Friday, February 26, 2016

ஒரு பயணம்.

We travel not to escape life, but for life not to 
                           escape us.


தனிமையைப் பழகிக் கொண்டேனாயினும், அது தரும் சலிப்பும்-அலுப்பும், சில சமயங்களில் எனக்கே சகிக்கவொண்ணாததாகி விடுவதால், அகப்பட்ட தருணங்களில் எல்லாம் வெளியிடங்களுக்குச் சென்றுவிடுவதை வாடிக்கையாக்கிக் கொண்டுவிட்டேன். இம்மாதிரியான ஒவ்வொரு பயணமும், ஏதாவது நினைந்து-நினைந்து  புன்னகைக்க வைக்கும் ஒரு நிகழ்வை பதிந்துவிட்டுத்தான் செல்கிறது.

சில தினங்களுக்கு முன், பெங்களூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம். பெங்களூர் (அதென்ன  SBC?) சிட்டி ஸ்டேஷனின் இடிபடும் நெரிசலுக்கு அஞ்சி, “கண்டோன்மென்டில்” போர்டிங் போட்டுக் கொண்டேன்.  டபுள் டெக்கர் வண்டி வருவதென்னவோ 1440 க்குத்தான். 


பெங்களூரின் யூகிக்கமுடியாத டிராஃபிக் ஜாம்களுக்கு  நடுங்கி, ஒருமணிக்கே சென்றுவிட்டதால், வெயிட்டிங் ஹாலில் ஒன்றரை மணி நேரம் தஞ்சம்.  முன்பெல்லாம் ரயில் பயணமோ அல்லது ரயிலுக்குக் காத்திருப்போ சுவாரஸ்யமான விஷயமாயிருக்கும்.  முகம் தெரியாத மனிதர்களின் குசலோபரிகள், என்போன்ற உம்மனா மூஞ்சிகளைக்கூட பேச வைத்துவிடும். இப்பொழுதெல்லாம், ஆளுக்கொரு ஐந்தங்குல எலக்ட்ரானிக் கருவிக்குள் முகத்தையும், அதிலிருந்து வரும் இரு வயர்களை காதிலும் செருகிக் கொண்டு, ஆழ்ந்துவிடுகின்றனர். 


ஸ்டேஷனில் தமிழ்ப் புத்தங்கள் இல்லை. கிடைத்த ஆங்கிலப் புத்தகங்கள் என் சுவைக்கு ஏற்றதாயில்லை. எனவே சுவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வழியில்லை. ஸ்டேஷனில் எல்லாம் கிடைக்கின்றன; இருக்கும் இரு ப்ளாட்ஃபாரங்களில், எந்த நடை மேடையில்  ரயில்கள் பெங்களூரை நோக்கி வரும்-எதில் விலகிப் போகும் என்ற தகவலைத் தவிர.  

காத்திருந்த பொழுதில், கலவரமான முகத்துடன், விட்டால் சென்னைக்கு ஓடியே சென்றுவிடலாம் என்ற பாவத்துடன், வியர்த்துக் கொட்ட,  கையில் சிறு பெண்ணை இழுத்துக் கொண்டு, நடுத்தரவயதுடைய ஒரு பெண் வந்தார்.  சில வினாடி சுற்று முற்றும் பார்த்தார். பின், அவர் எப்படி என்னைத் தேர்ந்தெடுதார் என விளங்கவில்லை!

“அங்கிள், நீங்க சென்னைதானே போறீங்க?  இந்த பையை, என் வீட்டுக்காரரிடம் கொடுத்துடரீங்களா..?”

இந்த விசித்திர கோரிக்கை திக்குமுக்காடவும், திக்பிரமையடையவும் வைத்து விட்டது.

“என்னம்மா இது..? யார் நீங்க... உங்க வீட்டுக்காரர் யார்? திடீரென சம்பந்தமில்லாமல் இப்படிச் சொன்னால் நான் என்னவென்று புரிந்து கொள்வது?”

“வீட்டுக்கார்ர் – சாவியை மறந்து வைத்து விட்டு – பஸ்ஸில் போகிறார் – ஏதேனும் செய்யனும் -  வேறு சாவி இல்லை.. பூட்டை உடைக்கனும்.. உதவமாட்டீர்களா...? “ ஏதோ தந்தி பாஷையில் பேசினார்.

நிதானித்துக் கொள்வதற்கே எனக்கு வினாடிகள் தேவைப் பட்டது.  அடுத்து ஒரு பெரியவர் வந்தார். அவர் அந்தப் பெண்ணின் தந்தை என்பது பின்னால் புரிந்தது.

“சார்.. கோவிச்சுக்காதீங்க! இவ என்னோடைய பெண். பதட்டத்தில் இருக்கா..என்னோட மருமகன் சென்னையில் வேலை பாக்கறார். இங்கே வந்துவிட்டுப் போகும் பொழுது, வீட்டுச் சாவியை மறந்து வைத்துவிட்டு, சென்னைக்கு பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறார். இந்த ட்ரெயின் செல்வதற்குள், பஸ் சென்னை சென்றுவிடுமாகையால், அவர் நேராக பஸ் ஸ்டாப்பிலிருந்து, சென்ட்ரலுக்கு  வந்துவிடுவார். நீங்க இந்தப் பையில் இருக்கும் வீட்டுச் சாவியை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். நீங்க இருக்கும் கோச்சிற்கே வந்து சாவியை வாங்கிக் கொள்வார்.  கொஞ்சம் உதவி செய்யுங்க..”

