Friday, December 30, 2016

ஹெர்ணியா

சில காலம் முன்பு, இடது அடி வயிற்றின் கோடியில் ஒரு ப்ரீதி இட்லி சைசில் ஒரு வீக்கம்.  பரம சாதுவான வீக்கம்.  வலிக்காது. எழுந்து நின்றால் வரும். படுத்துக் கொண்டால் காணாமற் போய்விடும். கொஞ்ச நாளிலேயே அத்யந்த நன்பனாகி விட்டது  அவ்வீக்கம். அதனுடன் பேசலாம். எதிர்த்தெல்லாம் பேசாது. அதை செல்லமாய், மெதுவாய், லேசாக அழுத்திவிட்டால், சமர்த்தாக உள்ளே போய்விடும். கொஞ்ச நேரம் பொறுத்து மீண்டும் தலைகாட்டும். சரி போ... அது பாட்டுக்கு ஓரமா இருந்துக்கட்டும். அதென்ன வாடகையா தரப்போகிறது? தொந்தரவில்லாமல் இருந்து விட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன்.

சில நாட்களில், ப்ரீதி இட்லி சைசில் இருந்த வீக்கம், கும்பகோணம் துணி இட்லி சைசுக்கு பெரிசானது. வலி இல்லாவிடினும், ‘நான் ஒருத்தன் இருக்கேன் பார்’ என நினைவுறுத்தும் படியாக அசௌகரியம்.

இரண்யனை வதம் செய்ய, நரசிம்மன் கைவிரல்களால் அவனது குடலைக் கிழித்து வெளியே போட்டானாம். எனக்கு, ஹிரண்யன் என்னும் குடல், நரசிம்மன் தயவில்லாமலேயே வெளியே வந்து கொண்டிருந்த்து.  

தன்னை பத்திரமாக மூடிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் மூன்று லேயர்களில் பலவீன ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வழியே, சற்று காற்றாட வெளியே வந்துவிடும் எனது குடல் பகுதி.  இதனால்தான் இந்த குடலிறக்கத்திற்கு ஹிரண்யா என்று பெயர் வைத்தார்களோ என்னவோ! இப்படி தனது இருப்பிடத்தைத் விட்டு, எல்லை தாண்டிய பயங்கரவாதியாக மாறி, அவ்வப்போது வெளியே வந்து இம்சைகொடுக்க ஆரம்பித்தான் ஹிரண்ய கசிபு.

வந்து விட்டால், ஹெரண்யா தானாக குணமாகாது; சர்ஜரி ரிப்பேர் மட்டுமே சரியாக்கும் என கூகுளாண்டவர் அருள் பாலித்தாலும், எனது இஷ்ட தெய்வமான ‘யோகாவை’ வேண்டினேன்.  அவர் ஏகபாத – சர்வாங்க ஆசனங்களைப் பரிந்துரைத்தார். மோடிக்கு கருப்புப் பண முதலைகள் காட்டியது போல சற்றே ‘பாவலா’ காட்டிவிட்டு ஹிரண்யா தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை காட்டிக் கொண்டிருந்தது. எனவே இவ்விஷயத்தில் அனுபவம் பெற்ற ஒருவரைத் தொடர்புகொண்டேன்.  அவர் இடது, வலது, நடு (கட்சியெல்லாம் இல்லை – சும்மா திசைகள் தான்) என மூன்று ஹெர்ணியா அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்.  அவர் ‘ஆபரேஷனெல்லாம் செய்து கொள்ளாதே, எனக்கு நிறைய இம்சை கொடுத்துக் கொண்டிருக்கிறது; நீ இதற்காக விற்கும் ‘ஹெர்ணியா பெல்டை’ பயன்படுத்து... சரியாகிவிடும் என நல்வாக்கு சொல்ல, அமேசானுக்கு அடித்தது யோகம்.  ஒரு சுபயோக சுப தினத்தில் ஹெர்ணியா பெல்ட் வந்து சேர்ந்தது.  அந்த பெல்ட், ‘சூப்பர் மேன்’ பேண்டுக்கு மேல் போடும் ஜட்டி போல ஒருவிதமாக இருந்தது.  அதனால் என்ன? கத்தியின்றி ரத்தமின்றி ஹிரண்யனை விரட்டியடிக்கும் மந்திர பெல்ட்டை எதற்காக உதாசீனப் படுத்தனும் என மூன்று மாதம் அணிந்து திரிந்தேன்.

