Friday, May 29, 2015

மறு பக்கம்

நீங்கள் எனது சமீபத்திய  பயனக்கட்டுரைகளைப் படித்திருக்கக் கூடும். வயநாட்டில் இருந்த நாட்களில், லோக்கலில் ஒரே டாக்ஸி டிரைவரை (கிரீஷ் என்பவரை) அமர்த்திக் கொண்டதால் நெருக்கமாகிவிட்டார்.  

“உங்க ஊர் பரவாயில்லை.. எப்போதும் அருமையான க்ளைமேட். நல்ல காய்கறிகள். விலைவாசியும் கடுமையாக இல்லை.. கொடுத்து வைத்தவரையா நீர்... “

கொஞ்சம் வேதனையாகப் பார்த்தார். 

“என்ன ஆச்சு கிரீஷ்?”

எங்களுக்கு, மற்றொரு பக்கம் இருக்கிறது சார்... இந்த பச்சைகளைப் பார்த்து ஏமாந்து விட்டீர்கள். கேரளாவில் இந்தப் பகுதியில் ‘கேன்சர்’ வியாதி அதிகம்.. பேப்பரில் படித்ததில்லையா? கோழிக்கோடு மருத்துவ மணையில் போய்ப்பாருங்கள்.. எத்தனை பேருக்கு இந்த வியாதி எனப் புரியும்...

“ஏன் இப்படி?”

இங்கே டீத்தோட்டங்கள் அதிகம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வலிமைமிகுந்த பூச்சி கொல்லி மருந்து தெளித்தாக வேண்டும். டீ இலை களைப் பறிப்பதும் 15 நாட்களுக்கு ஒருமுறைதான். எல்லா இலைகளிலும், விஷமாக, பூச்சி மருந்து படிந்திருக்கும். இப்பூச்சி கொல்லி மருந் து,  மழையிலோ, ஸ்ப்ரிங்களரினாலோ கரையாது. பிசுக்கென பிடித்திருக்கும். இந்த பூச்சு மருந்து தெளிக்கும் போது, தொழிலாளர்கள் மாஸ்க் அணிவதில்லை... விபரமறிய ஜனங்கள். காற்றில் பூச்சி மருந்து கலந்தே இருக்கும்... புற்று நோய் வராமல் என்ன செய்யும்?

நீங்கள் சாப்பிடும் ஸ்ட்ராங்கான ‘டீ’ த்தூள் என்னவென்று தெரியுமா? அந்த பூச்சிமருந்து தெளித்த டீ இலைகளைத்தான்.

‘கழுவ மாட்டீர்கள்?”

‘இல்லை... கழுவினாலும் போகாது...”

அது மட்டுமல்ல சார்... இங்கே விளையும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், காரட், கீரை, உருளை ஆகியவற்றிற்கும் வலிமையான பூச்சி மருந்து தெளிக்கிறோம். கோஸுக்கு வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும். அப்படி தெளிக்கா விடில், விவசாயிக்கு ஒருகிலோ கோஸ் தேராது.. எல்லாம் பூச்சி அரித்து விடும்.

என் வீட்டில், உரம் பூச்சி மருந்து போடாமல் கொஞ்சம் கோஸ் வளர்க்கிறோம். சைஸ் என்ன தெரியுமா? ஒரு சின்ன ரப்பர் பந்து அளவுதான் இருக்கும். மீதி எல்லாம் பூச்சி தின்றுவிடும். நீங்கள் கடையில் வாங்கும் கோஸ்கள் இரண்டுகிலோவாவது இருக்காது?

இதே முறையில்தான், மற்ற எல்லா காய்கறிகளும் இரசாயணத்தில் ஜீவிக்கின்றன. விவசாயிக்கு போட்ட முதல் தேற வேண்டுமானால், பூச்சிமருந்தும், இரசாயண உரமும் போட்டே ஆகனும். இவையெல்லாம் எங்கே போகின்றன? நம் வயிற்றிற்குள்தான். அவை தன் வேலை யை  நோயாக  காட்டுகின்றன.

