Thursday, March 31, 2016

தட்டு நிறைய சொத்தைப் பாக்கு!


குறைந்தபட்சம் 1967 முதல், தேர்தல்களைக் கண்டுவரும் ஒரு சாமான்யன் என்ற வகையில் இந்த தேர்தல் வித்தியாசமாகத் தெரிகிறது.  கடந்த ஒவ்வொரு தேர்தலிலும் ‘இன்னார்’ வேண்டும் அல்லது ‘இன்னார்’ வேண்டாம் என்பதைத் தீர்மாணிப்பதே, தேர்தலின் மைய புள்ளியாக இருந்தது.  பத்திரிகைகளின் மாய்மால ஆரூடங்களையும் மீறி, மக்கள் தங்களது தேர்வை  தெளிவாகப் புரிந்தே வைத்திருந்தார்கள்.  மக்களின் நோக்கமும் ‘அமர்த்துவது’ அல்லது ‘நீக்குவது’  என்ற இரண்டில் ஏதோ ஒன்றாக இருந்தது.

இந்தத் தேர்தலில் தான், கட்சிகள் அனைத்தும், தங்களின் சாயம் வெளுத்துப் போய், பரிதாபமாகத் தெரிகின்றன.  இந்தத் தேர்தல் போல, கட்சிகள் யாவும் Expose ஆகிநிற்கும் ஒரு சந்தர்ப்பம் நிகழ்ந்ததேயில்லை.

தேர்வு 1.     உயர் நிலை அதிகாரிகள், அரசியல் வாதிகள், மத்திய அமைச்சர்கள் என எவருமே நெருங்க முடியாத, அணுகமுடியாத, விவாதிக்க முடியாத ஒரு தலைமை. அவரைத்தவிர வேறு எவரும் முடிவெடுக்க முடியாத, இயலாத பொம்மை மந்திரிசபை.  கூனிக்குறுகி நிற்பதைக்கூட பெருமையாக கொள்ளும் வினோதம். இந்த போலி அடிமைத்தனங்களுக்கும், துதி பாடல்களுக்கும் பின்னால், கொள்ளையைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?  ஓய்வெடுத்தாலும், பணிக்கு ஒரிரு நாள் வந்தாலும் அது ‘செய்தி’ யாகும் விசித்திரம் வேறு எந்த மானிலத்தில் நிகழும்? எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு ‘மோன நிலை’ யில் உலவும் விந்தை நிலைகுறித்து மக்களுக்குச் விளக்கமளிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச உறுத்தல் கூட இல்லாத ஒரு கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்து என்ன காணப் போகிறோம்?

தேர்வு 2:   தமிழ்நாட்டையே, குடும்பச் சொத்தாகப் பாவித்து, கூறுபோட்டுக் கொண்ட தலைமை(களை) நம்புவதற்கு நிரடல் ஏற்படுகிறது. ஊழல்குறித்துப் பேச எவருக்கும் தகுதியில்லை என்றாலும், அதை கலாச்சாரமாகவே ஆரம்பித்துவைத்த கட்சி இது என்பதை எவரும் மறக்கவில்லை.  இமாலய ஊழல்களை மக்கள் மன்னிக்கவும் தயாரில்லை. அராஜகம், அதீத ஊழல், குடும்ப / வாரிசு அரசியல், இனவாதம்-மொழிவாதம் பேசி மக்களை பின்னுக்கு இழுத்துச் சென்றது என பல கறைகள் இக்கட்சிக்குப் பின்னால் இருக்கிறது. அரசிற்குப் புறம்பாக, பல அதிகார மையங்களை ஏற்படுத்திக்கொண்டு,  அரசாங்கத்தை சீரழித்தது மன்னிக்கக் கூடியதா என்ன?

தேர்வு 3.   பி.ஜே.பியும், காங்கிரஸும் போட்டியிலேயே இல்லை.  எனக்கும் கொஞ்சம் ‘மிக்ஸர் கொடுங்கள்’ என கெஞ்சும் அவல நிலையில் இருக்கும் கட்சிகள் இவை. தத்துவமுரண் எப்படியிருந்தாலும், தன்னை ஒரு மாற்றாகக் காட்டிக்கொள்ளும், முன்னிறுத்தும் நிலையில் தமிழக பாரதீய ஜனதா இல்லை. மத்திய அரசின் அதிகாரத்தில் இருந்தும், மோடி போன்ற பிரபலமான தலைவர் இருந்தும் அதை எந்த அளவு பயன்படுத்திக் கொண்டது என்ற கேள்விக்கு, அக்கட்சியிடம் பதில் இல்லை.  தலைவர்களை மட்டுமே கொண்ட காங்கிரஸைப் பற்றி பேச எதுவுமே இல்லை. காமராஜூக்குப் பின் இக்கட்சி என்றைக்குமே தன்னை ஒரு நேர்மறையான எதிர்க்கட்சியாக நடந்துகொண்டதேயில்லை.

