Friday, August 26, 2016

மீண்டும் வாழ்ந்தால் ...

இன்றும் வழமை போல, வாட்சப் நிரம்பி வழிந்தது. நேர்மையாகச் சொன்னால், பலவற்றைப்  படிப்பதே இல்லை. ஒரே விஷயம், நூறு பேரிடமிருந்து வந்தால், சலிப்பாகத்தானே  இருகும்?  எனவே, " க்ளியர் ஆல் " சௌகரியமான தேர்வு.

இன்று வந்தஒரு   தகவல், 'பாம்பு' என ஆரம்பிக்ககவே, 'அம்புலிமாமாவி' ன் சுவாரஸ்யத்தில் முழுவதும் படித்தேன். சுருக்கம் கீழே!

பாம்பொன்று,  வளைந்து நெளிந்து  ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு  குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

மெதுவாக, அருகே  போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பு குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச
நேரத்திலேயே மற்ற குரங்குகள்  கூட்டமாக  கூடி வந்துன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். குரங்கு  பிடியை விட்டதுமே பாம்பு அதைப்   போட்டுடும். தப்பிக்கவே முடியாது " என்று அதன் காதுபட பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனைபட்டது  , எந்த நேரமும் கொத்திச் சாகடிக்க காத்திருக்கும் நச்சுப் பாம்பு,  மரண பயம் குரங்கை  வதைத்தது.  "ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.  அட.. . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா . குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

நாமும்எ த்தனையோ  கடந்து போன கவலைகளையும், வன்மங்களையும், ஆத்திரத்தையும், ஈகோவையும், அந்தக் குரங்கு போல,   செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
                                                           
சோஷயல் மீடியாக்கள் பிரபலமான பின், தகவல்களும் அறிவுரைகளும் கொட்டேஷன்களும் நம்மைப் பந்தாடுகின்றன.    பகிர்பவர் உட்பட , எல்லோரும் கவல்களைக்  "கேட்டுக்" கொள்கிறோம்...ஆனால் "உணர்ந்து" கொள்கிறோமா என்பது சந்தேகம்தான்.

மேலே சொன்ன குரங்குக்குக்  கதையை 1973லேயே பெங்களூரில், ஒரு பிரசங்கத்தில் கேட்டிருக்கிறேன். ஆனாலும் எத்தனை பாம்புகளை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தேன்? இக்கதையை "உணர்ந்து" கொள்ள 43 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது!!

வயதும், காலமும் சிந்தனையோட்டத்தை புரட்டிப் போட்டு விடுகின்றன.  தற்போது திருமூலரையும், ராமணரையும் (தி.மலை) படித்தால், அவர்களின் பாடல்களின் பொருள் வேறு ஒரு டைமன்ஷனில்  விளங்குகிறது.

சில்வர் டங் "சீனிவாஸ சாஸ்திரிகள்" ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

சி.ட. சீனிவாச சாஸ்திரி , மிகப் பெரிய தேசபக்தர், பன் மொழி வித்தகர், பேரறிஞர், நம்பற்கரிய நாவண்மை படைத்தவர்.. இவரது பேச்சாற்றலைக் கண்டு வியந்துதான்  ஆங்கிலேயர்  அவருக்கு   "சில்வர் டங்" பட்டம் கொடுத்தனர்.

இவர் எழுதிய ஓரு புத்தகம் "மீண்டும் வாழ்ந்தால்..".

மீண்டும் வாழ்வது என்றால், ஒபாமாவாகவோ, அம்பானியாகவோ, ஐஸ்வர்யாவாகோ  பிறப்பதன்று.  இதே பெயரில், இதே நாட்டில், இதே குடும்பத்தில், இதே தகுதிகளுடன், இதே  அடையாளத்தில்,  இப்படியே   மீண்டும் வாழ்ந்தால், இதே வாழக்கையை எப்படி திருத்தி வாழ்வோம் என .

அருமையான புத்தகம்.

நமக்கு மீண்டும், இதே வாழ்க்கையை வாழும் வாய்ப்பு கிடைத்தால்..? குறைந்தபட்சம் இப்போது கிடைத்திருக்கும் புத்தித் தெளிவோடு...!!

சுவாரஸ்யமான கற்பனை!


