Monday, September 29, 2014

பழம் நழுவி விஷத்தில் விழுந்து......


 கனிகள், ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என புதிதாக விளக்க வேண்டிய தேவை இல்லை. உடலுக்கு தேவையான கனிமங்களும், விட்டமின்களும், இனிப்பும் நிறைந்தது.   ஆனால் நாம் உன்பது கனிகளா என்பதுதான் சந்தேகமாய் இருக்கிறது!

இயற்கைக்கு மாறாக, கனிகள் யாவும் இராசயன முறையில் கனியவைக்கப் பட்டு, பூச்சி கொல்லி மருந்துகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மெழுகுகளால் அலங்கரிக்கப்பட்டு கண்களுக்கு விருந்தாக பரிமாறப் படுகிறது!

பழங்கள் இயற்கையாக கனியும் பொழுதுதான், பழங்களின் முழுமையான ஊட்டங்கள்  நமக்குக் கைகூடும். இயற்கையாக கனியும் பொழுது காயுனுள் என்ன மாற்றம் நிகழ்கிறது? கனிகளின் மேலேயும் உள்ளேயும்  இயற்கையான வண்ண மாற்றம் ஏற்படுகிறது. பழத்தினுள் இனிப்பு கூடுகிறது. இது தவிற உட்டச்சத்துக்களும் , வைட்டமின்களும் மிகுகின்றன. காய்களின் கசப்பும் புளிப்பும் மாறுகின்றன. மணம் வீசுகிறது! 

இயற்கையாக கனியும் பழங்களில் ‘எத்தலின்’ வாயு உற்பத்தியாகிறது. இதுவே காய்கள் கனிவதற்கு காரணமான பழச் செடிகளின் ‘ஹார்மோன்’.

செயற்கையாக கனியவைப்பது என்றால் என்ன?சர்வ சாதாரணமாக “கால்சியம் கார்பைடு” போன்ற உணவுப் பாதுகாப்பு சட்டப்படி தடைசெய்யப்பட்ட, இரசாயணங்கள் உதவியோடு காய்கள் கனிய வைக்கப்படுகின்றன. இவை  நீருடன் சேர்ந்து வினையாற்றும் பொழுது, “அசிடிலின் வாயு”  எனப்படும் கார்பைடு கேஸை வெளியிடுகின்றது. இந்த வாயுதான் செயற்கைமுறையில் பழங்களின் தோல் நிறத்தை மாற்றுகிறது. பழத்தினுள்ளேயும், பழம் கனியத்தக்க விதத்தில் முற்றியுள்ளதா எனத்தெரியாமல் பழுக்க வைக்கிறது.


இந்த கார்பைடு கற்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இவை ‘புற்றுநோயினை ' உண்டாக்கும்’ காரணிகளில் ஒன்று.

இந்த கார்பைடு காய்களுக்கு கவர்ச்சிகரமான வண்ணங்களைத் தருகிறது. செயற்கையாக பழங்களை கொழகொழக்க  வைக்கிறது. சுவையையும், மணத்தையும் குறைக்கிறது, உடலுக்கு ‘டாக்ஸின்களை’ அள்ளி அள்ளி தருகிறது.  இந்த இரசாயணம் ‘புற்று நோய்’ உண்டாக்கும் காரணிகளைக் கொண்டது எனப் பார்த்திருந்தோம். இது தவிர, இரத்த வாந்தி, இரத்தம் அல்லாத வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, வயிறு அப்செட், தொண்டை மற்றும் வயிறு எரிச்சல், இருமல், மூச்சு வாங்குதல் போன்ற நோய்களையும் வழங்கக் கூடியது,

இந்த வாயு அளவுக்கு அதிகமாகச் சேரும் பொழுது, நுரையீரல்களில் நீர் கோர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு.

இம்முறையில் பழுக்க வைக்கப் பட்ட பழங்கள், வயிற்றினுள் செல்லும் பொழுது, இந்த இரசாயணத்தின் தன்மையால், வயிறு-குடல் பகுதிகளில் உள்ள சளிப்படலம் வீணாகிறது. செரிமான மண்டலத்தின் வேலைகளைக் குலைக்கிறது. இது மாத்திரமல்ல, சிறுமூளை வீக்கம், ஞாபக மறதி, ஒரு வித மயக்கமான  நிலை, குழப்பமான மன நிலை ஆகியவற்றையும் தோற்றுவிக்கும் வல்லமை வாய்ந்தது.

பெரும்பாலும், மாம்பழம், பப்பாளி, சப்போட்டா, வாழை, தக்காளி, பேரீச்சை போன்றவற்றை பழுக்க வைக்க ‘கார்பைடு’ உபயோகிக்கின்றனர்.