தேர்வு 4.  மேடைப் பேச்சுக்களும், பேப்பரில் அறிவிக்கும் கொள்கைகளும் ஏற்புடையதாக இருப்பினும் ஜாதிக்கட்சி என்ற தோற்றத்தை அழிக்கவியலாத கட்சி இது.  இந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்தினால், சமூக அமைதிக்கு பங்கம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் ஓரத்தில் இருந்துகொண்டே இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

தேர்வு 5.    மீதம் இருக்கும் கட்சிகளான இடது சாரிகள், இந்தத் தேர்தலில் ஏற்றுக் கொண்டிருக்கும் ‘தலைமை’ நகைப்புக்குறியதாகிவிட்டது. இந்தக்கூட்டணித் தலைவரின்  உளறல்களை விட்டுவிட்டாலும்கூட, இந்த மனிதர் என்ன செய்யப்போகிறார் என்று, இட்துசாரிகள் இவரைத்  தலையில் தூக்கிவைத்துக் கொண்டிருக்கின்றனர்? சீதாராம் யெச்சூரி, மிகவும் மெனக்கட்டு விளக்கமளித்துக் கொண்டிருந்தாலும், மாற்று எனக் கொள்ள இயலாத ஒரு கட்சியை ஆலிங்கனம் செய்துகொண்டிருப்பது ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  இதன் தலைவர் ஒருவர், ‘நீங்கள் மகேந்திரனுக்கு 10,000 வாக்குகள் கூட அளிக்கவில்லையே?’ என்ற கேள்விக்கும் மக்களிடம் பதில் இல்லை.

எனவேதான், இம்முறைபோல, குழப்பம் மிகுந்த ஒரு தேர்தலை தமிழகம் சந்தித்ததில்லை என்கிறேன்.

இப்படிச் சீர்தூக்கிப் பார்த்துக்கொள்வது, மிகவும் ‘நடுநிலையாக’ இருக்கிறோம்  அல்லது ‘கையறு நிலையில்’ இருக்கிறோம் என  ஏமாற்ற / ஏமாற்றிக்கொள்ள வேண்டுமானால் ஏதுவாக இருக்கலாம். ஆனால், ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளதே? தட்டு நிறைய பாக்கு இருந்தாலும், அனைத்தும் சொத்தைப் பாக்குகளாக இருக்கின்றன. இருப்பதிலேயே, மிகவும் புழுத்துப்போகாத பாக்கைத் தேர்ந்தெடுத்துப் போட்டுக்கொள்ளவேண்டிய சூழ்னிலை.


யார் வந்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது எனத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கு வாய்க்கவில்லை. ஆயினும் எது சாத்தியப்படும், எது நிதர்சனம் எனக் கண்டுபிடிக்கும் சந்தர்ப்பம்  கையில் தானே இருக்கிறது? 

எந்தப் பாக்கு சுமாரான பாக்கு?

Wednesday, March 30, 2016

ஸ்ரீமுஷ்ணம் பூவராகஸ்வாமி


சில நாட்கள் முன்பாக கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள பூவராகஸ்வாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்கனவே அக்கோயிலுக்குச் சென்றிருந்தாலும், கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் சென்றுவர விருப்பம் ஏற்பட, இன்று (30/03/16) அக்கோயிலுக்குச் சென்றுவரும் வாய்ப்பு கிட்டியது. 

ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த கோயில் இது.  ஸ்ரீமன் நாராயணன், பூமியை மீட்டெடுப்பதற்காக, வராக அவதாரம் எடுத்து, இத்தலத்தை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். கோயிலின் பின்புறம் அவரது வியர்வையால் உண்டான ‘நித்ய புஷ்கரணி’ என்ற குளமும்,  கண்களால் உண்டாக்கிய ஒரு அரசமரமும் இருக்கிறது.

பெருமாளின் பத்து அவதாரங்களில் சிறப்பு வாய்ந்த மூன்றாவது அவதாரம், வராக அவதாரம். பூமியை மீட்டெடுத்த உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி காட்சியளிக்கிறார்.

வடபுறத்தில் உள்ள கோபுரத்தின் பக்கத்தில் குழந்தை அம்மன் ஆலயம் உள்ளது. இங்கே அம்புஜவல்லித் தாயாரின் தோழியர்களுக்கும் சன்னதிகள் உள்ளன. 

அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராகமூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் காட்சி தருகின்றார். உடன் ஆதி வராக மூர்த்தியும் கண்ணனும் எழுந்தருளியுள்ளார். விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது. இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆனவர். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது.

