Tuesday, March 17, 2015

கோட்டக்கல் வைத்தியம் – 2


சென்ற கட்டுரையில்,  கோட்டக்கல் ஊரைப்பற்றி க் குறிப்பிட்டுவிட்டு, வைத்திய முறைகளை பிறகு எழுதுவதாகச் சொல்லியிருந்தேன்.

அல்லோபதி (ஆங்கில மருத்துவம்), பெரும்பாலும், எங்கு நோய் இருக்கிறதோ, அந்த பகுதியை நோண்டும். கழுத்து வலி என்றால், கழுத்தை ஸ்கேன் செய். தோலில் நோய் என்றால் தோலுக்கான மருந்து. ஆனால் ஆயுர்வேதா அப்படி அல்ல! ஜீரண மண்டலத்தில் கோளாறு இருந்தால் தோல்வியாதி வரும் என்கிறது.

ஆயுர்வேதத்தின் அடிப்படை என்னவெனில், நோய்கள் அனைத்தும், வாத-பித்த-கப தோஷங்களினால் வருவதுதான். இவை கூடினாலோ, குறைந்தாலோ அதன் தன்மைக்கு ஏற்ப வியாதிகள் வரும். பஞ்ச பூதங்கள் யாவும் உடலில், மூன்று தோஷங்கள், ஏழு தாதுக்கள், மூன்று மலங்கள் என வெளிப்படுகின்றன  எனச் சொல்லுகிறது.

கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலை என்பது, ஆயுர்வேதத்தின் அடிப்படையில் இயங்கும் மருத்துவ மணை. 1902 –ஆம் ஆண்டு திரு. பி.எஸ் வாரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. நூறு ஆண்டுகளையும் தாண்டி நல்ல முறையில் இயங்கிவருகிறது இம்மருத்துவ மணைஇங்கே, நூற்று அறுபதுக்கும் மேற்பட்ட அறைகள் இருந்தாலும், 2000 பேர் பணி புரிந்தாலும், ‘அப்பாயின்மென்ட்’ பெறவே மாதங்கள் ஆகும். வெளி நாட்டினர் கனிசமாக வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து. வட நாட்டவரும் அதிகம். தமிழர்கள் மிகக் குறைந்த அளவில் வருகிறார்கள்.

இந்த மருத்துவ மனைக்கென தனியாக மருந்து ஃபேக்டரியே இருக்கிறது. 500-க்கும் மேற்பட்ட மருந்துகளை இவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள். தேவையான மூலிகைகளை, அவர்களுக்கு உரிமையான பல மூலிகைப் பண்ணைகளில் பயிர் செய்து கொள்கிறார்கள். தரத்தினை உத்தரவாதப் படுத்திக் கொள்கிறார்கள். தேவைப்படின், வெளிநாட்டிலிருந்தும் மூலிகைகளை இறக்குமதி செய்து கொள்கிறார்கள்.

புற நோயாளிகள், உள் நோயாளிகள் என இருபிரிவினருக்கும் வைத்தியம் உண்டு.

புற நோயாளிகளுக்கு, எல்லாவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளித்த போதிலும், உள் நோயாளிகளாக வருபவர்களில், கை கால் இயக்கம் குறைந்தவர்கள் அல்லது இயக்கம் இல்லாதவர்கள், பார்கின்ஸன் டிசீஸினால் பாதிக்கப்பட்டோர், இடுப்புவலி – கழுத்துவலி மிகுந்தவர்கள், பக்கவாத நோயால் இயக்கம் இழந்தவர்கள் ஆகியோர்தான் அதிகம்.

மிச்ச விவரங்களை விக்கிபீடியாவிலோ அல்லது அவர்களது வலைப் பக்கத்திலோ படித்துக் கொள்ளலாம்.

இங்கே, உடலின் வெளிப்புற சிகிச்சையாக பிழிச்சல், சிரோதாரா, கிழி, நஸ்யம், நவரகிழி போன்ற ஏராள வகை முறைகளும், உள்ளுக்கு சாப்பிட பல் வேறு வகைப்பட்ட மருந்துகளும் தரப்படுகின்றன. இதுதவிர, ஃபிஸியோதெரப்பி, யோகா வகுப்புகளும் உண்டு.

