Friday, February 26, 2016

ஒரு பயணம்.

We travel not to escape life, but for life not to 
                           escape us.


தனிமையைப் பழகிக் கொண்டேனாயினும், அது தரும் சலிப்பும்-அலுப்பும், சில சமயங்களில் எனக்கே சகிக்கவொண்ணாததாகி விடுவதால், அகப்பட்ட தருணங்களில் எல்லாம் வெளியிடங்களுக்குச் சென்றுவிடுவதை வாடிக்கையாக்கிக் கொண்டுவிட்டேன். இம்மாதிரியான ஒவ்வொரு பயணமும், ஏதாவது நினைந்து-நினைந்து  புன்னகைக்க வைக்கும் ஒரு நிகழ்வை பதிந்துவிட்டுத்தான் செல்கிறது.

சில தினங்களுக்கு முன், பெங்களூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம். பெங்களூர் (அதென்ன  SBC?) சிட்டி ஸ்டேஷனின் இடிபடும் நெரிசலுக்கு அஞ்சி, “கண்டோன்மென்டில்” போர்டிங் போட்டுக் கொண்டேன்.  டபுள் டெக்கர் வண்டி வருவதென்னவோ 1440 க்குத்தான். 


பெங்களூரின் யூகிக்கமுடியாத டிராஃபிக் ஜாம்களுக்கு  நடுங்கி, ஒருமணிக்கே சென்றுவிட்டதால், வெயிட்டிங் ஹாலில் ஒன்றரை மணி நேரம் தஞ்சம்.  முன்பெல்லாம் ரயில் பயணமோ அல்லது ரயிலுக்குக் காத்திருப்போ சுவாரஸ்யமான விஷயமாயிருக்கும்.  முகம் தெரியாத மனிதர்களின் குசலோபரிகள், என்போன்ற உம்மனா மூஞ்சிகளைக்கூட பேச வைத்துவிடும். இப்பொழுதெல்லாம், ஆளுக்கொரு ஐந்தங்குல எலக்ட்ரானிக் கருவிக்குள் முகத்தையும், அதிலிருந்து வரும் இரு வயர்களை காதிலும் செருகிக் கொண்டு, ஆழ்ந்துவிடுகின்றனர். 


ஸ்டேஷனில் தமிழ்ப் புத்தங்கள் இல்லை. கிடைத்த ஆங்கிலப் புத்தகங்கள் என் சுவைக்கு ஏற்றதாயில்லை. எனவே சுவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வழியில்லை. ஸ்டேஷனில் எல்லாம் கிடைக்கின்றன; இருக்கும் இரு ப்ளாட்ஃபாரங்களில், எந்த நடை மேடையில்  ரயில்கள் பெங்களூரை நோக்கி வரும்-எதில் விலகிப் போகும் என்ற தகவலைத் தவிர.  

காத்திருந்த பொழுதில், கலவரமான முகத்துடன், விட்டால் சென்னைக்கு ஓடியே சென்றுவிடலாம் என்ற பாவத்துடன், வியர்த்துக் கொட்ட,  கையில் சிறு பெண்ணை இழுத்துக் கொண்டு, நடுத்தரவயதுடைய ஒரு பெண் வந்தார்.  சில வினாடி சுற்று முற்றும் பார்த்தார். பின், அவர் எப்படி என்னைத் தேர்ந்தெடுதார் என விளங்கவில்லை!

“அங்கிள், நீங்க சென்னைதானே போறீங்க?  இந்த பையை, என் வீட்டுக்காரரிடம் கொடுத்துடரீங்களா..?”

இந்த விசித்திர கோரிக்கை திக்குமுக்காடவும், திக்பிரமையடையவும் வைத்து விட்டது.

“என்னம்மா இது..? யார் நீங்க... உங்க வீட்டுக்காரர் யார்? திடீரென சம்பந்தமில்லாமல் இப்படிச் சொன்னால் நான் என்னவென்று புரிந்து கொள்வது?”

