“தலைவர் இன்னும் வரலியா?”
“இப்ப வந்துடுவார்... ஹெட் ஆபீஸுக்கு போயிருக்கார், வெயிட் பண்ணுங்க..
தோழர்...”
“சரி.. பத்து மணிக்கு வரச்சொன்னார்... அதான்.. பாத்துட்டுப் போலாம்னு
வந்தேன்..”
“ம்ம்,,ம்ம்ம்.”
அது ஒரு தொழிற்சங்கக் கட்டிடம் (அறை). அறையின் நடுவே மேஜை, நாற்காலி
போடப்பட்டிருக்கிறது. மேஜைக்கு எதிரே, வந்தவர்கள் உட்கார ஏழெட்டு சேர்கள். மேஜையில்
ஒரு தொலைபேசி. ஓரமாக கம்ப்யூட்டர். சுவற்றில் தொழிற்சங்க தலைவர்கள் படங்கள்
வரிசையாக.
மார்க்ஸ், லெனின், சூயென்லாய் உட்பட பலரும் சண்டைபோட்டுக் கொள்ளாமல்
அமைதியாக ஃபோட்டோ ஃபிரேமுக்குள். படங்களில்
காய்ந்து போன மாலைகள். எதிர் சுவற்றில்
ஒரு அறிவிப்புப் பலகை, தோழர்களை நன்கொடை அளிக்குமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தது.
ஓரமாக ஒரு இரும்பு பீரோவின் முகத்தில், “நன்கொடை: தோழர் கனகேந்திரன்”
என்றிருந்தது.
"டஸ்ட்பின்" டீக்கப்புகளால் நிரம்பிக் கிடக்கிறது. தொழிற்சங்க இதழ்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கின்றன.
தலைவரின் நாற்காலியின் எவரும் அமருவதில்லை போலும்.
வருகின்றவர்களுக்கு ஒருவர் பதில் சொல்லிக் கொண்டிருகிறாரே, அவர் தான்
உலகநாதன். அலுவலக செயலர் போல பணி புரிந்து கொண்டிருகிறார். அவரைப் பற்றி கீழே
படிப்பீர்கள்.
இப்பொழுது அறையில் சலசலப்பு.
தலைவர் வந்துவிட்டார்.
இவர் கரைவேட்டி, துண்டு போட்ட தலைவர் இல்லை. பேண்ட், சட்டை
அனிந்திருக்கிறார்.
“வணக்கம்... வணக்கம்....”
“வாங்க தலைவரே... உங்களைப் பாத்துட்டுப் போலாம்னுதான்
உக்காந்திருக்கேன்.”
“வாங்க தோழர் பாபு... என்ன விஷயமா பாக்க வந்தீங்க...?”
“நேத்திக்கு சொன்னேனே தலைவரே.. என்னோட மெடிக்கல் பில் இன்னமும்
செட்டில் ஆகல... ஏதேதோ அப்ஜக்ஷன் சொல்லிக்கிட்டே இருகாங்க.. நீங்க தான் நிர்வாகத்திடம் பேசி,
எப்படியாச்சும் செட்டில் பண்ணிக் கொடுக்கனும்.. “
“ஓ .. அந்த கேசா... அதை நேத்திக்கே, அக்கவுண்ட்ஸ்ல பேசிட்டேன். அடுத்த
வாரம் செட்டிலாயிடும் தோழர்...”
“ரொம்ம தேங்க்ஸ் தலைவரே.. ஆறு மாசமா இழுத்துப் பறிச்சுக்கிட்டு
நிக்கிது. அந்த பில் வந்தா ரொம்ப உதவியா இருக்கும்...”
“நமக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்.. அதெல்லாம் யூனியனோட கடமை.. அடுத்த
வாரம் வந்திடும், கவலைப் படாதீங்க...”
‘இப்பதான் நிம்மதியாச்சு... “
“எல்லாரும் டீ சாப்பிடலாமா..?” என்றார் தலைவர்.
‘தோ.. நானே போய்ச் சொல்லிட்டு வர்ரேன்.. மொத்தம் பத்து டீயா?”என்றார்
பாபு.
“தலைவருக்கு அரைச் சர்க்கரை..” இது தலைவரின் கைத்தடி, உலகநாதன்.
