Wednesday, September 17, 2014

ஸ்வாமி ஜென்னானந்தா...


இப்பொழுதெல்லாம் ‘ஜென்’ மனோநிலை பற்றி  நிறைய பேசுகிறார்கள்!

அப்படியென்றால் என்ன? 

விசாரித்ததில், அந்த நிலையை அடைவதற்கு முன்னால் சில பரீட்சைகளில் தேர்வாக வேண்டுமாம்.; இதில் தேறி விட்டோமானால், ஜென் நிலை சாத்தியமாம்!பரீட்சை 1:

பிராட்பேண்ட் DSL  நிற்கிறதா இல்லையா என மோடத்தை உற்றுப் (அல்லது வெறித்து) பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். நிற்பது போல வேகமாக ‘படக்-படக்’ என அடித்துக் கொண்டுவிட்டு, திரும்பவும் மெதுவான ‘‘படக்-படக்’ கிற்கு வந்துவிட்டாலும் உங்களது ‘லப்-டப்’ எகிறாமல் இருக்கிறதா? பதினெட்டாவது முறையாக முயற்சித்து DSL நின்றுவிடும் வரை பொறுமை காப்பீர்களா?

பரீட்சை 2:

DSL தான் நின்றுவிட்டதே என பிரசன்னவதனமாகிவிடக் கூடாது! இன்டர்னெட் பட்டன் சிவப்பிலேயே நின்று வெறுப்பேற்றும். அப்போதும் நீங்கள் கன்னத்தில் வைத்த கையை எடுக்காமல் பொறுமை காப்பீர்களா? சில சமயம் மோடம் மீண்டும் விட்ட இடத்திலிருந்து, அதாவது DSL அடித்துக் கொள்வதிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கும்! பொறுமையானந்தாவாக இருக்க பழகினால் பாஸாகலாம்.

பரீட்சை – 3:

IRCTC –ல் டிக்கட் பதிவு பண்ணும் பொழது, பேஜ்  லோடு ஆகாமல், பிரௌசர் வட்டமாக ‘வடை’ சுட்டுக்கொண்டே இருந்தாலும் உங்கள் பி.பி எகிறாமல் இருக்கிறதா? அப்படியே ஃபார்ம் பூர்த்தி செய்துவிட்டு கேட்வே மாறி உங்களது பேங்கிலிருந்து பணம டிரான்ஸ்ஃப்ர் செய்தபின்னும் டிக்கட் கிடைக்காமல் போகலாம்! ஒரு வாரத்தில் பணம் திரும்ப கிடைக்கலாம். ஆனால் மீண்டும்-மீண்டும் முயற்சி செய்ய போதுமான பேலன்ஸ், பாங்க் அக்கவுண்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான மனோநிலை உங்களிடம் இருக்கிறதா?

பரீட்சை – 4:

திருப்பதி கியூவில் மணிக்கணக்கில் நின்றுவிட்டு, கடவுள் தரிசனம் செய்யும் பொழுது- சாரி..சாரி... டாக்டரை பார்க்க டோக்கன் போட்டு மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்த பின் உங்கள் முறை வரும் பொழுது, எவரேனும் ஒருவர் டாக்டருக்கு வேண்டப்பட்டவர் என்ற ஹோதாவில் குறுக்கே நுழைந்தாலோ - பாய்ந்தாலோ  ‘சம நிலை ‘ இழக்காமல் இருக்கிறீர்களா?

உள்ளே போய் கடவுளை தரிசனம் செய்யும் பொழுது, நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து எடுத்த லேபரட்டரி ரிப்போர்ட்களை, டாக்டர் ஒரே ஒரு விணாடிமட்டும், ‘என்னாத்தே கண்ணையாவின்’ படத்தைப் பார்ப்பது பார்த்துவிட்டு தூக்கிப் போட்டாலும் ‘டென்ஷனாக மாட்டீர்களே?’

