Sunday, February 7, 2016

ரிஷிவந்தியம் - நெய்வானை

தமிழகமெங்கும் அர்த்தனாரீஸ்வர்ருக்கு பல கோயில்கள் இருக்கின்றன. விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் என்னும் இடத்திலும், அர்த்த நாரீஸ்வரருக்கு அழகான கோயில் (லிங்க ஸ்வரூபத்தில்) இருக்கின்றது.  முன்னொருகாலத்தில் ரிஷி நந்தவனம் என அழைக்கப்பட்டு, பின் ரிஷிவந்தியம் என மருவியது என்கிறார் கோயில் குருக்கள்.

மூலவர்: அர்த்த நாரீஸ்வரர். அம்மன்: முத்தாம்பிகை. ஸ்தல விருட்சம் புன்னை.  1000 வருடங்கள் பழமையான கோயில் என்கிறார் அர்ச்சகர்.  இக்கோயிலில் தேன் அபிஷேகம் விசேஷமானது. தேன் அபிஷேகம் செய்யும்பொழுது, லிங்கத்தில், அம்மன் தெரியும் என்கிறார்கள்.

இந்திரன் சிவபெருமானுக்கு மட்டும் அபிஷேகம் செய்துவிட்டு, பார்வதியை மறந்ததால், இந்திரனுக்கு பாடம் புகட்ட, அபிஷேக குடத்தை மறைத்துவிட, இந்திரன் உயிரைவிட யத்தனிக்க, ஈசன் தோன்றி அம்மனுக்கும் அபிஷேகம் செய்விக்க பணித்தாராம். தேன் தானும் கெடாமல், தன்னைச் சார்ந்தவற்றையும் கெட விடாது என்பது போல, இங்கு தினசரி தேனாபிஷேகம் நடக்கிறது. அவ்விதம், அபிஷேகம் நடக்கும் 
பொழுதுதான், அர்த்த நாரீஸ்வர்ராக  (சுயம்பு லிங்கம்.)             லிங்கத்தில்  காட்சியளிக்கிறாராம். 

குக நமச்சிவாயம், இங்குதான், ‘தாயிருக்க பிள்ளைச் சோறு...’ பாடலைப்பாடினாராம். அம்மன், அவரிடம் இங்கு ஈசனிடம் அர்த்த பாகம் பெற்றிருக்கிறேன்... ஈசனையும் பாடு என ஆணையிட, ‘மின்னும்படி வந்த சோறு கொண்டுவா..’ எனப் பாடி பசியாறினாராம்.


துவாபரயுகத்தைச் சார்ந்த்து இந்த லிங்கம் என்கின்றனர்.








------------------------------------------------------------------------------------------------------------


நெய்வானை

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மிகப் புராதனமான ஒரு சிவஸ்தலம் நெய்வானை.  திருஞான  சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்.  

முன்பு  திருனெல்வெணைய் எனப் பெயர் இருந்து, பின்பு மருவி நெய்வானை என மாறியுள்ளதாம். அருகில் இருக்கும் ஏரி உடைந்த பொழுது நெல் மூட்டைகளால், அணை கட்டியதால், இந்த ஊர் இந்தப் பெயர் பெற்றது என்றும் கூறுகிறார்கள்.  பிரதான சாலையில் இல்லாமல் சற்றே ஒதுங்கி இருக்கும், மிக அழகான, புராதனமான (1000 ஆண்டுகளுக்கு முந்தியது என்கிறார்கள்) அமைதியான கோயில்.

இறைவன்: சொர்ண கடேஸ்வரர்,  இறைவி நீல மலர்க்கன்னி அம்மன் சன்னதிக்கு முன்புள்ள கிணறே தீர்த்தம்.

நான்கு முறமும் சுற்று மதிலுடன் ஒரு முகப்பு வாயில் மட்டுமே கொண்டு இக்கோயில் இருக்கிறது. முகப்பு வாயிலுக்கு முன்பாக நந்தி மற்றும் பலிபீடம்.  முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதி வாயிலின் வெளியே மகாவிஷ்ணு சங்கு சக்ரதாரியாக. துவாரபாலகரை தொழுது உள்வாயில் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக ருத்ராட்ச பந்தலின் கீழ் அருட்காட்சி தருகிறார். ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் இறைவன் திருமேனி மீது சூரிய ஒளி விழுகிறது.

வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வயானை உடன் முருகன், காசி விஸ்வநாதர், ஸ்படிக லிங்க சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி தனிக் கோயிலாக. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். நால்வர் சந்நிதியும் உள்ளது. 

நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறுஞ்
சொல்வணம் இடுவது சொல்லே. 

நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள அரவசைத் தீரே
கச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே.  












எனது உற்ற நண்பர் திரு. செந்தில் அவர்களுடன்தான் இப்பயணம்.

No comments:

Post a Comment