Monday, January 30, 2012

யதா ராஜா... ..


அரசு அலுவலகங்களில், பணி ஓய்வு பெறுபவர்களுக்கும், பதவியர்வு பெற்றோ அல்லது மாற்றல் பெற்றோ வெளியூர் செல்லும் நபர்களுக்கும் “பாராட்டு விழாக்கள் நடத்துவது என்னும் சடங்கு, நடந்து கொண்டுதான் இருக்கும்.
விழாவிற்கு சற்றுமுன் வரை, சம்பந்தப்பட்டவரை, அவரவர் அனுபவத் திற்கேற்றாற் போல, ‘வசவு மழை பொழியும் அன்பர்கள், மைக்கின் முன் நின்றதும், விழா நாயகனை வில்லாதி வில்லன், சூரதி சூரன், நல்லவன், வல்லவன், ஆய்... ஊய்.. என அலப்பரை செய்வதைக் கேட்டு, சலித்துவிட்டது.
எனவே, இது போன்ற சடங்கு விழாக்களில் கலந்து கொள்வதில் உற்சாக மேதும் காட்டுவதில்லை.
இது போன்ற ஒரு பாராட்டுக் கூட்டம், இன்று அலுவலகத்தில் ஒருவருக்கு நடைபெற்றது. பாராட்டு மழையின் ஊடே, ஒருவர், ஒரு சமஸ்கிருத மேற்கோள் ஒன்றை குறிப்பிட்டார். “Yatha Raja Thatha Praja !
என் போன்ற அறிவிலிகளுக்காக அதனை தமிழில் “அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிமக்கள் என்று மொழியாக்கம் செய்தார்.
பலமேடைகளில், பலராலும் மேற்கோள் காட்டப்படும் இந்த வாக்கியத் தினை, யார் சொன்னது என்று அறியும் ஆவல் ஏற்பட்டது! நிச்சயமாகத் தெரிந்த விஷயம், இது இது ராஜாக்கள் காலத்தில் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே.
தேடிப் பார்த்ததில், இது சாணக்கியனின் சொல். அரசன் என்ன செய்கிறானோ, அதைத்தான் குடி மக்களும் பின்பற்றுவர். அவன் செய்வதை குடிகள் கவணமாகப் பார்த்துக் கொண்டிருப்பர். ஆகவே ராஜாவே, நீ முன்னுதாரணமாக, யோக்கியனாக, நல்லவனாக, தீரனாக, தயாள சிந்தையுடன் நடந்து காட்ட வேண்டியது அவசியம்; அப்போது தான் நீ சிறந்த குடிமக்களைப் பெறுவாய் என்ற பொருளில் சொல்லப்பட்டது.
முடியாட்சிகாலத்தில், ராஜாக்கள் இந்த உபதேசத்தினை எந்த அளவிற்கு கடைப்பிடித்தனரோ தெரியவில்லை.  அரசன் எந்த “சமயத்தை தழுவுகி றானோ, அந்த “சமயம் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை மட்டும் பார்த்திருக்கிறோம்.
குடியரசு காலத்தில், அரசுகளை மக்களே தீர்மாணிப்பதால், மக்கள் “எம் மாதிரியான அரசு வேண்டும் எனத் தீர்மாணிக்கிறார்களோ, அம்மாதிரியான அரசே மக்களுக்கு வாய்க்கும். (அதாவது yatha praja, thatha raja என உல்டாவாகப் படிக்க வேண்டும்)

