Tuesday, March 27, 2012

ராணுவ தலைமை தளபதி!


நமது ராணுவத் தளபதி, திரு. வி.கே சிங், மிகக் கடுமையான குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியுள்ளார். குற்றச்சாட்டு என்பதை விட, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் என்பதே பொருத்தம்.

தரம் குறைந்த வாகனங்களை வாங்குவதை அனுமதிப்பதற்காக, ரூபாய் 14 கோடி லஞ்சம் வழங்க, தரகர் ஒருவர் முன் வந்ததாகக் கூறியுள்ளார். *ஒரு வாகனத்திற்கு, ரூபாய் 88,000 வீதம், 1600 வாகனகளுக்கு 14 கோடி ரூபாய்.

மேற்கண்ட லஞ்ச ஆஃபரை பாதுகாப்பு அமைச்சருக்குத் தெரிவித்து விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்!

இந்தியாவில், கடந்த சில மாதங்களாகவே, ராணுவத்திற்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் ‘உறவு’ சீராக இல்லை என்பது நாடறிந்த ரகசியம். அதுவும், திரு. வி.கே.சிங் அவர்களது, பிறந்த தேதி குறித்த சர்ச்சையில், எவரும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளவில்லை. நல்ல வேளையாக உச்ச நீதிமன்றம் தலையீட்டினால், பிரச்சினை ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்தது.

பெருமுதலாளிகள், உயர் அதிகார வர்க்கத்தினர், தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கள்ளக் கூட்டணி புரையோடிவிட்டது. தொலை தொடர்பு சாதனங்கள் வாங்குவதில் துவங்கி, ரோடு காண்டிராக்ட் வரை லஞ்சம் ஆற்றுவெள்ளமாக ஓடுகிறது. அரசல் புரசலாக இருந்த ராணுவ தளவாட கொள்முதல் ஊழல் இப்போது வெளிவந்து விட்டது.

நமது உயர்அதிகாரிகள், எதைத்தான் விட்டு வைப்பார்கள்! கட்டிக்கொள்ளப் போகும் மனைவிக்கு தாலி வாங்குவதானால் கூட அதற்கும் லஞ்சம் கேட்கும் அளவிற்கு நாறிப் போய்விட்டனர்.எலும்பு பொறுக்கிகளான நமது அதிகார வர்க்கம், லஞ்சம் வாங்குவதை வாழ்க்கை முறையாகவே மாற்றிக் கொண்டு விட்டனர் போலும்!.

நமது ஜி.டி.பி ல் 2..4%, ராணுவத்திற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் எத்தனை சதவிகிதம் உண்மையாகவே, தளவாடங்கள் வாங்கப் பயன்பட்டது என்பதை அறிந்து கொள்ள இந்த நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு! இந்த தொகையில், எவ்வளவு கோடிகளை சுருட்டிக் கொண்டனர் என்பதை பத்திரிக்கைகளும் உளவு நிறுவனங்களும்தான் கண்டு பிடிக்க வேண்டும்.

இது ஒரு புறமிருக்க, ராணுவ ஜெனரல் பதவி என்பது, சர்வ வல்லமை பொருந்திய அதிகார மையம். அவர் சாதாரண 'கிளார்க்' போல 2010-ல் தனக்கு முறைகேடாக, தரம் குறைந்த வாகனங்கள் வாங்க தரகர் லஞ்சம் தர முன்வந்தார் என சொல்வது நகைப்புக் கிடமாக உள்ளது! அந்த தரகர் மேல் வழக்குத் தொடுக்க, இலாக்கா ரீதியான நடவடிக்கை எடுக்க, அந்த நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்ய, ஏன் முயலவில்லை?இவ்வளவு நாள், தளபதி அமைதி காத்தது ஏன்? விஷயத்தை பாதுகாப்பு அமைச்சருக்கு சொல்லிவிட்டதாக தளபதி சொல்கிறாரே? அதுகுறித்து அமைச்சகத்தின் மேல் நடவடிக்கை என்ன? பிறந்த தேதி சர்ச்சைக்கும், இந்த திடீர் ஊழல் புகாருக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? 

வெளி வந்த (?) விஷயமே இவ்வளவு நாராசமாக உள்ளது என்றால், வெளிவராத, மறைக்கப்பட்ட மற்ற விஷயங்கள் எந்த அளவு கீழ்த் தரமானதாக இருக்கும்? நமது விமான,கப்பல் மற்றும் தரைப் படைகளுக்காக வாங்கப்பட்ட, வாங்கப்படும், வாங்கப்படவிருக்கும் தளவாட பேரங்கள் யாவற்றையும் சந்தேகப்பட வேண்டியுள்ளதே?

முழுமையான களவானிக் கூட்டமான நம் நாட்டு அதிகார வர்க்கம், ராணுவம் கேட்டுக் கொண்ட தளவாங்கள் அனைத்தையும், கேட்ட தரத்தில் வாங்கித் தந்ததா? இல்லை, தங்களது பாக்கட்டுகளை நிரப்பிக் கொண்டு, தரமற்றவற்றை வாங்கிக் கொடுத்ததா?

ஒரு டிரக்கைக் கூட, நம்மால் உற்பத்தி செய்ய முடியாத அளவிற்கு, நமது தொழில் நுட்ப அறிவு ‘சூனியமாகிப்’ போய்விட்டதா? இல்லை நமது தொழில் நுட்பத்தை வளர விடாமல் செய்தால்தான், வெளி நாடுகளிலிருந்து தளவாடங்களை இறக்குமதி செய்து ‘கொள்ளை’ யடிக்க முடியும் என, வாளா விருக்கிறார்களா?

ராணுவத் ‘தேவை’ யாவும், உண்மையிலேயே “தேவை” தானா? இல்லை மூட்டை அடிக்க ‘தேவை’ ஒரு சாக்கா?

ராணுவ கொள்முதல் குறித்து ‘ஆடிட்’ ஏதாவது உண்டா?

நாம் இறக்குமதி செய்யும் ராணுவ தளவாடங்கள் யாவும், ராணுவத்தின் தேவையை பூர்த்தி செய்கின்றனவா? அவற்றின் பர்ஃபார்மென்ஸ் ரிபோர்ட் என்ன? இறக்குமதி செய்யுமுன், கொள்முதல் குறித்து ‘எக்ஸ்பர்ட்’ கமிட்டி ஏதும் போடப்பட்டு, அதன் பரிந்துரை பெறப்பட்டதா?

வாய்ச் சவடால் / வசனம் இல்லாமல், நமது ராணுவம் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க, உண்மையிலேயே தயாராக உள்ளதா?

தற்போது திடீரென போர் ஏற்பட்டால் சண்டைக்குத் தேவையான ‘வெடி பொருட்கள்’, இரண்டு நாள் போருக்குத்தான் போதுமானதாக இருக்கும் என பத்திரிக்கைச் செய்தி வந்ததே? உண்மையா?

சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளுக்குப் பின்னும், ஏன் நமது ராணுவ தளவாடத் தேவைகளுக்கு, முழுமையாக இறக்குமதிகளையே நம்பியுள்ளோம்? 


இத்துறையில் ஏன் கொஞ்சம்கூட முன்னேற்றமில்லை? 

நமது ஆர்.& டி முடங்கிவிட்டதா? இல்லை முடக்கப்பட்டு விட்டதா? 


