Saturday, January 11, 2014

நாடக மேடைவாழ்க்கை வெறும் துன்பமயமாக மட்டுமே அல்லது இன்பமயமாகவே மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்? வாழ்க்கையை விடுங்கள்! ஒரு கதைப்புத்தகம் படிப்பதாகவோ அல்லது டி.வி சீரியல் பார்ப்பதாகவோ வைத்துக்கொள்வோம். கதையில் திருப்பங்களோ, முடிச்சுக்களோ, சஸ்பென்ஸோ இல்லாமலிருந்தால் படிப்போமா - பார்ப்போமா? சுவாரஸ்யப்படுமா? சலிப்பூட்டுமல்லவா? ஒரு புத்தகத்திற்கே திருப்பங்கள் தேவைப்படும்பொழுது வாழ்க்கையில் முடிச்சுக்கள் விழும்பொழுது ஏன் கவலை கொள்கிறோம்?

வாழ்க்கை வெளிச்சமயமாகவே (இன்பமாகவே) அல்லது இருள் மயமாகவே இருந்தால் வெளிச்சத்தின் அருமையும் புரியாது. இருளைவிட்டு வெளியில் வரும் வழியும் தெரியாது. உந்துதலும் இருக்காது. எனவே யாவருக்கும் சவால்கள் தேவைப்படுகின்றன. திரையில் வரும் ‘சூப்பர்மேன்’ களுக்கும் ‘கிருஷ்’ களுக்கும் கூட வில்லனகள் தேவைப்படுகிறார்களே! இல்லாவிடில் நாம் அவர்களை ‘ஹீரோக்களாக’ மதிப்போமா? இந்த இலக்கணம் திரைக்கு மட்டுமல்ல, இறைவன் உருவாக்கிய இந்த இந்த உலகம் எனும் பெரும் நாடக மேடைக்கும் பொருந்தும்.

நாம் வாழ்வில் பெரும் துயர்களையோ, மரணங்களையோ, இழப்புக்களையோ, நோய்களையோ எதிர்கொள்ளும் பொழுது,  நம்மில் பெரும்பான்மையோனர் இடிந்து போகிறோம். அத்தகையோர், இத்தகைய இடையூறுகளை பார்க்காதவர்கள் என்று பொருள் இல்லை. இத்தகைய பெருந்துயர் ‘தங்களுக்கு’   நிகழும்பொழது,  ‘பிறருக்கு நிகழ்ந்ததைப் பார்க்கும் மனோபாவத்தோடு’ பார்க்க இயலவில்லை.  துயரங்களுக்கான நமது எதிர் வினை, “எனக்கு ஏன் இவ்விதம் நிகழ்கிறது” என்பதகாகத்தான் உள்ளது. சாசுவத உண்மைகளையும், யதார்த்தங்களையும் எற்க மறுக்கிறோம். ஏன்?

ஏனெனில் நாம் வாழ்க்கையை பெரும் தீவீரத்தோடும் அளப்பரிய பற்றுதலோடும் எதிர்கொள்வதுதான். 

நாம் சாசுவதமானவர்கள்-நாம் நாம் அனுபவிக்கும் சுகங்களும் சொத்துக்களும் நிலையானவை – என நமது ஆழ்மனதில் நம்புவதுதான். இவ்வுலக சுகங்களை இழக்க விரும்பாததுதான்.

என்னதான் கருப்பையிலிருந்து வெளிவந்த நிமிடம் தொட்டு, கல்லறையை நோக்கிய பயணம்தான் மேற்கொண்டிருக்கிறோம் என்பதைப் பலமுறை படித்திருந்தாலும், நிஜத்தின் சூட்டினை உண்மையிலேயே உணராததுதான்.

ஏதிர்பார்ப்புகள் நிகழாதபொழுது – ஏமாற்றங்களும் துயரங்களும்தானே மிஞ்சும்?

ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவதார புருஷர்கள் கூட ஆண்டவன் அளித்த சிரம முடிச்சுக்களை எதிர்கொண்டவர்கள்தான். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தனது 49-வது வயதில் ‘புற்று  நோய்’ கொண்டுதான் காலமானார். விவேகானந்தர் மறையும் பொழுது, 36 வயது தான். மகான் ரமண மகரிஷியும் கூட கேன்சருக்கு பலியானவர்கள் தான் . 

இவர்கள் யாவரும் தங்களுக்கு வந்த நோய்களை தங்களது ‘உடலுக்கு’ வந்ததாகக் கருதினார்களே தவிர, ‘அழிவற்ற தங்களுது ஆன்மாவிற்கு’ வந்ததாக எண்ணவில்லை. மாறாக பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்கு கிடைத்த வாய்ப்பாகத்தான் கருதினார்கள்.

புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், இவ்வுலகு உள்ள வரை ‘இன்பமும்-துன்பமும்’, ‘சிரிப்பும் அழுகையும்’, ‘சந்தோஷமும்-துக்கமும்’, ‘வெற்றியும்-தோல்வியும்’, ‘தோற்றமும்-மறைவும்’, ‘ஒளியும்-இருளும்’, ‘வறுமையும்-வளமையும்’ இருந்தே தீரும். இந்த சுவாரஸ்யமான முரண்கள் நித்யமானவை. இயற்கையின் நியதி. மாறா விதி. 

‘தோன்றிய’ கோள்களும்-நக்ஷத்திரங்களும் கூட மறைந்தே தீரும்.

எனவே அனித்தியமான-நீர்க்குமிழி போன்ற இந்த வாழ்வில், அதைவிட அற்பமான துயர்களைக் கண்டு அழுது புலம்ப வேண்டியதில்லை.  

அமைதியை அனுபவித்தால் உறிதியாக புயலும் உண்டு; வெளிச்சத்திற்குப் பின் இருள் வந்தே தீரும். கடவுளின் இந்த நியதியை எவரும் மீற முடியாது.

பின் என்ன செய்யலாம்?

நம்மால் செய்யக்கூடியது ஒன்று உண்டு. துன்பம் நம்மை நாடுவதன் நோக்கம் என்ன? நம்மை துன்பத்தில் ஆழ்த்துவதுதானே? துன்பங்கள் வரட்டும்! ஆயினும் நாம் துயரப்படாமல் இருக்கலாம் அல்லவா? அனைத்தையும் இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும் தன்மை நம்மை விட்டு விலக வில்லைதானே? ஏற்றுக் கொள்ளும் மனோபாவம்தான் தேவை.

மிகச்சிறந்த மனிதர்கள் எல்லோரும் இன்னமும் நினைக்கப் படுவதன் காரணம், அவர்கள் அவர்கள் பெற்ற துன்பங்களினாலோ, அடைந்த இழப்புக்களினாலோ அல்ல! மாறாக அவற்றை எவ்விதம் எதிர்கொண்டார்கள் என்பதால் தான்.

எல்லாம் சரிதான். சொல்வதற்கு சுலபம் தான். அனுசரிப்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்கிறீர்களா? வழுயுண்டு. அதுதான் ‘ஆன்மீகப் பாதை’! எந்த மதமாக இருந்தாலும் சரியே! 

 ‘நான் யார் என்பதை உணர்ந்து கொண்டால் எல்லாம் நலமே!

அதற்காக சதா முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு வேலை வெட்டி செய்யாமல் சோம்பித்திரிய வேண்டியதில்லை.

வாழ்க்கை  நம்மீது எந்தெந்த சுமைகளையெல்லாம் சுமத்துகிறதோ அவற்றையெலாம் சலிப்பின்றி சுமக்கத்தான் வேண்டும். நமக்கு விதிக்கப் பட்ட கடமைகள் அனைத்தையும் சலிப்பும்,சளைப்புமின்றி செய்துதான் தீர வேண்டும்.  அவ்விதம் செயல்படும்பொழுது நமது ‘மையப்புள்ளி’ பிரழாது-சலனப்படாது-இயல்பு நிலை மாறாது-நான் வெறும் அம்புதான் என்பதை உணர்ந்து, கர்மாக்களை நிறைவேற்ற வேண்டும். சிந்தனை ரீதியாக – உணர்ச்சி ரீதியாகச் சிக்கிவிடாமல்!


“நீங்கி நின்று செயலாற்றுதல்” என்பது இது தான்.


நமது கடமை பிணம் எறிப்பதோ, கல்லுடைப்பதோ, ஜாவா எழுதுவதோ அல்லது போர் புரிவதோ – எதுவாயினும் சரி..விளையாட்டாய், பற்றற்று இறுக்கமின்றி செயதோமனால், இப்பிறவியை கடப்பது மட்டுமல்ல; பிறவியே கூட இல்லாமல் போகலாம்.

வாழ்க்கையில் இறைவன் நமக்கு அளித்த கடைமைகளை சலனமின்றி, அவற்றிகுரிய தர்மங்களொடு நிறைவேற்று.  பலன் கள் எதுவாயினும் அதன்பேரில் நமக்கு உரிமை இல்லை. அவை நம்மை பாதிக்கக் கூடாது. எது நடந்ததோ அவை நன்றாகவே நடந்தது!

 – பகவத் கீதை.


1 comment:

  1. கண்ணீர் வரவைக்கும் பதிவு. பற்றற்ற மனம் எத்தனை முயன்றாலும் சாத்தியப்படுவதில்லைதான். இறைவன் பொறுமை தரவேண்டும்.

    ReplyDelete