தலைவரின் கண்ணசைவுக்கு ஏவல் புரிய காத்திருக்கும் எடுபிடி.
மைக்கைப் பிடித்தாரானால் வெள்ளமென பேச்சு கொட்டும். எந்த மேடையானாலும்
சரி, மீட்டிங்கிற்கான காரண காரியம் எதுவானாலும் சரி, ஐ.நா சபையிலில் ஆரம்பித்து உள்ளூர் கழக அரசியல்
வரை, எதையாவது சுவாரஸ்யமாகச் சொல்லி, மாட்டைப் பிடித்து தென்னை மரத்தில் கட்டிவிடுவார்
உலகனாதன்.
பேச்சு மணிப் பிரவாகம். “தமிழகத்தை
உய்விக்க, ஜெயலலிதாவால் மட்டும்தான் ஆகும்”
என ஒருமணி நேரம் பேசச் சொல்கிறீகளா?
உலகனாதன் தயார். அடுத்த கணமே, தமிழகத்தின் தவப்புதல்வன் கருணாநிதி தான் என
பேசச் சொல்கிறீர்களா? அதற்கும் தயார்.
பேச்சு வியாபாரிகளுக்கும் என்றைக்கும் கொண்டாட்டம் தான். அவ்வாறு எந்த
சப்ஜெக்டிலும், மாற்றி மாற்றி பேசுவதில் அவருக்கு என்றைக்கும் சங்கடமோ, சங்கோஜமோ,
லஜ்ஜையோ இருந்ததில்லை.
பாபு, டீ சொல்வதற்கு வெளியே போய்விட்டார்.
“தலைவரே, நேத்திக்கு அக்கவுன்ட்ஸ் மேனேஜர் ஊரிலேயே இல்லியே... எப்ப
பாபு மெடிக்கல் பில்லைப் பத்தி பேசினீங்க?” –கைத்தடி.
‘அதெல்லாம் அப்படித்தான் சொல்லனுமிய்யா... இல்லேன்னா, அவன் வேறே யூனியன்
போயிடுவான். நாளைக்கு அக்கவுன்ட்ஸ்கிட்ட கிட்ட பேசிட்டாப் போச்சு...’
“தலைவர் சாமர்த்தியமே, சாமர்த்தியம் தான்.. “
“எங்கிட்டேயே ஊசி விக்கிறியா?”
“சும்மா தமாஷ் தலவரே...”
“மார்ச் எட்டாம் தேதி, மகளிர் விழா வருதே.., ஏற்பாடெல்லாம் ஆயிருச்சா?
என்றார் கைத்தடி.
“அட... ஆமாப்பா.. மறந்தே போயிருச்சு.. “
“போன வருஷம் யாரை சிறப்பு பேச்சாளராக கூப்பிட்டோம்..?”
“தமயந்தி –ன்னு ஒரு பேச்சாளர் வந்தார். மறந்துட்டீங்களா?”
“ஆமாம் .. ஆமாம் போன தடவை, ஒத்துமை – அது இதுன்னு பேசி
சொதப்பிட்டாங்கய்யா.. இந்த தடவை ‘நம்ம’ ஆளுங்களா பாத்து போடனும்”.
‘சும்மா, நம்ம ஆளுங்கன்னு சொல்லி, கொட்டாவி வுடற ஆளுங்களை
கூட்டியாந்துரக் கூடாது.. அரை மணி நேரமே பேசினாலும், சும்மா நச்சுனு பேசர ஆளா புடிங்க
தலைவரே. சும்மா நரம்பு முறுகேத்தினாப்பல பேச்சு இருகனும்” இது அந்த தொழிற்சங்க
அரையில் இருக்கும் இன்னொருவர்.
“யாரைப் போடலாம்..?” என்றார் தலைவர்.