தங்களுக்கு எந்த மாதிரியான அரசு வேண்டும் என்பதை தீர்மாணிக்கும் நேரங்களில், மக்கள், தங்களை ஆளுவதற்கு (அதாவது ஓட்டு போடுவதற்கு)  எதனை அளவுகோலாக கொள்ளுகின்றனர் என்பதை, “நூறு சதம்”, ‘இதுதான்  என்பதை தீர்மாணமாகச் சொல்ல முடியவில்லை.
இந்தியத் தேர்தல்களில், பெரும்பாலான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் ‘இலவசங்கள் முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன.
மக்களிடம் வாக்குகள் பெறுவதற்கு, இலவச லேப்டாப், இலவச கிரைண்டர், இலவச மிக்ஸி, இலவச தாலிக்குத் தங்கம், இலவச நிலம், இலவச பசுமாடு, இலவச ஆடு, இலவச கோழி, இலவச சாப்பாடு, இலவச பிரியாணி, இலவச குவார்ட்டர், இலவச ரேஷன் அரிசி, இலவச டி.வி – ஆகியவைதான் தீர்மாணிக்கின்றனவா?
அல்லது மக்களே, அரசியல் வாதிகள் மாறி மாறி சம்பாதித்துக் கொள்ளட்டும் என தேர்ந்தெடுக்கிறார்களா - தெரியவில்லை!
தற்காலத்தில், சாணக்கியன் சொல்லான ‘அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்பதோ, அல்லது  நவீன மொழியான “குடிகள் எவ்வழியோ அவ்வழியே அரசுஎன்பதோ பொறுத்தமானதாகத் தெரியவில்லை.
“மக்கள் எதற்கு தகுதியானவர்களோ, அதற்கு ஏற்ற அரசையே பெறுகிறார்கள் என்பது தான் பொறுத்தமாகத் தெரிகிறது!
என்றாவது ஒரு நாள், “மக்கள் அரசு என்றால் என்ன?, “அரசியல் அதிகாரம் மக்களிடம் சேர்வது என்றால் என்ன?, “அம்மாதிரியான மாற்றம் நிகழ என்ன செய்ய வேண்டும்?, “சரியான அரசியல் கல்வியை எங்கு பெற வேண்டும்? என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமலா போய்விடு வார்கள்?
நம்பிக்கை கொள்வோம்.

Saturday, January 28, 2012

ஆஸ்திரேலிய மண்ணில் டோனி...


ஆஸ்திரேலியர்களே! நீங்கள், கிரிக்கெட்டில் எங்களை புரட்டி எடுத்துவிட்டிர்கள்! ஒத்துக் கொள்கிறோம். இன்னமும் டெஸ்ட் ரேங்கில் நாங்கள் இரண்டாம் நிலைதான்! மறக்க வேண்டாம்


ஆனால் ஆஸ்திரேலியர்களே! உங்களுக்கு வெற்றியை, இயல்பாக, அடுத்த டீமை அவமதிக்காமல், வசைபாடாமல் பெறத் தெரியாதா? 

நீங்கள் மைதானத்தில், போட்டி அணியினரை வெறியேற்றி, அவமரியாதையாகப் பேசி, அவர்கள் உங்களது நாகரீகமற்ற  நடத்தையின் காரணமாக நிலை தடுமாறும் போது, வீழ்த்துவது எந்த வகையில் நியாயம்?

மைதானத்தில் நீங்கள்  நடந்து கொள்ளும் முறை எந்த நாகரீகத்தின் பாற்பட்டது என விளங்கவில்லை. நீங்கள் நடந்து கொள்ளும் முறையிலேயே, உங்களுக்கு திரும்ப பதிலளித்தால் உங்களுக்கு அதைப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையும், பெருந்தன்மையும் இருக்கிறதா கங்காரு நாட்டவரே? இருக்காது! ஏனெனில் உங்களுக்கு தோல்வியை பெருந்தன்மையாக ஏற்கும் மனோபாவம், என்றைக்கும், சற்றும் இல்லை என்பது உலகறிந்த ரகஸ்யம்.

“ஆஷஸ்தொடர் உங்கள் நாட்டில் துவங்கும் முன்னரே, ஃபீல்டுக்கு வெளியே இங்கிலாந்தை திட்டி தீர்த்துவிட்டு, அவர்களை மன ரீதியாக பலவீனப்படுத்தவதை, கொள்கையாகவே வைத்திருக்கிறீர்கள். ஆனால் ‘இங்கிலாந்து நாட்டினர் என்னதான் முயன்றாலும், வசை பாடுவதில் (ஸ்லெட்ஜிங்) உங்களுக்கு நிகராக முடியவில்லை.  

முரளிதரனுடைய பந்தை அடிக்க, நீங்கள் சிரமப்படும்போது, அவரைப் போட்டு படுத்தி எடுத்ததை எவரும் மறக்கவில்லை.  

கபில்தேவ் ஒரு முறை பேட்டிங் செய்யும் போது, அவர் அடித்த பந்து ‘சீ கல் பறவை மீது பட்டு, இறந்த போது, மனதளவில் பாதித்த அவருக்கு, ஒரு பாட்டில் தண்ணீர் கூட தர மாட்டேன் என அடம் பிடித்தவர்கள் தானே நீங்கள்?

ஃபீல்டில் எதிரணியினரை வசைமாரிப் பொழிவதை “ஸ்டீவ் வாஹ்மனதளவில் எதிரணியினரை, கான்சன்டிரேஷன் இழக்கச் செய்து, பலவீனப்படுத்தி, இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல், தவறிழைக்க்ச் செய்து, தோற்கடிப்பது என புகழ்ந்துரைக்கிறார். கிரிக்கெட் “ஜென்டில்மேன் கேம் என்பதை கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா ஆஸிக்களே?