“வீட்டுக்கார்ர் – சாவியை மறந்து வைத்து விட்டு – பஸ்ஸில் போகிறார் – ஏதேனும் செய்யனும் -  வேறு சாவி இல்லை.. பூட்டை உடைக்கனும்.. உதவமாட்டீர்களா...? “ ஏதோ தந்தி பாஷையில் பேசினார்.

நிதானித்துக் கொள்வதற்கே எனக்கு வினாடிகள் தேவைப் பட்டது.  அடுத்து ஒரு பெரியவர் வந்தார். அவர் அந்தப் பெண்ணின் தந்தை என்பது பின்னால் புரிந்தது.

“சார்.. கோவிச்சுக்காதீங்க! இவ என்னோடைய பெண். பதட்டத்தில் இருக்கா..என்னோட மருமகன் சென்னையில் வேலை பாக்கறார். இங்கே வந்துவிட்டுப் போகும் பொழுது, வீட்டுச் சாவியை மறந்து வைத்துவிட்டு, சென்னைக்கு பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறார். இந்த ட்ரெயின் செல்வதற்குள், பஸ் சென்னை சென்றுவிடுமாகையால், அவர் நேராக பஸ் ஸ்டாப்பிலிருந்து, சென்ட்ரலுக்கு  வந்துவிடுவார். நீங்க இந்தப் பையில் இருக்கும் வீட்டுச் சாவியை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். நீங்க இருக்கும் கோச்சிற்கே வந்து சாவியை வாங்கிக் கொள்வார்.  கொஞ்சம் உதவி செய்யுங்க..”

இதில் ஏதேனும்  சதி இருக்கிறதா? பையிற்குள் ஆயுதம்,வெடிகுண்டு ஏதாவது இருக்குமோ? போட்டுத்தள்ள திட்டமா?

“ஏன்  நீங்களே, அடுத்த பஸ்ஸிலோ அல்லது இதே ட்ரெயினிலோ வரலாமே..?”

“அது முடியாது சார்..  பசங்க ஸ்கூலிலிருந்து வந்துடுங்க....”

“அது சரி... அதெப்படி என்னை நம்பறீங்க.. நானே உங்க வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டுபோய், உங்க வீட்டை காலி பண்ணலாமே?”

“அதெல்லாம் மூஞ்சியப் பாத்தே சொல்லலாம் சார். நீங்க 
அப்படியில்ல..”

இதென்ன புதுக்கதை? ஏதோ சீரியல் வசனம் மாதிரி இருக்கே.  எனக்கு அப்போது இருந்தா மூடில், ஒரு ‘த்ரில்’ தேவைப் பட்டதால்,  இந்த அட்வென்சருக்குள் நுழைவது என தீர்மாணித்துவிட்டேன்.  உங்க வீட்டுக் காரர் டெலிபோன் நெம்பர் சொல்லுங்க.

சொன்னார்.

அந்தப் பெண்ணை பேச விடாமல் நானே டயல் செய்தேன். 

“நீங்கதான் ................. என்பவரா?”

“ஆமாம் சார்.”

“நான் பெங்களூர் கண்டோன்மென்ட் ஸ்டேஷனிலிருந்து பேசறேன்.”

“சார்.. நான்தான் சார் அது.. சாவியை, பெங்களூரிலேயே மறந்துவைத்துவிட்டு வந்துட்டேன். ஸ்டேஷனுக்கு போனா எவரேனும் ஒரு நம்பிக்கையான ஆள்  அம்புடுவார். அவரிடம்  சாவியைக் கொடுக்குமாறு  நான் தான் சார் ஐடியா கொடுத்தேன்..”

ஆஹா.. நல்ல ஐடியா ஆசாமி.

பின்னர் அந்தப் பெண்ணிடம் போனைக் கொடுத்து பேசவைத்தேன். (எங்கே எனது ‘புத்திசாலிப் போனை’ எடுத்துக் கொண்டு, அந்தப் பெண்  ஓட்டம் பிடிப்பாரோ என்ற பயம் இருந்ததால், அவர் ஓடினால் பிடித்துவிடும் வாகில் நின்று கொண்டேன்)

அவர் தன் கணவனிடம் விளக்கினார். பச்சை குர்தா போட்டுக்கொண்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு, C5 கோச்சில், ...... இந்த சீட்டில் உட்கார்ந்திருப்பார். வந்து வாங்கிக் கோங்க..

