Monday, July 28, 2014

பிறந்த நாள் பரிசு.

1976. எனது நண்பர் ஒருவரது இல்லம்.

நானும் எனது மனைவியாக ஆகப்போகிறவரும் சந்திப்பதற்காக  நங்கள் ஏற்படுத்திக் கொண்ட இடம். ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.

கணவன்-மனைவி என்னும் உரிமை இன்னமும் வாய்க்கப் பெறாத தினங்கள் அவை.

பேச்சு வாக்கில்,  ‘ஒரு பாட்டு பாடேன்..’ என்றேன்.

‘வேண்டாம்..’

‘ஏன்.?.’

‘எனக்கு சரியாக பாட வராது...’

பொய்.. நன்றாக பாடுவார். நல்ல குரல் வளம். ஓரளவிற்கு கர்னாடக சங்கீத ஞானம் உள்ளவர். பெரும்பாலான இராகங்களை அடையாளம் கண்டு கொள்வார். இருந்தும் ஏனோ தயக்கம்.

‘நீ நன்றாக பாடுவாய் என்பது தெரியும். அலட்டிக் கொள்ளாமல் பாடேன்.’

‘சரி.. பாடுகின்றேன்.  ஒரு கன்டிஷன். நீங்களும் ஒரு பாட்டு பாட வேண்டும்.’

‘அட... குயிலுடன் இன்னொரு குயில்தான் பாடணும்.. கழுதை அல்ல...’

‘நீங்கள் எனக்கு குயில்தான். பாடுங்கள்’

‘இன்று உன் ராசிக்கு இப்படி அனுபவிக்கனும்னு எழுதியிருந்தால், நான் மாற்றவா முடியும்? அனுபவித்துக் கொள். முதலில் நீ பாடு...’

பார்த்தேன்.. ரசித்தேன் என்ற பாடலைப் பாடினார்.

உங்களுக்கு, அந்த பாடல் தெரியும் என்றாலும், பாடலின் உன்னதமான வரிகளை உத்தேசித்து, அந்த பாடல் வரிகள் கீழே:

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இவரென மலைத்தேன் .

கொடித்தேன் இனியங்கள் குடித்தேன்என
ஒரு படி தேன் பார்வையில் குடித்தேன்
துளிர் தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளிர் தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன்

மலர் தென் போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனி தேன் இல்லாதபடி கதை முடித்தேன்

நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

கண்களை மூடி, நெக்குருகி பாடி முடித்தார். குரல் செழுமை, வரிகளின் பெருமை, உணர்வு பூர்வமான பாவம், அந்த நேரத்திற்கு ஏற்ற பாடல் தேர்வு -  ஆகியவற்றால் பிரமித்துப் போய்க் கேட்டுக் கொண்டிருந்தோம்.

பாடல் முடிந்தது. அனைவரிடமும் மௌனம்.

‘என்ன.. பாட்டு நன்றாக இல்லையா?’

பிறகுதான் நினைவுக்கு வந்து, நான், என் நண்பர் குடும்பம் - அனைவரும் கைதட்டி மகிழ்ந்தோம்.

பிறகுதான் சங்கடம் துவங்கிற்று.

‘இனி உங்களது முறை.’

‘ஐயோ... வேண்டாம். உனது இனிய பாட்டிற்கு பின், என் கழுதைக் குரலைக் கொண்டு பாடினால், சுவையான காஃபிக்குப் பின் எட்டிக் காயை உண்பது போல இருக்கும்..’

‘பரவாயில்லை.. எனக்கு வேண்டும்’.

விதி யாரை விட்டது! எந்த பிர்காவும் இல்லாத, சராகமாக பாடக்கூடிய
‘உள்ளம் என்பது ஆமை...’ என்ற பாட்டைப் பாடினேன்.

‘ஏன்.. நன்றாகத் தானே பாடுகிறீர்கள்?’

‘அது சரி... காக்கைக்கும் தன்.....’

சிரித்துக் கொண்டு சென்றோம்.

இது நடந்து 38 ஆண்டுகள் ஓடிவிட்டன.