ஆஸ்திரேலியர்களே, உங்கள் கண்டத்தில் வாழும் அனைத்து ஆங்கிலேயரும், இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்பட்ட ‘குற்றவாளிக் கூட்டத்தின் வழித்தோன்றல்கள் தான் என்று சொன்னால் இனிக்குமா? 

உள் நாட்டின் பழங்குடியினரை என்ன செய்து வெளியேற்றினர்கள் என்பது அனைவருக்கும் தெரியுமல்லவா?  இந்தமாதிரி குற்றம் சாட்டுவது தவ று  என்று, எங்களுக்குத் தெரியும். நீங்கள் அடுத்த டீமை வசைபாடுவது, இந்த வகையைத்தான் சாரும் என்பதை, உங்களுக்கு புரியவைக்கவே இது.

ஹர்பஜன் ‘மா கி.. என்று ஹிந்தியில் சொன்னதை ‘மங்கி என்று சொன்னதாக (சிமன்ட்ஸ்) என்ன குதியாட்டம் போட்டீர்கள்? இனத் துவேஷம் என, ஃபிலிம் காட்டினீர்களா இல்லையா? ஒருவேளை ஃபீல்டில் தங்களது செயல்கள் குறித்து சிம்பாலிக்கா சொல்லிவிட்டார் என புரிந்து கொண்டீகளோ என்னவோ?

நீங்கள் கிரிக்கெட்டில் வசைபாடாத் டீம் ஏதாவது உண்டா? ஜிம்பாப்வே பாட்ஸ்மேன் பிராண்ட்ஸைப் பற்றி மெக்ராத் அடித்த கமெண்ட் என்ன? இயான் போத்தம் அவர்களையும், ஆடம் பரோர் அவர்களையும் நீங்கள் வெறுப்பேற்றும் அளவிற்கு (தனிப்பட்ட முறையில்) திட்டியதை எவரும் மறக்க முடியாது. ரோட்னி மார்ஷ் போத்தம் அவர்களை திட்டியது, தெருக்குடிகாரன் பேச்சைவிட மோசமானதல்லவா?

அதுவும் எதிரணியினர் ஆங்கிலத்தில் கொஞ்சம் வீக் எனத்தெரிந்தால், உங்களது ‘நாகரீகம் கொடிகட்டி பறக்கும். உதாரணம் தான் ஹர்பஜன் கேஸ்.

ஆக, ஆஸ்திரேலியாவில் 4-0 எனற கணக்கில் தோற்றோம். பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கட்களை எறிந்துவிட்டு வந்தனர் என்று சொல்ல முடியாது. அவர்களால், ஆஸ்திரேலிய ‘ஸ்விங்கிங் கண்டிஷனில், எகிறிவரும் ஷார்ட்பிட்ச் பால்களை சமாளிக்க முடியவில்லை. இது தவிற ஆஸ்திரேலியர்களின் ‘கொலைவெறி கமென்ட்ஸ்

ரவி சாஸ்திரி போன்ற சிறந்த ஆங்கில புலமை கொண்டவர்களுக்கு ஆஸ்திரேலியர்களின் ‘வசை களுக்கு, அவர்கள் பாணியிலேயே திருப்பிக் கொடுக்கும் வல்லமை இருந்தது. அவர் அந்த மாதிரி வசைகளை ஆதரிப்பவர் இல்லையென்றாலும், அம்மாதிரியான பதில்கள்தான், ஆஸிக்களை ஒரளவுக்காவது அடக்கி வைக்கும் எனப் புரிந்தவர். ஆஸ்திரேலிய மண்ணுக்கு அதுதான் சரி.

இறுதியாக: ஆஸிக்களே! நீங்கள் வெற்றிக்குத் தகுதியானவர்களே! ஆனால் அதை நாகரீகமாக அடையுங்கள். ‘ஸ்லெட்ஜிங் என்பது விளையாட்டுக்கு எதிரானது (Un sportsman like).  கிரிக்கெட் ஜென்டில்மேன்ஸ் விளையாட்டு எனக் கூறப்படுவது உங்களுக்கு எக்காலத்திலும் பொருந்தாதா? மைதானத்தில் போராடுவது, அக்ரஸிவாக இருப்பது வேறு! வசை பாடுவது வேறு! புரிகிறதா?

