Sunday, July 31, 2016

கர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா?

கர்னாடகாவில், மீண்டும் ஒரு மாநிலம் தழுவிய ‘பந்த்’. இம்முறை, மகதாயி என்னும் நதியின் நீர்ப்பங்கீடு குறித்து, நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து பந்த்.  

அவர்களுக்கு, எல்லோரிடமும் எல்லாவற்றிலும் சண்டை. மகாராஷ்ட்டிராவுடன், கேரளாவுடன் எல்லை மற்றும் நதி நீர் குறித்து சண்டை.  ஆந்திரத்துடன் கிருஷ்ணா நதி  நீர் சண்டை.  பெல்காம் குறித்த எல்லைச் சண்டை பிரசித்தமானது. கேரளத்துடன் காசர்கோடு குறித்து எல்லை சண்டை.  தமிழ்நாட்டுடன், காவிரி உட்பட சகலத்திலும் சண்டை.

அந்த மானிலத்தில் பிறந்த ரஜினிகாந்த், ஜெயலலிதா போன்றோர் தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்தாலும் அவர்களை எதிர்த்தும் சண்டை.  பெங்களூரில், தமிழ்த்திரைப்படங்கள்  திரையிடும் அரங்குகள் எத்தனை தடவை கல்லடி வாங்கியிருக்கின்றன?   சண்டியர் நிறைந்த மானிலமாக கர்னாடகம் மாறிவருகிறது.

தமிழ் நாட்டில் மொழிவெறி, பிராந்திய வெறி, ஜாதி வெறி போன்றவற்றைத் தூண்டிவிட சில சக்திகள் விடாது முயற்சிப்பது போல, கர்னாடகத்திலும் ‘வட்டாள் நாகராஜன்’ போன்ற பல ஆசாமிகள் இருக்கிறார்கள். எப்பொழுது, எந்தமாதிரி சண்டை கிளப்பிவிடக் கிளம்பலாம் எனக் காத்திருக்கும் ஆசாமிகள் இவர்.  ஒரு கொலை விழுந்தால் கூடப் போதும் உடனே இந்த ‘மாமனிதர்கள்’ ஆஜராகி பிரச்சினை கிளப்புவதிலும், திசை திருப்புவதிலும் நிபுனர்கள்.  மகதாயி நதிநீர் குறித்து நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வந்ததுமே களத்தில் குதித்து ரகளை. பேச்சுவார்த்தை, சுமுகமான உடன்பாடு, நீதியை மதிப்பது எல்லாம் இவர்களுக்குத் அன்னியமான  நடவைக்கைகள்.

மொழிவாரி மாநினிலங்கள் இந்தியாவில் அமைந்தது,  நன்மைகளை விட தீமைகளையே அதிகம் விளைவிக்கிறது எனத் தோன்றுகிறது.   

நூறு சதம் இல்லாவிடினும், மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பிராந்திய மொழிகளின் அடிப்படையில் பிரித்தறிவதுதான்  சரி.  பிராந்திய மொழிகளின் அடையாளம் காக்கப் படவேண்டும் என்பது மொழிவாரி மானிலங்கள் அமைக்கப்பட்டதன் முக்கியமான காரணிகளில் ஒன்று. ஆனால் அந்தக் காரணிகள் யாவும் முற்றாக முறியடிக்கப் பட்டுவிட்டன. தெலுங்கு, தமிழ், கர்னாடகம் ஆகியவை வெறும் பேச்சுமொழியாகவே மாறி விடும் துரதர்ஷ்டமான நிலைமை வெகுவிரைவில் வாய்த்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது. ‘மராட்டிய மொழி’ அந்த நிலைமையை கிட்டத்தட்ட அடைந்து விட்டது.  மலையாளம் ஓரளவு இந்த அபாயத்திலிருந்து தப்பிவிடுகிறது. அம்மானிலத்தின் செரிந்த இலக்கியங்களும், தேர்ந்த படிப்பாளிகளும் இதை சாத்தியமாக்கியுள்ளனர்.

மற்ற தென்னிந்திய மானிலங்களில், அரசியல் வாதிகள் கிளப்பிவிட்டதைப்போல  ஆபத்து ‘இந்தி’ யிடமிருந்து வரவில்லை; மாறாக  ஆங்கிலத்திலிருந்து!!  நகரப் பள்ளிகளின் பெரும்பாலான மானவர்களுக்கு, அவரவர் தாய்மொழியில் சரளமாகப் பேசவராது.  எழுத வராது. ஆங்கில மோகம் சிறு நகரங்களையும் கிராமங்களையும் கூட வேகமாக பாதித்துவருகிறது என்பது தெரிந்தது தானே? பெற்றோர்களுக்கு, என் மகன்/ள் களுக்கு தாய்மொழி தெரியாது என்பது ஒரு ‘கௌரவமான’ விஷயம்.  அது ஒருபுறம் இருக்கட்டும். விரிவாக பின்னர் பார்க்கலாம்.

இப்பொழுது கர்னாடகத்தின்  சண்டித்தனத்தைப் பார்ப்போம். 

