனால் காதலிப்பது எங்கனம்? அதுவும் ஒரு பெரும் பணக்காரி!??.   ஐந்து வயது குழந்தையின் மனநிலை உள்ள ஒருவன், அவளிடம் கலந்து குழந்தை பெற்றுக்கொண்டது நம்பும்படியாக இல்லை. இது ஆரம்பத்திலிருந்தே இடிக்கும் ஒரு லாஜிக்! 

ஜீ.வி.பிரகாஷ்குமார், பின்னணி இசையில் பல இடங்களில் அருமை. சில இடங்களில் மௌனமாகாகவே விட்டிருந்தால், அதுவே சிறந்த பின்ணனி இசையாக இருந்திருக்கும். 

படத்தின் முடிவு விக்ரமின் கேரக்டருக்கு மிகப் பொருத்தமாக உள்ளது. 

படத்தை பாருங்கள்-தியேட்டரில்!  இது போன்ற படங்களை ஆதரிக்காவிட்டால், நாபிக் கமலங்களே நமக்கு கதியாகிவிடும்!

===============================================
நடிகர்கள் : விக்ரம், அனுஷ்கா, அமலா பால்,  நாசர், பேபி சாரா, ப்ரியா.
இசை : ஜீ.வி.பிரகாஷ்குமார்
இயக்கம் :விஜய்


Saturday, July 23, 2011

Another opportunity which should not be wasted...


மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஸ்ரீ கபில்சிபல் பத்திரிக்கையாளர் களுக்கு அளித்த செய்தியின் சுருக்கம்:


அனைத்து கிராமங்களுக்கும் பிராண்பேண்ட் வசதி செய்துகொடுக்கும் 
Rs 20,000 மதிப்புள்ள திட்டத்தினை DOT அங்கீகரித்துள்ளது.   விரைவில் கேபினட் அங்கீகாரத்திற்கு வைக்கப் படும். இத்திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது.  இத்திட்டத்திற்கான பணம் Universal Service Obligation (USO) Fund மூலம் அளிக்கப் படவுள்ளது.   இத்திட்டத்தின் நோக்கம், "தேசிய கண்ணாடி இழை நெட் வொர்க்" அமைப்பது.  


மாவட்ட தலை நகரில் ஆரம்பித்து கிராம பஞ்சாயத்து வரை இந்த நெட்வொர்க் போடப்படும்.  ஆரம்பத்தில் BSNL  மற்றும் RailTel மூலம், இந்த பிராட்பேண்ட் திட்டம் நிறைவேற்றப்படும். இத் திட்டத்தின் மூலம், 
 e-education, e-medicine and e-governance ஆகியவை சாத்தியமாகும்.செய்தி விபரங்களுக்கு   Click HereMonday, July 18, 2011

WHATS YOUR NAME?

நீங்கள் "பாஸ்போர்ட் அப்ளிகேஷன்" பூர்த்தி செய்திருக்கிறீர்களா?  சென்ற வாரம் எனது உடனுரை நன்பர் ஒருவருக்கு சந்தேகம் வந்து விட்டது. அவர் தனது குடும்பத்தாருக்கு பாஸ்போர்ட் வேண்டி, ஒரு விண்ணப்பம் வாங்கிவந்து விட்டார். அதில் 'Surname' என்பது முதலிலும், Given name என்பது பின்பகுதியிலும் இருந்து விட்டது. 


இதில் 'Surname' என்பதில் எதைப்போட?  தமிழராகிய நமக்கு பெயர் என்பது ஒரு இனிஷியல்-அப்புறம் ஒரு பெயர்-அவ்வளவுதான்.  'R. பலராமன்' ல் வரும் 'R' என்பது அப்பாவின் பெயர் அவ்வளவே! 


தென்னிந்தியர்களில் சிலர், இரண்டு இனிஷியல் வைத்திருந்தால் முதல் எழுத்து என்பது ஊரையும், இரண்டாவது எழுத்து தகப்பனாரின் பெயரையும் குறிக்கும். வெளி நாட்டில் இந்த "Surname"-ஐ வைத்துத்தான் கூப்பிடுவார்கள்.   எவரேனும் 'கொலைகாரன்பட்டியில்' பிறந்து அதை இனிஷியலாகவும் வைத்துவிட்டாரெனில் தீர்ந்தது!  வெளி நாட்டில் தயங்காமல் 'மிஸ்டர் கொலைகாரன்' சார் என கூப்பிட்டு விடுவார்கள்.


