“கடவுளின் சொந்த நாடு” எனச் சொல்லப்படும் கேரளா.
‘எந்தக் கடவுளின் நாடு’ என்று தெரியவில்லை. இங்கே இஸ்லாமும்
கிருத்தவமும் கூட பெரிய மதம் தான்.
எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே! இங்கே கொட்டிக் கிடக்கும் அழகை “கடவுள்”
என வர்ணித்தாலும் கூட, அது தகுமே. எங்கு
நோக்கினும் பச்சை... வளமை.. செழிப்பு.. நீர்
உயர’ என ஔவை இதைத்தான் சொன்னார்களா? மரங்களும், செடிகொடிகளும், மலைகளும்,
ஆறுகளும்... ஏன்? வனிதையர்கள் உட்பட எல்லாமே அழகோ அழகு!
கேரளத்தின் பல பகுதிகளுக்கு, பல்வேறு சமயங்களில் வந்திருந்தாலும்,
கொஞ்சம் நீண்ட நாட்கள் தங்கும் வாய்ப்பு, சிகிச்சைக்காக, கோட்டக்கல் எனும் சிறு நகரில் உள்ள ‘ஆர்ய வைத்தியசாலைக்கு’
வந்திருப்பதால் வாய்த்தது.
கோட்டக்கல்லிற்கு அருகில் இருக்கும் ஒரே இரயில்வே நிலையம் ‘திரூர்’.
அதிகாலை மூன்றரை மணிக்கு இறக்கிவிட்டுச் சென்றது, சென்னை-மங்களூர் விரைவு வண்டி. நமது
சென்ட்ரல்-எக்மோர் நிலைய ஆட்டோக்களை மனதில் வைத்துக் கொண்டு, ‘நானும் உள்ளூர்காரன்
தான்’ என்று நினைத்துக் கொள்ளட்டும் என, அருகில் உள்ள டீக்கடைக்கு சாவகாசமாகச் சென்றேன்.
நீ எங்கே வேண்டுமானுலும் போய்க்கொள். என்னருகில் வந்தால்தான் சவாரி
என்று அனைத்து ஆட்டோக்களும் வரிசையாக நின்றிருந்தன. எவரும் வந்து மொய்க்கவில்லை..
அடாவடி இல்லை.
கோட்டக்கல் இங்கிருந்து 17 கி.மீ. பஸ் போக்குவரத்து காலை ஆறு
மணிக்குத்தான்.
‘கோட்டக்கல் வர்ரீங்களா?’
‘உட்காருங்க...’
‘எவ்வளவு...?’
சொன்ன தொகையைக் கேட்டதும், மறு பேச்சில்லாமல் ஏறி உட்கர்ந்தேன்.
நம்ம ஊராய் இருந்தால், இந்த தூரத்திற்கு ஜி.பி.எஃப் போட்டுத்தான்
கொடுக்கனும் என்கிற அளவுக்குக் கேட்பார்கள். சும்மா ஈ ஓட்டிக் கொண்டிருந்தாலும்
இருப்பேனே தவிர நியாயமான கட்டனத்திற்கு வரமாட்டேன் என அழிச்சாட்டியம்
செய்யும் நம்ம ஊர் ஆட்டோக்களை நினைத்துக்
கொண்டேன்.
‘மலையாளம் தெரியுமா?’
‘தெரியாது!’
‘ஓஸ்பத்திரிக்கா..?’
‘ஆமாம்..’
‘இன் பேஷன்டோ?’
‘ஆமாம்..’
‘எதற்கு இந்த மனிதன் தேவையில்லாத்தைக் கேட்டுக் கொண்டு...?’
இருட்டு நேரம்.. வேறு வாகனம் ஏதும் பக்கத்தில் தென்படவிலை! ஆட்கள்
நடமாட்டமே இல்லை. மொபைலை எடுத்து வைத்துக் கொண்டு, கூகுள் மேப்பின் துணையோடு,
போகும் வழி சரியா என உறுதி செய்து கொண்டேன்.
அரைமணி நேரப் பயணத்தில், ஊர் வந்து சேர்ந்தது. கிராமச் சாலை போல
இருந்தாலும், நேர்த்தியாக, வழ-வழ வென தார்ச்சாலை. ‘டமால்’ பள்ளங்கள் எங்கும் இல்லை. இத்தனைக்கும் இங்கே, வருஷத்தில் ஒன்பது மாதம்
மழை. இருந்தும் உறுதியான சாலை. ஒரு சிறு தூரல் போட்டாலே, பஞ்சராகி, ‘உப்புமா’
கிண்டிவைத்தது போலாகிவிடும் நம்ம ஊர்ச்சாலைகள் நினைவுக்கு வருவதை எப்படித்
தவிர்ப்பது?
பிரம்மாண்டமான கேட்டின் முன்னே நிறுத்தினார் சாரதி. “ஆர்ய வைத்ய சாலா’
பெயர்பலைகையைப் பார்த்ததும் ஆசுவாசம் ஆயிற்று. வாட்ச்மேன், ஆட்டோவின் உள்ளே
எட்டிப் பார்த்து, என்னிடம் என்னவோ வினவினார். மறித்த ஆட்டோ டிரைவர், ‘இங்கே வா..
அவருக்கு மலையாளம் தெரியாது... இன்பேஷன்ட் அட்மிஷன்..’ எந்த கவுண்டர் (Counter)
கிட்ட போகனும்னு சொல்லு”
‘அட.. இதுக்குத் தான், இந்த விசாரணையை, என்னிடம் நடத்தினாரா?’
‘கேர்டேக்கர்’ உத்தமம். பெயரை மட்டும்
கேட்டு, நான் இன்று
வரவேண்டிய ஆசாமிதானா?’ என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, ரூம்
ஒதுக்கி, ஒரு ஆளைவிட்டு லக்கேஜை தூக்கிக் கொண்டு போகச் செய்து,
கையுடன்
மருத்துவமனை பற்றிய வழிகாட்டி/குறிப்பேட்டினைக் கொடுத்து, ஒரு வாட்டர் பாட்டல், மருத்துவ மனை சோப்பு ஆகியவற்றை வழங்கி அனுப்பிவைத்தார் – ஒரு பைசா அட்வான்ஸ் வாங்காமல்!
சென்னையில்
இருக்கும் மல்டி ஸ்பெஷாலிட்டிகளுக்குள் ஒரு லட்சம் இல்லாமல் அட்மிஷனா?
காலையில் டாக்டர் குழு ஒன்று வந்து பார்த்து, பின் தனியாக ஒரு ஸ்பெஷல்
மருத்துவர் ஒருவர் பார்த்து, எல்லா ரிப்போர்ட்களையும் பரிசீலனை செய்து, என்ன
மாதிரியான ட்ரீட்மெண்ட் என்பதை முடிவுசெய்து, கேஸ் ஷீட்டில் எழுதிய பின்னரும் கூட
‘காசை’ கீழேவை என அதட்டுபவர் எவருமிலர். நானாகப் போய், இத்துனை நாள் தங்குவதாக
உத்தேசம் என சொல்லியபின், ஒரு தொகையைக் கட்டச் சொன்னார்கள். இங்கேயும், ஓசியில்
சிகிச்சை அளிப்பதில்லைதான்.. ஆனாலும் சென்னை அல்லோபதி மருத்துவ மனைகள் மாதிரி
‘கந்துவட்டிக் காரன்’ அணுகுமுறை இல்லாமல், நாகரீகமாக இருக்கிறார்கள்.
பல விஷயங்களில், கேரளம் மெச்சிக் கொள்ளும் வகையில் தான் இருக்கிறது.
எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், ஊர் பிரச்சினை என்றாலோ, மாநிலப்
பிரச்சினை என்றாலோ, கட்சி வேறுபாடின்றி ஒன்று கூடுகிறார்கள்.
கோயில் படிகள் தோறும் கால் வைக்கக் கூட இடமில்லாமல் நெருக்கும்
பிச்சைக் காரர்கள் இல்லை. மிகப் பெரிய அகலமான தெருக்கள் இல்லையன்றாலும், போக்கு
வரத்தில் ஒரு ஒழுங்கு இருக்கிறது (டிராஃபிக் போலீஸ் காரர் இல்லாத பொழுதும்!)
எந்தக் கடைக்காரரும் ‘ஷெட்’போட்டு முன்னால் இழுத்து சாலைகளை
ஆக்கிரமிக்க வில்லை. தெரு முக்குகளை ஆக்கிரமித்து டீக்கடைகள் இல்லை. நடைபாதைகள் எல்லாம் நடப்போருக்கே!
கடலூர்-திருப்பாதிரிப்புலியூர் பகுதியை நினைத்துக் கொண்டேன். லாரன்ஸ்
ரோடில், எத்தனை தள்ளு வண்டிகள்? அத்தனையிலும் வாழைப்பழங்கள், கொய்யாப்
பழங்கள். எவரேனும் வெளி மாநிலத்திலிருந்து
வந்தால், இந்த ஊர்க்காரர்கள் அனைவரும் வாழைப் பழத்தைத் தவிர வேறு எதையும் விழுங்க
மாட்டார்களா என்று வியக்கும் அளவிற்கு தள்ளு வண்டிக் கடைகள்.
பஸ் ஸடாண்டினுள்ளும், ரயில் நிலைய (கிழக்குப் பக்கம்) வெளியில்,
நிறைந்திருக்கும் மல்லாக்கொட்டை-கொய்யாப்பழ-வாழைப்பழ-பனங்கிழங்கு கடைகளை, என்றாவது
சற்றே ஒதுக்கி, நடப்போருக்கு கொஞ்சமேனும் இடம் தருவார்களா?
இங்கே பஸ்டாண்டில் கூட, பிளாட்பாரக் கடைகளிக் காணோம். பஸ், பஸ்
ஊழியர்கள், பயணிகள்.. அவ்வளவே. அரிதாக சில
ஜூஸ் கடைகள். நம் ஊர்களில், பஸ்ஸை விட்டு
இறங்கினால், பஸ் நிலையத்திற்குள்ளேயே, முடி வெட்டிக் கொண்டு, காலைக் கடன் களையும்
முடித்துக் கொண்டு, குளித்து முடித்து, மோட்டர் காயில் கட்டிக் கொண்டு, எங்கும்
அலறும் சி.டி க்களை வாங்கிக் கொண்டு, வாட்ச் ரிப்பேர், ஊறுகாய் வாங்குவது, புதினா-கொத்தமல்லி-கீரை
வாங்குவது, மொபைல் வாங்குவது, பலாச்சுளை, இஞ்சி மொரப்பா, கொய்யா ஆகிய இன்னபிற
உதிரிகளையும் வாங்கிக் கொண்டு, சாப்பிட்டுவிட்டு பின் பஸ் ஏறிவிடலாம். காம்பேக்ட்.
இங்கே கோயில்கள் தோறும், ஜேசுதாஸோ அல்லது அவர் போல ஒருவரோ,
ஒலிபெருக்கிகளில் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறார். கர்னாடக சங்கீதம் இங்கு
அனைவராலும் பாடப்படுகிறது. கோயில்களில் பல
இடங்களிலும் பார்த்திருக்கிறேன். பலரும் பாடுகின்றனர் – இனிமையாக! இப்பொழுது புரிகிறது,
ஏன் சூப்பர் சிங்கர்களில் கனிசமான போட்டியாளர்கள், கேரளத்திலிருந்து வருகிறார்கள்
என. அது ஒரு கலை. அவ்வளவே. இங்கு இசையினை எவாளுக்கும் ஒதுக்க
வில்லை. எவர்களையோ எதிர்க்கிறேன் பேர்வழி என சில
கலைகளையும் ஒதுக்கிவிட்டோமோ எனத் தோன்றுகிறது.
இங்கு கோயில்களிலும், கச்சேரிகளிலும் தமிழ்க் கீர்த்தனங்கள் பலவும்
பாடப்படுகின்றன. எவரும் கல்லெடுத்து அடிப்பதில்லை. ரசித்துவிட்டுச் செல்கின்றனர்.
சில தவிர்க்க இயலாத இம்சைகளும் உண்டு! உ-ம் பெரும்பாலான கோயில்களில்
சட்டையைக் கழற்று!
அது இருக்கட்டும்.
கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் வந்திருக்கும் பலரையும் பார்க்கும்
பொழுது சங்கடமாகத் தான் இருக்கிறது. வெளி நாட்டினர் கனிசமாக! வடக்கத்தியவர்களும் நிறைய
நபர்கள். பார்கின்ஸன் டிஸீஸினால் பாதிக்கப்
பட்டவர்கள், பக்க வாதத்தில் பாதிக்கப்பட்டோர், கை கால்களை முழுதும் நீட்ட முடியாதோர்,
முதுகு வலி-கழுத்துவலிக் காரர்கள் என பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுவும் சில பிஞ்சுகளைப் பார்க்கும் பொழுது, மனம் வலிப்பதைத் தவிர்க்க
முடியவில்லை. மருத்துவமணை போல உற்சாகம் இழக்க வைக்கும் இடம் வேறு ஏதாவது
இருக்கிறதா என்ன?
(சிகிச்சை அனுபங்கள் தனியாக பின்னர்)
Good narration Sir, this is what I was insisting to you. Finally you are here. Bt Arasu
ReplyDeleteGood narration Sir, this is what I was insisting to you. Finally you are here. Bt Arasu
ReplyDeleteகோட்டக்கல் ஆலயங்கள் பல இருக்கு இன்றுதான் தங்களின் பகிர்வு மூலம் மருத்துமனை அறிந்தேன் தொடருங்கள்.
ReplyDeleteஅருமை சார்.
ReplyDeleteமத்தவங்க கிட்ட நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. படிக்கும் நாமாவது மாறுவோமே என்று தோன்றுகிறது.
பகிர்விற்கு மிக்க நன்றி.
சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஆட்டோ விஷயத்தில் கேரளாவைப் பலரும் புகழ்ந்துள்ளார்கள். பல விஷயங்களில் கேரளா சிறப்புதான் என்றாலும், சில விஷயங்களில் கடுப்பாகவும் இருக்கும்.
ReplyDeleteசிகிச்சை குறித்த செய்திகளை ஆவலோடு எதிர்பார்க்கீறேன்.