Sunday, March 30, 2014

நிமித்தம் – புத்தகம்

இது திரு.எஸ். ராமகிருஷ்ணனின்  நாவல். 

ஆனந்தவிகடனில் இவரது ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’ போன்றவை ஆரம்ப காலத்தில் இவரை படிக்கத்தூண்டியவை. இவரது சமீபத்திய நாவல் ‘நிமித்தம்’.

தேவராஜ் என்னும் காது கேளாத ஒருவரின் கதை.

நாற்பத்தேழு வயதாகும் தேவராஜுக்கு, மறு நாள் விடிந்தால்  கல்யாணம். திருமணத்திற்கு முதல் நாள் எவரும் வரவில்லை! – இதுதான் முதல் அத்தியாயம். 

எதிர்பார்த்தபடி இல்லாமல், வெறும் ஐம்பது பேரோடு, அடுத்த நாள் காலையில் திருமணம் நடைபறுகிறது, கடைசி அத்தியாயத்தில்.

398 பக்கங்களில், 21 அத்தியாயங்களில்,  இடைப்பட்ட 47 வருட கதையைச் சொல்கிறார் எஸ்ரா.

திடகாத்திரமான மனிதனே ஏழ்மையால் அல்லலுறும்போது, ஒரு காது கேளாதவன், வறுமையில் என்ன பாடுபட்டிருப்பான்?  அவன் அனுபவித்த அவமானங்களை, துரோகங்களை, குடும்பத்தாரல்-ஊராரால் புறக்கணிக்கப்பட்டதை, தீவீரமாகச் சொல்லிச் செல்கிறார் திரு. எஸ். ராமகிருஷ்ணன்.

நாவலை படித்து முடிக்கும் பொழுது, அவன் பட்ட துயரங்கள், வேதனைகள் அனைத்தையும், நாமே அனுபவித்தது போல இருந்தது! ஆசிரியரின் வெற்றி அதில்தான் இருக்கிறது.

தனிமை, வெயில், மழை, அவமானங்கள் போன்ற விஷயங்களை சொல்வதில் ஆசிரியர் எப்பொழுதுமே வல்லவர். வலுவான கதைக்களத்தின் பின்னனியில், உண்மையிலேயே சொற்சிலம்பம் ஆடியிருக்கிறார்.

இவ்வளவு நுணுக்கமாக, தெளிவாக, செரிந்த நடையில் கதை சொல்கிற பாங்கு அவருக்கே உரியது.

ஏராளமான கதா பாத்திரங்கள். ஆயினும், மகாபாரதக் கதைபோல, எல்லா கதா பாத்திரங்களும், நாவலின்  அந்தந்த கதைக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றே இருக்கிறது.

தேவராஜை என்றைக்குமே அரவணைக்காத-புரிந்து கொள்ளக்கூட முயலாத அப்பா, அவனின் நன்பன் ராம சுப்பு, காசிக்குச் செல்லும் ஆச்சிகள், அந்த பினாங்குக் காரி, வைரவ செட்டியார், அவனது தாத்தா, தாத்தாவின் வெண்கலயம், ராஜாமணி போன்ற கதைகள் யாவும் தனித்தனியே ஒரு நாவலுக்குண்டான பரிமானங்ககளை, கனத்தை உள்ளடக்கியவை.

அச்சகத்தில் தண்ணீர் பிடித்து வைக்கும் ஜோஸ்வினோடு ஏற்படும் விடலைக் காதல், இறுதியில் சொல்லப்படும் சவீதாவின் காதல், காசியில் சொல்லப்படும் சிலம்பரா கதை எல்லாமே தனித்தனி குறு நாவல்கள். வெகு எதார்த்தம். அதிலும் ‘சவீதாவை’ அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.

மன வளர்ச்சி குன்றிய 'பிரபுவின்' கதை நெஞ்சத்தை நெருடுகிறது. பிரபு போன்ற பையன்கள் வாழும் பல குடும்பங்களை நான் அறிவேன். அத்தகைய குடும்பங்களில் நிகழும் அன்றாட அல்லல்களை, வேலைப் பளுவினை வெகு எதார்த்தமாக சொல்கிறார் ராமகிருஷ்ணன்.

நாத்திகர் சவரிமுத்து கேரக்டர் அபாரம்.

அதேபோலத்தான் ஓவிய ஆசிரியர் சுதர்ஸனமும் அவரது மனைவியும். நம்மில் எல்லோருமே அத்தகைய வாத்யார்களை நிச்சயம் பார்த்திருப்போம்.

தேவராஜ் வேசி ஒருத்தியை சந்திக்கிறான்.. அவளைக் கண்டு பரிதாபப்பட்டோ அல்லது அறுவறுத்தோ விலகி வரும் தருணங்களில் ஆசிரியரின் வர்ணனை உச்சம். ‘உன் பொண்டாட்டிக்கு ஆபரேஷன் நடந்தாலும் இப்படித்தான் இருக்கும்’ என்கிறாள் வயிற்றிலிருக்கும் தழும்பைக் காட்டி.  வெகு உண்மை.

தேவராஜ் காசிக்குச் செல்லும் பொழுது, நாமும் உடன் பயணிக்கிறோம். காசியின் பசுக்களையும், அவை நகரெங்கும் போடும் சானங்களையும் கூட விடவில்லை ஆசிரியர். காசியில் அவரது வர்ணனைகள் யாவும், நான் காசிக்குச் சென்றிருந்த பொழுது எப்படி உணர்ந்தேனோ அப்படியே இருந்தது.

ஊட்டியில் அவன் சந்தித்த ரூம் மேட் அனுபவம்,  ‘மேன்ஷன்’ வாசிகள் எல்லோருமே உணரக்கூடியது.

வண்டிபேட்டை கதையின் போது நாம் நூறு வருடம் பின்னே சென்று வாழ்வதுபோல உணர்கிறோம்.


நாவலின் ஊடே சொல்லும் அழுத்தமான வரிகள் யாவும் உன்னதம்.

பிறருக்கு சும்மா அட்வைஸ் பண்ணுகிறான் என்றால் அவன் பயப்படுகிறான் என்று பொருள்; அவமானங்களை சகித்துக் கொள்வது- வயதாகிப் போவதின் அடையாளம் – இது போன்று ஏராள-ஏராளமான வரிகள்!

