1. காயத்ரி:
வீட்டு ஒத்தாசைக்காக, வேலைக்கு வைத்திருந்த "தீப்தி", நம்ப முடியாமல் காயத்ரியை பார்த்தாள். இருக்காதா பின்னே? "தீப்தி" செய்யும் வேலையில், சதா ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கும் "காயத்ரி", இன்று ஒன்றும் சொல்ல வில்லை! கைதவறி கண்ணாடி 'மக்'கினை கீழே போட்டு உடைத்தும் கூட! காயத்ரியின் பையன் 'ஸ்ரீராம்' சாப்பிட படுத்தும் போது கூட, அவன் கன்னத்தை தட்டிக் கொடுத்து விட்டு, உனக்கு பிடித்த 'மாகி' செஞ்சு தரட்டுமான்னு கேட்டு செஞ்சு தந்தாளே!
தீப்தி மட்டுமல்ல. காயத்ரியின் கணவன் ப்ரஸன்னாவுக்கும் அதே ஆச்சரியம்!
'என் லாப்டாப்பை பாத்தியா?' , "ஐ.டி கார்டை எங்கே போட்டேன்?", "பர்ஸ் எங்கே?" போன்ற, 'ப்ரஸன்னாவின்' தினசரி உபத்திரவங்களுக்கெல்லாம், 'எழுந்து போய்த்தேடுங்கள், எடத்தை விட்டு அசையாமல், எல்லாத்துக்கும் நானே வரணுமா?" என எப்போதும் போல, அலுத்துக் கொள்ளாமல் தேடிக் கொடுத்தால், ஆச்சரியப்படாமல் என்ன செய்வான்?
காயத்ரி 'ஆர் யு ஆல் ரைட்?' என்றான் பிரசன்னா!
"ஏன் எனக்கென்ன? நல்லாத்தானே இருக்கேன்" என்றாள்
"இல்லை.. உன்னோட யூஷுவல் “கத்தல்” இல்லேன்னா வீடு நல்லா இல்லியேன்னு பாத்தேன்!"
'ஐய.. நான் இல்லேன்னா இந்த வீட்டில் ஒன்னும் நடக்காது. இதில் கத்தறேன்னு கம்ப்ளெயிண்ட் வேறயா?" போலிக் கோபம் காட்டினாள்.
'ஒகே... ஒகே... நான் புறப்படறேன்! யூனிபார்ம் அனிந்து டியூட்டிக்கு புறப்படும் கணவனுக்கு 'டாடா' காட்டினாள் காயத்ரி.
"தினமும் இப்படியே கத்தாமல் இரேன்.. " என்றபடி, அவளை முதுகு நோக இறுக்கிப் பிடித்து முத்தமிட்டான் பிரசன்னா.
"போதும் போங்க.. தீப்தி இருக்கா..பறப்படுங்க "
உண்மையில் இன்று காயத்ரி மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறாள். இது அவளுக்கே தெரியும். அவளால் அந்த மகிழ்ச்சியை முகத்தில் மறைக்க முடியவில்லை. பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் சிறு பெண்போல நடந்து கொள்ளும் காயத்ரியை வினோதமாக பார்த்தாள் 'தீப்தி'.
அவளது உற்சாகத்தின் உச்சம், இன்னும் ஒரு மணி நேரத்தில் தெரியும். பத்து மணிக்கு போன் பன்னுவதாக சொல்லியிருக் கிறார் அவளது அப்பா!.
மணி பத்தாவதற்குள், "காயத்ரியின்" ஃப்ளெஷ் பேக்கை" நாம் பார்த்து விடுவதற்கு போதுமான சமயம் இருக்கிறது.
அப்போது, 'ஸ்டெல்லா மேரீஸில்' பி.எஸ்ஸி முதாலாண்டு படித்துக் கொண்டிருந்தாள், காயு என்னும் காயத்ரி.
'சூப்பர் ஃபிகர்' வரிசையில் இல்லாவிட்டாலும், திரும்பி பார்க்க வைக்கும் களையான முகம். நல்ல கலர். செய்து வைத்தாற் போன்ற உடல் வாகு. முகத்திலிருந்து சிரிப்பை கழற்றவே மாட்டாள். படிப்பில் முதல் பென்ச். இவளை துரத்தி, துரத்தி காதலித்தான் பிரஸன்னா. எல்லா பசங்களையும் போல, வீட்டிலிருந்து-பஸ் ஸ்டாப் வரை ஃபாலோ. பின் தூர நின்று பார்த்துவிட்டு போய்விடுவான். நேரடியாக என்றும் பேசிய தில்லை.
காயுவுக்கு 'கல்பனா' நெருங்கிய தோழி,
"ஏண்டி உன் பின்னாடியே சுத்தரானே, ஒரு பையன் ப்ரஸன்னா, அவனை தெரியுமாடீ?" என்றாள் கல்பனா.
'எத்தனையோ ரோமியோக்கள் அலையராங்க... ' இவனும் அதில் ஒன்னு.. விடேண்டி'
"அதில்லேடீ, அந்த பையன் ஃபேமிலி எனக்குத் தெரியும்..நல்ல பையன் தான்.. உன்னை நிஜமாவே லவ் பண்றானோ என்னவோ?"
"நல்லவன்னா நீயே கட்டிக்கோ..."
"போடி கிறுக்கு புடிச்சவளே..!"
முதல் வருஷம் முழுசும் அவனை தினமும் , பஸ்-ஸ்டாப், தெருமுனை, காலேஜ் வாசல் என ஒரு தடவையாவது பார்த்துவிடுவாள் காயு. இந்த துரத்தல் இரண்டாவது வருஷமும் தொடர்ந்தது.
"ஏய்.. அவன் உன்னை சீரியஸா லவ் பண்றாப்போல தெரியுதுடீ.. அவனை புடிச்சிருந்தா 'யெஸ்' சொல்லு; பிடிக்கலேன்னா எம்பின்னாடி சுத்தாதேன்னு சொல்லிடுடீ' என்றாள் கல்பனா.
"சுத்தினா சுத்தட்டுமே?.. எனக்கென்ன போச்சு... அழகான ஒரு பொம்மையை வேடிக்கை பார்ப்பது போல. சினிமா போஸ்டரை வேடிக்கை பார்ப்பது போல, பாத்துகிட்டு போவட்டுமே! அதுக்காக என் பின்னாடி சுத்துர பசங்களையெல்லாம் தேடிப்பிடித்து, நான் உன்னை லவ் பண்ணவில்லைன்னு சொல்லிக் கிட்டிருக்க முடியாது. அதுவுமில்லாம, என்னை ‘லவ்’ பன்றேன்னு எங்கிட்ட சொன்னானா என்ன?.."
'ஏய்.. இவன் வெறும் 'லுக்' கேஸ் இல்லைடி..உன்னை விரும்பரான்..'
'உன்னிடம் சொன்னானா அப்படி?'
'இல்லை.. என் அண்ணனிடம் சொல்லிக் கிட்டிருந்தான்'
'ஓ! அதுதானே பாத்தேன்! நீ அவனுக்காக தூது வரியா?...' சிரித்தாள் காயு.
'தூதும் இல்லை.. ஒன்னும் இல்லை.. நான் கேள்விப் பட்டதைச் சொன்னேன்..'
"என்ன பண்றாண்டி?"
'MIT- சென்னை.. ஏரோநாட்டிக்கல்ஸ்-ஃப்னைல்'
'ம்ம்ம்ஹூம்'
'என்ன ம்ஹூம்.....'
‘அப்படியெல்லாம் ஃபீலிங் ஒன்னும் இல்லேன்னு சொல்லிடு...'
'லூஸுப் பெண்ணே...'
'இருக்கட்டும் போ...'
இரண்டாம் ஆண்டு இறுதியிலிருந்து அவனை காணவில்லை. அவன் தன்னை பார்க்க வருவதை நிறுத்திவிட்டது, காயுவிற்கு ஏமாற்றமாக இருந்தது.
"வேலை கிடைச்சு வெளியே போய்விட்டானா?. கல்பனா போய் அவனிடம், தான் விரும்பவில்லை என ஏதாவது சொல்லி விட்டாளா? இல்லை, எனக்கு விருப்பம் இல்லை என்றதும் பின்னாடி வருவதை நிறுத்திவிட்டானா?' கல்பனாவிடம் கேட்க 'ஈகோ' தடுத்தது.
படிப்பிலும் தினசரி காரியங்களிலும் நாட்கள் நகர்ந்து கொண்டி ருந்தன. ஆனாலும் அவன் நினைவு மனதின் ஓரத்தில் சதா ஊர்ந்து கொண்டிருந்தது.
2. காயத்ரி-ப்ரஸன்னா
அது, கல்லூரியின் மூன்றாம் ஆண்டு. நவம்பர் மாதத்திய மழை நாள் ஒன்றில் "கல்பனாவும்", “காயு”வும் பஸ் ஸ்டாப் பக்கம், நின்று கொண்டி ருந்தார்கள். ஒரு ஆல்டோ கார் அவர்கள் பக்கம் வந்து நின்றது. கண்ணாடி இறங்கி பார்த்தால், ப்ரஸன்னா!