இதில் ஏதேனும்  சதி இருக்கிறதா? பையிற்குள் ஆயுதம்,வெடிகுண்டு ஏதாவது இருக்குமோ? போட்டுத்தள்ள திட்டமா?

“ஏன்  நீங்களே, அடுத்த பஸ்ஸிலோ அல்லது இதே ட்ரெயினிலோ வரலாமே..?”

“அது முடியாது சார்..  பசங்க ஸ்கூலிலிருந்து வந்துடுங்க....”

“அது சரி... அதெப்படி என்னை நம்பறீங்க.. நானே உங்க வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டுபோய், உங்க வீட்டை காலி பண்ணலாமே?”

“அதெல்லாம் மூஞ்சியப் பாத்தே சொல்லலாம் சார். நீங்க 
அப்படியில்ல..”

இதென்ன புதுக்கதை? ஏதோ சீரியல் வசனம் மாதிரி இருக்கே.  எனக்கு அப்போது இருந்தா மூடில், ஒரு ‘த்ரில்’ தேவைப் பட்டதால்,  இந்த அட்வென்சருக்குள் நுழைவது என தீர்மாணித்துவிட்டேன்.  உங்க வீட்டுக் காரர் டெலிபோன் நெம்பர் சொல்லுங்க.

சொன்னார்.

அந்தப் பெண்ணை பேச விடாமல் நானே டயல் செய்தேன். 

“நீங்கதான் ................. என்பவரா?”

“ஆமாம் சார்.”

“நான் பெங்களூர் கண்டோன்மென்ட் ஸ்டேஷனிலிருந்து பேசறேன்.”

“சார்.. நான்தான் சார் அது.. சாவியை, பெங்களூரிலேயே மறந்துவைத்துவிட்டு வந்துட்டேன். ஸ்டேஷனுக்கு போனா எவரேனும் ஒரு நம்பிக்கையான ஆள்  அம்புடுவார். அவரிடம்  சாவியைக் கொடுக்குமாறு  நான் தான் சார் ஐடியா கொடுத்தேன்..”

ஆஹா.. நல்ல ஐடியா ஆசாமி.

பின்னர் அந்தப் பெண்ணிடம் போனைக் கொடுத்து பேசவைத்தேன். (எங்கே எனது ‘புத்திசாலிப் போனை’ எடுத்துக் கொண்டு, அந்தப் பெண்  ஓட்டம் பிடிப்பாரோ என்ற பயம் இருந்ததால், அவர் ஓடினால் பிடித்துவிடும் வாகில் நின்று கொண்டேன்)

அவர் தன் கணவனிடம் விளக்கினார். பச்சை குர்தா போட்டுக்கொண்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு, C5 கோச்சில், ...... இந்த சீட்டில் உட்கார்ந்திருப்பார். வந்து வாங்கிக் கோங்க..

பின், நான்  டெலிஃபோனைவாங்கி, “இங்க பாருங்க மிஸ்டர்.............., சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் என்  சீட்டிலேயே இரு நிமிடம் வெயிட் பண்ணுவேன். அதற்குள் நீங்க வரணும். வராவிடில், கீழே இறங்கி இரு நிமிடம் காத்திருப்பேன். அப்படியும் வரவில்லையெனில், நான் புறப்பட்டு போய்க்கொண்டே இருப்பேன். புரிந்ததா?

“கட்டாயம் வந்துடுவேன் சார். உங்க வீட்டு விலாசம் சொல்லுங்க.. தப்பிபோனா, நான் உங்க வீட்டிற்கே வந்து வாங்கிக்கறேன்.”

“ம்ம்ம்ம்ம்ம்ம்..? என் வீடு யாழ்ப்பாணத்தில் இருக்கு. அங்கெல்லாம் உங்களால் வரமுடியாது.  நான் சொல்லியதுதான் திட்டம். அதன்படி ஃபாலோ செய்வது உங்க பொறுப்பு.”

“சரி சார்..”

அந்தப் பெண்மணி கொடுத்த பையை வாங்கி சோதனை செய்து, ஏதேனும் வெடிகுண்டு இருக்கிறதா எனப் பார்த்தால், வெறும் ‘நவ்தால்’ சாவிகள் இரண்டுதான். ம்ம்ம்ம்ம்ம்... இந்த பூட்டை அரைகிலோ சுத்தியலே, ஒரே அடியில் திறக்குமே? இதற்குப் போயா இத்தனை களேபரம் செய்கிறார்கள்.

சும்மா சொல்லக் கூடாது. டபுள்டெக்கர் ட்ரெயினில் மேல்பகுதியில், ஏ.ஸியின் இதத்தில், அலுங்காமல், குலுங்காமல் வெகு சுகமான பயணம்.

வண்டி அரக்கோணம் நெருங்குகையில் மேற்படியாரிடமிருந்து கால்.

“சார்.. நான் தான் .............. பேசறேன். என்னால் ஸ்டேஷனுக்கு வர இயலாது போலிருக்கிறது.பஸ் இன்னும் சென்னை வந்து சேரல... நீங்க பயணம் செய்யும் வண்டி சரியா 1940க்கு பெரம்பூர் வரும். அப்ப என் பெரம்பூர் ஃப்ரண்ட்  ஒருத்தர் ..................., என்பவர் உங்களைப் பார்த்து பெரம்பூர் ஸ்டேஷனில் சாவியை வாங்கிக் கொள்வார். சரியா?”