If I had my life to live over again,
I’d dare to make more mistakes next time.
I’d relax.
I’d limber up.
I’d be sillier than I’ve been this trip.
I would take fewer things seriously.
I would take more chances,
I would eat more ice cream and less beans.
I would, perhaps, have more actual troubles but fewer imaginary ones.
you see, I’m one of those people who was sensible and sane,
hour after hour,
day after day.

Oh, I’ve had my moments.
If I had to do it over again,
I’d have more of them.
In fact, I’d try to have nothing else- just moments,
one after another, instead of living so many years ahead of each day.
I’ve been one of those persons who never goes anywhere without a thermometer, a hot-water bottle, a raincoat, and a parachute.
If I could do it again, I would travel lighter than I have.

If I had to live my life over,
I would start barefoot earlier in the spring
and stay that way later in the fall.
I would go to more dances,
I would ride more merry-go-rounds,
I would pick more daisies.

– Nadine Stair

Monday, August 22, 2016

ஆஸ்பத்திரி தினங்கள்.

மருத்துவ மணை வாசலை மிதிக்காத தருணங்கள் வாய்க்கப் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள். ஆஸ்பத்திரி திங்கள் அச்சமூட்டாவிட்டாலும், நேசம் கொள்ளத்தக்கதாக இருப்பதில்லை!    நீருக்குள்ளிருந்து மூச்சுக் காற்றுக்காக வெளிவரத்துடிக்கும் மனோ நிலைதான் சகலருக்கும். நிலைமை சற்றே சீரானவுடன், எப்பொழுது  ‘டிஸ்சார்ஜ்’ என்பதுதான் அடுத்த விசாரணை. அன்றாட வாழ்வுக்கு, கூடிய விரைவில் திரும்புவதையே அனைவரும் விரும்புகிறோம்; வாழ்க்கை எவ்வளவு சலிப்பாக, சந்தோஷமற்றதாக, இனிமையற்றதாக இருந்தாலும்.

மருத்துவமணைகள் கற்றுத்தரும் பாடங்கள் அனேகம். மனிதர்களை நேயமிக்கவர்களாக மாற்றும். நேசமிக்கவர்களாக மாற்றும். வாழ்வின் அனித்தியத்தை முகத்தில் அறைந்து உணரவைக்கும். அதிலும் சற்றே அபாயகரமான நிலையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வரும்  நோயாளிகள், உணர்ச்சி நிலையில்,  சக மனிதர்களுடனாண அணுகுமுறையில், வாழ்க்கை மீதான பிடித்தத்தில்  என ஏதாவது ஒன்றிலாவது மாற்றம் கொண்டிருப்பார்கள். குறைந்தபட்சம் கொஞ்சம் ‘மென்மையாக’ யாகவாவது மாறியிருப்பார்கள்.

என்னுடைய சில உபாதைகளுக்காக, கோட்டக்கல் ஆர்யவைத்திய சாலையில் வருடம் ஒருமுறை, அனுமதிக்கப் பட்டு, சில நாட்கள் சிகிச்சை பெறவேண்டும் என்பது எனக்கு விதிக்கப்பட்டது.
  
புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் லிஸ்டில் இணைந்துவிட்டபின், இம் மருத்துவ மணையின் உள்ளே நுழையும்போதெல்லாம், மனதின் ஓரத்தில், தீற்றலாக ஒரு சோக கீதம் இசைத்துக் கொண்டிருக்கும். அனைவரும் மனைவியோ, மகனோ, மகளோ  ஏதோ ஒரு துணையோடு வந்திருக்க,  நான் மட்டும் இப்படி தனியாகவா என்ற எண்ணத்தை சம்மட்டிகொண்டு அடித்து சுக்கு நூறாக்கியது, அங்கே பெற்ற அனுபவம்.

சின்னஞ்சிறு குழந்தைகள் குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை நடக்க இயலாமல், தானே உணவருந்த இயலாமல், தன் முகத்தைக் கூட தானே துடைத்துக் கொள்ள இயலாமல், துவண்டுவிட்ட கால்களோடு, கண்கள் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்க, கை கால்கள் அவர்களின் இச்சைக்குட்பட்டு இயங்காமல்,  அவை தானாக, வேறு ஒரு கதியில் துடித்துக்கொண்டிருப்பதைக் காண நெஞ்சம் பதறுகிறது.  இரண்டு வயது கூட நிரம்பாத பாலகர்கள் என்ன பாவம் செய்தார்கள்?  சுருண்டுபோன கால்களோடு.. கடவுளே!  