நீங்கள் எல்லாம் உடலுக்கு நல்லது என வாங்கி விழுங்கி வைக்கிறீர்களே, நேந்திரம் பழம், செவ்வாழை போன்றவை! அவைகளுக்கு நாங்கள் அள்ளி வைக்கும் இரசாயணங்களையும், பூச்சி மருந்துகளையும் பார்த்தால் என்ன சொல்வீர்கள்? அப்படி இரசாயணங்களை கொட்டாவிட்டால், ஒன்றும் விளையாது. அந்த ரசாயணங்களைத்தான் நீங்கள் தின்கிறீர்கள். நாங்களும் தின்கிறோம். வியாதி வராமல், ஆரோக்கியமா வரும்?

‘ஆர்கானிக்’ பழம் என சிலவற்றைச் சொல்கிறார்களே?

மையமாக சிரித்து வைத்தார்... என்ன பொருள் என விளங்கவில்லை.

‘சார்... அந்த காலத்திலேயும் பூச்சி இருந்ததுதான்.. ஆனால், பூச்சியை சாப்பிட வண்டுகளும், தவளைகளும், சில சிகப்பு எறுப்புகளும் வரும். இதனால் பூச்சி கட்டுக்குள் இருந்தது. 

இந்த வண்டுகளையும் தவளைகளையும் சாப்பிட பாம்பு இருக்கும். ஒரு பேலன்ஸ் இருந்தது. ஆனால், இப்போ நாம்ப, கடுமையான விஷங்களைத் தெளித்து, பூச்சிகளை மட்டுமா ஒழித்தோம்? அதைச் சாப்பிடும், தவளை,வண்டு, பிற பறவைகள் என எல்லாவற்றையும் கொன்றுவிட்டோமே? இதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம் சார்.. புலி வாலைப் பிடித்த கதைதான். மண் மலடாக்கி வெகு வருடங்களாகிவிட்டன சார். 

கிரீஷ் கேஷுவலாகச் சொல்லிவிட்டார். அவரது போச்சின் தாக்கம் என்னைவிட்டு நீங்கவில்லை. 

“நம்மாழ்வார்கள்” கிராமத்திற்கு ஒன்றாக அவதாரம் எடுத்து வந்தால் சாத்தியமாகுமா?

சில குறிப்புகளைத் தரலாம் என நினைகிறேன். இரசாயணங்கள் கலந்த காய்-கனிகளை தவிர்க்க இயலும் எனத் தோன்றவில்லை. ஆனாலும், எல்லா காய்கறிகளையும் கல்லுப்பு-மஞ்சள் தூள்’ கலந்த நீரில் அரை மணி நேரம் வைத்திருந்து பின் பலமுறை கழுவி சாப்பிடுங்கள்.

இயல்பான அளவிற்கு மேலான சைசில் விளையும் காய்-கனிகள் பக்கம் போகாதீர்கள். ஒரு பப்பாளி, பூசணி சைசில் இருந்தால் விலகுங்கள். விதையில்லாத பழங்கள் வேண்டாம். விதையில்லா  பப்பாளி, விதையில்லா திராட்சை போன்றவை. 





இரண்டு அடிக்கு இருக்கும் நேந்திரம் பழம் வேண்டாம். பூவன் போதும். ஒரு முழம் இருக்கும் பாகற்காய், சட்டி போல இருக்கும் கத்தரி, வெகு நீளமான வெண்டை எல்லாமே அபாயம் போல் இருக்கிறது. வெள்ளரியைக்கூட, கழுவி , பின்  தோல் சீவிச் சாப்பிடுவது நல்லது. கூடுமானவரை கோஸ், காலிஃப்ளவர், குடை மிளகாய் பக்கம் போகாமல் இருங்கள். இவற்றில் பூச்சி கொல்லிகளின் தாக்கம் அதிகம். பிறகென்ன செய்வது? கூடுமானவரை முயற்சிக்கலாம் அவ்வளவே!

மெழுகு தோய்த்த ஆப்பிளில்தான் சத்து என்றில்லை.. நம் ஊர் நெல்லிக்காயிலும், கொய்யாவிலும், பூவனிலும் நிகரான சத்து உண்டு. 