“ஓய்... நல்லா கேளும். இந்த வண்டி, பெரம்பூரில் இரு நிமிடங்கள் தான் நிற்கும். அதற்குள் ஒவ்வொரு கோச்சிலிருந்தும்  நூறு பேர் இறங்கியாகனும். உம் ஃப்ரண்டால், அந்த “டைம் கேப்பில்” மேலே ஏறி வரமுடியாது. நானே கீழே இறங்கி, கையில் சிவப்பு கலர் லக்கேஜோடு, என் கோச்சருகில் நிற்பேன்,  முதல் வாசலில். வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லும்..”

“சரி சார்... நல்லா சொன்னீங்க...”

“வரும் நபரின் மொபைல் நெம்பர் என்ன?”

சொன்னார்.

பெரம்பூரும் வந்தது.  நினைத்தது போல, ஒவ்வொரு கதவினருகிலும் நூறு பேர் இறங்க  காத்திருந்தனர். நானும் முண்டி அடித்து கீழே இறங்கினேன்.

வந்து வாங்கிக் கொள்வதாகச் சொன்ன, அந்த  மூன்றாம் நபருக்கு ஃபோன் செய்தேன்.

“எங்கே இருக்கீர்..?”

“ப்ளாட்பாரத்தில் C5 டிஸ்ப்ளே என்று போட்டிருக்குமே... அங்கே நிற்கிறேன்.”

“முட்டாளா நீர்..? ப்ளாட்பாரத்து டிஸ்ப்ளேயில் முன்னே பின்னே இருக்கும். ட்ரெயினில் C5 எங்கிருக்கிறது எனப் பார்க்கத் தெரியாது..”

என் C5, C7 டிஸ்பிளேக்கு நேராக நின்று கொண்டிருந்தது.

“சீக்கிரம் வாரும். கோச்சில் எழுதியிருக்கும் கோச் நெம்பரைப் படியும். சி5க்கு வாரும்.”

“சி5 எங்கே இருக்கும்?”

“அட, சட்.... வண்டி வரும்போதே கவனித்திருக்க வேண்டாம்? முன்னாலே ஓடிவாரும். டைம் இல்லை.. சீக்கிரம்... சீக்கிரம்.”

“சி5 எங்கேன்னு தெர்லே சார்..”

“யோவ்.. இஞ்சின் பக்கமா ஓடிவாய்யா...  நீ நிக்கற இடத்திலேருந்து இரண்டு கோச் முன்னாலே, வேகமா ஓடிவாய்யா...”

“கூட்டமா இருக்கே சார்...”

“பேக்கு முண்டமே.. என்ன புரியல உனக்கு? சீக்கரமா வா...”

அதற்குள் வண்டி நகர ஆரம்பித்துவிட்டது.  சடுதியில் வேகம் எடுக்கும் எனத் தெரியும்.

“யோவ்.. என்னைக் கண்டுபிடிச்சியா இல்லியா?”

“ஒன்னும் புரியல சார்...”

“சீ...மனுஷனா நீர்?  ஒன்று செய்யும்... நீரும் வண்டியில் ஏறிக் கொள்ளும். அப்படியே உள்ளுக்குள்ளாகவே சி5க்கு வாரும்.. வண்டி கிளம்பிடிச்சு”

திரும்ப வந்து என்சீட்டில் அமர்ந்து கொண்டேன்.

இந்த ஆசாமி, எதற்காக விழுந்தடித்து  ஓடினான்! பின் எதற்காக மறுபடியும் வந்து அதே சீட்டில் உட்காருகிறான் என, என்னை விசித்திரமாகப் பார்த்தனர் சகபயணிகள்.

“என்னப்பா... வண்டியில் ஏறிட்டியா..?”

“இல்ல சார்.. ஏறல..”

“ஏறலியா? பைத்தியமா நீ.. நான் சொன்னது எதுவுமே உனக்கு எப்படிப் புரியாமல் போச்சு..வண்டியில் ஏறுவதில் என்ன கஷ்டம்?

வண்டி வேகமெடுத்து அவுட்டரை தாண்டிக்கொண்டிருந்தது.

“சார்.. சாவிக்கொத்தை அப்படியே வெளியே எறியுங்களேன்..”

“அட சீ.. போய்த்தொலை...”

சாவிக்கு சொந்தக்காரரை அழைத்தேன். “இதோ பாருங்க... உங்க நன்பர், சொதப்பலின் உச்சமாக, என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அதெவெல்லாம் செய்கிறார். சொல்வதையும் புரிந்து கொள்வதாயில்லை. இனி என்னால் செய்யக் கூடிய காரியம் ஒன்றுமில்லை. ”

“ஐய்யயோ... எப்படியாவது சாவி வேணுமே சார்.. ஏதாவது நீங்களே ஐடியா சொல்லுங்க சார்..”

“இதென்ன இம்சை... உங்க நன்பருக்கு எது சொன்னாலும் புரியவில்லை.  நான் என்ன செய்ய முடியும்? ஒரு காரியம் செய்யுங்கள். உங்கள் நன்பரை, சப்பர்பன் ட்ரெயினை உடனே பிடித்து சென்னை, சப்பர்பன் ஸ்டேஷன் வாசலில் இருக்கும் கனரா பேங்க் ஏ.டி.எம் அருகே வரச்சொல்லுங்கள். பத்து நிமிடம் பார்ப்பேன். அப்பவும் உங்க ஆள் சொதப்பினால் ஐ ஆம் சாரி. என்னால் எதுவும் செய்ய முடியாது. ரயில்வே போலீஸ் ஏற்றுக் கொண்டால், அவர்களிடம் சாவியைக் கொடுக்கிறேன். முடிந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிடில், பூட்டை உடைத்துக் கொள்ளுங்கள்”

“சொல்கிறேன் சார்..”

