Saturday, March 10, 2012

கூவிக் கூவி.....

‘மால்களும், ‘சூப்பர் மார்க்கட்களும் மலிந்துவிட்ட இந்தத் தினங்களில், தெருவில் பொருட்களை ‘விற்றுக் கொண்டு செல்பவர்களைக் காண்பது அரிதாகித்தான் விட்டது! எனினும் புறநகர்களிலும், சிறு நகர்களிலும் ‘கூவிக் கூவி விற்போர் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி தெருவில் ‘கூவி வியாபாரம் செய்பவர்கள், தங்களுக்கென்று ஒரு தனித்த ‘ஸ்டைலோடு கூவுவார்கள். நாளடைவில், இவர்கள் கூவுவதில் உள்ள ‘வார்த்தைகளை கவனிக்க மறந்து,  அவரது குரலையும், அதன் Modulation-யும் வைத்தே, விற்கப்படும் பொருள் ‘இன்னதுதான் எனத் தீர்மாணித்துவிடுவோம்.

எங்கள் தெருவில் ஒரு பெண்மணி, காலை வேளைகளில், “அழ கீழழழழழழழழ, மொழ கீழழழழழழழழ என நீட்டி முழக்கும் ஒலியினைக் கொண்டே, கீரைக்காரி ‘அரைக்கீரையும், முளைக்கீரையும் விற்றுக் கொண்டிருக்கிறார் எனப் புரிந்து கொள்வோம். இவர் மார்க்கெட்டில் மூண்று கட்டு கீரை வாங்கி, அதை ஐந்து கட்டாக, மறுகட்டு கட்டும் ஜாலம் அறிந்தவர். இவருக்கு, வாடிக்கையாக வாங்கினாலும் கூட,  எட்டு ரூபாய் கீரைக் கட்டை, 12 ரூபாய் என்று சொல்லி, பின் குறைத்துக் கொடுத்தால்தான் திருப்தி.

இந்த ‘கூவல்வியாபாரத்தில், ஆகத் தொன்மையானது ‘கூடே, மொறே, மொழேஏஏ கட்மே தான். இந்தக் கூவலை 1960களிலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதாவது “கூடை, முறம், மெழுகுவது, கட்டுவது என்று பொருள் கொள்ள வேண்டும்.

தற்காலப் பெண்களுக்கு, ‘புடைத்தல், ‘நேம்புதல் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில், அதற்குத் தேவையும் இல்லாத சூழலில், இந்த காரியங்களுக்கு அடிப்படையான முறத்திற்கும், கூடைக்கும் என்ன தேவை வந்து விட்டது? நேம்புதல் என்றால் முறத்தினை லாவகமாக, அசைத்து, அசைத்து, முழு அரிசியினையும், நொய்யினையும், கற்களையும் தனித்தனியாகப் பரித்தெடுக்கும் கலை.  எனது பாட்டி ‘நேம்புவதில் தன்னை அடித்துக் கொள்ள ‘ஜில்லாவிலேயே ஆள் இல்லை என்பார்.

இந்த கூடை, முறம் கட்டும் தொழில் செய்தவர்களெல்லாம் என்ன ஆகியிருப்பார்கள்? வேறு தொழில் ஏதும் கற்றுக் கொண்டார்களா? இல்லை கால மாற்றத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஏதேனும் ‘கோவிலில் அலைகிறார்களா? தெரியவில்லை!

1970 களின் ஆரம்பத்தில், நான் குடியிருந்தது, ஒரு ஒண்டுக் குடித்தனத்தில்! எனது ‘பொந்திலிருந்து வாசலுக்கு வருவது என்பது ‘ஐந்து நிமிடப் பயணம். அதுவும் வீட்டுக்குரியவர் மனது வைத்தால்தான்!

அப்போது காலை ஆறு மணி வாக்கில், ஒரு குரல் தெருவில் ஒலிக்கும்!
“அல்லாரது பல்லையும் உடைக்கரதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்..
ரெகுலராகக் கேட்கும்.

யார் இவர்?  இவர் எதற்காக ‘காலங்காத்தால எல்லோருடைய பல்லையும் உடைத்தாக வேண்டும்? அதுவும் தெருத்தெருவாய் கூவிக் கொண்டு?  இந்த கேள்வி, எனக்குத் தீராத புதிராகவே இருந்தது. நான் ஏழு கதவுகள், இரண்டு முற்றங்களைத்தாண்டி, வாசலுக்கு வருவதற்குள், அவர் தெருவைக் கடந்து போயிருப்பார்.

ஒரு நாள், வீட்டுக்குரியவர் ‘சொர்க்க வாசலை விரைவாகத் திறந்து வைத்துவிட, இந்தப் புதிருக்கான விடையை கண்டுபிடிப்பதற்காக, வாசலில் வந்து நின்று கொண்டேன்.  தொலை தூரத்தில் குரல் கேட்கிறது. “அல்லாரது பல்லையும் உடைக்கரதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்..

இதோ, இன்னும் சற்று நேரத்தில், புதிர் அவிழப்போகிறது.

இப்போது குரல் பக்கத்து தெருவரைக்கும் வந்துவிட்டது!  பொறு...பொறு இன்னும் சில நிமிஷங்கள் தான். டென்ஷனும், ஆவலும் ‘சினிமா கிளைமாக்ஸ் சமயம் போல எகிறியது.