தற்போது விற்கப்படும் மாதுளை பார்க்கிறீர்கள் அல்லவா? அவை என்ன ஃபேக்டரியில் செய்யப்பட்டதா அல்லது செடிகளில் காய்த்ததா? பார்சல் செய்வதற்கு ஏற்றதாக, ஒரே மாதிரி சைசில் இறக்கும் படியாக , மரபணு மாற்றம் செய்துவிட்டார்களா என்ன? ஆப்பிள்களில் மெழுகு பூசப்படுவது பற்றி புதிதாக ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. பளபளப்பிற்காக மெழுகும், உள்ளே கெட்டுப் போவது வெளியே தெரியாமல் இருக்க இரசாயண பூச்சு செய்யப்படுவதும் யாவரும் அறிந்த்தே!

ஏற்கனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட கனிகளால் புற்று உட்பட பல்வேறு நோய்களால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் கார்பைடு கற்களின் கொட்டம் அதிகமாகிவிட்டது. கற்கள் போட்டு பழுக்க வைக்காத வாழைகளே இல்லை. பப்பாளிகளே இல்லை என்றாகிவிட்டது.

சரி... எந்த வகையில் ‘கார்பைடின்’ அடாவடியை கொஞ்சமாவது குறைத்துக் கொள்ளலாம்?1.       தண்ணீரில் பல நிமிடங்கள் கழுவுங்கள்.

2.       பழங்களை துண்டாக்கி சாப்பிடுங்கள்.

3.       தோலில்தானே சத்து இருக்கிறது என தோலோடு எந்தப் பழத்தையும் சாப்பிட வேண்டாம். தோலை உரித்துவிட்டே உண்ணுங்கள். (முக்கியமாக ஆப்பிளை தோலை நீக்கிவிட்டு உண்ணுங்கள்.)

வியாபாரிகளுக்கு கொஞ்சமும் மனிதம் கிடையாது. விற்க வேண்டும். கொள்ளை லாபம் அடிக்க வேண்டும். அவ்வளவே! எவன் செத்தால் என்ன ? வாழ்ந்தால் என்ன ?

அரசு ‘கார்பைடு கற்களின் விற்பனையை ஒழுங்கு செய்தால் ஒழிய, வியாபாரிகளை ஒன்றும் செய்ய முடியாது.


அது சரி... என்ன திடீரென ‘கார்பைடு’ கதை என்கிறீகளா?

இரு தினங்கள் முன்பு, ஒரு புகழ்பெற்ற பழக்கடையில் ஒரு ‘பப்பாளி’ வாங்கினேன். மிகவும் புத்திசாலியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, ‘எனக்கு விதைகள் அற்ற ஹைபிரிட் பப்பாளி வேண்டாம்-விதையுள்ளதாகக் கொடுங்கள்” எனக் கேட்டு வாங்கினேன். விதை இருந்தது தான். ஆனால் அது கார்பைடு போட்டு பழுக்க வைக்கப்பட்ட ‘கலர்ஃபுல்’ பப்பாளி.

இதை உண்டதால், இரண்டு நாட்களாக, கடுமையான வயிற்றுவலி, 103 டிகிரி காய்ச்சல்,  மண்டை இடி, வாந்தி, உடல் வலி, அசதி எல்லாம் வந்து சேர்ந்தது.  'தனியன்' வேறா? உதவிக்கு எவருமின்றி , நடப்பது கூட இயலாததாயிற்று. சமாளிப்பது சிரமமாயிற்று!  அல்லோபதி போகக் கூடாதென விரதம் இருக்கிறேன். ஆனாலும் ஒரே ஒரு பாராஸிடமால்.


தற்போது, வயிற்றுவலி மாத்திரம் மீதி இருக்கிறது. பார்ப்போம். “ஜீரகம்-மோர்-கஞ்சி” இவை குணமாக்கும் என நம்புகிறேன். 

Thursday, September 25, 2014

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

உடற்காயத்திற்கு முருந்துண்டு,
மனக்காயத்திற்கு யாதுண்டு?
துன்பக் கடலைத் தாண்டும் போது,
தோணியாவது கீதம்
என்றார் ஒரு கவிஞர்,
உண்மைதான்!
இசையைப் போலவும், கவிதையைப் போலவும்
ரணமற்றும் மருந்து உலகில் கண்டதில்லை!
கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளைக் கவணியுங்கள்:
----------------------------------------------------------------------------------------------------
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை
கடல் தொடு ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன !
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க !
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க !
-Vairamuthu
(To listen the song click:
https://www.youtube.com/watch?v=uUPFuJIa9qY
L

Sunday, September 21, 2014

இரங்கல்..

