Showing posts with label Book Review. Show all posts
Showing posts with label Book Review. Show all posts

Sunday, May 3, 2015

சடலமானபின்.....


நானறிவேன், 
உன் கண்களில் கண்ணீர் வழியும்!
அதை நான் துடைக்க இயலாது... 
இருக்கும் பொழுதே, எனக்காக
ஒரு துளி கண்ணீர் சிந்திவிடேன்! 

நானறிவேன்,
எனக்காக கோடித் துணியெடுப்பாய்,
அதை நானே உடுத்திக்கொள்ள முடியாதல்லவா?
மூச்சிருக்கும் பொழுதே உடுத்திவிடேன்!

நானறிவேன்,
என்னைப் பற்றி புகழ்ந்துரைக்கக் கூடும்
அதைக் கேட்க முடியாதல்லவா?
இப்பொழுதே என்னைப் பற்றி சொல்லிவிடேன்.

நானறிவேன்
எனது பிழைகளை மறப்பாய்
மரித்தபின் மறந்தென்ன எனக்கு? 
மூச்சுள்ளபோதே மறக்க மாட்டாயா?

நானறிவேன்,
நான் இல்லாததை, இல்லாமல் போனபின் உணர்வாய்
நான் அறிய, இப்பொழுதே என்னை அறிந்து கொள்ளேன்!

நானறிவேன்
என்னுடன் கொஞ்ச நேரம் செலவிட்டிருக்கலாம் என 
உள்ளம் வெதும்புவாய்
என் மூச்சுள்ளபோதே, உன் நேரத்தை கொஞ்சம் ஒதுக்கேன்!

ஒரு ரகசிய நேரத்தில்
எவரும் எப்போதும் விலகிடுவர்,
இதயங்களில் வசிப்பவர்களோடு 
இப்பொழுதே
பேசியவேண்டியவற்றை பேசிவிடுங்கள்!
மறந்த அன்பைக் காட்டி அரவணையுங்கள்!

வாழ்வது சில நாள்,
அன்பு வளர வாழ்வு வளரும்
விரோதம் வளர வாழ்வு அழியும்

Friday, February 27, 2015

'மகா பாரதம் -மாபெரும் விவாதம்' - புத்தகம்

மாகா பாரதம், இந்தியாவை இணைக்கும் சங்கிலியின் ஒரு கன்னி, ஒரு பெருங்கடல். அதில் மூழ்கி, அறிஞர்கள், அவரவர்களுக்கு, தங்கள் பாங்கில் பாரத்த்தைப் பார்த்த வண்ணம், முத்தெடுத்து எழுதியிருக்கிறார்கள். 

இன்னும் எத்துனை பேர்கள் வேண்டுமானாலும் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டே இருக்கலாம்.  அவ்வளவு கொட்டிக்கிடக்கும் இக்காப்பியத்தை, எண்ணிலடங்கா எழுத்தாளர்கள், இராஜாஜி முதல் எஸ்.ரா உட்பட (உபபாண்டவம்) பலர் காப்பியத்தினை அல்லது அதன் ஒரு பகுதியை, தங்கள் பாணியில் விரித்து எழுதியுள்ளனர். ஒவ்வொரு விரிவுரைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.

இராஜாஜி – கதை சொல்லும் போக்கு. சோ-தத்துவ வியாக்யானம், என்பது போல!  வாசுதேவன் நாயரின் இரண்டாம் நிலை முற்றிலும் புதுமையான நோக்கு..

அரசியல்வாதியும், தமிழ் ஆர்வலருமான திரு பழ. கருப்பையா அவர்கள் “மகாபாரதம் மாபெரும் விவாதம் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இப்புத்தகம் ஒரு “கேரக்டர் அனாலிஸில்” என்ற வகையில் இருக்கிறது. ஒவ்வொரு கதை நிகழ்வையும் (எபிஸொட்) எடுத்துக் கொண்டு,   நிகழ்வு மாந்தர்ளின் மன நிலை, தத்துவார்த்த நிலைபாடு, அவர்களது குணாதிசயம் ஆகியவற்றை, இக்கால கண்ணோட்டத்தோடு பார்க்கும் நூல்.

‘புனிதம்’  அல்லது ‘தெய்வீக அந்தஸ்து’ கொடுத்து,  ‘நமஸ்கரிக்கும்’ பாங்கினை புறந்தள்ளி, சற்றும் தாட்சண்யமில்லாமல் விமர்சரிக்கிறார். பாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் எதுவும் விதிவிலக்கில்லை, கிருஷ்ணன் உட்பட.

பாரதம் குறித்து நூல் இயற்றிய, ‘சோ’, ‘இராஜாஜி’  ஆகியவர்களின், பாரதம் குறித்த அவர்களது பார்வையையும் கூட விமர்சிக்கிறார்.

‘பாஞ்சாலி’, ‘குந்தி’  ஆகியவர்கள் குறித்த இவரது பார்வை மாறுபட்டதே! இவர்களை முற்றிலும் ‘அரசியல் பெண்மணிகள்’ என்கிறார்.

சில வார்த்தையாடல்கள் வெகு கூர்மையானவை.

எழுத்தாளர், அரசியல் வாதியல்லவா? அதுவும் திராவிடக் கட்சி அல்லவா?
கிருஷ்ணனைப் பேசும் பொழுதே, பழ. கருப்பையா அவர்களது அரசியல் சிந்தனை, அவரை நிகழ்காலத்திற்கு இழுத்துவந்து ‘தற்போதைய அரசியல் நிகழ்வுகளை ஒரு பிடி பிடிக்க வைத்துவிட்டு, பின்  மறுபடியும் மகாபாரத்திற்குச் இட்டுச் செல்கிறது.