இந்த "Surname" குழப்பம் தவிர,  first name, middle name, last name என்று 'தலை சுழல வைக்கும் மூன்று வகையறாக்களும் நம்மிடம் உண்டு.   திரும்பத் திரும்ப தெரிந்து கொண்டாலும் புரியாத ஒரு விஷயங்களில் தலையாயது இந்த மூன்றும்.  முதல்,நடு,கடைசி பெயர் என்பது எதைத்தான் குறிக்கிறது?


இருக்கும் குழப்பம் போதாதென்று, ஒருதடவை நான் 'Net Banking' பாஸ்வேர்டை மறந்துவிட்ட போது, இந்த மூன்று பெயர்களோடு,  அம்மாவின் பெயரையும் கேட்டனர். விபரீதமாக, உங்களது 'Pet Name' என்னவென்று வேறு கேட்டார்கள். விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 
தலை சுற்றாமல் என்ன செய்யும்?


நம் குடும்பங்களில், குழந்தைகளுக்கு, அழகான பெயர் ஒன்றை வைத்துவிட்டு, அதைச் சொல்லி கூப்பிடாமல், ஒரு செல்லப் பெயர் வைத்து கூப்பிடுவார்கள்.  'வெங்கடராமன்' வெங்கி ஆவதும், 'பிச்சுமணி' பிச்சை ஆவதும், "கிருஷ்ணமூர்த்தி" கிட்டு அவதும் கூட பொறுத்துக் கொள்ளக் கூடியதுதான்.


ஆனால் எனக்குத் தெரிந்த ஒருவரின் மகனின் செல்லப் பெயர் 'அக்குண்டு!'  ஒரு நாள் அவரைத்தேடிக் கொண்டு அவரது அலுவலகம் போக நேர்ந்தது. ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண் 'யாரைப் பார்க்க வேண்டும்"  என வினவ, அவரின் உண்மைப் பெயர் மறந்து போய், பழக்க தோஷத்தில் 'அக்குண்டு' என்று சொல்லி விட்டேன். அந்தப் பெண் பதறிப்போய், 'என்ன அணுகுண்டா?' என சீட்டை விட்டு எழுந்துவிட்டாள். நல்ல வேளையாக, அந்த பெண் 'போலீசையோ அல்லது வெடிகுண்டு நிபுனரையோ கூப்பிடுவதற்குள்,  நிஜப்பெயர் ஞாபகம் வந்துவிட்டது. 'கிருஷ்ண மூர்த்தி!!' 


என்ன சம்பந்தம்? 


ஹர்பஜன் எப்படி பஜ்ஜி ஆனார்?


உங்கள் சுவாரஸ்யத்திற்கு எனக்கு தெரிந்த செல்லப் பெயர்கள் சிலவற்றை கொடுத்திருக்கிறேன். அடைப்பில் உள்ளது நிஜப்பெயர்


சேமா (சந்தம்மா) 
டொம்மி (பிருந்தா)
சீச்சு (ஸ்ரீதர்)         -   
சேமியா (ரம்யா)
கோச்சி (கோதாவரி)
விக்கி (விக்னேஷ்) 
தச்சு (சரஸ்வதி)
கோண்டு (கோவிந்தராஜ்) 
 குக்கி  (ஷ்ரவன்) 


====================================

Sunday, July 17, 2011

KUMBAKONAM - GOVINDHAPURAM

கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள கோவிந்த புரத்தில், காவிரிக்கரையோரத்தில், 150 அடி உயரமுள்ள கோபுரத்துடன் கூடிய ஒரு கோவில், பகவான் ஸ்ரீ பாண்டுரங்கனுக்காக,பண்டரிப்புரத்தில் உள்ளது போன்ற கட்டமைப்பில், ஸ்ரீ விட்டல் மஹராஜ் அவர்ளின் முன் முயற்சியால் கட்டப்பட்டுள்ளது. மிக மிக ரம்மியமான் சூழ் நிலையில், நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இக்கோயில்.  இக்கோவிலை இன்று (17/07/2011), தரிசித்தேன் . சில பிரத்தி யேகமான அம்சங்கள். 


1. விமானம் 132 அடி உயரமுள்ளது. பார்ப்பதற்கு அழகான சிறந்த 
    வடிவ மைப்பு.


