Tuesday, November 21, 2017

ஜெயில்.

அது ஒரு விளையாட்டுப் புல்லாங்குழல் போலத் தெரிந்தது. நிஜமான குழலாக இருக்க வாய்ப்பில்லை. அல்லது ஒரு குச்சியோ என்னவோ? அந்தச் சிறுமி அதைக் கையில் வைத்துக் கொண்டு,சுழற்றிக் கொண்டே இருந்தாள். நாலு அல்லது ஐந்து வயதுக்குள்தான் இருக்கணும்.  அந்த வயதில் குழந்தைகளுக்கு தனி ஜொலிப்பும் ஈர்ப்பும் இருக்கிறது.  ரயில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. மதிய நேரமாதலால் பலரது கண்களில் உறக்கம்.  சிறுமியும் அவள் தாயும் சைட் லோயர் பர்த்தில் அமர்ந்து கொண்டிருந்தனர். நான் மேலே.

சிறுமிக்கு போரடித்தது போல.  “மம்மி... டாக் டு மி...” என்றது.

அவளது அம்மா ரயில் கிளம்பியது முதல்,  மொபைலை விட்டு கண்களை விலக்க வில்லை.

‘மம்மீ..... ப்ளீஸ் ...’

‘சுஜீ... கீப் கொயட்..’

‘இட்ஸ் போரிங் மம்மீ...’

இக்கால அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் தாய்மொழி வராது போல..!

‘யூ ஃபீல் ஹங்ரி..?’

மொபைலைவிட்டு கண்ணை எடுக்காமல், பையைத் துழாவி ஒரு பிஸ்கட் பாக்கட்டை எடுத்து நீட்டினார், அந்த மாது.

“நோ.. ஐ டோன்ட் நீட்..”

கொடுத்த பிஸ்கட் பாக்கட்டை அம்மாவின் மடியிலேயே வீசியெறிந்தாள்.

அச்சிறுமி என்ன நினைத்தாளோ, திடீரென கையில் வைத்திருக்கும் புல்லாங்குழலால், பக்கத்திலிருக்கும் பயணிக்கு ஒரு அடி கொடுத்தாள். இதைச் சற்றும் எதிர்பாராதா அந்த ஆசாமி, அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தார். உற்சாகம் பெற்ற அக்குழந்தை எதிர் சீட்டிலிருப்பவருக்கும், அந்த குச்சியால்  ஒரு அடி கொடுத்தாள்.  இதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அந்த மாது, ‘நோ.. சுஜீ... ‘ என முணகினார்.  

இந்த விளையாட்டு சிறுமிக்கு சுவாரஸ்யமாய் இருக்கவே, மற்ற பயணிகள் எல்லோருக்கும், புல்லாங்குழல் அடி கொடுக்க ஆரம்பித்தாள்.

அடிப்பது குழந்தையாயிற்றே... என்ன செய்ய முடியும்? திட்டவா இயலும்? சிலர் சிரித்து வைக்க, சிலர் ‘அப்படியெல்லாம் செய்யக் கூடாது.. போய் அம்மாவிடம் உட்கார்..’ என உபதேசம் செய்ய,  சிலர் தானாகவே, அடி விழும் சமயம் கையில் பெற்றுக்கொள்ள, சிலர் நகர்ந்து அமர்ந்து கொள்ள.. சிறுமிக்கு இவை தமாஷாக அமைந்து விட்டது போல.

அடுத்த பகுதியில் இருப்பவர்களுக்கும் அடி கொடுக்க ஆரம்பித்தாள் சிறுமி.  

“குழந்தையைப் பாருங்கள்... கண்ட்ரோல் செய்யுங்க...” என்ற  விண்ணப்பங்களுக்கு, ‘சுஜீ....கீப் கொயட்..” என்ற முணகல் மட்டுமே அந்த மாதுவிடமிருந்து பதிலாய் வந்தது. அடி கொடுப்பதும் சிரிப்பதுமாய் இருந்தாள் சிறுமி.

அடுத்த பகுதியில் ஒரு பெரியவர். பார்ப்பதற்கு, எழுதுவைதை நிறுத்திவிட்ட எழுத்தாளர் போலவோ, ரிடயர்டு தாசில்தார் போலவோ இருந்தார்.  ஆரம்பத்திலிருந்தே, குழந்தையின் அடத்தை ரசிக்கும் மூடில் அவர் இல்லை.