ஸ்ரீ வராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெறலாம் எனக் கூறுகின்றனர். குரு, இராகு, கேது தோஷம் உள்ளவர்களும், தோஷம் நீங்க இங்கு வருகிறார்கள்.  

புதிய வாகனங்கள் வாங்குவோர்,  இத்தலத்தில் தங்கள் வாகனங்களுக்கு இங்கு அர்ச்சனை செய்கிறார்கள்.  விபத்துக்குள்ளான வாகனங்களை சரி செய்த பின்பு, இங்கு வந்து பூவராக பெருமாளை வழிபடுகின்றனர். இந்தப் பழக்கம் எப்படி – ஏன் ஏற்பட்டது  என விளங்கவில்லை.

அரசமத்தைச் சுற்றி, மணபம் எழுப்பியுள்ளனர். ஒரு காலத்தில் இந்த அரசமரம், பூவராகஸ்வாமி ரூபத்தில் இருந்ததாகவும், 1942 புயற்காற்றில் சேதமுற்றதாகவும் சொல்கிறார்கள். மரத்தின் அருகே (கிட்டத்தட்ட  மரத்தின் உள்ளேயே) பூவராக ஸ்வாமிக்கும், லட்சுமி நரசிம்மருக்கும் சன்னதிகள் இருக்கின்றன.

ராஜகோபுரம் பிரமிப்பூட்டுகிறது. என்ன ஒரு கம்பீரம்! உள்ளே ரசிக்கத் தக்க பல சிற்ப வேலைப்பாடுகள்! என்ன ஒரு அழகான கோயில்!!

இங்கே உள்ள நித்யபுஷ்கரணி குளத்தின் கரை அருகே அமைந்துள்ள ஒருவீட்டில்தான் ஸ்ரீ ராகவேந்திரர்  வசித்துள்ளார். அவர் புழங்கிய அந்தவீடு இன்னமும் இருக்கிறது.  அங்கே ஒரு சிறிய பிருந்தாவனம் அமைத்துள்ளனர். பிருந்தாவனம் அமைக்கப்பட்ட கல், ஸ்ரீ ராமன் அமர்ந்து தவம் செய்தது  என்றார் அங்கே பூஜை செய்பவர்.

குளத்தின் கரையருகே ஒரு சிவன் கோயில் உள்ளது.  இறைவன். நித்தீஸ்வரர். ஏ.எஸ்.ஐ கட்டுப்பாட்டில் இருக்கிறது. மிகப் பழமையான கோயில் என்பதை, அதன் சுற்றுச் சுவர்களே சொல்கின்றன. காலை 11 மணிவரை காத்திருந்தும், மூலவர் சன்னதியைத் திறக்க யாரும் இல்லை.
செல்லும் வழியில், ஸ்ரீ ராகவேந்திரரின் ஜன்மபூமியான புவனகிரியில் அமைந்துள்ள பிருந்தாவனத்திற்கும் சென்று வந்தேன்.

சில புகைப்படங்கள்.
கோபுரம் 
நுழை வாயிலில் சிற்ப வேலைப்பாடுகள் 

நுழை வாயிலில் சிற்ப வேலைப்பாடுகள் 

கோபுரத்தின் முதல் நிலையிலிருந்து ஸ்ரீ வேணுகோபாலன் 


இந்த சிற்பம் என்ன சொல்கிறது?

குழந்தையம்மன் குளத்தின் அருகே உள்ள ராகவேந்திரர் வாழ்ந்த வீட்டின் உள்ளே உள்ள பிருந்தாவனம்.

இதுதான் ( முதலில் ஓட்டு வீடு) ராகவேந்திரர் வாழ்ந்த வீடு 

பூவராகச்வாமி ( இந்தப் படம் மட்டும் நெட் உதவி)


திரும்பி ஊர்வரும்போது, சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற திருவதிகை சரநாராயணப்பெருமாளை தரிசித்துவிட்டு (இந்தக் கோயிலில்தான் சயன லட்சுமி நரசிம்மர் இருக்கிறார்) வந்தோம். இது நாள் வரை இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லாதிருந்தது. இப்போது புதிதாகக் கட்டியிருக்கிறார்கள். இப்பகுதியில் பலரின் விருப்பக் கோயில்களில் ஒன்று.  

சார நாராயணன் கோவில் - புதிய கோபுரம் 

உள்ளே
 
ஸ்ரீமுஷ்ணம் குளத்தின் கரையில் உள்ள சிவன் கோயில்.Sunday, March 27, 2016

சேமித்ததால் விழுந்த அடி...


உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்கா, சில  ஆண்டுகளுக்கு முன் பெரும்  நிதி நெருக்கடியைச் சந்தித்தபொழுது, இந்தியா அதன் பாதிப்பிலிருந்து பெருமளவு தப்பித்தது. அப்பொழுது பொருளாதார விற்பன்னர்கள் யாவரும் இந்தியர்களின் சேமிக்கும் பழக்கம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து  நாட்டைக் காப்பாற்றியது; மேற்கத்திய நாடுகளின் செலவழிக்கும் பழக்கம்தான், செலவழிக்கத் தூண்டும் பன்னாட்டு வங்கிகளின் கொள்கையால்தான் நெருக்கடிக்குள்ளாகியது என வியந்து போற்றினர்.
ஆனால், மோடி அரசு, இதற்கு நேர் மாறாக, அதாவது மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு பதிலாக, ‘சேமிக்கிறாயா..? இந்தா பிடி, மண்டையில் ஒரு அடி!’ என ஏப்ரல் ஒன்றாம்தேதி முதல், சேமிப்புகளுக்கு வட்டிவிகிதங்களை கடுமையாகக் குறைத்துள்ளது. யார் கொடுத்த நெருக்கடிக்கு, மத்திய அரசு அடிபணிந்தது எனத் தெரியவில்லை.

இந்திய மூத்த குடிமகன்கள், குறிப்பாக  மத்திய வர்க்கத்தினர், தங்களது சேமிப்பிலிருந்து வரும் வட்டியிலிருந்து காலம் தள்ளும் வழக்கத்தைக் கொண்டவர்கள். என்போன்ற மூத்தவர்கள், மருத்துவ செலவுகளுக்கும், எதிர்பாராத மற்ற செலவுகளுக்கும் மற்றவர் கையை  நம்பியிருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் (இக்காலத்தில் மரணம் கூட பத்து லட்சம் இல்லாமல் வராதே?) சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள். புதிரான ஷேர் மார்கெட்டில் நான் இழந்ததுதான் மிக அதிகம். எனவே, முதலுக்கு மோசமில்லாத பாதுகாப்பான சேமிப்பு முக்கியமாகிறது. அதற்கும் வேட்டு வைத்துவிட்ட்து மோடி அரசு. இது வரை இல்லாத அளவிற்கு வட்டிவிகிதங்களைக் குறைத்துவிட்டது  மத்திய அரசு.
அரசின் இந்த மோசமான முடிவுக்கு, மக்களை “சேமிப்புக்கு  நீங்கள் தபால் அலுவலகத்தை நாடாதீர்கள், நாங்கள் ஒன்றும் தரமாட்டோம், எல்லோரும் பங்குச் சந்தைக்குச் செல்லுங்கள்..” என்று துரத்துவதுதான் காரணம் எனத் தோன்றுகிறது. ஏற்கனவே, ப்ராவிடெண்ட் ஃப்ண்ட் பணம், பங்குச் சந்தையோடு இணைந்துவிட்டது.

லட்சக்கணக்கான கோடிகைளைத் தாண்டும், வாராக்கடன்களை வசூலிக்க வக்கற்ற மத்திய அரசு, மேலும் மேலும் பெருமுதலாளிகளின் கால்களை வருடிக் கொடுக்கும் கொள்கைமுடிவுகளை எடுத்து வருகிறது. அரசு வழங்கும் வட்டிவிகிதங்கள், பங்குச் சந்தை நிலவரத்தோடு  ஒன்றிணைப்பது எவ்வித்ததிலும் மக்களுக்கான அரசாங்கம் செய்யும் காரியமில்லை.


மோடி அரசு, இதை நிச்சயம் திரும்பப் பெற்றாக வேண்டும். கார்பொரேட்களுக்கு சேவகம் செய்ய, மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை.

Tuesday, March 15, 2016

புத்திவந்த போது.....

சிறுவயதில் பலவேறு பழமொழிகளைக் கேட்டிருக்கிறோம். அதன் முழுப் பொருளுணராமல், சடங்காகப் படித்துவைத்ததினால், பல முக்கியமான, அரிதான விஷயங்களை மண்டையில் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை. பல சொற்றொடர்கள் இருந்தாலும், அதில் முக்கியமான ஒரு வாக்கியம் ‘ Health is wealth’ என்பது.  சிறுவயதில் ஆரோக்கியமே செல்வம்  என்பதை உணர்ந்து அதன்படி வாழ்க்கை நெறிகளை அமைத்துக் கொள்ளாததினால் முதுமையில் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். 