பின், நான்  டெலிஃபோனைவாங்கி, “இங்க பாருங்க மிஸ்டர்.............., சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் என்  சீட்டிலேயே இரு நிமிடம் வெயிட் பண்ணுவேன். அதற்குள் நீங்க வரணும். வராவிடில், கீழே இறங்கி இரு நிமிடம் காத்திருப்பேன். அப்படியும் வரவில்லையெனில், நான் புறப்பட்டு போய்க்கொண்டே இருப்பேன். புரிந்ததா?

“கட்டாயம் வந்துடுவேன் சார். உங்க வீட்டு விலாசம் சொல்லுங்க.. தப்பிபோனா, நான் உங்க வீட்டிற்கே வந்து வாங்கிக்கறேன்.”

“ம்ம்ம்ம்ம்ம்ம்..? என் வீடு யாழ்ப்பாணத்தில் இருக்கு. அங்கெல்லாம் உங்களால் வரமுடியாது.  நான் சொல்லியதுதான் திட்டம். அதன்படி ஃபாலோ செய்வது உங்க பொறுப்பு.”

“சரி சார்..”

அந்தப் பெண்மணி கொடுத்த பையை வாங்கி சோதனை செய்து, ஏதேனும் வெடிகுண்டு இருக்கிறதா எனப் பார்த்தால், வெறும் ‘நவ்தால்’ சாவிகள் இரண்டுதான். ம்ம்ம்ம்ம்ம்... இந்த பூட்டை அரைகிலோ சுத்தியலே, ஒரே அடியில் திறக்குமே? இதற்குப் போயா இத்தனை களேபரம் செய்கிறார்கள்.

சும்மா சொல்லக் கூடாது. டபுள்டெக்கர் ட்ரெயினில் மேல்பகுதியில், ஏ.ஸியின் இதத்தில், அலுங்காமல், குலுங்காமல் வெகு சுகமான பயணம்.

வண்டி அரக்கோணம் நெருங்குகையில் மேற்படியாரிடமிருந்து கால்.

“சார்.. நான் தான் .............. பேசறேன். என்னால் ஸ்டேஷனுக்கு வர இயலாது போலிருக்கிறது.பஸ் இன்னும் சென்னை வந்து சேரல... நீங்க பயணம் செய்யும் வண்டி சரியா 1940க்கு பெரம்பூர் வரும். அப்ப என் பெரம்பூர் ஃப்ரண்ட்  ஒருத்தர் ..................., என்பவர் உங்களைப் பார்த்து பெரம்பூர் ஸ்டேஷனில் சாவியை வாங்கிக் கொள்வார். சரியா?”

“ஓய்... நல்லா கேளும். இந்த வண்டி, பெரம்பூரில் இரு நிமிடங்கள் தான் நிற்கும். அதற்குள் ஒவ்வொரு கோச்சிலிருந்தும்  நூறு பேர் இறங்கியாகனும். உம் ஃப்ரண்டால், அந்த “டைம் கேப்பில்” மேலே ஏறி வரமுடியாது. நானே கீழே இறங்கி, கையில் சிவப்பு கலர் லக்கேஜோடு, என் கோச்சருகில் நிற்பேன்,  முதல் வாசலில். வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லும்..”

“சரி சார்... நல்லா சொன்னீங்க...”

“வரும் நபரின் மொபைல் நெம்பர் என்ன?”

சொன்னார்.

பெரம்பூரும் வந்தது.  நினைத்தது போல, ஒவ்வொரு கதவினருகிலும் நூறு பேர் இறங்க  காத்திருந்தனர். நானும் முண்டி அடித்து கீழே இறங்கினேன்.

வந்து வாங்கிக் கொள்வதாகச் சொன்ன, அந்த  மூன்றாம் நபருக்கு ஃபோன் செய்தேன்.

“எங்கே இருக்கீர்..?”