அப்பாவிடம் அடங்கி ஒடுங்கித் திரிந்து, அம்மாவைக் கணட்தும் அழுது ஆர்பாட்டம் செய்யும் சிறுவன் போல, பெல்ட்டை எடுத்ததும் ஹிரண்யணின் அட்டூழியம் அதிகமாகிவிடும். இந்த பெல்ட், தசைகளை பலவீனமாக்குவதையும் உணர முடிந்தது.

சரி... வேறு வழியில்லை. ‘சஸ்திர சிகிச்சையே பலனளிக்கும் போல’ எனத் தீர்மாணித்து நான் மிகவும் விரும்பும், சர்ஜன் டாக்டர் சசிதர் அவர்களை நாடினேன்.  நம்பற்கரிய நேர்மையாளர். தொழிலில் நேர்த்தி. திறமை சாலி. அவர் பார்த்த உடனேயே, ‘ இது சர்ஜரி’ தான் எனத் தீர்மாணித்து, சில பல டெஸ்ட்களைப் பரிந்துரைத்தார்.

ஆபரேஷன் செய்து கொள்வதில் பயமொன்றுமில்லை என்றாலும், தனியனாக வாழ்வதால், சமாளிக்க முடியுமா, சமையல் செய்துகொள்ள இயலுமா,  மாடியில் குடியிருப்பதால், படியேற முடியுமா, எனது அடிப்படையான தேவைகளை பிறர் உதவியின்றி செய்து கொள்ள இயலுமா, எனது நெடு நாளைய நண்பன் ‘மயக்கம்’ வந்து விட்டால் என்ன செய்வது, ஒரு வாரத்திற் காவது பிறரின் உதவி தேவைப்படுமே என்ற சந்தேகம், பயம் இருந்தது. பிறவி சங்கோஜியான எனக்கு இது பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனது ஆகட்டும். 64 வயதிலேயே இவ்வளவு தயங்கினால், இன்னும் வயதாகும் போது மேலும் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இப்போது இரத்தக் கொதிப்பு, சர்க்கரை இல்லை. இனி வரும் காலங்களில் எப்படியோ தெரியாது. எனவே துணிந்திடு மனமே என உறுதி கொண்டு, டெஸ்ட்களை எடுக்கச் சென்றேன்.

கதைகளில் ‘அஷ்ட திக்கு பாலகர்கள்’ என்று சொல்வார்கள். ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு தெய்வங்கள். எனது சர்ஜன் எடுக்க்ச் சொன்ன  டெஸ்ட் லேபரட்டரிகள் யாவும், அஷ்ட திக்கு பாலகர்களுக்கு சொந்தம் போல. திசைக்கு ஒன்றாக இருந்தது. தெற்கே ஸ்கேன். வடக்கே கார்டியாலஜிஸ்ட் ஒபினியன். கிழக்கே இரத்த சோதனை. மேற்கே ஈஸிஜி.
அனைத்து டெஸ்களையும் அஸ்வமேதயாகம் போல முடித்துக் கொண்டேன். 

இந்த டெஸ்ட்களில்,  மோடி உபத்திரவம் தருவார் எனக் கருதவேயில்லை. ஒவ்வொரு டெஸ்ட்டும்     ரூ 900, ரூ 700 பிடித்தது. அவர்கள் எவரிடத்திலும் ஸ்வைபிங் மெஷின் இல்லை.  ஒவ்வொரு லேபிற்கும் அவ்வளவு நூறு ரூபாய் நோட்டுகளை எங்கிருந்து சேகரிப்பது?  நூறு ரூபாய் நோட்டிக்களைச் சேகரிப்பதற்குள் விழி பிதுங்கிற்று.  பல மருந்துக் கடைகளிலும் பி.ஓ.எஸ் இல்லை. அப்படியானால், இவர்கள் யாவரும் வியாபாரத்தை எந்தக் கணக்கிலும் காட்டுவதில்லை போலும்.

மருத்துவ செலவிற்காக சிட்டியூனியன் பேங்கில் போய், அவசரத்தை விளக்கி, எனது அக்கவுண்டிலிருந்து முப்பதாயிரம் பணம் கேட்டால் மறுத்தார்கள்.  அதிகபட்சமே 24000 தான் தரமுடியும் என்றார்கள்.  நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கம்பெளயின்ட் செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு அவ்வளவுதான் அதிகாரம் என்கிறார்கள்.  காரணத்தை விளக்கியும், ஆதாரத்தைக் காண்பித்தும் பணம் கொடுக்க மறுக்கும் இந்த வங்கிக்காரர்கள் ரெட்டிகளுக்கு மாத்திரம் எப்படி கோடிக்கணக்கில் பணம் வழங்கினார்களோ தெரியவில்லை.