மனம் நிறைய நம்பிக்கையோடு, கோட்டக்கல் வருகிறார்கள். சிகிச்சை  நூறு சதம் பலனளிக்கிறதா என்பது உறுதியாகச் சொல்லமுடியாத சூழல்தான்.  ஆனால், அச்சிறார்களும், பாதிக்கப்பட்ட பொரியோர்களும்தான்   நாம் உயிரோடிருப்பதும், அவயவங்கள் சரியாக இயங்கிக் கொண்டிருப்பதும், எப்பேற்பட்ட ஆசீர்வாதங்கள் எனப்புரியவைப்பர்.  

யாரோ எவரோ தெரியாது.  நோயாளி ஒருவர் சற்றே தடுமாறினாலும் அவரைத் தாங்கிப் பிடிக்க,  பத்து கரங்கள் நீளுகின்றன. ஆறுதல் கூற, ஆயிரம் வார்த்தைகள் போட்டியிடு கின்றன.  உதவி தேவைப்படுபவர்களைப் பார்த்து பதறிப் போகின்றனர். இங்கே நிகழும் நேயம் வெளியுலம் முழுவதும் நீளாதா என ஏக்கமாய்த்தான் இருக்கிறது. வெளியே, மூர்க்க வார்த்தைகளில் மூழ்கிப்போய், குரூரமாய் நடந்து கொள்ளும் அற்பர்கள் பல்கிப் போய்விட்டார்களா என சந்தேகமாய் இருக்கிறது.

சோப்புக் குமிழ்களையாவது எப்போது உடையும் எனக் கணக்கிடலாம். மனித உயிர் எப்போது உடையும் கணம் எப்போது என யாரறிவர்?அக்குமிழ்கள் மேலே, வண்ணங்கள் பல தோன்றும் கவனித்திருக்கிறீர்களா? வாழ்க்கையும்  அத்தகையதோர் குமிழ்தானே? வண்ணங்களை நிரந்தரமென்று நினைத்துக் கொண்டிருக்கும் தருணத்திலேயே, குமிழிகள் வெடித்துச் சிதறுவதைப் போல,  நமது கனவுகளும் சிதறிப் போகின்றன.  குமிழ் உடையாதிருக்கும் பொழுதே, வண்ணங்களை எல்லோருக்கும் அளிப்போம். அன்பும் கருணையும் தான் மனிதம். காழ்ப்பையும் வெறுப்பையும் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினமும் பயிலுவதாகத் தெரியவில்லை.

வெள்ளம், புயல், விபத்து போன்ற ஆபத்துக் காலங்களில், ‘வாலண்டியர்கள்’  உதவ முன் வருகிறார்கள்.  அந்த லிஸ்டில், மருத்துவ மணைகளில் வாலண்டியர்களாக வருடத்திற் கொருமுறையாவது மக்கள் பணியாற்றினால், தேவைப் படுபவர்களுக்கு உதவி கிட்டுவது மட்டுமன்றி, தங்கள் மனங்களை  செழுமைப் படுத்திக் கொள்ளவும் உதவும்.


-------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, August 18, 2016

ஆதலினால் அன்பு செய்வீர்.

ரக்ஷா பந்தன். பந்தங்களை ரக்ஷிப்போம். அதாவது  உறவுகளைக் காப்போம். ஆனால் நடைமுறையில் எல்லாம் தலைகீழாக!!

எக்காலத்திலும் உறவுகட்கிடையே சச்சரவு கள் இருந்து கொண்டுதான் இருந்தன; ஆனால் ஒரு எல்லைக்குட்பட்டு.

இக்காலம் போன்று தன்வயிற்றைத்  தாண்டி எதையும் யோசிக்க இயலாத, ஈன சமூகமாய்  எப்படி மாறிப்போனோம் எனத் தெரியவில்லை. அனைவரிடத்தும் ஈகோ வியாபித்து, தலைவிரித்தாடுகிறது.

இப்போது போல, சண்டைக்கு அலையும் தினங்களைக் கண்டதில்லை.  காதில் விழும் வதந்திகளையும், உள்நோக்கத்தோடு  கூடிய பொய்யுரைகளையும் நம்பிக்  கொண்டு, விரோதித்துக் கொள்ள காத்திருக்கின்றனர்.

