Sunday, October 2, 2011

பஜ்ஜி,சொஜ்ஜி,சாந்தி முகூர்த்தம் (சிறுகதை)


'டிங்க்..டிங்க்.." வசலில் காலிங் பெல்.


"யாரது?"


"காலிங் பெல்" சத்ததிற்கு புத்திரன் "வெங்கு" உத்திரத்தின் மேலே உக்காந்துண்டு குரல் கொடுத்தான்.


'போய்ப்பாரேண்டா..குரங்கு மாரி மேலே உக்காண்டு கத்தாதே!"


"தெரியரதோண்னோ?. நான் மேலே உக்காண்டிருக்கேண்ணு.. நீதான் போய்ப் பாரேம்மா?" என்றான் வெங்கு.


"எல்லாத்துக்குன் நான் ஒத்தியே, ஆடனும் இந்த ஆத்திலே! புருஷால்லாம் என்ன பண்ணிண்டிருக்காளோ தெரில...   தோ..வரேன்.. இருங்கோ.."


வாசலுக்கு போனா..!   ஐயோ ராமா.... அதுக்குள்ளே இவா வந்துட்டாளா? 


"வாங்கோ,,வாங்கோ....உள்ளே வாங்கோ.. "


"ஏண்ணா... சீக்கிரம் வாங்கோ.. அவாள்ளாம் வந்துட்டா... என்ன பண்ணி ண்டிருக்கேள் அங்கே?"


"வர்ரேண்டி.. எதயும் கத்தாம சொல்லத்தெரியாதா நோக்கு?"


ஒரு கையில் விளக்குமாறும், இன்னொரு கையில் குப்பை அள்ளும் கூடையுமாய் வந்தார் என் ஆத்துக்காரர்.


'ஆ..!.வா..வா... வாங்கோ.. வாங்கோ.. .உக்காருங்கோ.. தோ. வந்துட் 
டேன்..பரபரத்தார் இவர்.


தொடை தெரிய கட்டியிருந்த 8 முழ வேட்டிய அவிழ்த்து விட்டுக் கொண்டார். தலையில் கட்டியிருந்த தலப்பாயை உதறி எரிந்தார்.


உள்ளே ஓட்டமாய் ஓடிபோய் ஒரு மடக்கு நாக்காலி ('ஸ்டீல்') எடுத்து வந்தார்.


"உக்காரனும்.. பிரயாணம் எல்லாம் சௌகரியமாய் இருந்ததா? டீ... உள்ளே போய் தீர்த்தம் எடுத்துண்டு வா.. போ.."


"தப்பா எடுத்துக்காதேள்!  நீங்கள்ளாம் சாயந்தரம் வர்ரதா,  வரது சொல்லியிருந்தானா? அதான் ஆத்தை கொஞ்சம் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தோம். திடீல்னு வந்ததும் ஒன்னும் புரியலை! க்ஷமிக்கணும்" என்றார் என் ஆத்துக் காரர. அவசரம் அவசரமாக ரொம்ப முக்கியமா டெய்லி ஷீட் காலண்டர்ல் அன்னிக்கு கிழிக்க மறந்து போன 14/11/1967 என்ற தேதியைக் கிழித்தார். 


வந்தவர்கள் இந்த களேபரத்தை எதிர்பார்த்திருக்க வில்லை!


"யாருப்பா வந்திர்க்கா?" உத்தரத்தில் உக்காந்திருந்த வேங்கு 'பொதேர்' என கீழே குதித்தான். குதிச்ச பிரம்மஹத்தி ஓரமாய் குதிச்சு தொலயப் படாதோ?  நேரா வந்திருந்த மாமி காலுக்கடியில் குதிச்சான்.  ஏற்கனவே எங்களது அமக்களத்தைப் பார்த்து அரண்டுபோயிருந்த மாமி 'கிழூவ்...' என 
கிறீச்சிட்டாள்.


'செத்த உள்ளே வர்ரேளா.." அவரைக் கூப்பிட்டேன்.