‘பார்ப்பனர்’, ‘சத்திரியர்’ போன்ற தற்காலத்திற்கு நெருடலான சப்ஜெட்களை தயங்காமல், ஓரளவிற்கு நியாயமாக அலசுகிறார்.

இவரது பார்வையில், கீதை, ‘வருணாசர தர்மத்தை’ நிலை நாட்ட, இடைப்பட்ட காலத்தில் பாரதத்தில்  செருகப்பட்ட நூல் .

எழுதும் போக்கினைப் பார்த்து, எங்கே கீதை மற்றும் பாரதத்தின் சாரமான ‘தர்மத்தை நிலை நாட்டும்’ மையக் கருவிற்கு கேடு விளைவித்து விடுவாரோ என அச்சமேற்பட்டது.  இல்லை... கடைசிவரை ‘சில தர்மங்களை’ விமர்சித்தாலும், தர்மம் காக்கப் படவேண்டியதே என்பதில் உடன்படுகிறார். வியாசரையும் – கிருஷ்ணனையும் கிலாசித்துப் பேசிகிறார்.

தேர்ந்த நடை, நல்ல தமிழில்.

ஆனால், பீசுமனன் (பீஷ்மர்), வீமன், இராசாசி, செயத்துரதன், தோடம்(தோஷம்), சயித்ரதன் பல சொற்களுக்கு சில வார்த்தைகளுக்கு பழகிக் கொள்ள வேண்டும்.

படித்து முடித்தவுடன், ஒரு நாள் பூரா, சன்டிவியில் வரும் ராஜா, சாலமன்ன் பாப்பையா போன்றோர் பங்கெடுத்த, சுவாரஸ்யமான ஒரு பட்டிமன்றத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது.

மேடைப் பேச்சாளர்கள் உட்பட (ஏன் தின்னைப் பேச்சாளர்களும் கூட) பலரும் படித்துப் பார்க்க வேண்டிய புத்தகம்.  மாறுபட்ட பார்வை அல்லவா?

கிழக்கு பதிப்பகம். 310 பக்கங்கள். ரூ. 250/-

ஹலோ பத்ரி சார்... 250 ரூபாய்க்கு ஒரு நல்ல பேப்பரில் போடக்கூடாது? பழுப்புக் காகிதத்தில், இவ்வளவு மங்கலாக (இங்க் செலவாகி விடுமா?) அச்சடித்துக் கொடுத்தால்,  படிப்பது எப்படி?

Tuesday, June 3, 2014

பால்ய வீதி (புத்தகம்)

பால்ய வீதி (புத்தகம்)

தேர்தல் முடிந்த சமயம். பெரும்பகுதியோர், ஏதோ ஒரு கட்சி சார்பு கொண்டிருந்ததால், முகநூல் சுவர்கள் யாவும், களேபரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.

அதுசமயம், ஒருவர் ஒருவர் கட்சியைக் குறிப்பிட்டு, ‘எரிப்பதா?’, ‘புதைப்பதா?’ என முகநூலில் வினவிக் கொண்டிருந்தார்.

எழுதியவர் ஒரு கவிஞர். எனவே கவிஞர்கள் ‘அறம்’ பாடலாகது என, அவருக்கு மறுப்பெழுத, அதுவே முகநூல்  நட்புக்கு முகவுரையானது. பின்னர் அவரது கவிதைகளை முகநூலில் கவணிக்கலானேன். கவிதைகள் யாவும் ‘சுருக்கமாகவும்’, ‘சுறுக்கெனவும்’ அமைந்திருந்தது.



அவர்தான் வத்தராயிருப்பு தெ.சு.கவுதமன்.

இவரது ‘பால்வீதி’ என்னும் கவிதை நூல் சென்ற மார்ச்,2014-ல் வெளியானது. மெனக்கெட்டு புத்தகத்தை வாங்கிப்படித்தேன். இனி அவரது புத்தகத்தினுள்...

புத்தகம் எதைப்பற்றியது என்பது புத்தகத் தலைப்பிலேயே. புத்தகக் கவிதைகள் யாவும் ஒன்று, அவரது இளமைக்கால அனுபவங்களையும்-கண்களையும் கொண்டு, தற்கால நடப்புகளை கவணிப்பதாக இருக்கிறது. இன்னொன்று, தற்போதைய அல்லல்களையும்-நிகழ்வுகளையும்  நேரடியாக விவரிப்பதாகவும் இருக்கிறது.

உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, கட்டுமானத்திலும் கூட, கவிதைகள், இரு விதமாக உள்ளது.  ஒன்று சற்றே பெரியவை (தோராயமாக 20 வரிகளில்). மற்றொன்று  நான்கு அல்லது ஐந்து  வரிகளில்.

கவிதைகளில்கூட, சின்னசின்னதாய் இருப்பவை சுவையாய் இருக்கும் போலுள்ளது.

---  ‘குன்றுகள்’ யாவும் கல்குவாரிகளாகிப் போனால், முருகன் என்ன ஆவார்? (80)

---மனிதாபிமானம் என்னவோ நிறையத்தான் இருக்கிறது! வெளிக்காட்டுவதை பர்ஸ்தானே தீர்மாணிக்கிறது? (79)

--'தபால் பெட்டிகள்' யாவும் அனாதைகளாகி விட்டனவே என ஊடவே விசனப் படுகிறார் (78)

--- கூண்டுக் கிளிக்கு விடுதலை எப்போது என நம்மை சீட்டு எடுத்துப் பார்க்கச் சொல்லுகிறார் (77)

நான் ஒருமுறை சென்னைக்கு, ஒரு அமங்கல காரியத்தையொட்டி சென்றிருந்தேன். ‘பாடி’ யை, மின் மயானத்திற்கு கொண்டுசெல்வதற்கு தாமதாகிவிட்டது. (ஆம்புலன்ஸுக்கே வழிவிடாத சென்னை வாசிகள், அமரர் ஊர்திக்கா வழிவிடுவார்கள்?)  அக்னி பகவானுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கு, மயான மேடையருகே வரிசையாக பிணங்கள். மிக மிக சங்கடமாக உணர்ந்த தருணம். அத்தகைய ஒரு காட்சியை இவரும் கண்டிருப்பார் போல (76).