சகிப்புத் தன்மையும், பொறுமையும், அனுசரித்துச் செல்வதையும் மறந்து போன சமூகமாக மாறிப் போனோம்.  பெரியோர்களை அற்பமாக நடத்துவது அன்றாட நிகழ்வு.

இதைவிட பிறரது துயரத்தில் இன்பம் காணும்  அவலம்;

நன்றி மறப்பது குறித்து எவருக்கும் நாணமில்லை.

"..........உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு' என்பதைப் படித்திருந்தால் தானே?

தாய் மொழியை-அது போதிக்கும் நன்னெறிகனை   மறந்தோர் அனைத்தையும் இழந்தோர்  ஆவர்.

இந்தியக் கலாச்சாரம் குடும்பத்தைப் பேணும் கலாச்சாரம். குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரம்.  அதையே ஆட்டம் காண வைத்து விட்டோம் என்றால், நமது எண்ணிலடங்கா   ஆழமான புராண இதிகாசங்களிலிருந்து எதைக் கற்றுக் கொண்டோம் என விளங்க வில்லை.

வசதியில்லை  என்பதால், உறவுகட்கு  உதவாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களை நேசியுங்கள். குறைந்த பட்சம் அவர்களது துயரங்களைப் புரிந்து கொள்ளவாவது முயலுவோம்.

“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே”
என்று மிக அழகாகப் பாடுகிறார் வள்ளலார். எங்காவது மலை கைப்பிடியில் அகப்படுமா? அன்பு என்னும் கைப்பிடியில் இறைவன் என்ற மலையும் அகப்படும் என்கிறார். குடிசையே ஆனாலும் அன்பிருக்குமானால் அரசனும் விரும்பி நுழைவான் என்கிறார்.

அன்பு நெடிய சாந்தமும் தயவுமுடையது; அன்பிற்கு பொறாமையில்லை;
அன்பு தன்னைத் தானே புகழாது;
இறுமாப்பாயிராது;
அயோக்கியமானதைச் செய்யாது; தற்பொழிவை நாடாது;
சினமடையாது;
தீங்கு நினையாது;
அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்;
சகலத்தையும் தாங்கும்;
சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும்;
சகலத்தையும் சகிக்கும்.
அன்பு ஒருக்காலும் ஒழியாது.”

ஆதலினால் சொந்தபந்தங்களையாவது நேசிப்போம்.

ரக்ஷா பந்தன் கயிறு கட்டுவதில் இல்லை!

Wednesday, August 3, 2016

இருக்கும் இடத்தை விட்டு.....

இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலைவானேன்?

ஆன்மிகம், ஆத்மா,  இறை, பிரபஞ்ச சக்தி.... எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அவையாவும் உங்களுக்கு உள்ளே தான் இருக்கு!  பிண்டத்தில் இருப்பதுதான் அண்டத்திலும்.  உங்களுக்குள்ளே தேடுங்கள்.  கிடைக்கும். கண்டுவிட்டால், விண்டெடுப்பதற்கு ஏதுமில்லை எனவும் விளங்கும்.

யாரோ ஒருவர் சரியான வழியைச்  சுட்டிக்காட்டினாலே போதும். கைகாட்டியை சுமந்து கொண்டு திரியவேண்டும்  என்ற அவசியமே இல்லை. "மானச குரு" நிறையபேர் நம்மிடையே உண்டு. அத்தகைய சரித்திரங்களும் நிரம்ப உண்டு. அத்தகையோர்  தற்போது உயிரோடிருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

முக்திக்கு எவரும் உத்தரவாதமளிக்க முடியாது. உங்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று இறையடியில் விடுவது என்பதெல்லாம்  நடவாது. அதற்கு, நாமே, நாம் மட்டுமே பொறுப்பு.

"எல்லாம்" என பொதுமைப் படுத்துதல் தவறென்றாலும், பல பீடங்களுக்குப் பின், பணம், அதிகாரம், அரசியல், பாலியல் தொல்லை இருக்கத்தான்  செய்கின்றன.
எச்சரிக்கை தேவை.

நம்மிடம் இருப்பதைப் போன்ற செரிந்த  தத்துவங்கள் எவரிடமும் இல்லை. சரியான சமயக் கல்வி... குறிப்பாக தமிழின் தேர்ந்த சமய நூல்கள் (திருமூலர்-திருமந்திரம், தேவார திருவாசகங்கள், திவ்ய புராணங்கள், திருவருட்பா போன்றவை) சொல்லாததை யாரும் புதிதாகச்  சொல்லிவிட முடியாது.