2. இதன் கலசம் மட்டும் 18 அடி உயரம்.


3. சிறந்த சித்திரங்களுடன்(fibre glass painting) கூடிய "Doom".  பெரிய அழகான 
    மஹா   மண்டபம்.     தூண்கள் அற்றது. தென்னிந்திய பாரம்பர்யத்துடன் 
    கட்டப்பட்டது.  சுமார் 2000 பேர்    அமரலாம். 


5.  அழகான மர வேலைப்பாடுகள்.


6. மூர்த்திகள் ,  100 கோடி விட்டல் நாமாக்கள் அடங்கிய இடத்திற்கு
    மேலாக பிரதிஷ்ட்டை   செய்யப்பட்டுள்ளது. 


7. இப்போதைக்கு சன்னிதானத்தில் உள்ள மூர்த்திகளை தொட்டு 
    நமஸ்கரிப்பதற்கு   அனுமதிக்கிறார்கள்.நீங்கள் இக்கோயிலை தரிசித்து பாண்டுரங்கனின் அருள் பெற வேண்டுகிறேன்.


ஸ்லைட் ஷோ பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்.

Thursday, July 14, 2011

ங்கொன..... ங்கொன...

நன்றாக கணக்குப் போடும் வாத்தியார், புரியும்படி கனிதம் சொல்லிக்கொடுப்பதிலும் வல்லவராக இருக்க வேண்டும் என்று சட்டம் இலை. விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம், ஆசானாகிவிடுவதில்லை. நம்மில் பலருக்கும் பல விஷயங்கள் தெரியக்கூடும்.  ஆனால் அதை மற்றவர்களுக்கு சொல்லும் திறமை இருக்காது அல்லது சொல்லும் திறன் மாறுபடும்.  உண்மையில் இந்த திறமையில் நிபுனத்துவம் பெற்றவர்கள்தான் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தப்படுகின்றனர்.  சமூகத்தில் வெற்றிபெறுபவர்களும் இவர்களே! இதை "Communication Skills" என்று கூறுவர். (விஷயமே இல்லாமல் மணிக் கணக்கில் உரையாற்றும் அரசியல் வாதிகள் இந்த கணக்கில் இல்லை)


இதில் பரிமளிக்க விரும்புவோர், தாங்கள் சார்ந்துள்ள துறை பற்றிய நுன்னறிவு பெற்றவர்களாகவும், காலத்திற்கும், தேவைக்கும் ஏற்றாற்போல தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டே (அ)  மாற்றிக் கொண்டேயும் இருப்பர். மணிப்பிரவள நடை, வார்த்தைகள் தேர்வில் நுனுக்கம், அவையின் 'மூட்' அறிந்து பேசுவது-இதுவெல்லாம் அத்தியாவசிய தேவைகள். இதில் பரிமளிப்போர் பாப்புலராகவும் இருப்பர்.


இந்த communication skills-ஐ,  தொடர்ந்து மெருகேற்றிக் கொள்வது குறித்து, பல்வேறு புத்தகங்கள் உள்ளன. தற்காலத்தில், பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களின் திறமையை வளர்ப்பதற்காக பயிலரங்குகளையும், செமினார்கள்களயும் நடத்திக் கொண்டே இருக்கின்றன. 


இத்தகைய நிறுவனகளுக்கு இத்திறமை வாய்ந்த டிரெய்னர்கள் தேவைப்படுகின்றனர். இத்தகைய டிரெய்னர்கள் தான் அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களது, உற்சாகத்தினையும், ஆர்வத்தினையும் குறையாது வைத்திருக்க வல்லவர்கள். சோர்வினையும், விரக்தியையும் நீக்க வல்லவர்கள். மேலும், நிர்வாகம் தீர்மாணிக்கும் முடிவுகளை, வலிக்காமல்,  கீழே கொண்டு செல்ல பயன்படுபவர்கள். 


நான் சொல்ல வந்தது இந்த திறமை குறித்து அல்ல.  இத்தகைய ஒரு 'பயிலரங்கில்' நான் மாட்டிக் கொண்ட பரிதாபம் குறித்தே! சென்ற வாரம் இரண்டு நாட்கள், சென்னையில் ஒரு அரங்கிற்கு சென்றுவந்தேன். அது பயிலரங்கா (அ) மீட்டிங்கா என்று பாகுபடுத்த முடியவில்லை.  தமிழ் நாடு முழுவதிலிருந்து, பல்வேறு தூரங்களிலிருந்து, இந்த பயிலரங்கிற்கு (மீட்டிங்?) வந்திருந்தனர்.  


