Sunday, March 30, 2014

நிமித்தம் – புத்தகம்

இது திரு.எஸ். ராமகிருஷ்ணனின்  நாவல். 

ஆனந்தவிகடனில் இவரது ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’ போன்றவை ஆரம்ப காலத்தில் இவரை படிக்கத்தூண்டியவை. இவரது சமீபத்திய நாவல் ‘நிமித்தம்’.

தேவராஜ் என்னும் காது கேளாத ஒருவரின் கதை.

நாற்பத்தேழு வயதாகும் தேவராஜுக்கு, மறு நாள் விடிந்தால்  கல்யாணம். திருமணத்திற்கு முதல் நாள் எவரும் வரவில்லை! – இதுதான் முதல் அத்தியாயம். 

எதிர்பார்த்தபடி இல்லாமல், வெறும் ஐம்பது பேரோடு, அடுத்த நாள் காலையில் திருமணம் நடைபறுகிறது, கடைசி அத்தியாயத்தில்.

398 பக்கங்களில், 21 அத்தியாயங்களில்,  இடைப்பட்ட 47 வருட கதையைச் சொல்கிறார் எஸ்ரா.

திடகாத்திரமான மனிதனே ஏழ்மையால் அல்லலுறும்போது, ஒரு காது கேளாதவன், வறுமையில் என்ன பாடுபட்டிருப்பான்?  அவன் அனுபவித்த அவமானங்களை, துரோகங்களை, குடும்பத்தாரல்-ஊராரால் புறக்கணிக்கப்பட்டதை, தீவீரமாகச் சொல்லிச் செல்கிறார் திரு. எஸ். ராமகிருஷ்ணன்.

நாவலை படித்து முடிக்கும் பொழுது, அவன் பட்ட துயரங்கள், வேதனைகள் அனைத்தையும், நாமே அனுபவித்தது போல இருந்தது! ஆசிரியரின் வெற்றி அதில்தான் இருக்கிறது.

தனிமை, வெயில், மழை, அவமானங்கள் போன்ற விஷயங்களை சொல்வதில் ஆசிரியர் எப்பொழுதுமே வல்லவர். வலுவான கதைக்களத்தின் பின்னனியில், உண்மையிலேயே சொற்சிலம்பம் ஆடியிருக்கிறார்.

இவ்வளவு நுணுக்கமாக, தெளிவாக, செரிந்த நடையில் கதை சொல்கிற பாங்கு அவருக்கே உரியது.

ஏராளமான கதா பாத்திரங்கள். ஆயினும், மகாபாரதக் கதைபோல, எல்லா கதா பாத்திரங்களும், நாவலின்  அந்தந்த கதைக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றே இருக்கிறது.

தேவராஜை என்றைக்குமே அரவணைக்காத-புரிந்து கொள்ளக்கூட முயலாத அப்பா, அவனின் நன்பன் ராம சுப்பு, காசிக்குச் செல்லும் ஆச்சிகள், அந்த பினாங்குக் காரி, வைரவ செட்டியார், அவனது தாத்தா, தாத்தாவின் வெண்கலயம், ராஜாமணி போன்ற கதைகள் யாவும் தனித்தனியே ஒரு நாவலுக்குண்டான பரிமானங்ககளை, கனத்தை உள்ளடக்கியவை.

அச்சகத்தில் தண்ணீர் பிடித்து வைக்கும் ஜோஸ்வினோடு ஏற்படும் விடலைக் காதல், இறுதியில் சொல்லப்படும் சவீதாவின் காதல், காசியில் சொல்லப்படும் சிலம்பரா கதை எல்லாமே தனித்தனி குறு நாவல்கள். வெகு எதார்த்தம். அதிலும் ‘சவீதாவை’ அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.

மன வளர்ச்சி குன்றிய 'பிரபுவின்' கதை நெஞ்சத்தை நெருடுகிறது. பிரபு போன்ற பையன்கள் வாழும் பல குடும்பங்களை நான் அறிவேன். அத்தகைய குடும்பங்களில் நிகழும் அன்றாட அல்லல்களை, வேலைப் பளுவினை வெகு எதார்த்தமாக சொல்கிறார் ராமகிருஷ்ணன்.

நாத்திகர் சவரிமுத்து கேரக்டர் அபாரம்.

அதேபோலத்தான் ஓவிய ஆசிரியர் சுதர்ஸனமும் அவரது மனைவியும். நம்மில் எல்லோருமே அத்தகைய வாத்யார்களை நிச்சயம் பார்த்திருப்போம்.

தேவராஜ் வேசி ஒருத்தியை சந்திக்கிறான்.. அவளைக் கண்டு பரிதாபப்பட்டோ அல்லது அறுவறுத்தோ விலகி வரும் தருணங்களில் ஆசிரியரின் வர்ணனை உச்சம். ‘உன் பொண்டாட்டிக்கு ஆபரேஷன் நடந்தாலும் இப்படித்தான் இருக்கும்’ என்கிறாள் வயிற்றிலிருக்கும் தழும்பைக் காட்டி.  வெகு உண்மை.

தேவராஜ் காசிக்குச் செல்லும் பொழுது, நாமும் உடன் பயணிக்கிறோம். காசியின் பசுக்களையும், அவை நகரெங்கும் போடும் சானங்களையும் கூட விடவில்லை ஆசிரியர். காசியில் அவரது வர்ணனைகள் யாவும், நான் காசிக்குச் சென்றிருந்த பொழுது எப்படி உணர்ந்தேனோ அப்படியே இருந்தது.

ஊட்டியில் அவன் சந்தித்த ரூம் மேட் அனுபவம்,  ‘மேன்ஷன்’ வாசிகள் எல்லோருமே உணரக்கூடியது.

வண்டிபேட்டை கதையின் போது நாம் நூறு வருடம் பின்னே சென்று வாழ்வதுபோல உணர்கிறோம்.


நாவலின் ஊடே சொல்லும் அழுத்தமான வரிகள் யாவும் உன்னதம்.

பிறருக்கு சும்மா அட்வைஸ் பண்ணுகிறான் என்றால் அவன் பயப்படுகிறான் என்று பொருள்; அவமானங்களை சகித்துக் கொள்வது- வயதாகிப் போவதின் அடையாளம் – இது போன்று ஏராள-ஏராளமான வரிகள்!

நாவலின் எந்த ஒரு அத்தியாயத்தையும் எந்த நேரத்திலும் தனித்தனியாகப் படிக்கலாம்.  நாவலின் ஊடே, எமர்ஜென்ஸி, மண்டல், இலங்கை, எழுபதுகளின் அரசியல் யாவற்றையும் கலந்து சொல்வதால், அந்தந்த காலகட்டத்திற்குள் நுழைவது சௌகரியமாய் உள்ளது.

படிக்க வேண்டிய புத்தகம்.

உயிர்மை பதிப்பக வெளியீடு.
பைண்ட்ட பேக்.
398 பக்கங்கள்
விலை ரூ.375/-




2 comments:

  1. இந்த நூற்றாண்டின் அருமையான படைப்பாளி . இவரின் படைப்புகள் என்னை மிக கவர்ந்தவை .
    நல்ல தகவல் .

    அன்புடன் ,
    அரசு

    ReplyDelete
  2. நாவல் குறித்த தங்கள் பதிவு நாவலை எல்லோரையும் வாசிக்கத் தூண்டும்படி உள்ளது.

    http://maduraivaasagan.wordpress.com/2014/06/10/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4/

    ReplyDelete