அதற்கென்ன இப்பொழுது என்கிறீர்களா? காலையும் இரவும் ‘பல் துலக்கு’ என பெரியவர்கள் சொன்னார்கள்தான். (பலர் இதை ‘பல் தேய்ப்பது’ என  தவறாகப் புரிந்து கொண்டு, பாத்திரம் விளக்குவதைப்போல தேயோ தேய் என தேய்த்து ‘எனாமலை’ உண்டு இல்லை என ஆக்கிவிடுவார்கள்) அதைக் கடைப்பிடிக்க மறுத்து, வயதானதும் பல் உபாதைகளுக்கு ஆளாகும் போதுதான் அந்த அறிவுரையின் அருமை புரிகிறது.  புத்தி வந்த போது பற்கள் இல்லையே?

நேற்று இரவு ஒரு விந்தையான வலி. படுத்தால் மேல் கடைவாய்ப்பல் வலி உயிர் போயிற்று. எழுந்து உட்கார்ந்தால், வலியின் கடுமை குறைகிறது. இதென்ன அடங்காப்பிடாரி வலி? வேறு வழியின்றி, உட்கார்ந்து கொண்டே இரவுப் பொழுதைக் கழித்தபின், காலை எழுந்ததும், எப்பொழுது பத்துமணியாகும் எனக் காத்திருந்து ஒரு பிரபல டென்டிஸ்டிடம் விரைந்தேன். கூடுமானவரை ஆங்கில மருத்துவத்தை விலக்கி விடுபவன் நான். ஆனாலும் வலிகளிலேயே, இம்சையான பல்வலியைப் தாங்கிக் கொள்வது இயலாமலிருக்கவே, அல்லோபதியை நாடினேன்.

மருத்துவமனைகளின் ரிசப்ஷனில்,  இப்பொழுது ஒரு டி.வி யை வைத்துவிடுகிறார்கள். அங்கே இருக்கும் உதவியாளர் வாயையும் கண்களையும் பிளந்துகொண்டு, டி.வியை விழுங்கிவிடுவது போல பார்த்துக் கொண்டிருப்பார்.  அவரை எழுப்பி என் பெயரைக் குறித்துக் கொள்ளச் சொல்லவே, பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.

விரைவிலேயே எனது முறை வர, உள் நுழைந்து, ஒரு பிரம்மாணமான நாற்காலியில் அமர(படுக்க)வைத்து, ‘எந்தப் பல் வலிக்கிறது?’ என டாக்டர் கேட்க, ஆஹா... எல்லாப் பற்களும் வலிப்பது போல தோன்றியது. அவர் ஒவ்வொரு பல்லாக தட்டிக் கொண்டே வர, ஒரு பல்லைத் தட்டியபோது, வைகுந்தம் தென்பட, அலறிப் புடைத்து.... இதுதான், இந்தப் பல்தான் என்றேன்.  ஆனால் அது கீழ்க் கடைவாய் வரிசையில் கடைசிப்பல்!  உங்களுக்கு கீழ்க்கடைவாய்ப்பல்லில்தான் பிரச்சினை. அதன் விளைவுதான் மேலே வலி என்றார். எனக்கென்னவோ இது ஏற்புடையதாக இல்லை.   “இல்லை டாக்டர்... வலி மேல் கடைவாய்ப் பல்லில்தான் ...”.  அவர் மீண்டும் சோதித்து, ஒரு எக்ஸ்-ரே எடுத்து வரும்படி பணிக்கவே,  அடுத்த தெருவில் இருக்கும் எக்ஸ்ரே லேபில் நுழைந்ததும், அங்கிருக்கும் ஒரு டி.வி அம்மணி, பாய்ந்து பிரிஸ்கிருப்ஷனைப் பிடிங்கிக் கொண்டு, 450 ரூபாய் ஆகும் என்றார். இதில் நோயாளிக்கு ஏதும் தேர்வு (Option) இருக்கிறதா என்ன? கேட்ட ரூபாயைக் கொடுத்துவிட்டு, காத்திருக்க, எக்ஸ்ரேக்கு அழைப்பதாகத் தெரியவில்லை. ‘ஏன் நேரமாக்குகிறீர்கள்’ எனக்கேட்க, ‘வெயிட் செய்யுங்கள், ஆள் வரணும்’ என்றார். இந்த தெனாவட்டான பதில் என்னை சூடேற்றிவிட்டது.  ‘இது என்ன திமிர்த்தனமான பதில்? காசு வாங்கும் பொழுது, ஆள் இல்லை எனத் தெரியாது?  எடு என் பணத்தை....., நான் வேறு இடத்தில் பார்த்துக் கொள்கிறேன்” என ஆங்கிலத்தில் குரல் உயர்த்தி உரும, ஒரு பொறுப்பாளர் ஓடி வந்தார். அதென்ன தாய்மொழியில் கேட்டால் பதில் சொல்வதில்லை?