நாவலின் எந்த ஒரு அத்தியாயத்தையும் எந்த நேரத்திலும் தனித்தனியாகப் படிக்கலாம்.  நாவலின் ஊடே, எமர்ஜென்ஸி, மண்டல், இலங்கை, எழுபதுகளின் அரசியல் யாவற்றையும் கலந்து சொல்வதால், அந்தந்த காலகட்டத்திற்குள் நுழைவது சௌகரியமாய் உள்ளது.

படிக்க வேண்டிய புத்தகம்.

உயிர்மை பதிப்பக வெளியீடு.
பைண்ட்ட பேக்.
398 பக்கங்கள்
விலை ரூ.375/-
Friday, March 14, 2014

தனிமை, தனிமையோ.....


வாழ்க்கையின் கணிசமான தருணங்களில், சந்தோஷமும் அன்பும் பொங்கிப் பெருக, தெள்ளிய நீரோடை போல இல்லாவிடினும், பெரும்
சுழல்களில் சிக்கிக் கொள்ளாமல், அமைதியாக அமைந்திட ‘காதல்’ அவசியம் தானே?

வாழ்க்கைத் துணை அமைவெதெல்லாம் யாராலோ தெரியாது! வாய்த்திட்ட துணை, காதலும் அன்பும் கொண்டவராய் அமைந்திட்டால், அனைத்தும் சுகமே! 

சிரம காலங்களை கடந்து செல்வதும், வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர் கொள்வதும்,  உற்ற துணை இல்லாமல் சாத்தியமில்லைதானே?

மனமொத்த தம்பதியினர்,  ஒருவருக்கொருவர் பாதுகாப்பளித்துக் கொள்கின்றனர். இருவரும் Insecuriety ஆக உணர்வதில்லை. துயரங்களை நம்பிக்கையுடன் எதிர் கொள்கின்றனர்.

வாழ்க்கைத்துணையினை இழந்தபின், மன அழுத்தமும், சுய நம்பிக்கை இழப்பும் மெல்ல பாசி போல படர ஆரம்பிக்கிறது. உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ள, Emotional support ற்கு ஆளில்லாமல் கையறு நிலையி லிருக்கிறார்கள். இந்த சூழ்னிலை மெல்ல-மெல்ல டிப்ரஷனுக்கு இட்டுச் செல்கிறது.

தனிமையாளர்களை,

தனிமை வாட்டும். நாளாவட்டத்தில் ஒரு குழப்பமான மன நிலைக்கு இட்டுச் செல்லும்.

அடுத்த கணத்திற்கு, நிகழ்வுக்கு, எவ்விதம்  முடிவெடுப்பது என மனக்கலக்கம் ஏற்படும்.

எவ்வளவு உறவுகளிருப்பினும், அத்யந்த உறவு இல்லாத  நிலை, கூட்டத்தின் நடுவே ‘தனியாளாய்’ நிற்பது போன்ற  நிலையை ஒத்தது.

வாழ்க்கை பொலிவிழந்துவிட்டது போல உணரப்படும்.

தனிமையும், அதன் உப விளைவகளுமாகச் சேர்ந்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எவ்வளவுதான் ஒத்துக் கொள்ள மறுத்தாலும், உண்மை இதுவாகத்தான் இருக்கிறது.


சரி... இவற்றை சமாளித்து மீள்வது எப்படி?

முதலில், தனமை ‘வாய்த்த’ சூழ்னிலையினைப் புரிந்து கொள்வது நல்லது.

(1)    என் விஷயத்தில், என் முன்னே கடவுள் தோன்றி, ‘உனக்கு உன் மனைவிதானே வேண்டும்? இந்தா வைத்துக்கொள்... விஜியை உனக்கு திரும்பத் தந்துவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை! அதே  நோயுடன், வலியுடன், வேதனையுடன் திரும்ப வருவாள்... பரவாயில்லையா?” என்று சொன்னால், என்ன சொல்வேன்? அச்சமாய்த்தான் இருக்கிறது.

மீண்டும், அவள் அந்த நரக வேதனையை அவள் அனுபவிக்க வேண்டுமா?  அதனைப் பார்த்து   நானும், நட்பும், சுற்றமும் அல்லலுற வேண்டுமா?  அல்லது தனிமையே பரவாயில்லை என்று சொல்வேணா?

(2)    நேர்மையுடன் பதிலளித்தால், பல கணவன்மார்களும்-மனைவிமார்களும், துணையிருக்கும் பொழுதே, சொல்லக்கூடிய-
அல்லது செல்லமுடியாத பல்வேறு காரணங்களினால், சேர்ந்திருக்கும் பொழுதே, தனிமையில் வாழ்வதாய் ஒத்துக் கொள்வார்கள்.

(3)    வாழ்க்கைத் துணை, உடனிருப்பது மட்டுமே, மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் உத்தரவாதமளிக்காது. அவை இன்னும் பல மனம் சார்ந்த-உடல் சார்ந்த விஷயங்களைச் சார்ந்தது.

(4)    ‘ஆண்டாண்டு அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ?’ எப்பொழுதுமே, ஏன் இல்லாத ஒன்றையே நினைத்து அல்லலுற வேண்டும்? இருக்கும் ஒன்றை அனுபவிக்க முயலக்கூடாதா? Try to Enjoy the loneliness.

(5)    தினசரி வாழ்வில், முன்பிருந்ததில் சிலவற்றையாவது  மாற்றியமைத்தல் சின்ன-சின்ன சுவாரஸ்யங்களைத்தரும்.

(6)    உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை, உடல் மற்றும் மன நலத்தைப் பேணக்கூடியது. ஆரோக்கியமான-இயற்கை உணவு முறையினை நாடுவது, நல்ல நட்பு வட்டாரத்தில் சேர்ந்து கொள்வது, சத்சங்க நடவடிக்கைகளில் நாட்டம் கொள்வது, சேவை நிறுவனங்களில் பணியாற்றுவது போன்றவை நல்ல பலனிக்கும்.

(7)    ஆதம பரிசோதனைகளும், ஆன்மீக ரீதியில் உயர முயலுவதும் வாழ்வின் பொருளை உணரவைக்கும்.