--வழியெல்லாம் நம்மிடம் யாசிப்பவர்களை உதாசீனப்படுத்திவிட்டு, கோயிலினுள் கடவுளிடம் கருணை வேண்டி யாசிக்கிறோம்! எப்படிக் கிடைக்கும்? (75)

-பலகாரம் சாப்பிட்டுக் கொண்டே எழிதியிருப்பார் போலும். பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட கடுகு இவரின் வார்த்தைகளிலும் மாட்டிக் கொண்டது!(74)

--துணிகளை விட துணிக்கடைகளில் ‘கட்டைப் பைக்கு’ அலையும் நம்மவர்களின் மனோபாவம் (73) !

--- சிதறு தேங்காய் சில்லுகளை பொறுக்கியெடுத்த சிறுவயது (70),  நெரிசல் பஸ்ஸில், கண்டக்டரின் விரலிடுக்கு நெரிசல்களில்  நோட்டுக்கள்(66), தங்கள் பூசல்களை பேசித்தீர்த்துக்கொள்ளாமல், ஒருவருக்கொருவர் முகம் காட்டாத நவக்கிரகங்கள் (64) – இவை போன்ற சுவாரஸ்யமான கவிதைச் சொடுக்குகள் ஏராளம்.

---கவுதமனுக்கு குழந்தைகளின் மேலும், குழந்தைப் பிராயத்தின் மேலும் தீராத மோகம். குழந்தைகள் உலகினுள் சென்று வருவது சுலபமாக, அழகாக, நுணுக்கமாக வருகிறது.  அக்காவை அடித்த செய்தி (63), சந்தோஷிக்க கற்றுக் கொடுத்த குழந்தை (60)..., அவஸ்தைகளுக்காக செல்லும் ஆஸ்பத்திரியில் கூட, நம்மை சிரிக்க வைக்க அங்கே ஒரு குழந்தை (47) போன்றவை உதாரணங்கள்!

---இடுப்பைவிட்டு இறங்க மறுக்கும் குழந்தை; இது தாய்க்கு "இரண்டாவது கர்ப்பகாலம்"  என்கிறார் – ஹ..

---பெப்ஸியும், கோலாவும் அடிமையின்  எச்சங்கள் என வர்ணிக்கிறார்.

எடுத்துக் காட்டுகள் போதும். ரசிக்க,  புத்தகத்தில் இன்னும் நிறைய இருக்கின்றன.

 எல்லாரையும் போல, ‘காதல்’ இவரையும் அவ்வப்பொழுது வீழ்த்துகிறது. எனக்குத்தான் வயதின் காரணமாக ஈடுபாடு கொள்ளவில்லை – அதனால் எழுதவில்லை.

நான் வேண்டுமென்றேதான், சம்பிரதாயமாக, அனைவரும் செய்வது போல கவிதை வரிகளை ‘Re-produce’  செய்யவில்லை. வாசகர்களுக்கு வாசிக்கும் சுவாரஸ்யம் குறையக் கூடாது என்பதற்காக!

திறமையாக, அடர்த்தியாக, கூர்ந்து கவணிக்கும் வலுவுடன், சமூக பிரக்ஞையுடன் எழுதுகிறார் கவுதமன்.  நல்ல எதிர்காலம் இருக்கிறது.

புத்தகம் நன்றாகவே வந்துள்ளது. படியுங்கள். 9841809235-க்கு தொலைபேசித்தால் அனுப்புவார். 80 பக்கம் 80 ரூபாய்.




Sunday, March 30, 2014

நிமித்தம் – புத்தகம்

இது திரு.எஸ். ராமகிருஷ்ணனின்  நாவல். 

ஆனந்தவிகடனில் இவரது ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’ போன்றவை ஆரம்ப காலத்தில் இவரை படிக்கத்தூண்டியவை. இவரது சமீபத்திய நாவல் ‘நிமித்தம்’.

தேவராஜ் என்னும் காது கேளாத ஒருவரின் கதை.

நாற்பத்தேழு வயதாகும் தேவராஜுக்கு, மறு நாள் விடிந்தால்  கல்யாணம். திருமணத்திற்கு முதல் நாள் எவரும் வரவில்லை! – இதுதான் முதல் அத்தியாயம். 

எதிர்பார்த்தபடி இல்லாமல், வெறும் ஐம்பது பேரோடு, அடுத்த நாள் காலையில் திருமணம் நடைபறுகிறது, கடைசி அத்தியாயத்தில்.

398 பக்கங்களில், 21 அத்தியாயங்களில்,  இடைப்பட்ட 47 வருட கதையைச் சொல்கிறார் எஸ்ரா.

திடகாத்திரமான மனிதனே ஏழ்மையால் அல்லலுறும்போது, ஒரு காது கேளாதவன், வறுமையில் என்ன பாடுபட்டிருப்பான்?  அவன் அனுபவித்த அவமானங்களை, துரோகங்களை, குடும்பத்தாரல்-ஊராரால் புறக்கணிக்கப்பட்டதை, தீவீரமாகச் சொல்லிச் செல்கிறார் திரு. எஸ். ராமகிருஷ்ணன்.

நாவலை படித்து முடிக்கும் பொழுது, அவன் பட்ட துயரங்கள், வேதனைகள் அனைத்தையும், நாமே அனுபவித்தது போல இருந்தது! ஆசிரியரின் வெற்றி அதில்தான் இருக்கிறது.

