Sunday, January 26, 2014

ஜெய் ஹோ.. (ஹிந்தித் திரைப்பட விமரிசனம்)

இன்று ‘Jai Ho’ என்ற புதிய ஹிந்தி திரைப்படம் காண நேர்ந்தது. சிரஞ்சீவி தெலுங்கில் நடித்து வெளியான ‘ஸ்டாலின்’ என்ற திரைப்படத்தின் மறுபதிப்பாம்.

திரை விமர்சன்ம் எழுதுவதற்கு முதலில் அது திரைப்படமாக இருக்கவேண்டும் அல்லவா? JAI HO திரைப்படமே அல்ல! இது ஒரு கார்ட்டூன் போல இருக்கிறது.

கதை?  நகைப்புக்கிடமான, பார்ப்பவர்களை யெல்லாம் கிறுக்கர்கள் என்ற நினைவில் தொடுக்கப்பட்ட கதை. கதையில் ஆழமும் இல்லை! தொடர்ச்சியும் இல்லை!

கதை நாயகன்.  சல்மான் கான். நாயகி: டெய்ஸி ஷா. இயக்கம் Sohail Khan.

வழக்கமான அரசியல் தாதா-மற்றும்  கோபமான, அடித்து நொறுக்கும் இளைஞனாக சல்மான் கான். இது போதாதா கதை பண்ண?

ராணுவ அதிகாரியாக இருந்தவராம் சல்மான் கான். நான் படம் பார்த்த திரையரங்கு ராணுவத்திற்கு சொந்தமானது. "டேங்க்கை" யெல்லம் வைத்துக் கொண்டு சண்டை போடுகிறார்கள்.  படம் பார்க்க வந்த  ராணுவ அதிகாரிகள் சிரிக்கின்றனர்.

படம் முழுக்க வில்லன்கள் இறைந்து கிடக்கிறார்கள். யாரிடம் எப்போது எவவிதம்,  எதற்காக சல்மான்கான் சண்டை போடுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆரம்பித்த சண்டை எப்போது முடியும் என்றும் புரியாது. அப்பாடா.. ஒருவழியாய் சண்டை முடிந்தது என நிமிர்ந்து உட்கார நினைக்கும் பொழுது, மீண்டும் அடிக்க ஆரம்பிக்கிறார்.

இரும்புத் தண்டவாளம், கார், லாரி எல்லாவாற்றையும் சுண்டிவிரலால் தூக்கி அடிக்கும் பராக்ரமசாலியாக சல்மான் கான்.  
பயங்கரமான ஆந்திர மசாலா. நெடி தாங்கவில்லை.

சூப்பர் ஹீரோ சல்மான் கான், உறுமுகிறார், சீறுகிறார், அனல் பறக்க வசனம் பேசுகிறார், ஓயாமல்-சளைக்காமல் சண்டைபோடுகிறார், நடுவே கண்ணீர் விடுகிறார், காதல் பண்ணுகிறார், ஹெலிக்காப்டர் முதல்-மோட்டர்பைக், சைக்கிள் வரை ஓட்டுகிறார். சகல கலைகளும் அவருக்கு அத்துப்படி.

படம் முழுவதும் ஏகப்பட்ட  நட்சத்திரங்கள். கும்பல்-கும்பலாக, திருவிழா போல வந்து போகிறார்கள்.  நம்ம ஊர் ஜெனிலியா உட்பட.

பாடல்கள் எல்லம் தமிழில் எப்போதொ கேட்ட மாதிரியே இருக்கிறது? அங்கும் ஒரு தேவா இருக்கிறார் போல!


சரியான கொட்டாவி படம்.

Saturday, January 25, 2014

கண்ணாடிக்கூண்டு குடியரசு தினம்
25/01/2014. ஜொராட். அஸ்ஸாமில், குவஹாத்தியிலிருந்து 400 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு நகரம். பாண்டிச்சேரியைப்போல இருக்கும் விஸ்தீரணத்தில்.

அங்குதான்  நான், தற்போதைக்கு அடைக்கலம். 

எப்பொழுதும் போல, காலையில் வாக்கிங் போகலாம் என வெளிக் கிளம்பினேன். 

எனது மருமகன் வந்தார்“மாமா.. நீங்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு வெளியே எங்கும் செல்லக் கூடாது...” தடை உத்தரவு போட்டார்.

ஏன்? வடகிழக்கு மாநிலங்களில், இந்திய சுதந்திரத் திருநாளைக் கூட பொறுத்துக்(!)கொள் வார்களாம். ஆனால் குடியரசு தினத்தை சகித்துக் கொள்ள மாட்டார்களாம். எங்காவது ஒரு இடத்தில் குண்டு வெடித்தாக வேண்டுமாம்.