கேள்விகள் அடுக்கடுக்காய் எழுகின்றன. இதற்கான பதில் பெறப்பட்டே ஆக வேண்டும்! பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ‘கூச்சல்’ போட, இதை ஒரு சந்தர்ப்பமாய் பயன் படுத்திக் கொள்ளாமல், உண்மை நிலைமை வெளிக் கொணரும் விதமாக, தேசப் பற்றுள்ள- பொறுப்பான கட்சிகளாக நடந்து கொள்வார்களா? இந்த விவகாரத்தில் பதில்களைவிட கேள்விகள் தான் அதிகமாகின்றன!

காங்கிரஸின் 'தேசப்பற்று' அவர்கள் போடும் “காந்திக் குல்லாய்’ வேஷத்தில் மட்டும்தான் உள்ளது!


குறிப்பு: டிஃபன்ஸ் டீல் குறித்த செய்தி அனுபவம் பெற்றவர்களுக்கு, இந்த செய்தி அதிர்ச்சியளிக்காது. ஏனெனில், தனது தேசீய வருமானத்தில் கணிசமான பகுதியை “பாதுகாப்பிற்காக” செலவழிக்கும் அனைத்து நாடுகளின் ராணுவ பேரங்களின் பின்னாலும் பன்னாட்டு பகாசூர கம்பெனிகளும், தரகர்களும் இருபார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்! 


கடந்த காலத்தில் கூட இது போன்ற பல குற்றச் சாட்டுகள் (போஃபர்ஸ்) சுமத்தப்பட்டுள்ளன. சி.பி.ஐ –ன் விசாரனைக்கு உத்தரவிடப்பட்டிருந்தாலும், உண்மை வெளிவருமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் இந்த ஊழல் வலையில் சம்பந்தப்பட்டிருப்பது, உயர் அரசியல்வாதிகள், உயர் அதிகார வர்க்கம் மற்றும் சர்வதேச தரகர்கள்.


ஜெய்ஹிந்த்! 

Sunday, March 18, 2012

தமிளன் டென்டுல்கர் வாள்க!!தமிழக விந்தை அரசியல்வாதிகளுக்கு, பிறந்த நாள் வந்து விட்டால், தினசரிப் பத்திரிக்கைகளுக்கு கொண்டாட்டம் தான். உடனடியாக விளம்பரங்களைச் சேகரித்து,  ஒரு கால் கிலோவிற்கு, ‘பிறந்த நாள் வாழ்த்து சப்ளிமென்டரி போட்டுவிடுவார்கள்.

ஒரே மாதிரியான ஃபோட்டோவை, பக்கம் பக்கமாகப் போட்டு, ‘வாழ்த்த வயதில்லை-வணங்குகிறோம் என்பது மாதிரியான “ஸ்டேண்டேர்டு வசங்களோடு, “தமிழே, “தமிழின் எதிர்காலமே, “தமிழ் நாடே, “தமிழ் நாட்டின் எதிர்காலமே,  “சூரியனே” ,  “சந்திரனே”,  “சுக்கிரனே, “இதயமே,  “சுவாசமே, “இதய சுவாசமே, “விழியே”,  ‘நுரையீரலே, “கிட்னியே”  என  சப்ளிமென்டரி முழுதும், துதித்து மகிழ்வார்கள்.

எப்படி, இவர்களால் அர்த்தமே இல்லாமல், ‘இதயமே, ‘அதுவே..., இதுவே.. என வெட்டியாக துதிபாட முடிகிறது எனப் புரியவில்லை.

‘சுயமரியாதை, தன்மானம்’  போன்ற முழக்கங்கள் எல்லாம், இப்படித்தான் தமிழகத்தில் பொருள்கொள்ளப் படுகிறதா அல்லது இது நமக்கே உண்டான தனிப்பட்ட கலாச்சாரமா புரியவில்லை!

பத்திரிக்கைகள் இது போன்ற கூத்துக்களை, தனி ‘சப்ளிமென்டரியாகப் போடுவதில் ஒரு சௌகரியம் என்ன வென்றால், இதை அப்படியே கொத்தாக எடுத்து பழைய “பேப்பர் பண்டலோடு சேர்த்து விடலாம்.

இந்த சகிக்கவொண்ணா விளம்பரங்களை, தன்மான, இனமானத் தலைவர்கள் யாராவது பார்க்கிறார்களா? பார்த்து ரசிக்கிறார்கள? அல்லது எரிச்சலுறுகிறார்களா? அல்லது இன்னென்னார் விளம்பரித்திருக்கிறார்கள், இவர் விளம்பரிக்கவில்லை என ‘அட்டெண்டன்ஸ் எடுப்பார்களா?  அவ்விதம் விளம்பரம் செய்யாதவர்கள் மீது ‘அன்புக்கணை ஏதும் பாயுமா? 

– இவை யாவும் நம் போன்ற சாமாணியர்களுக்கு விளங்காது.

இந்த உற்சவத்தில், லேட்டஸ்ட் வரவாக, ‘சச்சினின் 100 வது சதமும் சேர்ந்து விட்ட வினோதத்தினையும் காணும் பேறு கிடைத்த்து! 10டூல்கரின், நூறாவது சதத்தினைப் வாழ்த்தி, “தி ஹிண்டு”  18-03-2012 ஞாயிறு) பாண்டி எடிஷனில், ஒரு முழுப்பக்கத்திற்கு, கம்பனிகள் விளம்பரித்திருக்கிறார்கள்!

ம்ம்ம்ம்? புதுச்சால்ல இருக்கு?

சரி.. வாழ்த்தின கையோடு, விளம்பரதார்ர்கள் நம்மையெ என்னவெல்லாம் செய்யச் சொல்லி விளம்பரிக்கிறார்கள்?

      (1)   வீட்டிற்கு ஒரு இன்வெர்ட்டர் வாங்கலாம் (2)  ஏ.ஸி மிஷின்கள் வாங்கலாம் (3) ஒரு வீடு கட்டிக் கொள்ளலாம் (4) கண் கண்ணாடி மாற்றிக் கொள்ளலாம் (5) புது சொக்காய் வாங்கிக் கொள்ளலாம் (6) கேமிராவோ,வாட்சோ,புது மொபைலோ, ஏன் ஒரு சௌன்ட் சிஸ்டமோ கூட வாங்கிக் கொள்ளலாம். (7) சச்சினின் 100 வது சதத்தினை ஒட்டி, ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப் கூட செய்து கொள்ளலாம்.

......இது அப்படி இருக்கு?                        

   

Saturday, March 17, 2012

நூற்றுக்கு நூறு...வாழ்த்து!


