Monday, January 30, 2012

யதா ராஜா... ..


அரசு அலுவலகங்களில், பணி ஓய்வு பெறுபவர்களுக்கும், பதவியர்வு பெற்றோ அல்லது மாற்றல் பெற்றோ வெளியூர் செல்லும் நபர்களுக்கும் “பாராட்டு விழாக்கள் நடத்துவது என்னும் சடங்கு, நடந்து கொண்டுதான் இருக்கும்.
விழாவிற்கு சற்றுமுன் வரை, சம்பந்தப்பட்டவரை, அவரவர் அனுபவத் திற்கேற்றாற் போல, ‘வசவு மழை பொழியும் அன்பர்கள், மைக்கின் முன் நின்றதும், விழா நாயகனை வில்லாதி வில்லன், சூரதி சூரன், நல்லவன், வல்லவன், ஆய்... ஊய்.. என அலப்பரை செய்வதைக் கேட்டு, சலித்துவிட்டது.
எனவே, இது போன்ற சடங்கு விழாக்களில் கலந்து கொள்வதில் உற்சாக மேதும் காட்டுவதில்லை.
இது போன்ற ஒரு பாராட்டுக் கூட்டம், இன்று அலுவலகத்தில் ஒருவருக்கு நடைபெற்றது. பாராட்டு மழையின் ஊடே, ஒருவர், ஒரு சமஸ்கிருத மேற்கோள் ஒன்றை குறிப்பிட்டார். “Yatha Raja Thatha Praja !
என் போன்ற அறிவிலிகளுக்காக அதனை தமிழில் “அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிமக்கள் என்று மொழியாக்கம் செய்தார்.
பலமேடைகளில், பலராலும் மேற்கோள் காட்டப்படும் இந்த வாக்கியத் தினை, யார் சொன்னது என்று அறியும் ஆவல் ஏற்பட்டது! நிச்சயமாகத் தெரிந்த விஷயம், இது இது ராஜாக்கள் காலத்தில் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே.
தேடிப் பார்த்ததில், இது சாணக்கியனின் சொல். அரசன் என்ன செய்கிறானோ, அதைத்தான் குடி மக்களும் பின்பற்றுவர். அவன் செய்வதை குடிகள் கவணமாகப் பார்த்துக் கொண்டிருப்பர். ஆகவே ராஜாவே, நீ முன்னுதாரணமாக, யோக்கியனாக, நல்லவனாக, தீரனாக, தயாள சிந்தையுடன் நடந்து காட்ட வேண்டியது அவசியம்; அப்போது தான் நீ சிறந்த குடிமக்களைப் பெறுவாய் என்ற பொருளில் சொல்லப்பட்டது.
முடியாட்சிகாலத்தில், ராஜாக்கள் இந்த உபதேசத்தினை எந்த அளவிற்கு கடைப்பிடித்தனரோ தெரியவில்லை.  அரசன் எந்த “சமயத்தை தழுவுகி றானோ, அந்த “சமயம் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை மட்டும் பார்த்திருக்கிறோம்.
குடியரசு காலத்தில், அரசுகளை மக்களே தீர்மாணிப்பதால், மக்கள் “எம் மாதிரியான அரசு வேண்டும் எனத் தீர்மாணிக்கிறார்களோ, அம்மாதிரியான அரசே மக்களுக்கு வாய்க்கும். (அதாவது yatha praja, thatha raja என உல்டாவாகப் படிக்க வேண்டும்)

தங்களுக்கு எந்த மாதிரியான அரசு வேண்டும் என்பதை தீர்மாணிக்கும் நேரங்களில், மக்கள், தங்களை ஆளுவதற்கு (அதாவது ஓட்டு போடுவதற்கு)  எதனை அளவுகோலாக கொள்ளுகின்றனர் என்பதை, “நூறு சதம்”, ‘இதுதான்  என்பதை தீர்மாணமாகச் சொல்ல முடியவில்லை.
இந்தியத் தேர்தல்களில், பெரும்பாலான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் ‘இலவசங்கள் முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன.
மக்களிடம் வாக்குகள் பெறுவதற்கு, இலவச லேப்டாப், இலவச கிரைண்டர், இலவச மிக்ஸி, இலவச தாலிக்குத் தங்கம், இலவச நிலம், இலவச பசுமாடு, இலவச ஆடு, இலவச கோழி, இலவச சாப்பாடு, இலவச பிரியாணி, இலவச குவார்ட்டர், இலவச ரேஷன் அரிசி, இலவச டி.வி – ஆகியவைதான் தீர்மாணிக்கின்றனவா?
அல்லது மக்களே, அரசியல் வாதிகள் மாறி மாறி சம்பாதித்துக் கொள்ளட்டும் என தேர்ந்தெடுக்கிறார்களா - தெரியவில்லை!
தற்காலத்தில், சாணக்கியன் சொல்லான ‘அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்பதோ, அல்லது  நவீன மொழியான “குடிகள் எவ்வழியோ அவ்வழியே அரசுஎன்பதோ பொறுத்தமானதாகத் தெரியவில்லை.
“மக்கள் எதற்கு தகுதியானவர்களோ, அதற்கு ஏற்ற அரசையே பெறுகிறார்கள் என்பது தான் பொறுத்தமாகத் தெரிகிறது!
என்றாவது ஒரு நாள், “மக்கள் அரசு என்றால் என்ன?, “அரசியல் அதிகாரம் மக்களிடம் சேர்வது என்றால் என்ன?, “அம்மாதிரியான மாற்றம் நிகழ என்ன செய்ய வேண்டும்?, “சரியான அரசியல் கல்வியை எங்கு பெற வேண்டும்? என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமலா போய்விடு வார்கள்?
நம்பிக்கை கொள்வோம்.

2 comments:

 1. இதற்கும் கல்வி அறிவிற்கும் தொடர்பு உண்டா, இல்லை பெரும்பாலான மக்கள் இலவசங்களை பெருவதை ஒரு சாதாரண தேர்தல் எதிர்பார்ப்பாக கருதுகின்றனரா?
  கல்வி அறிவுக்கும் , காமன் சென்சுக்கும் சம்பந்தம் இல்லை. அதிகம் படிக்காவிட்டாலும் பல கீழ் தட்டு மக்களின் திறமை பாராட்டும் வித்த்தில் அவர்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது.
  “மக்கள் எதற்கு தகுதியானவர்களோ, அதற்கு ஏற்ற அரசையே பெறுகிறார்கள்” என்பது பொருத்தம் தான்.

  ReplyDelete
  Replies
  1. Your observation is correct. But when it will change?

   Delete