Tuesday, November 21, 2017

ஜெயில்.

அது ஒரு விளையாட்டுப் புல்லாங்குழல் போலத் தெரிந்தது. நிஜமான குழலாக இருக்க வாய்ப்பில்லை. அல்லது ஒரு குச்சியோ என்னவோ? அந்தச் சிறுமி அதைக் கையில் வைத்துக் கொண்டு,சுழற்றிக் கொண்டே இருந்தாள். நாலு அல்லது ஐந்து வயதுக்குள்தான் இருக்கணும்.  அந்த வயதில் குழந்தைகளுக்கு தனி ஜொலிப்பும் ஈர்ப்பும் இருக்கிறது.  ரயில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. மதிய நேரமாதலால் பலரது கண்களில் உறக்கம்.  சிறுமியும் அவள் தாயும் சைட் லோயர் பர்த்தில் அமர்ந்து கொண்டிருந்தனர். நான் மேலே.

சிறுமிக்கு போரடித்தது போல.  “மம்மி... டாக் டு மி...” என்றது.

அவளது அம்மா ரயில் கிளம்பியது முதல்,  மொபைலை விட்டு கண்களை விலக்க வில்லை.

‘மம்மீ..... ப்ளீஸ் ...’

‘சுஜீ... கீப் கொயட்..’

‘இட்ஸ் போரிங் மம்மீ...’

இக்கால அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் தாய்மொழி வராது போல..!

‘யூ ஃபீல் ஹங்ரி..?’

மொபைலைவிட்டு கண்ணை எடுக்காமல், பையைத் துழாவி ஒரு பிஸ்கட் பாக்கட்டை எடுத்து நீட்டினார், அந்த மாது.

“நோ.. ஐ டோன்ட் நீட்..”

கொடுத்த பிஸ்கட் பாக்கட்டை அம்மாவின் மடியிலேயே வீசியெறிந்தாள்.

அச்சிறுமி என்ன நினைத்தாளோ, திடீரென கையில் வைத்திருக்கும் புல்லாங்குழலால், பக்கத்திலிருக்கும் பயணிக்கு ஒரு அடி கொடுத்தாள். இதைச் சற்றும் எதிர்பாராதா அந்த ஆசாமி, அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தார். உற்சாகம் பெற்ற அக்குழந்தை எதிர் சீட்டிலிருப்பவருக்கும், அந்த குச்சியால்  ஒரு அடி கொடுத்தாள்.  இதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அந்த மாது, ‘நோ.. சுஜீ... ‘ என முணகினார்.  

இந்த விளையாட்டு சிறுமிக்கு சுவாரஸ்யமாய் இருக்கவே, மற்ற பயணிகள் எல்லோருக்கும், புல்லாங்குழல் அடி கொடுக்க ஆரம்பித்தாள்.

அடிப்பது குழந்தையாயிற்றே... என்ன செய்ய முடியும்? திட்டவா இயலும்? சிலர் சிரித்து வைக்க, சிலர் ‘அப்படியெல்லாம் செய்யக் கூடாது.. போய் அம்மாவிடம் உட்கார்..’ என உபதேசம் செய்ய,  சிலர் தானாகவே, அடி விழும் சமயம் கையில் பெற்றுக்கொள்ள, சிலர் நகர்ந்து அமர்ந்து கொள்ள.. சிறுமிக்கு இவை தமாஷாக அமைந்து விட்டது போல.

அடுத்த பகுதியில் இருப்பவர்களுக்கும் அடி கொடுக்க ஆரம்பித்தாள் சிறுமி.  

“குழந்தையைப் பாருங்கள்... கண்ட்ரோல் செய்யுங்க...” என்ற  விண்ணப்பங்களுக்கு, ‘சுஜீ....கீப் கொயட்..” என்ற முணகல் மட்டுமே அந்த மாதுவிடமிருந்து பதிலாய் வந்தது. அடி கொடுப்பதும் சிரிப்பதுமாய் இருந்தாள் சிறுமி.

அடுத்த பகுதியில் ஒரு பெரியவர். பார்ப்பதற்கு, எழுதுவைதை நிறுத்திவிட்ட எழுத்தாளர் போலவோ, ரிடயர்டு தாசில்தார் போலவோ இருந்தார்.  ஆரம்பத்திலிருந்தே, குழந்தையின் அடத்தை ரசிக்கும் மூடில் அவர் இல்லை.