“வேறே யூனியன்காரங்க போடறதுக்கு முன்னாலே, நாம ‘மகளிர் தின மீட்டிங்’ போட்டுரனும். நல்லா
டெம்போவோட பேசற ஆளுங்க டேட் கிடைச்சுடிச் சுன்னா, மத்த யூனியன் காரங்க என்னா
மீட்டிங் போட்டாலும் எடுபடாது”
“நல்லா சொன்னீரய்யா.. உலகநாதன்.. இந்த தடவை நீரே நல்ல ஆளாச் சொல்லுமேம்
பாக்கலாம்”
“ஆங்.. அப்படீன்னா, தமிழ்ச் செல்வியைப் போட்டுடலாமா? மதுரையில்
விரிவுரையாளர். பேசினாங்கன்னா சீட்டை வுட்டு எவனும் நவுர மாட்டான். கடசி வரைக்கும் டெம்போ மெயின்டன் பண்ணுவாங்க.. புள்ளி விவரமெல்லம் அவுங்க
வாயில பூந்து விளையாடும்.” என்ன சொல்றீங்க...”
“ம்ம்.. எனக்கு ஞாபகம் இருக்கு. சென்னையில ஒரு மீட்டிங்ல பாத்திருக்கேன்.ரொம்ப
நல்லா பேசினாங்க... டேட் கிடைகுமான்னு கேளு”
இதோ கேட்டுடறேன்.. செல்லை எடுத்துக் கொண்டு வெளியே போனார் பேசுவதற்கு.
“தலைவரே.. கேக்கறதுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. நம்ம பொம்பளிங்க, மீட்டிங்குக்கு வரவே மாட்டேங்கறாங்களே. நல்ல பேச்சாளரா போட்டுட்டு, கூட்டம் இல்லீன்னா
சரிப்பட்டு வருமா?” - இது இன்னொரு உதவி.
“அதும் யோசனை செய்ய வேண்டிய விஷயம் தான். இந்த ஆபீஸுல 350 பேர்
இருக்காங்க.. அதுல 150 பேர் லேடீஸ்தான். ஆனாலும் மீட்டிங்னு போட்டா, கூட்டம்
கூடுறதில்லியே?”
“தலைவரே 150 பேரும் நம்ம யூனியன் இல்லீங்க.. 75-80 பேர்தான்
நம்மளுக்கு தேரும்...”
“தெரியும்யா.. அந்த 75 பேர் வந்தாக்கூட போதும்ல... “
இதற்குள், வெளியே போன உலகனாதன் வந்துவிட்டார்.
“ஓ.கே தலைவரே.. தமிழ்ச் செல்வி ஒத்துக்கிட்டாங்க.. எட்டாந்தேதியே
வர்ராங்களாம்.. டேட் கன்ஃப்ர்ம் பண்ணிட்டேன்.”
“அதுக்குத்தான் உன்னைபோல ஒருத்தர் வேணும்கிறது. வேல சுளுவா ஆச்சு
பாரு..”
“இதை ஞாபகம் வச்சுக்கிட்டு, அடுத்த தடவ, யூனியன்ல ஒரு நல்ல போஸ்ட்
கொடுங்க தலைவரே..”
“கண்டிப்பா தர்ரேன், உலகநாதன்..”
பேச்சு, மீண்டும் கூட்டத்திற்கு ஆள் பிடிப்பதில் வந்து நின்றது.
“அது ரொம்ப சுலபம் தலவரே... கூட்டத்தின் முடிவில் இரவு உணவு பொட்டலம்
கொடுத்துடலாம். இட்லி-பூரின்னு ஜமாய்ச்சுடலாம். அதுக் கின்னாச்சும் கொஞ்சம் கூட்டம் கடசிவரைக்கு நிக்கும்ல...” - கைத்தடி
“அந்த அளவுக்கு நம்ம கிட்ட காசு இருக்கா? எங்க பொருளாளர் ?”
“அட.. காசு கிடக்கட்டும் தலைவரே!. நம்ம ஸ்பீக்கரை அவுத்துவுட்டு,
உணர்ச்சி வசப்பட்டு, யாரையாவது சாப்பாட்டுச் செலவை ஏத்துக்குபடியா
செஞ்சுடமாட்டேன்.?”
அது உண்மைதான். உலகனாதன் நரம்புகளை சுண்டி இழுக்க வைக்கும் பேச்சாளர்.
“மீட்டிங் தலைவரா யாரைப் போடலாம்? – என்றார் தலைவர்.
“ஏன்.. நீங்களே இருங்களேன்..?”
“அது நல்லாயிருக்காதய்யா.. மகளிர் தினம்னு பேர வச்சுகிட்டு நாமே தலவர்
சீட்டில உக்காரக்கூடாது. வேறா யாராவது நமக்கு கட்டுப்பட்ட லேடீஸா பாத்து உக்காத்தி
வைக்கனும்.”
