Monday, August 31, 2020

வியாபார ஆரோக்கியம்.

வீட்டில் களேபரம். ஆளாளுக்கு யோசனை! பரபரப்பு! இங்கும் அங்குமாகப் பாய்கின்றனர். என்ன ஆச்சு? யாராவது காசுள்ள பசையான  விருந்தினர் வந்துவிட்டாரா? 

ஒன்றுமில்லை; வீட்டிற்கு காய்கறிகளும் மளிகை சாமான்களும் வாங்கி வந்தாயிற்று. இவைகளை வீட்டினுள்ளே அழைத்து வருவதற்கான முஸ்தீபுகளுக்குத்தான் இப்படியான ரணகளம். உப்பு, மஞ்சள், வினிகர்,வெண்ணீர் என அனைத்துவகையான அபிஷேகங்களுக்குப்பின்னும்  இரண்டு மணிநேர சன்பாத் (வெயிலில் வை)ஆனால்தான் ஃபிரிட்ஜ்க்குள் காய்கனிகள் குடிபுகும்.

கொரோணா காலம். வாயைத் திறக்கப்படாது. என்னவோ செய்து கொள்ளட்டும்.  நமக்கு விபரம் போதாது.

ஏதாவது சொன்னால், 'உனக்கு வயசாயிடிச்சு; யூ டோன்ட் நோ எனிதிங். யூ மஸ்ட் அவேர்  ஹவ் த வைரஸ் ஸ்பரெட்ஸ் அண்ட் ஹவ் அக்ரஸிவ் இட் ஈஸ். வி டோன்ட் டேக் எனி சான்ஸஸ்.. ஓ.கே?' என மருமகள் வாயை அடைத்து விடுவாள்.  

நமக்குப் புகட்டப் படும் செய்திகள் யாவும் பீதியூட்டுவதாகத்தானே இருக்கு? அல்லது பீதியடைய வைக்கும் செய்திகளை மட்டுமே சொல்கிறார்கள். 

மாதம் ஒருகிலோ உப்பு வாங்கியது மாறி, பத்துகிலோ உப்பும், ஒருகிலோ மஞ்சள் போடி வாங்குகிறோம். 50 கிராமைத் தாண்டாத மிளகு, ஜீரகம், மஞ்சள் பொடியெல்லாம் இப்ப  கிலோக் கணக்கில் வாங்கப்படுகிறது.. 

உபரியாக,  இஞ்சியும் எலுமிச்சையும் சாக்கில் கிடக்கிறது.

ஷோகேஸில் சரித்து வைக்கப்பட்டிருந்த, ஒட்டடை அண்டிய போட்டோக்கள் எல்லாம் பரணில் ஏற, அந்த இடத்தை இம்யூனிட்டி பூஸ்டர்கள் பிடித்துக் கொண்டன. தினுசு தினுசான வண்ணங்களில் வைட்டமின் மாத்திரைகளையும் ஜிங்க்  டப்பாக்ஙளும் வாங்கிக் குவித்து விட்டனர். எலுமிச்சையையும் இஞ்சியையும் கண்டால் தலைதெரிக்க ஓடியவர்கள், லிட்டர் லிட்டராக குடிக்கின்றனர்.  ரவாதோசையில் கவனமாக மிளகைப் பொறுக்கி எறிந்தகாலம் காணாமற் போச்சு.

இச்சந்ததியினர் கவனமாக, எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதெல்லாம் சரி. அதென்ன இம்யூனிட்டி பூஸ்டர்? ஆக்ஸிலரேட்டர் மாதிரி அழுத்தினால் வேகம் பிடிக்குமா இம்யூனிட்டி?   எந்த வெப் பக்கத்தைத் திறந்தாலும் இந்த பூஸ்டர் விளம்பரம்தான்.

முன்பு, காலையில் கம்பு அல்து கேழ்வரகு  களி உருண்டைகளைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தோம். சிலர் பழைய சோற்றினைப் பச்சைமிளகாய் துணைகொண்டு சாப்பிடுவர். 'பொறுக்குமா ஹெல்த் பிஸினஸ் வியாபாரிகட்கு?'

காலையில் கார்ன் ஃபளேக்ஸ் சாப்பிடு என்றனர். சிரமேற்கொண்டு கார்ன் அவலை வெட்டித் தள்ளினோம். அப்புறம் ஓட்ஸ் என்றனர்.  குதிரைகள் கோபித்தனவா தெரியவில்லை. அதையும் வெளுத்துக் கட்டினோம். நமக்கு 'ஹெல்த் கான்ஷியஸ்' முக்கியமல்லவா? பின் படிப்பிற்கு பொருள் இல்லாமற் போய்விடுமே!

அப்பறப் க்ரீன் டீ குடி என்றனர். கான்ஸர்-எய்ட்ஸ்-TB ஏதும் அண்டாது; உடம்பு  இளைக்கும் என்றார்கள். Really? கேன்ஸரை அண்டவிடாதா?  இதைக்குடித்தால் இனி சூப்பர் மேன்தான்  என்றனர். மாய்ந்து மாய்ந்து குடித்தோம். வியாபாரம் பில்லியன் கணக்கில்.

அப்பறம் ஒல்லிதான் ஆரோக்கியம், அழகு என்றனர். ஜுரோ சைஸ் இடுப்பு என்றனர். அப்படியே ஆகட்டும் என்றோம். 

