Friday, February 19, 2016

மகாமகம் 2016.....இனியாவது பாபம் செய்யாமல்....

நமது இந்து மதம், மனிதனை பாபம் செய்யாமல் தடுக்க, 
எத்தனை-எத்தனையோ விதமாக வழிகாட்டுதல்களையும், 
விரதங்களையும், தீர்த்த யாத்திரைகளையும் ஏற்படுத்தி 
வைத்திருக்கிறது. 

“இது வரை செய்த பாபங்கள் போதும். அதற்காகன பாப விமோசனத்தைத் தருகிறேன். இனியாவது பாபச் செயல்கள் புரியாமல் இரு” என பலவேறு விதங்களில்   நமது மதம் அறிவுறுத்துகிறது.

அப்படிப்பட்ட முறைகளில் ஒன்றே, தீர்த்த யாத்திரை.

கும்பகோணத்திலுள்ள அமிர்த வாவிகள் என்று சொல்லப்படும் மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம் இவ்விரண்டும் புண்ய தீர்த்தங்களுக்கெல்லாம் -  புண்ய தீர்த்தமென்று புராணம் சொல்லுகிறது.

எப்படியெனில், முற்காலத்தில் ஒன்பது தீர்த்த தேவதைகளும் ஈசனிடத்தில் சென்று, “கடவுளே, உலகத்திலுள்ள பாவிகளெல்லாரும் எங்களிடம் வந்து மூழ்கி,  தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் விட்டுவிட்டுப் புண்யாத்மாக்களாகிச் செல்லுகின்றனர். நாங்கள் பெற்ற  இந்தப் பாவ மூட்டைகளுக்கெல்லாம் விமோசனம் வேண்டாமா? இதற்கு அருள் புரியக் கூடாதா” என பிரார்த்தனை செய்தனர். அவர்களிடம் கருணை கொண்ட எம்பெருமான், “புன்ய தீர்த்தங்களே! பாவங்களாலே தீண்டப்படாத அமிர்த வாவிகள் இரண்டினை நான் கும்பகோணத்தில் படைத்திருக்கிறேன். அவற்றில் சென்று ஸ்நானம் புரிந்தால் உங்களுடைய பாவங்கள் விலகிவிடும்என்று அருள் புரிந்தார். 

அந்ய க்ஷேத்ரே  க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநஸ்யதி 
புண்யக்ஷேத்ரே  க்ருதம் பாபம் வாரனாஸ்யாம் விநஸ்யதி
வாரனஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநஸ்யதி
கும்பகோணே க்ருதம் பாபம், கும்பகோணே விநஸ்யதி||

அதுதான் கும்பகோண மாகாமகம். 

பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, இங்கு கங்கை முதலான தீர்த்த தேவதைகள் வந்து ஸ்நானம்  புரியும் மகாமக புண்ணியகாலம், எதிர்வரும் பிப்ரவரி 22-23 தேதிகளில் கும்பகோணத்தில் கோலாகலமாகக் கொண்ண்டாடப்பட இருக்கிறது. ஆனாலும் கொடியேற்ற நாள் முதலே லட்சக்கணக்கான ஹிந்துக்கள், ஸ்நானம் செய்து வருகிறார்கள். இவ்விதமாக, மகத்திற்கு முன்னால், குளத்தில் அமுதக் கலசம் கலக்கப்பட்ட உடன் செய்யப்படும் ஸ்நானங்கள்  சாஸ்திர சம்மதம்தான் என்கின்றனர். 

மகாமகத்தின் அர்த்தமும் பயனும் என்ன?

“இந்த கனம் முதற்கொண்டு, நான் பாப காரியங்கள் செய்வதில்லை!”  மனிதனின் இந்த ஒரு தீர்மானந்தான் பரிசுத்தத் தன்மை கொடுக்கிறது. ஒருவன் இந்த  நொடி முதல் பாவம் செய்வதில்லையென்று மன உறுதி செய்து கொள்ளுதலாகிய சங்கல்பத்தி னாலேயே, அவன் அதுவரை செய்த பாவமெல்லாம் எரித்துவிடப்படுகிறது.