கடந்த சில மாதங்களாகவே, சச்சின் டென்டுல்கரின் 100 வது சதத்தினை முழு இந்தியாவும் எதிர்பார்த்திருந்தது. இந்த எதிர்பார்ப்பே, அவருக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். இதன் காரணமாகவே, கடந்த ஒரு ஆண்டாக, அவரது கிரிக்கெட் காரியரில், ஒருவிதமான வறட்சி தென்பட்டது.
அவர் கடைசியாக அடித்த சதம், தென் ஆப்பரிக்காவுக்கெதிராக, சென்ற  ஆண்டு , மார்ச் 12 அன்று அடித்தது. அந்த மாட்சிலும் நாம் தோற்றுப் போனோம். “நூறு சதங்கள் என்பது சாதாரணமான விஷயம் இல்லை. சச்சின் போன்ற மேதைகளுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.
கிரிக்கெட்டின் தன்மையும், வேகமும் மாறிக்கொண்டே இருக்கும் இன்றைய சூழ்நிலையில், வீரர்கள் மத்தியில் நிலவும் கடுமையான போட்டிச் சூழ்நிலையில், இனி யாராவது நூறு சதங்களை அடிக்குமளவிற்கு ஃபீல்டில் "நிலைத்து" நிற்க முடியமா, சச்சினின் சாதனை முறியடிக்கப்படுமா என்பது சந்தேகம் தான்.
இவருக்கே 99-ஆவது சதத்திலிருந்து நூறை அடைவதற்கு ஒரு ஆண்டும், நான்கு தினங்களும் பிடித்தன. அதுவரைக்கும் நாமும் பொறுமையாக்க் காத்துக் கொண்டிருந்தோம்.  இந்த நூறாவது சதம், வங்கதேசத்திற்கு எதிராக இல்லாமல், வலுவான ஆஸ்திரேலியாவுக் கெதிராகவோ, இங்கிலாந்திற் கெதிராகவோ, ஏன் பாகிஸ்தானுக்கெதிராகவோ எடுக்கப்பட்டிருந்தால், நாம் இன்னமும் மகிழலாம்.
என்னவானாலும், “சர்வதே நூறாவது சதம்என்பது ‘ஸ்பெஷல்தானே? இவருக்கு அருகாமையில் இருப்பது 71 சதங்களை அடித்து முடித்திருக்கும் ரிக்கி பாண்டிங் மட்டும் தான்.
உலகில் எந்த ஒரு கிரிக்கட் வீரரும் (பிளேயர் என்பது எப்படி தமிழில் விளையாட்டு “வீரன்என்பது புரியவில்லை) எதிர்கொள்ளாத ‘பிரஷரை சச்சின் எதிர்கொண்டார். ஒட்டு மொத்த இந்தியாவும் அவரது தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டது.
நல்ல வேளையாக, வங்கதேசம் அவரது “பிரஷர் வால்வினைதிறந்து புண்ணியம் கட்டிக் கொண்டது. மார்ச் 16, சரித்திரத்திலும் இடம் பிடித்துக் கொண்டது.
அவர் 80 ரண்களிலும், ஏன் 90 ரண்களுலும் அவுட்டான தருணங்கள் அநேகம். இங்கிலாந்திற்கெதிராக 91 ரண்களிலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 94 ரண்களுலும் சென்ற ஆண்டில் ஆட்ட மிழந்திருக்கிறார். ஏன் சிட்னி டெஸ்டில் கூட 80 ரண்களில் அவுட்டாகி உள்ளார். ஒவ்வொரு முறையும், பிட்சில் பேட் செய்ய இறங்கும் போதும், இந்த முறை நூறாவது சதம் அடிக்க வேண்டும் என நூறு கோடி மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். அனைவரது கனவும் மார்ச் 15 வரை நனவாகமாலே இருந்தது! எனவே இந்த மகத்தான தருணம் சச்சினுக்கானது, அவர் இதை அனுபவிக்கட்டும்!.
அவர் தனது சர்வதேச கிரிக்கட் வாழ்வினைத் துவக்கியது தனது 16-ஆவது வயதில். தற்போது அவருக்கு வயது 38.
டெஸ்ட் பந்தயங்களில் 15,000 ரண்களுக்கு மேலும், லிமிடெட் ஓவர் பந்தயங்களீல் 18,000 ரண்களுக்கு மேலும் சேர்த்த ஒரே பிளேயர் இவர்தான்.
இனி அவர் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், தனது இயல்பான ஆட்டத்தை விளையாடலாம்.  

என்றாலும் எல்லோருடைய மனதில் எழும் கேள்வி அவருக்குத் தெரியாமலா இருக்கும்?

‘எப்பொழுது? என்பதை அவரே தீர்மாணிக்கட்டும்!

ஏனெனில், ‘பக்கத்து பிட்சுக்கு போலிங் செய்த கபில்தேவைப் கண்டு, “உஸ்... அப்பாடா.. ஒரு வழியாகத் தீர்மாணித்தாரா கபில்தேவ்! என்று ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமூச்சு விட்ட கதை, சசசினுக்கும் தெரிந்திருக்கக் கூடும்.

Saturday, March 10, 2012

கூவிக் கூவி.....

‘மால்களும், ‘சூப்பர் மார்க்கட்களும் மலிந்துவிட்ட இந்தத் தினங்களில், தெருவில் பொருட்களை ‘விற்றுக் கொண்டு செல்பவர்களைக் காண்பது அரிதாகித்தான் விட்டது! எனினும் புறநகர்களிலும், சிறு நகர்களிலும் ‘கூவிக் கூவி விற்போர் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி தெருவில் ‘கூவி வியாபாரம் செய்பவர்கள், தங்களுக்கென்று ஒரு தனித்த ‘ஸ்டைலோடு கூவுவார்கள். நாளடைவில், இவர்கள் கூவுவதில் உள்ள ‘வார்த்தைகளை கவனிக்க மறந்து,  அவரது குரலையும், அதன் Modulation-யும் வைத்தே, விற்கப்படும் பொருள் ‘இன்னதுதான் எனத் தீர்மாணித்துவிடுவோம்.

எங்கள் தெருவில் ஒரு பெண்மணி, காலை வேளைகளில், “அழ கீழழழழழழழழ, மொழ கீழழழழழழழழ என நீட்டி முழக்கும் ஒலியினைக் கொண்டே, கீரைக்காரி ‘அரைக்கீரையும், முளைக்கீரையும் விற்றுக் கொண்டிருக்கிறார் எனப் புரிந்து கொள்வோம். இவர் மார்க்கெட்டில் மூண்று கட்டு கீரை வாங்கி, அதை ஐந்து கட்டாக, மறுகட்டு கட்டும் ஜாலம் அறிந்தவர். இவருக்கு, வாடிக்கையாக வாங்கினாலும் கூட,  எட்டு ரூபாய் கீரைக் கட்டை, 12 ரூபாய் என்று சொல்லி, பின் குறைத்துக் கொடுத்தால்தான் திருப்தி.

இந்த ‘கூவல்வியாபாரத்தில், ஆகத் தொன்மையானது ‘கூடே, மொறே, மொழேஏஏ கட்மே தான். இந்தக் கூவலை 1960களிலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதாவது “கூடை, முறம், மெழுகுவது, கட்டுவது என்று பொருள் கொள்ள வேண்டும்.

தற்காலப் பெண்களுக்கு, ‘புடைத்தல், ‘நேம்புதல் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில், அதற்குத் தேவையும் இல்லாத சூழலில், இந்த காரியங்களுக்கு அடிப்படையான முறத்திற்கும், கூடைக்கும் என்ன தேவை வந்து விட்டது? நேம்புதல் என்றால் முறத்தினை லாவகமாக, அசைத்து, அசைத்து, முழு அரிசியினையும், நொய்யினையும், கற்களையும் தனித்தனியாகப் பரித்தெடுக்கும் கலை.  எனது பாட்டி ‘நேம்புவதில் தன்னை அடித்துக் கொள்ள ‘ஜில்லாவிலேயே ஆள் இல்லை என்பார்.