Monday, August 1, 2016

“பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா?”“There is a hidden message in every waterfall.

  It says, if you are flexible, falling will not hurt you!” 

                                             ― Mehmet Murat ildan

வாழ்வில், உற்சாகம் தொற்றிக்கொள்ள ஒரு சில வார்த்தைகளே போதுமானதாக இருக்கிறது.  வற்றிப்போகவும் அப்படியே!

“குற்றாலம் போகலாமா?” 

இந்த வினா, சட்டென இளமையையும் மீட்டெடுத்து, துள்ளலையும் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. பணி ஓய்வுபெற்ற, என் வயதொத்த பலர் ஒன்று கூடி, வருடமொரு முறை குற்றாலம் சென்றுவருவதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறோம். வாடிக்கை மறந்திடலாமா? இந்த வருடமும் அவ்வாறே!

பல வருடங்களாகத் தொடரும் பயணம். நடுவில் வந்தோர் பலர். விலகியோர் சிலர். வாழ்க்கையைவிட்டே அகன்றவர் சிலர். எனினும் மறைந்தவர்களின் நினைவுகளைச் சிலிர்த்து நினைத்துக் கொண்டு, பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆயிரம்? லட்சம்? கோடி? எத்துனை ஆண்டுகளாக குற்றால அருவிகள் பொழிந்து கொண்டிருக்கின்றன? எத்தனை மகான்களையும், சித்தர்களையும், அரசர்களையும், ஆண்டிகளையும் பார்த்திருக்கிறது? யாரறிவர்? 

ஆனவங்களையும் அகங்காரங் களையும் ஒரே சிதறலில் வீழ்த்திவிட்டு, ஆர்பரிக்கும் மௌனத்தோடு புன்னகைக்கும் குற்றாலத்தைக் கண்டுதான்,  “ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்; ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்” என்று ஒரு புலவர் பாடினார் போலும்.

‘ஹோ..’ என்ற அருவியின் இறைச்சல் காதுகளுக்கு இன்ப ரீங்காரம்.  கருத்த மத  யாணைகள் போல மதமதப்புடன் அலட்சியமாக அமர்ந்திருக்கும் குன்றுகளுக் கிடையே, சீறிப்பாயும் நீர். திகட்டாத இன்பம்! மாறா இளமை! இயற்கையென்னும் இளைய கன்னியின் உச்சம் தொட்ட அழகை உறையவைத்து, வண்ணமயமாய் தீட்டிவைத்துக் கொண்டுள்ளது குற்றாலம்.  வயது, பால், இன வேறுபாடின்றி அனைவரும் குழந்தைகளாய் மாறி குதூகலிக்க அருவிகளைப்போல மற்றொன்று இல்லை.


மதிய நேரம். மெயின் அருவியில் திளைத்தெழுந்த பொழுது உணராத வெயில், வெளியே வந்ததும் சுட்டெரித்தது. பழைய குற்றாலத்தில் அவ்வளவாக நீரில்லை. தகித்தெடுத்தது. சற்றே ஏமாற்றத்துடன் ரூமிற்குத் திரும்பினோம். மாலை நெருங்கிற்று. தென்மேற்கில் மேகம் திரண்டெழுந்தது. மேற்கு மலைகளை, தன் கருத்த உடலால் போர்த்திற்று!  மலைகளும் காடுகளும் திரையிட்டுக் கொண்டன. அருவிகளும் கூட குதூகலித்து கூடுதல் சப்தமிட்டன. நிமிடங்களில் ஊரெங்கும் சாரல் வீசிற்று.  ‘சில்லென்ற’ காற்று வீச,  இறகுகளால் வருடுவது போல உடலெங்கும்  மழைப் பூக்கள் சொரிந்தன.  “இதற்காகத்தானே இங்கு வந்தாய்? இந்தா பெற்றுக் கொள்... வேண்டுமளவு பெற்றுக் கொள்...” என  சாரலும் காற்றும் இதமாகச் சூழ்ந்து கொண்டன! 