அவரை அடிப்பதற்கு குச்சியை ஓங்கும் சமயம்,  கண்களை உருட்டி, விரலை உதடுகள் மீது வைத்து, ‘டோண்ட் டு இட்..’ என்று முறைத்தார். மற்றவர்கள் எல்லாம்,  எதிர்ப்பின்றி அடி வாங்கிக்கொள்ள, இந்தப் பெரிசு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என அவளுக்குப் புரியவில்லை. அவரை விட்டு தயக்கத்துடன் விலகி, அடுத்த பயணிக்கு அடி கொடுக்க   நகர்ந்தாள். நிம்மதியுடன் திரும்பிய பெரியவருக்கு, அடுத்த நொடி அதிர்ச்சி காத்திருந்தது. அவர் எதிர்பாரா சமயம், அவரது சொட்டைத் தலைமீது ஓங்கி ஒரு அடி கொடுத்தாள் அவள். அடி வலுவாகப் பட்டுவிட்டது போல.  கண்கள் சிவக்க, சடாரென எழுந்து, அந்தச் சிறுமியின் கையிலிருந்த புல்லாங்குழலைப் பிடுங்கி, கரும்பு ஒடிப்பது போல, படாரனெ உடைத்து, அந்த மாது இருக்கும் பக்கம் வீசி எறிந்தார்.

தனது குச்சி உடைக்கப்பட்டதைக் கண்ட சிறுமி, பெருங்குரலெடுத்து ஓலமிட ஆரம்பித்தாள். அதுவரை மொபைலையே நோண்டிக்கொண்டிருந்த அந்த மாது,  நடந்ததைப்  பார்த்ததும் வெகுண்டெழுந்து, அச்சிறுமியின் அழுகுரலையும் மீறி பெருங்குகுரலெழுப்பி அவரிடம் சண்டைக்குப்போனார்.

அடுத்த பதினைந்து நிமிஷம் ஆங்கில வசவுகளும், காட்டுக் கூச்சலும், குழாயடி சண்டியாய் கம்பார்ட்மெண்டை நிரப்பின. 

“குழந்தையிடம் எப்படி நடந்துகொள்ளணும் தெரியாதா முட்டாளா நீ? வயசாயிடிச்சே.. புத்தியில்லையா” என்பதும்; “குழந்தையை வளர்க்கத் தெரியாத நீ ஒரு அம்மாவா...” என்பதும் வசவுகளின் சாரம்.

அக்கம் பக்கத்திலிருப்போர் சமாதாணப்படுத்த, சரட்டென திரைச்சீலையை இழுத்து மறைத்துக் கொண்டு படுத்துவிட்டார் பெரியவர். பருத்த சரீரம் மேல்மூச்சு வாங்க, காச் மூச் சென கத்திக் கொண்டிருந்தார்  அந்த மாது.

உடைந்து போன புல்லாங்குழலை கையில் வைத்துக்கொண்டு, இந்தக் கணமே புதுசு வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தது அக்குழந்தை.

சீட்டிற்கடியில்  பிணைக்கப்பட்டிருந்த ஷூட்கேசைத் திறந்து, அதிலிருந்து, வேறு ஒரு மொபைலை வெளியே எடுத்து,  ஏதோ ஒரு விளையாட்டை ஓபன் செய்து, அச்சிறுமியிடம் நீட்டினார் அம்மாது.

விசும்பிக்கொண்டே, விளையாட்டில் மூழ்கிப்போனாள் சிறுமி. 

அம்மாதுவும் இடைஞ்சல் இன்றி, தனது மொபைலில் ஆழ்ந்து போனார்.


இப்பொழுது கம்பார்ட்மெண்ட் அமைதிபெற, ரயில் அது தன் வேகத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது.Thursday, November 16, 2017

கோகர்ணா, முருடேஷ்வர், மங்களூர் – கொள்ளை அழகு

சுவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டு, எவ்வளவு நேரம்தான், யாருமற்ற மனிதனாய், தன்ந்ததனியனாய் அமர்ந்து கொண்டிருப்பது? அரசியல் விவாதங்கள் எல்லாம் பொருளற்றதாக, நேர விரயமாகத் தோன்றவே முகனூலிலிருந்து பெரும்பாலும் வெளியேறிவிட்டேன்.  அவரவர்கள் தங்களது மனோ நிலைகேற்றபடி நிலைபாட்டினை மேற்கொண்டபின்னால், விவாதங்களினால்  என்ன பயன்?  

எனவே, சில மாதங்களாக சுற்றுலா மேற்கொண்டிருப்பதையும் அதன் தொடர்பான அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொண்டிருப்பதையும்,  இந்த வலைப்பூவைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் அறிவீர்கள்.  உலகத்தோடு ஒட்டி ஒழுகவியலாத, தெரியாத சில விசித்திரப் பிறவிகள் உலகில் ஜனித்து விடுகின்றன. அவர்கள் கதவை அடைத்துக் கொண்டு பேசாமலிருந்தால்கூட, பிரச்சினைகள் தேடி வரும். பகைமை நாடி வரும். நான் அந்த வகையில் பிறந்துவிட்ட ஆசாமி. யாரிடம் பேச?  என்ன பேச?  

எனவே புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய கலாச்சாரங்களை நோக்குதல் போன்றவை ‘வம்பு தும்பில்லாததாகத்’  தோன்றவே, பிற இடங்களை நாடிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்த சுவாரஸ்யம் எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ... யாரறிவர்? என் பயணங்கள் கூட, பெரும்பாலும் ‘சோலோ

எனது அடுத்த பயணம் பற்றி யோசிக்கும் பொழுது, கர்நாடகத்தின் கோகர்ணாவிற்கு 1973ல் சென்றது நினைவிற்கு வந்தது.  எதோ ஒரு கோயிலும், கோயிலை ஒட்டிய ஒரு கடற்கரையும் பார்த்தது  மங்கலாக நினைவிற்கு வந்தது. இப்பொழுது அந்த இடம் எப்படி இருக்கும்? அதே இடத்தை  வயதும் அனுபவமும் ஏறியபின் பார்க்கும் பொழுது  சிந்தனையில் ஏற்படும் தாக்கம் எப்படி இருக்கும்?
கூகுளாரை தோண்டிய பொழுது, கோகர்ணாவின் கடற்கரைகளும், கோயில்களும் விரிந்தது.  திரையில் விரிந்ததை நேரில் காண விழைந்து, புதுவையிலிருந்து மங்களூருக்கு ரயிலில் பயணித்தேன். புதுவையிலிருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து அங்கிருந்து கர்னாடக அரசின் ‘ஐராவதம்’ போன்ற சொகுசுப் பேருந்துகள் ஒன்றில் சென்றிருக்கலாம்தான். பேருந்துப் பயணம் சலிப்பூட்டுவதும், உடல்வலி தரக்கூடியதுமாய் அமைவதால், சுற்றுவழியாயிருந் தாலும் மங்களூர் சென்று, அங்கிருந்து கோகர்ணா செல்லத் திட்டமிட்டேன்.

காலை பத்து மணிக்கு மங்களூர் சென்றடைந்தபொழுது, தோதான நேரத்தில் கோகர்ணாவிற்கு தொடர்வண்டி அமையவில்லை. விடாது கருப்பு போல, வேறு வழியின்றி, மங்களூரிலிருந்து கோகர்ணாவிற்கு விரைவுப்(!) பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாயிற்று. பேருந்து சென்றது.. சென்றது..சென்றுகொண்டே இருந்தது. ஊர்தான் வரும் வழியாய் இல்லை. எப்பதான் ஊர் போகும் என வினவ, இரவு ஏழு மணிக்கு மேல் ஆகும் என்றார் நடத்துனர்.  இருநூறு கிலோமீட்டருக்கு ஏழு மணி நேரமா? கடவுளே!
அவ்வப்பொழுது, ஏதோ ஒரு ஊரில் வண்டி நிற்கும். ஓட்டுனரும், நடத்துனரும் மின்னல்போல இறங்கி மறைந்துவிடுவர்.  இரண்டே  நிமிடத்தில் திரும்ப ஆஜராகி பஸ்ஸை எடுத்துவிடுவர்.  டைம் கீப்பரிடம் ரிப்போர்ட் செய்துவிட்டு வந்துவிடுவார்கள் போல.  எனக்கோ இயற்கை உபாதை அவசரம்.  நம் ஊர் போல, ‘வண்டி பத்து நிமிஷம் நிற்கும்.. டீ சாப்டரவங்க சாப்டலாம்..’ என்ற அறிவிப்பைக் காணோம். எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க இயலும்? முருடேஷ்வர் என்ற ஊரில், பஸ் நின்றதும்  அதே போல கண்டக்டர் மின்னலென மறைந்தார். விரட்டிக்கொண்டுபோய் அவரைப்பிடித்து, ஒருவிரலைக் காண்பித்து அனுமதி பெற்று  வேலையை சடுதியில் முடித்துக் கொண்டு, திரும்ப வந்து பார்த்தால் பஸ்ஸைக் காணோம். மிரண்டுபோய் எனது உடைந்த கன்னடத்தில், ‘எங்கய்ய இங்கே நின்று கொண்டிருந்த கோகர்ணா பஸ்ஸைக் காணோம்..? ‘ என வினவ, அதோ போய்க்கொண்டிருக்கிறது பாருங்க.. அதான் உங்க பஸ் என பதில் வந்தது.  பிடரியில் இடிபட ஓடிப் பார்த்தேன்.  ம்ஹூம். 

டைம்கீப்பரிடம் ஓடிவந்து பஸ்ஸைத் தவறவிட்டதையும், லக்கேஜ் அந்த பஸ்ஸில் போய்விட்டதையும்  ஆங்கிலத்தில் விவரிக்க,  அவர் மொழி புரியாமல் விழிக்க,  நான் உடைந்த கன்னடத்தில் விவரித்து ஒருவழியாக அவர் புரிந்துகொண்டு, அடுத்த டெப்போவிற்கு போன் செய்து விடுகிறேன், லக்கேஜ் இருந்தால் எடுத்து வைப்பார்கள், இப்ப நீங்க அடுத்த பஸ்ஸைப் பிடித்து கோகர்ணாவிற்குப் போங்கள் என்றார்.

அடுத்த டெப்போ எங்கே இருக்கு?
அது ‘குண்டா’வில். 
எவ்வளவு நேரம் ஆகும்?
ஒன்றரைமணி நேரம் ஆகும்.
அதற்குள் நிறைய ஸ்டாப்பிங் இருக்கே... அதற்குள் எனது லக்கேஜை எவரேனும் எடுத்துச் சென்றுவிட்டால்?
அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.  அடுத்த டெப்போவிற்கு தகவல் கொடுக்க இயலும்.. அவ்வளவே!
சரி... கண்டக்டரின் மொபைல் நெம்பர் உங்களிடம் இருக்கா?
இல்லையே...!!!

இவர்களை நம்பிப் பயனில்லை என முடிவுசெய்து, எதிரே இருந்த டாக்ஸி ஸ்டேன்டிற்குப் போய, ஒரு டாக்ஸியைப் பிடித்தேன். அதற்குள் இருபது நிமிடம் கடந்துவிட்டது. முப்பத்தைந்து கிலோமீட்டர் விரட்டிச் சென்றபின் விட்டபஸ்ஸைப் பிடிக்க முடிந்தது.  நல்லவேளையாக லக்கேஜ் அங்கேயே இருந்தது.