"காயு.. ப்ளீஸ் கெட் இன். ஐ வில் டிராப் யூ"
'ஏய்... ப்ரசன்னா... எப்ப வந்தே ஊரிலிருந்து?' என்றாள் ஆச்சர்யத்துடன், கல்பனா
'நேத்திக்குத்தான் கல்பனா.., ரெண்டு பேரும் உள்ளே வாங்க.. "
“போகலாமா வேண்டாமா” என காயு யோசிப்பதற்குள் ஏறிக் கொண்டாள் கல்பனா.
" வாடீ.." காயுவையும் இழுத்துக் கொண்டாள்.
ஒரு வருடத்தில் மிகவும் மாறியிருந்தான் ப்ரஸன்னா. இன்னும் கொஞ்சம் 'கலர்' ஆகி, நல்ல வாட்ட சாட்டமாய். பொருத்தமான சின்ன மீசையுடன், கம்பீரத்துடன் இருந்தான். தலைமுடியை ஒட்ட வெட்டி அழகாயிருந்தான்.
அட! ஒரு வருடத்தில் எப்படி மாறிவிட்டான், ஆச்சர்யப் பட்டுக் கொண்டாள் காயு.
"உட்லண்ட்ஸ்" ஹோட்டலுக்குள் நுழைந்தது கார்.
கூட்டமில்லை. காயுவும், கல்பனாவும் ஒரு பக்கம் அமர, எதிரே ப்ரஸன்னா.
“என்ன சாப்பிடறீங்க..”
“காஃபி போதும்” என்றாள் கல்பனா
“இல்லை..நான் உங்களுக்கு ஒரு ட்ரீட் தரணும்.. லெட்ஸ் கோ லேவிஷ்..”
“என்ன விசேஷம்? எதுக்காக ட்ரீட்” என்றாள் கல்பனா!
சொன்னான்.
“அந்த பார்ட்டி, இப்ப வேண்டாம், அதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்ப காஃபி போதும்“
காஃபி ஆர்டர் செய்தான் ப்ரஸன்னா.
“உன் பிரண்ட் காயத்ரி ஏன் பேசவே மாட்டேங்கிறாங்க...”
“நீயே கேளேன்...”
“என்னங்க.. எதும் பேச மாட்டேங்கிறீங்க...”
இதுதான் சங்கடம். இவனிடம் என்னத்தைப் பேச?
“எங்கே ஒரு வருஷமா உங்களை ஆளைக்காணோம்?”
“அப்பாடா.. ஒரு வருஷமா நான் ஊரில் இல்லை என்பதாவது உங்களுக்கு தெரிந்திருக்கிறதே! அதுவே சந்தோஷம்!”
“ஐயோ.. உளறிவிட்டேன்!” நாக்கைக் கடித்துக் கொண்டாள் காயு.
அவனாக, தன்னைப் பற்றி ஆரம்பித்தான்..
சின்ன வயசிலிருந்தே, ப்ரஸன்னாவுக்கு, ராணுவத்தில் பணி புரிய ஆசையாம். அவன் தாத்தா ராணுவத்தில் பணி புரிந்தா ராம். அப்போது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடந்த யுத்த த்தில் நாம் தோற்றுப் போனோமாம். அந்த சமயத்தில் 'சிங்க நாதம் கேட்குது'ன்னு ஒரு பத்து நிமிட ஓடும் படம் தமிழ்ப்படம் ரிலீஸ் பண்ணினாங்களாம். அதன் காப்பி தாத்தாவிடம் இருந்ததாம்.
அதை 16.எம்.எம் ப்ரொஜக்டரில், அவனுக்கு போட்டுக் காட்டுவாரம் அவனது தாத்தா. அந்த படத்தைப் பாத்ததி லிருந்து, ராணுவ சீருடை மீதும், அவர்கள் மிடுக்கின் மீதும், 'மார்ச் ஃபாஸ்ட்" மீதும், மோகம் கொண்டனாம். இதற்காகவே CDS எக்ஸாம் பரீட்சை எழுதினானாம். கிளியர் பண்ணி விட்டான். “இந்தியன் ஏர் ஃபோர்ஸுக்கு” செலக்டாகி விட்டானாம். ஹைதராபாத்-திண்டுகல்லில், டிரெயினிங் முடிந்து, தற்போது 'பதான் கோட்டில்', பைலட் ஆபீஸராக இருக்கிறானாம்.
ஃப்ளேஷ் பேக் கதை முடிந்து, காயுவின் கண்களை நோக்கி பேசினான்.
'காயத்ரி... உனக்குத் தெரியும்! கல்பனா சொல்லியிருப்பாள். நான் உன்னை கல்யானம் செஞ்சுக்க ஆசைப் படறேன். நீ ஃப்ர்ஸ்ட் இயர் ஜாயின் செய்த்திலிருந்தே உன்னை விரும்பு கிறேன். ஆனால், ஒரு நல்ல பொசிஷனுக்கு வந்தப்புறம்தான் உன்னிடம் கேட்கணும்னு இருந்தேன். அதனால் தான் உன்னைப் பார்க்க வருவேனே தவிர பேச்சு கொடுத்ததில்ல. ஐ லவ் யு காயு.. ட்ரூலி.. மேட்லி.. "
காயுவின் காதுமடல்களில் சூடாக ரத்தம் பாய்ந்தது. படபடப்பாய் உணர்ந்தாள். இந்த தருணத்தை, சற்றும் எதிர்பார்த் திருக்கவில்லை. அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். காதல் தோய்ந்த கண்களுடன், அவளின் பதிலை எதிர் நோக்கியிருந் தான்.
மௌனமாக குனிந்து கொண்டாள் காயு.
'கல்பனா, உன் ஃப்ரண்டிடம் கேட்டுச் சொல்.. அவுங்களுக்கு இஷ்டம் என்றால், என் அப்பாவை விட்டு அவள் வீட்டில் பெண் கேட்கச் சொல்கிறேன்."
"நான், காயுவை கட்டாயப்படுத்தவில்லை. அவளுக்கு இஷ்ட மில்லை யென்றால் பரவாயில்லை. கொஞ்ச நாள் வருத்த மாயிருக்கும். அதுதான் எனக்கு பிடித்த IAF வேலை கிடைத்து விட்டதே. அதனுடனே வாழ்ந்துகொள்வேன்" என்றான்.
“பட், ஐ ரியலி ல்வ் யூ காயத்ரி! பிளீஸ் என்னைப் பார் காயு. இந்த தருணத்திற்காகத்தான் மூன்று வருடம் காத்திருந்தேன். மனசில் இத்தனை ஆண்டுகளாக உன்னுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் காயு. யோசித்து சொல்”
'என்னடி? அவன் கேட்கிறானே! பதில் சொல்லேண்டி " என்றாள் கல்பனா.
அப்போது ஆர்டர் செய்திருந்த 'காஃபி' வந்தது.
என்ன சொல்வது? அவன் தன்னை இரண்டு வருடங்கள் சுற்றி-சுற்றி வந்தபோது உதாசீனப்படுத்திய காயுவினால், தற்போது அம்மாதிரி இருக்க முடியவில்லை, உண்மையா கவே! அவனை பார்க்காமலிருந்த ஒரு வருடம் நினைவுக்கு வந்தது! ஏன் என் கண்கள் அவனைத் தேடின? ஒருவேளை என்னையும் அறியாமல் என் மனதில் இடம் பிடித்து விட்டானோ? இப்போது கூட, கண்ணியமாகத்தானே என் சம்மதம் கேட்கிறான்! நிமிர்ந்து பார்த்தாள், அவன் அழகுக்கும், டிஃபன்ஸுக்கே உரித்தான கம்பீரத்திற்கும், தான் பொருத்தமா? அவனாக விரும்பித்தானே, ஒரு நல்ல வேலை கிடைத்தபின், காத்திருந்துதானே கேட்கிறான்! இந்த அப்ரோச்சும் கூட அவளுக்குப் பிடித்திருந்த்து! திட்டமிட்டு, தான் விரும்பிய வேலையை அடைந்திருக்கிறான்! அதற்காக உழைத்திருக்கிறான். அப்படிப் பட்டவன், நல்லவனாக் இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்? ஒரு வேளை நானே இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேனா?
'காயு! உன் சங்கடம் புரிகிறது. நீ நேராகச் சொல்ல வேண்டாம். உனக்கு, என்னைப் பிடிச்சிருந்தால் என் காஃபியில், நீயே சுகர் கியூப்ஸ் போட்டுக் கொடு. இல்லைன்னா உனக்கு மட்டும் போட்டுக்கொள்.. நான் புரிந்து கொள்கிறேன்” என்றான் ப்ரஸன்னா.
ஏதோ பாலச்சந்தர் படம் பார்ப்பது போல இருந்தது அவன் கேட்டது.
கன் நேரத்தில் தோன்றியது! காயுவின் கைகள் தானாக இரண்டு சுகர் கியூப்ஸை எடுத்து அவன் காஃபியில் கலந்தது.
'Thank you காயு.. Thank U... I love your.. I love you... அவன் கண்களில் லேசாக கண்ணீர் தென்பட்டாற்போல இருந்தது.
