Sunday, January 22, 2012

“நண்பன்” திரை விமரிசனம்

தமிழகத்தில் இந்தெந்த நடிகர்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும், இப்படிப்பட்ட ரோல்களைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் கதை இருக்க வேண்டும் என திரைப்படத்துறையினரே சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டுவிட்டு, அதன்படியே படம் எடுத்துவிட்டு, படம் ஓடாவிட்டால், ‘குய்யோ, முறையோ என அலறுவது வழக்கம். 

அப்படியில்லை; நல்ல கதையாக இருந்து, அது சிறப்பாகச் சொல்லப் பட்டிருந்தால், யார் நடித்தாலும், தமிழக மக்கள் ரசிப்பார்கள், படம் ஓடும் என்பதற்கு உதாரணம், ஷங்கரின் ‘நண்பன் திரைப்படம். இப்படத்தின் பூர்வீகம் 
‘3 இடியட்ஸ்என்பது அனைவரும் அறிந்ததே! இப்படத்தின் படத்தின் பெரும்பகுதி மூலத்தின் நகல்!

சவால், சவடால், அடிதடி, ரத்தக் களறி, பில்டப் கொடுப்பது போன்ற, விஜய் படத்தின் எந்த சமாச்சாரங்களும் இல்லாமலேயே இப்படம் ஓடுகிறது. குறிப்பாக தமிழுக்கே உரித்தான ‘பஞ்ச் டயலாக்குகள் கூட இல்லை!

"ஒரு வணிகப்படம்,  ‘அடி, உதை, குத்து, வெட்டு' இல்லாமல் இருந்தாலும், நல்ல கதையாக இருந்தால்,  தமிழில் வரவேற்பு பெறும்" என்ற பாடத்தை திரைப்படத்துறையினர் கற்றுக் கொண்டால் நல்லது.


படம், ஸ்ரீகாந்த, ஜீவா, விஜய் ஆகியோர் இஞ்ஜினியரிங் கல்லூரியில் ராகிங் செய்யப்படுவதுடன் ஆரம்பிக்கிறது. இக் கூட்டணி, ‘வைரஸ் பிரின்ஸிபால் சத்தியாரஜை சமாளிப்பது, இலியானவை சந்திப்பது, இறுதியில் சுவாரஸ்யமான கிளைமேக்ஸுடன், காலேஜ் லைஃப் முடிவது என கதை சுவாரஸ்யமாய் செல்கிறது . விஜய் ‘சமர்த்தாக நடித்துள்ளார். முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்; கேரக்டருக்கு பொருத்தமாக!  மற்றவர்களும் அப்படியே!இலியானா, ஈர்க்குச்சியானா! ஆச்சர்ய அழகு!  நடிக்க, நடனமாட ‘ஹாட்டான‘  நடிகை. நடிக்க பெரிய ஸ்கோப் இல்லாவிடினும் கொடுத்ததை அனுபவித்து செய்துள்ளார்.

வைரஸ் பிரின்சிபாலாக வருபவர் சத்தியராஜ்! நாம் இதுவரை பார்த்த ஜொள்ளு சத்தியராஜா இது! ஃப்ர்ஸ்ட் கிளாஸ். ஹிந்தி மூலக் கேரக்டரில் செய்தவரை விட ஜோர். அவருக்கேற்ற ரோல். பிரமாதமான சாய்ஸ். மனிதர் ஜமாய்த்துவிட்டார்.

டைரக்டர், மூலக்கதையில், சிறு மாற்றங்கள் செய்துள்ளார். ஆனால், ‘ஷங்கர் டச், பாடல் காட்சிகளிலும், சில 'பிக்சைரைசேஷன்' செய்திருப்பதிலும் தவிர வேறெங்கும் காணோம். வழக்கம்போல  ‘ரயில் முழுவதற்கும் வர்ணம் பூசி டூயட் எடுத்துள்ளார், காட்சிகளுக்கு ஒரு ‘ரிச்னஸ்வேண்டுமென்பதற்காக!  இந்த செட்டிங்குகளைவிட விட, ஊட்டிமலைப்பாதை வளைவுகளை ரம்மியமாக காட்டியிருப்பதே அழகு!

மூன்று மணி நேரத்திற்கு  மேலாக படம் ஓடினாலும், மக்கள் கொட்டாவி ஏதும் விடவில்லை! சில பாடல் காட்சிகளைத் தவிர, மற்ற இடங்களில் எல்லாம், படம் சுவாரஸ்யமாக, வேகமாக   நகர்ந்து செல்கிறது.

சுவையான நகைச்சுவை, படமெங்கும் விரவிக்கிடக்கிறது. ‘நிசப்தம், பிராண சங்கடம் போன்றவை கூட அருவருப்பின்றி ரசிக்க முடிகிறது.  நான் பார்த்த தியேட்டரின் ‘ஒலி அமைப்பு தரமற்று இருந்ததால், சில வசனங்கள்  புரியவில்லை!

ஹிந்தியிலும் - தமிழிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்த அமீர்கான், விஜய் இருவரையும் கம்பேர் செய்ய முடியாது. அவரவர்கள் பாணியில் அவரவர்கள் செய்துள்ளனர். ஆனால் அமீர் இன்னும் எனர்ஜடிக்காக செய்துள்ளதாக நினைவு. அனால் 'பாடி லாங்கு வேஜில்', விஜய் பெட்டர். ஸ்ரீகாந்தும், ஜீவாவும் - மாதவன் மற்றும் ஷர்மான் ஜோஷியின் ரிப்ளிகா!

மிக முக்கியமாக, இளைஞர்களுக்கு, ஒரு நல்ல செய்தியினை தெரிவித்துள்ளார் டைரக்டர்.. இதனை ‘சுகி சிவம் போன்றோர் பல சொற்பொழிவுகளில் வலியுறுத்திச் சொல்லியிருந்தாலும், சினிமா என்கிற மீடியா சொல்லும் போது, அதன் வலுவே தனி. மக்கள், குறிப்பாக இளைஞ, இளைஞிகள், இச்செய்தினை  பிடித்துக் கொண்டால் நல்லது. 

மனோஜின் காமிரா, ஷங்கரின் வசனம், ஹாரிஸின் இசை என  யாவும் நன்றாகவே உள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், ஷங்கர், விஜய் ரசிகர்களுக்கும் ஒரு நல்ல விருந்து. குடும்பத்துடன் தயக்கமின்றி பார்க்க வேண்டிய படம்.

நடிப்பு: விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியான, சத்தியராஜ் மற்றும் பலர்.
இயக்கம்: ஷங்கர். இசை ஹாரிஸ் ஜெயராஜ். காமிரா: மனோஜ் 

1 comment:

  1. sorry sir, i dont agree with you. the main plus of 3 idiots is simplicity which is missing in nanban
    and aameer is excellent. and vijay cant even imagine that. and How far u know boman Irani , i dont know. satyaraj is waste.jeeva alone has done well

    ReplyDelete