Sunday, March 4, 2012

பிரதமர் வாய் திறந்து விட்டார்!


தனது "வழக்கமான மௌனகுரு"இயல்புக்கு மாறாக, நமது பிரதமர், கூடங்குளம் அணுமின் திட்டத்தினை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தி 
வரும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பின்னால் , "சில வெளி நாட்டு
நிறுவனங்கள் இருக்கின்றன" என்று சொல்லியிருக்கிறார்.இதற்கு ஆதாரமாக, அவர் "எதையும் கொடுக்கவில்லை" என்றாலும், தனது வார்த்தைகளில் ‘உண்மையிருக்கிறது என்று உறுதிப் பட்டாலொழிய அம்மாதிரியான வார்த்தைப் பிரயோகங்களை அவர் எப்போதும் செய்வதில்லை.

1970-80 களில்,  நமது அரசியல் வாதிகள், தங்களது தீர்க்கவியலாத உள் நாட்டு பிரச்சினைகளுக்கெல்லாம் ‘அன்னிய சக்திகளை காரணமாகக் காட்டும் வியாதியைக் கொண்டிருந்தனர். ஆனால் இம்முறை, பிரதமரின் 
குற்றச்சாட்டை அவ்விதம் எடுத்துக் கொள்ள முடியாது.

ஏனெனில், நமது பிரதமரின் "வெளிநாட்டு சார்பு" என்னவென்று அனைவருக்கும் தெரியும். அவர் மேலை நாட்டு பொருளாதாரத்தையும் அரசியலையும் நம்பும் ஆசாமி. அலுவாலியாவை அருகில் வைத்திருப்பவர். பல, 'பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு' பணியாற்றியவர்.

இதனால்தான், இடது சாரிகளால்,  பிரதமர், "மேல் நாட்டு அடிவருடி" என்றும், 'தாராளமய,உலகமய கொள்கைகளுக்கு' உடன்படுபவர் என்று சாடப்படுகிறார்.  அத்தகைய மனிதரே தைரியமாக, கூ.அ.மி. திட்ட எதிரிப்பாளர்களுக்கு, 'வெளி நாடு உதவி இருக்கிறது' எனச் சொல்கிறார் என்றால், இது வெற்று அரசியல் கூச்சலாக இருக்க முடியாது. உறுதியான சான்றுகள் இருக்கும்.

14000 கோடிகளைக் கொட்டி, 99 சதமான வேலைகள் முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இந்த கூ.அ.மி. திட்ட எதிர்ப்பு போராட்டம், இத்தனை தீவீரமாக ஆரம்பித்துள்ளது, எவரையும் சந்தேகிக்க வைக்கிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், பலனடையப் போவது, தேசம் தான், காங்கிரஸ் அல்ல! எனவேதான் ‘வெளி நாட்டு சதி உண்மையாக இருக்கும் என நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.

ஏனெனில் பிரதமர், கூ.அ.மி. திட்ட எதிர்ப்பாளர்களின் கோரிக்கையான, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இன்னும் சொல்லப் போனால், கூடங்குளம் பாதுகாப்பானதா என்பதை கண்டுபிடிக்க, நேர்மையாக,  பல கமிட்டிகள் போட்டு, உறுதி செய்து கொண்டுள்ளார். நாட்டு மக்கள் பெரிதும் மதிக்கும், முன்னாள் ஜனாதிபதி 'திரு கலாம்' அவர்களைக் கூட விட்டு, ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறார். இவர்கள் எவரும் சாதாரணர்கள் அல்ல. விஞ்ஞானிகள். நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறை  கொண்டவர்கள். அவர்கள் எவரும் கூ.அ.மி. திட்டம் பாதுகாப்பற்றது என்று சொல்ல வில்லை! மாறாக 'உலகிலேயே பாதுகாப்பான அணு உலைகளில் ஒன்று' என்றுதான் சான்றுரைத்துள்ளனர்.

இதனால்தான், நிபுணர்கள், மற்றும் தேசத்தின் மீது அக்கறை கொண்டோர்  சொல்வது எதையும் கேட்க மாட்டேன் அடம் பிடிக்கும் எதிர்ப்புக் கும்பல் மீது சந்தேகம் வருகிறது. 