“ப்ளாட்பாரத்தில் C5 டிஸ்ப்ளே என்று போட்டிருக்குமே... அங்கே நிற்கிறேன்.”

“முட்டாளா நீர்..? ப்ளாட்பாரத்து டிஸ்ப்ளேயில் முன்னே பின்னே இருக்கும். ட்ரெயினில் C5 எங்கிருக்கிறது எனப் பார்க்கத் தெரியாது..”

என் C5, C7 டிஸ்பிளேக்கு நேராக நின்று கொண்டிருந்தது.

“சீக்கிரம் வாரும். கோச்சில் எழுதியிருக்கும் கோச் நெம்பரைப் படியும். சி5க்கு வாரும்.”

“சி5 எங்கே இருக்கும்?”

“அட, சட்.... வண்டி வரும்போதே கவனித்திருக்க வேண்டாம்? முன்னாலே ஓடிவாரும். டைம் இல்லை.. சீக்கிரம்... சீக்கிரம்.”

“சி5 எங்கேன்னு தெர்லே சார்..”

“யோவ்.. இஞ்சின் பக்கமா ஓடிவாய்யா...  நீ நிக்கற இடத்திலேருந்து இரண்டு கோச் முன்னாலே, வேகமா ஓடிவாய்யா...”

“கூட்டமா இருக்கே சார்...”

“பேக்கு முண்டமே.. என்ன புரியல உனக்கு? சீக்கரமா வா...”

அதற்குள் வண்டி நகர ஆரம்பித்துவிட்டது.  சடுதியில் வேகம் எடுக்கும் எனத் தெரியும்.

“யோவ்.. என்னைக் கண்டுபிடிச்சியா இல்லியா?”

“ஒன்னும் புரியல சார்...”

“சீ...மனுஷனா நீர்?  ஒன்று செய்யும்... நீரும் வண்டியில் ஏறிக் கொள்ளும். அப்படியே உள்ளுக்குள்ளாகவே சி5க்கு வாரும்.. வண்டி கிளம்பிடிச்சு”

திரும்ப வந்து என்சீட்டில் அமர்ந்து கொண்டேன்.

இந்த ஆசாமி, எதற்காக விழுந்தடித்து  ஓடினான்! பின் எதற்காக மறுபடியும் வந்து அதே சீட்டில் உட்காருகிறான் என, என்னை விசித்திரமாகப் பார்த்தனர் சகபயணிகள்.

“என்னப்பா... வண்டியில் ஏறிட்டியா..?”

“இல்ல சார்.. ஏறல..”

“ஏறலியா? பைத்தியமா நீ.. நான் சொன்னது எதுவுமே உனக்கு எப்படிப் புரியாமல் போச்சு..வண்டியில் ஏறுவதில் என்ன கஷ்டம்?

வண்டி வேகமெடுத்து அவுட்டரை தாண்டிக்கொண்டிருந்தது.

“சார்.. சாவிக்கொத்தை அப்படியே வெளியே எறியுங்களேன்..”

“அட சீ.. போய்த்தொலை...”

சாவிக்கு சொந்தக்காரரை அழைத்தேன். “இதோ பாருங்க... உங்க நன்பர், சொதப்பலின் உச்சமாக, என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அதெவெல்லாம் செய்கிறார். சொல்வதையும் புரிந்து கொள்வதாயில்லை. இனி என்னால் செய்யக் கூடிய காரியம் ஒன்றுமில்லை. ”

“ஐய்யயோ... எப்படியாவது சாவி வேணுமே சார்.. ஏதாவது நீங்களே ஐடியா சொல்லுங்க சார்..”

“இதென்ன இம்சை... உங்க நன்பருக்கு எது சொன்னாலும் புரியவில்லை.  நான் என்ன செய்ய முடியும்? ஒரு காரியம் செய்யுங்கள். உங்கள் நன்பரை, சப்பர்பன் ட்ரெயினை உடனே பிடித்து சென்னை, சப்பர்பன் ஸ்டேஷன் வாசலில் இருக்கும் கனரா பேங்க் ஏ.டி.எம் அருகே வரச்சொல்லுங்கள். பத்து நிமிடம் பார்ப்பேன். அப்பவும் உங்க ஆள் சொதப்பினால் ஐ ஆம் சாரி. என்னால் எதுவும் செய்ய முடியாது. ரயில்வே போலீஸ் ஏற்றுக் கொண்டால், அவர்களிடம் சாவியைக் கொடுக்கிறேன். முடிந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிடில், பூட்டை உடைத்துக் கொள்ளுங்கள்”

“சொல்கிறேன் சார்..”