சென்ட்ரலில் இறங்கி, வழி நெடுக பரப்பியிருக்கும் லக்கேஜ் மலைகளைக் கடந்து, ஜனக் கூட்டத்தில் மிதந்து, சப்பர்பன் ஸ்டேஷனை அடைய கால் மணி நேரம் ஆனது.

கனரா பேங்க் ஏ.டி.எம் அருகே ஏகக்  கூட்டம். யாரைத் தேட..? 

அந்த மூன்றாவது நபருக்கு ஃபோன் செய்தேன். நல்ல வேளை உடணடியாக ஆன்ஸர் செய்தார். “எங்கே இருக்கீங்க...”

“ஏ.டி.எம் ரூமின் உள்ளே...”

“பணம் எடுக்கறீங்களா?”

இல்லை…உங்களுக்காகத்தான் இங்கே காத்திருக்கிறேன்.”

கடவுளே... இப்படியும் ஒரு ஆசாமியா?

வெளியே வாரும். கையில் ரெட் பேக் வைத்திருப்பேன்.

அதற்குள், என்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கும் நன்பர், என் தலையைப் பார்த்ததும், ப்ரீமியம் கார் பார்க்கிங் இடத்திலிருந்து  காரை எடுத்து விட்டார். அவருக்கு பின்னால்  இருக்கும் கார்கள் எல்லாம், நன்பரை முன்னே போகச் சொல்லி ஹாரணில் அலற, நான் ஏ.டி.எம் மைப் பார்த்துக் கொண்டிருக்க, டென்ஷனாகிப் போன நன்பர், ‘அங்கிள், பணமெல்லாம் அப்புறமா எடுத்துக்கலாம். வழியில் நிறைய ஏ.டி.எம் இருக்கு, இப்ப சீக்கிரம் வாங்க.. பின்னாலே கத்தறான்...” என போன் பண்ணிவிட்டார். என் கஷ்டம் அவருக்கு எப்படிப் புரியும்?

அந்த அவசரத்திலும், சாவிக்குச் சொந்தக்காரரை  தொடர்புகொண்டு, உறுதிப் படுத்திக் கொண்டு, சாவியை அந்த விந்தை ஆசாமியிடம் தினித்து விட்டு வந்து சேர்ந்தேன்.

அரை மணி நேரம் கழித்து ஒரு SMS வந்தது, சாவிக்காரரிடமிருந்து....  “Being you are strange to us.. we disturbed you and you helped me. Thanks”. அதாவது வெளியாளாக இருந்தாலும் (stranger என எடுத்துக்கணும்) உதவியதற்கு நன்றி என நாம் எடுத்துக்கனும்.

பின்னர் விசாரித்ததில், அவர்கள் இருவரும் ஒரு கல்லூரியில்....
  

Wednesday, February 24, 2016

கர்ணன்

கர்ணன் பட இசை - ராகக் களஞ்சியம்.
         
தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசை காவியம் என்றால் மிகை ஆகாது. இந்த படத்தில் உள்ள டைட்டில் சாங் முதல் கடைசி பாடல் வரை உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை கிளாச்சிக் ஆக உள்ள ராகங்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை. ஒவ்வொரு பாடலும் அந்தந்த ராகங்களுக்கு ஒரு ஷோ கேஸ் பாடலாக விளங்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக MSV /TKR  இரட்டையர் இசைத்திருப்பார்கள் ! அவற்றைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் தான் இது.

முதலில் :
 
“பெற்றவர் வீதியில் பிள்ளையை விட்டெறிந்தால் குற்றமுடையோர் அந்த குழந்தைகளா ?பெற்ற மக்கள் சுற்றமும் அந்த சுய மதிப்பும் விட்டனரே
அர்ப்பணம் செய்தோம் அவர்களுக்கு “ என்ற டைட்டில் .

1. முதலில் கர்ணனை  அறிமுகப்படுத்தி வரும் பாடலே அருமை. அது டைட்டில் சாங் : ‘மன்னவர் பொருள்களைக் கைக் கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார் , மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார் .வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைப்பவன் கர்ண தீரன்.வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ‘ என்ற இந்த பாடல் TMS பாடியது ; மோகன ராகம் !

2. துரியோதனன் அந்தப்புரத்தில் அவன்
மனைவி பானுமதி பாடும் பாடல் களை கட்ட வரும் . அது என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி – என்று P.சுசீலா பாடல் : அருமையான பிருகாக்களுடன் வரும் – இதன் ராகம்: ஹமீர் கல்யாணி!

3. பிறகு கர்ணன் அங்க தேசத்து மன்னனாக மாறிய பிறகு அரியணை ஏறி அமரும் போது இரு புலவர்கள் பாடுவார்கள் . முதல் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய  ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் ‘ என்ற பாடல் – இது ஹிந்தோளம் ராகம்.

4. கூடவே இன்னொரு புலவர் பாடுவது திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல் : ‘நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் , நற்பொருளை தேடி சிவந்தன ஞானியர் நெஞ்சம் – தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே’ – இது கானடா .