தேங்காய் கூடாது, நெய் கூடாது என்பது பொய்ப்பிரச்சாரம். உணவில் பயமின்றிச் சேர்த்துக் கொள்ளலாம். 

பாலின் குணம் வேறு-மோரின் குணம் வேறு-நெய்யின் குணம் வேறு. ஆயுர்வேதாவில் பல மருந்துகள் நெய்யின் அடிப்படையில் ஆனவை.

வெள்ளைச் சர்க்கரை மகா கெடுதி தான். ஆனால் அதற்கு மாற்றாக இருக்கும் வெல்லத்தில் சேர்க்கும் இரசாயணங்களுக்கு ஏதேனும் ‘செக்’ உண்டா? அந்த காலத்தில், வெல்லத்தை உடைத்து வாயில் போட்டால், பாகு போல இருக்கும், இப்போ வாயில் போட்டால் நாக்கு உரிந்துவிடும் போலிருக்கிறது!  அவ்வளவு ரசாயணம்.

ஆர்கானிக் என்ற பெயரைச் சொன்னால் விற்றுவிடுகிறது என்பதால் அதிலும் கலப்படம் வரும் அபாயம் இருக்கிறது. வியாபாரிகளுக்கு வேண்டியது பணம் தானே? எச்சரிக்கை..

Thursday, May 28, 2015

கர்நாடகத்தில் ஒரு தகதகக்கும் தங்கக் கோவில்

மடிக்கராவிலிருந்து (குடகுப் பகுதி)  24 கி.மீ தொலைவில் ஒரு பிரமாதமான புத்தர் கோவில் (விஹாரம்) உள்ளது.  இதை 'தங்க கோயில்'  என்கிறார்கள். உண்மைதான்.  இங்குள்ள பிரமிப்பூட்டும் சிலைகள் யாவும் செப்பால் செய்யப்பட்டு, தங்க முலாம பூசப்பட்டவை.  

கீழே உள்ள  படங்களைப் பார்த்தால் புரியும், எவ்வளவு பிரமாண்டமான கட்டிடங்கள், சிலைகள் என.   
இதைப்  புத்த விஹாரம் என்பதைவிட நேபாளிய புத்த மதத்தைச் சார்ந்தவர்களின்  குடியிருப்பு என்று சொல்வதே தகும்.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் இருக்கின்றனர். காசி "சாரநாத்தில்" கூட இவ்வளவு பிக்குகள் இல்லை. இங்கே  அவ்வளவு பேர் இருக்கின்றனர்.  நேபாள மக்கள்  10,000 பேருக்கு மேல் இருக்கிறார்களாம்.   இவர்கள் யாவரும் திபெத்திலிருந்து அகதிகளாக வெளியேறி, இந்தயாவில், 1961 வாக்கில்,   அடைக்கலம் பெற்றவர்கள்.

இந்த விஹார் அமைந்துள்ள இடத்தின் பெயர் "பைலகுப்பே". என்ன,  ஊரின் பெயரே 'கடுமுடுக்' என இருக்கிறதா?   பக்கத்தில் இருக்கும் பெரிய ஊர் குஷால் நகர்.    

இங்குள்ளவர்களின் பெயர்களும் அவர்களின் வரலாறும் என்ன? எப்படி இந்த இடத்தை தேர்ந்தெடுத்தீர்கள் ? இவ்வளவு பிக்குகள் சாப்பிடுவதற்கு வருமானம் என்ன? வேலை ஏதும் செய்கிறீகளா?  அரசு எந்த வகையில் ஆதரவு கொடுக்கிறது? நீங்கள் கொண்டாடும் "த்ருப்வாங் பத்மா நோர்பு ரின்போச்சே" என்பவர் யார்?  இந்த கட்டிடத்தை "ZangDog Palr" என்கிறீர்களே அதன் பொருள் என்ன?  வாசலில் "நம்ற்றோலிங்க் மோனார்ச்சி" என போட்டிருக்கிறீகளே ? அது என்ன?,  என ஒரு பிக்குவைப் பார்த்து வினவப்போய், அவர் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டு, என்னை தரதர வென இழுத்துப்போய், ஒரு நீலக்கலரில் ஒரு புத்தகத்தைப் கொடுத்துவிட்டு ( நூறு ரூபாய் வாங்கிக் கொண்டுதான்) படித்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு அகன்றுவிட்டார். புத்தகத்தில்  உள்ள பெயர்களைப் படித்தாலே பற்கள் சுளுக்கிக் கொள்ளும் போலிருக்கிறது. ஒன்றும் புரியவில்லை. மேலே சொன்ன பெயர்கள் நினைவில் கொள்ளும்படியாகவா இருக்கிறது?   நிதானமாக பலமுறை படித்துப் பார்க்கணும். ஒரு டுரிஸ்ட் என்ற வைகையில் நான் சொன்ன தகவால் போதுமானது. 