3. நமச்கிவாயம்:
தெருவில் பார்க்கும், எந்த ஒரு ஒரு சராசரி மனிதனைப் போலத்தான் நானும். எனக்கென பிரத்யேகமான அடையாளம் ஏதும் இல்லை. படித்தேன். வேலைக்குப் போனேன். எல்லோ ரையும் போல, இருபத்தைந்து வயதில், அம்மா அப்பா பார்த்து வைத்த, “கிரிஜா” என்ற பெண்ணை கல்யாணம் செய்து கொண்டேன். கோயில்.. பீச் ஹோட்டல் என ஒரு மிடில் கிளாஸுக்கு உண்டான எல்லாவற்றையும் செய்தோம். எங்கள் தாம்பத்யத்திற்கு ஒரு அழகான பெண் குழந்தை. காயத்ரி என பெயர் வைத்தோம்.
கிரிஜாவுடன் ஒரு நாளும் சண்டை போட்டதில்லை. அப்படி ஏதும் வரும் போல இருந்தால் விட்டுக்கொடுப்பது அவளாகத் தான் இருக்கும். எந்த பிறவியிலோ, கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும், கிரிஜா மனைவியாகப் பெற்றதற்கு! வீட்டை அலங்கரிக்கும் விதம், சமையல், பேச்சு என எல்லா வற்றிலும் ஒரு பர்ஃபெக்ஷன் இருக்கும்.
மிக முக்கியமாக என் அம்மா, அவளை தன் மகளைப் போல பார்த்துக் கொண்டாள். நான் ஏதாவது சொன்னால் கூட, சும்மா இருடா படவா.. கிரிஜாவை ஒன்னும் சொல்லாதேன்னு அவளுக்கு பரிந்துகொண்டு வருவாள் அம்மா.
யார் கண் பட்டதோ தெரியவில்லை. அந்த நாள், இடியாக என்மேல் இறங்கியது. ‘உதயத்தில்’ சினிமா பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம், ஸ்கூட்டரில். எப்படி நடந்தது என தெரியவில்லை. நான் வண்டியை ஆட்டி விட்டேனா.. அவள் சரியாக பிடித்துக் கொள்ளவில்லையா.. இல்லை வேறு ஒரு வண்டி அவள் மேல் இடித்து விட்டதா.. ஒன்னும் தெரியவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்தவள் சரட்டென கீழே விழுந்துவிட்டாள். எமனென பின்னால் வந்த லாரி ஒன்று, அவள் மேல்.. . வேண்டாம். நினைத்தால் இப்போதும் பதறுகிறது. ஒரு புஷ்பத்தைப் போல இருந்தவளை, ரத்த சகதியாக, ஒரு கணத்தில் இழந்துவிட்டேன். இனி அழுது புரண்டென்ன?
அவள் இல்லை என்பது நிதம் நிதம் என்னை பிழிந்தது.
என் மகள் காயத்ரிக்கு அப்போது ஐந்து வயது. அவளை கவணித்துக் கொள்வதிலேயே என் கவனம் முழுவதும் இருந்தது. கிரிஜா மறைந்து இரண்டாவது வருடத்தில், என் அம்மாவும்-அப்பாவும் இறந்து போனார்கள். சிலர் சொன்னார்கள் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி. ஆனால் 'காயத்ரிக்காக' மறுத்து விட்டேன். வருபவள் எப்படி யிருப்பாளோ? கல்யாணம் செய்டு கொண்டு பின்னால் வருந்துவதில் என்ன பலன்? எனவே காயுவுக்காக அந்த எண்ணத்தை முழுவதுமாக துடைத்தெரிந்தேன். பத்திரிக்கை, டி.வி, விளையாட்டு எல்லாமே காயத்ரியுடன் தான். ஒரு ஃப்ரண்ட் போல இருந்தாள். வளர்ந்தாள் 'ஸ்டெல்லா' வில் பி.எஸ்.ஸி படித்தாள். அவள் காலேஜ் போனவுடன் சமையல் வேலையை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டாள். போதும்பா.. இனிமே நானே செய்யறேன் என்றாள். அவள் என்னிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை என நினைத்தேன். .
ஆனால், அந்த நாளை எப்படி மறக்க முடியும்? அப்போது மூன்றாம் வருஷம் படித்துக் கொண்டிருந்தாள். நவம்பர் மாத கடைசி, என நினைக்கிறேன். அப்போது ஒரு பையன் தன் பெற்றோருடன் வந்தான். முதலில் யார் என்றே புரியவில்லை. வெற்றிலை, பாக்கு, பழத்தட்டுக்கள் வந்ததும் தான் புரிந்தது.
அவன் தான் ஆரம்பித்தான். சார்.. நான் ஏர் ஃபோர்ஸில் பைலட். உங்க பெண்ணை நான் விரும்பறேன். பெண் கேட்டு வந்திருக் கோம் என்றான்.
"என்னது? காதலா? எப்பொதிலிருந்து? எப்படி? காயத்ரிக்கு தெரியுமா? "'எஸ் சார். அவளுக்கும் இஷ்டம் தான்"
யாரோ என்ன நடு ரோட்டில் டிரஸ்ஸை உருவி விட்டாற்போல இருந்தது. என்னிடம் ஒரு வார்த்தை சொன்னாளா காயு? அவளிடம் கேட்டேன். 'இது உண்மையா?'
"எதுவானல் என்னப்பா? அவர்கள் முறையாகத்தானே பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்? இதில் என்ன தப்பு?"
"கேட்டதற்கு பதில் சொல்.. நீ அவனிடம் பழகியிருக்கியா?"
"ஆமாம்ப்பா.. அவர் சம்மதம் கேட்டார்... நான் சரின்னு சொன்னேன்.."
அன்றைக்கு, ஏன் என் புத்தி அவ்வளவு கெட்டுப் போய் விட்டது என இன்னமும் புரியவில்லை.
'துக்கிரிப் பெண்ணே! உனக்காக என் வாழ்க்கையே தியாகம் பண்ணிட்டு உட்காந்திருக்கேன்.. நீ லவ் பண்ணுகிறியா?. அப்பாவிடம் உனக்கு இவ்வளவுதான் மரியாதையா?"
"அவன் வேறு ஜாதி.. பட்டாளுத்துக் காரன் வேற... இந்த கல்யாணம் நடக்காது! "
இன்னும் என்னென்னவோ பேசி வந்தவர்களை அவமானப் படுத்தி அனுப்பி விட்டேன்.
போகும் போது ப்ரஸன்னா சொன்னான். "அங்கிள்! உங்களை விட பல மடங்கு எங்களால் வேகமாக பேச முடியும்.. அப்படி பேசினால் உங்களுக்கு எனக்கும் என்ன வித்தியாசம் இல்லாமல் போய்விடும். குறித்துக் கொள்ளுங்கள்.. காயத்ரியை நான் கல்யாணம் செய்து கொள்ளத்தான் போகிறேன். முடிந்தால் உங்கள் ஆசியுடன்.. இல்லாவிட்டால், கல்யாணம் செய்து கொண்டு உங்கள் ஆசிக்காக காத்திருபோம்.. வர்ரோம்"
'போங்க.. வராதீங்க..."
அவன் சொன்ன மாதிரியே, காயு மூன்றாம் வருட படிப்பு முடித்ததும்,தைரியமாக வீட்டுக்குள் வந்து அவளை அழைத்துப் போனான். திருநீர் மலையில் கல்யாணம் செய்து கொண்டான்.
எனக்கு "ஈகோ" தான் பெரிசாய் பட்டது.. கல்யானத்திற்கு போகவில்லை. அதற்குப் பிறகும் அவளிடம் பேச வில்ல. பஞ்சாபில், பதான் கோட்டில் இருக்காங்களாம்.. இருந்துட்டு போகட்டுமே! எனக்கென்ன? அவள் ஃபோன் பண்ணும் போதெல்லாம் நான் கட் பண்ணிவிடுவேன். அதற்குப் பின் அவள் போன் செய்வதில்லை.
ஒரு நாள் ப்ரஸன்னா ஃபோன் செய்தான். "பையன் பிறந்திருக்கான்" என சொல்லிவிட்டு வைத்து விட்டான். அப்போதாவது , என்புத்தி மாறியிருக்கக் கூடாதா? பாழாய்ப் போன வரட்டுக் கௌரவம் தடுத்து விட்டது. என் பேரனைப் போய்ப் பார்க்கவே இல்லை.
4 காயத்ரி:
என்னிட I love you சொல்லி, என் சம்மதத்தை பெற்றபின், முறைப்படித்தான், ப்ரஸன்னாஎன் வீட்டிற்கு, தன் பெற்றோ ருடன் வந்து பெண் கேட்டார். அப்பா இப்படி நடந்து கொள்வார் என நான் நினைக்கவே இல்லை. என்ன சமாதனப் படுத்தியும் கேட்கவில்லை. என்ன அமர்க்களம் பண்ணிவிட்டார் அன்றைக்கு? அவர்களை அவமானப் படுத்தி... சே... என்னை என்ன வேணா சொல்லுவதற்கு அப்பாவுக்கு உரிமை உண்டு! வந்தவர்களை எப்படி அவமானப்படுத்தலாம்? அப்படி என்ன ப்ரஸன்னா குடும்பம் தாழ்வாகப் போய்விட்டது?