Friday, January 27, 2012

வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே.. (ஒரு பக்க சிறுகதை)

நூல் விடுவதற்கு நூதனமான வழிமுறைகள் இருக்கும் போது, விபரீதமான ஒரு வழியைச் சொல்லி வைத்தான், ரகோத்து.


ரகோத்தை உங்களுக்குத் தெரியாது?

ரகோத்தமனுக்கு, ரகோத்தைத் தவிர, ‘தோசைக்கல், ‘பிஸ்கட்டு’ , ‘தவிட்டுப் பானை’, ‘பிசி நாறி என்று  பல பெயர்கள் உண்டு. அவை இடத்துக்குத் தகுந்தாற்போல மாறிக் கொண்டே இருக்கும். அவனை, எப்போது வேண்டுமானாலும், எந்தமாதிரியானலும் "வாரலாம்". கோபமே வராது. சிரித்துவிட்டுப் போய்விடுவான். இவைகளை யெல்லாம் அவன் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டான். இப்போது அதுவல்ல பிரச்சினை.

‘ஒரு மேட்டருக்கு அவனிடம் ஆலோசனை கேட்கப்போய்த் தான், மேற்கண்ட விபரீத யோசனையைத் தந்து, கூடவே அவனும் செயல் பட்டான்.

டோர் பெல் அடித்துவிட்டு, காத்திருந்தபோது உள்ளிருந்து எனது கனவுக்குயில், கனவுக்கன்னி  கூவிற்று! விஷயம் என்னவென்று, உங்களுக்கு புரிந்திருக்குமே?

“யாரு..?

“மீட்டர் ரீடிங் எடுக்க வந்திருக்கிறோம்

“எப்போதும் இருபதாம் தேதி பக்கத்தில் தானே, எடுப்பீர்கள்?

இதை ஏண்டா யோசிக்கலை, ரகோத்து?

“நான் அடுத்த வாரம் நான் லீவு. அதுதான் வேலையை முடிச்சுட்டுப் போயிடலாம்னு!

“லீவுன்னா, அடுத்தவங்க ரீடிங் எடுக்க மாட்டாங்களா? நீங்களேதான் எடுக்கனுமா?

கடன்காரா! ரகோத்தா!

“ஆபீஸில் ஆள் இல்லீங்க!

‘அப்ப நீங்க ஒரு மாசம் லீவு எடுக்கனும்னா, முந்தின மாசமே ரீடிங் எடுத்துடுவீங்களா? எங்களுக்கு அடுத்த பில்லில் பணம் சேர்ந்து வராது?

அடேய், ரகோத்தா.. உனக்கு வச்சுருக்கேன் ஆப்பு...

“அப்படியெல்லாம் செய்ய மாட்டோம்.அதுக்குன்னு ரூல்ஸ் இருக்குல்ல” 
கொஞ்சம் வழிசல் மாதிரி இருக்குதில்ல?

‘இந்த மாசம் பில் எவ்வளவு ஆயிருக்கு?

“ஆயிரத்து எழுநூறு ரூபாய் ஆகியிருக்கு!

“ஏங்க இந்த மாசம் ஏஸி கூட போடவில்லை.குளிர் நாள் தானே?  அதெப்படி அவ்வளவு ஆகும்?

‘ஏ.ஸி போடாட்டி என்ன? வாட்டர் ஹீட்டர் போட்டிருப்பீங்கள்ள?

“அமா...

பிழைத்தேன். “வாட்டர் ஹீட்டரும்" அதிகமா கரண்ட் சாப்பிடுங்க!

‘சாப்பிடுமா?“

‘சாப்பிடும்னா... கரண்ட் அதுக்கும் அதிகம் ஆகும்னு சொல்ல வந்தேன்

“கன்ஸம்ப்ஷன்னு சொல்ல மாட்டீங்களா?

‘நீங்க லாயருக்கு படிக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்!

‘இல்லை டீச்சர் டிரெய்னிங் தான் போயிட்டிருக்கேன்

‘சுதா.. யாரு வாசல்லே? உள்ளேயிருந்து ஒரு குரல். வருங்கால மாமியாரோ?

E.B  மீட்டர் ரீடிங் எடுக்கறாங்கம்மா

ஹா.. சுதாவின் அம்மாவே தான்.

“சரி வர்ரோங்க...