ஈஸிஜியில் பிரச்சினை என்றாலும் (ஆட்ரியல் ஃப்ளட்டர்) சர்ஜரி செய்ய ஒப்புதல்  வழங்கினார்கள். இந்த சடங்குகளைப் பூர்த்தி செய்வதற்குள்ளாகவே சர்ஜரி முடிந்த்து போல ஆயாசமாகிவிட்டது.

சற்றே நீண்ட தையல் போடுமளவு சர்ஜரி இருந்தது. ஒருவழியாக மூண்றாம் நாள் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவிட்டார்கள்.

எனது நண்பர்களுக்கு நான் பகிரங்கமாக நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது. குறிப்பாக திருவாளர்கள் சக்திவேல், பி.டி அரசு, விஜயராகவன், செந்தில், தியாகு ஆகியோருக்கு எனது  நெஞ்சார்ந்த நன்றிகள்.

சர்ஜரிக்குப் பின் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பல. முதல் விரோதி இருமல் – தும்மல். ஒவ்வொரு தும்மலுக்கும்  பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளையோ அல்லது கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையோ எளிதாக தரிசிக்கலாம். தும்மி முடித்ததும் கண்கள் இருள.. தலை சுற்ற.. தையல் போட்ட இடத்தில் 22000 V ஷாக் அடிக்க.. என்னே இன்பம்....

மட்டையடியாக பளு தூக்காதே, ஸ்ட்ரெயின் செய்யாதே என உபதேசிப்பது வேஸ்ட்.  தனியர்களுக்கு இவையெல்லாம் செய்யாமலிருக்க இயலாது.


ஆனால், சில யுக்திகளைக் கைக் கொண்டால் சமாளிக்கலாம்.  உதாரணமாக தும்மல் வரும்போல இருந்தால், அழுத்தமாக, வலிக்கும்படி மூக்கைக் கிள்ளிக் கொள்ள வேண்டும்.  தும்மல் அடங்குகிறது. சமையலின் போது தாளிப்பதை அறவே தவிர்க்க.  படி ஏறும்போது, ஒவ்வொருபடியாக... எந்தப் பக்கம் சர்ஜரி நடக்கவில்லையோ அந்தப் பக்க காலை எடுத்து வைத்து... இப்படி பல யுக்திகளைப் பழகிக் கொண்டுள்ளேன்.

ரெகவரி பீரியடைக் கடந்துவிட முடியும் என்றே கருதுகிறேன். நன்பர்களுக்கு மீண்டும் நன்றிகள்.

முடிசூட்டு விழா

அரசியலில், தலைமைக்கு வருவது என்பது, இந்தியாவைப் போல உலகில் வேறெங்காவது இப்படி விசித்திரமான முறையில் நடந்தேறுமா என்பது சந்தேகம். 

அடிமட்டத்திலிருந்து உயர்ந்து வருதல், எக்ஸ்ம்பளரியான ஆளுமை, திறமை, ஞானம், பொது நலத்தில் நாட்டம், மேடைப் பேச்சுத் திறன் என, எதுவும் நமக்கு வேண்டாம். சாதாரண   நிலையில் உள்ள எவரும், சமுதாய நிகழ்வுகளை-போக்குகளை ஊன்றிக் கவனித்தல், கற்றுக்கொடுத்தல், கற்றுக்கொள்ளுதல், பயிற்சி, பர்செப்ஷன், கள அனுபவம், விவேகம், சாணக்கியத்தனம்  ஆகியவற்றின் மூலமே தலைவராகலாம் என்ற விதிகள் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது.

தலைமைக்கு வருவதற்குத்  தேவையான காரணிகளாக, நமக்கு இங்கே, இரண்டு இருந்தால் போதும். ஒன்று தலைமையில் இருப்பவர் காலமாக வேண்டும். இரண்டாவது காலமானவருக்கு  மணைவியாகவோ, கணவனாகவோ, மகனாகவோ, மகளாகவோ ஏன் மருமகனாகவோ இருந்தால் கூட போதுமானது. உடனடியாக கிரீடம் சூட்டப்பட்டு விடும். தற்போதைய நிலையில், மறைந்தவருக்கு மாத்திரை, மருந்து எடுத்துக் கொடுத்தவராக இருந்தால் கூடப் போதுமானது. முடிசூட்டுதல் இங்கே ஆட்டோமெடிக்.