(8)    நல்ல பொழுது போக்கு நடவடிக்கைகளில் நாட்டம் கொள்வது சிறப்பானது. எனது ‘தனிமை’ நண்பர் ஒருவர், ‘நிதமும் மலர்களைச் சேகரித்து, மாலையாக்கி இறைவனுக்கு சாத்துவதில் இன்பம் காண்கிறார்.

(9)    Stop procrastination! Eliminate Toxic friends or similar groups.  Keep a long distance from these people. Think  for long term perspective. Look for people with similar interest / ideas.

(10)துணையின்மையையும், தனிமையும் வேறு வேறு வடிவங்கள். தனிமையே அல்லது துணையுடன் வாழ்வது மட்டுமே சுகம் என்பதெல்லாம் myth.      எல்லாம் நமது மனதில்-அதன் பாவனையில் இருக்கிறது.

(11)உணர்ச்சிவயப்படாமல், தீர்மாணமாகத்  சிந்தித்து, ‘சுய அழிவுப் பாதையில் செல்ல வில்லை’ என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

(12)வெறுமைப் பார்வையை விலக்க வேண்டும். எதிரே வரும் சந்தோஷ தருணங்களை இழக்க வேண்டாம். உலகில் இன்னமும் சில பசுமைத்திட்டுக்கள் இருக்கின்றன. கண் திறந்து பார்க்க வேண்டும்,

(13) எதிர்மறை எண்ணங்களை அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை முளையிலேயே கிள்ளியெறியுங்கள். மிச்ச சொச்ச தினங்களைஅழுது கொண்டே கழிக்க வேண்டியதில்லை. அழுவதாலும் துயருறுவதாலும் எந்த பொருளும், பலனும் இல்லை.

(14)தனியாய் வாழ்ந்து காட்டுங்கள். உங்களுக்கே நம்பிக்கை ஊற்றெடுக்கும். அண்டிப் பிழைக்க வேண்டாம். என்னைப் போன்ற தனிமை நிலையில் இருக்கும் நன்பரை,  ஒருவர் கேட்டாராம். ‘சாப்பாடு எல்லாம் எப்படி சாப்பிடுறீங்க......?” கேட்பவரின் கதைகேட்கும் சுவாரஸ்யம் நன்பருக்கு புரிந்துவிட்டது! ‘ நகைச் சுவையுடன், ஏன்..? எல்லாரையும் போல வாயால்தான் சாப்பிடுகிறேன்...” என்றார். செக்குமாடு போன்ற வாழ்க்கை முறையினை விட்டு  நீங்கி, சுவாரஸ்ய தருணங்களை கொணரலாம்.

(15)இந்த சமூகம், தனியாளை (இருபாலரையும்தான்) எதிர்மறைக் கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறது. விட்டுத்தள்ளுங்கள். தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவார் போற்றட்டும். இது உங்களது தினம். உங்களது வாழ்க்கை. அதை வாழ்வது உங்களது உரிமை.

(16)உங்களுக்கு பிரியமான நல்ல பொழுபோக்குகளை, பயணங்களை, கோயில் தரிசனகளை, தடையின்றி மேற்கொள்ள, நம்மை நாமே மேலெடுத்துச் செல்ல தனிமை நேரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

(17) நம்மையறியாமல், நமக்கு நாமே ‘அசௌகரியங்களை’ ஏற்படுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். தனிமை அச்சம் தரக்கூடியதல்ல. Bottom line is, whether we are positive or negative – it is up to us.


கொசுறு:

சில நகைச்சுவையான, சுவாரஸ்யமான தினப்படி நிகழ்வுகளை கொசுறு பகுதில் சொல்லி வருகிறேன். இன்றும் அதைப் போல ஒன்று:

ஒரு நாட்டுமருந்துக் கடையில் நின்று கொண்டிருந்தேன். எனது தூக்கமின்மை பிரச்சினைக்காக ‘கசகசா’  வாங்கிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது எனது ஒரு நன்பர் ஒருவர் ‘விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென’ டி.வி.எஸ்ஸை கொண்டுவந்து கிட்டத்தட்ட கடைக்காரர் முகத்தின் மேலே கொண்டுவந்து நிறுத்தினார்.  அரண்டு போன கடைகாரர் எழுந்து நின்றுவிட்டார்.  டி.வி.எஸ் கார்ர்  எதையும் கண்டு கொள்ளவில்லை.  ‘தேன்.. , தேன்..,  தேன்..’ என அலறினார். 

‘டி.வி.எஸ் எங்கே கடைக்குள் வந்துவிடுமோ’ என்ற பதட்டம் தனிந்த கடைக்காரர் ‘ அப்பாடி... தேன் தானே வேண்டும்?  எவ்வளவு?’

‘20 மில்லி’

‘என்ன?  20 மில்லியா?’

‘ஆமாம்..’

‘பையா.. அந்த சேம்பிள் தேன் பாட்டிலை எடு’

‘எவ்வளவாச்சு..?’

நாயைப் பார்ப்பது போல பார்த்தார் கடைக்காரர். ‘ரெண்டு ரூவா கொடுங்க...’

தெரிந்தவராயிற்றே என்ற பரிவினால், ‘ஹலோ...வணக்கம்..’ என்றேன்.

டி.வி.எஸ் கண்டு கொள்வதாய்த் தெரியவில்லை.
இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் 6 அங்குலம் தான் இடைவெளி.

விடாப்பிடியாக ‘அவரை உலுக்கி, ‘ஹலோ.ஓஓஓஓஓஓஓ... வணக்கம்’ என்றேன்.

‘ஆவ்வ்....வ்வ்வ்வ்....தா..தூ..பாஆ.. து.. ஹ்..ஹி.  பேஏஏஏஏஏஏ, ஹி...உ...... வணக்...வணக்...வணக்கம் சார்’ என்றார்.

‘என்ன இவ்வளவு பதற்றம்..?’

‘அதெல்லாம் ஒன்னுமில்லையே...  சாதரணமாய்த்தான் இருக்கிறேன்...’

‘உங்க முகத்தைப் பாத்தா ஏதோ ஆபத்தில் இருப்பது போல இருக்கிறது...!’

‘அது கிடக்கட்டும் சார்.... என் இரண்டாவது பெண்ணுக்கு டெலிவரி..
சிசேரியன்தான் நடக்கும்.. போன தடவை மாதிரி, இந்த தடவையும் நீங்கதான் இரத்தம் டொனேட் பண்ணணும்... உங்க இரத்த க்ரூப்தான் என் மகளுக்கும்....’