“இப்படி வீடு வீடா பேசிக்கிட்டே ரீடிங் எடுத்தீங்கன்னா, உங்க லீவே முடிஞ்சுடும்.”  திரும்பி உள்ளே போனாள். போகும் போது, வீசிச் சென்ற துப்பட்டா, என் முகத்தில் இயல்பாகத்தான் முகத்தில் பட்டதா?

“நீயும் உன் ஐடியாவும்... கேள்வி கேட்டே சுளுக்கெடுக்கெடுத்துட்டாடா

“அஞ்சு நிமிஷம் அவகிட்ட நின்னு பேச, சான்ஸ் செஞ்சு வச்சேனா இல்லியா? அவ பேரு, என்ன பண்றா, எல்லாம் தெரிஞ்சிகிட்டே இல்ல?

“இதுக்கப்புறம் என்னடா பண்ணலாம்?

“ம்ம்ம்.... நீ வாங்கிக் கொடுத்த R.C க்கு இவ்வளவுதான். அடுத்த ஆலோசனை, அடுத்த தட்சிணைக்கப்புறம் தான்
 
“போடாங்....

ஒரு வாரம் கழித்து, கோவிலுக்கு சென்றிருந்த போது (சாமியைப் பாக்கத்தாங்க), அம்மன் தனது இடத்தைவிட்டு இறங்கி, சௌந்தர்ய லகரியாய், தென்றல் போல, வெளிப் பிரகாரத்தில் சுற்றிக்.. வேண்டாம் இது கொஞ்சம் ஓவர்... எனக்கே சகிக்கலை. 

வெளிப்பிரகாரத்தில் சுதாவைப் பார்த்தேன்.

‘நீங்களா?  அன்னிக்கு எல்லார் வீட்டிலேயும் ரீடிங் எடுத்து முடிச்சுட்டீங்களா?

எங்கடா ஒழிஞ்சு போனே ரகோத்தா?

“ம்.. எடுத்து முடிச்சுட்டேமே? ஏன் கேக்கறீங்க

“எங்க அப்பா விசாரிச்சுட்டாரு.. ரீடிங்குக்கு இன்னும் ஆள் அனுப்பவே இல்லியாம்

“மன்னார் அன்ட் கம்பெணி“ மாட்டிக்கிட்டாங்களா.?

“அது எங்கூட வந்தானே ஒருத்தன், அவன் குடுத்த ஐடியாங்க இது..!

“அப்ப, உங்க ஃபிரண்டுக்குத்தான் துணை வந்தீங்களா?

ஐயோ.. இதென்ன கதையே உல்டாவாகுது?

இல்லீங்க..எனக்குத்தான் உங்ககிட்ட பேசனும்னு ரொம்ப நாளா ஆசை. நீங்க என்னன்னா ரோட்டில திரும்பிக் கூட பாக்க மாட்டேங்கிறீங்க.. அதான், அன்னிக்கு ரீடிங் எடுக்கறாப்புல வந்தேன்.

“ரொம்ப அமெச்சூர்தனமா இருக்கு

சிரித்தேன்.. தோம்

அதன் பிறகு ரகோத்தின் உதவி தேவைப் படவில்லை.

அடுத்த ஒரு  வருடம், உல்லாசப் பறவைகள். தியேட்டர், பீச்.. இத்தியாதி.. இத்தியாதி. கடலைதான்.

அவளுக்கு டிரெயினிங் முடிந்து, அரசுப் பள்ளியிலேயே வேலை கிடைத்து விட்டது.

எனது “பி.ஸி.ஏ வுக்கு என்ன கிடைக்கும்? ஒருவழியாக ரகோத்தின் உறவினர் மூலம், பயிற்சிக்குப்பின்,  ஒரு மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் சென்டரில் வேலை கிடைத்தது. சுளையா இருவதாயிரம் பாக்க முடிஞ்சது.  எல்லாம் சுகமாகப் போய்க் கொண்டிருந்த வேளையில், விஷயம் எங்களது பெற்றோருக்கு தெரிந்து விட்டது. சினிமா மாதிரி, பூகம்பம் எல்லாம் வெடிக்கவில்லை.

சுதாவின் அப்பாதான் வந்து என் அப்பாவிடம் பேசினார்.

“சரி.. காலம் மாறிப் போயிடிச்சு.. பசங்களுக்கு பிடிச்சிருந்தா நாம ஏன் குறுக்கே நிக்கனும்னு எல்லாம் சுலபமா முடிச்சுட்டாங்க.

நாள் குறிக்க வேண்டியது தான் பாக்கி.

இந்த நேரத்திலயா அமரிக்காவில ‘ரெசஷன் வந்து சேரனும்?