இந்த கூடை, முறம் கட்டும் தொழில் செய்தவர்களெல்லாம் என்ன ஆகியிருப்பார்கள்? வேறு தொழில் ஏதும் கற்றுக் கொண்டார்களா? இல்லை கால மாற்றத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஏதேனும் ‘கோவிலில் அலைகிறார்களா? தெரியவில்லை!

1970 களின் ஆரம்பத்தில், நான் குடியிருந்தது, ஒரு ஒண்டுக் குடித்தனத்தில்! எனது ‘பொந்திலிருந்து வாசலுக்கு வருவது என்பது ‘ஐந்து நிமிடப் பயணம். அதுவும் வீட்டுக்குரியவர் மனது வைத்தால்தான்!

அப்போது காலை ஆறு மணி வாக்கில், ஒரு குரல் தெருவில் ஒலிக்கும்!
“அல்லாரது பல்லையும் உடைக்கரதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்..
ரெகுலராகக் கேட்கும்.

யார் இவர்?  இவர் எதற்காக ‘காலங்காத்தால எல்லோருடைய பல்லையும் உடைத்தாக வேண்டும்? அதுவும் தெருத்தெருவாய் கூவிக் கொண்டு?  இந்த கேள்வி, எனக்குத் தீராத புதிராகவே இருந்தது. நான் ஏழு கதவுகள், இரண்டு முற்றங்களைத்தாண்டி, வாசலுக்கு வருவதற்குள், அவர் தெருவைக் கடந்து போயிருப்பார்.

ஒரு நாள், வீட்டுக்குரியவர் ‘சொர்க்க வாசலை விரைவாகத் திறந்து வைத்துவிட, இந்தப் புதிருக்கான விடையை கண்டுபிடிப்பதற்காக, வாசலில் வந்து நின்று கொண்டேன்.  தொலை தூரத்தில் குரல் கேட்கிறது. “அல்லாரது பல்லையும் உடைக்கரதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்..

இதோ, இன்னும் சற்று நேரத்தில், புதிர் அவிழப்போகிறது.

இப்போது குரல் பக்கத்து தெருவரைக்கும் வந்துவிட்டது!  பொறு...பொறு இன்னும் சில நிமிஷங்கள் தான். டென்ஷனும், ஆவலும் ‘சினிமா கிளைமாக்ஸ் சமயம் போல எகிறியது.

இதோ இந்த தெருமுனைக்கே வந்து விட்டார்.

அது ‘அல்மோனியப் பாத்திரம் மாத்தரதேய் அதாவது பழைய அலுமினியப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, புதிய பாத்திரங்களைக் கொடுக்கும் வியாபாரி.

‘அடப் போங்கப்பா...சிரித்துக் கொண்டே, உள்ளே வந்து விட்டேன்.

தற்போது கூட, ஒருவர் காலையில் நான் இருக்கும் தெருவில், விற்றுக்கொண்டு போகிறார்.. ‘இஇஇஇஇட்ய்பம்’.  இவர் ‘இடியாப்பம் விற்றுக் கொண்டிருக்கிறார்.

சில சமயம் ‘ஆந்திரப் பெண்கள், தலையில் பாரத்தினையும், முதுகில் குழந்தையினையும் சுமந்து கொண்டு விற்றுக் கொண்டு வருவார்கள்.

‘துஊஊஊஊஊஊப்பம், ஒட்கூஊஊஊஊஊஊஊஊஊச்சி’.

இது “துடைப்பம் (விளக்குமாறு) மற்றும் ஒட்டடைக் குச்சி

இது போல நிறைய ஒலிகள், தங்களது தினப்பாட்டிற்காக ‘ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களது ‘ராகத்தினை வைத்துக்கொண்டே இவர்களது பொருட்கள் அடையாளம் காணப்படுகின்றன.


ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
–இது உப்பு விற்பவர்.


கோஓஓஓஓஓஓஓஓஓ மாஆஆஆஆஆஅய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
-இது கோலமாவு விற்பவர்.

விற்பவர்கள் தவிர, சில தொழில்காரர்கள் கூட, ‘கூவிக்கொண்டு வருவார்கள். “ஷோபாஆஆஆஆஆஆஆஆஆ ழிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்   

-இதை “சோஃபா ரிப்பேர்” எனப் பொருள் கொள்ள வேண்டும்.

 நோத்போஓஓஓஓஓஓஓஓஓஓஓ,   பப போஓஓஓஓஓஓஓஓஓஓ, ‘ப பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...........

-இது பழைய நோட்டுப் புத்தகம், பழைய புத்தகம், பழைய பேப்பர் வாங்குபவர்.

சில சமயம், சென்னை “மீன்பாடி வண்டி போல ஒரு வாகம், தனது முதுகில் “2000 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் ஒன்றை ஏற்றிக் கொண்டு, அந்த தெருவே ‘கிடுகிடுக்க’,  அந்த வண்டியில் பொருத்தப் பட்டிருக்கும் ‘மோட்டார் பிரளய சப்தம் போல ஒலிக்க,  அந்த வண்டியின் “நாலா புறமும் நாலு பேர்கள் தொற்றிக் கொண்டு, களேபரமாக, ‘கோஷ்டியாக, கூவிக் கொண்டு வர்வார்கள்.

சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்... டேஏஏஏஏஏஏஏஏய், டூஊஊஊஊய், டக்கர...டக்காரா, குர்ர்ர்ர்ர்ர்ர், தூஊஊஊம்

என்ன இது?

அசுரவேகத்தில் வந்து மறையும் இந்த வண்டி, ‘செப்டிக் டேங்க் கிளீன் செய்யும் வண்டி. “செப்டிக் டேங்க் கிளீண் செய்யவேண்டுமாஎனக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

வேறு சில விற்பனையாளர்கள், இப்படி ‘தொண்டை கிழிய கத்துவதைத் தவிர்த்து வேறு சில தொழில் நுட்பங்களைக் கையாளுகின்றனர்.

‘கண..கண..கண வென, சிறிய மணியினை ஒலிக்கச் செய்தால், அவர் ‘சோன்பப்டி விற்கிறார்.

இரவு வேளைகளில், இதே ‘கண..கண..கணஒலி பெரிய மணியிலிருந்து வந்தால், அது "குல்ஃபி" அல்ல்லது ஐஸ்கிரீம்.  

‘ம்ம்ம்ம்.....கூஊஊஊஊம்,  ம்ம்ம்......கூஊஊஊஊஊஊஊஊம் 
என ஆட்டோ ஹாரன் மாதிரி மாறி-மாறி ஒலித்தால் அவர் கேக் விற்பனையாளர்.

நேரமும், பொறுமையும் இருந்தால் ரசிப்பதற்கு உலகில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

Thursday, March 8, 2012

ஆனந்தவிகடன் - என் விகடனில் எனது வலைப்பூ

14/03/2012 அன்று வெளியான, ஆனந்த விகடன் இதழ் (என் விகடன் இணைப்பு ) 'வலையோசை' பகுதியில் இந்த வார வலைபூ அறிமுகத்தில் (வடக்கு மண்டலம்) 


எனது orbekv.blogspot.in வலைபூ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  
எனது நெடுநாளைய சினேகிதன் 'ஆனந்தவிகடனில்'  எனது வலைபூ அறிமுகவாவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது!


ஆனந்த விகடனுக்கும், தொடர்ந்து படித்துவரும் எனது அனைத்து நண்ப, நண்பிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.