இங்கே உள்ள கல்லூரியில் புத்தமதத் தத்துவங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.  Most notable among them are the large educational monastic institution Sera, the smaller Tashilunpo monastery (both in the Gelukpa tradition) and Namdroling monastery (in the Nyingma tradition). The spectacular Golden Temple which is also a major tourist spot in the area.

 உள்ளே  நுழைந்தாலே, ஏதோ வேறு ஒரு நாட்டிற்குள் நுழைந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. இந்த இடத்தின் முக்கியமான  அட்ராக்ஷனே தங்கக் கோயில்தான்.    புத்தர் சிலைகள் இருக்கின்ற்ன. பத்ம சம்பவா, புத்தர் மற்றும் அமிடயாஸ் அவர்களின் உயர உயராமான  சிலைகள் இருக்கின்றன.  யாவும் அறுபது அடி உயரம் கொண்டவை. சுவர்கள் யாவற்றிலும் நுணுக்கமான ஓவியங்கள். வண்ணமயமான புத்தர்கள், தேவதைகள், அரக்கர்கள் என அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.  ஒரு நாள் முழுவதும் இருந்தால்தான் ரசிக்க  முடியும் .  சுவர்களிலும்   தூண்களிலும்  கூட புத்த தத்துவங்கள் , 
ஓவியங்களாக விவரிக்கப் பட்டுள்ளன.


 மிக அமைதியான, கம்பீரமான மிகப்பெரிய அரங்கங்களைக் கொண்ட  இடம்.  கோயிலைச் சுற்றிலும் பசுமையான தோட்டங்கள் அமைத்துள்ளனர்.  என்ன? நம்மவர்கள் கோயிலின் அமைதியைக் கெடுத்து போடும் கூச்சல் எரிச்சலூட்டுகிறது. 


விஹாரின் உள்ளே புகைப்படம் தாராளமாக எடுக்கலாம். நுழைவுக் கட்டணமோ புகைப்படம் எடுக்க கட்டணமோ இல்லை.  Sera Je Monastery -கள் தங்களது கலாச்சாரத்தை முழுமையாக இங்கே காப்பாற்றி வருகின்றனர். திபெத்தில் உள்ள சாரா பல்கலைக்கழகத்தின் ரிப்ளிகாவாக இங்கே கல்லூரி அமைத்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டவர்கள் பயிலுகின்றனர்.  கோயிலில் அவர்களது பூஜைப்பொருட்கள், புத்தகங்கள் ,கைவினைப் பொருட்கள், நகைகள், வர்த்திகள் , புக்லெட்டுகள்  ஆகியவற்றை விற்பனைக்கு வைத்திருக் கின்றனர். மடிக்கரா டூரில் 'எனக்கு '  மிகப்பிடித்த மான இடம் இது.  இனி புகைபடங்கள் .

வெளித்தோற்றம்/

மெயின் கோவில் 


புத்தர் சிலை 60 அடி உயரம் - முன்புறம் பிக்குகளின் வழிபாட்டு இடம். 

கூறையில் அலங்காரம் 


மாறும் ஒரு கோவில் 

நுழைவு வாயில் 



சுவேரெங்கும் ஓவியங்கள் 


தூண்களில் கூட அலங்காரம் 


'சைடு' தோற்றம்.



ஹி ..ஹி ..