“அதும் சரிதான்.. மத்த யூனியன் காரங்க, லேடீஸை தலைமையாப் போட்டு
மீட்டிங் நடத்திட்டாங்கன்னா, நமக்கு அசிங்கமாப் போயிரும்”
‘நம்ம ஆபீஸ்ல இருக்கும் பங்கஜத்தை தலைமைக்கு போட்டுரலாமா?”
பங்கஜம் என்பவர் அந்த அலுவலகத்தில் ஒரு சீனியர். இந்த யூனியனில்
ஆரம்பம் முதலே இருப்பவர். சுமாரான பேச்சாளி. யூனியனில் வேலை கொடுத்தால்,
சிரத்தையாக செய்து முடிப்பவர்.
“வேணாம்யா... அந்தம்மா வேறே யூனியன் ஆட்களுங்க கூட பேசுறாங்களாமே..?”
‘அதெல்லாம் இல்லீங்க.. அந்தம்மா வேறே யூனியனுக்கெல்லாம் போகாது.
உங்ககிட்ட யாரோ அவுத்து வுட்டுருக்காங்க... நம்ம யூனியன்ல ரொம்ப சின்சியர்...”
“எனக்கும் தெரியும். ஆனாலும் அவுங்க கொஞ்சம் சுயமா யோசிக்கறேன்னு நிறைய பேசுராங்க... அந்தம்மாவுக்கும் ஒரு பாடம்
கத்துக் கொடுக்கனும்ல.. இந்த தடவ பங்கஜம் தலைமையில்லை. அதுக்கு பதிலா “சுந்தரியை”
போட்டா என்ன? நாம கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டாங்க, என்ன சொல்லுறே..”
“அந்த பங்கஜம் கோவிச்சுக்க மாட்டாங்களே..?”
“கோவிச்சுக்கட்டுமே... அவுங்க
நம்ம டிராப்ல இருந்து என்னிக்கும் தப்ப முடியாது.. வேற யூனியனுக்கும் போக முடியாது”
“தலைவர் ரொம்ப டிப்ளமாட்டிக்கா யோசனை பண்ணறார்.. ரெண்டு மணி நேர
மீட்டிங்குக்கு யாரு தலைமை ஏத்தா என்ன? அந்த சுந்தரியையே போட்டுரலாம். “
“இந்த தடவ 150 பேராவது ஆடியன்ஸ் இருக்கனும். வேணுமின்னா வெளியூர்லிருந்து ஆட்களை கொண்டாரலாம்”
என்றார் தலைவர்.
“அதப்பத்தி கவலப்படாதீங்க தலைவரே.. கொஞ்சம் காசை வெட்டுங்க..
கூட்டத்தை கூட்டிக் காமிக்கறேன். மத்த யூனியன்ல தலைகீழா நின்னாலும் நம்ம கூட்டம்
அளவுக்கு நடத்த முடியாத படிக்கு செஞ்சு காட்டிடரேன்.”
“சரி.. நம்ம ஆளுங்களைக் கூப்பிட்டு மீட்டிங் விவரத்தைச் சொல்லனும்.
நோட்டீஸ் தயார் செய்யனும். பேனர்
கட்டனும்.
“எல்லாரும் நினவுல வச்சுக்குங்க... நம்ம மீட்டிங்க பாத்து, ஆளாளுக்கு
அசந்துரனும். வேறெ எவனும் இது போல நடத்த முடியாத அளவுக்கு, நடத்திக் காமிக்கனும்.
வேனுமின்னா நிர்வாகத்திலேந்து யாராவது ஒரு லேடி ஆபீஸரை கெஸ்டாக போட்டுடலாம். நிர்வாகத்தால
வரமுடியாதுன்னு சொல்ல முடியாது. மகளிர்
தின மீட்டிங்கிற்கு வரமுடியாதான்னு நோட்டீஸ் போட்டுடுவோமில்ல.. ஹா...ஹா”
வெளியே போன ‘பாபு’ டீக்கிளாஸுடன் வந்தார்.
“என்ன பாபு.. உங்களுக்கு மெடிக்கல் பில் செட்டிலாகப் போவுது..