"பேந்த பேந்த முழிக்காதேள்.... அவா தங்கரதுக்காக பக்கத்தாத்து சுசீலா மாமியிடம் ஒரு நல்ல ரூம் சொல்லியிருக்கேன், அவாளும் ரெடியா வச்சுருக்கா.. அவா கிட்ட போய் சொல்லுங்க்கோ.. சாயங்காலம் வர்ரதாயிருந்த, சீரங்கம் பார்ட்டி இப்போவே வந்துட்டா. ஆயினாலே அவாளை அழைச்சுண்டு வரட்டுமான்னு கேட்டுண்டு, அப்புறம் இவாளை அங்கே அழைச்சுண்டு போங்கோ. கொஞ்ச நாழி அவாகூட பேசிண்டிருந்துட்டு, சீக்கிரமா வந்துடுங்கோ..அவா கிட்டா ஏதாவது அச்சுபிச்சுன்ணு பேசப்படாது.. புரிஞ்சுதா?


"சர்தாண்டி.. நேக்கு ஒன்னுமே தெரியாதுண்ணு முடிவுபண்ணிட்டியா?  போன வாரம் எங்க ஆபீஸுல நான் என்ன பண்ணினேன்னு தெரியுமா உனக்கு, அப்ப வந்து........"


"நிறுத்துங்கோ! உங்க புராணத்தை கேக்க இது நாழி இல்லை.. சொன்ன காரியத்தை செய்யுங்கோ.."


'உங்களுக்கு பக்கத்தாத்துல இடம் சௌகர்யம் பண்ணியிருக்கோம்..சித்த கொஞ்சம் ஸ்ரமபரிகாரம் அங்கே பண்ணிக்கோங்கோ..வாங்கோ! அதுக்குள்ள இங்க எல்லாத்தையும் தயார் பண்ணிடுவோம்." வந்தவாளை, அழச்சுண்டு போக யத்தனித்தார் ஆத்துக்காரர்.


அந்த நேரம் பாத்தா அம்பிகா "என்னப்பா சத்தம்னு உள்ளேவருவா?" பத்து பாத்திரம் தேச்சுண்டு இருந்துட்டு, அப்படியே வங்துட்டா.. மூஞ்சி யெல்லாம் கரி.. பாவாடையை தூக்கி சொருகிண்டு.. ஐயோ ராம!" 


'போடீ உள்ளே...." உள்ளே தள்ளிண்டு போனேன் அம்பிகாவை.


நான் இப்படி,  திடுதிப்பென்று கதையை ஆரம்பிச்சா உங்களுக்கு என்ன புரியும்?


சித்த எங்கூட சமையல் உள்ளுக்கு வாங்கோ.. உங்களுக்கு விவரமா சொல்லிண்டே தளிகை பண்ணிடுவேன்.  வந்தவாளுக்கு ஆகாரம் ஆகனுமோல்லியோ?


நேக்கு ஒரு பெண், ஒரு பையன்.  பொன்னு பேரு 'அம்பிகா'.அம்பின்னு கூட்டுவோம். பையனை 'வெங்கி' ன்னு கூப்டுவோம்.  என்ன பேருன்னு யூகிச்சிருப்பேளே! அம்பி பெரியவ. என்னோட ஆத்துக்காரர் இங்கே பள்ளிக்குடத்தில கணக்கு வாத்யார். எம்.எஸ்.சி படிச்சுருக்கார். நோட்ஸ் எல்லாம் போட்ருக்கார்.  அனா கணக்கு மாத்திரம் தான் தெரியும். பாக்கி ஒரு விஷயம் தெரியாது. எல்லாம் நானேதான் பாத்துக்கணும்.


அம்பிக்கு,   வர்ர தை வந்தா இருவத்திரண்டு வயசாரது.. பையன் 10-ஆவது படிக்கறான். ரங்கதனாதனுக்கு வேண்டிண்டு பொறந்தவன். புத்திசாலி பிள்ளை. நன்னா படிப்பான். இந்த 'ஆத்தூரிலேதான்' எங்களுக்கு ஜாகை. 


இன்னிக்கு அம்பிய பெண் பாக்க வர்ரதா ஏற்பாடு.  எனக்கு "வரது" ஒரு தம்பி இருக்கான், ஸ்ரீரங்கத்திலே!  அவன் தான் ஏற்பாடு செஞ்சான் இந்த வரனை.  மாப்பிள்ளைக்காராளும் சீரங்கம் தான்.  சுத்தி வளச்சு பாத்தா கொஞ்சம், தூரத்து சொந்தமாகும். வடகலையில் எப்படியாவது ஒரு வகையில் சொந்தமாத்தான் இருப்பா.