நாடுகளுக்கிடையே நதி நீர்ப்பங்கீடு குறித்து போர்கள் வராமலிருந்ததே இல்லை. ஆனால், வெகு வருடங்களுக்கு முன்பே, இத்தகைய சண்டைகளைத் தீர்த்துக் கொள்வது குறித்து ஒரு தெளிவான வழிகாட்டுதல் உலக நாடுகள் இடையே ஏற்பட்டுள்ளது.  ஒரு நதியில் 1000 டி.எம்.ஸி தண்ணீர் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.  அந்நதி ஆறு நாடுகள் வழியாக ஓடுகிறது எனக் கொண்டால்,  தண்ணீரின் மூலாதாரம்(கேட்ச்மென்ட்) எந்த நாட்டிலிருந்து கிடைக்கிறது எனக் கருதாமல், ஒவ்வொரு நாட்டிலும், அந்த நதி கடக்கும் தூரத்திற்கு ஏற்றாற்போல கிடைக்கும் தண்ணீரை விகிதாச்சார முறைப்படி பங்கிட்டுக்கொள்வது ஏற்றுக் கொள்ளப் பட்ட நடைமுறை.  இந்த அடிப்படையில், நாடுகளுக்கிடையே (இந்தியா-பாகிஸ்தான்-வங்காளதேசம் உட்பட) இந்த சச்சரவு பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டது. ஆனால் ஒரே நாடாக, இந்தியாவிற்குள் நடக்கும் சண்டைகளுக்கும் அழும்புகளுக்கும் கணக்கே இல்லை.  சதா எல்லோரிடமும் தகராறு.

இந்த சண்டைகளுக்கான தீர்வு என்னவென்று, இந்த அரசியல் வாதிகளுக்குத் தெரியாதா என்ன? நன்றாகத் தெரியும். ஆனால் ‘நியாயப்படி, நியதிப்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்று மக்களுக்குச் சொன்னால், பிறகெப்படி ஜாதி,மொழி,மாநில, இன வெறிகளைத் தூண்டிவிட்டு பிழைப்பை ஓட்டுவது? எல்லாத் தண்ணீரும் எங்களுக்கே வேண்டும், எனக் கிளப்பிவிட்டால்தானே சில்லறை பார்க்கலாம்? ஓட்டு வாங்கலாம்?

சரி... அரசியல்வாதிகள் நியாயத்தைச் சொல்லி மக்களை ஏற்க வைக்கும் அளவிற்கு நல்லவர்களும் அல்ல வல்லவர்களும் அல்ல. ஆனால் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றபின்னும், நீதிபதிகள் பல்வேறு விஷயங்களை ஆய்ந்து ஒரு முடிவிற்கு வந்து தீர்ப்பளித்தபின்ன்ரும், நீதிமன்றங்களையே எதிர்த்து பந்த் நடத்துவது என்ன வகையில் சரி? மகதாயி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கன்னட  அமைப்புகள் சார்பாக முழு அடைப்பு நடைபெற்றுள்ளது. வழக்கம்போல கன்னட திரைப்பட அமைப்பைச் சார்ந்தவர்கள் பந்திற்கு முழுஆதரவு தெரிவித்து, போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். ஒழுங்கான சினிமா எடுப்பதைத் தவிர மற்ற மீனவர்,  நதி நீர், எல்லைத் தகராறு போன்ற எல்லாவற்றிலும் சினிமாக்காரர்கள் ‘கருத்து’ சொல்லத் தயார்.  தமிழக பேருந்துகள் கர்னாடகத்திற்குள் செல்லவிலை, கோவா மற்றும் மகாராஷ்டிர பஸ்களும் அப்படியே!

தேசிய-சுதேசி-இடது கட்சிகள் யாவும், ‘மொழி மற்றும் நதி’ விஷயங்களில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன. கேரள முதல்வர் ப்ரணயி விஜயன் அவரது அரசியல் சிந்தனை காரணமாக ‘முல்லை அணை’  நன்றாகத்தான் இருக்கிறது; நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்கிறோம் என தைரியமாக அறிவித்துவிட்டு பின்னர் ஜகா வாங்கியது நினைவிற்கு வருகிறதா?

நீதி மன்றங்களின் தீர்ப்பை மதிக்காவிட்டால், அராஜகவாதம் மட்டும் தானே மிஞ்சும்? பொறுப்பற்ற இந்த அமைப்புகளிடமிருந்து ஜன நாயகத்தை மீட்டெடுப்பது யார்?  இன்னும் எத்தனை காலத்திற்குத்தான்  மானிலங்களுக்கிடையே நிலவிவரும் எல்லை-நதி நீர்ப்பிரச்சினைகளை தீர்க்காமலிருப்பார்கள்? குறுகிய இன-மொழி-பிராந்திய வாதங்களையும், ஓட்டு அரசியலையும் தாண்டி ஒரு தீர்வுக்கு தலைவர்கள் உடன்பட வேண்டும் என்பதை எப்போது உணர்வார்கள்?

இவர்களுக்கு புத்தி வேண்டி ஆண்டவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர, வேறு வழி ஏதாவது...? 

2 comments:

  1. தலைவர்கள் உண்மையிலேயே தலைவர்களாக இருந்தால் சிக்கலே வரவாய்ப்பில்லை.

    ReplyDelete
  2. தமிழனுக்கு எப்போதும் ரோஷம் மானம் வீரம் ரொம்ப குறைவு . ஆனால் பேச்சில் அது நிறைய இருக்கும் ..

    ReplyDelete