என்ன இது! 1947-க்கு முன் வெள்ளையனை எதிர்த்து ஒன்றாகத்தானே போராடினோம்? வடகிழக்கிலிருந்து தென்மேற்கு வரை! வடமேற்கிலிருந்து தென கிழக்கு வரை – இந்தியா முழுவதும் ஒன்றாக இணைந்துதானே சுதந்திரத்தை வென்றெடுத்தோம்? குதூகலமாக, சந்தோஷமாக, உற்சாகமாத்தானே எல்லாம் ஆரம்பித்தன?  பின் ஏன் நாட்டின் பல பகுதிகள் ‘தனிக்குடித்தனம்’ போயாக வேண்டும் என அடம்பிடிக்கின்றனர்? எங்கே தவறு  நிகழ்ந்தது? எங்கே கோளாறு  நடந்தது? இளைஞர்கள் எப்படி ரௌத்ரதாரிகளானார்கள்? அவர்களுக்கு என்னதான் கோபம்? எப்படி இவ்வளவு ‘வெறி கொண்டனர்?’ சக மனிதர்களை சகித்துகொள்ளும் மாண்பையும், பொறுமையையும் எப்படி இழந்தோம்? சக மனிக்தர்களுக்கு எதிராக எப்படி கொலைவெறி கொண்டோம்?

போலீஸ்காரகளும், ராணுவத்தினரும் ‘டீல்’ செய்வது போல இது வெறும் ‘சட்டம் ஒழுங்கு’ பிரச்சினையா?

இல்லை.. அப்படி இல்லை.  இது சமூக பொருளாதார பிரச்சினை சார்ந்தது.

பிரச்சினையின் ஆரம்பம், வடகிழக்கில், குறிப்பாக அஸ்ஸாமில் வெளிநாட்டு-வெளிமாநில மக்களின் ஊடுறுவல்தான். குறிப்பாக “பங்களாதேசத்தினர்” பல லட்சங்களில் ஊடுறுவி உள்ளனர். இந்தியாவில் ஊடுறுவி இருக்கும் வெளிநாட்டினர்-குறிப்பாக பங்களா தேசத்தினர் கோடிகளில் இருக்கும் என அமைப்புசாரா புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இவர்களில் பலர் இந்திய குடிமகனாக பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்கள் யாவரும் உள்ளூர் மக்களின் வேலை வாய்பினை பறித்தனர். சொத்துக்களை வாங்கிக்குவித்தனர்.

பல டீ எஸ்டேட்டுகள் வெளி மாநிலத்தவர்கு சொந்தமானது. குறிப்பாக மேற்கு வங்கத்தினருக்கு.  

ஏழை அஸ்ஸாமியர் சொந்த மாநிலத்திலேயே தெருவில் நின்றனர். உள்ளூர் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் இல்லை. குறிப்பாக ‘போடோ’ மொழிக்கு.

இங்கு நிலவும் ஏழ்மை உண்மையிலேயே நம்மைச் சாடுகிறது. நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் கூலிக்கு கூட தினசரி தொழிலாளர்கள் கிடைக்கின்றனர். இங்கு நிலவும் குளிரில் காலில் செருப்பு கூட இல்லாமல் தள்ளுவண்டிகளை இழுத்துக் கொண்டு செல்லும் தொழிலார்களை தினமும் பார்க்கிறேன். கடுமையான உழைப்பாளிகள்.

அரசியல் கட்சிகள்-குறிப்பாக காங்கிரஸ் இந்த ஊடுறுவலை, பல பல ஆண்டுகள் கண்டுகொள்ளவே இல்லை. காரணம் ஊடுறுவல்காரர்களின் ஓட்டு. அவர்களது ஓட்டு காங்கிரஸுக்கு கிடைத்து வந்தது.

அரசியல் அதிகாரம் நிலைத்து நிற்க எது வேண்டுமானாலும் செய்யும் கேடுகெட்ட அரசியல் கட்சிகள் உள்ளுர் மக்களின் உணர்வுகளை புறக்கனித்தனர். அவர்களுக்கு என்ன வேண்டும் என காது கொடுத்து கூட கேட்கவில்லை. மக்களின் கடுமையான கோபத்திற்கு ஆளாயினர்.

இதன் விளைவுதான் 1979 ஆரம்பித்த “உல்ஃபா”. பின்னர் நடந்தது அனைவருக்கும் தெரியும். 

ஆனால், கடந்த 30 வருடங்களில், தீவீர வாதக் குழுக்கள் ‘நெல்லிக்காய் மூட்டை போல’ உடைந்துகொண்டே வந்திருக்கின்றன. தற்பொழுது, குறைந்த பட்சம் இருபது குழுக்களாக, தீவீரவாதிகள் சிதறிக் கிடக்கின்றனர். யாரை எதிர்த்து, எதற்காக இம்மாதிரியான இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அவை மறக்கடிக்கப்பட்டு, குழுக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளும், பணம் பண்ணும் முயற்சிகளும் தான் விஞ்சி நிற்கின்றன.

பத்து தினங்களுக்கு முன்னால் கூட, ‘கோக்ரஜார்’ என்னும் ஊரின் அருகே, ஓடும் பஸ்ஸிலிருந்து, ஐந்து பீகாரிகளை வெளியே இழுத்துப்போட்டு, பட்டப் பகலில், நாயைச் சுடுவது போல, தீவீரவாதிகள்  சுட்டுத் தள்ளியுள்ளனர். குடியரசு தினத்திற்கு முன்னால் இப்படி ஒரு தீவீரவாதக்குழு இருக்கிறது என்பதை அடையாளப்படுத்திக் கொள்ள இப்படி ஒரு செயலை அரங்கேற்றியுள்ளனர். 