யூனியனுக்கு டொனேஷன் கொடுங்களேன். மகளிர் தினம் மீட்டிங் போடப் போகிறோம்.
செலவாகுமில்ல..” என்றார் உலகனாதன்.
ஏற்கனவே பத்து டீக்கும் நூறு ரூபாய் ஆகிவிட்டதேன்னு கணக்குப்
பார்த்துக் கொண்டிருந்த பாபு, ‘டொனேஷன்’ தாக்குதலை எதிர்பார்க்க வில்லை.
“அதுக்கென்னங்க.. கொடுத்துட்டாபோச்சு.
எங்களை மாதிரி சாதாரண ஆளுங்க கொடுத்தாதானே யூனியனுக்கு காசு..? மெடிக்கல் பில்
செட்டிலாகட்டும். கொடுத்துடறேன்..”
அலுவலக வாயில், டிஜிடல் போர்டுகளால் நிரம்பி வழிந்தது. கொடிகளும்
தோரணங்களுமாய் அலுவலக வளாகமே விழாக்கோலம் பூண்டது.
மதிய வேளை. இடம் பெண்கள் டைனிங் அறை.
“என்னடி இது.. இன்னிக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு ‘மகளிர் தினம் மீட்டிங்காமே..
யூனியன்ல வந்து நோட்டீஸ் கொடுத்துட்டுப் போனாங்க.. அவசியம் கலந்துக்கணுமாமே? என்றார்
ஒரு தோழியர்.
“ஆமாம்.. எனக்கும் நோட்டீஸ் வந்தது.. இன்னிக்கு என்னால முடியாது.
பசங்களுக்கு டிபன் செஞ்சு போடனும். லேட்டாயிடும். நான் பர்மிஷன் போட்டு நாலு மணிக்கே வீட்டிற்கு போயிடப்போறேன்..”
“ஏய் கதை வுடாதே.. இன்னிக்கு
சன் டி.வி யில உனக்கு புடிச்சு சீரியல் இருக்கு. அதை மிஸ் பண்ணக் கூடாதுன்னு
சொல்லேன். “
“மீட்டிங் போரடிக்கும்ப்பா.. என்னவோ அது-இதுன்னு பேசிக்கிட்டே
இருப்பாங்க.. எப்படியாச்சும் டபாய்ச்சுட்டு வீட்டிற்கு போயிடனும்.
‘அந்த உலகனாதன் இருக்காரே... ஐயோ.. அது பிளேடு போட ஆரம்பிச்சா
போதும்... கொட்டாவி-கொட்டாவியா வந்துகிட்டே இருக்கும்..”
ஆளாளுக்கு ஒன்று சொல்ல, டைனிங் ரூம் சிரிப்பால் நிரம்பியது.
“ஏன் பங்கஜம், உங்களை ஏன் இந்த தடவை மீட்டிங் தலைவரா போடலை?”
“ஏன்.. நானே எப்ப பாத்தாலும் தலைமையா இருக்கனுமா என்ன? சுந்தரி இருந்தால் என்ன
தப்பு..?” என்றாள் பங்கஜம்.
‘எனக்கென்னவோ, அப்படித் தோனல, உங்க மேல தலைவருக்கு ஏதோ காண்டு. அதான்
இந்த தடவ ஆள மாத்திட்டாங்க...’ என்றர் இன்னொருவர்.
“ஆமாம், .... இது மகளிர் தினம் தானே? எல்லா யூனியனும் ஒன்னா சேந்து ஒரே
மீட்டிங்கா போட்டா என்ன? ஆளாளுக்கு தனித்தனியா
போடனுமா?” நமக்கும் ஒரே வேலையா போயிருமில்ல?"
‘அந்த பாலிடிக்ஸ் உங்களுக்கு புரியாது. மல்டி யூனியன்கள், கோஷ்டிகள் இருந்தால்
இப்படித்தான் நடக்கும். இந்த மாதிரியான காலங்களில் அடாவடி ஆட்களுக்குத்தான்
கொண்டாட்டம். அதுவரை எல்லா ஆண் பங்கஜம்களும் பெண் பங்கஜம்களும் ஓராமாய் இருக்க
வேண்டியது தான். “ என்றார் பங்கஜம்.