இந்த அரங்கத்தில், இரண்டாம் நாள் காலை, ஒருவர் வகுப்பெடுத்தார். எந்த தகுதியில் இவரை அழைத்து வந்தனர் என தெரியவில்லை. ஒருவேளை முன்பு சொன்னது போல, நன்றாக வேலை செய்யக்கூடியவர் என்ற தகுதி ஒன்றே போதும் என நினைத்து விட்டனரோ என்னவோ?


மைக்கை எடுத்து காலரில் பொருத்திக் கொண்டார். எதைப் பற்றி பேசப்போகிறார் என்ற அடித்தளம் இல்லை. குரலில் தீர்க்கம் இல்லை. வார்த்தைகளில் தெளிவு இல்லை. உற்சாகம் இல்லை. உச்சரிக்கவும் தெரியவில்லை. பேசுவது அவருடைய காதுக்கும்.. தப்பு..தப்பு.. மனதுக்கு மட்டும் கேட்டால் மட்டும் போதும் என தீர்மாணித்தவர்போல ங்கொன.... ங்கொன...  வென எதோ முணுமுணுத்தார்..  


முணுமுணுத்தார்..முணுமுணுத்தார்...முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.  பின் வரிசையினரின் வாய்கள் 270 டிகிரி அளவில் பிளந்து கொண்டன.  நெளிந்தனர். என்ன சொல்கிறார் என சலிப்படைந்தனர். முக்கினர். முனகினர்.  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம.. 'மைக்' காரர் எதற்கும் மசிவதாக தெரிவதில்லை. பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிவரை 'ராவி'த்தள்ளினார்.  அவரது கண்கள் அவையோரை பார்த்ததாகவே தெரியவில்லை. எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியினை பார்த்தார். பின் விட்டம் நோக்கி பேசிக்கொண்டே இருந்தார்.


நானும் இப்படித் திரும்பி, அப்படித் திரும்பி, ஸ்பீக்கர் பக்கம் காதைத் திருப்பி, அதிகமான ஒலி அலைகளை வாங்கி, செவியினுள் அனுப்புவதற்காக, உள்ளங்கையினை குவித்து, காதின் அருகே புனல் போல வைத்து, இன்னும் என்னவெல்லாமோ செய்து, அவர் என்னதான் சொல்கிறார் புரிந்து கொள்ள முயன்றேன்.  ஏதோ அவர் பேசும் மொழி 'ஆங்கிலம்' என்பது தவிர வேறு எதுவும் புரியவில்லை.  


ஒருவேளை வயதாகி விட்டதால், எனக்கு கேட்கும் திறன் குறைந்து விட்டதோ (அ) சைனசிடிஸ் காரணமாக சரியாக கேட்கவில்லையோ என சந்தேகம் வந்துவிட்டது.  


இதன் நடுவில், உரையாளரின் காலர் மைக் 'ஆஃப்' ஆகிவிட்டது.  குறுக்கிட்டாலும் பரவாயில்லை என 'Sir,  fix your Collar Microphones please'  என உரைத்திட்டேன்.  உடனே பக்கத்திலிருக்குன் நன்பர் சொன்னார்:  "சார் இவர் பேசுவது ஒன்றும் புரிந்த பாடில்லை.. இந்த இலட்சனத்தில் "Mic"  இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என்றார்.  இதனால் ஒரு விஷயம் தெளிவாயிற்று.. "நான் செவிடு இல்லை" .

Sunday, July 10, 2011

தில்ஷன்

சென்னை இராணுவக் குடியிருப்புக்குள், பாதம் கொட்டை பறிக்க வந்த பதிமூன்று வயது சிறுவன் தில்ஷனை, கொலை செய்தது நான் தான் என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒப்புதல் அளித்துள்ளார். . முன்பாக அவனை யாராவது ஒரு இராணுவ அதிகாரி தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று அனைவரும் சந்தேகப்பட்டனர். பிரேத பரிசோத னையில் சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து இறந்ததாக தெரிய வந்தது.


