Saturday, June 24, 2017

கார்டு வாங்கலையோ.. கார்டு!!

மனுஷனுக்கு எந்தெந்த விதங்களிலெல்லாம் இம்சை வந்து சேரும் என்பது யூகிக்கமுடியாத சமாச்சாரம்.  அதிமுகவிற்கு வரும் இம்சைகளைக்கூட மோடி புன்னியத்தில் சமாளித்து விடலாம். ஆனால் மோடி நமக்குக் கொடுக்கும் குடைச்சல் இருக்கே!  சரியான நமுட்டு விஷமம் புடிச்ச ஆள்.

இது நாள் வரை, நான் பசுமாடு போல, அரசாங்கம் சொல்லும் வரியைக்கட்டிவிட்டு, தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். குடைச்சல் வந்து சேர்ந்தது ‘பான் கார்டு’ மூலம்.ஆதார் கார்டுடன், பான் கார்டையும் இணை. அதுவும் ஜூன் 30க்குள்ளாக என்று ஒரு ஆணை.  

இந்த வங்கிக்காரர்கள், செக்குமாடு போல, உடணடியாக அருகில் இருக்கும் வங்கிக்கிளைக்கு வந்து, ஆதார் எண்ணை சமர்ப்பிக்குமாறு சகட்டுமேனிக்கு, நாளொன்றுக்கு பத்து எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள்.  மெஸேஜ் அனுப்பும் ப்ரோக்ராமில், ‘யாரெல்லாம் ஆதார் எண் சமர்ப்பிக்கவில்லையோ, அவர்களுக்கு மட்டும்’ என்று ஒரு கண்டிஷன் போடமாட்டார்களா?  வேகாத வெயிலில் வங்கிக்குச் சென்றால், ‘ நீங்க, முன்னாலயே ஆதாரை கொடுத்து விட்டீர்களே?’ என அழகு காண்பிப்பார்கள்.  இந்த பிடுங்கலாவது உள்ளூரோடு முடியும்.   ஆனால், ஆதார்-பான் கார்டு இணைப்பு இருக்கே, அது கங்கையையும் காவிரியையும் கூட இணைத்துவிடுவது சுலபம் என்று தோன்ற வைக்கும்.

இன்னும் என்னென்ன கார்டை, எந்தெந்த கார்டோடு இணைக்கச் சொல்லி உத்தரவு வரப்போகிறதோ என பீதியாயக் இருக்கு!  டிபார்ட்மெண்ட் ஐ.டி கார்டு,  க்ரெடிட் கார்டு, டிரைவிங்க் லைஸென்ஸ் கார்டு, மெடிகல் கார்டு, உள்ளூர் லைப்ரரிகார்டு என கைவசம் ஒரு கத்தை கார்டு வைத்திருக்கிறேன். என் வீட்டுப் பால்காரர், பேப்பர் போடுபவர் என பலரும் ஆளுக்கொரு ஒரு அட்டையை திணித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். தேவுடா....‘மன் கி பாத்’ நமக்கு இல்லையே!

ஆதார்கார்டை, பான்கார்டுடன் இணைக்க, ஒரு தளத்தின் இணைப்பை வழங்கியிருந்தார்கள். உள்ளே சென்று இணைப்பைச் சொடுக்கினால்,  பெயர் பொருத்தமில்லை என ரிஜெக்ட் ஆகியது.  இதென்ன கல்யாணப் பொருத்தமா.. அதெப்படி பொருந்தாமல் போகும் என சிண்டைப் பிய்த்துக்கொண்டு (வழுக்கை விழுந்துவிட்டாலும்) ஆராய்ந்து சொல்லச் சொன்னால்,  இரண்டு கார்டிலும் பெயர் வேறுவிதமாக இருக்கிறது  எனப் பதில் வந்தது.

தமிழ் நாட்டிற்கு, வேறு எந்த மானிலத்திற்கும் இல்லாத ஒரு இம்சை இருக்கிறது.  இங்கே பெயர் என்றால் பெயர்தான். அதற்கு சஃப்க்ஸ்-ப்ரிஃபிக்ஸ் எல்லாம் கிடையாது. பெயருடன் பெரும்பான்மையாக ஒரு இனிஷியல் இருக்கும். அது அனேகமாக அப்பா பெயர். அவ்வளவே! பலராமன் என்றால் பலராமன் தான். அட்டாச்மென்ட்கள் இல்லை. 

ஆனால் வடக்கே  கிவன் நேம், ஃபர்ஸ்ட் நேம், சர் நேம், மிடில் நேம், பெட் நேம் என பல தினுசுகள் இருக்கும் போல. இந்தப் பெயர்களுக்கு என்னதான் விளக்கம் எனத் தெரிந்துகொள்ள முப்பது வருடமாக முயன்று தோற்றுவிட்டேன். 

R. பலராமன் என்றால் என் பெயர் ராமச்சந்திரன் பலராமன். பலராமன். R  என்றால் என் பெயர் பலராமன் ராமச்சந்திரன்.

பான் கார்டு அப்ளை செய்யும் போது, ஏஜண்ட் பெயரைக் கேட்டார். சொன்னேன். அப்பா பெயர் என்னவென்றார். ‘ராமச்சந்திரன்’ என்றேன். அந்த புன்னியவான் எந்தப்பெயரை எங்கு எழுதினாரோ தெரியவில்லை. கார்டில் பலராமன் ராமச்சந்திரன் என வந்திருந்தது. அட, இது அப்பாவின் பெயர்தானே.. இருந்துட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன். இது நடந்தது 15 வருடங்கள் இருக்கும். இப்ப வந்தது வினை.

ஆதாரில் என்பெயர் பலராமன். ஆனால் பான் கார்டில் என்பெயர் பலராமன் ராமச்சந்திரன்.  எனவே இணைக்க முடியாதாம். இதென்ன இம்சை. இரண்டு கார்டிலும் அப்பா பெயர் ராமச்சந்திரன் தானே? ஏற்றுக் கொள்ளக் கூடாதா என்றால், முடியாது என்றது சிஸ்டம். இந்தியாவில் மனிதர்கள் கூடவே பேசுவது சாத்தியமாகத நிலையில், மிஷினுடன் என்னத்தைப் பேச?

சரியென ஆன்லைனில், பெயரை மாற்றும் ஆப்ஷனுக்குச் சென்றேன்.

அடாடா.. எப்படித்தான் மைனஸ் -12 சைஸில் எப்படித்தான்  ஃபாண்ட் வைக்கிறார்களோ? மஞ்சள் நிறக்கட்டங்களில்,  உமிக்கொசு சைசில் எழுதியிருப்பதைப் படித்தாக வேண்டும். அதைப் புரிந்து கொள்ளவேண்டும். பின் ஃபில்லப் செய்யணும். சை.. பெயரை மாற்ற காசு வேறு கேட்டார்கள். ஆன்லைனில் கட்டியாகிவிட்டது.

ஒரு வழியாக என்பெயர் பலராமன்.என் அப்பா பெயர் ராமச்சந்திரன் தான் என டைப் செய்தவுடன்,  பெயர் மாற்றம் செய்யணும் என்றால், எந்தெந்த சர்டிபிகேட் தேவை அவர்கள் சிஸ்டம் என ஒரு லிஸ்ட் படித்தது.  எல்லாம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கிற வேலை. 

நான் பலராமன் தான் என நிரூபிக்க ஆதார் கார்டு, பென்ஷன் ஆர்டர், பென்ஷன் புக், வங்கிக் கணக்கு முதல் பக்கம் எல்லாம் கொடுத்தேன்.

பதினைந்து நாள்  கழித்து மெயில் வந்தது. “பெயரை உறுதிப் படுத்த பென்ஷன் ஆர்டரோ, ஆதார் கார்டோ, வோட்டர் ஐ.டியோ ஏற்றுக் கொள்ளக் கூடிய தஸ்தாவேஜூகள் இல்லை. போய் பள்ளிக்கூட சர்டிபிகேட்டை தேடி எடுத்துவா..”