அடுத்த  நொடி எக்ஸ்ரே ரூம் திறந்தது. இது ஒரு விதமான எக்ஸ்ரேயாக இருந்தது. இரு தகடுகளுக்கு மத்தியில் தலையை நிலையாக வைத்துக் கொள்ள,  மெஷின் தலையை அப்பிரதட்சனமாக, ஒரு சுற்று சுற்றி வந்து 270க்கு ஒரு  எக்ஸ்ரே எடுத்துக் கொடுத்தது.

ஃபில்ம் உடன், மீண்டும், டாக்டரின் தரிசனத்திற்கு க்யூ.  “நான்கு பற்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை எடுத்துவிடலாம். ஆனால், வேர்சிகிச்சை (Root Canal)  செய்துகொண்டால், பற்களைக் காப்பற்றலாம்” என அறிவுறுத்த, பற்களைத் தக்கவைத்துக் கொள்ளும் முறையைத் தேர்ந்தெடுத்தேன்.  முதலில் இரு பற்களுக்கு மட்டும், 
பின்னால் அடுத்த இரு பற்களுக்கு.

‘ரூட் கெனால்’ முறை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதானே?

அடுத்த அரை மணி நேரம், ‘அண்டா காகுஸம்.. அபு காகுஸம்’ என நான் வாயைப் பிளந்து கொண்டிருக்க, நான்கு கைகளும் பல சுத்தி,குரடு,சிரஞ்ச் போன்ற உபகரணங்கள் வாய்க்குள் சென்று வந்து கொண்டிருந்தன.  வாக்குள் தண்ணீர் பீய்ச்சியடிக்க, அதை வேறு ஒருவர் மிஷின் மூலம் உறிஞ்சி எடுக்க, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..க்வீவீக்க்  என என்னவோ சப்தம்.  

பெருமாளிடன் முழுமையாக தன்னை ஒப்புவித்துக் கொண்ட வைஷ்ணவன் போல, படுத்திருக்க, முப்பது நிமிடம் கழித்து விடுதலை கிடைத்தது.  கதை இதோடு முடியாதாம், மீண்டும் ஒரு எக்ஸ்ரே எடுத்துக் கொண்டு, ஒருவாரம் சென்று வரவேண்டுமாம். அப்பொழுது அந்த இரண்டு பற்களுக்கும் ‘மகுடம்’ (Crown) சூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்குமாம். மகுடமா? ஆமாம்.. பல்லைப்போலவே ஒரு மாஸ்க் சிதைந்த பற்களுக்கு அணிவிக்கப் படுமாம்.

இது முடிந்தபின், அடுத்த இரு பற்களுக்கு இது போன்ற உபசரணைகள். ம்ம்ம்ம்ம்ம் இன்னும் ஒரு மாதத்திற்கு எங்கும் நகர முடியாது.

நன்றாக பற்கள் இருக்கும் நபர்கள், காலையும் இரவும் பல் துலக்கி (மூலிகை பற்பசை-பொடி உத்தமம்), நாக்கு க்ளீன் செய்து, சாப்பாடிற்குபின் நன்றாக வாய் கொப்பளித்து கவனமாக உங்கள் பற்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.  உணவுவேளைகளுக்கு இடையே பேசுவதற்கு மட்டும் வாயைத் திறந்தால் போதும்.


Saturday, March 12, 2016

A night to remember - மஹாசிவராத்திரி விரதம் 2016

2016 வருடத்திய, மஹாசிவராத்திரி விரதம் (07/03/2016) ஹோசூரில் அனுசரிக்கும்படியாயிற்று.  மாசி மாத தேய் பிறை சதுர்த்தசி, அதாவது  ‘மகா சிவராத்திரி’ அன்று ஹொசூர் திமிலோகப்பட்டது என்றே சொல்லலாம்.  மக்கள் அவ்வளவு உற்சாகமாக இரவு நிகழ்ந்த அனைத்து அபிஷேக - ஆராதனைகளிலும் கலந்து கொண்டனர். அங்குள்ள ஒரு சிறுமலையில், “சந்திரசூடேஸ்வரர் சிவன் கோயிலில், இரவு நேர நான்குகால பூஜையிலும் கூட்டம் அலைமோதியது.

மற்ற அனைத்து  சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும், இது ஒரு சேர வழங்குவதால், இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டுமாம்.  சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைக் காண வேண்டுமாம்.

சிவராத்திரி என்ற சொல்லே வீடு பேறு தரும் நாள் என்றுதானே பொருள் பெறும்? இப்புன்னிய நாளில் ருத்ரம் சொல்வதும், இரவு கண்விழித்து நான்கு கால பூஜைகளில் பங்குபெறுவதும் கொடுப்பினையாகும்.
ஈஸ்வரனுக்குரிய திதி சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க மகா சிவராத்திரி  ஆகும்.