‘ஒரு எழவும் புரியல....” என்றார்கள் கோரஸாய்.
முடிவு என்னவென்றால், கூடுமானவரை ஏதாவது போக்கு காட்டிவிட்டு
வீட்டிற்கு ஓடிப்போய்விடுவது. முடியலேன்னா மீட்டிங் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்திலேயே
அம்பேலாகிவிடுவது.
விழா திட்டமிட்டபடி, ஐந்து மணிக்கெல்லம் துவங்கியது.
உலகநாதன் மேற்பார்வையில் வெளியூர்-உள்ளூர் என 200 பேர்
திரண்டிருந்தனர். இருபத்தைது லேடீஸ்
தேறும்.
“யார் யார் மீட்டிங்கிற்கு வராத லேடீஸ் என கணக்குப் போட்டுக்
கொண்டிருந்தார் தலைவர். அவருக்கு இந்த மீட்டிங்கிற்கு வராத லேடீஸ் அடுத்த யூனியன்
போடும் மீட்டிங்கிற்கு போயிரக்கூடாது“ என்பதே கவலையாக இருந்தது.
உலகனாதன் விழிகள் தெரிக்க, கழுத்து நரம்பு புடைக்க, உணர்ச்சி பொங்க, மைக்கை
விழுங்கி விடுவது போல வரவேற்புரையாற்றிக் கொண்டிருந்தார்.
கூட்டம் மெயமறந்து கேட்டுக் கொண்டிருந்தது.
“தமிழ்ச் செல்வி” தனது முறை எப்போது வரும் என தலைமையை வினவிக்
கொண்டிருந்தார். அவருக்கு அவை நிரம்பியிருக்கும் பொழுதே, தான் பேசிவிட வேண்டும் என்று
துடிப்பு.
தலைவர் கூட்டம் கலைந்து விடாமல் “பார்த்துக்கொள்ள” ஆட்களை ஏவி விட்டுக்
கொண்டிருந்தார்.
உள்ளூர் மேளங்கள் பேசி முடித்ததும் ‘தமிழ்ச்செல்வி’ பேசத்துவங்கினார்.
ஒரு பேச்சாளருக்கும் - மற்றோரு பேச்சாளருக்கும் நடுவில் கிடைத்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு பல
பெண்கள் வீட்டிற்கு நழுவினர். ஒரு பத்து பெண்கள் மட்டுமே இருந்தனர். ஆண்கள்
கலையவில்லை.
தமிழ்செல்வியின் உணர்ச்சிமயமான உரை நடந்து கொண்டிருந்தது.
ஆழமாக, அழகாக கோர்வையாக பேசிக் கொண்டிருந்தார்.
உலகநாதனுக்கு, தான் ‘செலக்ட்’ செய்த பேச்சாளர் உரை மழை பொழிவது
குறித்து பெருமிதம் கொண்டிருந்தார். தலைவரை கண்ணால் “ஸ்பீச் பார்த்து எப்படி
இருக்கிறது?” என்றார்.
“உமா மகேஸ்வரி” செய்த தவறுதான் என்ன?
‘நிர்பயா’ க்களுக்கு இந்தியாவில் முடிவே இல்லையா?” என மைக்கில் அதட்டிக்
கொண்டிருந்தார் தமிழ்ச் செல்வி.
“உமா மகேஸ்வரி தெரியும். யாரு அது நிர்பயா?” வினவினார் ஒரு தோழியர்,
பங்கஜத்திடம்.
‘பேப்பரில் ராசிபலனைத் தவிர்த்து வேறு எதையும் பாக்க மட்டேன்னு பிடிவாதமா
இருந்தா, உனக்கு என்னதான் புரியும்” என்றார் பங்கஜம்.
‘அலட்டிக்காம சொல்லேன்.”
“இந்த மீட்டிங் முடியட்டும். சொல்றேன்” என்றார் பங்கஜம்.