அடப்பாவிகளா.. நான் பள்ளியைமுடித்தது 1969ல். அந்த சர்டிபிகேட்டை எங்கே தேட? நான் படித்த படிப்புகளின் அடிப்படையில் தானே  வேலை கிடைத்தது? அப்பாயின்மெண்ட் ஆர்டரில் பலராமன் என்று தானே இருக்கு? நாப்பது வருடம் குப்பைகொட்டிவிட்டு ரிடயர்மெண்ட் (சூப்பரானுவேஷனில் தான்) ஆர்டரும் அதன் அடிப்படையில்தானே?   அதில் பலராமன் என்றுதானே இருக்கிறது? அதை எப்படி சான்றாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்-என வினவினால், “ஆத்தா வையும்.. சந்தைக்குப் போகனும்.. காசு கொடு...” என சொன்னதையே சொல்லும் கமல் போல, ஸ்கூல் சர்டிபிகேட் கொடு என சண்டித்தனம் செய்த்து இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்.

வீட்டை தலைகீழாகப் புரட்டிப்போட்டாகிவிட்டது. 1971-ல் சேலம் பேலஸ் தியேட்டர் சைக்கிள் ஸ்டேண்டில் கொடுத்த ‘டோக்கன் கூட’ கிடைத்தது.. எஸ்.எஸ்.எல்.ஸி சர்டிபிகேட் காணவில்லை.

இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் என்ன பெண்டாட்டியா என்ன, கோவிச்சுக்க முடியுமா? முறையிடுவதைத் தவிர வேறு வழி?

ஐயா.. ஆதார் கார்டும், வோட்டர் ஐடியும், பென்ஷன் புக்கும் ‘பலராமன்’ என்றுதானே இருக்கு? அதன் அடிப்படையில் பான் கார்டில் பெயர் மாற்றக் கூடாதா? அரசாங்கத்தின் பெட் திட்டமான ஆதாரையே நம்ப மாட்டீர்களா என அழுது புரண்டாலும், ஸ்கூட்ல் சர்டிபிகேட்... சந்தைக்கு போகனும்னு அடம்.

வேறு வழியின்றி, பிரதம மந்திரியின் ‘குறைகேட்கும்’ அலுவலகத்திற்கு முறையீடு செய்தேன். ஐயா... சத்தியமா நான் பலராமன் தான். ஆதார், ரிடயர்மெண்ட் ஆர்டர்..இத்தியாதிகளை நம்புங்கள். இது நாள் வரை சம்பளத்தில் வருமான வரி பிடித்தமெல்லாம் ‘பலராமன்’ என்ற பெயரில் அதே பான் கார்டு எண்ணில், கட்டும்போது ஏற்றுக் கொண்ட வருமான வரித்துரை, இப்போது ஏற்றுக் கொள்ள மறுப்பது அக்கிரமம், வரிகளை ஏற்றுக்கொள்ளும்போது இது முரணாகத் தெரியவில்லையா.. எனப்  புலம்பியிருந்தேன்.

நமது அதிகார வர்க்கத்திற்கு மூளை எப்போதும் நேரே போகாது போல. “தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால், தவளைக்கு காது கேட்காது.. அதனால்தான்  தாவ முடியவில்லை” என தீர்மாணிக்கும் அதிபுத்திசாலி அல்லவா?  

இந்த முறையீட்டை, அவர்கள் யாருக்கு அனுப்பியிருக்கனும்? பான் கார்டு பெயரை மாற்றும் அலுவலகத்திற்குத்தானே? அவ்வளவு எளிதாக முடிவெடுத்துவிட்டால், அதிகார வர்கத்தின் மூளை என்னவாவது? எனது புகாரினை, ஆதார் அலுவலகத்திற்கு அனுப்புவிட்டனர்.

ஐயகோ... ஆதார் அட்டையில் பழுதொன்றுமில்லை. பிரச்சினை பான் கார்டில் தான் என புலம்பினால், ‘Further comments not allowed.. some problems noticed” என பதில் வருகிறது.

படுபாவிகள்.. ஆதார் கார்டில் பெயரை மாற்றித் தொலைக்கப் போகிறார்களோ என அச்சமாக இருக்கிறது.

திட்டம் என்னவோ நல்ல திட்டம்தான். அதை அமுல் படுத்தும் பொழுது, மேலே இருக்கும் ஒன்றரை கிலோ சமாசாரத்தை கொஞ்சமாவது பயன்படுத்த வேண்டாம்?  செக்கு மாடுபோல அங்கேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

சிக்கலைத் தீர்க்கப் போகிறார்களா? இல்லை புதுசாக ஏதாவது சிக்கலை தோற்ற்விக்கலாமா என யோசிப்பார்களா தெரியவில்லை.


அரசாங்கத்தோடு பேசி புரியவைக்க இயலாது. என் பெயர் பலராமன் தான் என ஏற்றுக் கொண்டால், ரூ 101/- உண்டியலில் போடுவதாக வடிவழகியம்மனுக்கு வேண்டிக் கொண்டுள்ளேன். அது மட்டுமே இங்கு சாத்தியம்.

Friday, June 9, 2017

காஷ்மீருக்கு ஒரு பயணம் – இறுதிப் பகுதி.

மலைவழிப்பாதைகள் என்றுமே கவர்ச்சிக் கன்னிகள்தான்.  சலிக்காத காட்சிகள். ஆனாலும் ஸ்ரீநகரிலிருந்து பெஹல்காமிற்குச் செல்லும் வழி, ரசிக்கவைக்கும்.அடுத்துச் சொல்வதென் றால் சோனாமார்க்கிற்குச் செல்லும் வழி.

சோனாமார்க்கிற்குச் செல்லும் வழியெங்கும் உடன் கைபிடித்துக் கொண்டே வரும் நதி சிந்து.  வளைந்து நெளிந்து, மலையிடுக்குகளிலும் சமவெளிகளிலும் நளினமாக ஊர்ந்தும், பாய்ந்தும், சீறியும் உடன் வருகிறது. சோனாமார்கில் பார்க்க வேண்டுமெனில் ஆங்கே விரிந்து கிடக்கும் க்ளேசியரைச் சொல்வார்கள். என்னைக் கேட்டால் அந்த ஊருக்குச் செல்லும் வழியே பிரமாதம் என்பேன்.

சோனாமார்கின் அடிவாரத்தில் நாம் சென்ற வாகனத்தை நிறுத்திவிடுவார்கள். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் மலைகளில் ஏறிச் சென்றால் மேற்சொன்ன க்ளேசியரைப் பார்க்கலாம். எப்பொழுதும் போல, க்ளேசியருக்கும் மேல் மலைக்கவைக்கும் பனிமூடிய சிகரங்கள்.

பிரச்சினை என்னவென்றால், காஷ்மீர் முழுவதும் நாம் அமர்த்தியிருக்கும் டாக்ஸியை மலை அடிவாரத்திலேயே நிறுத்திவிடுகிறார்கள். அதற்குமேல் செல்ல, உள்ளூர் டாக்ஸியைத்தான் நாட வேண்டும். அது யூனியன் விதியாம். அவர்கள் கூறும் கட்டணத்திற்கு GPFஅல்லது DCRGஓ தான் வாங்கனும். உதாரணமாக இந்த சோனா மார்கில் மேலே செல்ல வேண்டிய தூரத்திற்கு அவர்கள் கேட்கும் வாகணக் கட்டணம் ரூ 5000/- . அதுவும் முழு ஆறுகிலோ மீட்டர் தூரத்திற்கும் அல்ல; பாதியிலேயே (மூன்று கிலோ மீட்டர்) இறக்கிவிட்டு, பின் குதிரையிலோ அல்லது நடந்தோ போகச் சொல்லிவிடுவார்கள். குதிரைச் சவாரிக் கட்டணத்தைக் கேட்டால், குதிரையின் விலையைச் சொல்வார்கள். போதுமான காசு இருந்து மேலே போனால், ஸ்லெட்ஜ் கட்டணம் ஆயிரம் என்பார்கள். தலை சுற்றும்.