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்னாடகம் போன்ற மானிலங்களில், கட்டுமானப் பணிகளிலும், ஹோட்டல்களிலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் லட்சக் கணக்கான வடகிழக்கு மானிலத்தவர்களை நினைத்துப் பார்க்கிறேன்.  இந்த மானிலங்களில் எல்லாம் வடகிழக்கு மானில தொழிலாளிகளை எதிர்த்து மக்கள்  தெருவில் இறங்கிவிட்டால் என்னாவது என அச்சமாக இருந்தது.

இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது கூட, கவுஹாத்தியில் குடியரசு தின பேரணியின் மீது ஏவப்படுவதற்காக  எடுத்துச் செல்லப் பட்டுக் கொண்டிருந்த ஒரு IED வெடித்து இருரவர் இறந்ததாக செய்திப் பத்திரிகை கூறுகியது.

இதற்கு தீர்வு?

எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு தான். 

ஆனால்,அரசியல் வாதிகளும், தீவீர வாதிகளும் நிலைமையை, சீர்பண்ண முடியாதபடி,  இடியாப்பச் சிக்கலாக்கிவிட்டனர்.

தேவை என்னவெனில், அனைத்துத் தரப்பிலும், தீர்வு கண்டாக வேண்டும் என்ற தீர்மானமும், உறுதியும் தான்.  குறுகிய அரசியல் லாபத்தினை மறந்து நாட்டைப்பற்றியும் மக்களைப் பற்றியுமான  உண்மையான அக்கறையும்தான்.

இது நடக்கும் என்று நம்புக்கூடிய நிலைமை கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரியவில்லை!

அதுவரை? மகிழ்ச்சியோடும், ஆரவாரமாக   நாடே கொண்டாடவேண்டிய, குடியரசு, சுதந்திரத்திரு நாட்களைக்கூட ராணுவ பாதுகாப்போடு, குண்டு துளைகாத கண்ணாடி மேடைக்குள்ளிருந்து, பல சாவுகளுக்களிடையே கொண்டாடிக் கொண்டிருபோம்!!
Friday, January 24, 2014

அன்பும் ஆன்மீகமும்

அன்பு சுயநலமற்றது! அகங்காரமற்றது!! தன் நலனை மட்டுமே முன்னிறுத்தாது.

‘அன்பு’ ! நாம் அனைவரும் பயன்படுத்தும், ஆனால் முழுவதுமாக  புரிந்து கொள்ளாத வார்த்தை! ஆன்மீக விளக்கத்தின்படி, அன்பின் முழு வீச்சினையும், ஆழத்தினையும், தீவீரத்தினையும் குறைந்தபட்சம் தெரிந்தாவது வைத்திருக்கிறோமா என்றால் துரதிஷ்டவசமாக ’இல்லை’ என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.

எவர் மீதாவது நீங்கள் ‘அன்பு’ செலுத்துகிறீர்களா என்று எவரேனும் கேள்வி கேட்டால், உமக்கு ஏதாவது மறை கழன்றுவிட்டதா என்றுதான் கேட்கத்தோன்றும். மனைவி, கணவன், குழந்தைகள், உற்றார், நண்பர்கள் என பலரிம் மீதும் அன்பு செலுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று பதிலிருப்போம். ஆனால் சற்று ஊன்றிப் பார்த்தால் அப்படியில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது.

மனைவி, மக்கள், தாய் - தந்தை என பலரிடமும் ‘அன்பு’ எனபதாக நாம் சொல்லிக்கொள்ளும் ‘பரிவு’ , ‘அன்பு’ ஆகாது. அவர் எப்பொழுதாவது, தமது விருப்பத்திற்கு எதிராகவோ அல்லது அவர்கள் விரும்பியபடியொ நடந்து கொண்டுவிட்டால்,   நாம் சொல்வதைக் கேட்காவிட்டால், ‘அன்பு’ பின் சீட்டிற்குப் போய்விடும். ஈகோ முன்னின்று ரகளைய ஆரம்பித்துவிடும். ஏன்? 
எனது மக்கள், என் மனைவி-அவர்கள் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும், என்ற ‘தான்’,’எனது’ எனற அகங்காரம் முன் நின்று விடுகிறது. தம்பதியர் தமது துணையுடன் உயிரையே வைத்திருப்பதாக கதைப்போம். ஆனால் அவர் இறந்தவுடன் ‘பாங்க’ பேலன்ஸ் பற்றியும் சொத்துக்கள் பற்றியும் யோசிக்க ஆரம்பிப்போம். இறக்கக் கூட வேண்டாம்; மனைவி நோய்வாய்ப்பட்டாலோ, வசீகரம் குறைந்துவிட்டாலோ, விகாரப்பட்டு விடாலோ அன்பின் அளவும் கனிசமாக குறைந்துவிடுகிறது.

நண்பர்களிடம் ‘உயிர் நட்பு’ பாராட்டுவதாச் சொல்லிக் கொள்வோம். ஆனால்  நன்பரைப்பற்றி வேறுவிதமாக கேள்விப்பட்டுவிட்டாலோ அல்லது நம்மைப்பற்றி, அவர், பிறரிடம் குறையோ அல்லது புகாரோ சொல்லியதாக கேள்விப்பட்டாலும் சரியே (அது உண்மையாக இருக்கேண்டிய அவசியம் இல்லை) உடனே அவரை வெறுக்கத் தயாராகிவிடுவோம்.