தனிமை, வெயில், மழை, அவமானங்கள் போன்ற விஷயங்களை சொல்வதில் ஆசிரியர் எப்பொழுதுமே வல்லவர். வலுவான கதைக்களத்தின் பின்னனியில், உண்மையிலேயே சொற்சிலம்பம் ஆடியிருக்கிறார்.

இவ்வளவு நுணுக்கமாக, தெளிவாக, செரிந்த நடையில் கதை சொல்கிற பாங்கு அவருக்கே உரியது.

ஏராளமான கதா பாத்திரங்கள். ஆயினும், மகாபாரதக் கதைபோல, எல்லா கதா பாத்திரங்களும், நாவலின்  அந்தந்த கதைக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றே இருக்கிறது.

தேவராஜை என்றைக்குமே அரவணைக்காத-புரிந்து கொள்ளக்கூட முயலாத அப்பா, அவனின் நன்பன் ராம சுப்பு, காசிக்குச் செல்லும் ஆச்சிகள், அந்த பினாங்குக் காரி, வைரவ செட்டியார், அவனது தாத்தா, தாத்தாவின் வெண்கலயம், ராஜாமணி போன்ற கதைகள் யாவும் தனித்தனியே ஒரு நாவலுக்குண்டான பரிமானங்ககளை, கனத்தை உள்ளடக்கியவை.

அச்சகத்தில் தண்ணீர் பிடித்து வைக்கும் ஜோஸ்வினோடு ஏற்படும் விடலைக் காதல், இறுதியில் சொல்லப்படும் சவீதாவின் காதல், காசியில் சொல்லப்படும் சிலம்பரா கதை எல்லாமே தனித்தனி குறு நாவல்கள். வெகு எதார்த்தம். அதிலும் ‘சவீதாவை’ அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.

மன வளர்ச்சி குன்றிய 'பிரபுவின்' கதை நெஞ்சத்தை நெருடுகிறது. பிரபு போன்ற பையன்கள் வாழும் பல குடும்பங்களை நான் அறிவேன். அத்தகைய குடும்பங்களில் நிகழும் அன்றாட அல்லல்களை, வேலைப் பளுவினை வெகு எதார்த்தமாக சொல்கிறார் ராமகிருஷ்ணன்.

நாத்திகர் சவரிமுத்து கேரக்டர் அபாரம்.

அதேபோலத்தான் ஓவிய ஆசிரியர் சுதர்ஸனமும் அவரது மனைவியும். நம்மில் எல்லோருமே அத்தகைய வாத்யார்களை நிச்சயம் பார்த்திருப்போம்.

தேவராஜ் வேசி ஒருத்தியை சந்திக்கிறான்.. அவளைக் கண்டு பரிதாபப்பட்டோ அல்லது அறுவறுத்தோ விலகி வரும் தருணங்களில் ஆசிரியரின் வர்ணனை உச்சம். ‘உன் பொண்டாட்டிக்கு ஆபரேஷன் நடந்தாலும் இப்படித்தான் இருக்கும்’ என்கிறாள் வயிற்றிலிருக்கும் தழும்பைக் காட்டி.  வெகு உண்மை.

தேவராஜ் காசிக்குச் செல்லும் பொழுது, நாமும் உடன் பயணிக்கிறோம். காசியின் பசுக்களையும், அவை நகரெங்கும் போடும் சானங்களையும் கூட விடவில்லை ஆசிரியர். காசியில் அவரது வர்ணனைகள் யாவும், நான் காசிக்குச் சென்றிருந்த பொழுது எப்படி உணர்ந்தேனோ அப்படியே இருந்தது.

ஊட்டியில் அவன் சந்தித்த ரூம் மேட் அனுபவம்,  ‘மேன்ஷன்’ வாசிகள் எல்லோருமே உணரக்கூடியது.

வண்டிபேட்டை கதையின் போது நாம் நூறு வருடம் பின்னே சென்று வாழ்வதுபோல உணர்கிறோம்.


நாவலின் ஊடே சொல்லும் அழுத்தமான வரிகள் யாவும் உன்னதம்.

பிறருக்கு சும்மா அட்வைஸ் பண்ணுகிறான் என்றால் அவன் பயப்படுகிறான் என்று பொருள்; அவமானங்களை சகித்துக் கொள்வது- வயதாகிப் போவதின் அடையாளம் – இது போன்று ஏராள-ஏராளமான வரிகள்!

நாவலின் எந்த ஒரு அத்தியாயத்தையும் எந்த நேரத்திலும் தனித்தனியாகப் படிக்கலாம்.  நாவலின் ஊடே, எமர்ஜென்ஸி, மண்டல், இலங்கை, எழுபதுகளின் அரசியல் யாவற்றையும் கலந்து சொல்வதால், அந்தந்த காலகட்டத்திற்குள் நுழைவது சௌகரியமாய் உள்ளது.

படிக்க வேண்டிய புத்தகம்.

உயிர்மை பதிப்பக வெளியீடு.
பைண்ட்ட பேக்.
398 பக்கங்கள்
விலை ரூ.375/-




Tuesday, January 24, 2012

சப்தமின்றி ஒரு சூறாவளி!


“படிப்பு -  புத்தக விமரிசனம்.
-0-

சப்தமின்றி, ஆரவாரமின்றி, மேல்பார்வைக்கு பரம சாதுவாக தோற்றமளிக்கும் ஒரு ‘சூறாவளி யைப் படித்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒரு நாவல் தான் “படிப்பு”.   கதையின் ஆரம்பம், அந்தகால ‘லட்சுமி நாவல் போல துவங்குகிறது.  ஆஹா.. “ஒரு தேவையற்ற புத்தகத்தை வாங்கிவந்து விட்டோமோஎன்ற சந்தேகம், பத்தாம் பக்கத்தை தாண்டுவதற்குள், தவிடுபொடியாகியாகிறது!