நான் இங்கு உள்நோயாளியாக வந்து சேர்ந்து கொண்டதன் நோக்கம், எனது வெகுவருட சினேகிதர்களான கழுத்துவலி, முதுகுவலி ஆகியவற்றிற்கும், திடீர்-திடீர் மயக்கம் மற்றும் கை-கால் விரல்களில் மாளாத எரிச்சல் ஆகியவற்றிற்குமாகத்தான்.

நான் மேற்கொண்ட சிகிச்சைகளைப் பார்ப்போம்.

முதல் சிகிச்சை கழுத்து வலிக்காக (இது மற்ற நோய்களையும் குணப் படுத்தும்):

சிரோ தாரா.

சிரோ எனில் தலை. தாரா எனில் ஒழுக்கு.

வட நாட்டில், சிவலிங்கத்தில் மேலே  ஒரு பாத்திரத்தைக் கட்டி, அதிலிருந்து, பாலோ அல்லது நீரோ லிங்கத்தின் மேல், சதா விழும்படி செய்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள் தானே? அதே போல, நோயாளியை மல்லாக்க படுக்க வைத்து, நெற்றிக்கு நேர் மேலாக ஒரு கலயத்தைக் கட்டி, அதில் மூலிகை எண்ணெய் ஒன்றைக் கொட்டி, ஒரே சீராக எண்ணெய் நெற்றியில் விழும்படி செய்கிறார்கள். ஒருவர் கலயத்தில் எண்ணெய் தீரத் தீர கொட்டிக் கொண்டே இருக்கிறார். மற்றொருவர் நெற்றியின் கிழக்காகவும் மேற்காகவும் எண்ணெய் படும்படி கலயத்தை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். நோயைப் பொறுத்து எண்ணெய் மாறுபடும். 

இந்த சிகிச்சை, அரை மணி முதல் முக்கால் மணி வரை செய்யப் படுகிறது. இது செர்வைகல் ஸ்பாண்டிலெடிஸுக்கு ஏற்ற மருத்துவம்.
நெற்றியில் எண்ணெய் கொட்டினால், கழுத்து வலி எப்படித் தீரும் என்ற என் பாமரத்தனமான சந்தேகத்தைக் கேட்டே விட்டேன்.

அவர்கள் சிரித்துக் கொண்டே, ‘உடலில், பித்த-வாத-கப தோஷங்களால் ஏற்பட்ட கழிவுகளை, எங்களது இந்த எண்ணெய் சிகிச்சை, ஜீரண மண்டலத்திற்கு கடத்திவிடும். அந்த கழிவுகள், இயற்கையான முறையிலோ அல்லது எனீமா மூலமாகவோ வெளியேறிவிடும். நச்சு வெளியேறிவிட்டால் நோய் தானாக குணமாகும்” என்றனர்.

இந்த சிகிச்சை 7 நாட்கள் நடை பெற்றது.

பிழிச்சல்:
                                                                                                  
சிரோ தாரா நடக்கும் பொழுதே, உடல் முழுவதும் சூடான எண்ணெய்

ஒன்றினை, கையில் ஒரு சிறு துணியை வைத்துக் கொண்டு இரண்டு நபர்கள் உடலின் முன்புறமும் பின்புறமும் தேய்த்து விடுகின்றனர். (இந்த எண்ணையும் வியாதிக்குத்  தகுந்த மாதிரி  தேர்ந்தெடுக்கப்படும்) இந்த பிழிச்சல் சிகிச்சை 

ஒருமணி நேரம் வரை நீடிக்கும். இந்த சிகிச்சை முறை ஏழு நாட்கள் நடந்தது.

கிழி

கிழி என்றால் ‘பொட்டலம்’ அல்லது முடிச்சு என்று வைத்துக் கொள்ளுங்கள் (பொற்கிழி கேள்விப்பட்டிருக்கிறீகளா?)

உடல் முழுவதும் ஒரு சூடான மூலிகை எண்ணை ஒன்றினைத் தடவிவிட்டு, பின் மூலிகை இலைகளை பொட்டலமாக துணி முடிச்சில் கட்டி, இந்த மூலிகைக் கிழியையும் சூடாக எண்ணையில் வாட்டி-வாட்டி, உடலின் முன்னும் பின்னும் மஸாஜ் செய்து கொண்டே இருக்கிறார்கள். இதுவும் ஒரு மணி நேரம் நீடிக்கிறது. இது நடக்கும் பொழுதே, தலையில் அரேபிய ஷேக் மாதிரி ஒரு துணியைக் கட்டி, அதைச் சுற்றி, டையிங் யூனிட்டில் ரிங் அடிப்பது போல, துணியால் ஒரு கட்டு கட்டி, ஒரு எண்ணையை கொட்டி தடவிவிடுகிறார்கள். உடலில் செய்யப்படும் ‘இலைக்கிழி’ மஸாஜ் ஒருமணி நேரம் முடியும்வரை, இந்த அரபு ஷேக் வேஷமும் இருக்கும்.

