Saturday, October 1, 2011

ஆடிட்

"என்ன..இன்னிக்கும் வீட்டுக்கு வர்ரதுக்கு லேட் அகுமா?'


"ஆமாம்..இன்னும் வேலை முடியல"


"பேசாம ஆபீஸையே கட்டிக்கிட்டிருக்கறது தான?..என்னை எதுக்கு கட்டிக்கிட்டீங்க?ஆபீஸில் வேற யாருமே இல்லை! நீங்க மட்டும் தான் அதிசயமா வேலை செய்றீங்களா?..சட்..."


கடந்த ஒரு வாரமாக வெவ்வேறு வார்த்தைகளில் எனக்கும் மனைவிக் கும் நடக்கும் உரையாடல் இது.


அலுவலகத்தில் ஆடிட்.  குடைகிறார்கள்.  எதாவது ஒரு இடத்தில் 'டெபிட்டோ..கிரடிட்டோ' இடித்துக் கொண்டே இருக்கிறது. ஆடிட்டர்கள் சுட்டிக் காட்டும் போது தான், இவ்வளவு குளறுபடிகள் நடந்துள்ளது தெரிகிறது. பல்வேறு செக்க்ஷண்களில் நடக்கும் அக்கவுன்ட்ஸ், இங்கு, zonal அலுவலத்திற்கு தான் வரும். அவற்றை தொகுத்து ஒரு மாதிரி 'பாலன்ஸ் ஷீட்' போட்டு வைப்போம். அவற்றை சரி பார்க்கத்தான் 'அடிட்டர்கள்'  வந்துள்ளார்கள். 


எல்லா அலுவலகத்திலும் வருடம் இருமுறை இந்த 'ஆடிட்' எனும் திருவிழா நடந்தேறும். இவர்கள் வந்தால் 10 நாள் கேம்ப் போடுவார்கள்.  தற்போது வந்திருக்கும் குரூப்பில், ஒரு 50 வயது மாமா.  அவருக்கு உதவியாக 4 பேர். இள வட்டங்கள்.  மாமா ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் அப்ஜக்ஷனை, சிறுசுகள் பத்து நிமிடத்தில் பிடித்து விடுகிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்லி மாள வில்லை. பொய்களும் சமாதானமும் எடுபடவில்லை.  ராப்பிசாசு போல 12 மணிவரை வேலை பார்க்கிறார்கள். ஒரு வவுச்சர் விடாமல் 'சோதனை'.   


இன்று சோதனையின் உச்சகட்டம். எங்கள்து பதில்கள் திருப்தி இல்லை என தலைமை அலுவலகத்திற்கு, ஆடிட் குரூப் ரிபோர்ட் அனுப்பிவிட, மேலேயிருந்து அனைவருக்கும் 'அர்ச்சனை'. 


'என்னையா அக்கவுண்ட் மெயிண்டன் பண்றீங்க?  ஆடிட் வருதற்கு முன்னாலே சரி செய்து வைக்க வேண்டாம?'. உங்க பிராஞ்சோட பெரும் தொல்லையா போச்சு. எங்களால் ஒன்னும் பண்ணமுடியாது! உங்கள்து perfomace -ஐ ரிப்போர்ட் செய்யப்பொறோம்.  


அப்புறம் ..  உங்களுக்கு உதவி செய்ய சுந்தரராமனை அனுப்புகிறோம். எல்லோரும் சேர்ந்து 2 நாட்களுக்குள் எல்லா அப்ஜக்ஷனையும் கிளியர் செய்யனும்..புரியுதா?.."


'perfomace பதிவு செய்யப்படுகிறது என்றால்...அடுத்த 15 நாட்களில் எங்கள் அக்கவுண்ட்ஸ்
செக்க்ஷனுக்கு கூண்டோடு 'அஸ்ஸாமுக்கோ' , "பஞ்ஞாபுக்கோ' 
ட்ரான்ஸ்ஃப்ர் என்று அர்த்தம். 