அன்புடன் 
R. பலராமன். 
Tuesday, March 6, 2012

பெயரில்லாப் பெண்

“இப்ப நீ அழுகைய,  நிறுத்தப் போறியா இல்லியா?

“ஷாலினியின்அழுகை சப்தத்தையும் மீறி கத்தினார்  ராகவன்.

ம்ம்ம்ம்ம்..!. இவரது மிரட்டலுக்கெல்லாம்,  ஷாலு அழுகையை நிறுத்துவதாகக் கானோம்! மாறாக  ராகவனின் கத்தல் அவளை இன்னும் கொஞ்சம், கூடுதல் குரலெடுத்து அழ வைத்தது.

“ஓங்கி,முதுகில் ஒண்ணு வைக்கலாமா?” என எரிச்சலும் ஆத்திரமும் வந்தது ராகவனுக்கு! 

‘கூடாது; குழந்தைகளைச் சமாதனப்படுத்த, கோபப்பட்டால் ஆகாது 'ஹிந்து'வில் என்றோ படித்த ஞாபகம் வந்தது!  சமாதனப் படுத்தும் நட வடிக்கையாக பிரிட்ஜைத் திறந்து, ஏதேனும் ‘ஸ்வீட்  அல்லது ‘சாக்லட் இருக்கிறதா எனத் தேடினார். எது, எங்கே இருக்கிறது எனப் பிடிபட வில்லை!  வெஜிடபிள் டிரே முதல் தேட ஆரம் பித்தார். கடைசியில் ‘ஃப்ரீசருக்குள் இருந்த்து, "பைவ் ஸ்டார்" சாக்லட்கள். இந்தா, இதைச் சாப்பிடு என்றார். அதைப் பிடிங்கி, தூர எரிந்தாள் ஷாலு. 


இந்த ‘பிடாரியை எப்படி சமாதானப் படுத்துவது எனப் புரியாமல்,  கையாலா காதவன் ஆத்திரப்படுவது போல, ஷாலுவை நோக்கி கையை ஓங்கினார்.  இது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. 

ராகவனுக்கு,  நாற்பதைத் தொடும் வயது. லேட் கல்யாணம்; லேட் குழந்தை. ஷாலு மூன்றாவது படிக்கிறாள். மூத்தவன் ஷரத். ஆறாவது படிக்கிறான்.  தற்சமயம் ஷாலு அழுதுகொண்டிருக்க, ஷரத் டியூஷன் போயிருக்கிறான்.

“வா.. நாம ‘போகோ பாக்கலாம். ஷாலுவை அழைத்தான்.

சனி, ஞாயிறு தவிர, மற்ற தினங்களில் 'கார்டூன் சானல்' பார்க்கக் கூடாது என, தடை விதித்திருந்தான், ராகவன். இப்போது, அதை அவனே மீற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.   அப்போது போகோவில் ‘மிஸ்டர் பீன் ஓடிக்கொண்டிருந்தார்.   'அவர்'  ஷாலுவின் அழுகை டெஸிபலை கொஞ்சம், பாதுகாப்பான நிலைக்கு, கீழிறங்கி கொண்டு வந்தார். 

அப்போது, வாசல் கேட்டை, யாரோ உடைக்கும் சப்தம் கேட்க, பதறிப் போய் வாசலுக்கு ஓடினார்.  மிரளும்படியாக  ஒன்றும் இல்லை! டியூஷனுக்குப் போய்த் திரும்பும், அவரது மூத்த புதல்வன், தனது சைக்கிளால் மோதி, கேட்டைத் திறந்து கொண்டிருந்தான்!

“இறங்கி கேட்டைத் திறக்கக் கூடாது? எதுக்காக இப்படி கதைவை உடைக்கிறே?

இது, வேறு எவரையோ பார்த்து சொல்லப் பட்டது போல, அவரைக் கண்டு கொள்ளாமல் உள் நுழைந்தான் ஷரத்.

“ஏண்டா, நான் ஒருத்தன் சொல்றேன்ல... காதுல விழுல?”

“அப்பா, பசிக்கிது, டிபன் கொண்டா..!”   உத்தரவிட்டான் ஷரத்

கழற்றிய ஷூக்களை, மூலைக்கொன்றாய் வீசியெறிந்தான். டிரஸ்ஸைக் கழட்டி, டைனிங் டேபிளின் மேலே தூக்கிப்போட்டான்

“போடா.., போய் கைகால் கழுவிக் கொண்டு வா

அவரது, இந்த கோரிக்கையும் உதாசீனப்படுத்தப்பட்டது.


‘அப்பா... பசிக்கிதுங்கிறேன்ல...

ஃபிரிட்ஜைத் திறந்து, தோசை மாவை எடுத்தார்.  அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டார். கொஞ்சம் பொறுத்து,  கல் காய்ந்துவிட்டதா  என சோதிக்க நினைத்து, அடுத்த கணம், ‘ஐயோ.. என்று அலறியவாறு கைவிரல் களை உதறிக் கொண்டார்.


‘அட. சட்,  ஒரு மக்கில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு, விரல் எரிச்சல் அடங்க, அதில் வலதுகையை விட்டுக் கொண்டார். இடது கையால் தோசை வார்க்க முயன்று தோற்று, பின், வலது கையாலேயே தோசை வார்த்தார்.

அது தோசை வடிவில் வராமல், இட்லி மாதிரியோ, உப்புமா மாதிரியோ 
வந்தது.

“அப்பா, என்ன இது..?

"முதல் தோசை அப்படித்தாண்டா வரும். சாப்பிட்டு விடு. அடுத்த தோசை நன்றாக வரும்."

“அப்ப நான் அடுத்த தோசையையே சாப்பிடுகிறேன். நீ வேணுமானா இதைச் சாப்பிடு!

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி போலத்தான் ஆயிற்று, அடுத்த 
தோசை வாக்குறுதியும்.

தட்டு நிறைய ‘கும்பலாக’, தோசைக் குப்பை நிறைந்துவிட்டதி தவிர, வட்ட 
வடிவில் ஒன்று கூட தேறவில்லை.

கொஞ்சம் இரு, இதோ வர்ரேன்... சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே ஓடினார்.  ‘ஒரு முழ நீளத்திற்கு நூடுல்ஸ் பாக்கட் வாங்கிக் கொண்டு 
திரும்பினார்.

“நூடுல்ஸை, பச்சைத் தண்ணீரிலேயே  போடனுமா? இல்லை, தண்ணீர் கொதிச்சவுடன் போடனுமாசந்தேகம் வந்துவிட்டது. விளம்பரத்தை மனதில் ஓடவிட்டுப் பார்த்தார். ம்ம்ம்.. ஒன்றும் பிடிபட வில்லை.

சரி, இதை 'எப்படித் தயாரிப்பது' என அச்சடித்து வைத்திருப்பானே, அதைப் படிக்கலாம் என்றால், “கிராதகன் இவ்வளவு பொடியாகவா, பிரின்ட் செய்திருப்பான்? சலித்துக் கொண்டு, மூக்குக் கண்ணாடியைத் தேடி அணிந்து 
கொண்டு படித்து ........

‘அப்பா, ஒரு டூ ஹண்டரட் ருபீஸ் குடுத்தால், நான் போய், கார்னர் கடையில் பீட்ஸா வாங்கிட்டு வர்ரேன், இல்லாட்டி, நீயே  ஃபோனில் ஆர்டர் பண்ணு.