இன்னும் சொல்லப் போனால் இவர் குடும்பம் எங்களை விட வசதியானது. அப்பாவுக்கு நான் ஒரே பெண் தானே? நானே விரும்பு கிறேன் என்று தெரிந்தபின்னும் எப்படி அப்பாவால் அப்படி நடந்து கொள்ள முடிந்தது?
ஏதோ அவருக்கு "ஈகோ" வந்துவிட்டது. தன் பெண்ணின் விருப்பத்தைவிட, தன்னைக் கேட்காமல் முடிவெடுக்கத் துணிந்துவிட்டாள் என ஆத்திரம், புத்தியை அடைத்து விட்டது. ஆனால், அதைச் சொல்லாமல்.. ஜாதி, பட்டாளம் என சால்ஜாப்பு சொல்கிறார்.
நான், பல முறை அப்பாவிடம் பேசியும், ஒத்து வராததால், முடி வெடுத்து விட்டேன்.கோவிலில் கல்யாணம் வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டேன்.
அவரது பெற்றோருக்குத்தான் ரொம்ப வருத்தம்.. ஒரே பையன். ஊர் மெச்ச பிரமாண்டமாய் கல்யானம் செய்யனும்னு காத்துக் கிட்டிருந்தாங்க. எனக்காகவும், ஏதும் பிரச்சினை வரக்கூடாது ன்னும், அவர்கள் சொந்தங்கள் வாய்க்கு அஞ்சியும், திரு நீர் மலையில், சிக்கனமாக, கல்யானம் செய்து வைத்தார்கள்.
முதல் ஒரு மாதம் பித்து பிடித்தாற் போல இருந்தது.. எனக்காக அவர் ரெண்டாவது கல்யாணம் கூட செய்து கொள்ளாமல், ஒரு தாயைப் போல என்னை கவனித்துக் கொண்டார். அங்கு இருந்த கடைசி நாள் வரை அவர் தான் எனக்கு தலை பிண்ணி விடுவார். துணி துவைத்துக் கொடுப்பார். துணிகளை பிரஸ் செய்து வைப்பார். படித்துக் கொண்டிருந்தால், ஊட்டி விடுவார். நான் தூங்கியபின் தான் தூங்குவார். அப்படிப்பட்ட அப்பாவால் எப்படி இவ்வளவு வெறுப்பு காட்ட முடிந்தது? அப்படி என்ன தப்பு செய்துவிட்டேன்?
பதான் கோட்டிற்கு குடித்தனம் வந்துவிட்டாலும், அப்பாவை நினைத்து, தினமும் மனது அழும். சரி...எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என நினைத்து சமாதனப் படுத்திக் கொள்வேன்.
நான் ‘உண்டான’ நாள் முதல் என் மாமியார் கூடவே இருந்து, அம்மா இல்லாத குறையை போக்கிவிட்டார். டெலிவரி மிலிட்டரி ஹாஸ்பிட்டலில் தான் ஆயிற்று. ஆண் குழந்தை. ஆஸ்பத்திரியில் இவரும், மாமியாரும் தெய்வங்களை யெல்லாம் வேண்டிக் கொண்டு, தைரியம் சொல்லிக் கொண்டு, என்னை விட்டு அகலாதிருந்தனர். இப்படிப் பட்ட புருஷனும் , மாமியாரும் நான் செய்த புண்ணியம் தான்.
மெல்ல அவரிடம் கேட்டேன். "அப்பாவிற்கு பையன் பிறந்ததை சொன்னீர்களா?"
"சொல்லமலிருப்பேனா? சொல்லிவிட்டேன். " என்றார்.
"என்ன சொன்னார்?"
"வருவதாகச் சொன்னார்"
எனக்கு புரிந்து விட்டது.. 'அப்பா வருவதாகச் சொல்ல வில்லை.. என்னை அழ வைக்க வேண்டாமென இப்படி சொல்கிறார்"
முதல் முறையாக அப்பாவிடம் வெறுப்பு வந்தது
பையன் 'ஸ்ரீராமுக்கு’ மூணு வயதாகிவிட்டது.. "LKG" சேர்த்து விட்டோம்.
எல்லாம் சுகமாக போய்க் கொண்டிருந்த போது நேற்று அப்பாவிடமிருந்து போன் வந்தது.
ஃபோனில் அழுதார். தப்பு பண்ணிட்டேம்மா.. உன்னை இப்படி நிர்க்கதியாய் விட்டிருக்கக் கூடாது என்றார். ஏனோ தன் புத்தி அப்போது கெட்டு விட்டது என்றார். என்னை மன்னிப்பாயா காயு? உன்னையும், மாப்பிள்ளையயையும் குழந்தையையும் பார்க்க மனசு துடிக்கிறது என்றார். இன்னும் ஏதேதோ சொன்னார். என்னைப் பார்க்க இங்கு வரட்டுமா என்றார்.
எனக்கு எல்லா கோபமும் சட்டென மறைந்தது.. கண்களில் நீர் பெருக.. வாங்கப்பா.. நீங்க வர்ரதுக்காகத்தனே இத்தனை நாள் வெய்ட் பண்ணினோம்” என்றேன். அதற்கு மேல் பேச முடிய வில்லை. கண்ணீரே வார்த்தைகளாகி விட்டன.
சம்பந்தியிடம் இன்னிக்கே நேரா போய் மன்னிப்பு கேட்டுக்கிட்டு அங்கே வர்ரேம்மா! அதுதான முறை? அவங்களிடம் பேசிட்டு நாளை பத்து மணிக்கு போன் பண்றான்.
'சரிப்பா..."
“அப்பா வர்ரார்” என்ற செய்தி தான் எல்லா உற்சாகத்திற்கும் காரணம். ப்ரஸன்னா மற்றும் தீப்தியின் ஆச்சரியத்திற்கும்!
5. நமச்சிவாயம்:
என் பால்ய சினேகிதன் ரங்காச்சாரி. பெருமாள் கோவிலில் சேவார்த்தி. பெரும்பாலும் எல்லா குடும்ப, தனிப்பட்ட விஷயங் களையும் அவனிடம் சொல்லி விடுவேன். காயத்ரி விஷயத் தையும் அப்போது அவனிடம் சொல்லியிருந்தேன். நல்ல பையன் தானே? உம் பொன்னுக்கும் விருப்பம்னா பேஷாய் கல்யாணம் கொடுத்திடேன். க்ஷேமமாய் இருப்போ.. தயங்காம கன்னிகாதானம் செஞ்சு குடுன்னான். என் புத்திக்கு தான் எட்டலை. உன்னோட பெண் வேற ஜாதிக்காரனை விரும்பினால் கட்டிக் கொடுப்பியான்னு ,எடக்கா கேட்டேன்.
'தோ பார்டா.. எனக்கு பெண் பிள்ளை இல்லை.. பையன் தான். நீ ஹேஷ்யமாய் கேக்கர கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனா ஒன்னு தெரியும்.. உனக்குன்னு இனிமே வாழ்வதற்கு ஒன்னும் இல்லை. உன் பெண்ணின் சந்தோஷம் தான் உனக்கு முக்கியமாய் இருக்கனும். பேசாம "காயு" வுக்கு எது இஷ்டமோ அதை செய்றதை விட்டு.. ஏண்டா பிடிவாதம் பிடிக்கறே" ன்னான்.
"அது அப்படித்தான்னு" வந்துட்டேன்.
ரங்காச்சாரியை தினமும் பாத்துக் கொண்டாலும், காயு விஷயம் பற்றி பேசுவதை தவிர்த்து வந்தான். ஒரு நாள் அவன் பையனுக்கு கல்யாணம் என பத்திரிக்கை கொடுத்தான். பார்த்தால் பெண் வேறே ஜாதி. என்னடான்னு கேட்டா... இந்த காலத்தில் ஜாதியெல்லாம் சும்மாடா! க்ருஷ்ண பரமாத்மா என்ன ஜாதி? பாமா, ருக்மணி என்ன ஜாதி?
முருகன் என்ன ஜாதி-வள்ளி என்ன ஜாதி? புராணத்திலேயே கந்தர்வ திருமணத்தை ஒப்புண்டிருக்கா? அப்படியே இல்லேன்னாலும் எனக்கு என்னோடு பையனோட சந்தோஷம் தான் முக்கியம். என்னோட ஜாதியோ, ஈகோவோ முக்கியம் இல்லை. ஜாம் ஜாம்னு கல்யாணம் பாணிக்ரஹனம் செய்து கொள்ளத்தான் போகிறேன். வர்ரவா வரட்டும்.. வராதவா போகட்டும். உன்னையும் சேத்துத்தான் சொல்றேன்" என்றான் ரங்காச்சாரி.
செவிளில் அறைந்தாற்போல இருந்தது அவன் பேசியது. இது எனக்கு ஏன் தோனாமல் போயிற்று? இந்த சனியன் பிடிச்ச ஈகோ எல்லாத்தையும் கெடுத்துடிச்சே?