சாயங்காலம் 4 மணிக்குத்தான், எல்லாரையும் அழைச்சுண்டு வர்ரதாதான்,  வரது சொல்லியிருந்தான். ஆனா திடுதிப்னு காலம்பர 11 மணிகே எல்லா ரையும் கூட்டிண்டு வந்து நிப்பான்னு எப்படி தெரியும்? சொல்லப்படாதோ? 


சாயங்காலம்தானே வர்ரா!  அதுக்குள்ள ஆத்தை கொஞ்சம் 'நீட்டா' ஆக்கிடலாம்னு ஆளுக்கு ஒரு காரியமா செஞ்சுண்டிருந்தோம்.  இப்போ மானம் போச்சு.  


 வெங்கு என்னடான்னா ஆஞ்சனேயர் மாரி மேலேருந்து குதிக்கரான்.  இவர் என்னடான்னா விளக்கமாத்தாலே உபச்சாரம் பன்றார். அம்பி மூஞ்சியில கரிய பூசிண்டு நிக்கறா!   


நாராயனா!  இந்த கல்யாண காரியம் எல்லாம் நல்ல படியாய் முடியனும். நன்னா முடிஞ்சுதுன்னா பெண்ணையும்,  மாப்ளயையும் உப்பிலியப்பன் கோவிலுக்கு அழைச்சுண்டு வர்ரேன்.


உங்களுக்கு கதை புரிஞ்சுடுத்தோல்லில்யோ!  அது போதும். 


நல்ல வேளையா,  போன எங்காத்து மனுஷன் சீக்கரமாவே வந்துட்டர்.  தம்பி வரதுவும் வந்துட்டான். எல்லாரும் சேந்து வீட்டை ஷோக்கா மாத்திட்டா. நானும் தளிகை பண்ணிட்டேன்.


அவா சாப்ட மாட்டேனுட்டா!  நிச்சயத்துக்கு முன்னாடி கை நனைக்க கூடாதாம். வரதுதான் ஒருவழியா பேசி சுசீலா மாமியாத்திலேயே சாப்ட வச்சுட்டான். அப்பவும் நம்மாத்து தளிகைதான். என்ன அர்த்தமில்லாம ஒரு சம்ரதாயமோ? புரியல.


சாயந்தரம் 4 மணிக்கு பெண் பாக்கும் படலம் ஆரம்ப மாச்சு. 


நான் ஒரு மண்டு.  யார் யார் வந்திருக்கான்னு உங்களண்டை சொல்ல வேயில்லை பாத்தேளா? 


மாப்பிள்ளை, அவனோட ஃப்ரண்ட், அவனோட அம்மா,அப்பா,அவன் தங்கை.  


பஜ்ஜி, சொஜ்ஜி ஆச்சு.. பெண்ணை கூட்டிண்டு வாங்கோ.. பாத்துடலாம் னார் மாப்பிள்ளையோட அப்பா.  


எங்க காலத்தில எல்லாம் மாப்பிள்ளையை தல நிமிந்து பாக்க மாட்டோம். கூச்ச மாயிருக்கும்.   ஆனால், அம்பிகிட்ட சொல்லிட்டேன். "டீ..மாப்ளயை நன்னா பாத்துக்கோடி.. அப்புரம் ஏதும் பிடிக்கலே-கிடிக்கலேன்னு குறை சொல்லக்கூடாது"


"என்னடீ?"


எனக்கு வெக்கமா இருக்கும்மா..எப்டி மூஞ்சிக்கு நேரா பாக்கரது?


"நேரா பாக்க முடியலன்ன, கொஞ்சம் ஜாடயா பாத்துக்கோடி.."


ஒரு பாட்டு பாடுன்னு சொன்னா சம்பத்தி.  'கெஜவதனா..' பாட்டு பாடினா. ஆத்துல,சொல்லிண்டுருகாளோன்னோ? நன்னா பாடினா!


அம்பி பாக்க லக்ஷ்னமா, சேப்பா, ஸ்ரீதேவிமாரி இருப்பா.. யாரு புடிக்கா துன்னு சொல்லுவா? பொன்னு பிடிச்சுருக்குன்னு, அப்பவே, தேங்கா ஒடச்சமாதிரி, சொல்லிட்டா.. நான் உடனே உள்ளே போய் அம்பிய கூப்பிட்டேன்.  


"என்னடி,  உனக்கு மாப்பிள்ளயை புடிச்சுருக்கா?


"சரியா பாக்கலேம்மா?"


