Tuesday, February 2, 2016

மெக்காலே இன்னமும் இறக்கவில்லை

சில தினங்களுக்கு முன், சேந்தமங்கலம் கோட்டைக்கோயில் பற்றிக் குறிப்பிட்டு, அக்காலத்திய  நமது தொழில் நுட்ப ஞானத்தை வியந்து குறிப்பிடும் வகையில், ‘இன்றைக்கு சிதைந்த கற்களைகளையே, நம்மால் திரும்ப அடுக்க முடியவில்லை, அக்காலத்தில், இப்படிப்பட்ட கோவில்களை   நூற்றுக்கணக்கில் எப்படி நிர்மாணித்தார்களோ..’ எனக் குறிப்பிட்டிருந்தேன்.  

இந்த வரிகள் குறித்து, தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார் நண்பர் ஒருவர். அக்காலத்திய நமது அறிவு, இக்காலத்தியதைவிட மேம்பட்டதே என சாடினார்.

இன்றைக்கு இருக்கும் க்ரேன், டோஸர்கள், பொர்க்லேன் என்பது போன்ற கனமான பொருட்களைக் கையாளும் கருவிகள் இல்லாமலே, அக்காலத்தில் சாதித்தார்கள்.. அவர்களது அறிவு மேம்பட்டதே... என்பதே நான் கூற விழைந்தது.

ஆனால் , நமது ‘சுயமான’ இந்திய அறிவு எங்கே போய் ஒளிந்து கொண்டது, என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. 

சரித்திரத்தின் எந்த கணத்தில், நாம் ‘நம்மை’ இழந்தோம்?  நமது ‘இழப்பு’ ஒரு கணத்தில் நிகழ்ந்ததா? இந்த சதிக்குப் பின்னால் இருந்த கயவானித் திட்டம் என்ன?  யார் இதைச் செய்தார்கள்? நாமே எப்படி இந்த சதிக்கு விருப்பத்துடன் பலியானோம்!” என்ற தொடர் வினாக்களும் எனக்குள் எழுந்தது.

“நாங்கெல்லாம் அப்பவே, புஷ்பகவிமானம் விட்டவர்கள்” என்பது போன்ற வாதத்திற்குள் நுழையவில்லை.  ஆனால், அக்காலத்திய நமது நுட்ப அறிவிற்கு சாட்சியாக, நூற்றாண்டுகளைக் கடந்து, இன்றும்  கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கட்டிடங்களும்-கோயில்களும், நிரூபிக்கப்பட்ட சோழர்களின் வலுவான கப்பற் படையும், தமிழர்கள் திரைகடலோடி வியாபாரம் செய்ததும், உலகின் எந்த சிறந்த இலக்கியத்திற்கும் சற்றும் குறைவற்ற தரம் கொண்ட நமது இலக்கியங்களும் (நமது நாட்டு எந்த மொழியாக இருந்தாலும் சரியே),   நமது நாடு எல்லாத்துறையிலுமே சிறந்து விளங்கிய நாடு தான் என்பதை நிருவ போதுமானதே! இதைப் புரிந்து கொள்ள தனித்திறமை வேண்டியதில்லை. கணிதத்திலும், வானியலிலும் நமது அன்றைய அறிவு பூரணமானதே! மூட நம்பிக்கைகளும், முட்டாள்தனங்களும் மிகுந்த ஒரு நாடாக இருந்திருந்தால், இவையெல்லாம் சாத்தியமா என்ன?

பல அன்னிய படையெடுப்புகளை சந்தித்ததுதான் இந்தியா. அப்பொழுதெல்லாம் பல கோவில்கள் நிர்மூலமாக்கப் பட்டனதான். ஆனால் அவர்கள் யாவரும் நமது அறிவை குழிதோண்டிப் புதைக்க வில்லை. அவர்களது மொழியைத் நம் மீது திணிக்கவில்லை. மொகலாயர்கள் காலத்திலும் கூட, அன்னிய மொழி கட்டாயமாக்கப் படவில்லை. (ஆனால் மதம் சார்ந்த வன்முறை இருந்தது).

அப்பொழுதெல்லாம் பறிபோகாத நமது கௌரவம், சுய ஞானம், சுய சார்பு போன்றவற்றை   300 ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் முழுமையாக இழந்தோம். ‘ஆங்கிலேயன்’ குயுக்தியாக ஒன்றைச் செய்தான். அது நமது மொழிகள் மீது  நாமே அவமானம் கொள்ளும்படி செய்ததுதான். 

இந்தப் புன்னிய காரியத்தை செய்தது ‘மெக்காலே’ பிரபு. இந்திய தண்டனைச் சட்டத்தையும், கல்வித் திட்டத்தையும் உருவாக்கிய மாபாவி அவனே!