அன்பு நண்பா... உனக்கு என்னவென்று சொல்ல... எதையென்று சொல்ல! 
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில், என் உடன் பணியாற்றி, ஏ.ஜி.எம் ஆக சென்ற வருடம் தான் ஓய்வுபெற்றார் திரு.லக்ஷ்மிகாந்தன். 1975-லிருந்து இன்றுவரை எனது நெருங்கிய நன்பர். ஒரு கணமும் பதற்றமடையாமல், இன்முகத்துடன் விளங்கும்  நன்பர். அவரது மகளும் எனது மகளும் 12 வருட பள்ளித் தோழிகள். இன்றும் கூட!

இவரது அன்பு மனைவி திருமதி குமுதவல்லி அவர்கள்.   நேற்று (20/09/2014)  இரவு காலமானார். கொள்ளை நோய் போல தமிழகமெங்கும் பரவிக் கிடக்கும் புற்று இவரையும் பலி கொண்டது. எனது மனைவிக்கு இக்கொடிய நோய் இருப்பது கணடறியப்பட்டு சரியாக ஒன்பது மாதங்களுக்குப்பின் திருமதி குமுதவல்லிக்கு இந்த நோய் இருப்பது, அகஸ்மாத்தாக கண்டறியப்பட்டது. என தன்பு மனைவி மறைந்து சரியாக ஒன்பது மாதங்களுக்கும் பின் இவரும் காலமானார்.

ஒரே கப்பலில் மிதப்பதால், நன்பரின் வலியை நான் அறிவேன். அவரது துயரத்தையும், வேதனையையும், தனிமையையும் உணர முடிகிறது.

அவருக்கு என்னவெறு ஆறுதல் கூற? வார்த்தைகள் வற்றிப் போகும் தருணங்கள், வாழ்க்கையில் ஏராளம்.

நேற்று (20/09/14), மருத்துவமணையில்  அன்று மூச்சுக் காற்றிற்காக அவரது மனைவி பட்ட இம்சை, மனதை உலுக்கிற்று. சுற்றிலும் எத்தனையோ நபர்கள்! எவரால் அவரது வேதனையை வாங்கிக் கொள்ள முடிந்தது? மனிதரால் இயலும் காரியமா அது? இவை புராணங்களில் மட்டுமே சாத்தியமானவை போலும்!

தனியாளாக எனது மனைவியுடன் அவரது கடைசி மாதத்தில் மருந்துகளோடும்-வலிகளோடும்-அவஸ்த்தைகளோடும் போராடிய அனைத்தும் ரீவைன்ட் செய்து பார்ப்பது போலிருந்தது.

இறைவா! உனது திட்டம் என்னவென்று நாங்கள் அறியோம்! ஆயினும் நல்ல மனிதர்களை கவர்ந்து சொல்வதில் உனக்கேன் இவ்வளவு பரபரப்பு! ஆவேசம்!

வாரிசுகளுக்காக, ஓடி ஓடி உழைத்து, குடும்ப சுமைகளயும், கடைமைகளயும் நிறைவேறிவிட்டு, ‘அப்பாடா... இனி நமக்காகவும் சற்றே வாழலாம்... சில இடங்களுக்குச் செல்லலாம்...’ என   நாங்கள் சற்றே ஓய்வாக நாற்காலியில் அமரும் தருணத்திற்காகக் காத்திருந்து, வாழ்க்கைத் துணையை கவர்ந்து செல்கிறாயே? உனக்கு இரக்கம் என்பதே இல்லையா? தனிமைச் சிறையில் சிக்கவைப்பதிலும் – மனச்சிதைவிற்கு ஆளாக்குவதிலும் உனக்கு என்ன இன்பம்?

இறைவா.....! மீளாத்துதுயரத்தை தாங்கி நிற்கும் வலுவினை, தனிமையைத் தாங்கக் கூடிய மன உரத்தை - லட்சுமிகாந்தனுக்கும், இனி பிறப்பே இல்லா நிலையை திருமதி குமுதவல்லிக்கும் தந்தருமாறும் உன்னை  இறைஞ்சுகிறேன்.

இதையாவது செய்வாயா?

Friday, September 19, 2014

தீராப் பசி!!பொம்மைகள் சில போதும் – சிறார்களின் அழுகை நிறுத்த!
சில்லறைக் காசுகள் சில போதும் - யாசகர்களின் கை மடங்க!
கவளங்கள் சில போதும் – பசித்தவனின் பிணியடங்க!
சில துளி நீர் போதும் – பொங்கி வரும் பால் அடங்க!
புத்தகங்கள் சில போதும் – அறிவின் பசியடங்க!
என்ன கொடுத்தால் இதயப் புயல் அடங்கும்? 

எவன் சொன்னது – காலம் எல்லாவற்றையும் ஆறும் என்று?
தீரா அன்புப் பசி கொண்டலையும் 
இதயத்தைக் காணாத ஒருவன்செப்பிய சொல்போலும் அவை! 