"என்னடி பாக்கல? நடுவுல உக்காண்டிருக்கானே..அவந்தாண்டி. மறுபடியும் பாக்கறியா?"


'ஐயோ.. எப்படிம்மா மறுபடியும் போய்ப் பாக்கறது?.வெக்கமா இருக்கும்மா!"


"என்ன பொன்னு இவ.. இவ்ளோவ் அசமஞ்சமா இருந்தா எப்டி குடும்பம் நடத்தப் போறா?


"இங்கவாடி.. சமயல் உள்ளேருந்து பாத்தா.. மாப்பிள்ள இருக்கும் இடம் தெரியும்.. அங்கே போட்டிருந்த ஒரு ஜன்னல் ஸ்கிரீன்ல, கரண்டி காம்பால ஒரு ஓட்டய போட்டு.. அதுவழியா நல்லா பாத்துக்கடின்னேன்"  ரொம்ப நாழி பாத்துண்டிருந்தா. 


எதுக்காக நாளைக் கடத்தனும்? ரெண்டுபேருக்கும் புடிச்சுப் போச்சு. பாக்கி விஷயங்களையும் இப்பவே பேசி முடிச்சுடலாமேன்னுட்டான் வரது. வரது ரொம்ப சூட்டிகை.. இவர் மாதிரி உளறிக்கொட்ட மாட்டான்.  கட்டு செட்டா பேசி முடிச்சுட்டான். எதுக்காக நாளைக் கடத்தணும்?முகூர்த்த தேதியையும் குறிச்சுட்டா போச்சுன்னுட்டார் சம்மந்தி.


வரது தான் கொடியாத்து பட்டாச்சார்யாரை அழைச்சுண்டு வந்தான். 
 அடுத்த 15-நாள்,  நல்ல நாளாம். முகூர்தமே நிச்சயம் பண்ணிட்டா.  


புருஷால்லாம் லௌகீக விஷயங்கள் பேசிண்டிருந்தா.


கல்யானம் பஜனை மடத்துலதான்.. மண்டப மெல்லாம் கெடயாது.  
விசேஷம்னா, ஒண்ணா ஆத்துல செய்வோம்.. இல்லேன்னா மடத்துல.  


எங்களுக்கு மனுஷா ஜாஸ்த்தி.. அக்ரஹாரமே ஒன்னுகூடி எல்லா காரியத்தையும் பாத்துணுட்டா.. கல்யானம் பண்ணினது ரொம்ப கஷ்டமா தெரியல.. எல்லாம் ரங்கனாதன் கிருமை.  கல்யாணம் பேஷா, ஒரு குறை யுமில்லாம ஜோரா நடந்து முடிஞ்சுது.


அன்னிக்கு ராத்திரியே சாந்திமுகூர்த்தமாச்சு.. 


காலம்பர அம்பிகிட்ட கேட்டேன்.  "என்னடி... எல்லாம் "சௌஜ்னயமா" ஆச்சா?  நீ ஒன்னும் பயப்படலியே?"


"அது ஒன்னும் பிரச்சன இல்லேம்மா.. ஆனா... அன்னிக்கு பொன்னு பாக்க வரும்போது மாப்பிள்ளைன்னு வேற ஒருத்தரை காமிச்சியேம்மா?"


"என்னடி ஒளர்ரே.. நன்னாத்தானே காமிச்சேன்.. நடுவிலே ஒக்காண்டு இருக்கானே அவந்தான்னு?"


"அப்போ.. மீசையெல்லாம் வச்சுண்டு.. உசரமா இருந்தாரே அது யார்?"


நினவு படுத்திப் பாத்தேன்.  'அட ராமச்சந்திரா.. அது பையனோட ஃப்ரண்டு டீ..."


"நான் அவர் தான் மாப்பிள்ளைன்னு நினச்சுண்டிருதேம்மா!"

3 comments:

  1. Climax is the ending punch line: "நான் அவர் தான் மாப்பிள்ளைன்னு நினச்சுண்டிருதேம்மா!"

    ReplyDelete
  2. Anandan Chinnarajan Sir: It was written long back...After your comment I re-read it.. It could have narrated in a more interesting way...



    ReplyDelete
  3. உசரமா இருக்கறவனை மட்டும் பெண்டுகளுக்கு ஏன் ரொம்ப பிடிச்சு போகுதோ?

    ReplyDelete