எனது Cab Driver,  நல்லவேளையாக கீழிருந்தே மேலே சென்று கீழேவர குதிரைக் கட்டணம் ரூ.1200/-க்கு அமர்த்திக் கொடுத்தார்.  நான் சென்ற குதிரை மீடியம் சைஸ். பார்ப்பதற்கு சாதுவாகத்தான் இருந்த்து. அதன் மேல் ஏறுவதும் இறங்குவதும் கடினமாக இல்லை. ஆனால் பிரச்சினை வேறுவடிவில் வந்தது. கற்களிலும், இடுக்குகளில் ஒற்றையடிப்பாதையில் புதுப்பெண்போல தலையைக் குனிந்துகொண்டு மெல்ல-மெல்ல சென்று கொண்டிருந்த குதிரை, திடீரென வான் நோக்கி அன்னாந்து, ‘ம்மஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ..’ என கனைத்தது.  குதிரையின் கூட  நடந்து வந்தவர், ‘கயிற்றை இறுகப் பிடிங்க..’ என ஹிந்தியில் அலற... அதை மொழிபெயர்த்து, எனது மூளை புரிந்துகொள்ளுவதற்குள், கன நேரத்தில். நான் பயணித்த குதிரை விருட்டென ஒரே பாய்ச்சலாம எதிரே வந்துகொண்டிருந்த ஒரு குதிரையை நோக்கிப் ஓடியது. இதை சற்றும் எதிர்பாராத நான் குதிரையிலிருந்து ......... வேண்டாம்; அது சோகக் கதை. 

இடுப்பைப் பிடித்துக்கொண்டு, பேண்ட் - சட்டையை சரிசெய்து கொண்டு, என்னவாயிற்று என விசாரித்தால், எதிரே வந்து கொண்டிருந்த குதிரை, இந்தக்குதிரையின் காதலி என்றார் குதிரை வாடகைதாரர். இடுப்பு வலி-வீக்கம் தீர கோட்டக்கல் ஆயுர்வைத்யசாலையில்  அப்பாயிண்மென்ட் கேட்டுள்ளேன்.

வழியெங்கும், இந்த இடத்தில்தான் ஷாருக்கான் பாட்டுப்பாடினார்..அமிதாப் சண்டைபோட்டார்.. மது டான்ஸ் ஆடினார் என, அவர் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் குஷி அவருக்கு; என் இடுப்பு வலி எனக்கு. 

அடுத்த நாள் பெஹல்காம்.

பெஹல்காமில் பார்ப்பதற்கு பத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. வழக்கம்போல அடிவாரத்திலேயே,  நான் வந்த டாக்ஸி நிறுத்தம். அதற்கும்மேல் பயணிக்க ஜி.பி.எஃப். 

அதிசயமாக இந்த இடத்தில் மட்டும் எந்தெந்த இடங்களுக்குச் செல்ல எவ்வளவு கட்டணம் என யூனியனில் வரையறுத்து, அறிவிப்புப்பலகையில் போட்டுள்ளனர். ரூ 1200 முதல் ரூ 5000 வரை கட்டணம் செல்கிறது.  கொடுக்கும் ரூபாய்க்கு ஏற்ப இடங்கள் காண்பிக்கப்படும். நான் மூன்று இடங்களைமட்டும் தேர்வு செய்தேன். சந்தன்வேலி, பேடாப் வேலி, அருவேலி. சர்க்கரை இனிக்கிறது என சொல்லவேண்டுமா என்ன? எல்லா இடங்களும் கண்கொள்ளாக் காட்சிகள். இதில் சந்தன் வேலி என்பது ‘அமர்நாத்’ யாத்திரை செல்வோரின் பேஸ்கேம்ப்.  இங்கிருந்து அமர்நாத் குகை வெறும் 30 கி.மீ தான்.  யாத்திரை செல்வோர் குதிரையில்தான் செல்ல வேண்டுமாம். 

டைகர் ஹில் (கார்கில் சண்டை நடந்த்தே... அந்த இடம்) வெகு அருகில்.  பெஹல்காமுற்குச் செல்வதாயிருந்தால், காலை எட்டு-ஒன்பது மணிக்கே சென்றுவிடுங்கள். இல்லையெனில் எல்லா இடங்களையும் கவர் செய்ய இயலாது.
வழியெங்கும் ஆப்பிள் தோட்டங்கள். மலைச் சரிவுகளில் வால்நட் (வாதுமைக் கொட்டை) மரங்கள், மேப்பிள் மற்றும் வில்லோ எனப்படும் கிரிக்கெட் பேட் செய்யப்பயன்படும் மரங்கள்.

கீழேகொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தொகுப்பைப் பாருங்கள்.

உபரியாக..
டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் சென்ஸிடிவான விஷயங்களை பேசுவதில்லை. மதம்..பாகிஸ்தான்..இந்தியா என எதிலும் தங்கள் கருத்தைச் சொல்வதில்லை. ஃப்ரொஃபஷனலஸ்.  நாமும் அப்படியே நடந்து கொள்ளவேண்டும். ஃபேஸ்புக்போலவே, வாட்ஸப்போலவோ நமது கருத்தை அந்தவினாடியே சொல்லியாகவேண்டும் என்ற உந்துதலுக்கு ஆட்படக்கூடாது.  வந்த வேலை ஊர்சுற்றிப் பார்ப்பது. அதைமட்டுமே கவனிக்கவேண்டும். டூரிஸ்ட்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு கவனித்துக் கொள்கிறார்கள்.  நான் சென்ற படகுவீடு சாப்ரி குழுவினர் (9797111189) டிரைவர் அயூப் சாப்ரி (9906546016). இது ரெகமென்டேஷன் அல்ல. ஒரு தகவலாக மட்டுமே; நன்றாக பாதுகாப்பாக கவனித்துக் கொண்டனர் என்பதால். 

பொதுவாக இளைஞர்கள் மாநில-மத்திய அரசாங்கங்கள் மேல் அசாத்தியக் கோபத்தோடு இருக்கிறார்கள். தங்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்துவிட்டதாக நம்புகிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் பல நடந்துகொண்டிருக்கின்றனதான். அவை அவர்களைத் திருப்தியுறச் செய்யவில்லை. வேலை வாய்ப்பு மிக அதிகம் வேண்டும் என விரும்புகிறார்கள். ‘பாக்’கும் வேண்டாம்-இந்தியாவும் வேண்டாம். விடுதலைதான் வேண்டும் என்பது பொதுவான அபிப்ராயம்.

பாதுகாப்புப் படைகள் உயிரைக் கொடுத்து கடமையாற்றுகிறார்கள். அவர்கள் மட்டும் இல்லையெனில்...... 

காஷ்மீருக்கான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம்வரை அங்கே தென்படவில்லை.Thursday, June 8, 2017

காஷ்மீருக்கு ஒரு பயணம் – பகுதி 3 – குல்மார்க்.

“நாளை குல்மார்க் போகிறோம். காலை 9 மணிக்கு ரோட் பாயிண்டுக்கு வந்துவிடுங்க. குல்மார்க்கை என்றென்னும் மறக்க மாட்டீங்க  பாருங்க..” புதிர்போட்டுவிட்டு, தால் ஏரிக்கரையில் விட்டுவிட்டுச் சென்றார் Cab driver அதுல். 

ஏற்கனவே திகட்டும் அளவு ஸ்ரீநகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் பார்த்துவிட்டபின், பின் எதுதான் நம்மை திக்கு முக்காட வைத்துவிடமுடியும் என்ற நினைவோடு,  சிறு படகு ஒன்றின் மூலம், படகுவீட்டிற்குப் போனேன்.

‘க்யா சாப்.. ஆஜ் கைசே ஹை?’ விசாரித்தார் படகுவீட்டின் ஓனர் சாப்ரி.  ஒவ்வொரு டூரிஸ்ட் ஸ்பாட்டிற்கு சென்று வந்ததும், அனைத்து காஷ்மீரிகளும் விசாரிக்கும் கேள்வி இது. இன்றைய தினம் எப்படி இருந்தது? எங்க காஷ்மீர் எப்படி இருக்கு?  அனுபவித்தீர்களா? இத்தகைய கேள்வியை எதிர்கொள்ளாத தினம் இல்லை. அந்த மாநிலம் குறித்து அவர்கட்கு அவ்வளவு பெருமை. ஆஹா... பிரமாதம் என்று பதிலுரைத்துவிட்டால், அவர்களுக்கு உச்சி குளிர்ந்து விடுகிறது. எத்துனை ஆயிரம் டூரிஸ்ட்களைப் பார்த்தி ருப்பார்கள். இதே கேள்வியைக் திரும்பத்திரும்ப கேட்பதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை.  கிடைக்கும் பதிலிலால் பெருமிதம் அடைவதிலும் அவர்கள் சலிப்பதே இல்லை.