அவரை அடிப்பதற்கு குச்சியை ஓங்கும் சமயம்,  கண்களை உருட்டி, விரலை உதடுகள் மீது வைத்து, ‘டோண்ட் டு இட்..’ என்று முறைத்தார். மற்றவர்கள் எல்லாம்,  எதிர்ப்பின்றி அடி வாங்கிக்கொள்ள, இந்தப் பெரிசு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என அவளுக்குப் புரியவில்லை. அவரை விட்டு தயக்கத்துடன் விலகி, அடுத்த பயணிக்கு அடி கொடுக்க   நகர்ந்தாள். நிம்மதியுடன் திரும்பிய பெரியவருக்கு, அடுத்த நொடி அதிர்ச்சி காத்திருந்தது. அவர் எதிர்பாரா சமயம், அவரது சொட்டைத் தலைமீது ஓங்கி ஒரு அடி கொடுத்தாள் அவள். அடி வலுவாகப் பட்டுவிட்டது போல.  கண்கள் சிவக்க, சடாரென எழுந்து, அந்தச் சிறுமியின் கையிலிருந்த புல்லாங்குழலைப் பிடுங்கி, கரும்பு ஒடிப்பது போல, படாரனெ உடைத்து, அந்த மாது இருக்கும் பக்கம் வீசி எறிந்தார்.

தனது குச்சி உடைக்கப்பட்டதைக் கண்ட சிறுமி, பெருங்குரலெடுத்து ஓலமிட ஆரம்பித்தாள். அதுவரை மொபைலையே நோண்டிக்கொண்டிருந்த அந்த மாது,  நடந்ததைப்  பார்த்ததும் வெகுண்டெழுந்து, அச்சிறுமியின் அழுகுரலையும் மீறி பெருங்குகுரலெழுப்பி அவரிடம் சண்டைக்குப்போனார்.

அடுத்த பதினைந்து நிமிஷம் ஆங்கில வசவுகளும், காட்டுக் கூச்சலும், குழாயடி சண்டியாய் கம்பார்ட்மெண்டை நிரப்பின. 

“குழந்தையிடம் எப்படி நடந்துகொள்ளணும் தெரியாதா முட்டாளா நீ? வயசாயிடிச்சே.. புத்தியில்லையா” என்பதும்; “குழந்தையை வளர்க்கத் தெரியாத நீ ஒரு அம்மாவா...” என்பதும் வசவுகளின் சாரம்.

அக்கம் பக்கத்திலிருப்போர் சமாதாணப்படுத்த, சரட்டென திரைச்சீலையை இழுத்து மறைத்துக் கொண்டு படுத்துவிட்டார் பெரியவர். பருத்த சரீரம் மேல்மூச்சு வாங்க, காச் மூச் சென கத்திக் கொண்டிருந்தார்  அந்த மாது.

உடைந்து போன புல்லாங்குழலை கையில் வைத்துக்கொண்டு, இந்தக் கணமே புதுசு வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தது அக்குழந்தை.

சீட்டிற்கடியில்  பிணைக்கப்பட்டிருந்த ஷூட்கேசைத் திறந்து, அதிலிருந்து, வேறு ஒரு மொபைலை வெளியே எடுத்து,  ஏதோ ஒரு விளையாட்டை ஓபன் செய்து, அச்சிறுமியிடம் நீட்டினார் அம்மாது.

விசும்பிக்கொண்டே, விளையாட்டில் மூழ்கிப்போனாள் சிறுமி. 

அம்மாதுவும் இடைஞ்சல் இன்றி, தனது மொபைலில் ஆழ்ந்து போனார்.


இப்பொழுது கம்பார்ட்மெண்ட் அமைதிபெற, ரயில் அது தன் வேகத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது.3 comments:

 1. அவரவர் வயதின் இயல்புத்தன்மையை அறிவியல் ஆக்ரமித்துள்ளது !! இங்கே மொபைல் !

  ReplyDelete
 2. தொடுதிரை சிறை!
  அருமை சார்

  ReplyDelete
 3. தொடுதிரை சிறை!
  அருமை சார்

  ReplyDelete