ராகவனுக்கு, 'நூடுல்ஸ்' கௌரவப் பிரச்சினையாகிவிட்டது.

“கொஞ்சம் இருடா, ரெண்டு நிமிஷத்தில் நூடுல்ஸ் ரெடியாயிடும்.

தயாரித்த நூடுல்ஸை, பிளேட்டில் வைத்து, மகனிடம் நீட்டினார். 

அடுத்த நொடி, “அப்பா என்ன இது, நூடுல்ஸ், அசிங்கமா? மசாலா பொடி போட்டியா இல்லியா?

“மசாலா பொடி எந்த டப்பியில் இருக்குன்னு தெரியலயேடா? “

தட்டு நிறைய வைத்திருந்த நூடுல்ஸை எறிந்துவிட்டு, ஒரு பிஸ்கட் 
பாக்கட்டை எடுத்துக் கொண்டு தனது  ரூமிற்குப் போய்விட்டான் ஷரத்.

அதற்குள், சற்று நிறுத்தியிருந்த அழுகையை, மிகுந்த உத்வேகத்துடன் 
ஆரம்பித்துவிட்டாள் ஷாலு!

அவளின் அழுகைக்கு இப்போது காரணம் புரிந்து விட்டது! இந்த முறை 
ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை ராகவன்.  போனில் பீட்ஸாவுக்கு ஆர்டர் 
செய்து விட்டார்.

பீட்ஸா வரும் வரை? அவள் அழுது கொண்டிருக்கட்டும் அல்லது ‘கிரீம்’ பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கட்டும்.

‘பூ வச்சுருக்கேன், சாரே.... குரல் கேட்டு வாசலுக்கு வந்தார். 


பூக்காரி!

‘பூ வேணாம்..

‘அட.., இது வாடிக்கையா கொடுக்கும்  பூ... வெள்ளிக்கெளம அதுவுமா  
வேணாங்குற?

இந்த உலகில் ஒருவரும் தன்னை மதிக்க்க் கூடாது எனத் தீர்மாணித்திருக் கிறார்களா? பூக்காரி, அவள் பாட்டுக்கு பூப் பொட்டலத்தை வைத்துவிட்டுப் 
போய்விட்டாள்.


அதை எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது, சைக்கிள் பெல் கேட்டது.


பால்காரர்!


“சார், அரையா ஒண்ணா?பால்காரன் தான்.

‘எதுக்கு வம்பு?,  ‘ஒண்ணு என்றார்.

“போய் பெரிய பாத்திரம் எடுத்து வா, ஒரு லிட்டருக்கு சின்னதா தூக்கிட்டு வர்ரியே?

“ஓ.. ஒரு லிட்டர் இது கொள்ளாதா?

நடுவில் ஃபோன். 

அவரது தம்பிதான். “அண்ணா, ஞாயித்துக் கிழம, குலதெய்வம் கோவிலுக்குப் போவலாம்னு இருக்கேன். அபிஷேகத்துக்கு என்னென்ன சாமான் வாங்க னும்? உனக்கு தெரியவில்லையென்றால், அண்ணிய கேட்டுச் சொல்லு

"ஒரு பய என்னை மதிக்க மாட்டானா?"

“எல்லாம், எனக்கும்  தெரியும்! ஒரு அரைமணி நேரம் கழித்து  ஃபோன் 
பண்ணு, இப்ப நான் பசங்களுக்கு டிபன் செஞ்சுக்கிட்டிருக்கேன்

“சரி... சரி , நான் அண்ணிகிட்ட மொபைல்ல பேசிக்கிறேன் 

பொறுமையிழ்ந்த ராகவன், வாசல் பக்கம் எட்டிப் பார்த்தார். தூரத்தில் வரும் ‘மெரூன் நிற சேலையை கண்டு கொண்டார்.

அவசர அவசரமாக,  பையன் வீசியெறிந்த ஷூக்களை ஓரமாக வைத்தார். இறைந்து கிடந்த துணிகளை, டைனிங் டேபிளுக்கடியில்  பதுக்கினார். 
சமையல் அறையினுள் புகுந்து, குவித்து வைத்திருக்கும் தோசை விள்ளல் களை குப்பைக் கூடையில் கொட்டி, மூடினார்.

அதற்கும் ‘மெரூன் நிற சேலை வீட்டிற்குள் வந்துவிட்டது.

இப்போதெல்லாம், குழந்தைகளுக்கு ‘மோப்ப சக்தி வந்துவிட்டதா என்ன? 
பெட் ரூமில் ‘போகோவில் முழுகியிருந்த ஷாலு, ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டாள். 


"மம்மி, என்னை விட்டுட்டு எங்கே போனே?" அழ ஆரம்பித்தாள்.


ஆனால் இந்த அழுகை முன்பு அழுதது  போல, ஆங்காரமாக இல்லாமல், 
இரைஞ்சும் அழுகையாய் இருந்தது.

அவளைத் அப்படியே இடுப்பில் தூக்கிக் கொண்ட அவள், என்ன பண்ணுது எண்ணோட ஷரத் குட்டி? கொஞ்சிய வண்ணம் அவனைத்தேடி, குழந்தைகள் 
ரூமிற்குள் சென்றாள். 


அங்கு ஷரத் ‘தூங்குவதுபோல படுத்துக் கொண்டிருந்தான்.

‘சரத்துக்கு கோவமா?  கண்ணுகுட்டி  எண்ண சாப்பிட்டுது?அவன் 
தலையைக் கோதினாள்!

இடையில் புகுந்த ராகவன், ‘பசங்களுக்கு தோசை செய்து போட்டுட்டேன். “ 
என்றார்.

ம்ம்.. அவளும், ராகவன் பதிலைக் கண்டு கொள்ளவில்லை.

குனிந்து, ஷரத்தை முத்தமிட்ட அவள், “இதோ வரேண்டா செல்லம் என்று கூறிவிட்டு, உடையைக் கூட மாற்றாமல் சமயலறைக்குச் சென்றாள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் இரண்டு பிளேட்களில் சூடாக, மொறு-மொறு வென தங்க நிறத்தில் தோசை, சட்னியிடன் கொண்டு வந்தாள்.

ஷாலுவை மடியில் உட்கார வைத்துக் கொண்டு ஊட்டிவிட்டுக் கொண்டே, ஷரத்திடம், ‘அப்படியே, ஆ.... காமி, அம்மா ஊட்டி விடுவேனாம், நீ சமத்தா 
சாப்டுவியாம்..

“ஒன்னும் வேண்டாம் போ

‘வாடா செல்லம்... அவனையும்  இழுத்து இன்னொரு மடியில் வைத்துக் 
கொண்டு ஊட்டிவிட, இருவரும் மறுப்பின்றி, சாப்பிட்டனர்.

இது என்ன மாயம்?

வாயைத்துடைத்துவிட்டு, “பாத் ருமிற்குப் போய, வாய் கொப்பளித்துவிட்டு தூங்குங்கள்”. 


ஆளுக்கொரு முத்தம் கொடுக்க, "ஓ.கே மம்மி" என்ற குழந்தைகள் , பிரஷ் பண்ணிவிட்டு, அம்மாவுக்கு ‘குட் நைட் சொல்லிவிட்டு தூங்கப் போனார்கள்.