(எனது இரத்த வகை ஏ.ஒன் நெகட்டிவ்.  அரிதான க்ரூப். அவரது
முதல் மகள் பிரசவத்திற்கும் (சிசேரியன்) நான் இரத்தம் அளித்ததாக ஞாபகம். அதை நினைவு வைத்துக் கொண்டு, நாட்டு மருந்துக்கடை வாசலில் வேண்டுகோள் வைக்கிறார்)

வயது 61 ஆகிவிட்டதே? இரத்தம் கொடுக்கலாமா என ஒரு கணம் தோன்றியது. ஒரு ஜீவன், இன்னொரு ஜீவனை பெற்றெடுக்க போராடுகிறது. எளிதில் கிடைக்காத இரத்த க்ரூப். இப்பொழுது உதவ வில்லையெனில், உயிருடன் உலவுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

‘சரி... டென்ஷனாகாதீர்கள்.. நான் இரத்தம் தருகிறேன்..’

‘உங்க மொபைல் நெம்பர் கொஞ்சம் கொடுங்கள்...’

சொன்னேன்.

‘மொபைல் நெம்பரைக் குறித்துக் கொள்வதற்காக, மேல் சட்டைப் பையில், ஒரு இரண்டு கிலோ அளவிற்கு அடைத்துக் கிடந்த ஏதேதோ பேப்பர்களை பிடுங்கியடுத்தார்.  பேப்பர்களோடு, ஏழெட்டு பத்து ரூபாய் நோட்டுக்கள் கீழே விழுந்தன.  ‘ஐயையோ... ‘ என வாலில் தீ வைத்தாற்போல பதறி அடித்து கீழே குனிந்தார், ரூபாய் நோட்டுக்களைப் பொறுக்க... சட்டைப் பையின் அடியில் கிடந்த சில்லறை நாணயங்கள் யாவும் கலகலவென சாக்கடைக்குள் விழுந்தன. பார்டிக்கு இன்னும் டென்ஷன் ஏறிவிட்டது.

‘என்ன, இப்படி, இவ்வளவு டென்ஷனாகிறீர்கள்...? 

‘ஆஸ்பத்திரியில் எப்பொழுது இரத்தம் கொடுத்தாலும் எடுத்துக் கொள்வார்கள்.  இப்பொழுதே போகலாம் வாங்க.. எந்த ஆஸ்பத்திரி..? எப்பொழுதும் போல  ‘மகாத்மா’ தானே? உங்க மகளுக்கு ஒன்றும் ஆகாது..பயப்படாதீங்க.. வாங்க போகலாம். ஆஸ்பத்திரிக்கு. என் வண்டியிலேயே போகலாம். நீங்க பின்னாடி பதட்டமடையாம உட்காந்துட்டு வாங்க...’

‘இப்ப வேண்டாம் சார்... ஆப்பரேஷன் போது,  வந்து இரத்தம் கொடுத்தால் போதும்..’

‘சரி... எப்ப ஆபரேஷன்.. சாயங்காலமா? நாளைக்கா?’

‘இல்லை.. இன்னும் அட்மிட் பண்ணவேயில்லை..!’

வாட்? அட்மிட் பண்ணவேயில்லையா?  பின் எப்படி சிசேரியன்... இரத்தம் என்று.........?’

‘நேத்தைக்குத்தான் பிரக்னென்ட்’ என்று கன்ஃப்ர்ம் ஆச்சு....’

‘என்னாது.....? நேத்தைக்குதான் கன்ஃப்ர்ம் செஞ்சீங்களா?   இப்ப எத்தனையாவதுதான் மாசம் தான்  நடக்குது...?’

இருக்கும்... இது ரெண்டாவதோ.. மூணாவது மாசமோதான்...’


‘அடங்க்...கொக்கா மக்கா...........’Friday, March 7, 2014

மகளிர் மட்டும்!

“தலைவர் இன்னும் வரலியா?”

“இப்ப வந்துடுவார்... ஹெட் ஆபீஸுக்கு போயிருக்கார், வெயிட் பண்ணுங்க..  தோழர்...”

“சரி.. பத்து மணிக்கு வரச்சொன்னார்... அதான்.. பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்..”

“ம்ம்,,ம்ம்ம்.”

அது ஒரு தொழிற்சங்கக் கட்டிடம் (அறை). அறையின்  நடுவே மேஜை, நாற்காலி  போடப்பட்டிருக்கிறது. மேஜைக்கு எதிரே, வந்தவர்கள் உட்கார ஏழெட்டு சேர்கள். மேஜையில் ஒரு தொலைபேசி. ஓரமாக கம்ப்யூட்டர். சுவற்றில் தொழிற்சங்க தலைவர்கள் படங்கள் வரிசையாக. 

மார்க்ஸ், லெனின், சூயென்லாய் உட்பட பலரும் சண்டைபோட்டுக் கொள்ளாமல் அமைதியாக ஃபோட்டோ ஃபிரேமுக்குள்.  படங்களில் காய்ந்து போன மாலைகள்.  எதிர் சுவற்றில் ஒரு அறிவிப்புப் பலகை, தோழர்களை நன்கொடை அளிக்குமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தது. ஓரமாக ஒரு இரும்பு பீரோவின் முகத்தில், “நன்கொடை: தோழர் கனகேந்திரன்” என்றிருந்தது.

"டஸ்ட்பின்"  டீக்கப்புகளால் நிரம்பிக் கிடக்கிறது. தொழிற்சங்க இதழ்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கின்றன.

தலைவரின் நாற்காலியின் எவரும் அமருவதில்லை போலும்.

வருகின்றவர்களுக்கு ஒருவர் பதில் சொல்லிக் கொண்டிருகிறாரே, அவர் தான் உலகநாதன். அலுவலக செயலர் போல பணி புரிந்து கொண்டிருகிறார். அவரைப் பற்றி கீழே படிப்பீர்கள்.

இப்பொழுது அறையில் சலசலப்பு.  தலைவர் வந்துவிட்டார்.

இவர் கரைவேட்டி, துண்டு போட்ட தலைவர் இல்லை. பேண்ட், சட்டை
அனிந்திருக்கிறார்.

“வணக்கம்... வணக்கம்....”