5. பிறகு தன் தந்தை சூர்யனை வழிபட கர்ணன் வருகிறான் – அங்கே அவன் தன் தந்தையை வணங்கி பாடும் பாடல் : ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ‘ என்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரத்தின்  தமிழாக்க பாடலை TMS, சீர்காழி கோவிந்தராஜன் ,திருச்சி லோகநாதன் மற்றும் PBS அனைவரும் கோரஸ் ஆக பாடுகிறார்கள் . – இந்த ராகம் : ரேவதி. குறிப்பு : இந்த ரேவதி ராகம் தான் நாம் இன்று உச்சாடனம் செய்யும் வேத கோஷத்திற்கு அடிப்படை!

6. கர்ணன் இடம் கூடப்பிறந்த கவச குண்டலத்தைப் பறிக்க அர்ச்சுனனின் தந்தையாகிய இந்திரன் அந்தணர் வேடத்தில் வந்து யாசிக்கிறான்- அப்போது அவன் பாடிய பாடல்: ‘என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான் பொருளும் கொடுப்பான் போதாது போதாது என்றால் – இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் , தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே – என்ற இந்த PBS பாடல் ஹம்சானந்தி ராகம்!

7. பிறகு கர்ணன் பிரம்மாஸ்திரத்தை பெறுவதற்காக பரசுராமரிடம் வித்தை கற்கிறான்- அப்படி பயிற்சி பெறும் போது சொல்லப்படும் ஸ்லோகம்- ‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ : இது வரும் ராகம் – மாயா மாளவ கௌளை (இது படத்தில் மட்டும் வரும் ஒரு சிறு பாடல்)

8. பிறகு கர்ணனும் சுபாங்கியும் சந்தித்த பிறகு பிரிந்த பிறகு சுபாங்கி கர்ணனை நினைத்து தன் அந்தப்புரத்தில் பாடும் பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும்அங்கே – P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம் – சுத்த தன்யாசி

9. பிறகு கர்ணனும் சுபாங்கியும் ஒருவரை ஒருவர் நினைத்து கனவில் பாடும் ஒரு அற்புத பாடல் – ‘இரவும் நிலவும் வளரட்டுமே இனிமை சுகங்கள் பெருகட்டுமே –‘ அருமையான இந்த பாடல் அமைந்த ராகம்: சுத்த சாரங்கா!
இந்த பாடலை பாடியவர்கள் : TMS மற்றும் P. சுசீலா .

10. கர்ணன் தன் மாமனாரால் அவமதிக்கப்பட்டு வீடு திரும்பியதும் சுபாங்கி பாடுவது –‘ கண்ணுக்கு குலம் ஏது- P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம்- பஹாடி !

11.  கர்ணன் மனைவி சுபாங்கியை அவள் தாய் வீட்டில் அழைத்து வர சொன்ன போது அவளை வழி அனுப்ப துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல் : ‘போய் வா மகளே போய் வா ‘ இந்த பாடலை பாடியது சூலமங்கலம் ராஜலக்ஷ்மி – இந்த பாடல் ராகம்: ஆனந்த பைரவி.

12. கர்ணன் மனைவி சுபாங்கி கர்ணன் பேச்சைக் கேளாமல் தாய் வீடு சென்று தாய் வீட்டில் வளைகாப்பு நடத்திக்கொள்ள சென்றபோது தந்தையால் அவமதிக்கப் பட்டு கணவனிடம் திரும்பி வந்து துரியோதனன் மனைவி பானுமதியால் ஆதரிக்கப் பட்டு அவளை வாழ்த்தி பானுமதி பாடும் பாடல் :மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே- இது ராக மாலிகை; முதலில் வருவது – காபி ராகம் ; பிறகு “மலர்கள் சூடி  “ என்று வருவது சுத்த சாவேரி.

13. பிறகு குருக்ஷேத்திர யுத்தம் துவங்கியவுடன் அர்ஜுனன் தன் உறவினர்கள் அனைவரையும் யுத்த களத்தில் தனது எதிரிகளாக பார்த்து மனம் தளர விட்டு தான் போர் புரியப் போவதில்லை என்று கிருஷ்ணனிடம் கூறி தன் காண்டீப வில்லை கீழே போட்டு அமர்ந்த போது கிருஷ்ணனால் உபதேசம் செய்யப் பட்ட போது வந்த பாடல் “மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’  ! இந்த பாடலை இயற்றிய  கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ! ஒரு சாதாரண பாமரனுக்கும் புரியும் வகையில் இந்த கீதோபதேசத்தின் சாராம்சத்தை சிறிய வார்த்தைகளில் வடித்து அவர் இந்த பாடலை இயற்றி இருக்கிறார்.இந்த பாடலுக்கு அட்சர லக்ஷம் பொற்காசுகள் கொடுக்கலாம் – அவ்வளவு சிறப்பான பாடல் ! இந்த பாடலை மனம் உருகும் வகையில் பாடிய சீர்காழி கோவிந்தராஜனை நாம் எப்படி பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை .                 இந்த பாடல் அமைந்த ராகங்கள் : மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா- நாட்டை : என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் – இது சஹானா; புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் போகட்டும் கண்ணனுக்கே – இது மத்யமாவதி ! மொத்தத்தில் இந்த பாடல் ஒரு அருமையான ராக மாலிகை!

