வானமுட்டி பெருமாளைத் தரிசித்துவிட்டு,
கஞ்சனூர் செல்லலாம் என விரைந்து கொண்டிருந்த பொழுது, எங்கேயப்பா போகிறீர்கள்? நான்
ஒருத்தன் உனக்கு தரிசனம் அளிக்க காத்துக் கொண்டிருக்கிறேனே, என்பது போல, திருக்கோடிக்காவல்
என்ற கிராமத்தின் அருகே, ஒரு
திருப்பத்தில், “திரிபுரசுந்தரி உடணுரை திருக்கோடீஸ்வரர் ஆலயம்” என்ற பெரிய வளைவு
தென்பட்டது. நன்பர் என்னைப் பார்க்க, “அவரே கூப்பிடுவது போலல்லவா இருக்கிறது? கஞ்சனூர்
அப்புறம்; திருக்கோடீஸ்வரர் அழைக்கிறாரே, போகலாம்” எனத் தீர்மாணித்து, உள்ளே நுழைந்தோம்.
பின்தான் தெரிந்தது, இது மற்றும் ஒரு கோயில்
அல்ல; மிகத்தொன்மையான, பல புராணக்கதைகளை உள்ளடக்கிய பிருமாண்டமான கோயில் என.
எல்லாக் கோயில்களையும் போலவே இதற்கும் ஒரு
சுவாரஸ்யமான ஸ்தலபுராணம் இருக்கிறது. முதலில் கோயிலைப் பற்றி சுருக்கமாக:
பாடல்
பெற்ற கோயில்கள் 274ம், இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கின்றது. அவ்வகையில் , இக்கோயில், திருஞான
சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசால் பாடப்பெற்றது. இறைவன்: திருக்கோடீஸ்வரர். அம்பாள்: திரிபுரசுந்தரி. ஸ்தல விருட்சம்: பிரம்பு. முக்கியத் திருவிழா: சித்ரா
பௌர்ணமி. தீர்த்தம்: சிருங்கோத்பவ
தீர்த்தம். அணுகும் முறை: கும்பகோணம்-மயிலாடுதுறை
மார்க்கத்தில், சூரியணார் கோவிலிலிருந்து
ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
‘கா’
என முடியும் ஐந்து சிவத்தலங்களை ‘பஞ்ச காக்கள்’ என்பார்கள். திருஆனைக்கா
(திருவாணைக்காவல்), திருக்கோலக்கா (சீர்காழி), திருநெல்லிக்கா (திருத்துறைப் பூண்டி),
திருகுறக்குக்கா (நீடூர் அருகே) மற்றும்
இவ்வூர்.
மூன்றுகோடி
தேவதைகளுக்கும் ஏற்பட்ட சாபம், இத்தலத்தில் விலகியதால் ‘திரிக்கோடிக்கா’ என்று
ஏற்பட்டு, காலப்போக்கில் “திருக்கோடிக்காவலாயிற்று” என்று கூறுகிறார்கள்.
இனி
ஸ்தலபுராணம் சுருக்கமாக: க்ரத யுகத்தில்,
மூன்றுகோடி மந்திர தேவதைகள், முக்தி வேண்டி “வெங்கடேசப் பெருமானை” நோக்கி ஜபித்துக்கொண்டிருந்த
பொழுது, அங்கே வந்த, துர்வாச மகரிஷி, நீங்கள் விரும்பும் வகையிலான முக்தி, மந்திரத்தால் சாத்தியமாகாது; ஞானத்தால் மட்டுமே
அடையமுடியும். ஞானம் பெற்ற பின்னும்
பரமேஸ்வரனின் அனுக்ரஹத்தினால் மட்டுமே சாத்தியம் எனக் கூற, அதை மறுத்த தேவதைகள், கோஷத்தை தொடர்ந்தனர்.
இதனால்
கோபமுற்ற துர்வாசர், இந்த இடத்தில் உங்களுக்கு முக்தி கிட்டாது என சபித்து
விட்டாராம். ஆனால், மூன்று கோடி தேவதைகளுடன்
மந்திர ஜபத்தில் ஈடுபட்டிருந்த "பன்னீராயிரம் ரிஷிகள்" மட்டும், துர்வாசரின்
பேச்சுக்குக் கட்டுப்பட்டு, காசிக்குச்
சென்று மணிக்கர்ணிகாவில் நீராடி, டுண்டி கணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி,
பிந்துமாதவர், கால பைரவர் ஆகியோரைத் தரிசித்து பின் இந்த ஊருக்கு (திரிக்கோடிக்கா)
வந்து, சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடிவிட்டு,
பின் மூன்று கோடி தேவதைகள் தவம் இயற்றிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த பொழுது, திருக்கோடீஸ்வரர், திருபுரசுந்தரியுடன்
தரிசனம் தர, உடனே கையில் கொண்டுவந்திருந்த சிருங்கோத்பவ தீர்த்தத்தை, துர்வாசர் தவம் மேற்கொண்ட ரிஷிகள் மேல் தெளிக்க, ஒரு ஜோதி தோன்றி அதில் அனைத்து ரிஷிகளும்
ஐக்கிய மானார்களாம்.
அதைக்
கண்ட மூன்றுகோடி தேவதைகள், திருக்கோடி
வந்து தவமிருக்க, உடன் திருமாலும் ஈஸ்வரனை
நோக்கி தவமிருக்க, இறுதியில்
அகஸ்தியர் வந்து உபாயங்களை சொல்லிக் கொடுக்க,
ஈஸ்வரன் தோன்றி, தீர்த்தக்
குளத்தில் நீராடும்படி பணிக்க, அதன்பின் அனைவரும் ஜோதியில் ஐக்கியமானார்களாம்.
யமபயம்
இல்லாத ஊர் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கும் ஒரு புராணம்
வைத்திருக்கிறார்கள். ஈஸ்வரன் மற்றும்
அம்பாளின் பெருமைகளைச் சாற்றும் ஏகப்பட்ட புராணக் கதைகள் சொல்கிறார்கள்.
இக்கோயில்,
1300 வருடங்களுக்கு முற்பட்டது. பல சோழ
மன்னர்கள் இக்கோயிலை மேம்படுத்தியிருக்கிறார்கள். தென்னிந்திய மன்னர்கள் பலரும்
கொடையளித்துள்ளனர்.
ராஜகோபுரம் ஐந்து
நிலைகளை உடையது. கோயில் எங்கும் நுட்பமான
வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் உள்ளன. உதாரணத்திற்கு தேர்களின் சிற்பமும், நாட்டிய
மங்கைகளின் சிற்பங்களையும் கூற வேண்டும்.
உள்ளே, வழக்கமாக சிவன் கோயில்களில் காணப்படும் சன்னதிகள் தவிர, துர்வாசர், அகஸ்திய
முனிவர், நான்கு வேதங்கள் (வேத
லிங்கங்களாக) ஆகியோருக்கும் சன்னதிகள் இருக்கின்றன. வெளியே யமதர்மராஜன்,
சித்ரகுப்தர் ஆகியோரும் உள்ளனர். நவக்ரஹங்கள் இல்லை. இங்கே அனைத்தும் சிவனே!
பார்க்க
வேண்டிய கோயில். நல்ல வேளை, நாங்கள் தவறவிட்டுவிடவில்லை.
ராஜ கோபுரம் |
முன் மண்டபம் |
No comments:
Post a Comment