உடம்பு இளைக்க,  'தின்பதைக்குறை' என்பதற்குப் பதிலாக ஜிம்மிற்குப் போ' என்றனர். ஓட்டமாய் ஓடி வருடாந்திர சப்ஸ்கிருப்ஷன் கட்டினோம். அவர்களுக்குத் தெரியும், ஜிம்மெல்லாம் பிரசவ வைராக்கியம் போலத்தான் என. 

பின்,   'க்ளூடன் ஃப்ரீ உணவு'  என ஆரம்பித்து வைத்தனர். இரண்டு சதமான மக்களுக்கு க்ளூட்டன்  அலர்ஜி இருக்கக் கூடும்.  ஆனால் MNC க்களின் வெற்றி 20% மக்களை க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளைத் தேர்ந்தெடுக்க வைத்ததுதான். இவ்வகை ஊணவுகள் சாதாரண கோதுமை ரொட்டிகளை விட பன்மடங்கு விலை அதிகம். 42 பில்லியன் டாலர் பிஸினஸ், இந்த க்ளூடன் ஃப்ரீ ஊணவு.

நம் ஊர் நெய், வெண்ணை, தேங்காய்  உணவுகளின் மீது கொழுப்பு என்று பழி சுமற்றி சனோலா சஃபோலாக்களைச் சாப்பிடு என்றனர். மறுபேச்சின்றி நெய்யை ஓரம்கட்டினோம். 

ஓய்ந்த களைப்பான நேரத்தில் கோலாக்களைக் குடி என்றனர். 'அப்படியே ஆகட்டும் எஜபமானரே' என பாட்டில் பாட்டிலாக விழுங்கினோம்; ஒவ்வொரு கோலாவிலும் 40 கிராம் சர்க்கரை உள்ளது என்பதை மறந்து.

பசும்பாலை கொழுப்பு எனச்சாடி, பதாம்பாலையும் சோய் மில்க்கையும் முன்னிறுத்துகின்றனர். நாமும் கொழுப்பற்ற பாலைஸநோக்கிப் படையெடுத்தோம்.

ப்ரோட்டீன் பௌடர் என ஆரம்பித்தனர். ஆம்வேயில்  டின்டின்னாக வாங்கிக் குவித்தோம். 46 கிராம் புரொட்டீன் சாப்பிடவில்லை யெனின் யாரும் நம்மைச் சிறையில் தள்ளமாட்டார்கள். உடம்பு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். ஆனாலும் பதறினோம். 5.2 பில்லியன் டாலர்  பிஸினஸ் ஆயிற்றே!

வெள்ளை அரிசி, சிவப்பரசியை விட மாற்று குறைந்ததுதான்.ஆனால் விலையைக் கவனித்தீர்களா? 40 ரூபாய் மற்றும் 80 ரூபாய்.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க அவர்கள் பசும்பாலிருந்து நீக்கிய கொழுப்பை என்ன செய்கிறார்கள?  கடல் உப்பிலிருந்து நீக்கிய பல மினரல்களை என்ன செய்கிறார்கள்? வெண்மையாக் கப்பட்ட சோடியம் குளோரைடை மட்டும்தானே நாம் வாங்குகிறோம். நீக்கப் பட்டவையும் அவர்களுக்குத்  துட்டு! 

அப்பறம் 'வைட்டமின் வாட்டர்' தனிக்கதை. 

வூஹான் வைரஸ் வந்தது. இதோ..உலகு அல்லோல கல்லோலப் படுகிறது. மரண பீதியை மிகைப் படுத்தி விதவிதமான இம்யூனிட்டி பூஸ்டர்கள், சானிடைசர்கள், மாத்திரைகள், மாஸ்க்குகள் என சந்தையில் இறக்கி கல்லா கட்டுகின்றனர்.

சர்வதேச வியாபாரிகளின் வெற்றி ரகசியம் என்னவென்றால், ஆரோக்கிய விழிப்புணர்வு என்ற பெயரில் அனைத்து மக்களையும் பாதுகாப்பற்றவர்களாக (Insecure) உணர வைப்பதுதான்.  இந்தப் பதட்டத்தை, பாதுகாப்பின்மை போன்ற சூழலை, பீதியை உருவாக்கிவிட்டால் வியாபாரம் பிய்த்துக் போகாதா? 

பாரம்பர்யமோ அல்லது நவீன ஜங்க் ஃபுட்டோ அனைத்திற்கும் பின்னால் உலக வணிகர்கள் இருக்கிறார்கள்.

இப்போது நிலவும் கொரோணா காலத்தைப் பயன்படுத்தி துட்டு பார்க்கிறார்களா அல்லது துட்டு பார்க்க கொரோணா  ஏற்படுத்தப்பட்டதா?  ஏனெனில் உணவு, உடை, ரசனை, பழக்கம், கலாச்சாரம் என எல்லாவற்றையும் மாற்றும் திறனும் வல்லமையும் பணமும்  கொண்டவர்கள் சர்வதேச வியாபாரிகள்.

சரித்திரத்தில் பல கேள்விகளுக்கு விடையில்லை. இந்த பெண்டமிக்கும் அதில் ஒன்றாகி விடுமா?