திடீரென நண்பர் பணச் செல்வம் அடைந்து விட்டாலே கூட போதும், நமது மாச்சர்யங்கள் துவங்கிவிடும். பொறாமை தலை தூக்கிவிடும்.
உற்றம், சுற்றம் நண்பர்களிடத்தில் பெரும்பாலோனோர் காட்டும் ‘அன்பு’ சுய நல கலப்பன்றி அமைவது இல்லை.  தனது என்ற அகங்காரம் இன்றியும் அமைவது சிரமமாய் உள்ளது.

பின் எதுதான்  நிஜமான அன்பு?

நண்பர்கள்  நன்கு வாழ்ந்தாலும், நம்மைப்பற்றி புகார் கூறுவதாக தெரிய வந்தாலும், அவரிடமிருந்து நமக்கு பலன் ஏதும் வராது-அவரால் நமக்கு இனி பலன் இல்லை என்ற நிலை வந்தாலும், உண்மையாக வாழ்த்தும் மனோபாவம் (தன் நெஞ்சறிவது பொய்யற்க!) எப்பொழுது வருகிறதோ அப்போது!

உற்றார்-உறவு, மனைவி மக்கள், தனது விருப்பப்படி நடந்து கொள்ளவில்லையென்றாலும் அன்பு செலுத்தும் பாங்கு வரும் பொழுது!

அகங்காரம் முற்றாக ஒழிந்து நிற்கும் நிலையில்தான் அன்பின் சொரூபத்தினை கொஞ்சமேனும் தரிசிக்க இயலும். நமது சொந்த பந்தங்கள் பட்டிணி கிடக்கும் பொழுது ஏற்படும் உணர்வு, தாக்கம் நாம் கேள்வியே பட்டிராத மக்கள் பட்டிணி கிடக்கும் பொழுதும், எப்போது ஏற்படுகிறதோ அப்போதுதான் அது அன்பு எனப் பொருள்படும்.

அன்பு எப்பொழுதும் ‘பேரம்’ பேசாது.

நமது ‘அன்பு’,  ‘மொய்’ எழுதுவது முதல், கடவுளிடம் காணிக்கை அளிப்பதுவரை அனைத்தும் ‘பேரம்’ பேசுவதன்றி வேறு ஏதும் அறியாது. பிறர், நம்மிடம் எவ்வளவு அன்பு செலுத்துவதாக நாம் உணருகிறோமோ, அந்த அளவுக்குத்தான் நாமும் அன்பை திருப்பித்தர முடிவெடிக்கிறோம். ‘அவன் செஞ்சதுக்கு இதுவே அதிகம்’ என்ற வசனம் பேசப்படாத வீடு உண்டா?

ஒரு நிமிடம் நான் அன்பாக இருக்க முயலுகிறோம். மறு நிமிடம் மனமெனும் குரங்கு குதியாட்டம் போடும். ‘உனக்கு அவர்கள் செய்த கெட்டவற்றை(!) மறந்துவிட்டாயா என ஃப்ளேஷ்பேக் கொணரும்! நம்மை  நன்னெறியிலிருந்து பின்னால் இழுக்கும். பெரும்பாலான நேரங்களில் வெல்வது மனதாகவே உள்ளது.

நண்பர்-உற்றார்களின் கதியே இவ்விதம் என்றால், கடவுளிடம் நாம் கொண்டிருக்கும் ‘அன்பு’ விசித்திரமானது. துயரம் நேரும் போதெல்லாம் வசமாக அகப்பட்டுக் கொள்பவர் கடவுள் தான். சிறு துன்பம் வந்தாலும் கூட ‘எனக்கு ஏன் இந்த சோதனை அளித்தாய்?’ என புலம்புகிறோம். பெரும் சோதனைகள் வரும்பொழுது கடவுளுக்கு கண் இல்லை; அறிவு இல்லை என மெடிக்கல் சர்டிபிகேட் தருவோம். அதுவும் கொஞ்ச நேரம்தான். கடவுளிடம் நமக்கு பயம் வந்துவிடும். அவர் ஏதாவது ‘தண்டனை’ கொடுத்துவிட்டால்? உடனே கன்னத்தில் போட்டுக் கொண்டு, உண்டியலில் பத்து ரூபாய் சேர்ப்பித்துவிடுவோம். எல்லாம் நமக்கு பேரம் தானே?

இறைவன் திருவுள்ளம் அதுவானால், அவருக்கு எல்லாமுமே அளிப்பேன். பிரபஞ்சத்தில் உள்ள எதுவும் எனக்குத் தேவையில்லை.  கடவுளிடமிருந்து எதுவும் வேண்டாம். அவரை நேசிக்கிறேன். அவரிடமிருந்து எதுவும் எனக்கு வேண்டாம். கடவுளின் சக்தியோ, அதன் வெளிப்படுகளோ எதுவும் எனக்கு வேண்டாம். அவரே அன்பின் சொரூபம். அன்பே கடவுள். அதுவே எனக்குப் போதுமானது. வேறு கேள்விகள் எதுவும் என்னிடம் இல்லை - இந்த மனோபாவம் நமக்கு வரும்வரை நாம் கடவுளிடம் கூட அன்பு சொல்லுத்துவதாகச் சொல்லமுடியாது. 