தாயின் கைவிரலை கூட்டத்தில் தவறவிட்டகுழந்தையின் 
மனோ நிலை – அவனுக்குப் புரிந்ததில்லை! 

வற்றாத துயரத்தை வாரி வழங்கியது எது?
தனிவழியில் தவிக்கவிட்டுச் சென்ற என் தெய்வமா?
வீசி இறைக்கப்பட்ட அமில வார்த்தைகளா?
புரிந்து கொள்ளாத கல் இதயங்களா? 

இழந்த போது சிந்திய கண்ணீரின் சுமையக் காட்டிலும்
இழந்திருக்கக் கூடாது என வருந்தும் 
கண்ணீரின் சுமை கூடியதெப்படி? 

ஆறுதல்களும் தேறுதல்களும் சலிப்பூட்டுகின்றன!
சொல்வதார்க்கும் எளிதுதானே? 

அன்புக் கடை விரித்தேன் கொள்வாரில்லை!
அன்பைத் தேடிகிறேன் – கொடுப்பாருமில்லை!!

Wednesday, September 17, 2014

ஸ்வாமி ஜென்னானந்தா...


இப்பொழுதெல்லாம் ‘ஜென்’ மனோநிலை பற்றி  நிறைய பேசுகிறார்கள்!

அப்படியென்றால் என்ன? 

விசாரித்ததில், அந்த நிலையை அடைவதற்கு முன்னால் சில பரீட்சைகளில் தேர்வாக வேண்டுமாம்.; இதில் தேறி விட்டோமானால், ஜென் நிலை சாத்தியமாம்!பரீட்சை 1:

பிராட்பேண்ட் DSL  நிற்கிறதா இல்லையா என மோடத்தை உற்றுப் (அல்லது வெறித்து) பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். நிற்பது போல வேகமாக ‘படக்-படக்’ என அடித்துக் கொண்டுவிட்டு, திரும்பவும் மெதுவான ‘‘படக்-படக்’ கிற்கு வந்துவிட்டாலும் உங்களது ‘லப்-டப்’ எகிறாமல் இருக்கிறதா? பதினெட்டாவது முறையாக முயற்சித்து DSL நின்றுவிடும் வரை பொறுமை காப்பீர்களா?

பரீட்சை 2:

DSL தான் நின்றுவிட்டதே என பிரசன்னவதனமாகிவிடக் கூடாது! இன்டர்னெட் பட்டன் சிவப்பிலேயே நின்று வெறுப்பேற்றும். அப்போதும் நீங்கள் கன்னத்தில் வைத்த கையை எடுக்காமல் பொறுமை காப்பீர்களா? சில சமயம் மோடம் மீண்டும் விட்ட இடத்திலிருந்து, அதாவது DSL அடித்துக் கொள்வதிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கும்! பொறுமையானந்தாவாக இருக்க பழகினால் பாஸாகலாம்.

பரீட்சை – 3:

IRCTC –ல் டிக்கட் பதிவு பண்ணும் பொழது, பேஜ்  லோடு ஆகாமல், பிரௌசர் வட்டமாக ‘வடை’ சுட்டுக்கொண்டே இருந்தாலும் உங்கள் பி.பி எகிறாமல் இருக்கிறதா? அப்படியே ஃபார்ம் பூர்த்தி செய்துவிட்டு கேட்வே மாறி உங்களது பேங்கிலிருந்து பணம டிரான்ஸ்ஃப்ர் செய்தபின்னும் டிக்கட் கிடைக்காமல் போகலாம்! ஒரு வாரத்தில் பணம் திரும்ப கிடைக்கலாம். ஆனால் மீண்டும்-மீண்டும் முயற்சி செய்ய போதுமான பேலன்ஸ், பாங்க் அக்கவுண்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான மனோநிலை உங்களிடம் இருக்கிறதா?

பரீட்சை – 4:

திருப்பதி கியூவில் மணிக்கணக்கில் நின்றுவிட்டு, கடவுள் தரிசனம் செய்யும் பொழுது- சாரி..சாரி... டாக்டரை பார்க்க டோக்கன் போட்டு மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்த பின் உங்கள் முறை வரும் பொழுது, எவரேனும் ஒருவர் டாக்டருக்கு வேண்டப்பட்டவர் என்ற ஹோதாவில் குறுக்கே நுழைந்தாலோ - பாய்ந்தாலோ  ‘சம நிலை ‘ இழக்காமல் இருக்கிறீர்களா?

உள்ளே போய் கடவுளை தரிசனம் செய்யும் பொழுது, நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து எடுத்த லேபரட்டரி ரிப்போர்ட்களை, டாக்டர் ஒரே ஒரு விணாடிமட்டும், ‘என்னாத்தே கண்ணையாவின்’ படத்தைப் பார்ப்பது பார்த்துவிட்டு தூக்கிப் போட்டாலும் ‘டென்ஷனாக மாட்டீர்களே?’