எதிர்ப்பு கும்பல், திரு.கலாமையே சந்தேகிக்கின்றனர் என்றால் பின் யாரைத்தான் நம்புவார்கள்? கூ.அ.மி. திட்ட எதிர்ப்பாளர்களின் ஒரே நோக்கம், திட்டத்தை மூடிவிட வேண்டும் என்பது தானே தவிர, 'உலை பாதுகாப்பானதா' என்பதை உறுதி செய்வதிலோ, மக்களின் அச்சத்தை போக்குவதிலோ இல்லை. மாறாக இந்த கும்பல், ‘அணுமின்சாரத்தை, ‘அணுகுண்டோடு’, வேண்டுமென்றே இணைத்துப் பேசி, மக்களைக் கலவரப்படுத்துகின்றனர்.

சரி, இந்த வெளிநாட்டு சக்திகளோடு ‘கை கோர்த்துக் கொண்டு இந்தியாவின் எதிர்காலத்திற்கு வேட்டு வைக்கும் இந்த அணு உலை எதிர்ப்பாளர்கள், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு இன்னும் அதிகமாகத் தேவைப்படும், 4,00,000 – 6,00,000 மெகாவாட் மின்சாரத்தை, எவ்விதம் உற்பத்தி செய்ய முடியும் என்பதை விளக்குவார்களா? அணல் மின் நிலையங்களைக் கூட எதிர்ப்பவர்கள் இருக்கிறார்களே? அது சுற்றுச் சூழலைப் பாதிக்கிறது என்கிறார்களே? இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது இந்த கும்பல்?

‘மேதா பட்கர் போன்ற மேதாவிகள்(!), புணல் மின்சாரத்தைக் கூட வேண்டாம் என்கின்றனர். ஆக, அணல் மின்சாரமும் கூடாது! புணல் மின்சாரமும் கூடாது! அணு மின்சாரமும் கூடாது! பின், நமது நாட்டின் மின் தேவைக்கு என்னதான் வழி?

உண்மை என்னவென்றால், இந்த ‘கும்பலால் தூண்டிவிடப்படும் எதிர்ப்பாளர்களுக்கு, விஞ்ஞானமும்-உண்மையும் தெரியவில்லை (அ) தெரியாதது போல நடிக்கிறார்கள் என்பது தான்.

'காற்று, கடலலை, பயோகேஸ், சூரிய சக்தி' போன்றவற்றிலிருந்து மின் உற்பத்தி செய்யலாம் என ஆலோசனை கூறும் இக்கும்பல், 'இவை யாவும் நிலையான, நிச்சயமான மின் உற்பத்தியை தரவல்லவை அல்ல' என்ற அடிப்படை “ஞானம்கூட அற்றவர்கள் என நம்புவதற்கில்லை! ஒரு ‘சப்போர்ட்டுக்கு வைத்துக் கொள்ளலாமே தவிர, முழுவதும் நம்பிக்கைக்கு உரியவை அல்ல! நிலக்கரி, வற்றாத ஜீவ நதி போல கிடைத்துக் கொண்டேயிருக்காது. புணல் வழி ஆதாரங்கள், கிட்டத்தட்ட முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு விட்டன.அணுசக்தி மட்டுமே, உறுதியாக,  நீண்ட காலத்திற்கு, சகாய விலையில்,  எரிபொருள்.

எதிர்ப்பு கும்பல் உதாரணம் காட்டும் ‘ஜெர்மனி , மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு. அவர்கள் இனி அணு உலைகள் கட்ட மாட்டோம் என்று சொல்வதில் அர்த்தம் உண்டு. மேலும் அவர்களிடம்  அணு எரிபொருள் இல்லை. இதனால்தான் சீ..சீ இந்த பழம் புளிக்கும் என்கின்றனர்.