சார்.. இன்னிக்கு ‘ஷிகாரா’ போய்விட்டுவாருங்கள். உங்களுக்காக ஷிகாரா இனாமா அளிக்கிறோம் என்றார் சாப்ரி.

அதென்ன ஷிகாரா? சிறுபடகொன்றில் ஏறிக்கொண்டு, விரிந்து பரந்திருக்கும் தால் ஏரியையும், தெரு அமைப்பது போல, வரிசைகட்டி நிற்கும் படகுக் கடைகளுக்கிடையே சுற்றிவருவதுதான் ஷிகாரா. மிதக்கும் போஸ்டாபீஸ், மிதக்கும் விதவிதமான கடைகள் என அனைத்தும்ஏரியினுள். படகுவீட்டிற்குவந்து ரிஃப்ரஷ் செய்துகொண்டு, ஷிகாராவிற்கு தயாரானேன். மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்த ஷிகாரா , இரவு எட்டுமணிவரை நீண்டது. வெனிஸ் கூட இவ்வளவு அழகாயிருக்க இயலுமா என்பது சந்தேகம். அங்கு கோடையில் இரவு எட்டு மணிக்குத்தான் சூரியன் மறைகிறான். அதுவரை படகுச் சவாரி. அருமையான அனுபவம். One cannot ask more. இது பற்றிய புகைப்படங்களை பகுதி 1 ல், பார்த்திருப்பீர்கள்.

இது ரம்ஜான் நோன்பு மாதம். விடியற்காலை முதல் இரவு வரை உண்ணமாட்டார்கள். அவர்கள் இவ்வாறு உண்ணா நோன்பிருக்கும்போது, நான் மட்டும் டிரைவரைப் பார்க்கவைத்துவிட்டு  உண்ணுவது எனக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நான் அங்கிருந்த ஆறுதினங்களிலும் மதிய உணவை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த அப்ரோச் அவர்களுக்கு பிடித்துவிட்டது போல.  

தென்னிந்திய இட்லி-தோசை-பொங்கல்-சாம்பார்-வடைப் பிரியர்கள் வாயைக் கட்டிக் கொள்ளவேண்டும். எளிதில் கிடைக்காது. காலை போஹா எனப்படும் அவல் உப்புமாவின் கொடுங்கோலாட்சியை விரும்பாமல், ‘ப்ரெட்-வெண்ணை’ மட்டும் எடுத்துக் கொள்வதையும், இரவில் ‘சப்பாத்தி-தால்’ எடுத்துக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொண்டேன். கோதுமை எனக்கு ஒத்துவராது. க்ளூடமைன் அலர்ஜி..இரவு முழுவது நெஞ்செரிச்சல் வரும். ஆனால் வேறு தேர்வு இல்லை. ‘சாவல்’ (அரிசி சாதம்) உண்டு. சாதமும் சுவைக்காது..அதற்குத் துணையாக பொருந்தாத் திருமணம் போன்ற ‘தாலும்’ சுவைக்காது. எனவே ‘பெட்டர் ஈவில்’ ரொட்டிதான். உண்டுவிட்டு இரவு பத்து பன்னிரெண்டுவரை, காலை நீட்டிக்கொண்டு படகுவீட்டின் வராந்தாவில் நிலவையும், சிற்றலைகளையும், இரவில் மின்னிக் கொண்டிருக்கும் இதர படகுவீடுகளையும், எதிரே இருக்கும் சங்கராச்சார்யா குன்றையும் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு பிறகுதான் படுக்கை.

காலை சரியாக எட்டேமுக்காலுக்கே, டிரைவர் அதுல் அழைத்துவிடுவார். ‘சார் ரெடியா...?’

‘இதோ வந்துவிட்டேன்’ கிளம்பிவிடுவேன்.

குல்மார்க் நகரம்,  ஸ்ரீநகரிலிருந்து இரண்டுமணி நேரப் பயணம்.  வழியெங்கும் சிறிதும் பெரிதுமாக நிறைய ஊர்கள்.  Breathtaking என்று சொல்ல முடியாவிடினும் வழியெங்கும் அழகான காட்சிகள். குல்மார்கை  நெருங்க நெருங்க, காற்றில் குளுமை கூடிக்கொண்டே போனது. குல்மார்கில் அப்படி என்ன புதிதாக இருந்துவிடப் போகிறது என்ற அசுவாரஸ்யத்துடன் காரில் அமர்ந்திருந்தேன்.

ஒருவழியாக குல்மார்க் வநத்து. குல்மார்க் என்பது வென்பணி சூழ்ந்த மலைமுகடுகளைக் கொண்ட இடம். அவ்லான்ச் எனப்படும் பனிச்சரிவின் காரணமாக பாதிமலைவரை விரிந்து பரந்திருக்கும் வெண்பனி (Snow) போர்த்திய பரப்புகள். அந்த இடத்திற்குச் செல்ல கேபிள் கார்கள் அமைத்திருக்கிறார்கள். 

 இந்த கேபிள் கார்களை, ‘இரண்டு ஸ்டேஜாக’ வைத்திருக்கி றார்கள். முதல் ஸ்டேஜ் 8000 அடிகள் உயரத்திற்குச் செல்லும். 700 ரூபாய் கட்டணம். அடுத்த ஸ்டேஜுக்குச் செல்ல வேறு ஒரு கேபிள்கார். அது 14000 அடி உயரம் வரை தூக்கிச் செல்லும். 900 ரூபாய் கட்டணம்.  இரண்டிற்கும் சேர்த்து அடிவாரத்திலேயே டிக்கட் வாங்கிக் கொள்ளலாம். 1600 கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டேன். நல்ல வேளையாக, உடன் வந்த கைடிற்கு டிக்கட் வேண்டாம் என்று அறிவித்துள்ளார்கள்.  குல்மார்கை அவர்கள், காஷ்மீரியில் ‘குலுமரே’ என்கிறார்கள். எப்படியாவது சொல்லிக் கொள்ளட்டும். A rose is a rose is a rose is rose.

பெரும்பாலான ஆட்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். மைல்கற்கள், கடைகளின் நேம்போர்டுகள், அறிவுப்புகள் யாவும் ஆங்கிலம் மற்றும் உருதுவில்தான். இந்தி இல்லை. இதே காட்சியை ஒரிஸாவிலும் கண்டேன். அங்கே ஒரியா மற்றும் ஆங்கிலம். இங்கே இந்தி தெரியாவிடினும் சமாளித்துக் கொள்ளலாம். என்ன.. அவர்களது அக்ஸென்டை புரிந்துகொள்ள நிதானிக்க வேண்டியிருக்கிறது. மிலுக்கு என்றால் மில்க். இஸ்ஸலெட்ஜு என்றால் ஸ்லெட்ஜ். ஹாரஸு என்றால் ஹார்ஸ் (Horse).  இந்த அக்ஸென்ட் விளங்காமல் சற்று நேரம் விழிக்க வேண்டியிருந்தது.  

முதல் ஸ்டேஜுக்குச் செல்வதற்கான கேபிள்காரில் ஏறிக்கொண்டேன்.  ஜிவ்வென வேகமெடுத்து நம்மை ஏந்திச் சென்ற கணங்களில், கீழே பார்க்க வேண்டுமே... அடாடா.. என்ற ஒரு காட்சி! ஓவியன் வரைந்துவைத்தது போல விரிந்துகொண்டேயிருக்கும் ஓவியங்கள். காஷ்மீர் சால்வைகள் செய்ய பயன்படும் ஷீப் என்னும் ஆட்டுக்கூட்டம், ஆயிரக்கணக்கில் மேய்ந்து கொண்டிருந்தன.  ஆங்காங்கே மேய்ப்பர்களின் குடியிருப்புகள்.  சற்று நேரத்திலேயே பச்சைநிற காட்சிகள் மறையத் தொடங்கியது. பின் காலின் அடியில் கண்கள் கூசும் வெள்ளை நிறப்பனிச்சரிவுகள். வின்முட்டும் சிகரங்கள். டிஸ்கவரி சேனலில் மட்டுமே பார்த்திருக்கும் அவலான்சுகளும் வெண்மலைகளும், வின்முட்டும் சிகரங்களும் 70 MM ஸ்க்ரீன் போல விரிந்தது.  அடாடா... மனிதக் கண்கள் அதிகபட்சம் 120 டிகிரிமட்டும் பார்க்கும்படி ஆண்டவன் அமைத்துவிட்டானே? 360 டிகிரியும் பார்க்கும்படி அமைத்திருக்கக் கூடாதா என ஏங்க வைக்கும் காட்சிகள். அவற்றை வர்ணிக்கவார்த்தைகள் போதாது.