இந்த வழக்கை சிபி-சிஐடி விசாரித்து வந்தது. இந்நிலையில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ்(58) என்பவர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி தான் லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். விசாரணையில் தில்ஷனைக் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். தில்ஷனை சுட அவர் பயன்படுத்திய நீள துப்பாக்கி கூவம் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 


குணாம்ச ரீதியில்,ஆர்மி என்பது ஆர்மி ஆர்மிதான்.  அதற்கு இந்திய ஆர்மி, பாகிஸ்தான் ஆர்மி என்று எந்த வித்தியாசமும் கிடையாது.  புரூட்டலிஸம் அவர்கள் உடம்பில் ஊறியது. இல்லாவிடில் ஒரு 13 வயது சிறுவனை,  இந்திய சிறுவனை, சீன (அல்லது) பாகிஸ்த்தானியய சிறுவனை அல்ல, சுட்டுக் கொல்ல யாருக்கு அவ்வளவு தைரியம் வரும்? 


இலங்கையிலும், பாங்களா தேஷிலும் நடந்தேறிய கற்பழிப்புகள், வழிப்பறிகள் யாவரும் அறிந்தது தானே? அவர்களை, அவர்களது 'பாரக்குக்குள்'  வைத்திருக்க வேண்டியது அவசியம். மிக, மிக அவசியம் என்றாலொழிய அவர்கள் வெளியே வர விடக்கூடாது! அவர்கள் உதவியினையும் நாடக் கூடாது. சிவிலியன் களிடமிருந்து அவர்களை விலக்கியே வைப்பது தான், நாட்டிற்கும்-ஜன நாயகத்திற்கும் நல்லது.


அவர்கள், நாட்டின் சகலவிதமான உபாதைகளுக்கும் தங்களிடம் தீர்வு இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.  அவர்கள் சொல்லும் தீர்வு பெரும்பாலும், 'துப்பாக்கி முனையில்' தான் இருக்கும். 


நல்ல வேளையாக நமது 'செயல்படும்' பிரதமர் பீகார் மாவோயிஸ்ட் பிரச்சினைக்கு தீர்வு கான 'ஆர்மி'யை வெளியே கூப்பிடவில்லை.  அப்படி ஏதாவது செய்து வைத்தி ருந்தாரானால், நிலைமை இன்னும் மோசமாகி, இன்னொரு 'காஷ்மீர'த்தினை உருவாக்கி வைத்திருப்பார்.  


சிவிலியன் களும், பாதுகாப்பு படையினரும் விலகியே இருப்பதுதான் உத்தமம்.  அவர்களுக்குத் தெரிந்த மொழி ஒன்றே ஒன்று தான். 'துப்பாக்கி!'

டைப்ரைட்டர்

ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் பிறந்தவர்களுக்கு, ஸ்கூல் முடித்துவிட்டு, "டைப்ரைட்டிங்-ஷார்ட்ஹேண்ட்" கிளாஸுக்கு போவது என்பது, "சாப்பிட்டுவிட்டு, உடனே கையலம்புவது" போல, ஆட்டோமெடிக்காக, தொடர்ந்தாற்போல செய்யப்பட வேண்டிய ஒரு வேலை. பெரிய ஊர்களில், சில சமயம், "அக்கவுண்டன்ஸியும்"  இந்த கூட்ணியில் சேரும். அக்காலத்தில் நிலவிய 'தொழில் நுட்ப' படிப்பு இது. பேச்சுலர் டிகிரி படிப்பவர்களும் கூட இந்த இன்ஸ்டிடியூட்களில் படிப்பதைப் பார்த்திருக்கிறேன்.


'டைப்ரைட்டர்' என்னும் மிஷின்களை சுனாமி போல, கம்ப்யூட்டர்கள் துடைத்தெறிந்து விட்டது.  அதே நிலைதான் 'ஷார்ட் ஹேண்டுக்கும்'  இப்போதெல்லாம் "ஸ்டெணோகிராஃப்ர் கில்டெல்லாம்" இருக்கிறதாவெனத் தெரியவில்லை.


அக்கால டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிடியூட்கள், வேலைதேடும் அனைத்து இளைஞர்கள் / இளைஞிகளுக்கு ஒரு பாலைவனச் சோலை. இங்கிலீஷ்/தமிழ் ஹையர் பாஸ் பண்ணிவிடுவோம். ஷார்ஹேண்ட் கொஞ்சம் மக்கர் பண்ணும். டைப்ரைடிங் தேர்வுகளில் 'மெக்கானிக்கல்' என்று, ஒரு தேர்வு உண்டு. லூஸ் dog, ரிஜிட் dog எல்லாம் வரும்.