பரீட்சை – 5:

கோச் நெம்பரைப் பார்க்காமல், வெறும் ‘பெர்த்’ நெம்பரை மட்டும் பார்த்துவிட்டு, உங்களது பெர்த்தில் குஷாலாக படுத்துக்கொண்டு, அவரும் ‘ஜென்’ போல தூங்கிக் கொண்டிருந்தால், அவருக்கு பொறுமையாக தெளிவுபடுத்தி அவரை அப்புறப்படுத்தும் வரை ‘கோபப்படாமல்’ இருப்பீர்களா?

பரீட்சை – 6.

விமான டிபார்சருக்கு அரை மணி இருக்கும் பொழுது, போர்டிங் கேட் ஒன்று என ஒரு டிஸ்பிளேயிலும், பதினொன்று என இன்னொரு டிஸ்பிளேயிலும் போட்டால் பதறாமல் இருப்பீர்களா? இரண்டு கேட்டிற்கும் அரை கிலோமீட்டர் தூரம் என்றாலும் கூட!

பரீட்சை – 6:

உங்களுக்குப் பின் ஆர்டர் செய்தவர்களுக்கெலாம் சர்வ் செய்யப்பட்டாலும், உங்களது ஆர்டரை எடுத்துக் கொண்ட பேரர் ‘வனவாசம்’ போய்விட்ட நிலையில், எரிச்சலுற்ற உங்களது குழந்தைகள் அடம் பிடித்தாலும் ‘ஸ்ரீதேவியாக’ இருப்பீர்களா இல்லை அவரது ‘அக்காவாக’ மாறி விடுவீர்களா?

பரீட்சை – 7:

ஏதேனும் ஒரு DTH சர்வீஸ்  அல்லது IVRS பயன்படுத்தும் வங்கிகளை, ஒரு விசாரணைக்காகவோ அல்லது புகாருக்கோ அணுகும் பொழுது, ஒன்றை அல்லது இரண்டை அல்லது மூன்றை அழுத்தி-அழுத்தி மாய்ந்து போய் இறுதியில் (டச் ஃபோனில் எப்படி அழுத்துவது?) ஒன்றும் நடவாமல் போய் டெலிஃபோனை உடைக்கலாமா என்ற அளவுக்கு பொறுமை சோதிக்கப் பட்டாலும் நிலைதவறாமல் புன்னகைக்கிறீர்களா?

பரீட்சை – 8:

வெகு முக்கியமான ஒரு பணியாய் இருக்கும் பொழுது லோம்பார்டு இன்ஸூரன்ஸ் எடுத்தால் ஒரு ஸ்பூன் ஃப்ரீ என்று அட்டூழியமாய் சதாய்த்தாலும்,  “நோ மேடம்.. ஐயாம் நாட் இன்டரஸ்ட்ட்” என சொல்ல இயலுகிறதா?

பரீட்சை – 9

அப்பாவியான நீங்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உங்களது புது ஸ்மார்ட் ஃபோனை காண்பிக்கும் பொழுது, அக்கிரம்மாய்              மிஸ் எலிஸபெத்தோ அல்லது மிஸ் டெய்லரோ, பிறந்தாள் ட்ரஸ்ஸோடு ஃபோட்டோ அனுப்பி கான்டாக்ட் பண்ணச் சொன்னால் பதறாமல் இருக்க முடிகிறதா?

பரீட்சை – 10

கடைசி ஓவர். ஆறு ரன் எடுத்தால் எடுத்தால் வெற்றி. கைவச ஒரே விக்கட் என்ற நிலையில், டி.வி யில் மூழ்கியிருக்கும் பொழுது, “என்ன எழவு.. எப்ப பாத்தாலும் டி.வி.. வீட்டில வேலையே இல்லை? நான் மனுஷியா அல்லது மிஷினா? இங்கே உடனே வாங்க..” மனையாட்டி உத்தரவிட்டால், சிரித்துக் கொண்டே “ இதோ வந்துட்டேன் “ என தடாலடியாய் ஓட முடிகிறதா?

-         எல்லாவற்றிற்கும் உங்களது பதில் ‘ஆம்..’ என்றால் நீங்கள் ‘ஜென் நிலையை அடைய தகுதியானவர் எனப் பொருள்!!Sunday, September 14, 2014

நடந்தது குறித்து எனக்கு வருத்தமேதும் இல்லை....


வேம்பநாதன். 

விந்தைப் பெயர். ஒருவேளை அவனது குலதெய்வத்தின் பெயராக இருக்கக் கூடும்!. பெயரை வைத்துக் கொண்டு வயதைச் சொல்லுவதாக இருந்தால் தாராளமாக ஐம்பது என்றுதானே சொல்லுவீர்கள்? மன்னிக்க வேண்டும் வேம்பநாதனுக்கு வயது இருபத்து நாலு தான்.