எதை இழந்தாலும் திரும்பச் செய்து கொள்ளலாம். ஆனால் மொழியை இழந்தால் மீட்கவே முடியாது என்பதற்கு இந்தியாவே சரியான உதாரணம். இன்றைக்கு தமிழ் நாட்டில், தமிழில் பேசுவது கௌரவக்குறைவு, தமிழில் படிப்பது ‘விரயம்’ என்ற மனப்பாங்கு உருவானதன் விதை, ‘மெக்காலே’ போட்டதே. அவன் தான்,  ஆங்கிலப்படிப்பு மட்டுமே உயர்வானது என்று நம்பும்படி செய்தான். அவன் போட்ட கல்வித்திட்டம்தான்,  ‘தாய்மொழிக் கல்வி வீணானது’ என்ற கருத்தை நம்மில் ஊன்ற வைத்தது.  இந்த மனோபாவம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, மொத்த இந்தியாவும் இப்படித்தான் எண்ணுகிறது.

மெக்காலேவை, அன்று, 400 மைல்கள் பல்லக்கில் சுமந்துகொண்டு, தூக்கிக் கொண்டு நடந்தோம். இன்றைக்கும் மௌனமாக அவனை சுமந்துகொண்டிருக்கிறோம்.  ஆங்கிலம் பேசுவதுதான் மரியாதையானது, அவனிடம் வேலைபார்ப்பதுதான் கௌரவத்துக்குரிய ஒன்று என்று நம்பவைத்தவன் இவனே! நம் ஒவ்வொருவர் முதுகின் மீதும் மெக்காலே உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறான். பரிதாபம் என்னவென்றால், அவனை முதுகில் சுமப்பதை நாம் ‘கௌரவம்’ என நினைப்பதே!

இந்திய மக்களில் மிகுந்த அறிவுத் திறமை மிக்கவர்கள் இருக்கிறார்கள். அறிவியல், வானவியல், கணிதம் போன்றவற்றில் இந்தியர்களுக்கு இருக்கும் தனித்திறனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றால்,  ஆங்கிலக் கல்வித் திட்டத்திற்கு இந்தியர்களை மாற்றுவதே சரி என்று முன்மொழிந்தவன் ‘மெக்காலே’.

அவன் கூறினான்: “இந்நாட்டு மக்கள் மிக மதிப்பு மிக்க பாரம்பரியத்தையும் உயர்ந்த தன்மைகளையும் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இந்நாட்டிற்கே முதுகெலும்பாக இருக்கும் இம்மக்களின் கலாச்சார பாரம்பரியத்தை உடைக்காவிட்டால், இந்நாட்டை வெல்ல முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. 

எனவே நான் இந்த நாட்டின் பழமையான கல்விமுறையையும் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் முற்றிலும் வேறாக மாற்றி அமைக்க வழிமொழிகிறேன். அதன் மூலம் இந்தியர்களை ஆங்கிலமும் மேல்நாட்டுகாரர்களின் வழி முறைகளுமே நம்மைவிட உயர்ந்ததவை என்று அவர்களை எண்ண வைக்க முடியும். இவ்வாறு அவர்களை நினைக்க வைத்து விடுவதால் அவர்கள் தங்கள் சுயமதிப்பையும் சொந்த நாட்டுக் கலாச்சாரத்தையும் இழந்து அதன் மூலம் அந்நாட்டு மக்களும் அந்நாடும் நாம் விரும்பியபடி நமது ஆளுமைக்குட்பட்ட நாடாகும்.”

‘கல்விக் கூடங்களை’,  ‘தண்டனைக் கூடங்களாக’ மாற்றிய பெருமையும்  இவனுக்கே! 1835, பிரப்ரவரி இரண்டாம் தேதி, தனது கல்விக் கொள்கையினை சமிர்ப்பித்தான்.  அன்றைக்கு அவன் சொன்னான், ‘இனி இந்தியர்களின் தாய்மொழி, ஆங்கிலமாகிவிடும்’ என.  அது இன்று, நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டது தானே? ஆங்கிலம் பேசுவது மட்டுமல்ல, ஆங்கிலேயன் போல ‘உச்சரிக்கவும்’ செய்கின்றோம்.

ஆங்கிலம் பேசாத, ஆங்கில வழி கல்வி பயிலாத ஜப்பானோ, பிரான்ஸோ, சீனமோ, ருஷ்யாவோ முன்னேறவில்லையா? சாதிக்கவில்லையா? ஜாவாவும், விண்டோஸும், ஆன்ட்ராய்டும் கொரிய மொழி பேசவில்லையா? ருஷ்ய மொழியில் ‘கவுண்டவுன்’ நடக்கவில்லையா?

இந்த அடிப்படைச் சிந்தனையைத் தடுத்து,  நம்மையெல்லாம், கலாச்சார ரீதியாகவும் முகமிழந்த மனிதர்களாக மாற்றிவிட, நம்மை மத, இன,மொழி,பிராந்திய அடையாளங்களால் பிரித்து வைக்க, ஆங்கிலேயர்களின் வழித்தோன்றல்களாக நம்மிடம் ஆட்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல்வியாதிகள் என்று பெயர். 


1 comment:

  1. அருமையான பதிவு. கலாசார சீர்கேடு, தாய்மொழி கல்வி இன்மை, நம்மை பற்றி நாமே இழிவான எண்ணம் பெற்றது இவை நம்மை பீடித்துள்ள நோய். இது நாம் அனைவரும் உணர வேண்டும் என்று அடித்துச்சொல்லி உள்ளீர்கள். ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்.
    நல்ல பதிவு சார். பாராட்டுக்கள்.
    திருநாவுக்கரசு

    ReplyDelete