இன்று நினைவுகளில் வாழுகிறார் எனதருமை விஜி

எங்களது பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் நாள் வரை, எங்களது அன்பு மகளைத் தூங்கச் செய்வதற்காக, நானும் எனது மனைவியும் மாறி,மாறி பாட்டுப் பாடுவோம். மகளும் அதைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவார். 

தவறாமல் மனைவியின் பாடல் லிஸ்டில் ‘பார்த்தேன்.. ரசித்தேன்.. இடம் பெரும்’  அது சமயம், என்னை அறியாமல், எனது கைகள் மனைவியின் தலையை கோதிக் கொடுக்கும்.

அது போல எனது பாடல் லிஸ்டில் ‘உள்ளம் என்பது ஆமை..’ இடம் பெறும். அப்பொழுது, அவரது கைகள் தானாக என்னைப் பற்றிக் கொள்ளும்.

இன்று (29/07/2014), அவர் ஈன்றெடுத்த பெண் மகவுக்கு இன்று 35வது பிறந்த நாள்.




உள்ளம் என்பது ஆமை தான்.  

எல்லா உணர்வுகளையும் என்னுள்ளே சுருக்கிக் கொண்டு, பகிர்ந்து கொள்வதற்கும், பரிமாறிக் கொள்வதற்கும் உற்ற ஜீவன் இன்றி, சொன்னாலும் புரிந்து கொள்ள இயலாத இவ்வுலகத்தில், ஓட்டை மட்டும் காட்டிக் கொண்டு, தனித்திருக்கிறேன்.

மற்றவர்களுக்கு, எனது துணைவியார் ‘மாண்டார் லிஸ்டில்’ இன்னுமொரு பெயர். அவ்வளவே. எனக்கு அவரே தெய்வம்.

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை

தண்ணீ தணல் போல் எரியும்
செந்தணலும் நீராய்க் குளிரும்
........ பகை போல் தெரியும்
அது நாட்பட ,நாட்படப் புரியும்

எனது மகளுக்கு, நாங்கள் பாடித் தூங்கவைத்த இந்தப் பாடல்களையே பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன்.


நெஞ்சில் தூங்கிக் கிடக்கும்  நீதிகளோடும், நினைவுகளோடும் -  நான்.

Tuesday, July 22, 2014

கற்பழிப்பும் - தூக்குத் தண்டனையும்.


முக நூலில் கற்பழிப்புக் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை தேவையா-இல்லையா என ஒரு ‘வாக்கெடுப்பு’ நடத்தும் செய்தியினைப் படித்தேன். அந்த செய்தியில் எனது ‘கமெண்டாக’ நான் எழுதியிருந்தது:
------------------------------------------------------------------------------------------
இந்த கருத்துக் கணிப்பு வெட்டி வேலை.

‘ஆம்’ என்று சொன்னால் பெங்களூர் கிராதகனை தூக்கில் போட்டு விடுவார்களா?

அடிப்படைக் காரணங்களை ஆராயாமல், மேம்போக்காக எழுதப்படுபவை இவை.
கடுமையான தண்டனைகள் இருக்கும் சில நாடுகளில், கற்பழிப்பு நடக்கவே இல்லையா?
“பெண் சிசுவைக் கொல்லாதே” என்று ஆட்டோ பின்னால் எழுதுவதற்கும் இந்தப் பிரச்சினைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஏன் பெண் குழந்தைகள் வேண்டாம் என்கின்றனர்? இதன் ஆதார காரணத்தை அறியா விட்டால், இன்னும் எத்தனை பிரச்சாரங்கள் நடந்தாலும், பெண் சிசுக் கொலைள் நடந்தே தீரும்!

ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணச் செலவு மட்டுமே 30 லட்சம் என்றால் (இதைத் தவிர ஆண் குழந்தைகளைப் போலவே படிப்புச் செலவு, வாகணச் செலவுகள் அனைத்தும் உண்டு; திருமணத் திற்குப் பின்னரும் தொடரும் சீர்வரிசை சடங்குகள்! ), எவன் (சாதாரண குடும்பங்களில்) பெண்ணைப் பெற்றுக் கொள்ள விரும்புவான்? திருமணக் கொள்ளையை நிறுத்தாமல் எதுவும் சாத்தியப்படாது!!