இதோ இந்த தெருமுனைக்கே வந்து விட்டார்.

அது ‘அல்மோனியப் பாத்திரம் மாத்தரதேய் அதாவது பழைய அலுமினியப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, புதிய பாத்திரங்களைக் கொடுக்கும் வியாபாரி.

‘அடப் போங்கப்பா...சிரித்துக் கொண்டே, உள்ளே வந்து விட்டேன்.

தற்போது கூட, ஒருவர் காலையில் நான் இருக்கும் தெருவில், விற்றுக்கொண்டு போகிறார்.. ‘இஇஇஇஇட்ய்பம்’.  இவர் ‘இடியாப்பம் விற்றுக் கொண்டிருக்கிறார்.

சில சமயம் ‘ஆந்திரப் பெண்கள், தலையில் பாரத்தினையும், முதுகில் குழந்தையினையும் சுமந்து கொண்டு விற்றுக் கொண்டு வருவார்கள்.

‘துஊஊஊஊஊஊப்பம், ஒட்கூஊஊஊஊஊஊஊஊஊச்சி’.

இது “துடைப்பம் (விளக்குமாறு) மற்றும் ஒட்டடைக் குச்சி

இது போல நிறைய ஒலிகள், தங்களது தினப்பாட்டிற்காக ‘ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களது ‘ராகத்தினை வைத்துக்கொண்டே இவர்களது பொருட்கள் அடையாளம் காணப்படுகின்றன.


ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
–இது உப்பு விற்பவர்.


கோஓஓஓஓஓஓஓஓஓ மாஆஆஆஆஆஅய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
-இது கோலமாவு விற்பவர்.

விற்பவர்கள் தவிர, சில தொழில்காரர்கள் கூட, ‘கூவிக்கொண்டு வருவார்கள். “ஷோபாஆஆஆஆஆஆஆஆஆ ழிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்   

-இதை “சோஃபா ரிப்பேர்” எனப் பொருள் கொள்ள வேண்டும்.

 நோத்போஓஓஓஓஓஓஓஓஓஓஓ,   பப போஓஓஓஓஓஓஓஓஓஓ, ‘ப பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...........

-இது பழைய நோட்டுப் புத்தகம், பழைய புத்தகம், பழைய பேப்பர் வாங்குபவர்.

சில சமயம், சென்னை “மீன்பாடி வண்டி போல ஒரு வாகம், தனது முதுகில் “2000 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் ஒன்றை ஏற்றிக் கொண்டு, அந்த தெருவே ‘கிடுகிடுக்க’,  அந்த வண்டியில் பொருத்தப் பட்டிருக்கும் ‘மோட்டார் பிரளய சப்தம் போல ஒலிக்க,  அந்த வண்டியின் “நாலா புறமும் நாலு பேர்கள் தொற்றிக் கொண்டு, களேபரமாக, ‘கோஷ்டியாக, கூவிக் கொண்டு வர்வார்கள்.

சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்... டேஏஏஏஏஏஏஏஏய், டூஊஊஊஊய், டக்கர...டக்காரா, குர்ர்ர்ர்ர்ர்ர், தூஊஊஊம்

என்ன இது?

அசுரவேகத்தில் வந்து மறையும் இந்த வண்டி, ‘செப்டிக் டேங்க் கிளீன் செய்யும் வண்டி. “செப்டிக் டேங்க் கிளீண் செய்யவேண்டுமாஎனக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

வேறு சில விற்பனையாளர்கள், இப்படி ‘தொண்டை கிழிய கத்துவதைத் தவிர்த்து வேறு சில தொழில் நுட்பங்களைக் கையாளுகின்றனர்.

‘கண..கண..கண வென, சிறிய மணியினை ஒலிக்கச் செய்தால், அவர் ‘சோன்பப்டி விற்கிறார்.

இரவு வேளைகளில், இதே ‘கண..கண..கணஒலி பெரிய மணியிலிருந்து வந்தால், அது "குல்ஃபி" அல்ல்லது ஐஸ்கிரீம்.  

‘ம்ம்ம்ம்.....கூஊஊஊஊம்,  ம்ம்ம்......கூஊஊஊஊஊஊஊஊம் 
என ஆட்டோ ஹாரன் மாதிரி மாறி-மாறி ஒலித்தால் அவர் கேக் விற்பனையாளர்.

நேரமும், பொறுமையும் இருந்தால் ரசிப்பதற்கு உலகில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

6 comments:

 1. அத்தனை சப்தங்களையும் அச்சு பிழறாமல் பதிவு செய்திருக்கிறீர்கள். காணொளி காட்சியாக கண்ட திருப்தி. அருமை!

  ReplyDelete
 2. Anbu!!! U r unique in your comments! Thank u shri Venugopalji.
  Balaraman

  ReplyDelete
 3. Back to my childhood days!! here i am missing all.

  ReplyDelete
 4. Superb, Time and patience does give unique enjoyments in life.:-)

  How nice to see all those "callings" , and how patiently you have deciphered!

  The Muram is available in big markets, and with basket weavers. But the one you have uploaded looks cute.

  ReplyDelete
 5. once in 2002 when me & my mom were in home, we heard someone yelling continuously then prime minister vajpayee's name....we wondered, came out of home, sharpened our ears and then understood he was yelling and selling paai..paai......balachandran

  ReplyDelete