வியாபார குடும்பங்களைப் பற்றியும், விவசாயக் குடும்பங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் “அரசியல் குடும்பங்கள்” என்பது விசித்திரம்தானே? நேரு குடும்பம் தொட்டு இன்றைய கலைஞர் குடும்பம் வரை “வாரிசு அரசியல்” , வாரிசுகள் தலைமையேற்றுக் கொள்ளுதல் என்ற விஷயம்,  நமக்கு எந்தவித உறுத்தலையும் தரவில்லை.  

அதெப்படி ‘குடியரசு தேசத்தில்’, ‘முடியரசு கலாச்சாரம்’ இவ்வளவு எளிதாயிற்று என்பது இந்தியாவின் பல்வேறு அவிழ்க்கவியலா ‘முடிச்சுகளில்’ ஒன்று. இந்திய அரசியல் ‘குடும்ப அரசியல்வாதிகளால்’ நிரம்பிக் கிடக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

விடுதலைக்கு முன் இருந்த ‘ராஜாக்களின் வாரிசே ராஜா’ என்ற சிண்ட்ரோமிலிருந்து  இந்தியா விடுதலையாகவே இல்லை. அதனால்தான், ‘ராஜீவுக்குப்பின் சோனியா’ என்ற விசித்திரத்தை எந்தத் தயக்கமும் நெருடலும் இன்றி ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.

ஓராயிரம் சந்தேகங்கள், மர்மங்கள், குழப்பங்கள் நிரம்பிய ஒரு மரணத்தின் மைய முடிச்சாக இருந்தவரிடமே, தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப் படுவதை, எவ்விதம் சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்கிறோம்?  இன்னும் சில தினங்களிலேயே அவரிடம்அரசியல் அதிகாரமும் ஒப்படைக்கப் பட்டுவிடும்!  எந்தவித முணுமுணுப்பும் இன்றி அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தாங்கள் குவித்து வைத்துள்ள சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே! அதற்காக அவர்கள் எவர் காலையும் நாவால் துடைக்கத் தயங்க மாட்டார்கள்!  மக்களுக்குத்தான் ‘நாலரை நாட்டுச் சனி’

கவலை கொள்ளத்தக்க விஷயங்களாக கருதுபவை இரண்டு. ஒன்று மக்களின் மனோ நிலை. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், “ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன “  என உதறிவிட்டுப் போகும் மனோ நிலைமை.  

இரண்டாவதாக, இந்த அஜனனாயக போக்கை கண்டித்துக் கேட்கும் தார்மீக உரிமையற்ற எதிர்க்கட்சிகள். அவர்களிடத்திலும் ‘வாரிசுகள் போக்கே’ நீடித்திருப்பதால் வாய்மூடிக் காத்திருக்கிறார்கள்.

தகுதியான, திறமையான, நேர்மையான, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்கள் ஏன் இந்தியாவில் உருவாகவில்லை? அல்லது உருவாக்க முடியவில்லை? அவ்வித நேர்மையாளர்களை ஏன் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?

புத்தியற்றவர்களும், ஊழல் புரிபவர்களும், நேர்மையற்றவர்களும், நாட்டைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்றவர்களும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொத்துக்களை வாங்கிக் குவிப்பவர்களும், தேசத்தைப் பற்றி ஒரு திட்டமும்-விஷனும் இல்லாதவர்களும் எப்படி சிரமம் இன்றி தலைவர்களாய் நெஞ்சு நிமிர்த்தி உலவ முடிகிறது?  தலை சுற்றுகிறது.

எனக்குத் தோன்றும் காரணம் ‘இந்த அவலத்திற்கு மக்களே காரணம்’ என்பது தான். சிலரைத் தவிர பெரும்பான்மையான மக்களுக்கு,  நாட்டைப் பற்றிச் சிந்திக்க முடிவதில்லை. மக்களாட்சி என்றால் என்னவெனப் புரியவில்லை. அதன் மகத்துவமும் விளங்கவில்லை. மக்களது வாழ்விற்கும், தாழ்விற்கும் அரசியலே காரணம் என்பது எடுபடவில்லை. மக்கள், அரசியலில் ஈடுபடாவிடில், அரசியல் மக்களின் உணவைக் கொண்டுபோய்விடும் என்பது எட்டவில்லை.
அவர்களுக்குத் தெரிந்த்தெல்லாம், தேர்தல் என்றால் “சாராயம், பிரியாணி, இலவசம், பணம்”.. இவை மட்டுமே. தேர்தல் என்பது மக்களின் எதிர்காலம்-நாட்டின் எதிர்காலம் என்பது புரியவே இல்லை. 