அன்பு பயம் அற்றது

அன்பு உள்ள இடத்தில் பயம் எப்படி இருக்க முடியும்? அடிமைகள் யஜமானிடம் அன்பு கொண்டிருப்பதாக காட்டிக் கொள்வார்கள். அவை எப்பொழுதும் போலியானது. தண்டனைக்கு பயந்து செலுத்தும் அன்பு எப்பொழுதும் அன்பாக மாட்டா. 

இறைவன் பொருள் கொடுக்கிறாரா? செல்வம் கொடுக்கிறாரா? ஆரோக்கியம் கொடுக்கிறாரா? தண்டனை அளிக்கிறாரா? எனப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வு உள்ள மனதில் ஒரு பொழுதும் அன்பு மலராது.

ஒரு போலீஸ் அதிகாரி வீட்டிற்கு வரும் பொழுது, அவரது குழந்தைகள் அவரை என்னவாகப் பார்க்கின்றனர்? தண்டனை அளிப்பவர் என்றா? மன்னிப்பு அளிப்பவர் என்றா? பரிசு கொடுப்பவர் என்றா? எதுவுமிமல்லை. அவர்கள் காண்பது ஒரு தகப்பனை! அவ்வளவே!

கடவுளின் குழந்தைகளான நாம் மட்டும் ஏன் அவரைப் பார்த்து பயப்பட வேண்டும்? அவரது அன்பு வடிவம் புரியாததினால்தான் அவரைப் பார்த்து பயப்படுகின்றோம். அல்லது பேரம் பேசுகின்றோம்.

அன்பு உயர் லட்சியம் கொண்டது.

வியாபார  நோக்கத்தையும், பயத்தையும், பேரத்தையும் விட்டபின், அன்பே மிகவும் உயர்ந்த லட்சியம் என்பதை ஒரு ஆன்மீகி உணரத் தொடங்குகிறான். 

இவ்வுலகத்தை தீயவர்கள் முழு நரகமாகவே பார்ப்பார்கள். காதலர்கள் இவ்வுலகை காதல் நிரம்பியதாகப் பார்ப்பார்கள். வெறுப்பவர்கள் வெறுப்பு நிரம்பியதாக; பேராளிகள் போராட்டத்தை; அமைதி விரும்பிகள் அமைதி ரூபமாக; 

துரியோதனுக்கு உலகமே துஷ்டர்களால் நிரம்பியதாகத்தெரிய, தர்மனுக்கு உலகமே நல்லவர்களால் நிரம்பியதாகத் தெரிகிறது.

அழகற்றவளை காதலிக்கும் ஆணிடம் – அவன் கண்களுக்கு அவள் காதாலுக்கு உரியவளாத்தான் சொல்வான். மூன்றாம் மனிதனின் கண்களுக்குத்தான் அழகற்றதகத்தெரிவதெல்லாம்,
உண்மையில் சொல்லப்போனால், ‘அழகு’ என்பதற்கு நாம் கொண்டிருக்கும் விளக்கத்தை, உத்தேசத்தை நாம் விரும்புவரிடம் ஏற்றிப் பார்க்கிறோம். 

ஆக நாம் விரும்புவது எதிரிலிருக்கும் ஆணையோ அல்லது பெண்ணையோ அல்ல! நாம் நமது சொந்த எண்ணத்தை, லட்சியத்தையே பிறர் மீது ஏற்றி வணங்குகிறோம்.  அதே போலத்தான்   நாம் அன்பால் நிரம்பியிருக்கும் பொழுது, அந்த எண்ணத்தை உலகின் மேல் ஏற்றிப்பார்க்கிறோம். உலகமே அன்பு மயமாகத் தோன்றும்.

எவ்வளவு ‘கயவாளியாவும்’ இருக்கட்டும். அவனிம் ஏதும் எதிர்பாராமல், இயல்பாகவே அன்புடன் நடந்து கொண்டால், உங்களைப் பொருத்தவரையாவது  அந்த ‘கயவாளியும்’ நல்லவனே!

அன்பு நிரம்பியவர்கள்-மேற்சொன்னை நிபந்தனைகளுகு உட்படாத அன்பு நிரம்பியவர்கள் இவ்வுலகத்தினை இறைவனின் வடிவமாகவே – அன்பின் வடிவமாகவே பார்ப்பார்கள். அவர்களுக்கு உலகமே அன்பு மயமாகத்தான் தோன்றும்.

சர்வ மக்களும்,  சர்வ மதங்களும் அனுசரிக்க வேண்டிய முதல் தர்மம் ‘அன்பு’ மட்டுமே. 

Friday, January 17, 2014

‘பஷ்பா.......’

புஷ்பம்... ஏ.. புஷ்பா.. இங்கே வா..’

ஹாலில் வந்த குரலுக்கு ‘தோ... வர்ரேங்க...’ பதிலிருத்தாள் புஷ்பா.

