கடலூரிலிருந்து மயிலாடுதுறைக்குச்
செல்லும்பொழுது, ஊரின் முன்பாகவே, ஒரு தோரணவாயில் இருக்கும். அது, வள்ளலார் கோயில்
என்று சொன்னார்கள்.
நம்ம ஊரில் இருக்கும் ‘இராமலிங்க ஸ்வாமிகளுக்கு’ அங்கு ஒரு
கோயில் கட்டி, வழிபாடு நடத்துகிறார்களாக்கும் என நினைத்துக் கொண்டு
சென்றுவிடுவேன். இம்முறை, மகாமக போக்குவரத்து அதிகமாகவே, சற்று நிதானித்துப்
பார்த்தால், அது சிவன் கோயில் எனத்
தெரிந்தது. இக்கோயில் தரும புர
ஆதீனத்திற்கு உட்பட்ட, காவிரியின் வடகரையில் அமைந்துள்ள அழகான ஆலயம்.
உள் நுழைந்துபார்த்தபின் தான் இது ஒரு
குருஸ்தலம் கூட எனத்தெரிந்தது. இங்கு தட்சணாமூர்த்தி, மேதா தட்சணாமூர்த்தி என
அழைக்கப் படுகிறார்.
இறைவன்: வாதான்யேஸ்வரர் (வள்ளலார்)
இறைவி : ஞானாம்பிகை.
காலம் : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்கின்றனர்.
கோவிலின் வடக்கே ஞான புஷ்கரணி உள்ளது.
குரு பரிகார ஸ்தலமாகையால், குரு பெயர்ச்சி விமரிசையாக இருக்கும்.
இங்கு, தட்சணாமூர்த்திக்கு எதிரே நந்தி
பகவான் இருக்கிறார். நந்தி பகவான் நீராடிய தீர்த்தம் ரிஷப தீர்த்தம்
என அழைக்கப் படுகிறது. சப்த கன்னியரில்
ஒருவராகிய சாமுண்டி, மகிஷனைக் கொன்ற தோஷம் தீர இத்தலத்தில் வணங்கியிருக்கிறாராம்.
நந்தியின் கர்வத்தை, சிவன்
உணர்த்தியதாக ஒரு கதை சொல்கிறார்கள். தன்னால்தான், சிவன் விரைவாக பயணிக்க
முடிகிறது என நந்தி நினைக்க, சிவன் தனது ஜடாமுடியிலிருந்து ஒரே ஒரு முடியினை எடுத்து,
நந்தியின் மேல் வைக்க, அதன் பாரம் தாங்காமல், நந்தி மூர்ச்சையானதாகவும், நந்தியின்
அந்த கர்வ பாபம் நீங்க, காவிரிக்கரையில் தவமிருக்க சிவன் ஆணையிட, நந்தியும் அவ்வாறே செய்ய, இத்தலத்தில், சிவனே, குருவாக நந்திக்கு காட்சியளித்ததால், தட்சணாமூர்த்தியின் முன் நந்தி
பவ்வியமாக இருக்கிறாராம்.
அப்பக்கம் சென்றால், பார்த்து
வாருங்கள்.
No comments:
Post a Comment