சென்ட்ரலில் இறங்கி, வழி நெடுக பரப்பியிருக்கும் லக்கேஜ் மலைகளைக் கடந்து, ஜனக் கூட்டத்தில் மிதந்து, சப்பர்பன் ஸ்டேஷனை அடைய கால் மணி நேரம் ஆனது.

கனரா பேங்க் ஏ.டி.எம் அருகே ஏகக்  கூட்டம். யாரைத் தேட..? 

அந்த மூன்றாவது நபருக்கு ஃபோன் செய்தேன். நல்ல வேளை உடணடியாக ஆன்ஸர் செய்தார். “எங்கே இருக்கீங்க...”

“ஏ.டி.எம் ரூமின் உள்ளே...”

“பணம் எடுக்கறீங்களா?”

இல்லை…உங்களுக்காகத்தான் இங்கே காத்திருக்கிறேன்.”

கடவுளே... இப்படியும் ஒரு ஆசாமியா?

வெளியே வாரும். கையில் ரெட் பேக் வைத்திருப்பேன்.

அதற்குள், என்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கும் நன்பர், என் தலையைப் பார்த்ததும், ப்ரீமியம் கார் பார்க்கிங் இடத்திலிருந்து  காரை எடுத்து விட்டார். அவருக்கு பின்னால்  இருக்கும் கார்கள் எல்லாம், நன்பரை முன்னே போகச் சொல்லி ஹாரணில் அலற, நான் ஏ.டி.எம் மைப் பார்த்துக் கொண்டிருக்க, டென்ஷனாகிப் போன நன்பர், ‘அங்கிள், பணமெல்லாம் அப்புறமா எடுத்துக்கலாம். வழியில் நிறைய ஏ.டி.எம் இருக்கு, இப்ப சீக்கிரம் வாங்க.. பின்னாலே கத்தறான்...” என போன் பண்ணிவிட்டார். என் கஷ்டம் அவருக்கு எப்படிப் புரியும்?

அந்த அவசரத்திலும், சாவிக்குச் சொந்தக்காரரை  தொடர்புகொண்டு, உறுதிப் படுத்திக் கொண்டு, சாவியை அந்த விந்தை ஆசாமியிடம் தினித்து விட்டு வந்து சேர்ந்தேன்.

அரை மணி நேரம் கழித்து ஒரு SMS வந்தது, சாவிக்காரரிடமிருந்து....  “Being you are strange to us.. we disturbed you and you helped me. Thanks”. அதாவது வெளியாளாக இருந்தாலும் (stranger என எடுத்துக்கணும்) உதவியதற்கு நன்றி என நாம் எடுத்துக்கனும்.

பின்னர் விசாரித்ததில், அவர்கள் இருவரும் ஒரு கல்லூரியில்....
  

2 comments:

  1. நல்லா மாட்னீகளா. அது எப்படி உங்களுக்கு மட்டும் இந்த கூத்தெல்லாம் நடக்கிறது. எல்லாத்துக்கும் முக ராசி வேணும். எனக்கென்னமோ இந்த ஜிப்பாவே ராசி இல்லையோன்னு தோன்றது. அது அவரவர் இஷ்டம். ஒருவேளை முக பால் வடியும் முகமா. அதிஷ்டக்காரர் ஐயா நீங்கள்.

    அன்புள்ள (?)
    திருநாவுக்கரசு

    ReplyDelete
  2. மறக்க முடியாத பயண அனுபவத்தை அந்த சாவி தங்களுக்கு தந்துள்ளது. விறுவிறுப்பான ஒரு கதையை படிக்கும் உணர்வு தந்தது தங்களின் நடை.

    ReplyDelete