புஷ்பா அந்த பங்களாவில் பாத்திரம் கழுவி, கூட்டிப் பெருக்கும் வேலை செய்பவள். வேலைக்கு சேர்ந்து, பத்து நாள் தான் ஆகிறது. இங்கு வேலைக்கு சேரும் முன், ‘சித்து’ வேலை பார்த்து வந்தாள். ‘சித்தாள்’ வேலை என்றால், கட்டிட வேலையில் மண் அள்ளிக் கொட்டுவது, ‘கலவை’ அள்ளிக் கொடுப்பது போன்ற எடுபிடி வேலை செய்யும் பெண்களைக் குறிக்கும்.

மேஸ்திரி கமிஷன் போக இரு நூறு ரூபாய் சம்பளம் வரும். காலை 8 மணிக்கு போனால் மாலை 6 வரை இடுப்பொடிய வேலை.  அதுவாகிலும் பரவாயில்லை. ‘கொத்துக்கள்’ எனப்படும் சில கொத்தனார்கள் தரும் ‘சில்மிஷ தொந்தரவுகள்’ அதிகம்.  பெரும்பாலான ‘சித்துக்கள்’ வாயடி அடித்து எதிர்த்து நிற்பார்கள். அங்கொன்றும் இங்க்கொன்றுமாக சில சித்துக்கள் பல பலன்களையும், சொளகரியங்களையும் உத்தேசித்து ‘அனுசரித்து’ போவார்கள். நமது புஷ்பா போன்ற ‘வாயில்லா பூச்சிகளின்’ பாடுதான் சிரமமானது. எனவேதான் சம்பளம் குறைவு என்றாலும் ‘சித்தாள்’ வேலையை விட்டுவிட்டு, வீட்டு வேலை செய்வதற்கு வந்து விட்டாள். 

இந்த வீட்டு வேலையில், காலை வந்தால் மதியம் போய்விடலாம். வெய்யிலில் கிடந்து மாள வேண்டியதில்லை. ‘சுகமாக’  நிழலில் வேலை செய்யலாம். இரண்டு வேளை  நல்ல சாப்பாடு கிடைக்கும். முக்கியமாய் ‘கொத்துக்களின்’ தொந்தரவு இல்லை.இங்கு இரண்டு வேளை உணவு கொடுத்து 1,500 ரூபாய் தருவதாய் பேச்சு. பரவாயில்லை.

புருஷன் ‘சின்னையன்’ பெயிண்டர் வேலை பார்க்கிறான். நல்ல வருமாணம் வருகிறதுதான். ஆனால் ‘டாஸ்மார்க்’ குக்குபோக, பாதி கூலி வீடுதங்குவதே பெரும்பாடாக இருக்கிறது.

அவன் சொல்கிறான்தான்,. ‘நீ ஒன்னும் வேலைக்கு போவேணாம்.. நா  சம்பாரிக்கறதே போதும்.. ஆக்கிப் போட்டுக்கிணு வூட்டுல கெட’ என்று. புஷ்பாவிற்குத்தான் மனசு கேட்கவில்லை.

அவர்களுக்கு  ‘சம்பத்’ என்று ஒரு பையன். நாலு வயசாகிறது. பொறந்தது முதலே  நோஞ்சான். கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் சொன்னாங்க. ஏதோ.. நெஞ்சுல ‘வால்வு’ இருக்காமே... அது சம்பத்துக்கு ரிப்பேராம். நல்லா வேலை செய்யலியாம். அஞ்சு வயசுக்கு அப்புறம் ஆப்பரேஷன் செய்யணுமாம். சேஞ்சா சரியா பூடுமாம். கவருமெண்டோட ரேஷன் அட்டை இன்சூரன்ஸ் மூலமா செஞ்சுக்கலாமாம். செலவு கம்மியாவுமாம். ஆனாலும் “மேஞ்செலவுக்கு” அம்பதாயிரம் ஆவுமாம்..

அதுக்குத்தான் பணம் சேர்க்கிறாள் புஷ்பா. இருவதாயிரம் சேர்த்து விட்டாள். அடுத்த வருஷம் சம்பத்துக்கு அஞ்சு வயசாகறதுக்குள்ள மீதி ரூபாயை சேத்தாகணும்.

“ஏய்.. புஷ்பா... காதுல விழல... சீக்கிரம் வா...” இறைந்தாள் எஜமானி.

‘தோ ... வந்துட்டேங்க..’

‘பார்... இந்த சோஃபாவில் டீ கொட்டி விட்டது. ஈரத்துணியால் சுத்தம் செய்து, சரி பண்ணு..’

‘சரிங்க...’

யஜமானியம்மாவை பார்ப்பதற்காக அவரது சினேகிதி வந்திருக்கிறார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கைதவறி சோஃபாவில் ‘டீ’ கொட்டிவிட்டது போலிருக்கிறது.  அதை சுத்தம் செய்து கொண்டிருகும் பொழுது புஷ்பாவின் கவணம் அவர்களது உரையாடலில் சென்றது. அவர்கள் பேசிக் கொண்டதில் பாதி விளங்கவில்லை..பாதி இங்கிலீஷ். ஒருவழியாக யூகம் செய்து புரிந்து கொண்டாள்.