அது போலவேதான் இந்த வன்புணர்வு நிகழ்வுகளும்.
கற்பழிப்புகளுக்கு கடுமையான தண்டனை தேவையே! ஆனால் மக்கள் ஏன் இப்படி ‘செக்ஸ்’ வெறி பிடித்து அலைகின்றனர் என்பதற்கான காரணத்தையும் ஆராய வேண்டும்.

தெரிந்து கொள்ளுங்கள்!

மக்களின் ரசனைகள் உருவாக்கப் படுகின்றன.
கலாச்சாரங்கள் திட்டமிட்டு உடைத்தெறியப் படுகின்றன.
இவற்றைப் புரிந்து கொள்ள சர்வதேச அரசியல் சதிகளை தெரிந்து கொள்ளும் நுணுக்கம் வேண்டும்.

இன்டர்நெட்டும், செல்ஃபோன்களும் சப்தமின்றி செய்யும் கலாச்சார சீரழிவுகளை, களைவது யார்?

இந்த வேலையை மீடியாக்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில் அனைத்து மீடியாக்களும் ‘பெரியண்களின்’ அடிவருடிகளே! மீறி நடந்து கொண்டால் மீடியா நடத்த முடியாது!

இதனால்தான் கலாச்சாரத்தை காப்போம் என்ற கோஷம், சிலரால் எழுப்பப் படுகிறது!

பிரச்சைனை என்னவென்றால்,
இந்த தலைமுறையினருக்கு தமிழில் பேசினால் அசிங்கம், பேச வெட்கம்.
கூட்டுக் குடும்பம் ஆகாது!
பெரியவர்களை மதிக்கத் தெரியாது!
நமது கலாச்சாரம் புரியாது!

சினிமா நடனங்களை ‘மியூட்’ செய்து பாருங்கள். எவ்வளவு அறுவருப்பு! ஆபாசம்!! மாகசின்களில் பாதிக்கு மேல் ‘சினிமா’ கவர்ச்சி!! நமக்கு பார்த்து-பார்த்து மரத்துப் போய்விட்டதுதான் சோகம்.

பெண்களுக்கான ‘டிரஸ் சென்ஸ்’ உருவாக்கப் படுகிறது. ‘வெளிக்காட்டுதல்’ நாகரீகம் என்பது சகஜமாகிவிட்டது.
போதாக் குறைக்கு இந்தியா முழுவதும் பெருகி ஓடும் சாராயம்.
இவ்வளவு அபத்தங்களையும் அனுமதித்துவிட்டு, அனுபவித்துவிட்டு, ‘ஆ.. கற்பழிப்பு’ என்று அலறுவது நம்மை எங்கும் கொண்டு போய்ச் சேர்க்காது!

மொழியை அழித்து, கலாச்சாரத்தை அழித்து, ஏகபோகமாக கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கு, இம்மாதிரியான சீரழிவுகள் தேவை! துச்சாதனர்களையும், இராவணன்களையும் இவர்கள் தான் உருவாக்கு கிறார்கள். கயவர்களை விட்டுவிட வேண்டும் என்று சொல்லவில்லை-தண்டிக்க வேண்டியது தான். கூடவே இதையும் சேர்த்துப் பாருங்கள் என்கிறேன்.

“பெரியண்ணன்கள்” தங்களது சதியை மறைக்கத்தான் ‘தூக்கில் போடும் நாடகமும்..’

“ஆசிரியர்களே” இம்மாதிரியான கற்பழிப்புகளை நடத்துகிறார்கள் என்றால், நமது சமூகம் எவ்வளவு புறையோடிப் போயிருக்க வேண்டும்.

இந்த நாட்டு பெண்களின் நிலையை நினைத்தால் நெஞ்சில் உதிரம்  கொட்டுகிறது!

Saturday, July 19, 2014

உறவுச் சிக்கல்கள்:

சேர்ந்து வாழ்ந்த மனிதரெல்லாம் சேர்ந்து போவதில்லை!

தெரிந்த விஷயம் தான். என்றாலும் சேர்ந்து வாழ்ந்தவர் மறைந்தபின், எவ்வளவு குழப்பங்கள்? சங்கடங்கள்? யோசிக்கிறேன்.