இந்த சிகிச்சை 14 நாட்கள் நடந்தது.

நஸ்யம்:

இதில் பல வகை உண்டு. இதன் பலன் அபாரம். இதனால் தீரும் வியாதிகளின் பட்டியலைக் கேட்டால் தலை சுற்றும். அவ்வளவு தீவீரமான முறை இது. அது இருக்கட்டும்.

எனக்கு பரிந்துரைக்கப்பட்ட நஸ்யத்தின் படி, முகத்தை, நல்ல சூடான வென்னீரில் முக்கி எடுத்த துண்டால் பலமுறை துடைத்தபின் (உடல் சூடாக இருக்கும் பொழுது தான் நஸ்யம் மேற்கொள்ள வேண்டும்), ஒவ்வொரு மூக்குத் துவாரத்தினுள்ளும், எண்ணெய் அல்லது நெய்யின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, மூலிகை கலந்த திரவத்தினை சில துளிகள் விடுவது.

இந்த முறை ஏழு நாள் நடந்தது.

சினேகவஸ்தி-கஷாய வஸ்தி:

முன்பு சொல்லியிருந்தேன் அல்லவா? உடலில் டி-டாக்ஸ் செய்யப்பட்ட கழுவுகள் யாவும் ஜீரண மண்டலத்திற்கு அனுப்பப்படும் என்று. அவ்விதம் அனுப்பப்பட்ட கழிவுகளை வெளியேற்ற செய்யப்படும் ‘எனிமா’ வுக்குத் தான் சினேகவஸ்தி மற்றும் கஷாய வஸ்தி என்று பெயர்.

எண்ணெய் அல்லது நெய்யினை அடிப்படையாகக் கொண்ட எனிமாவுக்கு சினேகவஸ்தி என்றும், மூலிகைக் கஷாயத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப் படுவது கஷாய வஸ்தி என்றும் பெயர் பெறும். சுருக்கமாகச் சொன்னால், பெருங்குடல் மற்றும் மற்றும் மலக்குடலை சுத்திகரிக்கின்றனர்.

எனக்கு சினேக வஸ்தி நான்கு நாட்களும், கஷாய வஸ்தி மூன்று நாட்களும் செய்யப்பட்டன.

பிரஷ்டோவ(ர்)த்தி:

ஏதோ ஊதுவர்த்தி வியாபாரம் போல இருக்கிறதல்லவா?
அந்த காலத்தில், அப்பளத்திற்கு மாவு பிசைந்திருப்பதைப் பார்த்திருக் கிறீர்களா? அதே

அரைக்கிலோ உளத்தமாவை பிசைகிறார்கள்.

பிசைந்த மாவை (வடை செய்யும் ரெசிபி என எண்ணிவிடாதீர்கள்), மண்ணுளிப் பாம்பு கனத்திற்கு உருட்டி, மண்ணுளிப்பாம்பு சுருண்டு கிடப்பது போலவே, இடுப்பிலோ, கழுத்திலோ அல்லது எங்கு வலிக்கிறதோ அங்கு, சுழற்றி வைக்கிறார்கள். இந்த உளுந்து மாவு அணைக்குள்ளாக, கையோடு கொண்டு வந்திருக்கும் ஹீட்டரில் ஒரு ஸ்பெஷல் மூலிகை எண்ணையை சூடுபடுத்தி-சூடுபடுத்தி உளுந்து அணை நிரம்பும் அளவிற்கு கொட்டுகிறார்கள்! சூடு ஆற-ஆற மீண்டும் சூடுபடுத்தி கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு கழுத்து-இடுப்பு என இரு இடங்களிலும் எண்ணெய் அணை.

தலையை கிலையை ஆட்டி வைத்தீர்களானால் எண்ணெய் அபிஷேகம் ஆகிவிடும். எச்சரிக்கை.