எனக்கு அவசரமாக பாத்ரூம் போகவேண்டும் போலிருந்தது. இப்போது தான் ஒரு மாதிரியாக இந்த ஊரில் செட்டில் ஆனேன்.  மற்ற அலுவலகம் போல 'காசு' புரளும் அலுவலகம் அல்ல இது.  எப்படி 'அஸ்ஸாமில்' குழந்தைகளுக்கு 'அட்மிஷன், வீடு... ' நினைக்கவே கலவரமாயிருந்தது.


இந்த சமயத்தில் தான் மனைவியிடமிருந்து மேற்கண்ட அழைப்பு.."எப்ப வருவீங்க...." அவளை சொல்லி குற்றமில்லை.  இந்த ஆடிட் புடுங்கல் அவளுக்கு எப்படி புரியும்.


'என்ன பேயரைஞ்ச மாதிரி நிக்கிறீங்க.. உனக்கு மட்டுமா ட்ரன்ஸ்ஃப்ர்... எனக்கும் தான்.. வாங்க.. ஆக வேண்டிய் காரியத்தைப் பார்ப்போம்.  '  - இது சீஃப்.


'என்னத்தை பார்ப்பது.. ஆடிட்டோடு ..அந்த "ஹெட் ஆபீஸ்" சுந்தர ராமனையும் சமாளிக்க வேண்டும். சுந்தரராமன் இந்த அலுவலகத்தில் தான் இருந்தார்.  சீனியர்.  எதுக்கு அசராத மனுஷன். கற்பூரம்.   என்ன? கொஞ்சம் முசுடு.  காலத்திற்கு பொருந்தாமல் வேஷ்ட்டியும், தலைப் பாயும் அணிந்து வருவார்.  அவர் இங்கு இருக்கும் வரை 'பிரான்ச்சே' எதற்கும் கவலைப் படாமல் இருந்தது. இன்ஸ்பெக்க்ஷன், ஆடிட், டார்கெட் எல்லாவற்றையும் மனுஷன் எப்படியோ மானேஜ் விடுவார்.  கெட்டிக்காரர்.


அவர் உதவிக்கு வருவது கொஞசம் தெம்பாக இருந்தாலும், ட்ரானஸ்ஃபர் வயிற்றைக் கலக்கியது. 


மறு நாள் காலை 7 மணிக் கெல்லாம் வந்துவிடுவதாகவும்.. எல்லாம் தயாராக எடுத்து வைக்கும் படியாக ஃபோன் பண்ணிவிட்டார் சுந்தராமன்.


"என்னப்பா இது... இப்படி சொதப்பி வச்சுறுக்கீங்க.. 'பொய்யைச் சொன் னாலும்' அதில் தொடர்ச்சி வேணாம்?.. இப்படி போய் மாட்டிக் கிட் டீங்களே?..


'போய்யா சும்பா.. அதுதான தெரிஞ்சு போச்ச்சே... இதைச் சொல்லறதுக்கா நீர் வந்தீர்..ஏதாவது செய்ய முடியுமா பாரும்..' என்று சொல்ல வந்து, முடியாமல் 'ஆமாம் சுந்தராமன்.. என்ன பண்றதுன்னு தெரியலை.. திரும்ப பாலன்ஸ்ஷீட் போடுவது 2 நாளில் முடியாது.  ஏதாவது செய்யுங்களேன்" என்றோம்.


ஒரு பதினஞ்சு நாள் டைம் இருந்தால் எல்லாம் சரி பண்ணலாம் .. நாளைக்குள் முடியாது..என்ன பண்ணலாம்..'  தலைப்பாகையை கழற்றினார். சரி நீங்களெல்லாம் போங்கள்.. நான் பார்த்துக் கொள்கிறேன்..


அய்யோ! கிழம் என்ன செய்து வைக்கப் போகிறது...ஹெட் ஆபீஸில் 
போட்டுக் கொடுக்கப் போகிறதா? கதி கலங்கிற்று.   


"தலைக்கு மேல் போய் விட்டது.. இனி என்ன ஆணால் என்ன?  ட்ரான்ஸ்ஃப்ர் தானே... பார்த்துக் கொள்ளலாம்.  நாம் நம் ரொட்டீன் வேலையைப் பார்ப்போம்"   " கீதார்சார்யன்" மனோபாவத்திற்கு வந்துவிட்டார் சீஃப்.