14. யுத்த களத்தில் அம்புகளால் வீழ்த்தப் பட்டு சாகும் தருவாயில் கர்ணன்  செய்த புண்ணியங்களின் பலனாக தர்ம தேவதையே கர்ணனை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் உச்ச கட்டத்தில் அவனிடம் ஏழை அந்தணன் போல் வேடமிட்டு அவன்  செய்த புண்ணியங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுக்க கிருஷ்ணன் யாசித்த போது சிறிதும் தயங்காமல் இப்போதும் தன்னால் கொடை செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ்ந்து தன் தான பலன்களையெல்லாம் அருகில் யுத்த களத்தில்  தாரை வார்க்க நீர் இல்லாததால்  தன் குருதியினால் தாரை வார்த்துக் கொடுக்கும் முன் வரும் பாடல் “ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது வல்லவன் வகுத்ததடா ‘ இந்த பாடல் அமைந்த ராகம் : ஆஹிர் பைரவி என்கிற சக்ரவாகம் ! இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இன்றளவும் நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகை ஆகாது. இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம். இந்த பாடலின் இசையாகட்டும் இந்த பாடலில் உள்ள கருத்துக்களாகட்டும் நம்மை கண் கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன இன்றளவும் ! தி எவர் ஹிட் சாங் !!
(ஒரு குறிப்பு : இந்த பாடலில் வரும் செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா..... வஞ்சகன் கர்ணனடா ! ‘’ என்று வருமே அது கிருஷ்ணரால் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலம். இது உண்மையில் மகாபாரத போர் கடைசியில் துரியோதனன் வீழ்ந்த பிறகு தன் மரணத்தை எதிர் பார்த்து அவன் கிருஷ்ணனை நிந்திக்கிற போது ‘கிருஷ்ணனும் ‘ஆமாம் , வஞ்சகத்தால் தான் நாம் ஜெயித்தோம். இந்த வெற்றி வஞ்சத்தால் தான் பெற்றது ‘ என்று கூறுகிறான். அதைக் கூறும் போது துரியோதனன் மேல் பூ மாரி பொழிகிறது. கோவிந்தனும் வெட்கித் தலை குனிகிறான் “.)
15. இந்த பாடலகளைத் தவிர படத்தில் வராத இன்னொரு அருமையான பாடல் ஒரு டூயட் “ மகாராஜன் உலகை ஆளுவான் அந்த மகா ராணி அவனை ஆளுவாள் “ இந்த பாடல் அமைந்த ராகம் : கரஹரப்ரியா ! இந்த பாடலை பாடியவர்கள் TMS /P.சுசீலா !

16. இந்த படம் முடிகையில் வரும் பாடல் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் .......
‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “
“परिथ्रानाय  साधूनां विनाशाय च धुष्क्र्थां धर्म संस्थापनार्थाय संबवामि युगे युगे”
என்று வரும் ஒரு ஸ்லோகம் – நல்லவர்களை காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் அவதரிக்கிறேன் ‘ என்ற கீதையின் வாசகம் வரும் ராகமும் மத்யமாவதி !

இத்தகவல் நண்பர் ஒருவரால் அனுப்பப்பட்டது.

Tuesday, February 23, 2016

திருக்கோடிக்காவல்

வானமுட்டி பெருமாளைத் தரிசித்துவிட்டு, கஞ்சனூர் செல்லலாம் என விரைந்து கொண்டிருந்த பொழுது, எங்கேயப்பா போகிறீர்கள்? நான் ஒருத்தன் உனக்கு தரிசனம் அளிக்க காத்துக் கொண்டிருக்கிறேனே, என்பது போல, திருக்கோடிக்காவல் என்ற கிராமத்தின் அருகே,  ஒரு திருப்பத்தில், “திரிபுரசுந்தரி உடணுரை திருக்கோடீஸ்வரர் ஆலயம்” என்ற பெரிய வளைவு தென்பட்டது. நன்பர் என்னைப் பார்க்க, “அவரே கூப்பிடுவது போலல்லவா இருக்கிறது? கஞ்சனூர் அப்புறம்; திருக்கோடீஸ்வரர் அழைக்கிறாரே, போகலாம்”  எனத் தீர்மாணித்து, உள்ளே நுழைந்தோம்.

பின்தான் தெரிந்தது, இது மற்றும் ஒரு கோயில் அல்ல; மிகத்தொன்மையான, பல புராணக்கதைகளை உள்ளடக்கிய பிருமாண்டமான கோயில் என.

எல்லாக் கோயில்களையும் போலவே இதற்கும் ஒரு சுவாரஸ்யமான ஸ்தலபுராணம் இருக்கிறது. முதலில் கோயிலைப் பற்றி சுருக்கமாக:

பாடல் பெற்ற கோயில்கள் 274ம், இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கின்றது. அவ்வகையில் , இக்கோயில், திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசால் பாடப்பெற்றது.  இறைவன்: திருக்கோடீஸ்வரர். அம்பாள்: திரிபுரசுந்தரி.  ஸ்தல விருட்சம்:  பிரம்பு. முக்கியத் திருவிழா: சித்ரா பௌர்ணமி.  தீர்த்தம்: சிருங்கோத்பவ தீர்த்தம்.  அணுகும் முறை: கும்பகோணம்-மயிலாடுதுறை மார்க்கத்தில்,  சூரியணார் கோவிலிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

‘கா’ என முடியும் ஐந்து சிவத்தலங்களை ‘பஞ்ச காக்கள்’ என்பார்கள். திருஆனைக்கா (திருவாணைக்காவல்), திருக்கோலக்கா (சீர்காழி), திருநெல்லிக்கா (திருத்துறைப் பூண்டி), திருகுறக்குக்கா (நீடூர் அருகே)  மற்றும் இவ்வூர்.