“வாங்க தலைவரே... உங்களைப் பாத்துட்டுப் போலாம்னுதான் உக்காந்திருக்கேன்.”

“வாங்க தோழர் பாபு... என்ன விஷயமா பாக்க வந்தீங்க...?”

“நேத்திக்கு சொன்னேனே தலைவரே.. என்னோட மெடிக்கல் பில் இன்னமும் செட்டில் ஆகல... ஏதேதோ அப்ஜக்ஷன் சொல்லிக்கிட்டே இருகாங்க..  நீங்க தான் நிர்வாகத்திடம் பேசி, எப்படியாச்சும் செட்டில் பண்ணிக் கொடுக்கனும்.. “

“ஓ .. அந்த கேசா... அதை நேத்திக்கே, அக்கவுண்ட்ஸ்ல பேசிட்டேன். அடுத்த வாரம் செட்டிலாயிடும் தோழர்...”

“ரொம்ம தேங்க்ஸ் தலைவரே.. ஆறு மாசமா இழுத்துப் பறிச்சுக்கிட்டு நிக்கிது. அந்த பில் வந்தா ரொம்ப உதவியா இருக்கும்...”

“நமக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்.. அதெல்லாம் யூனியனோட கடமை.. அடுத்த வாரம் வந்திடும், கவலைப் படாதீங்க...”

‘இப்பதான் நிம்மதியாச்சு... “

“எல்லாரும் டீ சாப்பிடலாமா..?” என்றார் தலைவர்.

‘தோ.. நானே போய்ச் சொல்லிட்டு வர்ரேன்.. மொத்தம் பத்து டீயா?”என்றார் பாபு.

“தலைவருக்கு அரைச் சர்க்கரை..” இது தலைவரின் கைத்தடி, உலகநாதன்.

தலைவரின் கண்ணசைவுக்கு ஏவல் புரிய காத்திருக்கும் எடுபிடி. 

மைக்கைப் பிடித்தாரானால் வெள்ளமென பேச்சு கொட்டும். எந்த மேடையானாலும் சரி, மீட்டிங்கிற்கான காரண காரியம் எதுவானாலும் சரி, ஐ.நா சபையிலில் ஆரம்பித்து உள்ளூர் கழக அரசியல் வரை, எதையாவது சுவாரஸ்யமாகச் சொல்லி, மாட்டைப் பிடித்து தென்னை மரத்தில் கட்டிவிடுவார் உலகனாதன்.


பேச்சு மணிப் பிரவாகம்.  “தமிழகத்தை  உய்விக்க, ஜெயலலிதாவால் மட்டும்தான் ஆகும்” என ஒருமணி நேரம் பேசச் சொல்கிறீகளா?  உலகனாதன் தயார். அடுத்த கணமே, தமிழகத்தின் தவப்புதல்வன் கருணாநிதி தான் என பேசச் சொல்கிறீர்களா? அதற்கும் தயார்.

பேச்சு வியாபாரிகளுக்கும் என்றைக்கும் கொண்டாட்டம் தான். அவ்வாறு எந்த சப்ஜெக்டிலும், மாற்றி மாற்றி பேசுவதில் அவருக்கு என்றைக்கும் சங்கடமோ, சங்கோஜமோ, லஜ்ஜையோ இருந்ததில்லை.

பாபு, டீ சொல்வதற்கு வெளியே போய்விட்டார்.

“தலைவரே, நேத்திக்கு அக்கவுன்ட்ஸ் மேனேஜர் ஊரிலேயே இல்லியே... எப்ப பாபு மெடிக்கல் பில்லைப் பத்தி பேசினீங்க?” –கைத்தடி.

‘அதெல்லாம் அப்படித்தான் சொல்லனுமிய்யா... இல்லேன்னா, அவன் வேறே யூனியன் போயிடுவான். நாளைக்கு அக்கவுன்ட்ஸ்கிட்ட கிட்ட பேசிட்டாப் போச்சு...’

“தலைவர் சாமர்த்தியமே, சாமர்த்தியம் தான்.. “

“எங்கிட்டேயே ஊசி விக்கிறியா?”

“சும்மா தமாஷ் தலவரே...”

“மார்ச் எட்டாம் தேதி, மகளிர் விழா வருதே.., ஏற்பாடெல்லாம் ஆயிருச்சா? என்றார் கைத்தடி.


“அட... ஆமாப்பா.. மறந்தே போயிருச்சு.. “

“போன வருஷம் யாரை சிறப்பு பேச்சாளராக கூப்பிட்டோம்..?”

“தமயந்தி –ன்னு ஒரு பேச்சாளர் வந்தார். மறந்துட்டீங்களா?”

“ஆமாம் .. ஆமாம் போன தடவை, ஒத்துமை – அது இதுன்னு பேசி சொதப்பிட்டாங்கய்யா.. இந்த தடவை ‘நம்ம’ ஆளுங்களா  பாத்து போடனும்”.

‘சும்மா, நம்ம ஆளுங்கன்னு சொல்லி, கொட்டாவி வுடற ஆளுங்களை கூட்டியாந்துரக் கூடாது.. அரை மணி நேரமே பேசினாலும்,  சும்மா நச்சுனு பேசர ஆளா புடிங்க தலைவரே. சும்மா நரம்பு முறுகேத்தினாப்பல பேச்சு இருகனும்” இது அந்த தொழிற்சங்க அரையில் இருக்கும் இன்னொருவர்.

“யாரைப் போடலாம்..?” என்றார் தலைவர்.

“வேறே  யூனியன்காரங்க  போடறதுக்கு முன்னாலே,  நாம ‘மகளிர் தின மீட்டிங்’ போட்டுரனும். நல்லா டெம்போவோட பேசற ஆளுங்க டேட் கிடைச்சுடிச் சுன்னா, மத்த யூனியன் காரங்க என்னா மீட்டிங் போட்டாலும் எடுபடாது”

“நல்லா சொன்னீரய்யா.. உலகநாதன்.. இந்த தடவை நீரே நல்ல ஆளாச் சொல்லுமேம் பாக்கலாம்”

“ஆங்.. அப்படீன்னா, தமிழ்ச் செல்வியைப் போட்டுடலாமா? மதுரையில் விரிவுரையாளர். பேசினாங்கன்னா சீட்டை வுட்டு எவனும் நவுர மாட்டான். கடசி வரைக்கும் டெம்போ மெயின்டன் பண்ணுவாங்க.. புள்ளி விவரமெல்லம் அவுங்க வாயில பூந்து விளையாடும்.” என்ன சொல்றீங்க...”