“இப்ப, நீங்க சாப்பிட வாங்க..

“இல்லை, ஒரு சேஞ்சுக்கு பீட்ஸா ஆர்டர் பண்ணிவிட்டேன். நான் அதைப் சாப்பிடுகிறேன்.

‘இதென்ன புதுப் பழக்கம், அதெல்லாம் வேண்டாம், தோசையே சாப்பிடுங்க...

பூனைக்குட்டி போல, அவள் வார்த்துப் போட்டவற்றை சாப்பிட்டு விட்டு படுக்கையறைக்குப் போனார் ராகவன்.

வேலையை முடித்துவிட்டு, உறங்க வந்தாள், அவள்.

இரவில் திடீரென யாரோ தனது கால்களை பிடித்து விடுவதுபோல உணர்ந்த அவள், சட்டென எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

“என்ன பன்றீங்க?

‘ஒன்னுமில்லையே, இன்னிக்கு கல்யாண வீட்டிக்கு போயிருந்தேல்ல, அங்கு உனக்கு வேலை அதிகம் இருந்திருக்கும், அதான் லேசா காலைப் பிடிச்சு விட்டேன்...

"வேலையெல்லாம் அதிகமில்லை, அதுக்காக காலையெல்லாமா பிடிச்சுவிடிவீங்க.. " எனக்கு மகா பாவம் ஆயிடும். பேசாம தூங்குங்க.

அவள் தூங்கி விட்டாள். ஆனால் ராகவன் நெடு நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
=======================================================================================

அது சரி.. அந்த பெண்ணின் பெயரை, கடைசிவரை சொல்லவே இல்லையே 
என்கிறீர்களா? இந்தியாவில் உங்களுக்குத் தெரிந்த எந்தப் பெண்ணின் 
பெயரையும் வைத்துக் கொள்ளுங்கள்; எல்லாப் பெயரும் பொருந்தும்.

08/03/2012 அன்று  உலக மகளிர் தினம்.  அனைத்துப் பெண்களுக்கும் எனது மகளிர்  தின வாழ்த்துக்கள். இந்தியாவின் ஜீவன் உங்களால் தான், இன்னமும் கொஞ்சமாவது நீடித்துக் கொண்டுள்ளது! 

=======================================================================================Sunday, March 4, 2012

பிரதமர் வாய் திறந்து விட்டார்!


தனது "வழக்கமான மௌனகுரு"இயல்புக்கு மாறாக, நமது பிரதமர், கூடங்குளம் அணுமின் திட்டத்தினை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தி 
வரும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பின்னால் , "சில வெளி நாட்டு
நிறுவனங்கள் இருக்கின்றன" என்று சொல்லியிருக்கிறார்.இதற்கு ஆதாரமாக, அவர் "எதையும் கொடுக்கவில்லை" என்றாலும், தனது வார்த்தைகளில் ‘உண்மையிருக்கிறது என்று உறுதிப் பட்டாலொழிய அம்மாதிரியான வார்த்தைப் பிரயோகங்களை அவர் எப்போதும் செய்வதில்லை.

1970-80 களில்,  நமது அரசியல் வாதிகள், தங்களது தீர்க்கவியலாத உள் நாட்டு பிரச்சினைகளுக்கெல்லாம் ‘அன்னிய சக்திகளை காரணமாகக் காட்டும் வியாதியைக் கொண்டிருந்தனர். ஆனால் இம்முறை, பிரதமரின் 
குற்றச்சாட்டை அவ்விதம் எடுத்துக் கொள்ள முடியாது.

ஏனெனில், நமது பிரதமரின் "வெளிநாட்டு சார்பு" என்னவென்று அனைவருக்கும் தெரியும். அவர் மேலை நாட்டு பொருளாதாரத்தையும் அரசியலையும் நம்பும் ஆசாமி. அலுவாலியாவை அருகில் வைத்திருப்பவர். பல, 'பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு' பணியாற்றியவர்.

இதனால்தான், இடது சாரிகளால்,  பிரதமர், "மேல் நாட்டு அடிவருடி" என்றும், 'தாராளமய,உலகமய கொள்கைகளுக்கு' உடன்படுபவர் என்று சாடப்படுகிறார்.  அத்தகைய மனிதரே தைரியமாக, கூ.அ.மி. திட்ட எதிரிப்பாளர்களுக்கு, 'வெளி நாடு உதவி இருக்கிறது' எனச் சொல்கிறார் என்றால், இது வெற்று அரசியல் கூச்சலாக இருக்க முடியாது. உறுதியான சான்றுகள் இருக்கும்.

14000 கோடிகளைக் கொட்டி, 99 சதமான வேலைகள் முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இந்த கூ.அ.மி. திட்ட எதிர்ப்பு போராட்டம், இத்தனை தீவீரமாக ஆரம்பித்துள்ளது, எவரையும் சந்தேகிக்க வைக்கிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், பலனடையப் போவது, தேசம் தான், காங்கிரஸ் அல்ல! எனவேதான் ‘வெளி நாட்டு சதி உண்மையாக இருக்கும் என நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.

ஏனெனில் பிரதமர், கூ.அ.மி. திட்ட எதிர்ப்பாளர்களின் கோரிக்கையான, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இன்னும் சொல்லப் போனால், கூடங்குளம் பாதுகாப்பானதா என்பதை கண்டுபிடிக்க, நேர்மையாக,  பல கமிட்டிகள் போட்டு, உறுதி செய்து கொண்டுள்ளார். நாட்டு மக்கள் பெரிதும் மதிக்கும், முன்னாள் ஜனாதிபதி 'திரு கலாம்' அவர்களைக் கூட விட்டு, ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறார். இவர்கள் எவரும் சாதாரணர்கள் அல்ல. விஞ்ஞானிகள். நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறை  கொண்டவர்கள். அவர்கள் எவரும் கூ.அ.மி. திட்டம் பாதுகாப்பற்றது என்று சொல்ல வில்லை! மாறாக 'உலகிலேயே பாதுகாப்பான அணு உலைகளில் ஒன்று' என்றுதான் சான்றுரைத்துள்ளனர்.

இதனால்தான், நிபுணர்கள், மற்றும் தேசத்தின் மீது அக்கறை கொண்டோர்  சொல்வது எதையும் கேட்க மாட்டேன் அடம் பிடிக்கும் எதிர்ப்புக் கும்பல் மீது சந்தேகம் வருகிறது. 


எதிர்ப்பு கும்பல், திரு.கலாமையே சந்தேகிக்கின்றனர் என்றால் பின் யாரைத்தான் நம்புவார்கள்? கூ.அ.மி. திட்ட எதிர்ப்பாளர்களின் ஒரே நோக்கம், திட்டத்தை மூடிவிட வேண்டும் என்பது தானே தவிர, 'உலை பாதுகாப்பானதா' என்பதை உறுதி செய்வதிலோ, மக்களின் அச்சத்தை போக்குவதிலோ இல்லை. மாறாக இந்த கும்பல், ‘அணுமின்சாரத்தை, ‘அணுகுண்டோடு’, வேண்டுமென்றே இணைத்துப் பேசி, மக்களைக் கலவரப்படுத்துகின்றனர்.