அப்புறம் தான் காயுவிடம் ஃஃபோன் போட்டு பேசினேன். உன் சம்பந்தியை பாத்து, மன்னிப்பு கேட்டுக் கொண்டு வருகிறென்னு சொன்னேன். காயுவுக்கு பரம குஷி. இன்னிக்கு சாயங்காலமே போய் சம்பந்தியைப் பாக்கனும்.
6.வீரபத்ரய்யா:
"பரிமளம்!....... யாரோ டோர் பெல் அடிக்கிறார்கள். யாரென்னு பொய்ப்பார். "
"ஏன்.. நீங்க போக முடியாதா? நான் அடுக்களையில் கைக்காரி யம்மய் இருக்கிறேன்!"
"ஆமாம் நீ எப்ப என் சொல் பேச்சை கேட்டிருக்கே.. இப்போது கேட்க... " வாசலில் போய்ப்பார்த்ததேன்.
"அட நீங்களா" வாங்க சம்பந்தி! ஆச்சர்யமாயிருந்தது.
'பரிமளம்! இங்கே வந்து பாரு... யாரு வந்திருக்காங்கன்னு?"
"யாரது... ஓ.. வாங்க..வாங்க.."
வந்த மனிதன் நமச்சிவாயம். காயுவின் அப்பா! தடாரென என் காலில் விழ வந்தார்.. பதறிப்போய் பின்னடி நகர்ந்து கொண்டேன். அவரை தூக்கி விட்டு .. என்ன நமச்சிவாயம் இது...ஏன் இப்படி பன்ணிணீர்கள்?
'நான் தப்பு பன்ணிட்டேன் வீரபத்ரய்யா.. தப்பு பண்ணிட்டேன். ஒன்னா ரெண்டா. நிறைய தப்பு பண்ணிட்டேன். நீங்க என்னை மண்ணிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. நாலு வருஷத்திற்கு முன்னால், நீங்கள், அவ்வளவு தூரம், என் வீடு தேடி வந்து பெண் கேட்டப்ப நான் அப்படி நடந்து கொண்டி ருக்கக் கூடாது. என் நாக்கில் ‘சனி’ வாசம் பண்ணிக்கிட்டி ருந்தான் போலிருக்கு. அதான் புத்தி அப்படி போயிடிச்சு. பெண்ணையும்-மாப்பிள்ளையையும் பார்க்க மனசு துடிக்குது. நீங்க பழசையெல்லாம் தயவு செஞ்சு மறந்துடனும்!.
இதோ பாருங்க.. பொண்ணுக்கு நகை, பேரனுக்கு தங்க அரணாக்கயிறு, மாப்பிள்ளைக்கு டிரஸ் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன். நீங்க அனுமதிச்சீங்கன்னா பதான் கோட் போகிறேன்."
'எதுக்காக இப்படி பெரிய வார்த்தைகளையெல்லாம் சொல்றீங்க. ஏதோ கெட்ட நேரம்.. நாம ஒன்னா இருக்க முடியாம போச்சு. இப்ப நீங்க மனசு மாரினதே பெரியவிஷயம்!
உங்க பெண், உங்க மாப்பிள்ளை, உங்க பேரன்! எங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அது போல உங்களுக்கும் அந்த வீட்டில் உரிமை உண்டு. நாங்கள் என்ன ‘பர்மிஷன்’ கொடுப்பது? தாராளமாய் போய்ட்டு வாங்க.. அப்பாவும் பெண்ணும் ஒன்னா சேர்ந்ததில் ரொம்ம சந்தோஷம் எங்களுக்கு. எல்லாம் அந்த வெங்கடாஜலபதி காருண்யம்!"
"இவ்வளவு நாளா உங்களைப்பொன்ற நல்ல சம்பந்தியைப் புரிந்து கொள்ளாமல் போயிட்டேன" என்றார் நமச்சிவாயம்.
உடனே அங்கிருந்தே, தன் மகளுக்கு ஃபோன் செய்தார் நமச்சிவாயம்.
“காயு... சம்மந்தி ஒன்னும் சொல்லலை.. தாராளமா போய்ட்டு வாங்கண்ணுட்டார். நாளைக்கே ஃப்ளைட் புடிச்சு. டெல்லி வந்து, அதுக்கப்புறம் ரயிலில் புடிச்சு பதான் கோட் வர்ரேன். நீ நாளைன்னைக்கு காலை, கொஞசம் 'ஸ்டேஷனுக்கு வந்து கூப்பிட்டுக்கோ" என்றார் நமச்சிவாயம்.
7 ப்ரஸ்ன்னா:
எதிர் பார்த்த போஸ்ட்டிங் (டிரான்ஸ்ஃப்ர்) ஆர்டர் வந்து விட்டது! ‘ஜொராட்டுக்கு!’. நான் இந்த பதான்கோட் ஸ்டேஷனுக்கு வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. நார்மலாக மூன்று வருடம் ஆனால் டிரான்ஸ்பர் செய்து விடுவார்கள்! ஆனால், ‘ஜோராட் ஸ்டேஷன்’ குடும்பத்தை அழைத்துப் போக சரியான இடமில்லை. ஸ்கூல் நன்றாக இருக்காது! மேலும் பெரும்பகுதி ஆபீசர்கள் யாரும் ஃபேமிலியியை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள். என்ன செய்வது என குழம்பிக் கொண்டி ருந்தபோது சென்னையிலிருந்து அம்மாவிடமிருந்து ஃபோன்.
சாதாரணமாக, ஆபீஸுக்கு, அம்மா கூப்பிட மாட்டார். விஷயம், வம்பு -அரட்டை எல்லாம் 'காயு'விடம் மட்டும் தான்.
'என்னம்மா நல்லாயிருக்கியா? அப்பா சுகமா?"
'அதெல்லாம் நல்லாத்தான் இருக்கோம்டா.'
சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பின் சொன்னேன்!
“அம்மா, எனக்கு போஸ்டிங் ஆகிவிட்டது”
‘எங்கே?”
“ஜொராட்டுக்கு”
‘அது எங்கடா இருக்கு?’
“அஸ்ஸாமில் அம்மா”
“ஐயோ.. ரொம்ப தூரமாடா?”
“தூரம் பிரச்சினையில்லையம்மா! ஆனால் காயுவையும், குழந்தையையும் கூப்பிட்டுக்கொண்டு போக முடியாது!”
“ஏன்?”
“அந்த ஊர் அப்படி! நீ எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும்!”
“என்னடா?”
“ஒரு வருஷம் நீயும் அப்பாவும், இங்கே பதான் கோட்டிற்கு வந்து இருக்கணும். இங்கே காயுவையும், ஸ்ரீராமையும் தனியே விட்டு விட்டு, அங்கே போக முடியாது. இந்த வருஷம் படிப்பு முடியும் வரை, நீயும் அப்பாவும் வந்து இவர்களை பார்த்துக் கொண்டால், எப்படியும் அடுத்த வருஷம் நான் வேறே இட்த்திற்கு போஸ்ட்டிங் வாங்கிக் கொண்டு வந்துடுவேன். அப்பாவிடம் சொல்றியா?”
‘உனக்கு செய்யறதைவிட எங்களுக்கு வேறு என்ன வேலை? வர்ரோம்டா!’
தேங்க்ஸ்ம்மா.. நான் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்கேன். நீ என்ன விஷயமாய் எனக்கு ஃபோன் பண்ணினே? சாதாரணமா நீ ஆபீஸுக்கு பேச மாட்டியே?”
"இன்னிக்கு காலையில, நமச்சியாவம், அதாண்டா, காயுவின் அப்பா வீட்டுக்கு வந்திருந்தார்."
'அட... அவர் எப்போ மனசு மாறினார்?"
'முழுசும் கேளுடா...! தான் செஞ்சது தப்புதான்னார். நாம கல்யாணத்துக்கு பெண் கேட்டப்பவே அவர் ஒத்துக் கொண்டு முறைப்படி முகூர்த்தம் நடத்திக் கொடுத்திருக்கனும்னார். நடந்த எல்லாத்துக்கும் மன்னிப்பு வேறே கேட்டார்.
பொன்னையும்-மாப்பிள்ளையையும் போய்ப் பாத்துட்டு வரட்டுமான்னு கேட்டார்!'
'நிஜமாவா சொல்றே? ஆச்சரியமாயிருக்கு! காயு கேட்டால் ரொம்ப சந்தோஷப்படுவாள். அவகிட்ட இந்த விஷயத்தைச் சொல்லிட்டியா?"
'அது சம்பந்தமாதான் உன் கிட்ட பேசனும். இது நாள் வரை பொன்னு-மாப்பிள்ளைகிட்ட இல்லாத பாசம் இப்ப எப்படி வந்திடும்? கல்யாணத்துக்கு பெண் கேட்டு, நாம, அவர் வீட்டு வாசல் தேடிப்போய், எப்படியெல்லாம் பெண் கேட்டோம்? அந்த சமயத்தில், எப்படி அவமரியாதைப் படுத்தினார் உன் மாமனார். இப்ப மட்டும் என்ன கரிசனம் வந்துட்டுதாம்?"