இந்த சிக்கல், சங்கடம் எனக்கு மட்டும் தானா? இதே மாதிரியான 
துயரத்தை எதிர்கொண்டவர்கள், எதிர்காலத்தை எவ்விதம் எதிர் கொள்கிறார்கள்? தனிமைத் துயரை எவ்விதம் சந்திக்கிறார்கள்?

ஒரு ஜீவன் மறைந்தபின் நெருங்கிய உறவுகள் கூட, 
ஏன் சிக்கல் நிறைந்ததாகிவிட்டன?

சமூகம் நம்மை பார்க்கும் விதமே மாறிவிட்டதா?
அன்று நான் எப்படியோ அப்படியேதானே இருக்கிறேன்!
அன்று சகித்துக் கொள்ளப்பட்டவன், இன்று ஏன் நிராகரிக்கப் படுகிறேன்?


மிகச் சாதாரண சொற்கள்கூட, எப்படி-ஏன் விபரீதமாக
பொருள் கொள்ளப் படுகின்றன?

சில ‘அரசியல்கள்’ ஏன் புரியமாட்டேன் என்கிறது?
அல்லது மிகத் தாமதமாக புரிகிறது?

என்னிடம் எந்த மாற்றமும் இருப்பதாக உணரவில்லை!

மனைவி ஒரு மந்திரசாலிதான்!
அவருக்கு சிக்கலைத் தீர்க்கும் கலைகள் கைகூடி வந்திருந்தன!
எல்லாவற்றிற்கும் அவரிடம் விளக்கம் இருக்கும்!

சிலர் திடீரென பேசினால் என்ன அர்த்தம்?
பேசுவதை நிறுத்திவிட்டால் என்ன பொருள்?
நீண்ட நேரம் ஏன் பேசுகிறார்கள்?
ஏன் சட்டென முடித்துக் கொள்கிறார்கள்?
கூறப்பட்ட வாக்கியத்தின் பொருள் என்ன?
வாக்கியத்தின் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன?
-யாவும் அவருக்குத் தெரியும்

-எல்லாவித ‘டிப்ளமசிகளயும்’ புரிந்துகொள்ளும்,  நிர்வகிக்கும் திறன்வாய்ந்தவராக இருந்தார்.

கழைக்கூத்தாடிகள் மெல்லிய கயிற்றில் கூட சுமையைத் சுமந்து கொண்டு, பாலன்ஸ் செய்தபடி, கீழே விழாமல் அந்தப்பக்கம் சென்றுவிடும் நுணுக்கம், சாமர்த்தியம், நிதானம் – இவை எவற்றிற்கும் சளைக்காத திறமைகளோடு குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவர் இருந்தவரை எந்த சிக்கல்களும் எழுந்ததில்லை. எழுந்தாலும் சிடுக்கெடுக்கும் தந்திரம் தெரிந்து வைத்திருந்தார்!


அவர் இறந்த  சில நாட்களிலேயே, வம்புகளும் சிக்கல்களும் வெள்ளமென ஏன் வருகின்றன? மறைந்த அந்த உன்னத ஜீவனுக்கே மரியாதை இல்லாத பொழுதில், அவரை அண்டி வாழ்ந்த என்னை எவர் சீண்டுவர்?

பேசாமல் ஓரிடத்திலேயே அமர்ந்திருந்தாலும், நிர்பந்தங்களும் – அழுத்தங்களும் ஏன் தேடி வருகின்றன?

என்னால் எவருக்கும் பளு இல்லை;
எந்த எதிர்பார்ப்பும் எவரிடமும் இல்லை;
எவரிடமும் எதுவும் நானாக கேட்டதில்லை;
இருந்தும் ஏன் இரக்கமின்றி நடத்தப்படுகிறேன்?
என் சொற்கள், ஏன் வலிந்து பொருள் கொள்ளப் படுகின்றன?
என்னை வசைபாட, ஏன் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்?
விலகி-விலகி சென்றாலும் கூரான சொற் கற்கள் ஏன் துரத்துகின்றன?

எனக்கான உணவு ஒதுக்கப் பட்டிருக்கிறது என்றே நம்புகிறேன்;
அதுவும் கூட இல்லையென்றால்  நான் என்ன வாகியிருப்பேன்?