“ம்ம்.. எனக்கு ஞாபகம் இருக்கு. சென்னையில ஒரு மீட்டிங்ல பாத்திருக்கேன்.ரொம்ப நல்லா பேசினாங்க... டேட் கிடைகுமான்னு கேளு”

இதோ கேட்டுடறேன்.. செல்லை எடுத்துக் கொண்டு வெளியே போனார் பேசுவதற்கு.

“தலைவரே.. கேக்கறதுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. நம்ம பொம்பளிங்க,  மீட்டிங்குக்கு வரவே மாட்டேங்கறாங்களே. நல்ல பேச்சாளரா போட்டுட்டு, கூட்டம் இல்லீன்னா சரிப்பட்டு வருமா?” -  இது இன்னொரு உதவி.

“அதும் யோசனை செய்ய வேண்டிய விஷயம் தான். இந்த ஆபீஸுல 350 பேர் இருக்காங்க.. அதுல 150 பேர் லேடீஸ்தான். ஆனாலும் மீட்டிங்னு போட்டா, கூட்டம் கூடுறதில்லியே?”

“தலைவரே 150 பேரும் நம்ம யூனியன் இல்லீங்க.. 75-80 பேர்தான் நம்மளுக்கு தேரும்...”

“தெரியும்யா.. அந்த 75 பேர் வந்தாக்கூட போதும்ல... “

இதற்குள், வெளியே போன உலகனாதன் வந்துவிட்டார்.

“ஓ.கே தலைவரே.. தமிழ்ச் செல்வி ஒத்துக்கிட்டாங்க.. எட்டாந்தேதியே வர்ராங்களாம்.. டேட் கன்ஃப்ர்ம் பண்ணிட்டேன்.”

“அதுக்குத்தான் உன்னைபோல ஒருத்தர் வேணும்கிறது. வேல சுளுவா ஆச்சு பாரு..”

“இதை ஞாபகம் வச்சுக்கிட்டு, அடுத்த தடவ, யூனியன்ல ஒரு நல்ல போஸ்ட் கொடுங்க தலைவரே..”

“கண்டிப்பா தர்ரேன், உலகநாதன்..”

பேச்சு, மீண்டும் கூட்டத்திற்கு ஆள் பிடிப்பதில் வந்து நின்றது.

“அது ரொம்ப சுலபம் தலவரே... கூட்டத்தின் முடிவில் இரவு உணவு பொட்டலம் கொடுத்துடலாம். இட்லி-பூரின்னு ஜமாய்ச்சுடலாம். அதுக் கின்னாச்சும் கொஞ்சம்  கூட்டம் கடசிவரைக்கு நிக்கும்ல...” - கைத்தடி 

“அந்த அளவுக்கு நம்ம கிட்ட காசு இருக்கா? எங்க பொருளாளர் ?”

“அட.. காசு கிடக்கட்டும் தலைவரே!. நம்ம ஸ்பீக்கரை அவுத்துவுட்டு, உணர்ச்சி வசப்பட்டு, யாரையாவது சாப்பாட்டுச் செலவை ஏத்துக்குபடியா செஞ்சுடமாட்டேன்.?”

அது உண்மைதான். உலகனாதன் நரம்புகளை சுண்டி இழுக்க வைக்கும் பேச்சாளர்.

“மீட்டிங் தலைவரா யாரைப் போடலாம்? – என்றார் தலைவர்.

“ஏன்.. நீங்களே இருங்களேன்..?”

“அது நல்லாயிருக்காதய்யா.. மகளிர் தினம்னு பேர வச்சுகிட்டு நாமே தலவர் சீட்டில உக்காரக்கூடாது. வேறா யாராவது நமக்கு கட்டுப்பட்ட லேடீஸா பாத்து உக்காத்தி வைக்கனும்.”

“அதும் சரிதான்.. மத்த யூனியன் காரங்க, லேடீஸை தலைமையாப் போட்டு மீட்டிங் நடத்திட்டாங்கன்னா, நமக்கு அசிங்கமாப் போயிரும்”

‘நம்ம ஆபீஸ்ல இருக்கும் பங்கஜத்தை தலைமைக்கு போட்டுரலாமா?”

பங்கஜம் என்பவர் அந்த அலுவலகத்தில் ஒரு சீனியர். இந்த யூனியனில் ஆரம்பம் முதலே இருப்பவர். சுமாரான பேச்சாளி. யூனியனில் வேலை கொடுத்தால், சிரத்தையாக செய்து முடிப்பவர்.

“வேணாம்யா... அந்தம்மா வேறே யூனியன் ஆட்களுங்க கூட பேசுறாங்களாமே..?”

‘அதெல்லாம் இல்லீங்க.. அந்தம்மா வேறே யூனியனுக்கெல்லாம் போகாது. உங்ககிட்ட யாரோ அவுத்து வுட்டுருக்காங்க... நம்ம யூனியன்ல ரொம்ப சின்சியர்...”

“எனக்கும் தெரியும். ஆனாலும் அவுங்க கொஞ்சம் சுயமா யோசிக்கறேன்னு  நிறைய பேசுராங்க... அந்தம்மாவுக்கும் ஒரு பாடம் கத்துக் கொடுக்கனும்ல.. இந்த தடவ பங்கஜம் தலைமையில்லை. அதுக்கு பதிலா “சுந்தரியை” போட்டா என்ன? நாம கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டாங்க, என்ன சொல்லுறே..”

“அந்த பங்கஜம் கோவிச்சுக்க மாட்டாங்களே..?”

“கோவிச்சுக்கட்டுமே...  அவுங்க நம்ம டிராப்ல இருந்து என்னிக்கும் தப்ப முடியாது.. வேற யூனியனுக்கும் போக முடியாது”

“தலைவர் ரொம்ப டிப்ளமாட்டிக்கா யோசனை பண்ணறார்.. ரெண்டு மணி நேர மீட்டிங்குக்கு யாரு தலைமை ஏத்தா என்ன? அந்த சுந்தரியையே போட்டுரலாம். “

“இந்த தடவ 150 பேராவது ஆடியன்ஸ் இருக்கனும்.  வேணுமின்னா வெளியூர்லிருந்து ஆட்களை கொண்டாரலாம்” என்றார் தலைவர்.