ஒரு குடும்பக் கதை, அரசியல்-பொருளாதார பின்னனியுடன், ஒரு தீவீரமான சமூகப் பார்வையில் சொல்லப்படுகிறது. கதையின் நிகழ்வு தோராயமாக 1915-1935 களில் நிகழ்வதாகக் கொள்ளலாம்.   அக்காலத்திய குடும்பப்பின்னனிக் கதையில், இத்தனை சாகசங்களை, பக்கத்துக்கு பக்கம் எப்படி சாத்திய மாக்கினார், அதுவும் 40 ஆண்டுகளுக்கு முன்னால் என்பது தீராத ஆச்சரியம். ஒவ்வொரு அடுத்த பத்திக்கும், ஆசிரியர் ஒளித்து வைத்திருக்கும், ‘பொடிகளும்-வெடிகளும் ஏராளம்-ஏராளம்.

கதாசிரியர், கதையின் ஓட்டத்தில், சொல்லிச் சென்ற விஷயங்களை விட, சொல்லாமல்விட்ட செய்திகளை எண்ணி விடுவது சுலபம்.  துளிக்கூட செயற்கைத்தனமோ-நாடகத்தனமோ இல்லாமல், மணிப்பிரவாகமாக செல்கிறது கதை.

பால்யவிவாகம், அக்கால குடும்ப-கிராம கட்டமைப்பு, ஏழ்மை, இசை, நாடகம், இலக்கியம் என அனைத்தும் கதையை ஒட்டி, காட்டாறு போல கூடவே ஓடி வருகிறது.   நாட்டின் விடுதலைக்கு முன்னால் நடந்த கதை என்பதால், சுதந்திரப் போராட்டத் தருணங்கள், ஒரு சாமானியனின் பார்வையில், மிகை ஏதுமின்றி, யதார்த்தமாக, பாசாங்குகற்று, நேர்மையாக சொல்லப் பட்டிருக்கிறது. சொல்லப் பட்டிருக்கிறதென்ன? ஒரு சித்திரமாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது!

ஒரு உன்னதமான ‘திரில்லருக்கு நிகரான சுவாரஸ்யம், கதை முழுவதும் காணக் கிடைக்கிறது.   கதையின் வர்ணனைகள் யாவும், துல்லியமானவை! நுணுக்கமானவை! இயல்பானவை! உண்மை அனுபவத்திற்கு வெகு அருகாமையில் உள்ளவை.

காந்திஜியும், சாவர்கரும், திலகரும் கூட சமகால தலைவர்களாக, ஒரு எளிய மனிதனின் பார்வையில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்!  ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரௌலட் சட்டம், அன்னிய துணி எரிப்ப்பு (அது குறித்து சாமானியனின் விமரிசனம், குறித்துக் கொள்ளப்படவேண்டியவை), ஒத்துழையாமை இயக்கம் என அக்காலத்திய நிகழ்வுகள் யாவும் சொல்லிச் செல்லப்பட்டிருக்கிறது என்பது கூட முக்கியமில்லை; அவை யாவும் தினசரி குடும்ப நிகழ்வோடு ஒப்பிட்டுக் காண்பித்திருப்பது ஆச்சரியம். குறிப்பாக, காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கம், ‘ வீ ட்டுப்பெண்களின் தினசரி செயல்பாடுகளோடு போகிற போக்கில் ஒப்பிட்டு சொல்லியிருப்பது திடுக்கிட வைக்கிறது! ‘அரசியல் மூடநம்பிக்கை போன்ற பதப் பிரயோகங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

குறிப்பிடத்தக்க விஷயம், கதை ‘சுந்தரம் என்ற நான்கு வயது சிறுவனின் பார்வையில் துவங்குகிறது. அவன் வளர, வளர, அவன் பார்வையிலேயே கதையும் கூடவே வளருகிறது!   புத்தகத்தை முடிக்கும் பொழுது, ‘சமூக மாற்றங்களை விரும்பிய, பாரதி போன்றவர்களை ஒருசேர தரிசித்த அனுபவம் கிடைக்கிறது. உன்னதமான நாவல். படிக்க வேண்டியவை லிஸ்ட்டில் இடம்பெற வேண்டிய புத்தகம்.

சாஹித்ய அகதெமி நாவல்கள் (மொழிபெயர்ப்பு செய்யப் பட்டவை) யாவும், அட்டையின் அடுத்த பக்கத்திலிருந்தே ஆரம்பித்து விடுகிறது. எழுதப்பட்ட காலத்தில் எதிர்கொண்ட விமரிசன்ங்கள், முன்னுரை போன்றவை இருந்திருந்தால் இன்னமும் ரசிக்கலாம்.  இப்படிப்பட்ட ஒரு நாவலை, அதன் மூலத்தில் படிக்க மிகுந்த அவா கொண்டேன். ஆனால் தெலுங்கு தெரியாதே! (இதன் ஆங்கில வடிவமும் கிடைக்கிறது. பெயர்: "SUNDARAM LEARNS")

========================================================================
புத்தகத்தின் பெயர்: “படிப்பு
ஆசிரியர்: “கொடவடிகன்டி குடும்பராவ்
தமிழில்: “இளம்பாரதி
வெளியீடு: “சாகித்ய அகாதெமி
பக்கம்: 248
விலை: ரூ. 85/-
========================================================================

Thursday, January 12, 2012

அனுபவங்கள்


                  (புத்தக விமரிசனம்)