ஞானாக்நிஸ் ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதேர்ஜுனஎன்று பகவத் கீதையில் கடவுள் சொல்லியிருக்கிறார். பாவத்தை இனிச் செய்யவில்லையென்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான்.

அதைக் காட்டிலும் பெரிய ஞானமே கிடையாது. சிலர் தவத்தால் ஞானமெய்த நாடுகிறார்கள். சிலர் தானத்தால், சிலர் ஆராய்ச்சியால், சிலர் தியானத்தால், சிலர் பூஜையால் ஞானம் அடைய முயலுகிறார்கள். ஆனால் எல்லா வழிகளும் உண்மையான வழிகளே. இவையெல்லாமே மெய்ஞானத்தைத் தரும்.

பாவத்தைத் தீர்த்துவிட்டோம், இனி பாபம் புரிந்திடோம் என்ற சங்கல்பமே பாவத்தைப் போக்கவல்லது. இந்த சங்கல்பத்தினால் ,  அறிவு மயக்கம் தெளியும். அதிலிருந்து ஞானமுண்டாகும். ஞானமாவது என்ன வென்றால் அனைத்தும் கடவுள் மயமென்ற அனுபவமே.

“எல்லாமே பரமாத்மாவே எல்லாமே கடவுள்” ஆதலால், இருப்பது எல்லாம் ஒன்றே தான்; இரண்டல்லாத ஏகம்” என்ற ஞானத்தால் பிற உயிருகளுக்குத் துன்பம் விளைவிக்கும் குணம்  நம்மை விட்டு நீங்கிவிடும். அதாவது பாவம் போய்விடும். 

நியாயம் புண்ணியம்;
அநியாயம் பாவம்.

சத்யம் புண்ணியம்;
அசத்யம் பாவம்.

திருப்தி புண்ணியம்;
துக்கம் பாவம். 

இப்படியாக பாவத்தை துறந்துவிட விரும்புவோனுக்கு மனோ உறுதியும், ஞான உதயமும் ஏற்பட்டுவிடின்,  பாப விமோசனத்திற்கு , ஏன் கும்பகோணத்திற்கும் காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போக வேண்டும் என்கிறீர்களா ?


மன உறுதிக்கு, சில ஆன்மீக ரீதியாக வலுவேற்றப்பட்ட இடங்கள் தேவை. "இனி பாபங்களே செய்வதில்லை " என்பது போன்ற பெரிய சங்கல்பங்களை, ‘விரதங்கள்’ என்கிறோம். இந்த விரதங்கள் மனிதருடைய நினைப்பில் நன்றாக அழுந்தும் பொருட்டு ஆன்றோர் உலகெங்கிலும், இவற்றுக்குச் சில சடங்குகள் வகுத்திருக்கிறார்கள்.

கல்வி கற்கத் துவங்குவது, திருமணம் செய்வது, க்ரஹப் பிரவேசம் போன்றவற்றை, இவ்வளவு விமரிசையாக்ச் செய்யப்படுவதின் நோக்கமும் இதுவே.

இவை தொடங்கப் படும் பொழுது பல சடங்குகள் நடத்தப்படுகின்றன. இவற்றின் நோக்கம், நாம் நம் மனதில் ஏதேனும் மாசு – அமங்கலம் இருப்பின் அவற்றை நீக்கி மங்களத்தை  நிரந்தரமாக்க நாம் உறுதி செய்துகொள்ளும் உறுதியை நிலைப்படுத்துதலே.

அதாவது, பாவங்களைக் களைந்து புண்யத்தைப் வரித்துக்கொள்ளும் உன்னத விரதத்துக்கான ஒரு சடங்கு வேண்டுமல்லவா? அவ்விதச் சடங்குகளே மஹாமகம், கும்பமேளா ஆகிய புண்ய தீர்த்த யாத்திரை என்று கொள்வோம்.
-0-

அடுத்து வரும் மகாமகத்திற்கு இருப்போமோ இல்லையோ தெரியாது. எனவே, இருக்கும் நல்லெண்ணத்தை உறுதிசெய்து கொள்ளவும், அறியாமல் செய்த பாபங்கள் ஏதேனும் இருந்தால், இன்றுடன் தொலையட்டும் என்ற ப்ரதிஞ்ஞை மனதிற்குள்  தோன்றவே, நேற்று 18/02/2016 அன்று மாலை, மகாமகக் குளத்தை நோக்கிப் பயணம்.  அகில இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் குவியும் பொழுது, கடலூரிலிருந்து மூன்று மணி நேர தூரத்திலிருக்கும் மகாமகத்தை தரிசிக்காவிடில் எப்படி?