பிக்குகள் 



Wednesday, May 27, 2015

நிசர்கதாமா பார்க் - கந்தம்பாரா அருவி - அப்பி ( Abbi) அருவி

நிசர்க்கதாம் பார்க்


கர்னாடகாவில், குஷால் நகர்  என்ற இடத்தில், காவிரி ஆறு, சட்டெனெ இரண்டாகப் பிரிந்து,  பின் இணைகிறது. நடுவில் ஒரு 10 ஏக்கர் அளவில் ஒரு சிறிய தீவு உண்டாகி இருக்கிறது. அத்தீவை மரம், செடி-கொடிகள் வளர்த்து, சிறுவர்களுக்காக ரோப் சவாரி, யாணை சவாரி, படகு சவாரி ஆகியவற்றைச் செய்து, ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றி இருக்கிறார்கள். குழந்தைகளும், காதலர்களும் ரசிக்கும் இடம். "காவேரி நிசர்க தாமா" என்று பெயர் பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கு என்ன பொருள் என வினவப்போய்  விரோதமாகப் பார்த்தனர்.  கன்னடம் அறிந்தவர்கள் சொல்லுங்கள். 







அப்பி (Abbi) நீர்வீழ்ச்சி…

மடிகராவிற்கருகில் ஒரு அழகான நீர்வீழ்ச்சி இருக்கிறது. வருடம் முழுவதும் அனேகமான நீர் விழும் அருவி. மே மாதத்திய வெப்பத்தில் கூட கொஞ்சம் நீர் இருந்தது.  அதுவே மிகவும் அழகாக இருக்கிறது. அருவியை எதிரே இருக்கும் தொங்கு பாலத்திலிருந்து பார்க்க வேண்டும்.  நீர்த்திவலைகள் முகத்தில் பன்னீர் தெளித்து வரவேற்கும். அருவியை அப்ரோச் செய்யும் குறுகலான பாதைகூட சோலைவனமாக இருக்கிறது. அதிக நீர் இருக்கும் சமயத்தில் பார்த்தால், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ரசிக்கக் கூடிய இடம்.








கந்தம்பாரா அருவி:

வய நாட்டில், கண்ணை கொள்ளை கொள்ளூம்  மற்றொரு அருவி, கந்தம்பாரா அருவி. திருசூர் அருகே இருக்கும் அதிரப்பள்ளி அருவி போல இருக்கிறது. ஆனால், இங்கே அவ்வளவு கூட்டம் இல்லை. ஏனெனில் இங்கும் ஒருகிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டியிருக்கிறது. டிரெக்கிங்க் இல்லாமல் வயனாடு இல்லை. ஆனால் உள்ளே சென்றுவிட்டால் பிரமாதம். காலை முதல் மாலைவரை, அருவியையும், அது ஏற்படுத்தும் மதுரமான ஓசையையும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பிரமாதம் போங்கள்.

செல்ல்ம் வழியே அழகு

மேலிருந்து

கந்தம்பாரா அருவி




மடிகரா - பாகண்டேஸ்வரர் கோயில் மற்றும் ஹாரங்கி அணை.

கூர்க் பகுதியில், தலைக்காவேரிக்கு முன்னால், பாக மண்டலா என்ற ஊரில் ஒரு அழகான கோயில் இருக்கிறது. இறைவன்: பாகண்டேஸ்வரர் (சிவன்) .  இறைவி: பாகண்டேஸ்வரி. இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். கோயில் பிரகாரங்களும், மூலவர் சன்னதிகளும் கேரள ஸ்டைலில் இருக்கிறது. பார்ப்பதற்கு புராதன கோயில் போலத் தெரிகிறது. 

ஸ்தல புராண புத்தகம் விற்பனைக்கு இல்லாதபடியால், தெரியாத்தனமாய், குருக்களிடம் கோயிலின் வரலாறு கேட்கப்போய், அரைமணி நேரம் கன்னடத்தில் பிளந்து தள்ளினார். என்னுடைய Broken கன்னடத்தினால் அவரது Chaste கன்னடத்தை விளங்கிக் கொள்ள இயலவில்லை. ஒன்றும் புரியாமல், மண்டையை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. எதோ ஒரு அசுரனை அழிப்பதற்காக, சிவபெருமான் எழுந்தருளிய இடம் என்பது போல தோராயமாகப் புரிந்தது.