‘அவனுக்கு’ ஒண்ணுக்கு போகும் பாதையில் கல் வந்து அடைத்துக் கொண்டு விட்டதாம். “அவன்” என்று யாரைச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை. மருந்து மாத்திரையில் குணமாகவில்லையாம். வலியால் ரொம்ப கஷ்டப்பட்டானாம். சரியான டாக்டர் வேறு கிடைக்கவில்லையாம். கடைசியாக ஒரு ‘நல்ல’ டாக்டர் கிடைத்து ‘ஆப்பரேஷன்’ செய்து குணமாக்கினார்களாம். 75 ஆயிரம்  ரூவாய் செலவாகி விட்டதாம்.

‘அட...  வூட்டுக்கு வூடு வாசப்படிதானா? எம் மவனுக்கு ‘வால்வு’ ரிப்பேர்னா, அவிங்க வூட்டு பையன் யாருக்கோ ‘ஒண்ணுக்கு போர எடத்துல’ அடப்பு.. அதை சரிபண்ணத்தான் இம்புட்டு ரூவா செலவாச்சாம். பணக்காரங்கன்னா வியாதி வராமலா பூடும்!’  ஏதோ  ஒருவகை திருப்தி வந்தது புஷ்பாவிற்கு. 

அவுங்களுக்கு காசு இருக்கு சரி பண்ணிக்கிட்டாங்க.. நாம தான் காசுக்கு அல்லாட வேண்டியிருக்கு, தனக்குள் எண்ணியவண்ணம் தனது வேலையைத் தொடர்வதற்காக,  உள்ளே செல்ல யத்தனித்தாள் புஷ்பா.

‘அப்ப, நான் கிளம்பரேன். ‘அவன்’ உடம்பை பாத்துக்கோ..’ எனச் சொல்லிவிட்டு கிளம்பினாள், யஜமானியின் சினேகிதி.

அச் சமயத்தில், ஒண்ணுக்கு போகும் இடத்தில் அடைப்பு வந்து சரியான பையன் அங்கு வந்தான்.

“ஓ...க்யூட் பாய்.. யு ஆர் அல்ரைட் நௌ... ஒகே... நோ மோர் பெயின்”
“ஹி இஸ் ஃபைன்  நா... ஒ கே ஸ்மார்ட் பாய்.. கோ டு யுவர் பிலேஸ்.. டேக் ரஸ்ட்..”

“அவனும்” சாதுவாக, பௌயமாக ‘வாலை ஆட்டிக்கொண்டு’ வ்ழ்...வ்ழ்... என கத்திக் கொண்டு தனது இடத்துக்கு சென்றான்.
-0-

Thursday, January 16, 2014

சிறகிழந்த பறவைவிஜி (என் மனைவி) இல்லாத இவ்வருட பொங்கல் கடந்து சென்றது.

1978-ல்  நாங்கள் உற்சகத்துடன் கொண்டாடிய முதல் பொங்கல் முதல்,  2013-ல் உடல் நலம் குன்றிய  நிலையில் செய்த கடைசி பொங்கல் வரிசையாக நினைவிற்கு வருகிறது.

35 வருடங்கள் ஊணிலும் உயிரிலும் கலந்து விட்டதாக கதைத்து – இனி சகலமும் சுகமே என பிதற்றிக் கொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது. அவருடன் வாழ்ந்ததெல்லாம் ‘பொய்யாய், பழங்கதையாய், கனவாய் கரைந்துவிட்டது.  நினைத்துப் பார்க்குங்கால், இவ்வளவுதானா வாழ்க்கை - இவ்வளவே தானா என வியக்கவைக்கிறது. ஆம்.. இவ்வளவேதான். வாழ்வின் அனித்யமும், நிஜமும் - செவிகளில் அறையும் பொழுது, ஜீரணிப்பது சிரமமாய் இருக்கிறது.

1978-ல் உறவுகளின் எதிர்ப்புக்களிடையே மணம் செய்து கொண்டது, பெண் மகவை ஈன்றெடுத்தது, அவளை சீராட்டி வளர்த்து, அவளுக்கு திருமணம் செய்வித்தது, பேரன்களை கொஞ்சி மகிழ்ந்தது – என எல்லாமும் ஒரு மின்னல் போல  நடந்து முடிந்து விட்டன.

மனைவி நிஜமாகவே சென்று விட்டாளா? இனி என்னுடன் ஒருபொழுதும் பேசவே மாட்டாள்? இனி அப்படி ஜீவன் இல்லவே இல்லையா!  

“இல்லை.....நடந்து முடிந்ததெல்லாம் ஒரு கனவு; விஜி மறையவில்லை, வெளியேதான்  சென்றுள்ளாள், இதோ வந்து விடுவாள்! உன்னுடன் மீண்டும் பேசுவதற்கு, சண்டை போடுவதற்கு வந்துவிடுவாள்” என எந்த தேவதையும் சொல்லாதா?

‘சை...  மூடனே! இந்த பாழும் சுய இரக்கத்தை மூட்டை கட்டி வை.  உலகில் எவரும் நிரந்தரம் இல்லை! நாளை உனக்கும் – எவருக்கும் இதே முடிவுதான் என உரக்கச் சொல்லிக் கொள்கிறேன்.  வாழ்வின் உண்மைகள் புரிகிறது! தெரிகிறது! எனினும் மனது அவ்வப்போது தடுமாறுவதை தவிர்க்க இயலவில்லை.