இவர்களது ஆசான் அமெரிக்கா, பல அணு மின் உலைகளை கட்டிக் கொண்டுதான் உள்ளது. பிரான்ஸின் மின் தேவையில் 70% அணுமின் சக்தி தான். இந்தியாவைப் போல பன் மடங்கு, மின் பசி கொண்ட சீனா 'என்ன செய்து கொண்டிருக்கிறது' என்று இந்த கும்பல் பதில் சொல்லுமா? உலகில் மிக அதிகமான அணுமின் உலைகளை கட்டிக் கொண்டிருப்பவர்கள் சீனர்கள்தான் என்ற உண்மையினை ஏன் இந்த கும்பல் மறைக்கிறது?(ஏராளமான, புணல்/அணல் மின் நிலையங்களை கையில் வைத்துக் கொண்டும்!) 

எனவே கூ.அ.மி. திட்டத்தை எதிர்க்கும் கும்பலுக்கு தீர்மாணமான பதில் தரவேண்டிய தருணம் வந்து விட்டது. விந்தை என்னவெனில், அதீத மின்வெட்டால், படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில், அதன் முதல்வர், இந்த கும்பலின் பின்னால் இருக்கும், 'எதிர்மறை அரசியலை' தோலுரித்துக் காட்டுவதில், மிகுந்த தயக்கம் காட்டுகிறார்.

மின் வெட்டால், தொழில் துறை நாசமாகிக் கொண்டிருக்கிறது என்பது முதல்வருக்குத் தெரியாதா? அல்லது கூ.அ.மி.திட்ட எதிர்ப்பாளர்களுக்கு 'உதவிக் கொண்டிருக்கிறாரா' என்பதும் புரியவில்லை! இப்பிரச்சினையில் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக ‘குடைச்சலை கொடுக்கலாம் என திட்டமிடுகிறாரோ என்னவோ? 

இத்திட்டத்தினை ஆதரிக்கும் பி.ஜே.பி மற்றும் கம்யூனிஸ்ட்கள், பிரதமரிடம், இந்த கும்பலுக்குப் பின்னால் இருக்கும் அன்னிய சக்திகளுக்கான ‘ஆதாரத்தை வற்புறுத்தி, கேட்டுப் பெறுவதில் என்ன தயக்கம் எனப் புரியவில்லை! இவர்கள் யாவருக்கும் நாடு முக்கியமாகப் படவில்லை. மாறாக அன்றாட ‘அரசியல் விளையாட்டுகள்தான் முக்கியமாகப் படுகிறது.

அரசியல வாதிகள், இந்த  நாட்டில் ‘அரசாங்கம் நடத்துவதை, தங்களது 
சுயநலப் போக்கினால் ‘சிரமமாக்கிக் கொள்கின்றனர்! ஒவ்வொரு எதிர்ப்புக் கும்பலும் ‘அனாயசமாக ஆயிரமாயிரம் பேர்களைத் திரட்ட முடிகிறது. பணம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருப்ப தில்லை! மக்களின் அறியாமை முற்றிலுமாகப் பயன் படுத்திக் கொள்ளப் படுகிறது. பத்திரிகைகளுக்கு, எதேனும் ‘பரபரப்புச் செய்திகள் தான் முக்கியமாகப் படுகிறதே தவிர, நாடு முக்கியமில்லை. எதற்காக மத்திய அரசும், மாநில அரசும் இன்னமும் வேடிக்கை பார்த்துக் கோண்டிருக்கின்றனர் என்பது மர்மமாகவே உள்ளது! 

கூ.அ.மி. உலை எதிர்ப்பாளர்களுக்கு பணம் வெளி நாட்டிலிருந்து வருகிறது எனக் குற்றம் சாட்டும் பிரதமர், தனக்கு இருக்கும் அதிகாரங்களை மறந்துவிட்டாரா அல்லது யவருக்கேனும் பயப்படுகிறாரா .. புரியவில்லை!  இவர் இயங்கவில்லை என்றால், பின் பாகிஸ்தான் நாட்டு பிரதமரா வந்து, இந்த வெட்டி எதிர்ப்பாளர்களை அடக்குவார்கள்?

சகதிவாரித்தூற்றிக் கொள்ளும் ‘அரசியலை விட்டு விட்டு இந்த ஒரு விஷயத்திற்காகவாவது கேடுகெட்ட அரசியல் வாதிகள் ஒன்றினைவார்களா? கூடங்குளம் இயங்குமா? மின் வெட்டு ஒரு இரண்டு மணி நேரமாவது குறையுமா?

No comments:

Post a Comment