கோயிலுக்கு முன்னால் திரிவேணி சங்கமம் (மூன்று ஆறுகள் ஒன்று கூடும் இடம்) என போர்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.  நேரில் ஏதோ மூன்று வாய்க்கால்கள் ஒன்றாக சேர்வது போல இருக்கிறது. படங்களைப் பாருங்கள்.

மூலவர் சன்னிதி

கோயிலின் உட்புறம் (அம்மணி யாரோ..)

முகப்பு




மூன்று ஆறுகள் (?) சங்கமம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹாரங்கி அணை

மடிகராவிலிருந்து கொஞ்சம் (20 கி.மீ) தொலைவில் உள்ளது ஹாரங்கி அணை. கபினி நதியின் குறுக்கே கட்டப் பட்டுள்ளது. உள்ளே எவரையும் அனுமதிக்க வில்லை.. ஏன் எனக் கேட்டால், சிவில் வொர்க்  நடக்கிறது என ஒருவரும், தீவீரவாதிகளின் அச்சுறுத்தல் என இன்னொருவரும் பதில் சொன்னார்கள். காலையிலிருந்து சுற்றிக்கொண்டே இருப்பதால், தலைமுடி(?)  கலைந்து, சட்டை கசங்கிப்போய் ஒரு மாதிரியாக திரிந்ததால், எங்கே  தீவிரவாதி என பிடித்து வைத்துக் கொள்வார்களோ என அச்சம் வந்துவிட்டது.   

அணையின் தோட்டம் வெளியிலிருந்து பார்க்க பெரியதாகவும், அழகாகவும்  இருந்தது. அணையின் வெளிப்புறத் தோற்றம் கீழே!





Tuesday, May 26, 2015

மடிகரா – தலைக்காவேரி

வயனாட்டிலிருந்து, கர்னாடக, ‘கூர்க்’ பகுதிக்கு எளிதாகச் செல்லமுடியும். எனவே அங்கே  ஒரு நாள் சுற்றுலா செல்ல தீர்மானித்து, முதலில் ‘தலைக்காவிரி’ க்கு சென்றேன்.

நான் இந்த இடத்திற்கு வந்து, 20 வருடங்களாவது இருக்கும். முன்பு மிகச் சாதாரணமாக இருந்த இடத்தை, எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறார்கள்? மிகப்பெரிய வரவேற்பு வளைவு, கிரானைட் கற்களால் வழுவழுவென அகலமான படிக்கட்டுகள், சுற்றிலும் நிறைந்திருக்கும் கண்கொள்ளா இயற்கைக் காட்சிகளை, பயணிகள் காண்பதற்கு ஏற்ற அமைப்புகள். மேலே நேர்த்தியான கோயில்கள். வாகனங்களை நிறுத்த வசதியான இடங்கள். முக்கியமான விஷயம், இடத்தினை வெகு சுத்தமாக பராமரிக்கிறார்கள்.

காவிரி நதியின் உற்பத்தி இடம் இது. நமது கலாச்சாரத்தில், நதிகளை பெண் தெய்வங்களாக வழிபடுவது வழக்கம். இங்கும் “காவிரி அம்மனுக்கு” கோயில் உண்டு. இயற்கை என்னவோ தனது வளங்களை பாகுபாடின்றி, அனைவருக்கும் வாரி இறைத்திருக்கிறது. மனிதன் தான் இது என்னுடையது என உரிமை கொண்டாடி, அடுத்தவனின் மண்டையை உடைத்து, ரத்தம் வடிவதை கொண்டாடுகிறான். இந்த காவிரிக்காக எத்துனை சண்டை? ராஜாக்கள் காலம் முதல்  இந்த நதிக்காக எத்துனை போர்கள்?

உன் இடத்தில் நெல் விளைவிக்க முடிகிறதா? செய்துகொள். என் இடத்தில் என்ன விளைவிக்க முடியுமோ அதை நான்  செய்து கொள்கிறேன். இருவரும் பகிர்ந்து கொண்டு நலமே வாழ்வோம் என ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்?

எல்லா தண்ணீரும் எனக்கே என மல்லுக்கு நிற்பது அசிங்கம், இயற்கையின் தன்மைக்கு செய்யும் துரோகம் என புரியவே புரியாதா?