மூன்றுகோடி தேவதைகளுக்கும் ஏற்பட்ட சாபம், இத்தலத்தில் விலகியதால் ‘திரிக்கோடிக்கா’ என்று ஏற்பட்டு, காலப்போக்கில் “திருக்கோடிக்காவலாயிற்று” என்று கூறுகிறார்கள்.

இனி ஸ்தலபுராணம் சுருக்கமாக:  க்ரத யுகத்தில், மூன்றுகோடி மந்திர தேவதைகள், முக்தி வேண்டி “வெங்கடேசப் பெருமானை” நோக்கி ஜபித்துக்கொண்டிருந்த பொழுது, அங்கே வந்த, துர்வாச மகரிஷி, நீங்கள் விரும்பும் வகையிலான முக்தி,  மந்திரத்தால் சாத்தியமாகாது; ஞானத்தால் மட்டுமே அடையமுடியும்.  ஞானம் பெற்ற பின்னும் பரமேஸ்வரனின் அனுக்ரஹத்தினால் மட்டுமே சாத்தியம் எனக் கூற, அதை மறுத்த தேவதைகள்,  கோஷத்தை தொடர்ந்தனர். 

இதனால் கோபமுற்ற துர்வாசர், இந்த இடத்தில் உங்களுக்கு முக்தி கிட்டாது என சபித்து விட்டாராம்.  ஆனால், மூன்று கோடி தேவதைகளுடன் மந்திர ஜபத்தில் ஈடுபட்டிருந்த "பன்னீராயிரம் ரிஷிகள்" மட்டும், துர்வாசரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு,  காசிக்குச் சென்று மணிக்கர்ணிகாவில் நீராடி, டுண்டி கணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, பிந்துமாதவர், கால பைரவர் ஆகியோரைத் தரிசித்து பின் இந்த ஊருக்கு (திரிக்கோடிக்கா) வந்து,  சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடிவிட்டு, பின் மூன்று கோடி தேவதைகள் தவம் இயற்றிக் கொண்டிருந்த  இடத்திற்கு  வந்த பொழுது, திருக்கோடீஸ்வரர், திருபுரசுந்தரியுடன் தரிசனம் தர, உடனே கையில் கொண்டுவந்திருந்த சிருங்கோத்பவ தீர்த்தத்தை,  துர்வாசர் தவம் மேற்கொண்ட  ரிஷிகள் மேல் தெளிக்க,  ஒரு ஜோதி தோன்றி அதில் அனைத்து ரிஷிகளும் ஐக்கிய மானார்களாம். 

அதைக் கண்ட மூன்றுகோடி தேவதைகள்,  திருக்கோடி வந்து தவமிருக்க, உடன் திருமாலும் ஈஸ்வரனை  நோக்கி தவமிருக்க,  இறுதியில் அகஸ்தியர் வந்து உபாயங்களை சொல்லிக் கொடுக்க,  ஈஸ்வரன்  தோன்றி, தீர்த்தக் குளத்தில் நீராடும்படி பணிக்க, அதன்பின் அனைவரும் ஜோதியில் ஐக்கியமானார்களாம்.

யமபயம் இல்லாத ஊர் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கும் ஒரு புராணம் வைத்திருக்கிறார்கள்.  ஈஸ்வரன் மற்றும் அம்பாளின் பெருமைகளைச்  சாற்றும் ஏகப்பட்ட புராணக் கதைகள் சொல்கிறார்கள்.

இக்கோயில், 1300 வருடங்களுக்கு முற்பட்டது.  பல சோழ மன்னர்கள் இக்கோயிலை மேம்படுத்தியிருக்கிறார்கள். தென்னிந்திய மன்னர்கள் பலரும் கொடையளித்துள்ளனர்.  

ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது.  கோயில் எங்கும் நுட்பமான வேலைப்பாடுகள்   நிறைந்த  சிற்பங்கள் உள்ளன.  உதாரணத்திற்கு தேர்களின் சிற்பமும், நாட்டிய மங்கைகளின் சிற்பங்களையும் கூற வேண்டும்.

உள்ளே, வழக்கமாக சிவன் கோயில்களில் காணப்படும் சன்னதிகள் தவிர, துர்வாசர், அகஸ்திய முனிவர்,  நான்கு வேதங்கள் (வேத லிங்கங்களாக) ஆகியோருக்கும் சன்னதிகள் இருக்கின்றன. வெளியே யமதர்மராஜன், சித்ரகுப்தர் ஆகியோரும் உள்ளனர். நவக்ரஹங்கள் இல்லை. இங்கே அனைத்தும் சிவனே!

பார்க்க வேண்டிய கோயில். நல்ல வேளை,  நாங்கள் தவறவிட்டுவிடவில்லை.

ராஜ கோபுரம் 
  முன் மண்டபம் 

Monday, February 22, 2016

வாதான்யேஸ்வரர் (வள்ளலார்), மாயூரம்.

கடலூரிலிருந்து மயிலாடுதுறைக்குச் செல்லும்பொழுது, ஊரின் முன்பாகவே, ஒரு தோரணவாயில் இருக்கும்.  அது, வள்ளலார் கோயில் என்று சொன்னார்கள். 