அம்பிகைக்கு சிவன் அருவுருவில், உபதேசம் செய்த புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிப்பது மிகவும் விஷேஷமானது. மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். ஈஸ்வரியின் தவத்தின் பலனாக சிவபெருமானும் சம்மதித்தார். மேலும் இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்எனவும் அருளினார்.

சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து, இறைவனை வணங்கும் பேறும் பெற்றேன். ஆனால் விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யது, வேண்டுமாம். இது ஓரளவிற்கே கைகூடியது.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் அனைத்து பாவங்களும் அவை நம்மை விட்டு நீங்குமாம். நீங்குகிறதோ இல்லையோ, இனி பாபம் செய்யாமலிருக்க சங்கற்பம் மேற்கொள்ள ஒரு சந்தர்ப்பம் தானே?
வீட்டின் அருகே ஒரு கோயில். ருத்ராட்ச அலங்காரம்.
காலை ஈஷா மையத்திலிருந்த ஒரு மெயில் எப்பொழுதும் போல வந்திருந்த்தது. வெறுமனே விழித்திருக்கும் இரவாக இல்லாமல், விழிப்புணர்வு அடையும் இரவாக மஹா சிவராத்திரியை அமைத்துக் கொள்ளுங்கள் என அறிவுறித்தியிருந்தார் ஜக்கி. மாலை முதலே ஈஷா மையத்தில், கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. இசை விற்பன்னர்கள் பலர் பல்வேறுவிதமான இசை, நடன, நாட்டிய, யோக நிகழ்ச்சிகளை இரவு முழுவதும் நடத்திக் காட்டினர். ஆனந்த அனுபவம்.
உச்சமாக, ஜக்கி அவர்கள் உங்கள் அனைவரையும் (கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்களிடம்) ஒரு 20 நிமிட நேரம் உலகை மறந்து ஈசனிடம் லயிக்கச் செய்யட்டுமா என வினவி, சில அப்பியாசங்களையும், ஜபங்களையும் சொல்லச் சொல்லி அனைவரையும் த்யான உலகிற்கே அழைத்துச் சென்றுவிட்டார். தொலைக் காட்சியில் அதனை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்ததாலும், அவரிடம் எனக்கு ஈர்ப்பு அதிகம் என்பதாலும் எனை மறந்து அவரைப் பின்பற்றிக் கொண்டிருந்தேன்.
எனது தமையனாரின் மூத்த மருமகனிடம் நான், சந்திரசூடேஸ்வரர் மலைக் கோயிலுக்கு வருவதாகச் சொல்லி யிருந்தேன். இரவு 12 மணி பூஜைக்கு எனை அழைத்துச் செல்ல விரும்பி தொலைபேசியில் அழைத்திருக்கிறார். நானோ ஜக்கியிடம் லயித்து உலகை மறந்திருந்தேன். பாவம். அவர் அழைத்துச் செல்ல நேராகவே வந்துவிட்டார். சங்கடமாகப் போய்விட்டது! என்ன செய்ய?
எனினும் அன்று அனைத்து இரவுப் பூஜைகளிலும், அந்த ஊரின் வெவ்வேறு சிவன் கோயில்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கச் செய்ததற்காக ஈசனுக்கு ‘ஸ்பெஷல்’ நமஸ்காரம்.Friday, March 4, 2016

மலையரசி மூணாறு

என்னதான் மலைப்பூட்டும் கட்டிடங்களை மனிதன்  கட்டிக் கொண்டாலும், இயற்கையின் சிறுதுளி அழகுக்குமுன் மனிதனின் சாதனை கொஞ்சம் நாணத்தான் வேண்டி யிருக்கிறது.   குறிப்பாக மலைகள் !! இவை ஒவ்வொன்றும், தனக்கென பிரத்யேகமான அழகைக் கொண்டிருக்கிறது.

ஆயிரக்கணக்கான அடிகளுக்கு சரேலென உயரும் செங்குத்துப் பாறைகள்,  நீண்ட பள்ளத்தாக்குகள், சன்னமாக வெள்ளிக் கொலுசுகளாய் எங்கிருந்தோ வந்து  சொட்டும் அருவிகள், ஆர்பரித்து வீழும் அருவிகள்... .அடாடா மலைகள்தான் எவ்வளவு ரம்மியம். ஆச்சர்யமூட்டும் ரம்மியம். மலைக்க வைக்கும் ரம்மியம். தன்னைத் தேடி வந்தவர்களுக்கு மலைகள் வழங்கும் பேரழகு தானே தானே அவற்றின் கொடை?