போராட்டம் என்றால் அது சாதி சார்ந்ததாகவோ அல்லது வேறு சில உதிரிக் காரணங்களுக்காகவோ தெருவில்  நிற்பதுதான்.

‘அன்னிய துணிகளை வாங்கக் கூடாது’ என்று அறைகூவல் விட்ட காந்தியின் வேண்டுகோளை ஏற்று, வெளிநாட்டுத் துணிகளை ஏற்றிவந்த டிரக்கின் முன்னால் நின்றுகொண்டு நகர மறுத்து, டிரக்கினால் நசுக்கிக் கொல்லப்பட்டவரின் வரலாறெல்லாம் மக்களுக்குப் புரியவில்லை. பகத்சிங்கின் உக்கிரம் நமக்கு ஒரு சுவாரஸ்யமான கதை. விடுதலைக்காக உயிரைவிட்ட லட்சக்கணக்கான தியாகிகளின் சரிதங்களை ஒரு கதையாகப் பார்க்கத் துவங்கிவிட்டோம். 

இன்னமும் சுதந்திரம் காந்தியால் ‘வாங்கிக் கொடுக்கப்பட்டது’ என்றுதானே  நம்புகிறோம்? போராடிப்பெற்றோம் – அந்தப் போராட்டதின் தலைவராக காந்தி போன்றோர் இருந்தனர் என்பது சொல்லப் படவில்லையே?


தன் வயிற்றைத் தாண்டி, தன் மதத்தைத் தாண்டி, தங்கள் சாதியைத் தாண்டி யோசிக்கத் தெரியாமல் ‘மழுங்கடிக்கப்பட்ட’ மக்களால் ஒரு போதும் தகுதியான தலைவர்களை உருவாக்க முடியாது.  

என்றாவது ஒரு நாள் மக்கள் விழித்துக் கொள்வார்கள். அதுவரை Sinனம்மாக்கள் குதூகலித்துக் கொள்ளட்டும்.

Saturday, December 17, 2016

நேற்று நீ....நாளை நான்!

மீதமிருக்கும் ஆயுள் முழுக்க, நினைத்து ரசிக்கவும், சந்தோஷப்படவும், அழவும் போதுமான அனுபவங்களைத் தந்துவிட்டே போயிருக்கிறாள்.

கூடவே, மனிதர்களைப் புரிந்துகொள்ளும் மகத்தான வாய்ப்பையும் அருளி விட்டே சென்றருக்கிறார்.

பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை!

பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொண்டுபோவதில்லை

இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

பட்டிணத்தார்!

#டிசம்பர் 18



Wednesday, December 7, 2016





நாடகாசிரியர்,
நடிகர்,
எழுத்தாளர்,
பத்திரிகை ஆசிரியர்
வழக்கறிஞர்,
அரசியல் விமரிசகர்,
பேச்சாளர்,
புத்தி சாதூர்யம்,
பன் மொழிகள் அறிந்தவர்....

எல்லாவற்றிற்கும் மேலாக மகா தைரியசாலி.
தனக்கு சரியென்று தோன்றுவதை, எழுத சொல்ல தயங்காதவர்.

அவருடைய பதில்களில் இருக்கும் புத்திசாலித்தனமும், ப்ரஸன்ஸ் ஆஃப் மைண்டும் ரசிக்கக் கூடியவை.

அகில இந்திய அளவில் மிகப்பெரும் நபர்களுடன்  தொடர்பில் இருந்தவர். அவர்கள் யாவரும் இவர் மேல் மிகப்பெரிய அளவில் மரியாதை கொண்டிருந்தனர்.

அரசியல் நிகழ்வுகளில் சோ என்ன சொல்கிறார் என்பதை அனைவரும் அறிய ஆவல் கொண்டிருந்தனர்.

அவரது ஆலோசனைகள் யாவும் பின்பற்றப்பட்டதோ இல்லையோ, உன்னிப்பாக கவனிக்கப்பட்டன.

அலாதியான நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பலருள்  சோ முக்கியமானவவர்.

அவரது தொலைக்காட்சிக் காட்சி நாடகங்கள் யாவும் இன்றும் ரசிக்கக்கூடியவை.

இந்து மகா சமுத்திரம் போன்ற உன்னத புத்தகங்களை எழுதியவர்.