இனி ஓடி ஒளிய, என்னிடம் இடம் இல்லை;
உடல் மரத்துவிட்ட்து;
உள்ளம் காய்த்து விட்டது;
பெருகிவரும் அன்பைத் தேக்கி வைத்திருக்கிறேன்;
கொள்வார் எவருமில்லை!

பழைய் திரைப்படப் பாடல் ஒன்று:
“வற்றாத நதியே காஞ்சு போனால்,  நான் எங்கு செல்வது” என்று.

“அன்பு நீர் வற்றாது என நினைத்த நதியே  நம்மை காய்ச்சும் பொழுது..” இனி எதை நம்பியும் பலன் இல்லை.

“நன்றி கெட்ட மாந்தரடா.. இது நானறிந்த பாடமடா..”
இது தான் ஞானம் போலும்.

தவறு என்னிடம் தான்.

எல்லாவற்றையும் “கே.வி (என் மனைவி)” பார்த்துக் கொள்வாள் என விட்டுவிட்டு, அலுவலகத்தையும், வெட்டி சித்தாங்களையும், புத்தகங்களையும்,  விடாமல் உபாசித்ததால், மனிதர்களை புரிந்தும் கொள்ளும் பாங்கை விட்டு விட்டேன்.

ஒப்புக் கொள்கிறேன். சொற்களின் நேரடிப் பொருளும், அவற்றின் மறைமுகப் பொருளும் விளங்கவில்லை. மனிதர்களை புரிந்து கொள்ள இயலவில்லை. கே.வி யை சார்ந்தே இருந்து விட்டதால், புதிதாக வாழ கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது!

தாய்-தந்தையை பார்த்தது கூட இல்லை;  
நான் மழலையாய் இருக்கும் பொழுதே மரித்தனர்.

ஊரார் தயவில் படித்து,
பெற்ற மதிப்பெண்களால் வேலை கிடைத்து,
பிறவிப் பலனால் ‘அவர்’ என்னைத் தேர்ந்தெடுத்து......
இதனால் மனிதர்களை புரிந்துகொள்ளும் வாய்ப்பற்றிருந்தது!
அனைத்தும் கனவு போல இருக்கிறது.

அவர் கையைப் பிடித்துக் கொண்டே காலைத்தை ஓட்டிவந்த நான், 
படகு கவிழந்தபின், புதிதாக நீச்சல் கற்றுக் கொள்கிறேன்.

சுழல் மிகுந்த வாழ்க்கை ஆறு!
ஆற்றின் போக்கு புரியவில்லை!
நீச்சலும் கைவரவில்லை!
மூப்பினால் தளர்ந்து விட்டேன்!
ஆற்றின் கரையில் பத்திரமாக இருப்பவர்கள்
என் மீது கல்லெறிகிறார்கள்!
ரத்தம் வடிவதைப் பார்த்து சிரிக்கிறார்கள்!


இத்தனையும் தாண்டி கரை சேர்வேனா?
அல்லது மூழ்குவேனா?
புரியவில்லை!

புரிந்தது இதுதான்:

அவரவர்கட்கு அவரவர் வேலை!
எவரிடமும் அன்பை எதிர்பார்க்காதே!
சோகத்தைச் சொல்லாதே!
உலகு உன் துயரத்தைக் கண்டு கெக்கலிக்குமேயன்றி
கைகொடுக்க முன் வராது!

அன்பு உன்னதமானதுதான்!
எல்லோரிடமும் செலுத்தத்தான் உரிமையுண்டு!
திரும்ப செலுத்துபவர் மரணித்து விட்டார்!

சவங்கள் நடமாடும் உலகில், மனிதர்களை எதிர்பார்த்தால் எப்படி?

இறைவன் அழைக்கும் வரை போராடு!
மனிதர்களைப் புரிந்து கொள்!
பிடிக்காதவற்றை ஏற்றுக் கொள்ளாவிடினும்
சகித்துக் கொள்ள கற்றுக் கொள்.