அடுத்த மூன்று நாட்களும் கோகர்ணா கேம்ப். 
கோகர்ணாவிற்கு ஏகப்பட்ட புராணங்கள். ராவணன், சிவனை நோக்கி தவமிருந்து ஆத்மலிங்கம் ஒன்றை பெற்றானாம். ஓர் அசுரனின் கையில் ஆத்மலிங்கம் கிடைத்துவிட்டால், உலகு என்னாவது என கவலைப்பட்ட தேவர்கள் ஒன்றுகூடி யோசனை செய்து, பிள்ளையாரிடம் வேண்ட, அவர் அவர்கட்கு உதவுவதாக வாக்களித்து, ராவணனை வேறு ஒரு வேடத்தில் அடைந்தாராம். மாலைச் சடங்குகளைத் தவறாமல் செய்யும் பழக்கம் உடைய இராவணன், பிள்ளையாரிடம், சந்தியா வந்தனம் செய்துவிட்டு வரும்வரை இந்த லிங்கத்தை கையில் வைத்திருக்கவேண்டும் எனக் கேட்க, ‘சரி... வைத்துக் கொள்கிறேன். ஆனால் நான் மூன்றுமுறை கூப்பிடுவேன், அதற்குள் நீ திரும்ப வந்து லிங்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் லிங்கத்தை கீழே வைத்துவிடுவேன்’ என பதிலுரைத்தாராம்.  சந்தியா வந்தனம் செய்துவிட்டு வருவதற்குள், பிள்ளையார், மூன்றுமுறை ராவணா..ராவணா என அழைக்க, வர இயலாத நிலையில் ராவணன். லிங்கத்தை அங்கேயே வைத்துவிட்டு மறைந்துவிட்டாராம் பிள்ளையார்.  ராவணன் பெற்ற வரத்தின்படி லிங்கம் எங்கே வைக்கப்பட்டதோ, அந்த இடத்திலேயே சிவன் ப்ரதிஷ்டை ஆகிவிடுவாராம். அதன்பின் அகற்ற இயலாதாம்.  கோபம் கொண்ட ராவணன் தன் முழு பலத்தையும் பிரயோகித்து, லிங்கத்தை பிடுங்க முயல,  சில பகுதிகள் மட்டும்  சிதறி அருகில் இருந்த சில ஊர்களில் (நான்கு இடங்கள்) விழுந்தனவாம். அப்படி விழுந்த இடங்களில் ஒன்றுதான், இப்பொழுது பிரபலமாக இருக்கும் ‘முருடீஷ்வரர் கோயில்’.

(Ravana, the  king of Lanka, received the Aatmalinga from Shiva after he had performed a penance at Mount Kailash reciting self-written Shivatandavastotram. Shiva instructed Ravana that the sacred Aatmalinga should not be placed on the ground as it would establish itself where placed on earth. On his way back to Lanka, Ravana stops for his evening prayers at Gokarna.

As Ravana was coming near Gokarna. Maha Vishnu who had 
known well that Ravana was punctual in performing his periodical 
rites (Sandyavandhana), hides sun with his Sudarshana Chakra 
(Wheel). Thinking that it was time to perform the evening rites, 
Ravana finds a  boy (Lord Ganesha in disguise) and asked him to 

hold the Atma linga in his hand till he came back after finishing the rites. Lord Ganesha agreed to hold the linga on one condition that he would do so till he would be able to bear the weight of Linga and that thereafter he would call Ravana three times and if failed to come to him by then he would place the linga on the earth. Lord Ganapathi calls Ravana three times when he was performing his rites and places the linga on the earth and he vanished. The Atma linga at once got firmly entrenched in the earth.
Ravana learned that he had been tricked by the Gods. To prevent Ravana from getting a weapon as powerful as the atmalinga, Ganesha, in the disguise of a   boy, tells Ravana that he will hold the atmalinga until Ravana finishes his prayers. As soon as he receives the atmalinga, Ganesh promptly puts it down. Ravana tries to extricate it, resulting in throwing the coverings of the Linga to Surathkal, Dhareshwar, Gunavanteshwar, Murudeshwar and Shejjeshwar temples.)

இதில் தாரேஷ்வர், குணவந்தேஷ்வர், முருடேஷ்வர், 
ஷெஜ்ஜெஷ்வர் ஆகிய கோயில்களைத் தரிசிக்க முடிந்தது.  
இதுவல்லாமல் இந்த இடம் முன்னோர்களுக்கு அபர 
காரியங்கள் செய்யுமிடவாகவும் திகழ்கிறது. அருகில் இருக்கும் மஹா கணபதிகோயில், பத்ரகாளிகோயில் ஆகியவும் புகழ்பெற்றவை. இங்கே இருக்கும் வினாயகர் போலவே, இடுகுஞ்சி  என்ற இடத்திலும் இரு கைகளை மட்டும் கொண்டு, நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார் வினாயகர்.  நம் ஊர் பிள்ளையார்பட்டி போல இடுகுஞ்சி வினயகர் பிரபலம்

முருடேஷ்வர்கோயில், கோயில் என்ற நிலையில் மட்டுமன்றி பெரிய சுற்றுலாத்தலமாகவும் இருக்கிறது. மிகப்பெரிய சிவன் சிலை; மிகப்பெரிய கோபுரம்; அருகேயே அழகான கடற்கரை... வேறேன்ன வேண்டும் ஒரு சுற்றுலாத் தலத்திற்கு? கோபுரத்திற்கு  பதினெட்டு நிலைகள்.. கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல லிஃப்ட் அமைத்திருக்கிறார்கள். அங்கிருந்து விரியும் காட்சிகள் அழகோ அழகு.