பரீட்சை – 5:

கோச் நெம்பரைப் பார்க்காமல், வெறும் ‘பெர்த்’ நெம்பரை மட்டும் பார்த்துவிட்டு, உங்களது பெர்த்தில் குஷாலாக படுத்துக்கொண்டு, அவரும் ‘ஜென்’ போல தூங்கிக் கொண்டிருந்தால், அவருக்கு பொறுமையாக தெளிவுபடுத்தி அவரை அப்புறப்படுத்தும் வரை ‘கோபப்படாமல்’ இருப்பீர்களா?

பரீட்சை – 6.

விமான டிபார்சருக்கு அரை மணி இருக்கும் பொழுது, போர்டிங் கேட் ஒன்று என ஒரு டிஸ்பிளேயிலும், பதினொன்று என இன்னொரு டிஸ்பிளேயிலும் போட்டால் பதறாமல் இருப்பீர்களா? இரண்டு கேட்டிற்கும் அரை கிலோமீட்டர் தூரம் என்றாலும் கூட!

பரீட்சை – 6:

உங்களுக்குப் பின் ஆர்டர் செய்தவர்களுக்கெலாம் சர்வ் செய்யப்பட்டாலும், உங்களது ஆர்டரை எடுத்துக் கொண்ட பேரர் ‘வனவாசம்’ போய்விட்ட நிலையில், எரிச்சலுற்ற உங்களது குழந்தைகள் அடம் பிடித்தாலும் ‘ஸ்ரீதேவியாக’ இருப்பீர்களா இல்லை அவரது ‘அக்காவாக’ மாறி விடுவீர்களா?

பரீட்சை – 7:

ஏதேனும் ஒரு DTH சர்வீஸ்  அல்லது IVRS பயன்படுத்தும் வங்கிகளை, ஒரு விசாரணைக்காகவோ அல்லது புகாருக்கோ அணுகும் பொழுது, ஒன்றை அல்லது இரண்டை அல்லது மூன்றை அழுத்தி-அழுத்தி மாய்ந்து போய் இறுதியில் (டச் ஃபோனில் எப்படி அழுத்துவது?) ஒன்றும் நடவாமல் போய் டெலிஃபோனை உடைக்கலாமா என்ற அளவுக்கு பொறுமை சோதிக்கப் பட்டாலும் நிலைதவறாமல் புன்னகைக்கிறீர்களா?

பரீட்சை – 8:

வெகு முக்கியமான ஒரு பணியாய் இருக்கும் பொழுது லோம்பார்டு இன்ஸூரன்ஸ் எடுத்தால் ஒரு ஸ்பூன் ஃப்ரீ என்று அட்டூழியமாய் சதாய்த்தாலும்,  “நோ மேடம்.. ஐயாம் நாட் இன்டரஸ்ட்ட்” என சொல்ல இயலுகிறதா?

பரீட்சை – 9

அப்பாவியான நீங்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உங்களது புது ஸ்மார்ட் ஃபோனை காண்பிக்கும் பொழுது, அக்கிரம்மாய்              மிஸ் எலிஸபெத்தோ அல்லது மிஸ் டெய்லரோ, பிறந்தாள் ட்ரஸ்ஸோடு ஃபோட்டோ அனுப்பி கான்டாக்ட் பண்ணச் சொன்னால் பதறாமல் இருக்க முடிகிறதா?

பரீட்சை – 10

கடைசி ஓவர். ஆறு ரன் எடுத்தால் எடுத்தால் வெற்றி. கைவச ஒரே விக்கட் என்ற நிலையில், டி.வி யில் மூழ்கியிருக்கும் பொழுது, “என்ன எழவு.. எப்ப பாத்தாலும் டி.வி.. வீட்டில வேலையே இல்லை? நான் மனுஷியா அல்லது மிஷினா? இங்கே உடனே வாங்க..” மனையாட்டி உத்தரவிட்டால், சிரித்துக் கொண்டே “ இதோ வந்துட்டேன் “ என தடாலடியாய் ஓட முடிகிறதா?

-         எல்லாவற்றிற்கும் உங்களது பதில் ‘ஆம்..’ என்றால் நீங்கள் ‘ஜென் நிலையை அடைய தகுதியானவர் எனப் பொருள்!!1 comment:

  1. ஜென் நிலை அடைவது இவ்வளவு கஷ்டமா ?என்ன கொடுமடா பலராமா )))))))

    ReplyDelete