‘இதுக்கே மலைச்சுப்போயிட்டீங்கன்னா.. இரண்டாவது கேபிள் கார்ப் பயணம் இருக்கே என்ன செய்வீர்கள்?’ என இன்னும் ஒருகிலோ திருநெல்வேலி அல்வாவைத் தூக்கிப் போட்டார் கைடு.என்ன சொல்ல? வாய்பிளக்க, கண்கள் கொள்ளுமளவு காட்சிகளை உள்வாங்கிக்கொள்ளலாம்.. அவ்வளவே!

முதல் கேபிள்கார் தன் பயணத்தை முடித்துகொண்டது. இரண்டாவது கேபிளுக்குள் செல்வதற்கு முன்னாக, இந்த இடத்தில் உள்ள இயற்கை நீரூற்றுகளையும் ஒரு அருவியையும் இயற்கைக் காட்சிகளையும் காணலாமா என்றார் கைடு. ‘வேண்டாம்.. திரும்பவரும்போது பார்த்துக் கொள்ளலாம்..’ என அவசரமாக மறுத்தேன். திரும்ப வரும்போது அவற்றைப் பார்த்தும் விட்டேன்.

இரண்டாவது கேபிள், புதிய உயரங்களுக்குத் தூக்கிச் சென்றது. எங்கும் பனிப் பிரதேசங்கள். ‘ரோஜா’  நாயகி, ஆச்சர்யத்துடன் பார்த்தது போல பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டாவது கேபிள் பயணமுடிவில், ஒரு மலையின் பள்ளத்தாக்கில் நின்றுகொண்டிருந்தோம்.

சொற்பமாகவே கூட்டம். சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பனிப்பிரதேசம் இரண்டு ச.கிலோமீட்டர் பரப்பளவுள்ள பனிச்சரிவு. அதில் பாதிதூரம் வரை ஸ்பெஷல் பூட்ஸ் அணிந்துகொண்டு நடந்தும் செல்லலாம்  அல்லது ஸ்லெட்ஜ் எனப்படும் ஒரு பலகையில் அமர்ந்து கொண்டால் இருவர் இழுத்துச் செல்கிறார்கள்; அப்படியும் செல்லலாம். 
பாதி தூரத்தை எட்டியபின், ஸ்லெட்ஜ் முடிந்து,  ‘ஸ்கீயிங்’ எனப்படும் பனிச்சரிவிற்கான ஸ்னோபோர்டுகளில் பயணித்து மீதி தூரத்தைப் அனுபவிக்கலாம். ஒன்றும் வேண்டாம் எனில் சும்மா  நின்றுகொண்டு, அன்னாந்து   வேடிக்கை பார்க்கலாம். 

நான் எந்த வாய்ப்பையும் விட்டுவிடத் தயாரில்லை.
சாதாரண ஷூ வேலைக்கு ஆகவில்லை. பத்தடி ஏறியதும் இருபதடி சறுக்கியது. மூச்சு வாங்கியது. இங்கே ஆக்ஸிஜன் குறைவு என்றார் உடன் வந்தவர்.  ஏன் ரிஸ்க் என, ஸ்லெட்ஜ்க்கு சொல்லிவிட்டேன். உட்காரவைத்து இழுத்துச் சென்றார்கள். அப்படியும் ஓரிடத்தில் குட்டிக்கரணம் அடித்தேன்.  நல்லவேளையாக உடனே தூக்கிவிட்டார்கள்.
பனித்துகள்களை அள்ளியெடுத்து விளையாடலாம். விவரம் புரியாமல், வெகுநேரம் ஸ்னோவை வெறும்கைகளால்  அள்ளிவைத்து விளையாடியதால், விரல் நுனியொன்றில் ‘ஸ்னோபைட்’ ஏற்பட்டுவிட்டது.

அடுத்து ஸ்கீயிங்!  தனியாகவா அல்லது கூட ஆள் வரட்டுமா என்றார்கள். அங்கே தனியாக யாரையும் விடுவதில்லை என்பது வேறுவிஷயம். சற்றே சறுக்கினாலும் 5000 அடி பள்ளம். எலும்புகூடத் தேறாது. ஃப்ரொஃபெஷனல் ஒருவரின் ஸ்னோபேடில் நானும் ஏறிக்கொண்டு வளைந்து நெளிந்து அந்த ஏரியா முழுவதும் சறுக்கிவிளையாடினேன். என்ன ஒரு அனுபவம்? ஆஹா...

எச்சரிக்கை. 1. இங்கே  தயக்கமின்றி பேரம் பேசவேண்டும். அவர்கள் இஷ்டத்திற்கு கூலி கேட்கிறார்கள். 2. என்னைப்போல அனைத்திலும் விளையாட வேண்டுமென ஆர்வமிருந்தால் தேவையான க்ளவுஸ், கம் பூட்ஸ் அணிந்து கொள்ளவேண்டும்.இவை வாடகைக்குகிடைக்கும். குளிர்தாங்காது எனில் தரமான ஸ்வெட்டர் அவசியம்.  என்னைப்போல ஒரு சாதா ஷூவும், சாதா ஸ்வெட்டரும், க்ளவுஸ் இல்லாமலும் போனால், அகப்பட்டீர்கள். இவை இல்லாமலும் போகலாம். சும்மா வேடிக்கை பார்க்கலாம். அவ்வளவே.

சிம்லா, ரொடாங் பாஸ் என பல இடங்களில் வெண்பனியினைக் கண்டிருந்தாலும் குல்மார்கின் அழகே அழகு. LoC is near to this hill.

இந்த அத்தியாயத்தோடு காஷ்மீர் பயண அனுபவத்தை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் இதுவே நீண்டுவிட்டது.  அடுத்த அத்தியாயத்தோடு (அதில் சோனாமார்க் மற்றும் பெஹல்காம் பற்றி எழுதுவேன்) முடித்துக் கொள்வேண். உறுதியாக J.


Click here to view some Photo Collections 
Hazrathbal Mosque (Courtesy - net) 


Wednesday, June 7, 2017

காஷ்மீருக்கு ஒரு பயணம் – பகுதி 2

முழுக் காஷ்மீருமே அழகு வனம்தானே? ஆயினும், ஸ்ரீநகரில் ஏராளமான  பூங்காக்கள் அமைத்திருக்கிறார்கள். சில மொகலாயர் காலத்தியது.  ஷாலிமார் பாக் (Shalimar Bagh), Chashmishi Spring Gardan, நேரு பார்க், பரிமஹல் பார்க், அல்மண்ட் பார்க், டுலிப்  கார்டன் போன்றவை பெரியவை. அழகானவை.  அனைத்து பூங்காக்களும் நேர்த்தியாக பராமரிக்கப் பட்டு வருகின்றன. ஸ்பிரிங் பார்க் என்னும் இடம் அமைப்பில் மைசூர் பிருந்தாவன் கார்டனை நினைவு படுத்துகிறது. இந்த ஸ்ப்ரிங் கார்டனின் தண்ணீரைத்தான் நேரு குடித்தார், மருத்துவ குணம் மிக்கது என்றெல்லாம் சொல்வார்கள். தப்பித்தவறி குடித்து வைக்காதீர்கள். பனி உருகி வரும் நீர்தான். என்றாலும் பாசி போன்றவை மிதக்கின்றன. வயிறு கெட்டுவிடப் போகிறது.