‘பெஞ்சில உக்காத்தி வச்சுட்டாங்க..

ரெண்டு மாசமாயிடுச்சு.. கூப்பிடவும் இல்லை.. சம்பளமும் இல்லை..

சுதா வந்தாள்.  ‘ஏய்.. உனக்கு வேலையா போயிடிச்சு? 

‘ஆமாம் சுதா.. ‘அதனால் என்ன?  வேற வேலை கிடக்காமலா போயிடும்? வருத்தப்படாதே!

“சீக்கிரமா பார்..

“ம்ம்ம்ம்...

நாள்தான் ஓடியது..  உருப்படியா வேலை ஏதும் சிக்கலை.

ஒரு நாள் சுதாவின் அப்பா வந்தார்.

இத பார் தம்பி.. நாங்க சுதாவுக்கு வேற இடத்தில, மாப்பிள்ளை பாக்கறோம். கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான்.  உங்ககிட்ட சொல்லிடனும்னு தான் வந்திருக்கேன்.

“உங்க புத்திய காட்டிட்டிங்கள்ள?  நீங்க நெனச்சா அறுத்துவிட இது என்ன கிராமத்து பஞ்சாயத்துன்னு நெனச்சுக்கிட்டீங்களா? எப்படி இந்த கல்யாணத்தை நட்த்துறீங்கன்னு பாக்கறேன். உங்க கண்ணுக்கு முன்னாடியே நானும் சுதாவும் கல்யாணம் கட்டிக்கறோமா இல்லியான்னு பாருங்க!

‘இதோ பார், உன்னை வேண்டாம்னு சொன்னது நாங்களில்லை.. சுதாதான்; தெரிஞ்சுக்கோ.  உங்க விஷயத்தைப் பத்தி மாப்பிள்ளைப் பையன் கிட்ட சொல்லிட்டோம்.  விடலைப் பருவத்தில வந்தது. விட்டுத் தள்ளுங்கன்னு  அவரே சொல்லிட்டாரு..

“அடேய்.ரகோத்தமா.. எங்கடா இருகே?   RC வாங்கித்தரேண்டா.. மனசுக்கு ஆறுதலா ஏதாவது எவனாவது ஏதாவது சொல்லுங்கடா !

Wednesday, January 25, 2012

என்று தனியும் இந்த......


அறுபத்து மூன்றாவது குடியரசு தினம் அனுசரிக்கப்படுகிறது.


1950 ஜனவரி 26-ல், இந்திய பாராளுமன்றம், குடியரசுக்கான புதிய சட்டவரைவை ஏற்றுக் கொண்ட நாள் முதல், இந்தியா மதச்சார்பற்ற குடியரசாக பரிணமித்தது. எதற்காக இந்திய போராளிகளும்,தலைவர் களும் விடுதலைக்காக, சர்வபரித் தியாகங்கள் செய்தனரோ அதற்கான பொருளைத் தந்த நாள் அது.


விடுதலைக்குப் பின்னான இந்தியாவின் வரலாற்றினை புரட்டிப் பார்த்தால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியா இது தானா, என சந்தேகமாய் உள்ளது.

நமது அரசியல் தலைமை, குணம் கெட்டுப் போய், மக்களது பிரச்சினைகளில் சொரணையற்று, பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு,  அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் துடிப்பது கண்கூடாகத் தெரிகிறது. இது குறித்து அவர்களுக்கு வெட்கமேதும் இருப்பதாகத் தெரியவில்லை!

காந்திஜி வெளிநாட்டுத் துணிகளை எரிக்கச் சொன்னார். அவருக்குத் தெரியாதா, உடுக்கக் கோவணம் கூட இல்லாத நிலையில் லட்சக்கணக்கானோர் இருக்க, எதற்காகத் துணிகளை எரிக்க வேண்டும் என? தெரியும். எங்களது செல்வங்களை கொள்ளை கொண்டு போக அனுமதிக்க மாட்டோம் என்பது தானே அதன் பொருள்? உள் நாட்டு நெசவாளர்களின் வயிற்றிலடித்துவிட்டு, அன்னிய துணிகள் வேண்டாம் என்பதுதானே அதன் பொருள்?  இன்றைய நிலை என்ன? சில்லறை வணிகத்தில் கூட அமெரிக்க முதலாளிகளை அனுமதித்தே தீருவேன் என அடம் பிடிக்கிறதே, காங்கிரஸ்!  என்ன ஒரு கொள்கைச் சீரழிவு?