இன்ஸ்டிடியூட்களில், லொயர் படிக்கும் ஆட்களுக்கு 'ரெமிங்டனும்', ஹையர் மற்றும் அழகான பெண்களுக்கு 'ஹால்டா' மிஷின் களும் ஒதுக்கப்படும்.  "ரெமிங்டன் " என்பது நாட்டுக்கட்டை.  ஓங்கி அறைந்தால் தான் 'கீ" மேலே கிளம்பும்.  "ஹால்டா" என்பது நளினமான், நாசூக்கான, மெலிதான இளம்பெண் போல.  அழகாயிருக்கும்.  தொட்டாலே 'கீ' க்கள் பேசும். உற்சாகமாய் அடிக்கும். இந்த மிஷிங்களை 'அலாட்' பண்ணும் வேலை, அங்கு படிக்கும் ஒரு சீனியருக்கு கிடைக்கும்.  அவனை கண்டு கொண்டால் 'ஹால்டா' கிடைக்கும்.  


இன்ஸ்டிடியூட்கள், தன் வேலையைத் தவிர,  காதல் வளர்க்கும் பூங்காக்கள் வேலையையும் செய்தன.  இங்கு விடலைக் காதலில் விழா தவர் எவருமில்லை. நான் ஆத்தூர்ல் இருந்த 'ஸ்ரீ ராம் இன்ஸ்டிடியூட்டில்' ஹையர்வரை படித்தேன்.  காலை ஏழு மணி முதல் எட்டு வரை ஆங்கிலம். எட்டு முதல் ஒன்பது வரை தமிழ் அடித்தேன்.  பக்கத்தில் 'சாந்தி' என்னும் பெண் உட்காருவாள். உட்கார்ந்ததும், ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்ப்பாள். ஒரு புன்னகை. வசீகரமான, மந்திரப் புன்னகை. புன்னகைக்கும் போது, அவள் மேல் உதட்டில் இருக்கு பூனை முடி அழகாக இருக்கும்.   "நீங்க தினம் ஒரு சட்டை மாத்துவீங்களா" - விசாரிப்பாள்! கேரேஜ் ரிடர்ன் செய்யும் போது லேசா கைபடும்.   இது போதாதா?   பதினைந்து நிமிஷத்தில் அடிக்கவேண்டிய பக்கங்களை 10 நிமிடத்தில் முடித்துவிடுவேன். கையெல்லாம் "மை" ஈஷிக் கொண்டு 'ரிப்பன்' மாற்றிக் கொடுப்பேன்.  வாழ்க்கையில் நிகழ்ந்த பெல்வேறு விடலைக் காதல்களில் அதுவும் ஒன்று. அது கிடக்கட்டும்.


இந்த டைப்ரைட்டர்களை நேசிப்பவர்கள் லிஸ்ட்டில்,  வேறு யாரைக் காட்டிலும், பத்திரிக்கை யாளர்கள்தான் முன் நிற்பார்கள்.  அவர்கள் செல்லுமிடமெங்கும் "செல்ல நாய்க்குட்டி" யினை அழத்துச் செல்வது போல, ஒரு 'போர்ட்டபிள் டைப்ரைட்டரை' யும் உடன் அழைத்துச் செல்வர். அந்த மிஷனிடம், பேசுவார்கள், கொஞ்சுவார்கள். ஏன்? கோபம் கூட கொள்வார்கள். செண்டிமெண்டெல்லாம் உண்டு.


இந்த வாரம் 'ஹிண்டுவில்' ஸ்ரீ வி.கங்காதர் அவர்கள் எழுதியிருக்கிறார். உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் கடந்த ஏப்ரலில், பூனே அருகில் மூடப்பட்டு விட்டதாம்.  டைப்ரைட்டகள் காலம் ஓய்ந்தது!  அங்கென்றும், இங்கென்றுமாக அத்திப் பூ போல இருக்கும் ஒரிரண்டு டைப்ரைட்டகளும் இன்னும் சில காலத்தில், மியூசியத்திற்கு போய்விடும்.


ஆனால் இந்த மிஷின் எழுப்பிய ஓசைகள் 'இசை போல' இன்னும் பல ஆண்டுகளுக்கு, காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

Sunday, July 3, 2011

Neyveli Book Fair 2011


                                   புத்தக விற்பனை - நெய்வேலி!