பேசாமல் கையை காலை ஆட்டாமல் இரு என்றாலே, அப்பொழுதான் எங்கேயாவது அரிக்கும், மரத்துப் போகும், மூக்கு நுனியில் ஈ உட்காரும். காலை ஆட்ட வேண்டும் போல இருக்கும்.

குப்புறவும் படுத்துக் கொண்டு, தலையையும் தாங்கிப் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, இடுப்பிலும் கழுத்திலும் உளுந்து அணைகளைக் கட்டி, அதில் சூடான எண்ணையையும் விட்டு, ஆட்டினாயோ தெரியும் சேதி என்று மிரட்டினால்.... ஆஹா.. என்னே பிராண சங்கடம்!

இது முக்கால் மணி நேரம் நீடிக்கும்.

நவர கிழி:

ஆஹா.. நவரத்தினங்களைக் கொண்டு ஏதோ கிழிக்கப் போகிறார்கள் என ஆசைப்பட வேண்டாம்.நவரை என்று ஒரு ஸ்பெஷல் அரிசி. அதைப் பால் மற்றும் சில மூலிகைகளில் சேர்த்து வேகவைத்து, கிட்டத்தட்ட கூழாக்கி, அதை ஒருகிழியில் போட்டு கட்டி, உடல் முழுவதும் முன்னும் பின்னுமாக நான்கு பேர்கள் தேயோ தேய் என்று தேய்க்கிறார்கள். சூடு ஆற..ஆற, ஐந்தாம் நபர், கிழிகளை பாலில் சூடு செய்து கொடுத்துக் *கொண்டே இருபார் – தேய்ப்பதற்காக! இந்த சிகிச்சை ஒரு மணி நேரம்.

கூடவே, முன்பு சொன்ன, தலையில் அரபு ஷேக் அலங்காரத்தில் எண்ணெய்க் காப்பும் உண்டு.

இந்த நவர காப்பு முடிந்ததும் வரும் பாருங்கள் ஒரு தூக்கம்.. அடாடா.. சொக்கும்!

இந்த சிகிச்சை உற்சவம் ஒரு ஐந்து நாள் அரங்கேறியது.

ஒரு வழியாக இருபத்தைந்து நாள் உற்சவம் (சிகிச்சை) முடியப்போகிறது. இந்த வார இறுதியில் கடலூர் வந்து சேர்ந்துவிடலாம் எனத் திட்டம்.

வீடு திரும்பும் போதுகட்டுசாதக் கூடைபோல மருந்துக் கூடை (follow up treatment) ஒன்று தருவார்கள். ஒரு மாதத்திற்கான மருந்து. மேலும் தேவைப்படின்ஆன்லைனில், கன்ஸல்டேஷன் பேரில், கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

அதெல்லாம் சரி.... எவ்வளவு செலவாகும் என்கிறீர்களா? அது நாள் ஒன்றுக்கு 2000-முதல் ரூ4000 வரை, நீங்கள் தங்கியிருக்கும் அறையினைப் பொறுத்து அமையும். எந்த ரூமில் தங்கினாலும் சிகிச்சையின் தரத்தில் வேறுபாடு இல்லை.

ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மருத்துவமணையின் மருத்துவ ஊழியர்கள் (Doctors as well as Para Medical Staff) அனைவரும், மிகவும் தன்மையாக, அனுசரிப்பாக, நிதானமாக, மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள்.  நான் நிர்வாக அலுவலர்களைச் செல்லவில்லை.

எல்லாம் சரிதான்.. வியாதி குணமாகிவிட்டதா என்பது தானே ஆதாரமான கேள்வி?

குணமாகும் அறிகுறிகள் தெரிந்தாலும், முழுவதும் தெரிய ஒருமாதமாவது ஆகும் என்கிறார்கள்.   நேரமும்-பணமும் செலவழித்தாகி விட்டது. நல்லதே நடக்கும் என நம்புவோம்.

(என்போன்ற சங்கோஜிகளுக்கு, மஸாஜின் பொழுது, முதல் ஒரு வாரம் மிகவும் லஜ்ஜையாக இருக்கும். என்ன செய்வது? கண்களை இருக்க மூடிக்கொள்ள வெண்டியது தான். பிறகு பழகிவிடும்.)

(புகைப்படங்கள் உதவி  நெட்.)

2 comments:

  1. விரிவான விளக்கங்கள்! நன்றி!

    ReplyDelete
  2. மிகவும் தெளிவான விளக்கமான பதிவு. தகவல்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு முற்றிலுமாக குணமாக வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete