Friday, July 22, 2016

அலி சகோதரர்கள்.



அலி சகோதரர்கள்.

பொதிகைத் தொலைக்காட்சியில்,  ஒவ்வொரு வெள்ளியன்றும் காலை 0845 மணிக்கு, விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி, சுதந்திரப் போராட்டத்தில் அவர்களது மகத்தான பங்கு, தியாகம் பற்றி நாம் கேட்டே இராத தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், திரு முரளி என்பவர். ஒரு வருட்த்திற்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறது இந்நிகழ்ச்சி.

இரண்டாவது வாரமாக ‘அலி சகோதரர்களைப் பற்றி’ இன்று குறிப்பிட்டார் திரு முரளி. அலி சகோதரர்கள் தேசவிரோத குற்றம் சாட்டப்பட்டு (தேசவிரோதம் என்றால் – அக்காலத்தில் சுதந்திரப் போராட்டம்) கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். இருவரில் முகமது அலி மிகச் சிறந்த பேச்சாளர். அறிஞர். அவரது வாதத் திறமை குறித்து, நீதிபதிகளே வியப்பர். தீவீரமான தேசபக்தர். 

அவர் கராச்சி சிறையில் தனிக் கொட்டடியில் பட்ட சித்திரவதைகள், அவமானங்கள் குறித்து விரிவாகப் சொல்லிவிட்டு, கடைசியில் ஒரு தகவல் சொன்னார் பாருங்கள்!  சிலிர்த்துப் போனது.  

பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சமரசத் திட்டத்தை உருவாக்கி, அதற்கு அலி சகோதரர்கள் ஒப்புக்கொண்டால், சிறையிலிருந்து விடுதலையாகலாம், சித்தரவதைகளிலிருந்து மீளலாம் என்பதே அது.  

இம்மாதிரி பல விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஆசைகாட்டப் பட்டு, அவர்கள் அதை மறுத்து, தூக்குக் கயிற்றை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம்-ஏராளம். 

ஆனால், அலியின் தாயார் செய்த ஒரு காரியம், மகத்தானது. நம்ப முடியாதது.  பிரமையுறச் செய்வது.
(அந்தமானுக்குச் சென்றிருந்த போது, அங்கே உள்ள கொடுமையான சிறையில், நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்ட வார்த்தைகளில் வடிக்க இன்னல்கள், கற்பனைகூட செய்யமுடியாத கொடூரங்கள், கொலைகள் ஆக்யவற்றைப் படித்து, ஒலி-ஒளிக் காட்சியாகப் பார்த்துவிட்டு, பல நாட்கள் தூக்கத்தைத் தொலைத்தேன்)

அந்தப் பெண்மணி, தன் மதத் தலைவர்களிடமிருந்து ஒரு நீண்ட வாளினைப் பெற்றுக் கொண்டு, அதைத் தன் உடையில் மறைத்து வைத்துக் கொண்டு, சிறையில் வாசலில் காத்துக் கொண்டிருந்தாரம். எதற்காக?  ஒருவேளை தன் மகன், அரசாங்கம் தரும் ‘சமரச் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, விடுதலை பெற்று வெளிவந்தால், அந்தக் கத்தியாலாயே தன் மகனை வெட்டித் தள்ளிவிட்டு, அவரைப் பெற்ற தன் வயிற்றையும் கிழித்துக் கொள்வேன்’ என்றாராம்.

இதைப் பற்றி வா.வே.சுப்ரமணிய ஐயர், குறிப்பிடும்போது, நாம் ஜான்ஸி ராணி மறைந்துவிட்டார் எனக் கவலைப்பட்டோம். இல்லை.. இல்லை இந்தத் தாயின் உருவில், பல ஜான்ஸிராணிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றாராம்.

எப்படிப்பட்ட தலைவர்களைப் பெற்றிருந்தோம் நாம்.
எந்தத் தேசம், தன் வரலாற்றை மறக்கிறதோ, தன் தியாகிகளை மறக்கிறதோ அவை மீண்டும் இருண்ட காலத்திற்கே செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம்.

சில வாரங்களுக்கு முன் சுப்ரமணிய சிவாவைப் பற்றி சிலவாரங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் திரு முரளி. கேட்கும் போது, நம்மையறியாமல் கண்களில் நீர் திரளும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளி காலை 0845க்கு முடிந்தால் பொதிகை பாருங்கள்.

1 comment:

  1. ஒரு புத்தகத்தில் வாசித்தது கீழே உள்ள பத்தி. அதில் குறிப்பிடும் “அலி சகோதரர்களும்” இந்தப் பதிவின் “அலி சகோதரர்களும்” ஒன்றுதான் என்று கருதுகிறேன்:
    ______________________________________________________________

    ”என் தோள்களின் மீதமர்ந்திருக்கும் இரு சிங்கங்கள்” என்று காந்திஜியால் வர்ணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயான “ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள், தன் கையால் கைராட்டையில் ஒரு காதி ஆடையை நெய்து கொண்டு வந்து, “இதை கத்ர்-ஆக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று காந்திஜியிடம் அளித்தார்.

    அதுவரை காதி என அழைக்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாள துணி, அதுமுதல் “கதர்” என அழைக்கப்பட்டது!!

    (பக்கம்: 72, “தியாகத்தின் நிறம் பச்சை” - ஆசிரியர்: பேராசிரியர் அப்துஸ் ஸமது)

    https://www.facebook.com/hussain.amma/posts/1117538314970749

    ReplyDelete