வேம்பன் பல விதங்களில் வினோதன். வைரமுத்துவை வரிக்கு வரி கிலாசிப்பான். “குறுக்கு சிறுத்தவளைப்” பற்றி ஒரு மணி நேரம் பேசுவான். திடீரென வள்ளலார் என்பான். வராத இங்கிலீஷுடன் மல்லுக்கு நிற்பான். ஒற்றைக் கடுக்கன். சாசுவத தாடி. பனியன் போட மாட்டான். கற்றாழை போலவோ அமோனியா போலவே அவனிடமிருந்து நிரந்தர நாற்றம்.

படிக்கிறானா இல்லையா தெரியாது; சதா ஒரு ஆங்கிலப் பத்தகத்தை இடுக்கிக் கொண்டிருபான். நிலை கொள்ளாத நவீன இளைஞனுக்கு உதாரண புத்திரன். இன்ஜினியரிங் டிராப் அவுட்.. கேட்டால் “டிராப் பை மை சாய்ஸ்” என்பான். வேலைக்குப் போவதாக உத்தேசமே இல்லை! வேலையெல்லாம் பூமிக் கிரக வாசிகளுக்குத்தான். இவனுக்கு இல்லை.

“என் கூட வந்து கடையைப் பார்த்துக் கொள். தொழிலைக் கற்றுக் கொள்” என்ற அப்பாவை, அடிக்கப் போனான். அவன் அப்பா ஒரு ஆட்டோ மொபைல் ஸ்டோர் வைத்திருக்கிறார். அவரை அடிக்கப் போனது அம்பாஸிடர் ஸ்பிரிங் பிளேட்டால்!

ஒரு முறை அவன் அப்பவிடம் பேசினேன். “ஏதாவது செய்யக் கூடாதா?“ என்றேன். என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, ‘அவனுக்கு திவசம் செய்துவிட்டேன்’ என்றார். அவ்வளவு தூரம் வீட்டில் அமளி செய்திருக்கிறான். நோக அடித்திருக்கிறான்.

டிபிக்கல் அம்மா. அப்பாவுக்கு தெரியாமல் வேம்ப நாதனுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கொடுக்காவிட்டால், ‘தேவடியா......’ என்பான். 

மகனுக்கு புத்தி வேண்டி வாரத்தில் ஏழு நாள் விரதம் இருக்கிறாள். சகல அம்மன்களுக்கும் உண்டியலில் காசு சேர்ந்த்து கொண்டிருந்தது தான் மிச்சம்.

இந்த கிறுக்கன் எனக்கு நண்பன். பள்ளி சினேகிதன் பள்ளி நாளிலிருந்தே!

அவனுக்கு தற்போதைய பிரச்சினை வேறு வடிவில்! காதல்!!  போதைக் குரங்கிற்கு தேளும் கொட்டியது போல, இவன் காதலில் விழுந்தான்.

யாருக்கு வேண்டுமானாலும் நன்பனாக இருக்கலாம். ஆனால் காதலில் விழுந்தவர்களுக்கு, அதுவும் ஒரு தலைக் காதலர்களுக்கு நண்பனாக இருப்பதைப் போன்ற ஒரு இம்சையை, அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். பேசியே சாகடிப்பார்கள்!!

ஒரு நாள், எனது கடைக்கு வீட்டில்ருந்து, ஆல்டோவில் சென்று கொண்டிருக்கும் பொழுது, வழியில் இவனிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். கையைக் காட்டி வண்டியை நிறுத்தினான்.

“ஏண்டா... கொஞ்ச நாளா உன்னை ஆளைக் காணோம்? பாக்கவே முடியலை” என்றான் வேம்பன்.

‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லேடா.. பிசினஸில் கொஞ்சம் பிஸியாகிட்டேன்.. அவ்வளவுதான்.. வா.. வா. வண்டியில் ஏறிக் கொள். உன்னை டிராப் செய்கிறேன்.’

எங்கே செல்லப் போகிறான். ஏதாவது ஒரு தெரு முக்கில், இவனைப்போல சில பேர் காத்துக் கொண்டிருக்கக் கூடும். அவ்வளவே!

நகரின் மெயின் ரோடில் வண்டி சென்று கொண்டிருந்தது.

திடீரென் உற்சாகமானான் வேம்பன்.

“மச்சான், அதோ வர்ரா பாருடா... அவதான் என் ஆளு...”

“யார்?”

கல்லூரிக்கு கும்பலாக சென்று கொண்டிருக்கும் ஒரு மலர்க் கூட்டத்தைக்  காட்டினான்.

நான் ‘லுக்’ விடும் கோஷ்டியைச் சேராத வேற்றுக் கிரக வாசி. சற்று சங்கடத்தோடுதான் அந்தப் பெண்களைப் பார்த்தேன்.