கோகர்ணாவிற்கு வருவோரில் கோயில்களை நாடி வருவோரைப் போல, ‘கோவா’ போல அனுபவிக்க வருபவர்களும் அதிகம். அங்கே இருக்கும் ‘ஓம் பீச்’, ‘குண்ட்லே பீச்’ புகழ்பெற்றவை.  ஓம் பீச்சின்ன் கடற்கரை ஓம் என்ற எழுத்துபோல இருக்கிறது.

குண்ட்லே பீச்சின் அமைப்பு மிக அழகு. இரு குன்றுகளுக்கிடையே புகுந்து, பின் காளான் தலைபோல  விரியும், ஆழமற்ற-அலைகளற்ற கடல். என்னே அழகு! மெல்ல மெல்ல மயிலிறகுபோல, நுரை போலத் தழுவிச்செல்லும் சிற்றலைகள், இடுப்புவரை மட்டுமே ஆழம் உள்ள கடல், தெள்ளத் தெளிவான நீர். சதா வீசும் தென்றல்.  ஆஹா.. மாலை மூன்றுமணிக்கு கடலில் இறங்கினால், அந்தி சாயும்வரை ஆனந்தக் குளியல். மெரினா போல வழியெங்கும் பரவியிருக்கும் பிச்சைக்காரர்கள், பஜ்ஜி,பலூன் கடைகள் என எதுவில்லை. பெரிய கடற்கரையில் ஆங்காங்கே பீச் வாலிபால் விளையாடும் இளைஞ,இளைஞிகள்.  வெளி நாட்டினர் ஏராளம். தள்ளி நிற்கும் தாக சாந்திக் கடைகள்.  கோகர்ணாவின் கடற்கரைகள் கோவாவின் கடற்கரைகள் போலவே நல்ல அழகு.. ஆனால் குறைந்த கூட்டம்.  நீர் விளையாட்டுகள், பாரா க்ளைடிங் என பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளம்.  மீர்ஜான் கோட்டை என ஒரு அழகான கோட்டை கோகர்ணாவிற்கு அருகில் உள்ளது.  12ம் நூற்றாண்டைச் சார்ந்தது.  மிகவும் அறியப்படாத அழகான கோட்டை.    மூன்று நாட்கள் செலவழித்துவிட்டு, பின் மங்களூர் சென்று, அங்கேயுள்ள பிரபலமான கோயில்களைக் கண்டு ஊர் திரும்பினேன்.

1973ல் இந்த இடத்தைப் பார்த்ததற்கும் இப்போதைக்கும் என்ன வித்தியாசம்? கோயில்களில் ஒன்றிப்போய் விடமுடிகிறது. இயற்கையை இன்னும் ஆழமாய் உணர,அனுபவிக்க முடிந்தது.

இறுதியாக:  இந்தியாவின் மேற்குதொடர்ச்சிமலைகளும், அதயொட்டி அமைந்திருக்கும் அரபிக்கடலும் இயற்கை நமக்குக் கொடுத்த வரம். மலைகளும் சமுத்திரமும் எங்கே ஒருங்கே இவ்வளவு தூரம் பார்க்கக் கிடைக்கிறது? மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பசுமையும், அதன் வளமும் காணச் சலிக்காதவை. (கொங்கன் ரயில்வேயில் பயணிக்க வேண்டும்)
அரபிக்கடல்போல, வங்காளவிரிகுடா ஏன் அவ்வளவு கவர்ச்சிகரமாக அமையவில்லை? யோசித்தால், இயற்கைச் சீற்றங்கள் குறைவாக இருப்பதும், அதன் பின்னனியில் அமைந்துள்ள மலைத் தொடர்களும் தான் காரணமோ என்னவோ?


 
OM BEACH

Kuntle BeachAbove three are Murudeshwar

A small falls near Gokarna

Above two are Apasarakonda water falls near Gokarna

Add caption


Above two are Mirjan Fort

Koti Theertha - GokarnaAbove are some of the temples of Managalore