“.......ஆகவே தோழியர்களே,
நமது சக்தியை நாம் உணர்ந்தாக வேண்டும். நாம் கற்ற கல்வி, ஞானம், திறமை அனைத்தும்
சமுதாயத்திற்கு பயன்பட்டாக வேண்டும். முக்கியமாக சக பெண்களுக்கு பயன்படுத்தப்
படவேண்டும். நம்மை வெறும் செக்ஸ் சிம்பலாக சித்தரிக்கும் மீடியாக்களை புரிந்து
கொள்ள வேண்டும். முதலில் நாம் இவற்றிலிருந்து விடுதலை பெற்றால்தான் மற்றவர்களை
மீட்க முடியும்...........” உரை நீண்டு கொண்டிருந்தது.
இருக்கும் பெண்களிலும் சிலர் பொறுமையிழந்து மணி பார்த்துக்
கொண்டிருந்தனர்.
‘... இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன்...”
தமிழ்செல்வியின் உரைக்கு கிடைத்த பெரும் கைத்தட்டலைக் கண்டு உலக
நாதனுக்கும், தலைவருக்கும் பெருமை பிடிபடவில்லை.
நன்றி உரைக்கு காத்திராமல், கூட்டம் உணவுப் பொட்டலங்களுக்கு பாய்ந்தது.
‘என்ன தலைவரே, மீட்டிங் எப்படியிருந்தது..? என்றார் உலகநாதன்
‘அசத்திட்டீங்க தோழர்.
இன்னும் ஒருவருஷத்துக்கு வேறே எவனும் இந்த மாதிரி கூட்டம் போட முடியாது போல
செய்து விட்டீர். இந்த மீட்டிங் இவ்வளவு சக்ஸஸ் ஆனதுக்கு நீங்கதான் முதல் காரணம்”
என்றார் தலைவர்.
‘ஏதோ... என்னாலான உதவி...” குழைந்தார் கைத்தடி.
‘பங்கஜம் மூஞ்சிய பாத்தீங்களா உலகனாதன்? ஈ ஆடல....அவுங்க இல்லேன்னா
ஒன்னுமில்லேன்னு நினைச்சுக் கிட்டிருந்தாங்கல்ல... நாம சுந்தரியை வச்சு சமாளிச்சுட்டோமில்லா...”
என்றார் தலைவர்.
“அது கிடக்கட்டும் விடுங்க தலைவா...”
பொருளாளரைக் கூப்பிட்டு செல்விக்கு, அதிகமாகவே பயணப்படி கொடுக்கச்
சொன்னார். மத்த யூனியன்காரங்க இந்த மீட்டிங்கைப்பத்தி என்ன பேசிக்கிறாங்க எனக் கண்டுவரச்சொன்னார் தலைவர்.
உணவுப் பொட்டலங்களுடன் கூட்டம் கலைந்து சென்றது.
கூட்டத்திற்கு வந்திருந்தோர், சாப்பிட்டுவிட்டு தூக்கியெறிந்த, ஒரு உணவுப்
பொட்டலத்தை சுற்றியிருந்த, தினசரி செய்தித் தாளின் பக்கம் ஒன்று “மகளிர்
தினத்தையொட்டி, வாட்டர் ப்யூரிஃப்யர்,
ஏ.ஸி யூனிட்களுக்கு 30% தள்ளுபடி என அறிவித்துக் கொண்டிருந்தது.
பணம் கிடைத்தால் எதை பேசுவதற்கும் தயார்...! ம்... என்னத்த சொல்ல...?
ReplyDeleteகதையல்ல... உண்மை...
சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...
ஜி. கதை படித்தவுடன் நம்ம சங்கத்தில் நடந்த மாதிரி தெரியுது. தங்களுக்கு நல்ல அனுபவம் போல தெரியுது
ReplyDeleteThanks Shri Dinduggal Danaplan and Nandakumar R. In most of the unions, it is happening; what to do?
ReplyDeleteNandu: I have written many things 'in between lines"; you can feel this when u compare ur experiences in now-a-days union
அன்பு பலராமன் ! சொல்லிய சொல்லின் இடையே விளங்கும் பொருளும் , சுவையும் அதிகம் . சங்கத்தில் இருந்தவர்களும் , நடத்தியவர்களுக்கும் சுவை அதிகம் புரியும் . நன்று .
ReplyDeleteBT அரசு.
Hi BT... Thanks a lot for ur complements. Those who served in union for a long time and witnessed ups and dows, can enjoy this story...
Deleteமகளிர் தினத்தை காட்சிப்படுத்திய சிறப்பான கதை.!
ReplyDelete