இன்று - நாளை, என்று நாளை எண்ணிக் கொண்டிருப்பேன்.
என்று உந்தன் சன்னதியில் என்னை
ஏற்றுக் கொள்வாயோ - அதுவரை!!



Friday, July 18, 2014

ஷார்ட் பிரேக் ....

உக்கிரமான வெய்யில். வறண்ட வாணிலை. சலிப்பூட்டும் தினசரி வேலைகள். வெறுமை கொண்ட மணம். இன்னும் ஒரு நாள் கழிந்தது என தினங்களை எண்ணிக்கொண்டிருந்தபோது, “என்ன ஃப்ரண்டு..., குற்றாலம் போய் வரலாமா?” என உற்சாகக் குரல் எழுப்பினார் நண்பர் ஒருவர்!

தண்ணீரைப் பார்த்ததும் ‘படகு’ சவாரி என்பதும், அருவியைக் கண்டதும் சட்டையை கழற்றுவதும் எனக்கு என்றைக்கும் ஏற்புடையாதாக இருந்ததிதில்லை. அருவிக் குளியல்  நிதானமாக அனுபவிக்க வேண்டிய விஷயம். குற்றாலக் கூட்டம் பிரசித்தம் ஆயிற்றே? மந்தை போல, மேலே வந்து விழுவதும், கால்களை மிதித்துக் கொண்டு நெருக்கித் தள்ளுவதும், ஐந்து நிமிடத்திற்குமேல் நின்றால் ‘லத்தியால்’ விலக்கப்படுவதும்  விரும்பத் தக்கதாக இருந்ததில்லை. எனவே குற்றாலம் சுகமே ஆயினும், இந்த இம்சைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு வினாடி மௌனம் சாதித்தேன்.

“இங்கே உட்கார்ந்து கொண்டு என்னத்தைக் கிழிக்கப் போகிறீர்.. ? வாருமைய்யா... நீரே உமக்கு ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு, அதற்குள்ளேயே ஏன் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறீர்?  கண்களைத் திறந்து பாருங்காணும்... ரசிக்க, ருசிக்க, பார்க்க நிறைய உலகில் நிறைய இருக்கிறது; ரெண்டு நாள் வெளியே போய்வரலாம்.. .”

“சரி.. வருகிறேன்... ஆனால் ஒரு விண்ணப்பம்....”

“ஒண்ணும் பேசப்படாது.. எதுவாயினும் பார்த்துக் கொள்ளலாம்..”

13/7/14, ஞாயிறு அன்று குற்றாலம் நோக்கி பயணம்.
14/07/14 அன்று விடியற்காலையில் குற்றாலத்தை அடைந்தோம்.

என்ன அநியாயம்?  தமிழகம் தானா இது?

வாடைக் காற்று மெற்கிலிருந்து வலுவாக வீசிக் கொண்டிருந்தது!

மேகக் கூட்டங்களை கிரீடமாகத் தரித்துக் கொண்டு, கம்பீரமான மலைகள்!

மலைகள் யாவும் பச்சைபோர்த்திக் கொண்டு.. ஆஹா..  என்ன ரம்மியம்!

ஊரெங்கும் பூந்தூற்றலை இறைத்துக் கொண்டிருந்தன, கரு மேகங்கள்!
பகுதி முழுவதும் இதமான குளிர்.
அதிசயமாக குறைவான கூட்டம்.

“அட அல்பங்களே... எமக்கு முன் மானிடர்கள் எல்லாம் எம்மாத்திரம்?” என எள்ளி நகையாடுவது போல பேரிரைச்சலோடு, கம்பீரமாக, ஆணவத்தோடு, ஆக்ரோஷத்தோடு ஆர்ச்சைத் தாண்டி விழுந்து கொண்டிருந்தது பேரருவி.

பாறைகளில், அசுர பலத்துடன் முட்டி மோதி, சிதறி, ஆர்ச்சைத் தாண்டி
சீறிப் பாயும் அழகை எப்படி வர்ணிப்பது?

அருவிகளிலிருந்து எழும் சிதறல்களே அருவிபோல யாவரையும் நனைத்துக் கொண்டிருந்தது.


அப்படியே மேலெழுந்து, அருவியினோடே கீழே ஸ்லோ மோஷனில், சினிமா போல, கீழே இறங்கி வந்து பார்க்க விழைந்தது மனது.