லஞ்சமும், கூட்டுக் கொள்ளையும் அரசியல்வாதிகளின் இரு கண்களைப்போல மாறிவிட்டதே? ஒவ்வொரு தேர்தலிலும் எத்தனை ரௌடிகள், கொள்ளைக்காரர்கள், கற்பழித்தவர்கள், பல்வேறு கட்சிகளின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்கள்? கொள்ளைக்காரர்கள் மட்டுமல்ல, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட அரியணையில் வீற்றிருக்கிறார்களே? அரசு அதிகாரம் என்பது கொள்ளையடிப்பதற்கான எளிய வழியாக மாறிவிட்டது! அரசியல்வாதிகள்-அரசு அதிகாரிகள்– பெருமுதலாளிகள் ஆகியோரது கள்ளக் கூட்டணி எல்லை மீறிப் போய்விட்டது. சமீபத்திய தொலை தொடர்பு ஊழல் சந்தி சிரிக்கிறது.

சுவிஸ் வங்கிகளில் கோடிக்கோடியாய் (460 மில்லியன் என்கிறார்கள்) கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் யார் யார்?  அந்த பட்டியலை வெளியிட எவருக்கேனும் தைரியம் இருக்கிறதா? இந்தியாவிலேயே ஒரு இணைப் பொருளாதாரம் நடத்தும் அளவுக்கு கறுப்புப் பணம் இருக்கிறதே? இவைகளையெல்லாம் வெளியில் கொணரக் கூடாது எனத் 
திட்டமிட்டு செயல்படும் தலைவர்களைப் பெற்றிறுப்பது நமது விதியா? குடியரசின் தோல்வியா?

தற்போதைய அரசியல் தலைமைக்கு, மதங்கள் வேண்டும்! ஜாதிகள் வேண்டும்!  ஏழ்மை வேண்டும். மக்கள் ஒற்றுமையின்றியே இருக்க வேண்டும். கலவரங்கள் வேண்டும். அடிதடிகள் வேண்டும். அப்போது தான், நாட்டிற்கோ, அவர்களுக்கோ பிரச்சினை வரும்போது ஏதாவது ஒரு கலவரத்தைத் தூண்டிவிட்டு, 
பிரச்சினையை திசை திருப்பி, தப்பித்துக் கொள்ளலாம்.


கேவலம், மாநிலங்களுக்கிடையேயான அற்ப பிரச்சினைகளைக் கூட தீர்க்க வக்கற்று, வெட்கமில் லாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டு, ஓட்டுக்களைப் பொறுக்குவதற்காக காத்து நிற்கும் இந்த அரசியல்வாதிகளை என்ன செய்வது?

கலவரங்களில் ஓட்டு ஏதும் சிக்காதா என, பினந்தின்னிக் கழுகுகளைப் போல அலைந்து கொண்டிருக் கின்றனரே!

“முல்லைப் பெரியார் என்ன சீனாவிலா இருக்கிறது?  சர்வதேச நீதிமன்றம் வந்து பஞ்சாயத்து செய்ய?

தெலுங்கானா பிரச்சினையை 1947-முதல் தீர்த்துக்கொண்டிருக் கிறார்கள்!

வடகிழக்கு மாநிலங்களில் என்றும் தீராத (தீர்க்க விழையாத) பிரச்சினைகள்!

காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி தானா என்பது அங்கு போய்ப் பார்த்தவர்களுக்குப் புரியும்.

ஒவ்வொரு போராட்டத்தின் போதும் எவ்வளவு உயிர் இழப்புகள்? எத்தனை கோடிகள் ரூபாய்கள் இழப்புகள்? இது குறித்து ஏதேனும் கவலையோ, அக்கறையோ அரசியல் வாதிகளுக்கு இருப்பதற்கான அறிகுறிகூட காணோம்.


இவர்கள் எந்தகாலத்தில் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கப்போகிறார்கள்?


விடுதலை அடைந்தபின் நாட்டின் ஊழல்களைப் பட்டியல் போட்டால், அடுத்த குடியரசு தினவிழா வரை கூட நீளும்!

இது தவிர, எல்லைக் கப்பாலிருந்து, விடாமல் வரும் பயங்கரவாத பிரச்சினைகளுக்கு அளவில்லை! அதில்கூட முடிவெடுக்க வக்கற்றுப் போய் ‘நபும்சகர்களைப் போல நடந்து கொள்கிறது அரசு.