'அப்படியெல்லாம் பேசாதேம்மா.. உலகத்தில் எல்லா அப்பாவும் தன்னோட பெண், லவ் பண்றதா சொன்னா கோபப்படுவது சகஜம் தானேம்மா? இப்போதாவது மனம் மாறி எங்களைப் பாக்க வர்ராங்கன்னு, சந்தோஷப் படுவியா? பழசையெல்லாம் இப்ப ஏன் கிளர்ரே? அதுவுமில்லாம அவ்வளவு பெரிய ஆள் உங்களிடம், கௌரவம் பாக்காம மன்னிப்பு கேட்டுக்கிட்டார். அது போதாதா உனக்கு?”
"அந்தாளுக்கு இப்ப உடம்பு முடியலைடா. ரிடயர் ஆகிவிட்டார். அதான் அண்டுவதற்கு இடம் தேடரார். உடனே, உன்னோட ஞாபகம் வந்திடுச்சி. உங்கமேல பாசம் பொத்துகிட்டு வந்து உங்களை பாக்க வரலை. வயசான காலத்தில் வச்சு பாத்துக்க ஒரு ஆள் வேணும்.. அதான்.."
'அப்படி இருக்காதும்மா.. நான் இல்லாவிட்டால் உலகத்தில் யாருமே இல்லாமல் போயிடுமா? ஏதோ வயசான காலத்தில் மனசு மாறி, பெண்ணை பாக்க வரேங்கிறார்.."
"பெண் உண்டாயிருக்கருப்ப மாறாத மனசு, பேரன் பொறந்தப்ப மாறாத மனசு.. இப்பத்தான் மாறிச்சா? எல்லாம் வேஷம்டா.. வயசானப்புறம் உங்ககிட்ட வந்து ஒட்டிக்கிறதுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்றார் .. அவ்வளவு தான்..."
நீ எப்பம்மா இப்படி யெல்லாம் பேசக்கத்துக்கிட்ட... அவருக்கு என்னோடைய காசு பணம் தேவையில்லைம்மா.. அவரு கிட்டயே நிறைய இருக்கு.. உலகத்திலே எவ்வளவோ வசதியான ஹோம் இருக்கு.. எங்களை அண்டிப் பிழைக்க அவர் வருவதாக நான் நினைக்கலை. அதுவுமில்லாம ஒரு மனுஷன் மனசு மாறாவே கூடாதா என்ன? நீ சொல்றதெல்லாம் காயு காதுல விழுந்தால் எப்படி கஷ்டப் படுவா தெரியுமா?"
'இத பார்ரா... நீ எங்களுக்கு உபதேசம் பண்ணாதே! காயு மேல எனக்கு எந்த கோவமுமில்லை! அந்த மனுஷன் காலில் விழுந்ததும், உங்கப்பா உடனே அந்தாளை கட்டிப் பிடிச்சுக் கிட்டார். ஆனால், எனக்கு அந்த ஆளோட, நீங்க சேருவதில துளியும் இஷ்டம் இல்லை.
ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ.. நமச்சிவாயம் உன் வீட்டுக்கு வந்தால் இனி என்னை மறந்துடு.. உன் வீட்டு வாசப்படி இனி மிதிக்க மாட்டேன். அந்த மனுஷன் எங்களை அவமானப் படுத்தியதை நீ வேணா மறக்கலாம், ஒங்கப்பா வேணா மறக்கலாம்! நான் மறக்கல.. அந்த ஆளுக்கு இப்படி ஒரு பாடம் கொடுத்தாத்தான் எனக்கு நிம்மதி. நான் வேணுமா இல்லை உன் மாமனார் வேணுமான்னு முடிவு எடுத்துக்க..."
"அட சட்... உனக்கு டி.வி சீரியல் பாத்து,பாத்து புத்தி கெட்டுப் போச்சு! அப்பா இருக்காரா? அவரிடம் போனைக் கொடு"
'இந்தாங்கா... உங்க புத்திரன் உங்ககிட்ட பேசனுமாம்!"
'அப்பா, அம்மா சொல்றதைக் கேட்டியா......'
'எல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன். உங்கம்மாவுக்கு, நமச்சிவாயம் உங்களோட சேர்ரதில இஷ்டமில்லை. நான் சொல்லிப் பாத்துட்டேன். கேக்க மாட்டேன் என்கிறாள். அவளுக்கு பழி வாங்கணும்னு தோணுது. நான் என்ன பண்ணட்டும்?”
“என்ன பண்ணட்டுமா? அவர் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கும் போதே, இந்த வீட்டுப் பக்கம் வராதேன்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே? அப்ப அவருகிட்ட இளிச்சுவிட்டு, இப்ப வந்து வரக்கூடாதுன்னா என்ன நியாயம்?
“அதெல்லாம் எனக்கும் தெரியும்டா! உங்கம்மாவோட பிடிவாதம் உனக்கு தெரியாது? “
‘இதென்னப்பா பைத்தியக் காரத்தனமா இருக்கு! அவரு எங்களை பார்க்கனும்னு உங்க்கிட்ட கேட்டப்ப, எதுக்காக சம்மதம் தெரிவிச்சீங்க.. அப்ப நீங்க அம்மா கிட்ட கேக்கலையா?”
‘கேக்கலை.. இதுக்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுவாள்ன்னு எனக்கு தெரியலை.
நல்ல வேளை.. அவர் நம்ம வீட்டுக்கு வந்தப்ப, இவள் கிறுக்கு மாதிரி பேசி, ரகளை பன்னாமலிருந்தாளே! அப்படி நடந்திருந்தா இன்னும் இல்ல அசிங்கமாப் போயிருக்கும். “
“நமச்சிவாயம் விட்டிற்கு வந்தால் மரியாதைக் குறைவாய் ஒன்னும் பேசாதே. அவர் பாட்டும் வந்துட்டுப் போகட்டும். உங்கம்மா தானே வழிக்கு வருவாள்”
ஃபோனைப் பிடிங்கி அம்மா கத்தினாள். “ஒங்க ரெண்டு பேத்துக்கும் ரோஷம் கெட்டுப் போச்சு. அந்த மனுஷன் அங்க வந்தாக்க, என்ன ஆனாலும் சரி, நான் உன்னைப் பாக்க ஒரு நாளும் வரமாட்டேன். நீயும் இங்க வராதே..”
இதென்ன கஷ்டம்? அம்மா சொல்வதில் கொஞ்சமும் நியாயம் இருப்பதாகப் படவில்லை. விட்டுக்கு வந்தவரை எப்படி வெளியே அனுப்புவது.. அதுவும் 'காயு' வின் அப்பாவை? காயு அப்பாவிட எந்த அளவு பாசம் கொண்டிருந்தாள் என்பது எனக்குத்தானே தெரியும்?
அம்மாவை விரோதித்துக் கொண்டு, நமச்சிவாயத்தை அழைத்துக் கொண்டால், சொன்ன மாதிரியே இனி அம்மா இந்த வீட்டிற்கு வர மாட்டாள். அம்மாவின் பிடிவாதம் தெரிந்தது தானே?
எனக்கு எப்போது போஸ்ட்டிங் வந்த இட்த்திற்கு குடும்பத்தை அழைத்துப் போக முடியாது! அந்த சமயத்தில் காயுவை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.. இல்லாவிட்டால், அவர்களை இங்கு வந்திருக்கச் சொல்ல வேண்டும். குழந்தையை சென்னைக்கு அனுப்பி வைத்தால், படிப்பு கெட்டுவிடும்! என்ன செய்யலாம்? அம்மா இங்கு வந்து விட்டால், "காயு-குழந்தை" இருவரைப் பற்றிய கவலையின்றி டிரான்ஸ்ஃப்ரில் போகலாம். இல்லாவிட்டால் சிக்கல். குழந்தையுடன் மனைவியை இங்கே, தனியே விட்டுப் போவது முடியாது. பல வகை குழப்பங்களுக்குப் பின் தீர்மாணித்தான் ப்ரஸன்னா. இபோதைக்கு அம்மா சொன்னபடி கேட்பதுதான் லாபமாயிருக்கும். பிறகு அம்மாவை மெல்ல சமாதனப்படுத்தி, நமச்சிவாயத்தை வீட்டிற்கு வரச் சொல்ல்லாம்.
“அப்பா.. நமச்சிவாயம் எப்போ புறப்படுகிறார்..?”
“ நாளைக்கே புறப்படதாக்ச் சொல்லிட்டுப் போனார்”
8 இடையே
அன்று, டியூட்டி முடிந்து வந்ததும், "காயு... உன் கிட்ட ஒன்னு பேசனும்... முக்கியமான விஷயம்"
"நான் கூட ஒரு நல்ல விஷயம் வச்சிருக்கேன். கன்ஃப்ர்ம் ஆன அப்புறம் உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்.."
"என்ன விஷயம் சொல்லு.."
"இல்லை முதலில் நீங்களே சொல்லுங்க...அப்புறமா நான்"
"காயு. எனக்கு போஸ்ட்டிங் வந்துவிட்டது ஜொராட்டுக்கு.. அப்புறம், இன்னிக்கு அம்மா ஆபீஸூக்கு போன் பன்னினாங்க. எல்லா விவரத்தையும் சொன்னான்.
