Wednesday, March 30, 2016

ஸ்ரீமுஷ்ணம் பூவராகஸ்வாமி


சில நாட்கள் முன்பாக கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள பூவராகஸ்வாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்கனவே அக்கோயிலுக்குச் சென்றிருந்தாலும், கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் சென்றுவர விருப்பம் ஏற்பட, இன்று (30/03/16) அக்கோயிலுக்குச் சென்றுவரும் வாய்ப்பு கிட்டியது. 

ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த கோயில் இது.  ஸ்ரீமன் நாராயணன், பூமியை மீட்டெடுப்பதற்காக, வராக அவதாரம் எடுத்து, இத்தலத்தை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். கோயிலின் பின்புறம் அவரது வியர்வையால் உண்டான ‘நித்ய புஷ்கரணி’ என்ற குளமும்,  கண்களால் உண்டாக்கிய ஒரு அரசமரமும் இருக்கிறது.

பெருமாளின் பத்து அவதாரங்களில் சிறப்பு வாய்ந்த மூன்றாவது அவதாரம், வராக அவதாரம். பூமியை மீட்டெடுத்த உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி காட்சியளிக்கிறார்.

வடபுறத்தில் உள்ள கோபுரத்தின் பக்கத்தில் குழந்தை அம்மன் ஆலயம் உள்ளது. இங்கே அம்புஜவல்லித் தாயாரின் தோழியர்களுக்கும் சன்னதிகள் உள்ளன. 

அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராகமூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் காட்சி தருகின்றார். உடன் ஆதி வராக மூர்த்தியும் கண்ணனும் எழுந்தருளியுள்ளார். விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது. இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆனவர். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது.

ஸ்ரீ வராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெறலாம் எனக் கூறுகின்றனர். குரு, இராகு, கேது தோஷம் உள்ளவர்களும், தோஷம் நீங்க இங்கு வருகிறார்கள்.  

புதிய வாகனங்கள் வாங்குவோர்,  இத்தலத்தில் தங்கள் வாகனங்களுக்கு இங்கு அர்ச்சனை செய்கிறார்கள்.  விபத்துக்குள்ளான வாகனங்களை சரி செய்த பின்பு, இங்கு வந்து பூவராக பெருமாளை வழிபடுகின்றனர். இந்தப் பழக்கம் எப்படி – ஏன் ஏற்பட்டது  என விளங்கவில்லை.

அரசமத்தைச் சுற்றி, மணபம் எழுப்பியுள்ளனர். ஒரு காலத்தில் இந்த அரசமரம், பூவராகஸ்வாமி ரூபத்தில் இருந்ததாகவும், 1942 புயற்காற்றில் சேதமுற்றதாகவும் சொல்கிறார்கள். மரத்தின் அருகே (கிட்டத்தட்ட  மரத்தின் உள்ளேயே) பூவராக ஸ்வாமிக்கும், லட்சுமி நரசிம்மருக்கும் சன்னதிகள் இருக்கின்றன.

ராஜகோபுரம் பிரமிப்பூட்டுகிறது. என்ன ஒரு கம்பீரம்! உள்ளே ரசிக்கத் தக்க பல சிற்ப வேலைப்பாடுகள்! என்ன ஒரு அழகான கோயில்!!

இங்கே உள்ள நித்யபுஷ்கரணி குளத்தின் கரை அருகே அமைந்துள்ள ஒருவீட்டில்தான் ஸ்ரீ ராகவேந்திரர்  வசித்துள்ளார். அவர் புழங்கிய அந்தவீடு இன்னமும் இருக்கிறது.  அங்கே ஒரு சிறிய பிருந்தாவனம் அமைத்துள்ளனர். பிருந்தாவனம் அமைக்கப்பட்ட கல், ஸ்ரீ ராமன் அமர்ந்து தவம் செய்தது  என்றார் அங்கே பூஜை செய்பவர்.

குளத்தின் கரையருகே ஒரு சிவன் கோயில் உள்ளது.  இறைவன். நித்தீஸ்வரர். ஏ.எஸ்.ஐ கட்டுப்பாட்டில் இருக்கிறது. மிகப் பழமையான கோயில் என்பதை, அதன் சுற்றுச் சுவர்களே சொல்கின்றன. காலை 11 மணிவரை காத்திருந்தும், மூலவர் சன்னதியைத் திறக்க யாரும் இல்லை.
செல்லும் வழியில், ஸ்ரீ ராகவேந்திரரின் ஜன்மபூமியான புவனகிரியில் அமைந்துள்ள பிருந்தாவனத்திற்கும் சென்று வந்தேன்.

சில புகைப்படங்கள்.
கோபுரம் 
நுழை வாயிலில் சிற்ப வேலைப்பாடுகள் 

நுழை வாயிலில் சிற்ப வேலைப்பாடுகள் 

கோபுரத்தின் முதல் நிலையிலிருந்து ஸ்ரீ வேணுகோபாலன் 


இந்த சிற்பம் என்ன சொல்கிறது?

குழந்தையம்மன் குளத்தின் அருகே உள்ள ராகவேந்திரர் வாழ்ந்த வீட்டின் உள்ளே உள்ள பிருந்தாவனம்.

இதுதான் ( முதலில் ஓட்டு வீடு) ராகவேந்திரர் வாழ்ந்த வீடு 

பூவராகச்வாமி ( இந்தப் படம் மட்டும் நெட் உதவி)


திரும்பி ஊர்வரும்போது, சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற திருவதிகை சரநாராயணப்பெருமாளை தரிசித்துவிட்டு (இந்தக் கோயிலில்தான் சயன லட்சுமி நரசிம்மர் இருக்கிறார்) வந்தோம். இது நாள் வரை இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லாதிருந்தது. இப்போது புதிதாகக் கட்டியிருக்கிறார்கள். இப்பகுதியில் பலரின் விருப்பக் கோயில்களில் ஒன்று.  

சார நாராயணன் கோவில் - புதிய கோபுரம் 

உள்ளே
 
ஸ்ரீமுஷ்ணம் குளத்தின் கரையில் உள்ள சிவன் கோயில்.2 comments: