Tuesday, April 4, 2017

மறக்கவொண்ணா குடந்தை

சில ஊர்களின் பெயர்களை உச்சரித்த மாத்திரத்தில்,  அந்த ஊர்களுக்கான ஒரு பிரத்யேகமான உலகம் சிருஷ்டிக்கப்பட்டுவிடும். எந்த வர்ணனையுமே தேவையில்லை.   நினைந்தவுடன் ஊரும் தாய்ப்பால் போல,  சில ஊரின் நினைவுகளே காலங்கடந்த உலகிற்கு இட்டுச் செல்லும்.

முதன் முதலில் ராமேஸ்வரம் சென்றபொழுதும் இதே உணர்வுகள்தான். அந்த பிரம்மாண் டமான பாலத்தை, ரயில்  தடக்-தடக் என விழுங்கிச் செல்லும் கணத்தில், மனது சடாரென யுகங்கள் தாண்டி பின்னோக்கிச் சென்றுவிட்டது.
காற்று முழுவதும் ராமரும் சீதையும் கலந்திருந்தார்கள்.  கண்ணில் கண்ட மாந்தர்கள் அனைவரும் ராம சேனையாகவே தோன்றினர். ஏதோ, மந்திரித்து விடப்பட்டவன் போல, ராமகாவியத்தினூடே நானும் ஒரு ஏதோ ஒரு கதாபாத்திரமாக மாறி உலவக் கிளம்பிவிடுவேன். எங்கு பார்த்தாலும், ராமாயண கதா பாத்திரங்கள் பேரில் ஒரு தீர்த்தம் இருக்கும். விதவிதமான சாதுக்களும், யாத்ரீகர்களும், அக்னி தீர்த்தமும் நம்மை சரித்திரகாலத்திற்கு, டைம் மிஷின் இல்லாமலேயே அழைத்துச் செல்லும்.

அதே போன்ற ஒரு பெயர்தான் கும்பகோணம். 

இன்று எங்களது குலதெய்வம் அமைந்திருக்கும் கன்னியாக்குறிச்சி வடிவழகியம்மன் (என்ன ஒரு அழகான தமிழ்ப்பெயர்?) கோவிலுக்குச் சென்றுவிட்டு வரும் வழியில் மன்னார்குடி யையும், கும்பகோணத்தையும் தொட்டுவிட்டு சென்றேன்.

மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயிலைப்பற்றி புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது? பழமையும், அழகும் கொட்டிக்கிடக்கும் பிரும்மாண்டமான கோயில். சென்ற சமயம் சந்தான ராஜ கோபலனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதுவரை காணக் கிடைக்காத தரிசனம். அழகு கொஞ்சும் தாயார். திருப்தியான தரிசனம். (சந்தான கோபாலனை, ஒரு தாம்பாளத்தில் அமர்த்தி அபிஷேகிக்க வேண்டாமா? அப்படியே சிமன்ட் திண்ணையொன்றின் கிடத்தி அபிஷேபிப்பது கொஞ்சம் நெருடலாக இருந்தது. என்ன தாத்பர்யமோ தெரியவில்லை) ஆனால் அங்கே, வெகுகாலமாக ஜாடைகாட்டிப் பேசும் பட்டாச்சார்யார் ஒருவர்தான் சந்தான கோபாலனுக்கு அபிஷேகம் நடக்கப் போகிறது; போய்ப்பாருங்கள் என அனுப்பிவைத்தார். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
கோயிலின் வெளியே மாஃபியாக்களின் போஸ்டர். உள்ளே அவர்கள் அளித்த ஓவியங்கள் சில, பிரதான இடத்தில்.

கோயிலைவிட்டு வெளியே வரும்பொழுது, எனது அபிமான உபன்யாசகர் ‘ஜடாயு’ அவர்களின் உரை இன்று இரவு ஏழு மணிக்கு எனப் போட்டிருந்தது.  அடாடா... முன்பேயே தெரிந்திருந்தால், வேறு மாதிரி திட்டமிட்டு, அவரது சொற்பொழிவைக் கேட்டிருக்கலாமே என்று தோன்றியது. YouTubeல் அப்லோட் செய்தால் பார்க்கலாம்.

அடுத்தது  அபிமான குடந்தை!

துளிர் வெற்றிலையா, அகலமான வாழை இலையா, ‘கடுக்கென’ இருக்கும் மாவடுவா, தொட்டால் இரண்டு நாட்களுக்கு மணந்துகொண்டிருக்கும் பெருங்காயமா, ரசத்திற்கு சுவையூட்டும் ஈயச் சொம்பா, பஞ்சகச்சத்திற்கேற்ற பத்தாறு வேஷ்டியா, ஜீவனுடன் உருவாக்கப்படும் தெய்வங்களின் வெண்கலச் சிலைகளா, பரவசமூட்டும் குத்துவிளக்குகளா, எத்தனை தடவை வந்தாலும் பார்ப்பதற்கு இன்னமும் விடுபட்டிருக்கும் முடிவில்லாத கோயில்களின் பட்டியலா, மகாமகக் குளமா, பொற்றாமரைக் குளமா, கண்ணுக் கெட்டிய தூரத்திற்கு மலைகளே இல்லாத சூழலில் வரைந்து வைத்தாற்போல இருக்கும் ராமர்கோயில் சிற்பங்களா, மலைப்பூட்டும் சாரங்கபாணியா, வைத்தகண் வாங்காமல் பார்க்கவைக்கும் தாராசுரமா? யுகங்களைத் தாண்டி நிற்பதாக புராணங்கள் சொல்லும்  கும்பேஸ்வரரா, மணக்கும் மங்களவிலாஸ் காபியா, இன்னமும் காலை ஒன்பது மணிக்கே   சாப்பாடு   தயாராகும் வெங்கட்ரமணா ஹோட்டலா  .... எதுதான் நம்மை காலம் தாண்டி இழுத்துச் செல்லும் வல்லமையை கும்பகோணத்திற்கு தருகிறது? தெரியவில்லை.  இன்னும் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு முடிவில்லாத பெருமைகளைக் கொண்டதல்லவா கும்பகோணம்!  குடந்தை உருவாக்கிய தலைவர்கள், வித்தகர்கள் எத்தனைபேர்? சில்வர் ட்ங் ஸ்ரீனிவாச சாஸ்திரிகளையும், கனிதமேதை ராமானுஜரையும் மறக்கமுடியுமா?

குடந்தையைக் கடக்கும் பொழுது, இந்த ஊரைப்பற்றி மேலே சொன்ன நினைவுகள் யாவும் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் துவங்கியது. எனது நன்பர் BT Arasu குடந்தை முராரி ஸ்வீட்ஸின் டிரை (Dry Jamoon) பற்றிச் சொல்லியிருந்தார். ராமர் கோயிலுக்கு வரும் வழியில் ஒரு முராரி ஸ்வீட்ஸைப்பார்த்து வண்டியை நிறுத்தி விசாரித்தால் அது ‘அண்ணா முராரி’யாம். விலகிச் சென்று கொஞ்ச தூரம் பயணித்து ராமர் கோயிலுக்கு முன்பாக ஒரு பெரிய முராரியைக் கண்டு, டிரைஜாமூனை வாங்கிக் கொண்டு, விசாரித்தால் அதுவும் தலைமையக முராரியில்லையாம்.  அது பெரிய கடைத்தெருவில் இருக்காம். இது ‘பெரியவர்’ முராரியாம். அட போங்கடா... இன்னும் எத்தனை ஸ்ரீ முணியாண்டிவிலாஸ் இருக்கிறதோ தெரியவில்லை.
அதனால் என்ன?என் காதலி குடந்தைக்கு விஜயம் செய்வதை விட்டு விடப்போகிறேனா என்ன?






மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கோயில் 


Saturday, April 1, 2017

“ரெட்” பஸ்.

தாராளமயமாக்கல் உலகில், பொதுத் துறை நிறுவனங்கள் என்றாலே, ஒரு அசூயையுடன் பார்க்கும் காலம் இது. அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள்; சதா சம்பள உயர்வுகேட்டு போராடுவார்கள்; தரமான சேவை இருக்காது... போன்ற இத்யாதி அபிப்ராயம்தான் பொ.து நிறுவனங்கள் மீது.

இதில் ஏதும் உண்மையில்லை என வாதிடலாகாது.  பெரும்பாலும் சேவைக்குறைபாடுகள் நிறைந்ததுதான். ஆனால் தனியார் நிறுவனங்கள்  யாவும் உத்தம புத்திரர்கள் அல்ல.

ஆனால், இப்போது சொல்லவிருப்பது BSNL ஐப்பற்றி அல்ல. தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்களைப் பற்றியது.
நேற்று, கடலூரிலிருந்து, ஹொசூருக்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. ட்ரெயின் வசதி இல்லை. கடலூரிலிருந்தும், பாண்டியிலிருந்தும் 25 பஸ்களாவது தினந்தோறும் பெங்களூருக்குப் புறப்பட்டுச் செல்கின்றன. ஆனால் சேலம்-ஹொசூர் வழியாக பெங்களூருக்குச் செல்லும் ட்ரெயின் வாரத்திற்கு ஒன்றே ஒன்றுதான். கடலூர்-விருத்தாஜலம்-சேலம் அகல ரயில்பாதை வெட்டியாக இருக்கிறது. அண்டர் யுடிலைஸ்ட் ட்ரேக் என்றால் த.நாவில் இதுதானாகத்தான் இருக்கும். கூடுதல் ரயில் விட்டால் என்ன?

அது ஒருபுறமிருக்க, நான் ‘ரெட் பஸ்’ மூலமாக ஹொசூருக்கு ஒரு டிக்கட் புக் செய்தேன். எனக்கு வாய்த்த பஸ் ‘எஸ்.ஆர்.எம்’ பஸ் சர்வீஸ். ஏஸி-ஸ்லீப்பர்.  போர்டிங் பாயின்ட் என்று சொல்லி, ‘சிட்டி டிராவல்ஸ்’ என்று ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, வேல் முருகன் தியேட்டர் அருகில் என லேண்ட் மார்க் குறிப்பிடப்பட்டிருந்தது; சிட்டி டிராவல்ஸ்ன் தொலைபேசி எண்ணும் குறிப்பிடப் பட்டிருந்தது. இருந்தாலும் இடத்தை உறுதி செய்து கொள்ள, ரெட்பஸ் கொடுத்த, சிட்டிபஸ் காண்டாக்ட் எண்ணைத் தொடர்புகொள்ள, அது எப்பொழுதும்  ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. ரெட் பஸ்ஸைத் தொடர்பு கொண்டால், அவர்கள் சென்னை எண்கள் சிலவற்றைக் கொடுக்க, அவர்கள் அணைவரும் ‘ரிப்வேன் விங்கிள்’ போலத் தூங்கப் போய்விட்டார்கள் போல; ஒருவரும் தொலைபேசியை எடுக்கவில்லை.

இது என்ன சோதனை என் நொந்துகொண்டு, இரவு ஒன்பதைரைக்கே (ஷெட்யுல்ட்  டிபார்சர் 10.15 pm)  சென்று பார்த்தால், சிட்டி டிராவல்ஸில், ஷட்டர் இறக்கப்பட்டு ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. கடையில் ஒருவரும் இல்லை. இருட்டு.  ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின் ஒரு புண்ணியவான் லைனில் வந்தார். ‘யோவ்... பஸ்வருமா வராதா? எங்கேதான் போர்டிங் பாயின்ட்? நீ சொன்ன ஆபீஸில் பூட்டுல்லப்பா தொங்குது?” என கடுப்படிக்க, அவர் கூலாக, சார் அவுங்க (ரெட் பஸ்), ஏதாவது ஒரு நெம்பரைக் கொடுத்துடுவாங்க.. எனக்கும் (சிட்டி டிராவல்ஸ்) ரெட் பஸ்ஸுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏதோ வயசானவங்க அப்படீங்கறதால சொல்றேன்; கேட்டுக்கங்க. பெரியார் டிப்போவுக்கு முன்னாலேயே நின்னுகிட்டிருங்க... ஒரு பத்தேமுக்காலுக்கு வரும். வந்தா கையைக் காட்டி ஏறிக்குங்க..” வைத்துவிட்டார் கடவுள்.

கையைக் காட்டி ஏறிக் கொள்வதா? இரவு நேரத்தில், காட்டராக்ட் கண்ணை வைத்துக்கொண்டு, அதிபயங்கர வேகத்தில், கண்ணைக்கூசும் ஹெட்லைடோடு வரும் பஸ்ஸைஅடையாளம் கண்டுகொண்டு கைகாட்டுவது எங்கனம்? யாரைக் கேட்க? அருள் வாக்கு சொல்வதோடு விலகிவிட்டாரே சிட்டி டிராவல்ஸ்.

மூத்திர நாற்றம், கொசுக் கூட்டத்தின் படையெடுப்பு ஆகியவற்றைப் பொறுத்துக் கொண்டு ஒரு மணி நேரம் ரோடில் தவம்.