“அதப்பத்தி கவலப்படாதீங்க தலைவரே.. கொஞ்சம் காசை வெட்டுங்க.. கூட்டத்தை கூட்டிக் காமிக்கறேன். மத்த யூனியன்ல தலைகீழா நின்னாலும் நம்ம கூட்டம் அளவுக்கு நடத்த முடியாத படிக்கு செஞ்சு காட்டிடரேன்.”

“சரி.. நம்ம ஆளுங்களைக் கூப்பிட்டு மீட்டிங் விவரத்தைச் சொல்லனும். நோட்டீஸ் தயார் செய்யனும்.  பேனர் கட்டனும்.

“எல்லாரும் நினவுல வச்சுக்குங்க... நம்ம மீட்டிங்க பாத்து, ஆளாளுக்கு அசந்துரனும். வேறெ எவனும் இது போல நடத்த முடியாத அளவுக்கு, நடத்திக் காமிக்கனும். வேனுமின்னா நிர்வாகத்திலேந்து யாராவது ஒரு லேடி ஆபீஸரை கெஸ்டாக போட்டுடலாம். நிர்வாகத்தால  வரமுடியாதுன்னு சொல்ல முடியாது. மகளிர் தின மீட்டிங்கிற்கு வரமுடியாதான்னு நோட்டீஸ் போட்டுடுவோமில்ல.. ஹா...ஹா”

வெளியே போன ‘பாபு’ டீக்கிளாஸுடன் வந்தார்.

“என்ன பாபு.. உங்களுக்கு மெடிக்கல் பில் செட்டிலாகப் போவுது.. யூனியனுக்கு டொனேஷன் கொடுங்களேன். மகளிர் தினம் மீட்டிங் போடப் போகிறோம். செலவாகுமில்ல..” என்றார் உலகனாதன்.

ஏற்கனவே பத்து டீக்கும் நூறு ரூபாய் ஆகிவிட்டதேன்னு கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த பாபு, ‘டொனேஷன்’ தாக்குதலை எதிர்பார்க்க வில்லை.

“அதுக்கென்னங்க.. கொடுத்துட்டாபோச்சு.  எங்களை மாதிரி சாதாரண ஆளுங்க கொடுத்தாதானே யூனியனுக்கு காசு..? மெடிக்கல் பில் செட்டிலாகட்டும். கொடுத்துடறேன்..”

அலுவலக வாயில், டிஜிடல் போர்டுகளால் நிரம்பி வழிந்தது. கொடிகளும் தோரணங்களுமாய் அலுவலக வளாகமே விழாக்கோலம் பூண்டது.

மதிய வேளை. இடம் பெண்கள் டைனிங் அறை.

“என்னடி இது.. இன்னிக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு ‘மகளிர் தினம் மீட்டிங்காமே.. யூனியன்ல வந்து நோட்டீஸ் கொடுத்துட்டுப் போனாங்க.. அவசியம் கலந்துக்கணுமாமே? என்றார் ஒரு தோழியர்.

“ஆமாம்.. எனக்கும்  நோட்டீஸ் வந்தது.. இன்னிக்கு என்னால முடியாது. பசங்களுக்கு டிபன் செஞ்சு போடனும். லேட்டாயிடும். நான் பர்மிஷன் போட்டு  நாலு மணிக்கே வீட்டிற்கு போயிடப்போறேன்..”

“ஏய் கதை வுடாதே..  இன்னிக்கு சன் டி.வி யில உனக்கு புடிச்சு சீரியல் இருக்கு. அதை மிஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்லேன். “

“மீட்டிங் போரடிக்கும்ப்பா.. என்னவோ அது-இதுன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க.. எப்படியாச்சும் டபாய்ச்சுட்டு வீட்டிற்கு போயிடனும்.

‘அந்த உலகனாதன் இருக்காரே... ஐயோ.. அது பிளேடு போட ஆரம்பிச்சா போதும்... கொட்டாவி-கொட்டாவியா வந்துகிட்டே இருக்கும்..”

ஆளாளுக்கு ஒன்று சொல்ல, டைனிங் ரூம் சிரிப்பால் நிரம்பியது.

“ஏன் பங்கஜம், உங்களை ஏன் இந்த தடவை மீட்டிங் தலைவரா போடலை?”

“ஏன்.. நானே எப்ப பாத்தாலும் தலைமையா இருக்கனுமா என்ன? சுந்தரி இருந்தால் என்ன தப்பு..?” என்றாள் பங்கஜம்.

‘எனக்கென்னவோ, அப்படித் தோனல, உங்க மேல தலைவருக்கு ஏதோ காண்டு. அதான் இந்த தடவ ஆள மாத்திட்டாங்க...’ என்றர் இன்னொருவர்.

“ஆமாம், .... இது மகளிர் தினம் தானே? எல்லா யூனியனும் ஒன்னா சேந்து ஒரே மீட்டிங்கா போட்டா என்ன? ஆளாளுக்கு தனித்தனியா  போடனுமா?” நமக்கும் ஒரே வேலையா போயிருமில்ல?" 

‘அந்த பாலிடிக்ஸ் உங்களுக்கு புரியாது.  மல்டி யூனியன்கள், கோஷ்டிகள் இருந்தால் இப்படித்தான் நடக்கும். இந்த மாதிரியான காலங்களில் அடாவடி ஆட்களுக்குத்தான் கொண்டாட்டம். அதுவரை எல்லா ஆண் பங்கஜம்களும் பெண் பங்கஜம்களும் ஓராமாய் இருக்க வேண்டியது தான். “ என்றார் பங்கஜம்.

‘ஒரு எழவும் புரியல....” என்றார்கள் கோரஸாய்.

முடிவு என்னவென்றால், கூடுமானவரை ஏதாவது போக்கு காட்டிவிட்டு வீட்டிற்கு ஓடிப்போய்விடுவது. முடியலேன்னா மீட்டிங் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்திலேயே அம்பேலாகிவிடுவது.

விழா திட்டமிட்டபடி, ஐந்து மணிக்கெல்லம் துவங்கியது. 
உலகநாதன் மேற்பார்வையில் வெளியூர்-உள்ளூர் என 200 பேர் திரண்டிருந்தனர்.  இருபத்தைது லேடீஸ் தேறும்.