மதயாணை போல விழுந்த அருவி, தரையைக் தொட்டு ஆறாக மாறியதும் குணம் மாறிப் போய் நளினத்துடன், அமைதிகொண்டு நெளிந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது- ஆழமான,அர்த்தமான புன்னகையுடன்.

மனம் சடாரென உற்சாக களம் கொண்டது.  “புதிய வாணம்.. புதிய பூமி.. எங்கும் சாரல் மழை பொழிகிறது”  என்ற எம்.ஜி.ஆர் நிணைவுக்கு வந்தார். சரோஜாதேவிதான் மிஸ்ஸிங்.

அங்கே இருந்த  நாட்கள் முழுவதும் வஞ்சனையின்றி ‘சாரல் மழையை’ மேற்கு மலைகள் அள்ளி-அள்ளி தெளித்தன. One cannot ask more.

சந்தடி இன்றி, ஐந்து, சிற்று, புலி, பழைய என அனைத்து அருவிகளிலும் அதிகாலை, மதியம், மாலை, இரவு என தலா இரண்டு மணி நேரத்திற்கு குறைவில்லாமல் குளியில்.

இக்கணமே வாழ்வின் இறுதி நொடி என்பது போலவும், வாழ்க்கையின் நோக்கமே இதுதான் என்பது போல அள்ளி அள்ளி அனுபவித்தோம்.

உணவு, சாரலில் நனைதல், அருவியில்  நீராடுதல் இவை மாத்திரமே செய்து கொண்டிருந்த கணங்களாக, தினங்களாக கழிந்தன.

Manimutha Falls


உபரி சந்தோஷங்களாக அகத்தியர் அருவி, மணிமுத்தா அருவிக் குளியல்கள்.

மணிமுத்தா அருவியில் எங்களைத்தவிர எவருமே இல்லை. அச்சுறுத்தும் ஆர்பாட்டமோ அல்லது சிறு நீர்த்தாரைபோல ஒழுக்கோ இல்லாமல் நிறைவாக விழுந்து கொண்டிருந்தது மணிமுத்தா. அகத்தியரும் அதுபோலவே!

எங்களின் சில ஆர்வக் கோளாறிகள், அருவிக்கடியில் படுத்துக் கொண்டும் உட்கார்ந்து கொண்டும் அலம்பல். அனுபவம் யாவும் திகட்ட-திகட்ட!

அருகில் இருக்கும் தென் காசிவிஸ்வனாதர் கோயில்’ அனைவருக்கும் தெரிந்தது தான். கோயில் விசேஷம் என்னவென்றால், நாம் கோயில் கோபுரத்தை நெருங்கும் பொழுது, கோயிலின் உள்ளிருந்து காற்று வெகு வேகமாக வெளியே வீசுகிறது. ஆளை வெளியே தள்ளுவது போல!

மெல்ல கோபுரத்தைக் கடக்கிறோம். இப்பொழுதும் நம்மை வெளிப்புறம் தள்ளும் காற்று.

கோபுரத்தைக் கடந்து, கோயிலினுள் நுழைகிறோம். காற்று இல்லை! இரண்டு அடிக்கு தூரத்திற்கு அமைதி.

இன்னும் ஒரு அடி நடக்கிறோம். இப்பொழுது நேர் எதிராகா,  அதாவது, கோயிலின் வெளிப்புறத்திலிருந்து சந்நிதானத்தை  நோக்கி, உட்புறமாக,  வலுவாக காற்று வீசுகிறது.

சட்டென திசைமாறி காற்று வீசுவதற்கு கோயிலின் கோபுர அமைப்பு காரணமா எனத் தெரியவில்லை. வீடியோ பார்க்க, இந்த லிங்க்கைத் தொடருங்கள். 

பாப நாசம் சென்று ‘பாப நாசநாதரையும், உலகம்மையையும் (என்ன ஒரு அழகான தமிழ்ப் பெயர்!) வணங்கி வரவேண்டும்’ என்ற  நெடுநாளைய ஆசை நிறைவேறியது. கோயிலின் முன்னால் தாமிரவருணி நதி பேரழகுடன் பாய்கிறது. ஆற்றில் இறங்கிக் குளிக்க பிரம்மாண்டமான, அழகான படிக்கட்டுகள். படிகளை நிறைத்துக் கொண்டு தாமிரவருணி பிரவாகமாம செல்கிறாள். 