ஒரு சமயம் ஒரு கேரள கம்யூனிஸ்ட் தோழரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் வினவினேன்; உங்களுக்கு தேவையான எல்லாமே தமிழகத்திலிருந்துதான் வரவேண்டும். பீஃப், அரிசி, காய்கறி, சிமெண்ட், கோழி, முட்டை என எல்லாமே!. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் (முல்லை பெரியார்) தரமாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்கிறீர்களே... உங்கள் தண்ணீரில் நாங்கள் அரிசி விளைவிக்காவிடில், சோற்றுக்கு என்ன செய்வீர்கள்? இது கூட உங்களுக்கு புரியவில்லையா? எங்களுக்கு தண்ணீர் தரமறுத்தால், நட்டம் உங்களுக்குத்தானே?” என்றேன்.

‘மானிலக் கட்சி’ என்றாலும் பரவாயில்லை; ‘தேசீய’ கட்சி என்ற பெயரை வைத்துக் கொண்டு ஒவ்வொரு மானிலத்துக்கும் ஒரு நிலை எப்படி எடுக்கிறீர்கள்? உங்களது தமிழக கம்யூனிஸ்ட் கட்சிக்கிளை, தண்ணீர் வேண்டும் என்று சொல்லும். கேரள கம்யூனிஸ்ட் கட்சிக்கிளை தரமாட்டோம் என்று சொல்லும்! இப்படி முரண்பட்ட நிலை எடுப்பது உங்களுக்கு வெட்கமாகவோ, உறுத்தலாகவோ இல்லையா?” என வினவினேன்.

‘நாங்க மட்டுமா சார் அப்படிச் சொல்றோம்? பி.ஜே.பி, காங்கிரஸ் உட்பட எல்லா தேசிய கட்சிகளும் அப்படித்தானே, சுயனலமாக நடந்து கொள்கிறார்கள்? நீங்க சொல்றபடி யோசிக்க எங்களுக்கும் தெரியும் சார். அப்படி செஞ்சா, எங்களுக்கு இங்கே ஓட்டு கிடைக்காது.. பிராந்திய உணர்வுகள்தான் எங்களுக்கு முக்கியம். 

இது தப்புதான் சார்.. ஆனால் மொழிவாரி மானிலங்கள் அமைந்து விட்டதால், யாரும் எதுவும் செய்ய முடியாது...” என்றார். 

அதுவும் சரிதான்...   பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிட்டால் அரசியல்வாதிகள் சம்பாதிப்பது எப்படி? ஒட்டு வாங்குவது எப்படி?  அரசியல்வாதிகள்  சௌகரியமாக வாழ, மக்களிடையே ஜாதி, மத, இன, மொழி வெறிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டேயிருப்பார்கள். நாமும் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டே இருப்போம்..

வின்வெளிக்குச் சென்ற ராகேஷ் ஷர்மா, “மேலேயிருந்து உலகைப் பார்க்கிறீகளே, எப்படி தெரிகிறது?” என்ற கேள்விக்கு,  செவியில் அறையும் பதிலொன்றைச்  சொன்னார்:    “என்னால் நாடுகளுக்கிடையே எந்த எல்லையையும் பார்க்க முடியவில்லை”    ..ம்ம்ம்ம்ம்ம்..


சரி.. அதைவிடுங்கள்.. நாம வந்தது, ஊர் சுற்றிப் பார்க்க.. சுப்ரீப் கோர்ட் சொன்னாலே கேட்கமாட்டேன் என்பவர்கள் நாம சொல்லியா கேட்கப் போகிறார்கள்? சில தலைக் காவேரி படங்களைப் பார்ப்போம்..



துரத்திலிருந்து ...

வரவேற்பு வளைவு..

பக்கத்து மலை...

மேலே உள்ள கோயில்கள் 

'கர்நாடக  காவிரித்தாய்...'


அகத்திய லிங்கம்.
(தமிழகத்தை தாண்டிப்போனால் சிவபெருமான் மீசையை முறுக்கிக்கொண்டுதான் இருக்கிறார்)