அடுத்த இரண்டு நாள், சுந்தராமனும், அடிட்டரும் வெளியே போனார்கள்... வந்தார்கள்..என்ன நடக்கிறது என்று புரியவில்லை.  உதவி ஆடிட்டர்கள் ஏதோ தாயாரித்துக் கொண்டிருந்தார்கள்.


இரண்டாம் நாள் மாலை..  'ஓய்.. எல்லாம் சரியாச்சு...எல்லா அப்ஜக்ஷனும் கிளியர்.. இனிமே வாச்சும் ஒழுங்கா வேலை பாருங்கய்யா...' என்றார் சுந்த ரராமன்.


என்னது? சரியாச்சா?  எப்படி...? சரியாகும்படியாகவா நாங்கள் சொதப்பி வச்சுருந்தோம்?  கிழம் என்ன ஜாலம் செய்தது?..நான் சீஃபை பார்க்க.. அவர் பாரதிராஜா படத்தில் வரும் தேவதைகள் போல மிதந்து கொண்டிருந்தார்.  விட்டால் சுந்தரராமனை குலதெய் வமாக்கி..அபிஷேகம் செய்துவிடுவார் போலிருந்தது.


ஓ.கே... நான் புறப்படுகிறேன்... இந்தா ...இந்த "வுச்சர்" களைப்புடி. இது ஆடிட்டுக்கு நான் செலவு செஞ்சது.   இதை பாஸ் பண்ணி அனுப்புங்கள்.. நான் ஹெட் அபீஸில் பணம் வாங்கிக் கொள்கிறேன்..


சுந்தராமன் ஹெட் ஆபீஸுக்கு பேசிக் கொண்டிருந்தார்.  'ஓ.கே சார்..  எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.. அனுபவம் பத்தலை இல்லையா? presentation  தான் தப்பு...வவுச்சர்கள் எல்லாம் சரிதான் சார்......... ம்.ம்... பனிஷ்மெண்டா? வேண்டாம்..வேண்டாம்.. நான் சொல்லியிருக்கேன் சார்.. எல்லாம் சரியாகி விடும்... missappropiration இல்லை.. பிரச்சினை ஒன்றும் இல்லை...'   


அப்போ ட்ரன்ஸ்ஃப்ரும் இல்லையா?


"ஆபத்பாண்டவா.. அனாத ரட்சகா.." ..பல்லாண்டு பாடாத குறையாக வழியனுப்பினோம்.


போகும் போது 'கண்ணடித்து விட்டு' சொன்னார்... நான் கொடுத்த வவுச்சரையெல்லாம் அந்த பெயரிலேயே சாங்ஷன் போட்டு விடாதேயும்.. வேறு எதாவது செலவினத்தில், வேறு ஹெட்டில் காட்டும்.. என்ன?  மண்டையில் ஏறிற்றா?'


அவர் ஆடிட்டிலிருந்து எங்களை மீட்டியதையும், ட்ரன்ஸ்ஃப்ரிலிருந்து காப்பாற்றியதையும் கிலாசித்துக் கொண்டோம்.. என்ன இருந்தாலும் அவருடைய பழைய ஊர்.. நாமெல்லாம் எவ்வளவு செஞ்சிருக்கோம்... 
நன்றி மறப்பாரா?  தங்கமான மனுஷன்.


அடுத்த நாள் அவர் 'ஆடிட் பார்ட்டிக்கு' செய்த செலவினை 'வேறு பெயரில்,வேறு ஹெட்டில் போடுவதற்காக, அவர் கொடுத்த வவுச்சர் களைப் பார்த்தோம்..


"ஸ்காட்ஸ் விஸ்கி 6 பாட்டில்", 
ஏதோ ஒரு "கோயில் அபிஷேக சீட்டு" 
 ஏதோ ஒரு "லாட்ஜ் ரசீது" 
"முந்திரி பருப்பு 10 கிலோ."


-----

















No comments:

Post a Comment