புத்தகத் திருவிழாக்களில், ‘சாகித்ய அகதெமி விருது பெற்ற மொழி பெயர்ப்பு நாவல்களை வாங்கிவிடுவது வழக்கம். புதுவையில்  நடைபெற்ற புத்தக காட்சியில், அப்படி வாங்கிய ஒரு நாவல் ‘அனுபவங்கள். மூலம் வங்கமொழி. ஆசிரியர்: திவ்யேந்து பாலித். தமிழில் திருமதி புவனா நடராஜன். (சாகித்ய அகதெமி பதிப்பு. 220 பக்கங்கள். விலை  நூறு ரூபாய்)

கல்கத்தா நகரத்து, மத்திம வர்க்க பெண். வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு மணமுடித்துவைக்கப் படுகிறார். அங்கே போய், மாதங்கள் கழிந்தபின் தான் தெரிகிறது, அவன் லோக்கலில் ஒரு ‘செட்டப் வைத்திருக்கிறான் என்று. விவாகரத்து. தாய்நாடு திரும்பியபின், சமூகத்தால், உறவினரால், நண்பர் களால் அவள் படும் அவஸ்த்தைகள், நுனுக்கமாக விவரிக்கப் படுகின்றன.

வேலைதேடிக் கொள்கிறாள். அவளுக்கு இடப்பட்ட பணி, ‘கால் கேர்ல்ஸ்பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளை தயார் செய்வது!

பணியிடத்தில், அவளுக்கு ‘விவாகரத்து பெற்று தனியாய் இருக்கும் பெண் என்கிற காரணத்தால், அலுவலக அதிகாரிகள் அவளுக்கு  “காரண காரிய பதவி உயர்வு அளிக்கிறார்கள்.

தான் பேட்டி எடுத்த “கால் கேர்ல்ஸ்களின் கதைகளின் அனுபவத்தில், அலுவலகச் சூழலை எவ்விதம் எதிர்கொள்கிறாள் என்பது கதையின் இறுதியில் சொல்லப் படுகிறது.


சாதாரண கதை.  நிறைய கதைகள் இதுபோல வந்துள்ளன.  சொல்லிச் சொல்லி “நைந்து போன கதைக்கரு.

பெரும்பகுதி இடங்களில், மொழியாக்கம்  சரளமாக இருந்தாலும், சில இடங்களில் இரண்டு தடவை வாசித்தால் மட்டுமே புரிகிறது.  “சாகித்ய அகதெமி விருது பெற்ற நாவல் என்ற நிலையில் பார்த்தால் சற்று ஏமாற்றம்தான்.


125-ம் பக்கம் முதல், 141ம் பக்கம் வரை, ஒரு கட்டுரைபோல இருக்கும் ‘தாம்ஜாலி யின் உரை கனமானது. படித்துத் தக்க வைத்துக் கொள்ளவேண்டிய கருத்துக்கள். 

Sunday, December 25, 2011

தலைப்பைப்பார்த்து... (Few things left unsaid.” Book review:)


தலைப்பைப்பார்த்து... 
:Few things left unsaid……..”  Book review:
(231 pages; Rs. 100/- by Srishti  Publishers, New Delhi)
ஆசிரியர் “சுதீப் நகர்கர்”.



நெட்டில் சர்ஃப் செய்து கொண்டிருக்கும் போது ஒரு புத்தகம் கண்ணில் பட்டது! Few Things left Unsaid.

 “சொல்லாமல் விடப்பட்ட சில விஷயங்கள்..இந்த தலைப்பே “இலக்கியமாகஇருந்ததால், படித்தே ஆகவேண்டும் என்ற உணர்ச்சி உந்த, ஆர்டர் செய்தேன்.

இஞ்சினியரிங் காலேஜில் சேரும் ஒரு மாணவன், முதலாம் ஆண்டே காதலில்(!)  விழுகிறான். இது அமரக்காதலாம்! ஆறே மாதத்தில் இந்த உண்மைக் காதல் பிடிங்கிக் கொள்கிறது. அதற்கு  காரணம் நாயகனே! இதற்கான விளக்கங்கள் சொதப்பலாக சொல்லப் படுகிறது! ஒரு லாஜிக்கும் இல்லை!

உடனே நாயகன் ‘பீர் அடிக்கிறான் ‘தம்அடிக்கிறான். ஒருவருடம் ‘அரியர் வைக்கி றான். நாயகியோ வேறு ஒருவனை நாடிச் செல்கிறாள். இந்த இரண்டாம் காதலன்,  நாயகியைப் ‘பயன்படுத்திக் கொண்டு விட்டு விலகுகிறான்.

மீண்டும் அந்த பெண், பழைய காதலனிடமே வருகிறாள். இருவரும் சேருகிறார்கள். கதை இத்தோடு நின்றாலும் பரவாயில்லை! மீண்டும் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். பிரிகிறார்கள்.

ஒரு ‘டைம்பாஸ்நாவலுக்குக் கூட தேறாத கரு! மஹா போர். புத்தகமெங்கிலும் திரும்பத் திரும்ப, ஒரே மாதிரியாக வரும் வர்ணனை களும், நிகழ்வுகளும் 'கொட்டாவி' விட வைக் கின்றன.

எல்லாம் சரி.... சண்டையெல்லாம் முடிந்து ஒன்று சேர்ந்து விட்டு, மீண்டும் எதற்காக, நாயகன் இரண்டாம் முறையும் சண்டை போட்டுக் கொள்கிறான்? அந்த பெண் கூறும் ‘பணம் கதையில் எங்கிருந்து முளைத்தது? அது என்ன ரூ. 18,000/- ? புரிந்தவர்கள் சொல்லுங்கள்!

பைசாவுக்கு பெறாத கதைக் கரு! அமெச்சூர் தனமான, மோசமான, சலிப்பூட்டும் நடை! ஒருவேளை ‘விடலை களுக்குப் பிடிக்கலாம்!. ‘சேதன் பகத்தைப் பார்த்து ‘சூடு போட்டுக் கொண்டாரா ‘சுதீப்?