தமிழ்நாட்டில் அருகிப்  போயிருந்த Satire கலையை முழுமையாக தனதாக்கிக் கொண்டவர்.

அனைத்து நிகழ்ச்சிகள் பற்றியும் துக்ளக் என்ன சொல்கிறது என்பதை அறிய அனைவரும் ஆவல் கொள்வர்.

அரசியல் சாணக்கியன்.

நாட்டில் ஏற்பட்ட பல்வேறு கூட்டணிகள்/மாற்றங்களுக்குப் பின்னால் அவரது மூளை, உழைப்பு இருந்திருக்கிறது.

அவருக்கு இருந்த ஆகப்பெரிய மனிதர்களின் தொடர்பை தனக்காக  ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளாதவர்.

நேர்மையாளர்.

இந்தியக் கலச்சாரத்தின் உயரிய மாண்புகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதவர்.  அவை போன்ற மனிதர்களை இனி காண்பதரிது.

தமிழகத்தைவிட்டு மற்றுமொரு மலர் உதிரந்துவிட்டது.

சிரம் தாழ்ந்த அஞ்சலி.

சில சந்தேகங்கள்...

இன்று தொலைக் காட்சியில் அம்மாவின் இறுதி நாளைப்  பார்த்த போது எழுந்த சில சந்தேகங்கள்.

தில்லையம்பதி எப்படி திடீரென பிரசன்னமானார்? அவரை  VVIP களுக்கு introduce செய்ய வேண்டிய தேவை என்ன?

அது எந்த வகையிலான இறுதிச் சடங்கு? பார்த்தும் கேட்டுமிராத வகையில்? இதை முடிவெடுத்தது யார்?

மன்னையினர்  எந்த உரிமையில் இவற்றைச் செய்தனர்? உறவு செய்தால் ஓகே... இல்லையானால் கட்சிப் பிரமுகர் செய்யலாம்? இதெப்படி?

OPS எதற்காக பிரதமரிடம் அழணும்? அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதா?

கட்சி இப்போது யாருடைய கட்டுப்பாட்டில்?

பொதுச் செயலர் தேர்வில் மன்னையின்  பிடி எந்த அளவு இருக்கும்?

தமிழக அரசியலை ஒட்டி, அடுத்த தலைமையைத் தேர்தெடுப்பதில் வெளி ஆள்/வெளி கட்சி குறுக்கீடு இல்லாமல் செய்வாரகளா? அதறகான திட்டம் இருக்கா? மன்னையிடமிருந்து  விலகப்போகப் போகிறார்களா இல்லை சரணா?

கோந்து  போட்டு ஒட்டியதுபோல, ஏன் சிலர் அருகிலேயே நின்றிருந்தனர்?

1215 க்கு அறிவிக்கப்பட்டு,  ஒரு மணிக்கு புது கேபினட் பதவியேற்பு எப்படி சாத்தியமாயிற்று?

அந்த 75. நாட்களிலும், யார்தான்  அம்மாவைப் பார்த்தார்கள்? அச்சமயம் கட்சியையும் அரசையும் இயக்கியது யார்?
அவருக்கு என்னதான் உடம்பு? எப்படி சடாரென உடல்நிலை மோசமாகியது?
அப்போலோ, இப்போதாவது  கேஸ் ஷீட்டை  வெளியிடுமா?  இவ்வளவு ரகசியம் காக்கத் திட்டமிட்டது யார்? ஏன்?

மாலையில் அவர் காலமானதாக, பாண்டேக்கு சேதி சொல்லியது  யார்? அதன் பின்னணி-ரகசியம்  என்ன?

அம்மா உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறார்களா?

கொசுறாக,
நேரலை முழுவதும் சதா, தொன தொன வென, சம்பந்தா சம்பந்தமில்லாமல் குளறல்  நடையில், அபத்தமான உச்சரிப்புடன் உளறிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? முழுவதும் mute லதான்  பார்த்தேன்.

தேவைப்படும்போது சிறு சிறு வாக்கியங்களோடு நிறுத்திக் கொள்ளக்கூடாதா?

எந்த நேர்முக வரணணையாக இருந்தாலும் தமிழ்ச் சேனல்களில்  ஏன் இப்படி?

எப்படியாயினும், இன்று கட்டுப்பாட்டுடன் எந்த வன்முறையும் இன்றி அமைதியாக கழிந்த நாளுக்காக, அதிமுக தொண்டரகளுக்கும் ,  காவல் துறையினருக்கும் மனமார்ந்தபாராட்டுகள்!!