நெருக்கடியான, குறுகலான கும்பகோணத்தெருக்கள் லட்சக் கணக்காண மக்களைச் சமாளிக்க திணறுகிறது. ஆனாலும் இதைவிட சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளயும், வசதிகளையும் ஏற்படுத்தித் தருவது சாத்தியமில்லை என்னும் அளவில், நிர்வாகம் இயங்குகிறது.  மிக விழிப்பாக, அதே சமயம் அன்புடன் கடமையாற்றுகிறார்கள். சபாஷ் கும்பகோணம்.

பாலக்கரையில் உள்ள காவிரி நதிப் படித்துறை ஒன்றில் நீராடிவிட்டு, பின் மகாமகக் குளத்தை அடைந்தோம்.  காவிரிப் படித்துறையிலும், மகாமகக் குளத்திலும் - அதன் அனைத்து புண்ணிய தீர்த்தக் கிணறுகளிலும்  மிக-மிக எளிதாக ஸ்னானம் கிடைக்கப் பெற்றது. ஒவ்வொரு கிணற்றிலும் பத்து நபர்களுக்கு மேல் இல்லை.  இதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும் எனத் தோன்றியது.  யம தீர்த்தத்தில் நீராடியபின் கரையேறி ‘காசி விஸ்வனார் – விசாலாட்சியைத்’  தரிசித்து விட்டு, ஆட்டோவில் ‘பொற்றாமரைக் குளத்தில் ஸ்னானம் செய்தோம்.  வழியில் சோமேஸ்வர்ரையும், பெருமாளையும் சேவிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.  ஊரெங்கும், ஏதேனும் ஒரு உற்சவம் நடந்து கொண்டே இருக்கிறது. உற்சவ மூர்த்திகளின் புறப்பாடுகளுக்கு பஞ்சமில்லை. விஸ்வநாதர் கோவிலில்   ஒன்பது தீர்த்த தேவதைகளுக்கும் சந்நிதிகள்  இருக்கின்றன!


இம்முறை 24 மணி நேரமும் நீராட அனுமதித்திருக்கிறார்கள்.  நான் சென்ற நேரம் இரவு எட்டு மணி.  இரவில் குளம் மின்னொளியில் ஜொலிக்கிறது. இதமான இரவுச் சூழலில் 2016ம் வருடத்திய மகாமக யாத்திரை, மிகவும் திருப்தியாக அமைதியாக, மனதிற்கு நிம்மதியாகச் அமைந்தது.


                               கும்பேஸ்வராய நமஹ:







6 comments:

  1. புண்ணியம் கைவரப்பெற்றீர்கள். மகிழ்வான புனித நீராடல்.
    ஏற்பாடுகள் உங்கள் வாயால் பாராட்டு... ஆக நல்லரசு... வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்பதற்கு சமம்.
    வாழ்க.
    திருநாவுக்கரசு

    ReplyDelete
  2. தக்க தருணத்தில் அருமையான பகிர்வு....நேரில் சென்று திருப்தியான பக்தி அனுபவம் பெற ஒரு ஆன்மீக வழிகாட்டி....சந்தோஷம்..நன்றிகள்..பல...பல...ஓம் நமசிவய..

    ReplyDelete
  3. அக்ஷர லக்ஷம் பெறும் அருமையான பதிவு. பல முறை படித்துத் தெளிந்தேன். பாபம் புண்ணியம் , விரதங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஶீ பந்துஜி. இன்னும் விரிவாக எமுதியிருக்கலாம்தான். படிக்க மாட்டார்கள். எனவேதான் சுருக்கமாக...

      Delete
    2. நன்றி ஶீ பந்துஜி. இன்னும் விரிவாக எமுதியிருக்கலாம்தான். படிக்க மாட்டார்கள். எனவேதான் சுருக்கமாக...

      Delete