“நிறைய பேர் வர்ராங்க...யாருடா..?”

“நடுவில வரும் மஞ்ச கலர் சுடிதார் தான்டா!”

பார்த்தேன்.

அந்த வயது பெண்களுக்கே உரிய ஜொலிக்கும் முகம். நேர்த்தியாக திருத்தப்பட்ட தலைமுடி, புருவம். சிக்கென்ற உடல் வாகு. அடக்கமான ஹேண்ட் பேக்குடன், உலவும் ஓவியம் போலத்தான் இருந்தாள். உண்மையில் அந்த மலர்க்கூட்டத்தின் ‘ரோஜா’ அவள் தான்.

அந்த தேவதைக்கு இவனா?

‘எப்படிடா இருக்கா..?’

‘ம்ம்ம்...’

“ம்ம்ம்ன்னா என்ன அர்த்தம்? நல்லா இருக்கால்லே?”

“நல்லா இருக்கா!”

‘அவ பேர் என்ன?’

‘நிவேதிதா..’

“அவளைத்தான் கட்டிக்கப் போறேன்..”

“அவ கிட்ட கேட்டுட்டியா..?”

“இன்னும் இல்ல...”

‘அவ அப்பா என்ன செயறார்?’

‘அது ஏதோ ஒரு ஆபீஸில வேலை செய்யுது..!’

அதுவாம்.

‘சரி... நீ இங்க இறங்கிக்க.. நான் வேற வழியா போறேன். கஸ்டமரைப் பாக்கனும்.. வேலை இருக்கு”

அதன் பின் ஒரு வாரம் அவனைப் பார்க்க இயலவில்லை.

ஒரு நாள், அவனே என்னைத் தேடி கடைக்கு வந்தான். பிஸியான நேரம். வேம்பனுக்கு விவஸ்த்தை கிடையாது. கஸ்டமர் இருக்கிறார்களே என ஒதுங்க மாட்டான். எனவே, எனது அப்பாவிடம் கொஞ்சம் கல்லாவில் உக்காரு எனச் சொல்லிவிட்டு வேம்பனை இழுத்துக் கொண்டு வெளியே வநதேன்.

‘கண்ட கழிசடைகளுடன் உனக்கு என்ன சேர்மானம்..’ என அப்பா முனகுவது காதில் விழுந்தது.

“என்ன, சொல்லு.. இப்ப நான் பிஸியா இருக்கேன்..”

அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

‘அவ கிட்ட கேட்டேண்டா..’

‘எவ கிட்ட...? ‘

‘அதாண்டா, நிவேதிதா..!’

ஓ, அதுவா? ... என்ன சொன்னா?”

இந்த கால சினிமா நாயகிகள் போல எங்கே அந்த தேவதை, இந்த உருப்படாதவனுக்கு, ஓ.கே  சொல்லிவிட்டிருப்பாளோ என அச்சமாகத்தான் இருந்தது.

அவன் முகத்தில் குரூரம் பரவியது.

“பரதேசி நாயி.. பெரிய ரம்மைன்னு நினப்பு..”

‘என்னதான் சொன்னா?”

“சீ... போடான்னுட்டா..”

‘அவளை என்ன பண்றேன் பாரு...’

‘அவளை ஒரு மயிரும் புடுங்க முடியாது.. உன் லட்சனம் அப்படி இருக்கு.. ஒழுங்கா உருப்படற வழியப் பாரு.. பொன்னுங்க தானா கிடைக்கும்...’

அவன் காதில் எதுவும் விழுவதாகத் தெரியவில்லை.. கொஞ்ச நேரம் ஆக்ரோஷத்தோடு உருமிவிட்டு சென்று விட்டான்.

எனக்கு இது ஒன்றும் ஆச்சரியமாகத் தெரியவில்லை. அந்த பெண் இவனிடம் பேசியிருந்தால்தான் ஆச்சரியம்.

அடுத்த சில நாட்களாக ஆளைக் காணவில்லை. எனக்கும் கூட அவன் வராதது  சௌகரியமாகத்தான் இருந்தது. அவன் புலம்பலை எந்த நேரமும் எப்படிக் கேட்டுக் கொண்டிருப்பது?