இது நேஷனல் பெஸ்ட் புக் செல்லராம்! கஷ்டம்!



Saturday, December 3, 2011

பல்வேறு உலகில் என் பயணம் (புத்தக விமரிசனம்)


நேர்மையாக எழுதப்பட்ட அனைத்து சுயசரிதங்களுமே படிப்பதற்கு சுவையானவை. அதுவும் புகழ்பெற்றவர்களின் சரிதம், நாம் இன்னொரு பிறவி எடுத்து வாழ்வது போன்ற அனுபவத்தை தரவல்லது.

இந்த வகையில்,  நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களது சுயசரிதம், “பல்வேறு உலகில் என் பயணம்(“Wondering in Many Worlds”) என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. 2011-ஜூலை மாதமே, நெய்வேலியில்  நடந்த புத்தக்கண்காட்சியில் வாங்கிவிட்டாலும் கூட, இப்போதுதான் படிக்க முடிந்தது.

நீதிபதியின் வார்த்தைத் தேர்வு, சரளமான நடை, எழுத்தின் நேர்மை, வார்த்தைகளின் கண்ணியம் என படிப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும் புத்தகம்.  நிகழ்ச்சிகளை விவரிக்கும் போது, கூடுமான வரை நிகழ்வுகளுக்கே முன்னுரிமை கொடுத்து எழுதியுள்ளார்.

திரு. வி.ஆர்.கே தலைசிறந்த நீதிபதி மாத்திரமல்ல; எழுத்தாளர், இயல்பான-மனிதாபிமானி, இடது சாரி சிந்தனாவாதி.  தனது  தீர்ப்புக்களை “‘கருணையோடும், குற்றவாளிகள் திருந்தும் விதமாக வுமே எழுதியதாக குறிப்பிடுகிறார். வழக்கறிஞராக, சட்டமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக, உயர் நீதிமன்ற நீதிபதியாக, சட்ட கமிஷன் உறுப்பினராக, உச்ச நீதிமன்ற நீதிபதியாக தான் பணியாற்றிய அனுபங்களை, மிக்க துணிச்சலுடனும், அசாத்திய நேர்மையுடனும் விவரித்துள்ளார். இந்திராகாந்தி தேர்தல் வழக்கினை விசாரித்த முறை பற்றி கூறியிருப்பது வியப்பிலாழ்த்துகிறது.   உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவிட்டு, தனது துறையின் மற்றொரு முகத்தினப்பற்றி, தயவு தாட்சயன்யமின்றி தீர்க்கமான எழதியிருப் பவை யாவும் இவரால் மட்டுமே எழுதக்கூடியன.

முன்னாள் உச்ச  நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ஆர்.சி.லஹோத்தி கூறியிருப்பது போல, இப்புத்தகம் வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞரும், அது அரசியலோ, இலக்கியமோ, நீதிபதியோ, மாணவனோ, ஆசிரியரோ எவராக இருந்தாலும் படிக்க வேண்டிய புத்தகம்.

வி.ஆர்.கே போன்ற மனிதர்கள் நூறாண்டுகளுக்கு ஒருமுறைதான் தோன்றக் கூடியவர்கள்.

விகடன் பிரசுரம், இப்புத்தகத்தின் தமிழாக்கத்தினை மிக நேர்த்தியாக வெளியுட்டுள்ளனர். தமிழில் திரு. ராணி மைந்தன்.

Saturday, October 22, 2011

பதினொரு நிமிடங்கள்

சிலரை “வசிய எழுத்தாளர்கள் என்று சொல்லுவார்கள். எக்கு தப்பாகவோ அல்லது வம்படியாகவோ கூட எழுதுவார்கள்; ஆனாலும் அவர்களது எழுத் தாற்றல், சொற்களின் தேர்வு, வாக்கிய அமைப்பு, வாதத் திறன், நடையின் நவீனம்,  நம்மைக் கட்டிப் போட்டுவிடும்.  நம்மையறியாமல் நாம் அவர்களது ‘பக்தர்களாகிவிட்டிருப்போம்.  இம்மாதிரியான எழுத்தாளர்கள் எப்போதாவதுதான் தென்படுவார்கள். “கான்ஷியஸாக படிக்க வில்லை என்றால், நம்மை அவர்களோடு இழுத்துச் சென்றுவிடுவார்கள் –  நமது “சோமாதிரி.  

இம்மாதிரியான எழுத்தாளர்களில் ஒருவர் Paulo Coelho. இவர் எழுதிய  “The Alchemist”   நாவலை வாசித்த சுகானுபவம், இவரது மற்றறொரு  நாவல் Eleven Minutes-ஐ படிக்கத் தூண்டியது.  கதை நேர்மையாகத் தான் இருக்கிறது! ஜாலங்கள் செய்ய வில்லை.


கதையின் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது: “ஒரு காலத்தில் மரியா என்று ஒரு விலை மாது இருந்தாள்..... “.   புத்தகத்தை மூடும் வரை இந்த டெம்போவைக் குலைக்காமல், உற்சாகத்துடன் கதை சொல்லிச் செல்கிறார் Paulo Coelhoஇவரது சிறந்த புத்தகங்களில் ஒன்றான The Alchemist –ஐ படித்துவிட்டு இதனைப் படித்ததால், இரண்டிற்கும் உள்ள வித்தி யாசம், நம்மை திடுக்கிட வைக்கிறது.