அனைத்துப் பார்க்குகளும் திகட்ட திகட்ட இனிக்கிறது.  அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, நிறைந்த நீர்வளம், அக்கறையோடு கூடிய பராமரிப்பு காரணமாக பூத்துக் குலுங்குகின்றன – பளீரென்ற வண்ணத்தோடு. 

ரோஜாச் செடிகளின் விதைகள் விற்கிறார்கள். நம் ஊர் தட்பவெட்ப நிலைக்கு வளருவது கடினம். மனதை கொள்ளை கொள்ளும் டுலிப் கார்டன் இப்பொழுது சீசன் இல்லை. மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மட்டுமே பூக்குமாம்.  மொகல் ஹெரிடேஜ் கார்டன் 12 அடுக்கு கொண்ட நீரூற்றுகளைக் கொண்டு ரம்மியமாக இருக்கிறது.  எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்னும் அளவிற்கு பசுஞ்சோலைகள்; உன்னத அழகுடன்.

ஸ்ரீநகர் கோடைகாலத் தலை நகர். ஜம்மு குளிர்காலத் தலைநகர். இரு செக்ரடேரியட் கட்டிடங்கள் இருக்கின்றன. மிகப்பெரிய ஃப்ரான்ஸிக் லேபோரட்டரி இருக்கிறது. வெளியேயிருந்து வேடிக்கை பார்க்கலாம்.

அழகிய குருத்வாராக்கள் இருக்கின்றன (சீக்கியர்களின் கோயில்). நகரில் ஆங்காங்கே டர்பன் அணிந்த சீக்கியர்கள் தென்படுகிறார்கள். 

ஊரின் சற்றுத் தொலைவில் ‘மாதா கீர்பவானி ‘ கோயில் இருக்கிறது. ஜம்மு-கட்ராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைஷ்னோதேவி கோயில் தெரியும்தானே? அந்த வைஷ்னோ தேவியின் தங்கைதான் கீர்பவானி. அறுகோன அமைப்பிலான ஒரு வாய்க்காலின் (Man made) நடுவே, மிகப்பெரிய மேம்பிள் மரங்கள் சூழ, அற்புதமாய் அமைந்திருக்கிறது இக்கோயில்.  நான் சென்றிருந்த சமயம் கோயிலில் விழாக் காலம்.  அண்டை மானிலங்களிலிருந்தும்கூட, லட்சக் கணக்கில் மக்கள் கூடுவார்களாம். ஆனால் இப்போது நிலவும் சில அசாதாரண சூழல்களால் சில ஆயிரம்பேர்தான் வந்தார்களாம். அமைதியான சூழலில் அழகானதோர் கோயில். வாய்ப்பு கிடைத்தால் தரிசனம் செய்யுங்கள். அபிஷேக பால் வெளியே செல்ல ஒரு சிறிய ஓடைபோல அமைத்திருக்கிறார்கள். கோயிலின் வெளியே இருக்கும்  பல்வேறு கடைகளை நடத்துபவர்கள்/ வைத்திருப்பவர்கள் முஸ்லீம்களே!  

நான் தங்கியிருந்த தால் ஏரியின் எதிரே,ஆதி சங்கராச்சார்யார் தபம் செய்த குன்று ஒன்று இருக்கிறது. இரண்டாயிரம் அடி உயரம் இருக்கும்.  குறிப்பிட்ட தூரம் வரை வாகனங்கள் செல்லும். அதன் பிறகு  நேர்த்தியான 247 கருங்கற் படிகள்.  அனைவரும் சோதனைக்குப் பிறகுதான் உள்ளே அனுமதிக்கப் படுகிறார்கள். உள்ளே சென்றால், அங்கே அழகான சிவன் கோயில் இருக்கிறது. கோயிலின் பெயரே ‘சங்கராச்சார்யார் ஜி மந்திர்’ தான்.  கோயிலை ஒட்டிய வனப்பகுதி ரிசர்வ்ட் ஃபாரஸ்ட். இரவு நேரங்களில் சிறுத்தைகள், மான்கள் இருக்குமாம். இங்கேநாமே சிவலிங்கத்தை தொட்டு வணங்கலாம். பெரும்பாலான வட இந்தியக் கோயில்களில் சிவபெருமானை நாமே தொட்டு வணங்கலாம். அபிஷேகம் செய்யலாம். யாரும் தடுப்ப தில்லை. காலை ஆறு முதல் மாலை ஆறு வரை திறந்திருக்கும். ஸ்ரீநகர் சென்றால் அவசியம் இக்கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

பார்க்க வேண்டிய மற்றுமொரு இடம். ஹஸ்ரத்பால் மசூதி.  தால் ஏரியின் பின்புறம், நிஷாத் பார்க்கின் (park) அருகே, பளிங்குக் கற்களால் ஆன முஸ்லீம்களின் பெருமரியா தைக்குரிய மசூதி இது. ஏழைகளின் ஹஜ் என்று உடன் வந்தவர் சொன்னார். மெக்கா யாத்திரை செல்ல இயலாத ஏழைகள் இந்த மசூதிக்குச் செல்லலாமாம். This revered shrine houses the Moi-e-Muqqadus (preserved sacred hair) of Prophet Mohammad. Public display of the hair takes place only on religious occasions. Some of the other names of the Hazrat Bal mosque are Assar-e-Sharief, Madinat-us-Sani and Dargah Sharif. One of the most revered Muslim shrines, Hazratbal is an epitome of the love and respect of Muslims for the Prophet. முஸ்லீம்கள் அல்லாதோர் தொழுகை நடக்கும் இடத்திற்குள் செல்ல அனுமதியில்லை. ஆனால் மற்ற இடங்களைப் பார்க்கலாம்.


சங்கராச்சார்யார் கோயிலின் புகைப்படம் கீழே:சங்கராச்சார்யார் ஜி மந்திர்.


'தால்' ஏரியின் கடைசியில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் இடம் இருக்கிறது. கபூதர் கானாவைத் தாண்டி. ஏரியின் நீரில்,  ஒரு பலகையின் மேலே நின்று கொண்டு கயிற்றினைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், நம்மை இழுத்துக் கோண்டு ஒரு விசைப் படகு விரைந்து செல்லும்.  'தேன் நிலவு' திரைப்படத்தில் ஜெமினி கணேசனும் வைஜயந்திமாலாவும் (?) இந்த விளையாட்டை ஆடிக்கொண்டு, சர்ஃபிங் செய்வார்கள். சிறுவயதில் இப்படத்தைப் பார்த்த பொழுது, ஆஹா.. நாமும் இந்த மாதிரி போகமுடியுமா என யோசித்திருந்தேன்.  66 வருடத்திற்குப்பின் அந்த வாய்ப்பு கிடைத்த பொழுது, கொஞ்சம் வெட்கமாகத் தான் இருந்தது. வெளியூர்தானே? யார் பார்க்கப் போகிறார்கள் என 'தைரியமாக' இந்த விளையாட்டை ஆடித்தீர்த்தேன். 
மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களையும் கீழே கொடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பில் பார்க்கலாம். Tuesday, June 6, 2017

காஷ்மீருக்கு ஒரு பயணம் – ஸ்ரீ நகர் (பகுதி – 1)

எம்.ஜி.ஆர் தனது சினிமாவில் , ‘காஷ்மீர்..ப்யூட்டிஃபுல் காஷ்மீர்’ என டூயட் பாடியது தான் காஷ்மீரைப்பற்றிய முதல் நினைவு. ஏராளமான  இந்தித் திரைப்படங்களில் அந்த எழில் மிகு மாநிலத்தைக் கண்டு களிதத்தோடு சரி. ஒவ்வொரு முறையும் அங்கே செல்லவேண்டும் என திட்டமிடும்போது, அங்கு நிலவும் அசாதாரணச் சூழல்குறித்து பத்திரிக்கைகளும், மீடியாக்களும் அளித்த பிம்பம் அச்சமூட்டுவதாகவே இருந்தது. எனது நன்பர் ஒருவர் சமீபத்தில் இரு நாள் விஜயமாக காஷ்மீருக்கு குடும்பத்துடன் சென்றுவந்து, ஆங்கே நிலைமை அப்படியெல்லாம்ஆபத்தாக இல்லை. சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடம்தான்-பாதுகாப்பானது தான் என சான்றுரைத்தார்.

