மருத்துவ
மணை வாசலை மிதிக்காத தருணங்கள் வாய்க்கப் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.
ஆஸ்பத்திரி தினங்கள் அச்சமூட்டாவிட்டாலும், நேசம் கொள்ளத்தக்கதாக இருப்பதில்லை! நீருக்குள்ளிருந்து மூச்சுக் காற்றுக்காக வெளிவரத்துடிக்கும்
மனோ நிலைதான் சகலருக்கும். நிலைமை சற்றே சீரானவுடன், எப்பொழுது ‘டிஸ்சார்ஜ்’ என்பதுதான் அடுத்த விசாரணை. அன்றாட
வாழ்வுக்கு, கூடிய விரைவில் திரும்புவதையே அனைவரும் விரும்புகிறோம்; வாழ்க்கை
எவ்வளவு சலிப்பாக, சந்தோஷமற்றதாக, இனிமையற்றதாக இருந்தாலும்.
மருத்துவமணைகள்
கற்றுத்தரும் பாடங்கள் அனேகம். மனிதர்களை நேயமிக்கவர்களாக மாற்றும்.
நேசமிக்கவர்களாக மாற்றும். வாழ்வின் அனித்தியத்தை முகத்தில் அறைந்து உணரவைக்கும். அதிலும்
சற்றே அபாயகரமான நிலையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வரும் நோயாளிகள், உணர்ச்சி நிலையில், சக மனிதர்களுடனாண அணுகுமுறையில், வாழ்க்கை
மீதான பிடித்தத்தில் என ஏதாவது ஒன்றிலாவது
மாற்றம் கொண்டிருப்பார்கள். குறைந்தபட்சம் கொஞ்சம் ‘மென்மையாக’ யாகவாவது மாறியிருப்பார்கள்.
என்னுடைய
சில உபாதைகளுக்காக, கோட்டக்கல் ஆர்யவைத்திய சாலையில் வருடம் ஒருமுறை, அனுமதிக்கப்
பட்டு, சில நாட்கள் சிகிச்சை பெறவேண்டும் என்பது எனக்கு விதிக்கப்பட்டது.
புறக்கணிக்கப்பட்ட
மனிதர்கள் லிஸ்டில் இணைந்துவிட்டபின், இம் மருத்துவ மணையின் உள்ளே நுழையும்போதெல்லாம்,
மனதின் ஓரத்தில், தீற்றலாக ஒரு சோக கீதம் இசைத்துக் கொண்டிருக்கும். அனைவரும் மனைவியோ,
மகனோ, மகளோ ஏதோ ஒரு துணையோடு வந்திருக்க, நான் மட்டும் இப்படி தனியாகவா என்ற எண்ணத்தை
சம்மட்டிகொண்டு அடித்து சுக்கு நூறாக்கியது, அங்கே பெற்ற அனுபவம்.
சின்னஞ்சிறு
குழந்தைகள் குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை நடக்க இயலாமல், தானே உணவருந்த
இயலாமல், தன் முகத்தைக் கூட தானே துடைத்துக் கொள்ள இயலாமல், துவண்டுவிட்ட
கால்களோடு, கண்கள் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்க, கை கால்கள் அவர்களின்
இச்சைக்குட்பட்டு இயங்காமல், அவை தானாக, வேறு
ஒரு கதியில் துடித்துக்கொண்டிருப்பதைக் காண நெஞ்சம் பதறுகிறது. இரண்டு வயது கூட நிரம்பாத பாலகர்கள் என்ன பாவம்
செய்தார்கள்? சுருண்டுபோன கால்களோடு..
கடவுளே!
மனம்
நிறைய நம்பிக்கையோடு, கோட்டக்கல் வருகிறார்கள். சிகிச்சை நூறு சதம் பலனளிக்கிறதா என்பது உறுதியாகச்
சொல்லமுடியாத சூழல்தான். ஆனால், அச்சிறார்களும்,
பாதிக்கப்பட்ட பொரியோர்களும்தான் நாம் உயிரோடிருப்பதும்,
அவயவங்கள் சரியாக இயங்கிக் கொண்டிருப்பதும், எப்பேற்பட்ட ஆசீர்வாதங்கள் எனப்புரியவைப்பர்.
யாரோ
எவரோ தெரியாது. நோயாளி ஒருவர் சற்றே
தடுமாறினாலும் அவரைத் தாங்கிப் பிடிக்க,
பத்து கரங்கள் நீளுகின்றன. ஆறுதல் கூற, ஆயிரம் வார்த்தைகள் போட்டியிடு கின்றன.
உதவி தேவைப்படுபவர்களைப் பார்த்து பதறிப்
போகின்றனர். இங்கே நிகழும் நேயம் வெளியுலம் முழுவதும் நீளாதா என ஏக்கமாய்த்தான்
இருக்கிறது. வெளியே, மூர்க்க வார்த்தைகளில் மூழ்கிப்போய், குரூரமாய் நடந்து
கொள்ளும் அற்பர்கள் பல்கிப் போய்விட்டார்களா என சந்தேகமாய் இருக்கிறது.
சோப்புக்
குமிழ்களையாவது எப்போது உடையும் எனக் கணக்கிடலாம். மனித உயிர் எப்போது உடையும்
கணம் எப்போது என யாரறிவர்?அக்குமிழ்கள் மேலே, வண்ணங்கள் பல தோன்றும் கவனித்திருக்கிறீர்களா?
வாழ்க்கையும் அத்தகையதோர் குமிழ்தானே?
வண்ணங்களை நிரந்தரமென்று நினைத்துக் கொண்டிருக்கும் தருணத்திலேயே, குமிழிகள்
வெடித்துச் சிதறுவதைப் போல, நமது
கனவுகளும் சிதறிப் போகின்றன. குமிழ்
உடையாதிருக்கும் பொழுதே, வண்ணங்களை எல்லோருக்கும் அளிப்போம். அன்பும் கருணையும் தான்
மனிதம். காழ்ப்பையும் வெறுப்பையும் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினமும் பயிலுவதாகத்
தெரியவில்லை.
வெள்ளம்,
புயல், விபத்து போன்ற ஆபத்துக் காலங்களில், ‘வாலண்டியர்கள்’ உதவ முன் வருகிறார்கள். அந்த லிஸ்டில், மருத்துவ மணைகளில் வாலண்டியர்களாக
வருடத்திற் கொருமுறையாவது மக்கள் பணியாற்றினால், தேவைப் படுபவர்களுக்கு உதவி
கிட்டுவது மட்டுமன்றி, தங்கள் மனங்களை செழுமைப் படுத்திக் கொள்ளவும் உதவும்.
-------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------
நெகிழ வைக்கிறது!
ReplyDelete