சரி, இந்த வெளிநாட்டு சக்திகளோடு ‘கை கோர்த்துக் கொண்டு இந்தியாவின் எதிர்காலத்திற்கு வேட்டு வைக்கும் இந்த அணு உலை எதிர்ப்பாளர்கள், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு இன்னும் அதிகமாகத் தேவைப்படும், 4,00,000 – 6,00,000 மெகாவாட் மின்சாரத்தை, எவ்விதம் உற்பத்தி செய்ய முடியும் என்பதை விளக்குவார்களா? அணல் மின் நிலையங்களைக் கூட எதிர்ப்பவர்கள் இருக்கிறார்களே? அது சுற்றுச் சூழலைப் பாதிக்கிறது என்கிறார்களே? இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது இந்த கும்பல்?

‘மேதா பட்கர் போன்ற மேதாவிகள்(!), புணல் மின்சாரத்தைக் கூட வேண்டாம் என்கின்றனர். ஆக, அணல் மின்சாரமும் கூடாது! புணல் மின்சாரமும் கூடாது! அணு மின்சாரமும் கூடாது! பின், நமது நாட்டின் மின் தேவைக்கு என்னதான் வழி?

உண்மை என்னவென்றால், இந்த ‘கும்பலால் தூண்டிவிடப்படும் எதிர்ப்பாளர்களுக்கு, விஞ்ஞானமும்-உண்மையும் தெரியவில்லை (அ) தெரியாதது போல நடிக்கிறார்கள் என்பது தான்.

'காற்று, கடலலை, பயோகேஸ், சூரிய சக்தி' போன்றவற்றிலிருந்து மின் உற்பத்தி செய்யலாம் என ஆலோசனை கூறும் இக்கும்பல், 'இவை யாவும் நிலையான, நிச்சயமான மின் உற்பத்தியை தரவல்லவை அல்ல' என்ற அடிப்படை “ஞானம்கூட அற்றவர்கள் என நம்புவதற்கில்லை! ஒரு ‘சப்போர்ட்டுக்கு வைத்துக் கொள்ளலாமே தவிர, முழுவதும் நம்பிக்கைக்கு உரியவை அல்ல! நிலக்கரி, வற்றாத ஜீவ நதி போல கிடைத்துக் கொண்டேயிருக்காது. புணல் வழி ஆதாரங்கள், கிட்டத்தட்ட முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு விட்டன.அணுசக்தி மட்டுமே, உறுதியாக,  நீண்ட காலத்திற்கு, சகாய விலையில்,  எரிபொருள்.

எதிர்ப்பு கும்பல் உதாரணம் காட்டும் ‘ஜெர்மனி , மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு. அவர்கள் இனி அணு உலைகள் கட்ட மாட்டோம் என்று சொல்வதில் அர்த்தம் உண்டு. மேலும் அவர்களிடம்  அணு எரிபொருள் இல்லை. இதனால்தான் சீ..சீ இந்த பழம் புளிக்கும் என்கின்றனர்.

இவர்களது ஆசான் அமெரிக்கா, பல அணு மின் உலைகளை கட்டிக் கொண்டுதான் உள்ளது. பிரான்ஸின் மின் தேவையில் 70% அணுமின் சக்தி தான். இந்தியாவைப் போல பன் மடங்கு, மின் பசி கொண்ட சீனா 'என்ன செய்து கொண்டிருக்கிறது' என்று இந்த கும்பல் பதில் சொல்லுமா? உலகில் மிக அதிகமான அணுமின் உலைகளை கட்டிக் கொண்டிருப்பவர்கள் சீனர்கள்தான் என்ற உண்மையினை ஏன் இந்த கும்பல் மறைக்கிறது?(ஏராளமான, புணல்/அணல் மின் நிலையங்களை கையில் வைத்துக் கொண்டும்!) 

எனவே கூ.அ.மி. திட்டத்தை எதிர்க்கும் கும்பலுக்கு தீர்மாணமான பதில் தரவேண்டிய தருணம் வந்து விட்டது. விந்தை என்னவெனில், அதீத மின்வெட்டால், படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில், அதன் முதல்வர், இந்த கும்பலின் பின்னால் இருக்கும், 'எதிர்மறை அரசியலை' தோலுரித்துக் காட்டுவதில், மிகுந்த தயக்கம் காட்டுகிறார்.

மின் வெட்டால், தொழில் துறை நாசமாகிக் கொண்டிருக்கிறது என்பது முதல்வருக்குத் தெரியாதா? அல்லது கூ.அ.மி.திட்ட எதிர்ப்பாளர்களுக்கு 'உதவிக் கொண்டிருக்கிறாரா' என்பதும் புரியவில்லை! இப்பிரச்சினையில் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக ‘குடைச்சலை கொடுக்கலாம் என திட்டமிடுகிறாரோ என்னவோ? 

இத்திட்டத்தினை ஆதரிக்கும் பி.ஜே.பி மற்றும் கம்யூனிஸ்ட்கள், பிரதமரிடம், இந்த கும்பலுக்குப் பின்னால் இருக்கும் அன்னிய சக்திகளுக்கான ‘ஆதாரத்தை வற்புறுத்தி, கேட்டுப் பெறுவதில் என்ன தயக்கம் எனப் புரியவில்லை! இவர்கள் யாவருக்கும் நாடு முக்கியமாகப் படவில்லை. மாறாக அன்றாட ‘அரசியல் விளையாட்டுகள்தான் முக்கியமாகப் படுகிறது.

அரசியல வாதிகள், இந்த  நாட்டில் ‘அரசாங்கம் நடத்துவதை, தங்களது 
சுயநலப் போக்கினால் ‘சிரமமாக்கிக் கொள்கின்றனர்! ஒவ்வொரு எதிர்ப்புக் கும்பலும் ‘அனாயசமாக ஆயிரமாயிரம் பேர்களைத் திரட்ட முடிகிறது. பணம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருப்ப தில்லை! மக்களின் அறியாமை முற்றிலுமாகப் பயன் படுத்திக் கொள்ளப் படுகிறது. பத்திரிகைகளுக்கு, எதேனும் ‘பரபரப்புச் செய்திகள் தான் முக்கியமாகப் படுகிறதே தவிர, நாடு முக்கியமில்லை. எதற்காக மத்திய அரசும், மாநில அரசும் இன்னமும் வேடிக்கை பார்த்துக் கோண்டிருக்கின்றனர் என்பது மர்மமாகவே உள்ளது! 

கூ.அ.மி. உலை எதிர்ப்பாளர்களுக்கு பணம் வெளி நாட்டிலிருந்து வருகிறது எனக் குற்றம் சாட்டும் பிரதமர், தனக்கு இருக்கும் அதிகாரங்களை மறந்துவிட்டாரா அல்லது யவருக்கேனும் பயப்படுகிறாரா .. புரியவில்லை!  இவர் இயங்கவில்லை என்றால், பின் பாகிஸ்தான் நாட்டு பிரதமரா வந்து, இந்த வெட்டி எதிர்ப்பாளர்களை அடக்குவார்கள்?

சகதிவாரித்தூற்றிக் கொள்ளும் ‘அரசியலை விட்டு விட்டு இந்த ஒரு விஷயத்திற்காகவாவது கேடுகெட்ட அரசியல் வாதிகள் ஒன்றினைவார்களா? கூடங்குளம் இயங்குமா? மின் வெட்டு ஒரு இரண்டு மணி நேரமாவது குறையுமா?