அறுசுவை உணவு அளவின்றி பரிமாறப்படும் பொழுது, அறையில் பட்டினி கிடக்க பைத்தியமா எங்களுக்கு? ஓட்டமாக ஓடினோம் ஐந்தருவிக்கு!  ஆஹா.. பிறவிப் பயனை அடைந்தோம். அருவியில் கூட்டமில்லை. ஐந்து கிளைகளிலும் நீர் ஆர்பரித்துக் கொண்டிருந்தது.   சூரியனின் பிரகாசத்தைப் பார்த்து வியந்து, அதனைப் அப்படியே பறிக்க முயன்றானாம் ஹனுமன். அதுபோல ஐந்து அருவிகளையும் அப்படியே விழுங்கவிட ஆசைகொண்டது மனது.  ஆனந்தக் குளியல். ஏகாந்தக் குளியல். திளைத்துக் கொண்டிருக்கும் பொழுதே.. நீர் இன்னமும் வேகமாக பெருக்கெடுத்தது. உற்சாகமும் தான். சுற்றிலும் நீர்த்துளிகள். அருவியின் சிதறலா ? சாரலின் தீவீரமா?  பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, நீர் பழுப்பு நிறமாயிற்று. ஐந்து கிளைகளும் ஒரே கிளைகளாக மாறிவிட்டதோ  என அஞ்சுமளவிற்கு நீர். ஆனந்தம்.. பரமானந்தம். அவ்வளவுதான், போதும் கிளம்புங்க.. நீர் அபாய அளவை அடைந்துவிட்டது  என காவல்துறை எச்சரிக்க, போதும் போதும் என்னும் அளவு நீராடிவிட்டு, புது மனைவியைப் பிரியும் மனோபாவத்தோடு விலகினோம்.


குற்றாலத்தின் அருகில் இருக்கும் மற்றொரு சொர்க்கம். பாலருவி.  வித்தியாசமான அருவி. மலையின் உச்சியிலிருந்து, தடுக்கி தடுக்கி பூஞ்சிதறலாய் கீழே இருக்கும் ஒரு தேக்கத்தில் விழும் அருவி. அருவியை அடைய நீந்தித்தான் செல்ல வேண்டும். (ஒரு கயிறும் கட்டியிருக்கிறார்கள்) சடசட வென ஓங்கியடிக்கும் வேகம் இல்லை. மஹா உயரத்திலிருந்து விழுவதால், தேக்கம் முழுவதுமே பூஞ்சிதறல்களாய் நீர். நீந்திச் சென்று அருவியில் நனைந்து,  நீரின்  ஓட்டத்தினால் வெளியே தள்ளப்பட்டு, பின் மீண்டும் ஓரமாய் நீந்திச் சென்று, மீண்டும் விலக்கப் பட்டு... என்னே ஒரு அனுபவம்.

நண்பர்களுடன் அறைகளுக்குத் திரும்பினோம். அதில் ஒரு நன்பர்; விபுலானந்தன்  என்று பெயர். சாதாரணமாக காணவியலாத பெயர். (மயில்வாகணன் என்ற இயற்பெயர் கொண்ட ஒரு யாழ்ப்பாணத்து முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்)

நன்பரேயாயினும் 'நல்ல பாடகர்' என்பது அறியாத ஒன்று. பல பழைய பாடல்களைப் பாடினார். நாங்கள் விரும்பிக் கேட்டது "  பாவாடை தாவணியில் பார்த்த உருவமா..” என்ற கண்ணதாசன் இயற்றிய, நிச்சயதாம்பூலம் திரைப்படப் பாடல்.

உண்மைதானே...? பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தான் உடைமாறி, உருவம் மாறி, திசை மாறி, சிந்தனை மாறி சிதறிப் போனோம். ஆனால் குற்றாலத்து நங்கை,  என்றும் இளமையாய், “பாவாடைத் தாவணியில் பார்த்த அதே ரூபத்தில்” மோகம் பொங்க,  காதல் தளும்ப,  கிரங்கடிக்கும் அழகோடு, மயக்கும் சிரிப்போடு  நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறாள்.

அப்பாடலில் ஒரு பத்தி வரும்...

தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா? 
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா?
முத்தமிழே! முக்கனியே! மோகவண்ணமே! 
முப்பொழுதும் எப்பொழுதும் எனது சொந்தமே 

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா 
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா 

எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும், 
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்,
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும், 
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன் !!


கடைசி பத்தியில் யாரை நினைத்தேன் எனச் சொல்லவும் வேண்டுமா?