ஒரு வழியாக 10.50க்கு வந்தது எஸ்.ஆர்.எம் பஸ். பாய்ந்து சென்று கைகாட்டி, ‘அப்பாடா... “ என ஏறிக் கொண்டேன்.
அதன் பிறகுதான் வந்தது வினை.

திண்டிவனம் தாண்டி, திருவண்ணாமலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது பஸ். திடீரென பஸ் முழுவதும். ஏதொ எரியும் வாசனை. புகை.

பஸ்ஸில் உதவிக்கு இருக்கும் ஒரு ஆள், அலறிப் புடைத்துக் கொண்டு, எல்லோரும் பஸ்ஸைவிட்டு இறங்குங்க... ஓடுங்க... அவசரம் என அலறினார்.

பயனிகள் யாவரும் பதறிப்போய் ஓடினர்.  பஸ்ஸின் ‘டைனமோ’ எரிந்து விட்டிருந்தது.  அதனால் பஸ்ஸினுள் புகை. நாற்றம். நல்லவேளை. டிரைவர் சமயோசிதமாக வண்டியை நிறுத்தி விட்டு, எல்லோரையும் இறக்கிவிட்டார். இல்லாவிடில், தீ பரவிவிட்டிருந்தால், தூக்கத்திலேயே,அனைவரும் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகியே செத்திருக்க வேண்டும்.  பெங்களூர்-ஹைதராபாத் ஆம்னி பஸ் ஒன்று இப்படிதானே முப்பது பேரை பலி கொண்டது?

இந்த க்ரைஸிஸை பஸ்ஸின் நிர்வாகம் எதிர்கொண்ட விதம் வினோதாம இருந்தது.  ரோடில் பெண்களும் குழந்தைகளும், சில பெரியவர்களும், நடு இரவில்-ஒரு அத்வானத்தில் அம்போவென நிற்கிறார்கள். உங்களது ஹெட் ஆபீஸைத் தொடர்புகொண்டு, ஒரு வேனையாவது (VAN) ஏற்பாடு செய்யுங்கள். எங்களை அருகில் இருக்கும் பெரிய ஊரிலோ, ஹொசூரிலோ இறக்கிவிடுங்கள். அங்கு வேறு பஸ் பிடிசுக்கிரோம்; இந்த சாலையில் ஆம்னிபஸ்கள் வராது; போக்கு பஸ்களில் ஏற்ற/ஏற முடியாது; கூட்டமாக இருக்கும் என்ற என் கோரிக்கை எவன் காதிலும் விழவில்லை. ரெட்பஸ் காரர்கள் டெம்ளேட் பதில்களைக் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, நடு இரவில், நிர்க்கதியாய் நிற்கும் பயணிகளைப் பற்றி யாதொரு கவலையும் இல்லை. வேறு ஏதாவது பஸ் வந்தால் அதில் ஏற்றிவிடுவார் டிரைவர் என்பதுதான் திரும்பத் திரும்ப சொல்லப் பட்டது.  

வேறு பஸ்ஸோ-வேனோ ஏற்பாடு செய்தால், காசு செலவாகுமே? தனியாருக்கு லாபம் மட்டும்தானே குறி?  இரவு மூன்று மணிவரை அவர்களோடு போராடிவிட்டு, வேறு வழியின்றி  ஒரு போக்கு பஸ்ஸில் ஏறி, நான் கடலூருக்கே திரும்பி வந்துவிட்டேன்.

ஒரு க்ரைஸிஸ் என்றால் இப்படியா, நிர்வாகம் நடந்து கொள்ளும்? நல்ல வேளை பெரும் அளவி தீ பரவவில்லை. பரவியிருந்தால் என்னாவது? அப்பொழுதும்  ரெட் பஸ்காரர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களா?
இதே,  அரசு நிறுவனமாக இருந்தால், வேறு ஒரு பஸ் வந்திருக்கும். சட்டையைப் பிடித்துக்கேட்க, ஒரு டிவிஷனல் மேனஜர், கிளை மேனேஜர் இருப்பார். இங்கே, தொலைபேசியை ஆன்ஸர் செய்யக் கூட ஆளில்லை.
இதுதான் ஆம்னி பஸ்களின் சேவை. ஒரு டோக்கன் ப்ரொடெஸ்டாக ரீஃபண்ட் கேட்டிருக்கிறேன். தரமாட்டார்கள். அவ்வளவு தான் அவர்களது தர்மம்..நியாயம்.