‘வாழ்வது ஒருமுறை - ஆனது ஆகட்டும்’ எனத் தீர்மாணித்து, மே’2017, 31ந்தேதி அன்று ஸ்ரீநகர் செல்ல விமாணப் பயணத்திற்கு முன்பதிவு செய்துவிட்டேன்.விமாணம் தில்லியடையும் வரை மனம் இலேசாகத்தான் இருந்தது. ஸ்ரீநகருக்கு  விமானத்தில் ஏறியதும் ஹார்ட்பீட் கொஞ்சம் அதிகரிப்பதை உணர முடிந்தது. ஒரு குழுவாக்ச் செல்லாமல், தனியனாக அம்மாநிலத்திற்குச் சென்றதும், கழகங்களின் புண்ணியத்தில் ‘இந்தி’ அறவே தெரியாததும்தான் காரணம்.

ஸ்ரீநகர் தில்லியிலிருந்து ஒன்றரை மணி நேரப்பயணம்.  ஜன்னலோர இருக்கை கேட்டு வாங்கிக் கொண்டிருந்தேன். 

இமயமலைகளின் ஊடே பறக்கும் பொழுது, கீழே தென்பட்ட காட்சி... அட..அட... என்னே ஒரு ரம்மியம். கருகருவென, வானுயர,  முடிவில்லாமல் நீண்டுகொண்டிருக்கும் இமயமலைத் தொடர்.  குச்சிகுச்சியாக நீண்டிருக்கும் பைன் வகை மரங்கள். சிறிதும் பெரிதுமாக, தெள்ளிய நீருடன் ஆங்காங்கே பாயும் ஓடைகள்/ஆறுகள். ஊடவே பாய்ந்து பறக்கும் பிருமாண்ட வெண்ணிற மேகக் கூட்டங்கள். கொத்து கொத்தாக கிராமங்கள். கிராமங்களைச் சுற்றி நெல் வயல்கள். மீண்டும் காடுகள். இயற்கையன்னை தன் திறமையெல்லாம் ஒன்று திரட்டி,  ஒரே இடத்தில் செய்து வைத்ததுபோல கொள்ளை அழகு!  திகட்ட திகட்ட பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஸ்ரீநகரின் ஓடுபாதையைத் தொட்டது விமானம்.

எல்லா விமான நிலையங்களையும் போலவே, ஏராளமான காவல் துறையினர். கூடவே CRPF. ராணுவ ஜீப்கள்.  ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததுமே, இதமான காற்று வருடியது. வாசலில் 'திரு முகமது அல்டாஃப் சாப்ரி 'அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த ‘ஆதுல்’  என்பவர் எனது பெயர் எழுதிய காகிதத்தைக் கையில் தாங்கிக் கொண்டு காத்திருந்தார். (இவரைப் பற்றி தனியாக அடுத்த பகுதியில் எழுதுகிறேன். தங்களது விருந்தினர்களை  கண்போலக் காத்து, உபசரித்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் இவர் போன்ற மனிதர்கள் அபூர்வர்கள். இவரை நம்பி நமது பயணத்தை அமைத்துக் கொள்ளலாம். இவரைப்பற்றிய தகவல்களை தனியே தருகிறேன்.)

மற்றவர்களுக்கு எப்படியோ, சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவின் வேறெந்தப் பகுதியைப் போலவே பாதுகாப்பானதுவே. இத்தனைக்கும் நான் ஒரு குழுவாகச் செல்லவில்லை. 'டூர் மேனேஜர்' என எவரும் இல்லை. தனியாள்.  மீடியாக்கள் மிகுந்துரைப்பது போல, ஆங்கே தெருவெங்கும் கல்வீச்சும், துப்பாக்கிச் சண்டைகளும் இல்லை. கலவரம் இல்லை. எப்பொழுதும் போல பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும், அலுவலகங்களும், இன்ன பிற துறைகளும் சாதாரணமாகவே இயங்குகின்றன. 

அப்படியானால் துளிக்கூட கலவரம் இல்லையா? இருக்கிறது. எல்லையின் அருகே. ஊருக்குள் எப்போதாவது. தீவீரவாதிகள் பதுங்கும் கிராமங்களில்.  அவை எந்த வகையிலும் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்காதவகையில் பார்த்துக் கொள்கிறார்கள்.  

போலீஸ் வாகனங்களும், CRPF வாகனங்ககளும், ராணுவ வண்டிகளும் சதா ரோந்து வந்து கொண்டிருக்கின்றன. ‘சாதாரண’ மக்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

நகரின் ஊடே ‘ஜீலம் நதி’  ஓடுகிறது.  அவர்கள் அதை ஜைலம் (Jhelum ) என்கிறார்கள். அந்த நதி Pir Panjal என்னுமிடத்தில் ஊற்று நீராக உருவாகி, ஸ்ரீநகர் ஊடே பாய்ந்து, பின் பாகிஸ்தானுக்குச் செல்கிறது.

விமான நிலையத்திலிருந்து பத்து கிலோமீட்டர் பயணத்தில் அமைந்திருக்கிறது டால் ஏரி. ஏரி என்றாலும் அது தேங்கி நிற்கும் நீர் அல்ல. மெல்ல - மெல்ல நகரும் நீரினைக் கொண்டது. கிட்டத்தட்ட 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஏரி. ஏரியில் ஆயிரத்திற்கும் அதிகமான ‘படகு வீடுகள்’.  ஒவ்வொரு படகு வீடும் மினி அரண்மணைபோல அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. படகுவீட்டிற்குச் செல்ல ஏரிக்கரையின் ஓரத்தில் நிறைய படித்துறைகள் அமைத்திருக்கின்றனர்.  நான் சென்ற, ‘சாப்ரி’ குழுமத்தைச் சார்ந்த படகுவீடுகளில் ஒன்றான ‘பாம்பே பிரின்ஸ்’ படகுவீட்டிற்கு அருகில் உள்ள படித்துறை எண் ஒன்பது. 

படித்துறையிலிருந்து படகுவீட்டிற்குச் செல்ல ஏராளமான குட்டிப் படகுகள் சுற்றி வருகின்றன.  குட்டிப் படகுகளுக்குண்டான சவாரிச் செலவை, படகுவீட்டின் உரிமையாளரே ஏற்றுக் கொள்கிறார்.

இரவு நேரத்தில், மின்னும் விளக்கொளிகளின் நடுவே, ஏரியின் மத்தியில் இருக்கும் படகு வீட்டின் முன்னால், நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு, வீசும் தென்றல் காற்றை அனுபவித்துக் கொண்டு, இரவில் மின்மினி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் சிறுசிறு படகுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு, சலசலக்கும் நீரலைகளை அனுபவிப்பது போல பேரின்பம் ஏதும் உண்டோ? கவிதை எழுத இதைவிட தோதான நேரமும் இடமும் இருக்காது. 

காய்கறிகள், மளிகைச் சாமான்கள், பிஸ்கட்-தீனி வகையறாக்கள், மணிகள், மாலைகள், குங்குமப்பூ வகைகள், குளிர் கால உடைகள்  என அனைத்தும்  சிறு படகுகளில் கொண்டுவந்து விற்கிறார்கள். (இவற்றை வாங்காமல் இருப்பதே உத்தமம்)

தால் ஏரியை வர்ணிப்பதைவிட பார்த்து மகிழுங்கள்:


அடுத்த பகுதியில் ஸ்ரீநகரில்  அமைந்துள்ள சோலைகள், ஹஸ்ரத்பல் மசூதி  மற்றும் இன்னபிற  இடங்களைப்  பார்க்கலாம். (வீ டியோவைப்  பாருங்கள் )

Sunday, May 14, 2017

காசிக்குப் போன சன்யாசி – இறுதிப்பகுதி

கடைசியாகச் சென்றது காசி. 

வாரணாசி, காசி, பனாரஸ் என்ற பெயர்களில் அழைக்கப்படும் புராதனமான புனிதமான நகரம்.  மலைக்க வைக்கும் அகலத்தில் கஙகை. இந்த கோடையிலும் ஓரளவிற்கு நீர் ஓடுகிறது.  