கதை, பிரேசில் நாட்டில் பிறந்த சிறுமி ‘மரியா’,  விடலைப்பருவ காதலில் அகப்பட்டுக் கொள்வதில் ஆரம்பிக்கிறது. பின் "ஜெனீவாவில்" எப்படி தடுமாறுகிறாள் என விவரிக்கிறது. "காதலையும், காமத்தையும்" மையமாகக் கொண்டு சொல்லப்படும்  இந்த ‘கத்தி மேல் நடக்கும் கதையினை, மிக சாமர்த்தியமாக சொல்லிச் செல்கிறார்.

இப்புத்தகம் வாசிக்க, ஒரு திறந்த மன நிலை (Open Minded State) தேவைப் படுகிறது.  இல்லையெனில் இந்த நாவல் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் பல வர்ணனைகளும், சம்பவங்களும்  Soft Porn வகையைச் சார்ந்ததாக இருக்கிறது. கதையின் முக்கிய கேரக்டர் ‘மரியா வின் பணியினையும், அவரது மன நிலையினையும் சேர்த்துப் பார்த்தால், இந்த வர்ணனைகள் தவிர்க்க இயலாதவை,  கதைக்கு தேவைப் படுபவை எனத் தெரியும்.

நாவலின் நடுவே வரும் ‘மரியாவின் டைரி கதைக்கு பளு சேர்க்கிறது, 
கதையை மேலே நகர்த்திச் செல்கிறது.  டைரியின் வரிகள் யாவும் புத்திசாலித்தனமாக, “பெண்களின் மொழியில் Convincing ஆக 
 சொல்லப் பட்டிருக்கிறது. லைப்ரரியனொடும், ஆர்ட்டிஸ்ட்டோடும் மரியா நிகழ்த்தும் உரையாடல்கள் மிக சுவாரஸ்ய மானவை. 

படித்துப் பாருங்கள். 

Saturday, October 15, 2011

புரட்சி 2020 – சேதன் பகத்


மற்றும் ஒரு ஆங்கில நாவல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
இளம் இந்திய-ஆங்கில எழுத்தாளர்களில் விரும்பிப் படிக்கப்படுபவர்களில் ஒருவர் “சேதன் பகத்” இவர் தனது ஐந்தாவது நாவலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். பெயர்:  ‘ரெவொல்யூஷன் 2020’.

கதைமாந்தர்களில் முக்கியமானவர்கள் மூவர். கோபால், ராகவ் மற்றும் ஆர்த்தி.  

இவர்களில் கோபால் கேரக்டர் மூலமாகவே கதை சொல்லப்பட்டிருக் கிறது. மூவரும் பள்ளிப்பருவத்தி லிருந்தே நண்பர்கள்

இவர்களில் கோபால் கீழ்-நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர். ராகவ் உயர்- மத்தியதர வர்க்கம். ஆர்த்தி அதிகார/ அரசியல் பின்புலத்திலிருந்து.

கோபாலும், ராகவும் JEE / AIEEE தேர்வில் போட்டியிடுகின்றனர். ராகவ் தேர்ச்சிபெற கோபால் தோல்வி யடைகிறார். இவர்கள் இருவரும் ஆர்த்தியை காதலிக்கின்றனர்.

இந்த ஸ்ரீதர் காலத்திய முக்கோனக் காதல் கதையை, அரசியல் கலந்து, சூடான ‘மசால் வடையாகத்’ தருகிறார் சேதன் பகத்.  கோபால் பணம் சம்பாதிப்பதை குறியாகக் கொள்ள, ராகவ் சினிமா கதாநாயகன் போல உலகைத் திருத்த உத்தேசிக்கிறார்.

“சேதன் பகத்” என்ன சொல்ல வருகிறார் என்பது குழப்பம் தான். வாழ்க்கையில் வெற்றிபெற ஊழலைத் துணையாகக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார், கோபால் மூலம்.

இந்திய மத்திதர வர்க்கம், அன்னா ஹசாரே பின்னால் நிற்பது போல, ராகவ் ஊழலை எதிர்க்கிறார். அதே மேலெழுந்த வாரியான பார்வை. ஊழலின் அஸ்த்திவாரம் எது, ஆதாரம் எது என்பதை கோடிகூட காண்பிக்க வில்லை. கேரக்டரிலும் ஆழம் இல்லை.

வெற்றிபெறும் மனிதருக்குப் பின்னால் போகும் பெண்ணாக ஆர்த்தி’. 

கதையில் சினிமாத்தனம் தூக்கலாக இருக்கிறது.  கடைசி அத்தியாயங்கள் அவசர அவசரமாக முடித்தாற் போல உள்ளது.  இவருடைய புத்தகங்களில் வரும் புத்திசாலித்தனமான வாதங்களோ, யதார்த்தமான நகர-உயர் மத்தியதர சூழ்நிலை வர்ணணைகளும் மிஸ்ஸிங். 

பெரும்பகுதியான இடங்களில் அடுத்த என்ன வரப் போகிறது என்பது யூகிக்கும்படியாகவே உள்ளது. இந்த முக்கோணக் காதலில், யார் சரி-யார் தவறு என்பதில் ஆசிரியருகே குழப்பமா அல்லது நீங்களே தீர்மாணித்துக் கொள்ளுங்கள் என விட்டுவிடுகிறாரா தெரியவில்லை!  கதையில் கேரக்டர்களை டெவலப் செய்வதில், இன்னும்  கொஞ்சம் கவணம் கொண்டிருக்கலாம்.

மும்பை சினிமாவை மனதிற்கொண்டு எழுதப் பட்டாற்போல இருக்கிறது.
நீங்கள் சேதனின் விசிறியாக இருந்தால், இதற்கு முன்னால் வெளியான நாவல்களை மனதிற்கொண்டு படிக்காதீர்கள். ஏமாற்றமடைவீர்கள்.
மற்றவர்களுக்கு, ஒரு நல்ல டைம் பாஸ் நாவல். படிக்கலாம்