“யார் யார் மீட்டிங்கிற்கு வராத லேடீஸ் என கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார் தலைவர். அவருக்கு இந்த மீட்டிங்கிற்கு வராத லேடீஸ் அடுத்த யூனியன் போடும் மீட்டிங்கிற்கு போயிரக்கூடாது“ என்பதே கவலையாக இருந்தது.

உலகனாதன் விழிகள் தெரிக்க, கழுத்து நரம்பு புடைக்க, உணர்ச்சி பொங்க, மைக்கை விழுங்கி விடுவது போல வரவேற்புரையாற்றிக் கொண்டிருந்தார்.

கூட்டம் மெயமறந்து கேட்டுக் கொண்டிருந்தது.

“தமிழ்ச் செல்வி” தனது முறை எப்போது வரும் என தலைமையை வினவிக் கொண்டிருந்தார். அவருக்கு அவை நிரம்பியிருக்கும் பொழுதே, தான் பேசிவிட வேண்டும் என்று துடிப்பு.

தலைவர் கூட்டம் கலைந்து விடாமல்  “பார்த்துக்கொள்ள” ஆட்களை ஏவி விட்டுக் கொண்டிருந்தார்.

உள்ளூர் மேளங்கள் பேசி முடித்ததும் ‘தமிழ்ச்செல்வி’ பேசத்துவங்கினார்.

ஒரு பேச்சாளருக்கும் - மற்றோரு பேச்சாளருக்கும்  நடுவில் கிடைத்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு பல பெண்கள் வீட்டிற்கு நழுவினர். ஒரு பத்து பெண்கள் மட்டுமே இருந்தனர். ஆண்கள் கலையவில்லை.


தமிழ்செல்வியின் உணர்ச்சிமயமான உரை நடந்து கொண்டிருந்தது.
ஆழமாக, அழகாக கோர்வையாக பேசிக் கொண்டிருந்தார்.

உலகநாதனுக்கு, தான் ‘செலக்ட்’ செய்த பேச்சாளர் உரை மழை பொழிவது குறித்து பெருமிதம் கொண்டிருந்தார். தலைவரை கண்ணால் “ஸ்பீச் பார்த்து எப்படி இருக்கிறது?” என்றார்.

“உமா மகேஸ்வரி” செய்த தவறுதான் என்ன?  ‘நிர்பயா’ க்களுக்கு இந்தியாவில் முடிவே இல்லையா?” என மைக்கில் அதட்டிக் கொண்டிருந்தார் தமிழ்ச் செல்வி.

“உமா மகேஸ்வரி தெரியும். யாரு அது நிர்பயா?” வினவினார் ஒரு தோழியர், பங்கஜத்திடம்.

‘பேப்பரில் ராசிபலனைத் தவிர்த்து வேறு எதையும் பாக்க மட்டேன்னு பிடிவாதமா இருந்தா, உனக்கு என்னதான் புரியும்” என்றார் பங்கஜம்.

‘அலட்டிக்காம சொல்லேன்.”

“இந்த மீட்டிங் முடியட்டும். சொல்றேன்” என்றார் பங்கஜம்.

“.......ஆகவே தோழியர்களே,  நமது சக்தியை நாம் உணர்ந்தாக வேண்டும். நாம் கற்ற கல்வி, ஞானம், திறமை அனைத்தும் சமுதாயத்திற்கு பயன்பட்டாக வேண்டும். முக்கியமாக சக பெண்களுக்கு பயன்படுத்தப் படவேண்டும். நம்மை வெறும் செக்ஸ் சிம்பலாக சித்தரிக்கும் மீடியாக்களை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் நாம் இவற்றிலிருந்து விடுதலை பெற்றால்தான் மற்றவர்களை மீட்க முடியும்...........” உரை நீண்டு கொண்டிருந்தது.

இருக்கும் பெண்களிலும் சிலர் பொறுமையிழந்து மணி பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘... இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன்...”

தமிழ்செல்வியின் உரைக்கு கிடைத்த பெரும் கைத்தட்டலைக் கண்டு உலக நாதனுக்கும், தலைவருக்கும் பெருமை பிடிபடவில்லை.

நன்றி உரைக்கு காத்திராமல், கூட்டம் உணவுப் பொட்டலங்களுக்கு பாய்ந்தது.

‘என்ன தலைவரே, மீட்டிங் எப்படியிருந்தது..? என்றார் உலகநாதன்

‘அசத்திட்டீங்க தோழர்.   இன்னும் ஒருவருஷத்துக்கு வேறே எவனும் இந்த மாதிரி கூட்டம் போட முடியாது போல செய்து விட்டீர். இந்த மீட்டிங் இவ்வளவு சக்ஸஸ் ஆனதுக்கு நீங்கதான் முதல் காரணம்” என்றார் தலைவர்.

‘ஏதோ... என்னாலான உதவி...” குழைந்தார் கைத்தடி.

‘பங்கஜம் மூஞ்சிய பாத்தீங்களா உலகனாதன்? ஈ ஆடல....அவுங்க இல்லேன்னா ஒன்னுமில்லேன்னு நினைச்சுக் கிட்டிருந்தாங்கல்ல...   நாம சுந்தரியை வச்சு சமாளிச்சுட்டோமில்லா...” என்றார் தலைவர்.

“அது கிடக்கட்டும் விடுங்க தலைவா...” 

பொருளாளரைக் கூப்பிட்டு செல்விக்கு, அதிகமாகவே பயணப்படி கொடுக்கச் சொன்னார். மத்த யூனியன்காரங்க இந்த மீட்டிங்கைப்பத்தி என்ன பேசிக்கிறாங்க எனக் கண்டுவரச்சொன்னார் தலைவர். 

உணவுப் பொட்டலங்களுடன் கூட்டம் கலைந்து சென்றது.

கூட்டத்திற்கு வந்திருந்தோர், சாப்பிட்டுவிட்டு தூக்கியெறிந்த, ஒரு உணவுப் பொட்டலத்தை சுற்றியிருந்த, தினசரி செய்தித் தாளின் பக்கம் ஒன்று “மகளிர் தினத்தையொட்டி, வாட்டர் ப்யூரிஃப்யர்,  ஏ.ஸி யூனிட்களுக்கு 30% தள்ளுபடி என அறிவித்துக் கொண்டிருந்தது.