தாக்குதல், பாராளுமன்றத்தில் நடந்தாலும் சரி, பம்பாயில் நடந்தாலும் சரி. தீர்மானமான நடவடிக்கை என்பது அரசியல் வாதிகளுக்கு மறந்து போன ஒன்று. ஆளாளுக்கு பொறுப்பில்லாமல், மக்களை குழப்பும் விதமாக அறிக்கை விடச் சொல்லுங்கள், அனைவரும் ரெடி!

ஓட்டுக்களுக்காக எதை வேண்டுமானலும், எப்படி வேண்டுமானலும், எந்த அளவுக்கும் கீழ்த்தரமாக பேசலாம் என்பது அவர்களது சட்டவிதி.

காந்திஜி, நேதாஜி, அம்பேத்கர்,ஜவஹர்லால், சர்தார் வல்லபாய் பட்டேல், பகத்சிங், பாரதி போன்றோர் கணவுகண்ட இந்தியா இது தானா?

விடுதலைக்குப் பிறகு, அரசியல் தலைமை, இந்தியா  எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்ய திராணியற்றுப் போயினர் என்பது தான் உண்மை. இந்தியா தனது தேசீய குணத்தை முற்றாக இழந்து நிற்பது எவரது கண்களுக்கும் புலணாக வில்லை.

தொலை தொடர்பு வசதிகள் ஏதுமற்று இருந்த காலத்தில் கூட, ‘ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் இந்தியாவெங்கும் எழுப்பிய அதிர்வினில் சிறு பகுதி கூட,  நமது அரசாங்கத்தால், நமது மக்களின் மீதே நடத்தப்படும் தாக்குதல் குறித்து இல்லை.  காஷ்மீர் படுகொலைகள் பற்றி நாட்டில் எத்துனை பேருக்குத் தெரியும்? வச்சாத்தி வன்முறை பற்றி இந்தியாவில் எத்தனை பேருக்குத்தெரியும்?

உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மட்டுமல்ல நமது 
அரசுகளின் தோல்வி; வெளி நாட்டுக் கொள்கைகளில் கூடத்தான். 

நவீன காலத்தில், பணக்கார நாடுகள், அடுத்த நாட்டின் மீது படையெடுத்துத் தான், கொள்ளையடிக்க வேண்டும் என்ற நியதியை, வெகு காலத்திற்கு முன்னரே மாற்றிக் கொண்டுவிட்டனர். மாறாக, மற்ற நாடுகளின் அரசியல்-பொருளாதார கொள்கைகளை தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொள்வதில் ஈடுபடுகின்றனர். அந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

அவர்களது, நவீனமாக அடிமைப் படுத்தும் யுக்திகளை, சுதந்திரப் போராட்ட்த்தின் போது காட்டிய தீவீரத்தோடு, புத்திசாலித்தனமாக, நமது நாட்டைக் காப்பாற்றுவதிலும், நமது மக்களைக் காப்பாற்றுவதிலும் காட்டியிருக்க வேண்டாம்?

மாறாக தற்போது இந்தியாவை ஆளும் பெருமுதலாளிகள், சர்வதேச பெருமுதலாளிகளோடு கூட்டு சேர்ந்து கொள்ளைக்கு துணையல்லவா போகின்றனரே?

பரிதாபம் என்னவென்றால்,மக்கள் இவை குறித்து விழிப்புணர்ச்சி ஏதுமற்று இருப்பது தான்.

ஜாதியும், மொழியும், மதமும் தங்களை வெறியேற்றுவதை அனுமதிக்காமல்,  நாங்கள் தான் 99%. எங்களுக்காகத்தான் அரசு என புரிந்து கொண்டு, இலவசங்களிலும், சாராயத்திலும், சினிமாக்களிலும் மதி மயங்கிக் கிடக்காமல், கட்சி அரசியலை மட்டும் மனதில் கொள்ளாமல், “உண்மையான அரசியல் அதிகாரம் என்றால் என்ன புரிந்து கொள்வார்களேயானால் மட்டுமே, நாட்டிற்கு விடிவுகாலம்.  

அதுவரை நமது அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டம் தான். 

ஆனால் அப்படியெல்லாம் நடந்துவிடாதபடி மக்களைப் ‘பார்த்துக் கொள்வதில் நம்மவர்கள் கில்லாடிகள்.

இது ஏதோ தீவீரவாத கட்டுரை என நினைத்துவிடாதீர்கள். எனது நாட்டை நேசிப்பதால், “எமது மக்களின் அரசியல் விழிப்புணர்வுகண்டு நொந்து போனதால் எழுந்த சில வார்த்தைகள் தான்.

வாழ்க இந்தியா!