ஆற்றில் இறங்கி (Seshtai பார்க்க சேஷ்டைகளுடன் குளித்து பாவங்களைத் தொலைத்து பாபநாச நாதரை வணங்கி வந்தேன்.

கொசுறு:

செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் குண்டார் அணைக்கும், அதற்கும் மேலே இருக்கும் ஒரு அருவிக்கும் சென்று வர திட்டமிட்டோம். அதன்படியே காலையில் புறப்பட்டும் சென்று கொண்டிருந்தோம்.

போகும் வழியில் நடுவில் ஒரு ஊரில், ஒரு பெண் நாய்க்காக, இரண்டு தெரு நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஓட்டுனர் நாய்களைக் கவனித்து வேகத்தைக் கட்டுப்படுத்துக் கொண்டார். சாலையின் அந்தப் பக்கம் இருந்த ஆண் நாய் ஒன்று, என்ன நினைத்ததோ தெரியவில்லை, சடாரென வேனின் நடுவே பாய்ந்தது. முன் சக்கரம் கடந்து போய் விட்ட நிலையில் ஓட்டுனரால் ஏதும் செய்ய இயலவில்லை.

‘உச்..’ கொட்டிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மேலே சென்று, அணையை பார்க்க யத்தணித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு இருசக்கர வாகணத்தில் ஒருவர் வந்தார். மிரட்டும் தொனியில், என் நாயை அடித்துப் போட்டுச் சென்றதும் இல்லாமல் நிறுத்தாமல் சென்றது ஏன் சண்டைக்கு வந்தார்.

இதோ பாரப்பா.. எவரும் வேண்டுமென்றே எதுவும் செய்ய மாட்டார்கள். தெரு நாய் குறுக்கே பாய்வதெற்கெல்லாம் யார் என்ன செய்ய முடியும்.
வீட்டு நாய் என்றால் உள்ளே கட்டி வைத்திருக்க வேண்டுமல்லவா?

அந்த மனிதர் எந்த நியாயத்திற்கும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. சமாதாணம் ஆவதாகவும் தெரியவில்லை.

“முடிவாகச் சொல்லு, உனக்கு என்ன தான் வேண்டும்” என்ற வினாவிற்கும் பதிலளிக்கத் தெரியவில்லை.

திடுதிப்பென்று, “மூவாயிரம் ரூபாய் கொடுங்கள்” என்றார்.

“ஹாங்க்.... மூவாயிரமா? தெரு நாய்க்கா?  “
“எந்த ஊரில் ஒரு தெரு நாய், மூவாயிரத்திற்கு விற்கிறார்கள்?”
“நீதான் அந்த நாய்க்கு முதலாளி என்பதற்கு ஆதாரம் என்ன?  “
“நாயின் கழுத்தில் பட்டை கட்டியிருக்கிறாயா? “
“வா. போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம்”

வரிசையாக முண்டா தட்டி, தாக்குதல் தொடுத்தனர், வேன் நண்பர்கள்.

அணையையும் பார்க்காமல், அருவியையும் பார்க்காமல் நாங்கள் போலீஸ் நிலையத்திற்கு விரைந்தோம்.

ஆனால் அந்த நபர் அம்பேல்.

காசு பிடுங்குவதற்கு, மக்கள் என்னவெல்லாம் யோசனை செய்கிறார்கள்?

திடீரென்று, எங்கள் கோஷ்டியில் இருந்த ஒருவர், மெய்ஞானம் பெற்று விட்டார்!

“இந்த நிகழ்ச்சியிலிருந்து என்ன தெரிகிறது?” என்றார்.

“சொல்லுங்கள்?”

“காமத்தில் நிதானம் இழந்து, அங்கும் இங்கும் ஓடினால், அடிபட்டு சாக வேண்டியது தான்”.

“அட கடவுளே.. பாபநாச  நாதரே.. பாவிகளை ரட்சியும்...”
-0-