அப்புறம் காயுவின் அப்பா, இங்கு வருவது சம்பந்தமாவும், அதுபற்றி அம்மா அவனிடம் பேசிய எல்லாவற்றையும், மறைக்காமல் சொல்லி விட்டான் ப்ரஸன்னா!
“இப்படிக்கூட யோசிப்பீங்களா நீங்க? கடஞ்செடுத்த சுய நலமா முடிவெடுக்க எப்படி யோசிக்க முடிஞ்சது உங்களால்? உங்க அம்மா சொல்லிட்டா, அப்படியே பெருமாள் மாடு மாதிரி தலையை ஆட்டி கேட்டுக்கிட்டீங்களா? உங்களுக்கு சுய புத்தி வேணாம்? உங்களுக்கு அம்மா-அப்பா ரெண்டு பேரும் இருக்காங்க.. எனக்கு யாரு இருக்காங்க? அப்பாவுக்கும் என்னை விட்டால் வேறு யார்? சீறினாள் காயு.
'காயு... கவணி..எனக்கு நீதான் முக்கியம். நம் குழந்தைதான் முக்கியம். உங்கள் நலனுக்கு மாறாக என்னால் எதுவும் செய்ய முடியாது.
உன்னை கல்யாணம் பண்ணிக் கொண்டது உன்னோட அப்பாவின் வார்த்தையை மட்டும் மீறி அல்ல.. என்னோட அம்மாவின் வார்த்தையையும் மீறித்தான். இது நாள் வரை உன்னிடம் சொல்லியதில்லை. இப்ப சொல்றேன்.. உன்னை நான் கட்டிக்கக் கூடாதுன்னு ஏகத்துக்கும் பிடிவாதம் பண்ணிப் பாத்தாங்க அம்மா. சினிமா வசனம் போல உன்னைக் கல்யாணம் செய்துகிட்டா செத்துப் போய்விடுவேன்னு மிரட்டினாங்க.. தாரளமா செய்துக்கோங்கன்னு சொல்லிட்டேன். உள்ளூர ஏதும் ஏடா கூடமா செய்துக்கப் போராங்களோன்னு பயமாத்தான் இருந்தது. நான் எதுக்கும் கட்டுப் பட மாட்டேன்னு தெரிஞ்சப்புறம் தான் ஒத்துக் கிட்டாங்க.. திருநீர்மலையில் கல்யாணம் ஆச்சு.
'உன் அப்பா, இப்ப, இங்கே, வரவேண்டாம்னு எதுக்குச் சொல்றேன்னா, எனக்கு ஜோராட்டுக்கு டிரான்ஸ்ஃப்ர் வந்துவிட்டது. அது டிஸ்டர்ப்டு ஏரியா. எந்த வசதியும் இல்லை. ஸ்ரீராமுக்கு நல்ல ஸ்கூல் கூட கிடையாது. அங்கே குவார்ட்டர்ஸ் கிடைத்தாலும் உங்களை அழைத்துக் கொண்டு செல்வது உசிதமல்ல. இந்த ஊரில், இப்போதிருக்கும் சூழ் நிலையில், குழந்தையையும்-உன்னையும் தனியாக விட்டுவிட்டும் என்னால் போக முடியாது. நமக்கு என் அம்மாவின் உதவி தேவை.
உன் அப்பா தனி ஆள். அவருக்கே அடுத்தவரின் உதவி தேவைப்படும். அவரால் யாருக்கும் உதவ முடியாது. கொஞ்ச நாள் பொறுத்துக்க. ஏதாவது யோசனை பண்ணி, உன் அப்பாவை நாமே போய்ப் பார்க்கலாம். இப்போது தகராறு பண்ணாதே. நம் நல்லதுக்குத்தான் சொல்கிறேன்.
"ஏன்.. உங்க அம்மா-அப்பாவுடன், என் அப்பாவும் சேர்ந்து இங்கேயே இருக்கட்டுமே? இடமா இல்லை?
'முட்டாளே! கிறுக்கு மாதிரி பேசாதே.. நீ சொல்லும் அரேஞ்மெண்ட் சினிமாவுக்கும், கதைக்கும் தான் ஒத்து வரும். நடைமுறைக்கு இல்லை. என் அம்மாவுக்கும்,உன் அப்பாவுக்கும் ஒத்தே வராது. சண்டைதான் மிஞ்சும். இந்த ஸ்டேஜில், சண்டைன்னு ஆயிடுச்சின்னா.. அப்பறம் எப்பவுமே சமாதானம் ஆகாது. நான் சொல்வதைக் கேள். எனக்கு உன் அப்பா மீது எந்த வருத்தமும் இல்லை. சொல்லப்போனா அவர் வருவது ரொம்ப சந்தோஷம் தான். ஆனா இப்போது வரவேண்டாம். வந்தா மேலும் பிரச்சினை தான் ஆகும்.”
'நான் சொல்ல வந்ததும் இதுதான். இன்னிக்கு காலைல தான் அப்பா போன் பண்ணினார். உங்க அப்பா வீட்டிலிருந்து.. புறப்பட்டு வர்ரேன்னார்.. நானும் சரின்னு சொல்லிட்டேன்." என்றாள் காயு.
உன் அப்பா, என் அப்பா வீட்டிற்கு வந்தப்போ நல்ல மாதிரியா தான் பேசினாங்களாம். அவர் புறப்பட்டு போனப்புறம் உடனே எனக்கு போன் செஞ்சாள் என் அம்மா. இப்போ புரிஞ்சுதா என்னோட அம்மாவோட பத்தியைப்பத்தி? கொஞ்சம் பொறுத்துக்கோ. எப்படியாவது சமாளிச்சு அப்பாவை திரும்ப அனுப்பிச்சுடு. அந்த பழியை நாமே எற்றுக் கொள்வோம். அவரின் கோபத்தை என் அம்மாவிடம் திருப்பாதே! நான் அடுத்த வாரம் ஜொராட்டில் ஜாயின் பண்ண்ணும். அதற்குள் என் அம்மா-அப்பாவை வரவழைத்து விடுகிறேன். அவர்கள் இல்லாவிட்டால், உன்னை தனியே விட்டுவிட்டு எங்கும் செல்ல முடியாது. கொஞ்ச நாள் பொறு. எப்படியாவது நாமே உன் அப்பா வீட்டிற்கு போய் காலில் விழுந்தாவது சாமாதானப் படுத்திக் கொள்ளலாம்”
எனக்கு வேறு வழியில்லை. இவர் சொல்லுவதும் சரிபோலப் பட்டது. மேலும் ப்ரஸன்னாவை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். இவர் அம்மா முன்னாலேயே சொல்லி யிருந்தால், அப்பாபேசும் போது, ஏதாவது காரணம் சொல்லி, நீ இப்ப வராதே..... நாங்களே வந்து அழைத்துவருகிறோம்னு எதையாவது சொல்லி சமாளித்திருக்கலாம். இன் நேரம் ஃப்ளைட் ஏறியிருப்பார். இப்ப போய் என்ன பண்ண முடியும்?
மனசை கல்லாக்கிக் கொண்டாவது, அப்பாவை திரும்ப அனுப்பி விட வேண்டும். பிறகு சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.
9 நமச்சிவாயம்:
ஃப்ளைட் பிடித்து டெல்லி பயணமாகி விட்டார் நமச்சிவாயம். மாலை ஆறு மணிக்கு, பழைய தில்லி ரயில்வே ஸ்டேஷனி லிருந்து “ஜம்மு” செல்லும் எக்ஸ்பிரஸ் டிரெயினில் ‘பதான் கோட்டிற்கு’ டிக்கட் கிடைத்து விட்டது. காலை 8 மணிக்கு ஊர் போய்ச் சேறும். பரீட்சைக்குப் போகும் மாணவனைப் போல இருந்தார் நமச்சிவாயம். ட்ரெயினில், காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. எல்லா காலைக் காரியங்களும் செய்து விட்டார். இதோ இன்னும் அரை மணி நேரத்தில் "பத்தான்கோட்" ரயில்வே ஸ்டேஷன் வந்துவிடும். பட படப்பில், எழுந்ததி லிருந்து எட்டுதடவை பாத்ரூம் போய்விட்டு வந்துவிட்டார். ஐந்து வருஷம் கழித்து பெண்ணைப் பார்க்கப் போகிறார். ஸ்டேஷனுக்கு மாப்பிள்ளையும் பெண்ணும் வந்திருப்பார்களா?
பார்த்ததும் காயு என்ன சொல்லுவாள்? இவ்வளவு நாளா என்னைப் பாக்கனும்னு தோனவே இல்லையா என்பாளோ? அழுதுவிடுவாளோ? மாப்பிள்ளை எப்படி ரியாக்ட் பண்ணுவார்? புதிதாகப் பிறந்த கன்றுக் குட்டி போல மனசு அலைபாய்ந்து கொண்டிருந்த்து.