இந்த வாரம் இரு தினங்கள்  முணாறு சென்றுவரும் வாய்ப்பு கிடைத்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் அள்ள அள்ள குறையாத அழகைக் கொண்டிருக்கும் அட்சய பாத்திரம். மலைகளின் மடியில் இளைப்பாறும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவதே பேரின்பம். அதனால்தான் பெரும் அறிஞர்களும் துறவிகளும் மலைகளை நாடிச் சென்றார்களோ என்னவோ? வெறுமே அழகைப் பருக வேண்டுமா? எடுத்துக்கொள்.  ஆன்ம விசாரணை வேண்டுமா? அதுவும் பெற்றுக் கொள்.

பிருமாண்டமாய், கற்பனைக்கும் எட்டாத வடிவங்களில்,  அடர்ந்த காடுகளையும் அருவிகளையும் உள்ளடக்கிக் கொண்டு, ஓசையின்றி வீற்றிருக்கும் முகடுகளுக்கு நிகர் உண்டா? எனக்கு முன்னால் உனது கர்வம், அகங்காரம், சாதனை இவை யாவும் எம்மாத்திரம் என மௌனமாக மனிதனைப் பார்த்து நகையாடுவது போலிருந்தது மூணாறு அனுபவம்.  எத்துனை முறை சென்றாலும் சலிக்காத மலைகள்.

கவணிப்போருக்கு மலைகள் மௌனமாக ஏதோ சொல்வது புரியும். இலைகளின் ஊடே சூரியக் கிரணங்கள் ஊடுறுவி விழுவது போல அவற்றின் செய்தி நம்மை ஊடுருவிச் செல்கிறது. ஆன்ம சுத்தம் கிடைக்கப் பெறுகிறது. இயற்கையின் இதயத்தை அருகில் தரிசிப்பபது போன்ற தொரு அனுபவம்.

பனி போர்த்திய சிகரங்களும், பசுமைதாங்கிய குன்றுகளும், அதன் மடியில் உறங்கும் மூங்கிற் புதர்களும், சலசலக்கும் ஓடைகளும், சிற்றாறுகளும், சற்றே உள் நோக்கிச் சென்றால் அதன் அச்சுறுத்தும் அமைதியும், மேகங்கள் கூட காதல் கொண்டு முகடுகளை விட்டு விலகிட மனமின்றி அதன் உச்சிகளை ஈரத்தோடு சுற்றிவரும்  ஈர்ப்பு என, இன்னும் எத்தனைதான் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது மலைகள்?

ஆனாலும், மனிதன் தன்னால் ஆனமட்டும் மலைகளை சிதைக்க, விடாமல் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறான்.  மரங்களை வெட்டி வீழ்த்தி, மலைமகளை நிர்வாணப் படுத்திப் பார்ப்பதில்தான்  நமக்கு எவ்வளவு ஆர்வம்?  மலைகள் எங்கும் ‘கேக் வெட்டி வைத்திருப்பது போல டீ எஸ்டேட்கள். எஸ்டேட்களின் ஊடே, இங்கொன்றும் அங்கொன்றுமாக மரங்கள்.  மலைகள் எங்கும் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த ‘டீ எஸ்ட்டேட்கள்’ வரமா சாபமா புரியவில்லை.

சுற்றுவட்டார ஈரத்தை உறிஞ்சித் தள்ளும் யூகலிப்டஸ் மரங்களை ரசிக்க இயலவில்லை.

எல்லா இடங்களையும் போல, இங்கும் ‘வ்யூ பாயிண்கள்’ இங்கும் இருக்கின்றன. சரேலென  ஐந்தாயிரம் அடி சரிந்து, அடிவாரத்தில் இருக்கும் ஊர்களையும் அணைக்கட்டுகளையும் காண முடிகிறது. ஆனால் அந்த ‘வ்யூபாயிண்ட்’ செல்லும்  நூறு மீட்டர் தூரத்திற்குள், மலைகளின் அழகை மறைத்து எத்தனை கடைகள்? அந்த  சிறு தூரத்திற்குள் எவ்வளவு பஜ்ஜி,போண்டா, நிலக்கடலை, தொப்பி, சாக்ஸ், ஐஸ்க்ரீம், விளையாட்டு பொருட்கள், வளையல்கள், தோடு, ஸ்வெட்டர், இளநீர், ஜூஸ், டீ,காப்பி, பழக் கடைகள்?


இதை யாராவது ஒழுங்கு படுத்த மாட்டார்களா? எக்கோபாயிண்ட் என்று ஒரு இடம். கடைகளைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்றால்தான் எதுவும் தெரியும். அத்தனை கடைகள்.  சில படங்கள்:  

" லக்கம் " அருவி 

 ஒரு  தோட்டம் 

சிற்றனை 

எங்கே பார்த்தாலும்  தேயிலைத் தோட்டங்கள் 

தேக்கடி 

தேக்கடி காய்ந்து கிடக்கிறது.