வாரணாசியின் கரைகளைத் தொட்டபடி வளைந்தோடும் கங்கை. 64 க்கும் மேற்பட்ட படித்துறைகள். ஒவ்வொரு படித்துறைக்கும் ஒரு பெயர். ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும், புழங்கும் முடிவில்லா கதைகள். இவ்வளவு பெரிய கதைத் தொகுப்புகள் வேறு எந்த நகரத்திற்காவது இருக்கிறதா எனத் தெரியவில்லை. 

படகொன்றில் ஏறிக் கொண்டு  வாரணாசியின் கரைகளையும், அதன் கரைகளில் கம்பீரமாக கட்டப் பட்டிருக்கும் -  இன்னமும் பெருமளவில் பழமை மாறாத கட்டிடங்களையும் பார்த்துக் கொண்டே பயணிப்பது பேருவுகை.  படகில் மிதந்தபடி புகழ்பெற்ற ‘கங்கா ஆரத்தியைக்’ காண்பது இன்னும் பேருவுகை.  

எத்தனை ஆயிரமாயிரம்அரசர்களையும், அவர்தம் வரலாறுகளையும், காலம் காலமாக செழுமைப்படுத்தப்பட்டிருகும் நாகரீக வளர்ச்சியையும்  தனக்குள் புதைத்து வைத்திருக்கிறாளோ இக்கங்கை?  அத்தனையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாகப் பயணிக்கும் கங்கையை ஸ்பரிசிப்பதே ஆனந்தம்.

ஆன்மீகத்தேடலுக்காக எவ்வளவு கோடிப்பேர்கள் இங்கே வந்திருப்பர்?  எவ்வளவு பேர்  ஞானமடைந்திருப்பர். எவ்வளவு பெரிய மகான்கள் கால்பட்ட பூமி!  இப்புரதன நகருக்கு நாமும் வந்துவிட்டோம் என்ற நினைவே சிலிர்க்க வைக்கும். 
ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கில் யாத்ரீகர்கள் வந்து போகும் நகரம்.

மணிகர்னிகாவிலும் ஹரிஷ்சந்திரா கட்டிலும் முடிவின்றி எரிந்து கொண்டிருக்கும் உடல்கள். கங்கையில் பிணம் நாறாதாம்; மல்லிகை மணக்காதாம்; காகம் கரையாதாம்.  அவ்வளவு உடல்கள் தகனிக்கப்பட்டும் காற்றில் நாற்றமில்லை. காகங்களை எங்கும் காணவில்லை. பூவைப்பற்றித் தெரியவில்லை.  இங்கே சுற்றுவட்டாரத்தில் இறந்தவர்களை கங்கை நதியின் கரைக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள். எந்த நேரமும் மூன்று உடல்களாவது காத்திருப்பில் இருக்கிறது. எலக்ட்ரிக் க்ரெமிட்டோரியமும் இருக்கிறது என்கிறார்கள். உடல்கள் அரைமணி நேரத்தில் சாம்பலாக்கப்பட்டுவிடுகின்றன. முடிந்தது வாழ்க்கை.

கங்கை  நீராடலும்,   நீத்தார்க்கு திதி கொடுத்தலும் காசி யாத்திரையின்  நோக்கம். நினைத்தபடி இரண்டும் ஹனுமன் கட்டில் நடந்தேறின. 
-0-
முன்பு மணிகர்னிகாவிலும் ஹரிஷ்சந்த்ராவிலும் சாம்பல் குவியல்கள் நதியின் ஓரத்தில் ஏராளமாக மிதந்து கொண்டிருக்கும். பூமாலைகள் துணிகள் என பலவும் மிதக்கும். தற்போது சாலில் வேஸ்ட்கள் அனைத்தையும் அப்போதைக்கப்போது நீக்கிவிடுகிறார்கள். ஐந்தாறு படகுகள் இந்தப் பணிக்காகவே வடிவமைக்கப் பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மற்றபடி நீர் அசுத்தமாகவே ஓடுகிறது.

காசியின் போக்குவரத்து மிரளவைக்கிறது. எவர் வேண்டுமெனினும் எப்படி வேண்டு மானாலும் சாலைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.   ஃப்ரீ ஃபார் ஆல்.  குறுகலான சாலைகள். புறநகர் சற்று பரவாயில்லை. விதிகள் எல்லாம் காற்றில். போதாக் குறைக்கு எந்த நேரத்திலும்திம்மென்ற வயிற்றோடு எல்லா இடங்களிலும் சுற்றிவரும் மாடுகள். காற்றில் சாணத்தின் நாற்றத்தை உணராமல், காசியாத்திரை சாத்தியமில்லை.

ஹனுமண் கட்டில் பாரதியாருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். வெங்கட்ராமன் திறந்திருக்கிறார். சிலையின் அடியில் அடுப்புக்கரி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சென்றமுறை சென்றபொழுது சம்ஸா விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது தற்செயலாக தமிழர் ஒருவரைக் காண, அவரும் நானும் சேர்ந்து சிலையைக் கழுவிட்டோம்.
-0-

காசி விஸ்வனாதர், விசாலாட்சி, அன்னபூரணி ஆகியோர் தரிசனமும் திருப்தியாக நடந்தது. இந்த மூன்று கோயில்களும் சிறிய சந்திற்குள் இருக்கின்றன. விஸ்வனாதர் கோயில் நெருக்கியடித்துக் கொண்டு இருக்கிறது.  சாதாரண தினங்களிலும் இருபது-முப்பதாயிரம் யாத்ரீகர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். திக்குமுக்காடுகிறது. கோயில் அமைந்திருக்கும் சந்தினை விஸ்தீரணமாக்கியே தீரவேண்டும்.  மொழிதெரியாத ஒருவர் தலைசுற்றவைக்கும் சந்துகளில், சடுதியில் காணாமற் போய்விடுவது சாத்தியமே.

விஸ்வனாதர் கோயிலுக்குள் செல்ல எப்பொழுதும் போல கெடுபிடி. சோதனை. இப்பொழுதெல்லாம், அன்னிய நபர்கள் நமது உடலைத் தடவிப் பார்ப்பதை சகஜமாக ஏற்றுக் கொள்ள பழகிவிட்டோம். பெரும் மால்கள், திரையரங்குகள், கோயில்கள், விமான நிலையங்கள் எனப் பல இடங்களிலும் ஸ்கேனரும், செக்யூரிட்டியின் கைகளும் வருடிவிட்டுத்தான் உள்ளே அனுமதியளிக்கின்றன. யாரைக் குறை சொல்ல? காலத்தின் கோலம் அப்படி.
-0-

அருகே புகழ்பெற்ற காலபைரவர் கோயிலுக்குச் சென்றேன். கோயிலின் உட்பிரகாரம் முழுவதும் கடைகள். ஒரு வினாடி தயங்கினால், உடனே மயிலிறகு கட்டு ஒன்றினால் தலையில் ஒரு தட்டு தட்டி, ஏதோ மந்திரத்தை முனகி, காசிக்கயிற்றுக் கட்டு ஒன்றினை கையில் திணித்து விடுவார்கள்.  பின் அவர்கள் சொல்லும் விலைதான்.

என்போன்ற பேரம் பேசும் திறனற்றவர்கள் இவ்வூரில் பர்சேஸ் பக்கம் போகக்கூடாது; பட்டுப் புடவைகளுக்கும் இவ்விதி பொருந்தும். உடன் வந்த ஒருவர், கடைக்காரர் ரூ. 1500 சொன்ன  ஒரு பட்டுப்புடவையை(?) சற்றும் தயக்கமின்றி 250/-க்கு கேட்டார்.  கடைக்காரர் எங்கே எங்களை ‘அடித்துவிடப்’ போகிறாரோ என பீதியடைந்த போது, கூலாக பேரம் நடந்து 450/-க்கு விலை படிந்தது. இன்னும் எத்தனை ஜென்மா அடைந்தாலும் இக்கலை வரவே வராது.
-0-

வாரணாசிக்குச் சென்றால் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டியவை 1. கங்கையோரத்தில் மாலைவேளையில் படகுச் சவாரி. 2. படித்துறைகள்  3. மாளவிகா பாலம்.  4. காசியின் சந்து பொந்துகள். 5. கங்கா ஆரத்தி.

-0-