ட்ரெயின் சரியான டயம். எட்டு மணிக்கு ஸ்டேஷனில் நுழைந்தது. புது இடம். புது மனிதர்கள். எங்கும் மிலிட்டரி ஆட்கள். வாசலில் மெட்டல் டிடக்டர்கள். செக்யூரிட்டிகளும், அவர்கள்து தோளில் தொங்கும் துப்பாக்கிகளும் அந்த இடத்தை ஒரு அன்னிய பிரதேசமாய் காட்டின.
பிளாட்பாரத்தில், பெண்ணோ மாப்பிள்ளையோ கண்களில் படவில்லை! கோச் நெம்பர் கூட சொல்லியிருந்தேனே? ஒரு வேளை வாசலில் நிற்கிறாகளோ? செக்யூரிட்டிகளின் வருடலைத்தாண்டி ஸ்டேஷன் வாசலுக்கு வந்துவிட்டார். ஆட்டோக் காரர்கள் மொய்த்தனர். ஓ.. இங்கும் செண்ட்ரல் போலத்தானா?
அப்போது, தயக்கமாக ஒருவர் அவரை நெருங்கினார்.
'ஆப் நமஷ்ஷிவாயம் ஹே?'
'ஹா ஜி'
அவர்கள் உரையாடலை தமிழில் சொன்னால், ' நான் காயத்ரி மேட்த்தின் டிரைவர். உங்களுக்காக வண்டி அனுபித்துள்ளார்!’
"காயத்ரி நஹி ஆயா?"
"ஜி நஹி. மேட்த்திற்கு வீட்டில் கொஞ்சம் வேலை இருக்கிறதாம். உங்களை அழைத்து வரச்சொன்னார்.
"ஆயியே சாப்.. ஹம் ஜாயேங்கே!"
சங்கடமாக உணர்ந்தார் நமச்சிவாயம். இத்தனை வருஷம் கழித்து வரும் அப்பாவை அழைத்து வருவதை விட.... வேண்டாம்... கண்டபடி நினைக்காதே! அவளுக்கு நிஜமாகவே வீட்டில் ஏதாவது முக்கியமான வேலை இருந்திருக்கலாம்.
எதிர்கொண்டு அழைத்திருந்தால் தான் சங்கடம். இன்னும் குற்ற உணர்ச்சி மிகும். அவள் வராதது கூட நல்லது தான்.
அது ஒரு தனி வீடு. பெட்டியை டிரைவர் எடுத்துவர.. "காயு...' என்றபடி நுழைந்தார்.
காயத்ரி சமயலறையில் இருந்தாள். திரும்பி பார்த்துவிட்டு,
"வாப்பா.." என்றாள்.
"ஹாலில் சோஃபாவில் உட்கார்.. வர்ரேன்" என்றாள்.
"காயு... நல்லாயிருக்கியாம்மா?" அவர் சமையல் உள்ளுக்குள் சென்றார்.
'ம்ம் ம்ம்'"
'உன்னோட கோவம் நியாயம் தான் காயு... நான்தான் தப்பு பண்ணிட்டேன்.."
"சரி.."
"என்னம்மா ஒன்னும் பேச மாட்டேங்கிறே? உடம்பு ஏதும் சரியில்லியா?"
அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. நீ போய் குளிக்கறதானா குளிச்சுட்டு வா.. மாத்து டிரஸ் எடுத்து வந்திருக்கேல்ல.., டிபன் சாப்பிடுவியா இல்லை டிரெயினில் ஆச்சா?
'காயு... மாப்பிள்ளை எத்தனை மணிக்கு வருவார்? குழந்தை 'ஸ்கூல்' முடிஞ்சு எப்ப வருவான்?
'எல்லாம் வர்ர நேரத்தில் வருவாங்கப்பா.. நீ போய், அந்த வலது பக்கம் இருக்கும் பெட் ரூமில் ரெஸ்ட் எடு.."
மௌனமாக அந்த ரூமிற்கு சென்றார். மத்தியானம் இரண்டு மணிக்கு ப்ரஸன்னா வந்தான். அதுவரை காயு அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. வலியப்போய், கூடக் கூட பேசினாலும், அவரை தவிர்த்துவிட்டு வேறு இடம் போய் விட்டாள். மதியம் ஒரு மணிக்கு பேரன் ஸ்கூலிலிருந்து வந்தான்.
" யாரும்மா இது?"
"உன் தாத்தா டா!”
"பொய் சொல்றே! நம்ம தாத்தா, இது மாதிரி இருக்க மாட்டார். இது வேற யரோ! "
அவன் ப்ரஸன்னாவின் அப்பாவை சொல்கிறான். குழந்தை என்ன கண்டது. அவன், அந்த தாத்தாவைத்தான் பார்த்திருக் கிறான். ஆனால், காயு, இதுவும் உன் தாத்தா தான் எனச் சொல்லவில்லை. நீபோய் கை கழுவிக்கிட்டு வா. சாப்பிட்டு விட்டு, உன் ஃப்ரன்ஸோடு விளையாடலாம்னு அனுப்பி விட்டாள்.
மதியம், ப்ரஸன்னா வந்த உடன், அவனிடம் அவர் வந்திருக்கும் விஷயத்தை சொல்லவில்லை. சாப்பிடும் போது 'அப்பா வந்திருக்கார்' என்றாள். 'ம்ம்ம்ம்' என்றான் அவன். அவராக டைனிங்க டேபிளுக்கு வந்து, “மாப்பிள்ளை சௌக்கியமா “ என்றார். உடனே பாதிச் சாப்பாட்டில் எழுந்து கொண்டான் ப்ரஸன்னா.
சட்டென்று காயுவும், ப்ரஸன்னாவும் எழுந்து போய் தங்கள் ரூமிற்குள் போய்விட்டனர். கொஞ்ச நேரம் அங்கேயே நின்றிருந்தார் நமச்சியாவம்.
பின், தான் தங்குவதற்கு காயு சொன்ன ரூமிற்குள் போய் அமர்ந்துவிட்டார்.
மாலை ஐந்து மணியிர்க்கும். வீட்டில் வேலை செய்யும் தீப்தி வந்தாள்.
பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரு பார்ட்டிக்கு கிளம்பிக் கொண்டிருப்பதாகச் என்றாள்.
விருட்டென வெளியே வந்தார்.
ப்ரஸன்னா! காயு!, கொஞ்சம் நில்லுங்கள். உங்க கிட்ட பேசனும்.
“நான் வந்தது உங்களுக்கு சுத்தமாம பிடிக்கவில்லை? இல்லையா? “
“.....”
“நான் இங்கு வரட்டுமா என்று கேட்டபோதே, இதை நீங்கள் சொல்லியிருக்கலாமே? ரெண்டு பேருக்குமே பிரச்சினை யில்லாமல் இருந்திருக்குமே? வந்தபின் ஏன் இப்படி அசிங் கமாக நடந்து கொள்கிறீர்கள்? என்னை அவமானப் படுத்திப் பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்கள். உங்களுக்கு திருப்தியாகும் வரை அவமானப் படுத்திட்டீங்களா? இன்னும் ஏதாவது செய்யனுமா? உங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பல.. இப்போதே நான் ஊருக்கு புறப்பட்டு போய்விடுகிறேன்.
இதற்கும் பதில் ஏதும் சொல்லவில்லை ப்ரஸன்னாவும், காயுவும். அவரிடம் ஒன்றும் சொல்லாமல் "பார்ட்டிக்கு" புறப்பட யத்தனித்தனர்.
எல்லோரும் திட்டம் போட்டு செய்திருக்கின்றனர். ப்ரஸன்னாவின் கோவம் புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் காயுவிற்கு என்ன ஆச்சு?
கொண்டு வந்திருந்த நகை, புது துணிகளை கொண்டு போய் காயத்ரியின் பீரோவுக்குள் வைத்தார். தனது பையினை எடுத்துக் கொண்டார். விடுவிடுவென வெளியே வந்தார்.
சிறுமைப் பட்டதாக சுருங்கிப் போனாலும், இந்த நிகழ்ச்சி அவருக்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்தது. அவர் செய்ததாக நினைத்த தவறுக்கு வேண்டிய தண்டனை அனுபவித்தாயிற்றே! இனிமேல் தான் மட்டுமே தப்பு செய்ததாக எவரும் சொல்ல முடியாது இல்லையா? தன் பங்கிற்கு சொல்லுவதற்கு இப்போது "வாதம்" வலுவாகிவிட்டதே!
நான் போயிட்டு வர்ரேன், மாப்பிள்ளை, காயு.
காயுவும், ப்ரஸன்னாவும் அவர் போவதைப் பார்த்துக் கொண்டு வெறுமனே நின்று கொண்டிருந்தார்கள்.
ஒரு சிக்கலான குடும்ப உறவுகள் நிலவும் நம் நாட்டில், என்னதான் அநியாயம் எனத் தெரிந்தாலும், பல காயுக்களும், ப்ரஸன்னாக்களும் “கையறு நிலையில்” வேறு ஏதும் செய்ய தைரியமும், வழியும் இன்றி, மௌன சாட்சியாக இப்படித்தான் நின்று கொண்டிருக்கிறார்கள்!
No comments:
Post a Comment