நம்ம ஊரில் இருக்கும் ‘இராமலிங்க ஸ்வாமிகளுக்கு’ அங்கு ஒரு கோயில் கட்டி, வழிபாடு நடத்துகிறார்களாக்கும் என நினைத்துக் கொண்டு சென்றுவிடுவேன். இம்முறை, மகாமக போக்குவரத்து அதிகமாகவே, சற்று நிதானித்துப் பார்த்தால்,  அது சிவன் கோயில் எனத் தெரிந்தது.  இக்கோயில் தரும புர ஆதீனத்திற்கு உட்பட்ட, காவிரியின் வடகரையில் அமைந்துள்ள அழகான ஆலயம்.

உள் நுழைந்துபார்த்தபின் தான் இது ஒரு குருஸ்தலம் கூட எனத்தெரிந்தது. இங்கு தட்சணாமூர்த்தி, மேதா தட்சணாமூர்த்தி என அழைக்கப் படுகிறார்.

இறைவன்: வாதான்யேஸ்வரர் (வள்ளலார்)

இறைவி   : ஞானாம்பிகை.
காலம்      : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்கின்றனர்.

கோவிலின் வடக்கே ஞான புஷ்கரணி உள்ளது. குரு பரிகார ஸ்தலமாகையால், குரு பெயர்ச்சி விமரிசையாக இருக்கும். 

இங்கு, தட்சணாமூர்த்திக்கு எதிரே நந்தி பகவான் இருக்கிறார்.     நந்தி பகவான் நீராடிய தீர்த்தம் ரிஷப தீர்த்தம் என அழைக்கப் படுகிறது.  சப்த கன்னியரில் ஒருவராகிய சாமுண்டி, மகிஷனைக் கொன்ற தோஷம் தீர இத்தலத்தில் வணங்கியிருக்கிறாராம்.  

நந்தியின் கர்வத்தை, சிவன் உணர்த்தியதாக ஒரு கதை சொல்கிறார்கள். தன்னால்தான், சிவன் விரைவாக பயணிக்க முடிகிறது என நந்தி நினைக்க, சிவன் தனது ஜடாமுடியிலிருந்து ஒரே ஒரு முடியினை எடுத்து, நந்தியின் மேல் வைக்க, அதன் பாரம் தாங்காமல், நந்தி  மூர்ச்சையானதாகவும்,   நந்தியின் அந்த கர்வ பாபம் நீங்க, காவிரிக்கரையில் தவமிருக்க சிவன் ஆணையிட,  நந்தியும் அவ்வாறே செய்ய, இத்தலத்தில்,  சிவனே, குருவாக நந்திக்கு  காட்சியளித்ததால், தட்சணாமூர்த்தியின் முன் நந்தி பவ்வியமாக இருக்கிறாராம்.


அப்பக்கம் சென்றால், பார்த்து வாருங்கள்.
Sunday, February 21, 2016

வானமுட்டி பெருமாள்.


மாயூரத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் இருக்கிறார், வானமுட்டி பெருமாள்.  இந்தப் பெருமாள் 14 அடி உயர ஒரே  ‘அத்தி’ மரத்தாலானவர். இக்கோயில் அமைந்திருக்கும் ஊர் ‘கோழிகுத்தி’, காவிரி வடகரை வைணவத் தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

பலமுறை மயிலாடுதுறைக்குச் சென்றிருந்தாலும், வானமுட்டிபெருமாள் எனப்படும் ஸ்ரீனிவாசப்பெருமாளைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  பிதுர்தோஷம், ஹத்தி தோஷம் நீங்கப்பெரும் தலம்.  முன்பு ஒருகாலத்தில் குட்ட நோயால் பீடிக்கப்பட்ட ஒரு மன்னனின்  நோய் குணமுற்று, அவனது ஹத்தி (பாபங்கள் நீங்கப்பெற்றதால்), கோடிஹத்தி என அழைக்கப்பட்டு காலப்போக்கில் ‘கோழிகுத்தி’ யாகிவிட்டது. 

கோடிஹத்தி என்றால் சகல பாபமும் நீங்கும் இடம் என்றுபொருள். பின்னர் இம்மன்ன் தவமிருந்து பின்னாளில் ‘பிப்பல மகரிஷி’ என அழைக்கப்பட்டார்.

மூலவர் (பெருமாள்) அத்தி மரத்தால் ஆனவர். அபிஷேகம் இல்லை. சாம்பிராணி மற்றும் தைலக்காப்பு மட்டுமே!  சங்கு, சக்ரம், கதை, அபயஹஸ்தத்துடன் பெரிய ஆகிருதியுடன் காட்சியளிக்கிறார். விஸ்வரூப தரிசனத்தால், ‘வானமுட்டி பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். மூலவருக்கு மூலிகை வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன என்கிறார்கள். உற்சவர் ஸ்ரீதேவி-பூதேவி ஸ்மேதமாக ‘ஸ்ரீனிவாசப் பெருமாளாக’ காட்சியளிக்கிறார்.

வெளிப்பிரகாரத்தில், விஷ்வேக்ஷனர், பிப்பல மகரிஷி, ராமானுஜர் ஆகியோர் உள்ளனர். குடைவடிவ மூலவர் விமானம்.  இங்கே உள்ள ஹனுமன் சிலையில் ஏழு இடங்களில் தட்டினால் ஓசை எழும்புமாம். பார்க்கவில்லை. கதவு சாத்தியிருந்தது.  வாலில் கட்டப்பட்ட மணியைத் தூக்கி தலையில் வைத்துள்ளார்.