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே அனுபவிக்க முடிந்த,  புத்தகக் கண்காட்சி/விற்பனை வசதிகளை தற்போது கடலூர் போன்ற சிறு ஊர்களில் இருப்பவர்களும் அனுபவிக்க முடிகிறது.  கடந்த 13 ஆண்டுகளாக ஜூலை மாதங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில், புத்தக கண்காட்சி(?) மற்றும் விற்பனை, நெய்வேலி நகரத்தில் மிகச் சிறப்பாக நடந்துகொண்டு வருகிறது.

இன்று (03/07/2011) நெய்வேலி புத்தக விற்பனை அரங்குக்குச் சென்று வந்தேன்.  முன்னனி பதிப்பகத்தார் அனைவரும் ஸ்டால்கள் அமைத்துள்ளனர். நிறைய புத்தகங்கள் உள்ளன. மிகுந்த மகிழ்ச்சியளித்த அம்சம் என்னவெனில், நெய்வேலி மக்கள் மட்டுமன்றி அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர். நிறைய கூட்டம்.  

பிற ஊடகங்களின் தாக்கத்தினையும் மீறி, இவ்வளவு கூட்டம் புத்தகம் வாங்குவதற்கென்று வருகிறது என்பதே நிறைவளிக்கிறது.

சும்மா, ஒரு 'ஸ்டாலில்' பேச்சு கொடுத்துப் பார்த்தேன், எந்த மாதிரியான புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆகின்றன வென்று.  சமையல் குறிப்புகள் முதல் இடமாம், ஆன்மீக புத்தகங்கள் அதற்கு அடுத்த படியாய் விற்பனை ஆகிறதாம்.  "அரண்மனை நாவிதன்" கதை மாதிரிச் சொன்னாரா அல்லது ஏதேனும் விற்பனை குறிப்புகள் அடிப்படையில் சொன்னாரா தெரியவில்லை. எதுவானால் என்ன? மக்கள் புத்தகம் வாசித்தால் சரி.  சமையல் குறிப்பினை படித்து முடித்தபின் நல்ல புத்தக்ங்களை தேடி நிச்சயம் வருவார்கள்.

ஸ்டால்களில் வாங்கிய புத்தகங்களை எந்த கவரிலும் போட்டுத் தர மாட்டார்களாம். சும்மா கையில் அள்ளிக் கொண்டு போ என்கிறார்கள். என்போல இருபது-முப்பது புத்தகங்கள் வாங்கியவர்களின் நிலை, சிரமமாக இருந்தது.  வாங்கிய புத்தகங்களை, வேறு ஸ்டால்களுக்குள் எடுத்துச் செல்வதிலும் சிரமம். வெளியில் வைத்துவிட்டு செல்வதிலும் சிரமம்.

பிளாஸ்டிக் கவர்கள் வேண்டாம். அட்லீஸ்ட் துணிப் பைகளையாவது, விற்பனைக்கு வைக்கலாம் (அரங்கினுள்).  முன்யோசனையுள்ள ஆட்கள் வீட்டிலிருந்தே கட்டைப்பை எடுத்து வந்ததைப் பார்த்தேன். அடுத்த வருடம் நானாவது வீட்டிலிருந்து ஒரு பெரிய பை எடுத்துச் செல்லவேண்டும் (அ) அவர்களாவது துணிப்பையினை விற்பனை செய்ய வேண்டும்.  பார்ப்போம்.

இன்னோரு விஷயம்.  "கிரடிட்/டெபிட் கார்டுகள்" அக்ஸப்ட் செய்வதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் செய்யவேண்டும். எல்லா ஸ்டால்களிலும் சில்லறையாக கேட்கிறார்கள். எல்லோருக்கும் சில்லறையாக கொடுக்க 'உண்டியலை'த்தான் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். சட்டென்று ஒரு நல்ல புத்தகத்தைப் பார்த்துவிட்டோம். 'கேஷ்" பற்றிய கவலையின்றி வாங்கலாம் இல்லையா?

 "ஸ்வைப்" லைன் ஒன்றினை, புத்தகத்திருவிழா நடக்கும் 15 நாட்களுக்கு, BSNL  ஸ்பான்ஸர் செய்யமாட்டார்களா என்ன?