அன்று புதன் கிழமை. காலை நேரம். ஒரு பர்சேஸுக்காக வெளியூர் செல்ல வேண்டிருந்தது. ஆல்டோவை அப்பாவிடம் விட்டுவிட்டு, அப்பாவின் ஸ்கார்பியோவை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

காலை நேரத்தில், பிரதான சாலையை கடந்து செல்வது, சலிப்பூட்டும், டென்ஷனூட்டும் வேலை. இஷ்டப்படி வளைந்து திரும்பும் அவசர ஸ்கூல் ஆட்டோக்கள், ஹாரனை விட்டு கையை எடுக்காத ஃபோர் வீலர்கள், எதோ தன் வீட்டு முற்றத்தில் இருப்பது போல செல் ஃபோனில், இடுக்கிய வண்ணமாகவே கிலோ மீட்டர் கணக்கில் பேசிக் கொண்டே செல்லும் இரு சக்கர வாகணங்கள்,  கொலை செய்ய லைசென்ஸ் எடுத்திருப்பது போல மிரட்டும் டிப்பர் மற்றும் மண் லாரிகள். எதிரே எப்பொழுதும் போல கொத்துக் கொத்தாக வண்ணமயமாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள்.

பொறுமையாக ஸ்டியரிங்கில் கைவைத்து காத்திருந்தேன்.

எதிரே யார்?

நம்ம வேம்ப நாதன். சுற்று முற்றும் பார்த்த வண்ணம், யாருக்கோ காத்திருப்பது போல நின்று கொண்டிருந்தான். இந்த நேரத்தில், அவனுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது?  என்ன, அந்தப் பெண் நிவேதிதாவை பார்வையிட நின்று கொண்டிருப்பான்.

நான் நினைத்த மாதிரியே, எதிரே வந்து கொண்டிருந்தாள் நிவேதிதா; தோழிகள் புடை சூழ. 

பிங்க் நிற சுடிதார். அதிசயமாய் ஒரு சிறிய பொட்டும், ஒற்றை ரோஜாவும் வைத்துக்கொண்டிருந்தாள். இன்று பார்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாகவே இருந்தாள்.

அவளைப் பார்த்த்தும் சாலையின் சாலையின் இடது புறம் நின்றிருந்த வேம்பு, அவசரமாக சாலையைக் கடந்து வலது புறம், அவளை நோக்கி  செல்ல ஆரம்பித்தான். எனக்கும் அவனுக்கும் ஒரு பதினைந்து அடி தூரம் இருக்கும்.

என்ன செய்கிறான் அவன்?

சாலையை கடக்க ஆரம்பிக்கும் பொழுதே, சட்டையின் பின்னாலிருந்து ஒரு பாட்டில் போன்ற ஒன்றை எடுக்க ஆரம்பித்தான். நானும் காரை மெல்லச் செலுத்தினேன்.

மை காட்.. அவன் எடுத்தது ‘அமில பாட்டில்’. நிவேதிதாவை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தான்.

தீர்மாணிக்க நேரமில்லை. நான் காரை உட்ச பட்ச ஸ்பீடில் செலுத்தினேன் அவனை நோக்கி.
     -----------

ஏண்டா, நீ நல்லாத்தானே காரை ஓட்டுவே, இப்படி செய்துட்டியே? காரை நான் தான் ஓட்டினேன் என சொல்லிவிடுகிறேன்டா.. இல்லாட்டி வேறு யாராவது பெயரைப் போட்டு கொடுத்திடலாம்ப்பா.. என்னால் அது முடியும்டா.. செலவைப் பத்திக் கவலை இல்லை. நீ வெளியே வந்துடுடா..!

வேண்டாம்பா.. நான் தான் தப்பு செய்தேன்.. தண்டனை எனக்கே வரட்டும்.. நீ கவலைப் படாதே...

-----------
எனக்கு கொஞ்சம் அதிர்ஷம் இருந்தது! 'விபத்து' நடந்த அன்றைக்கு வேம்பு குடித்துவிட்டு வந்திருகிறான். கோர்ட்டில் அது கொஞ்சம் சாதமாகியது. தீர்ப்பு வழங்கும் போது, வேம்பின் அப்பா வரவில்லை. அவன் அம்மா வந்திருந்தாள். கொலைகாரப் பாவி என, என் மீது மண்ணை விட்டெறிந்தாள்.

செக்ஷன் 304-A படி குற்றம் விளைவித்திருந்தாலும், பாதிக்கப் பட்டவர் குடிபோதையில் இருந்தது, மருத்துவ ரீதியாக நிரூபிக்கப் பட்டதால்..... ............மேஜிஸ்ட்ரேட் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.

ஆறு மாதம் சிறை தண்டனை... டிரிவிங் லைசென்ஸ் முடக்கம்.. அபராதம்.

ஆறுமாதம் உள்ளே செல்வது குறித்து எனக்கு சற்றும் வருத்தம் இல்லை. 

உண்மையில் நடந்தவை குறித்து மகிழ்ச்சியே!

நிவேதிதா என்ன செய்து கொண்டிருப்பாள்?

அன்று சாலையில் “எதிர்பாராது  நடந்த விபத்து” அவளின் நினைவிலிருந்துகூட அகன்றிருக்கக் கூடும். 

அப்படியே இருக்கட்டும்.