உணர்வுகளை பகிர்ந்து கொள்ள, மனம் விட்டு பெச, குறைந்த பட்சம் கோபப்பட்டுக் கொள்ள, ஒரு ஜீவன் இல்லாமல் போய்விட்டது.

ஆயிரம் சுற்றங்கள் இருந்தாலும் தம்பதியருக்கு இடையே  நடக்கும் சம்பாஷனைகள் தான் ஜீவன் உள்ளவை. உண்மையானவை. 

சந்தோஷ, துக்க கணங்களை – பாசாங்குகள் ஏதுமின்றி பகிர்ந்து கொள்ள, குரல் உயர்த்தி பேச, மனதில் தோன்றுபவைகளை தயக்கமின்றி-தாட்சண்யமின்றி சொல்வதற்கு, மனைவி போல் வேறு எவராவது ஆகுமா?

அவர் இல்லாத நிலையில், பிறாரிடம் எதைச் சொல்ல வேண்டும்? எதைச் சொல்லக் கூடாது? ஒன்றும் புரியவில்லை. எதைச் சொன்னால் யார் கோபித்துக் கொள்வார்கள்? எதுவும் புரியவில்லை!

அவ்வளவு கூட வேண்டாம்! சாப்பாடு எது வேண்டும்-எது வேண்டாம்? தட்டில் இருப்பது போதுமா-போதாதா? ம்..ஹூம் தெரியவில்லை. விஜி இருக்கும் வரை இதைப்பற்றியெல்லாம் யோசித்தது கூட இல்லை. தட்டில் ஏதோ போடுவாள். போட்டது போதுமானதாகவே இருக்கும்! சுவையாகவும் இருக்கும். பிடித்ததாகவும் இருக்கும்.

வேலைகளுக்கிடையே கொஞ்சம் காஃபி குடித்தால் தேவலை என நினைக்க மட்டுமே செய்வேன். சொன்னதில்லை. அது என்ன மாயமோ தெரியாது. நினைத்த ஐந்தாவது நிமிடம் கால் டம்ளர் காஃபி வந்துவிடும். உண்மையான அன்பு இருக்கும் பொழுது, வார்த்தைகளுக்கு தேவையில்லமல் போகிறது. நீண்ட காலம் மனம் ஒருமித்து வாழும் தம்பதியினருக்கு முகம் கூட ஒத்த ஜாடைக்கு மாறிவிடும் என படித்திருக்கிறேன்.

இப்பொழுது, தனிமை வாட்டுகிறது. ஜனக்கூட்டதின் நடுவிலும் தனியனாய் உணருகின்றேன்.

பெண்களுக்கு – கருத்து மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் பூரண்மாய் வேண்டும் என்ற கருத்து சிறுவயதிலேயே மனதில் ஊறிய காரணத்தால், விஜி, தன்  வீட்டில் பரிபூரண சுதந்திரத்துடன் உலவினாள். பணம், பொருள் வாங்குவது – விற்பது, தொழிற்சங்க நடவடிக்கை, உறவுகளுக்கு உதவுவது -  நண்ப-நண்பிகளுக்கு உதவுவது, என எதிலும் நான் தலையிட்டதே இல்லை. அவர் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது  நோக்கமாயிருந்தது.

எல்லாம் கண நேரத்தில் கனவாகிவிட்டன.

கணவனை இழந்த பெண்கள் ஒருவாறு சமாளித்து, வாழ்க்கையை எதேனும் ஒரு வகையில் சுவாரஸ்யப்படுத்திக் கொள்கின்றனர். பெரும் சிக்கல்கள் ஏதுமின்றி எஞ்சிய வாழ்வை ஓட்டி விடுகின்றனர்.

ஆணால், மனைவியை இழந்த கணவர்கள் பாடுதான் பிரச்சினகள் நிறைந்ததாகிறது. பரிதாபத்திற்குரியதாகிறது.

யாரிடமும் எதுவும் பேச முடியாமல், என்ன செய்வது எனத் தெரியாமல், மௌனப் புயலாய், அனாதரவாய் திரிய வேண்டியுள்ளது.

என்போல் கொண்ட அன்பினால், என்னை எனது மகளும் மருமகனும் தங்களிடம் அழைத்து வந்து விட்டனர்.

இங்கு எனது மனம் கொண்ட தமிழும், உற்ற நண்பர்களும் இல்லை. தமிழ் புத்தகங்களோ, தமிழில் பேசுபவர்களோ இல்லை

மீதி இருக்கும் வாழ்க்கையை சற்று சுவாரஸ்யமாய், கொஞ்சமேனும் பிறருக்கு பயன்படும் விதமாய், நான் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். அது எனது உரிமை எனவும் கருதுகிறேன்.

தொட்டியில் வைக்கப்பட்ட செடிபோல, வெறுமனே ஒரு மூலையில் அமர்ந்து தின்று தூங்கிக் கொண்டிருப்பதில் விருப்பமில்லை.

நிம்மதியும், சந்தோஷமும் வெறும் உணவில் மட்டும் இல்லை!