Friday, May 20, 2016

திருவிழா நிறைவடைந்தது

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், முகநூல், வாட்ஸப் என அனைத்து மீடியாக்களிலும், இந்தத் தேர்தலில்,  தி.மு.க சார்பு சற்று தூக்கலாகவே இருந்தது.  செய்திகளும் அதற்கு ஏற்றாற்போலவே பிரசுரிக்கப்பட்டன. எக்ஸிட் போலில் கூட தி.மு.க தான் என்றே முடிவு. விற்பன்னர்கள் பலரும் மேஜை போட்டு ‘தொங்குசட்ட சபையை’ முன்னிறுத்தினர். எல்லோரையும் ஒரு அலட்சியப் பார்வையில் ஒதுக்கி எறிந்துவிட்டு அதிமுக வை ஆட்சியில் அமர்த்திவிட்டனர் மக்கள்.

இந்தத் தேர்தல், மற்றெல்லோரையும் விட  தி.மு.க விற்கு வாழ்வா-சாவா போராட்டமாக அமைந்தது.   இந்தத் தேர்தலில் இழந்தால் பின் ஒருபோதும் இல்லை என்ற Desperate  நிலையில் இருந்தது இக்கட்சி.  அவர்களே அவர்கள் பேரில் நம்பிக்கை இல்லாமல் போய், காங்கிரஸுக்கு யதார்த்தத்திற்கு மீறிய சீட்டுக்களை ஒதுக்கித் தந்தனர். கடைசிவரை விஜய காந்திற்குக் காத்திருந்தனர். மைனாரிட்டி கட்சிகளுக்கெல்லாம் அதிக முக்கியத் துவம் அளித்தனர். தி.மு.க அடைந்திருந்த பீதியையும், கையறு நிலையையுமே இவை காட்டின. ஆனால் முடிவுகள், அவர்களே அவர்கள் பேரில் நம்பிக்கை கொள்ளு மளவிற்கு, திமுகவிற்கு  மறு வாழ்வு அளித்திருக்கிறது. கிட்டத்தட்ட 31.6% சதத்திற்கும்  அதிகமான வாக்குகளுடன், 89 சீட்டுகளுடன், வலுவான எதிர்க்கட்சியாக வந்திருக்கிறது.

நடைமுறையில் இருகட்சியினருமே மதுபான உற்பத்தியா ளர்கள்; கல்விக்கூடங்களை நடத்தி  பணம் பார்ப்பவர்கள்; குடும்ப (தோழி) அரசியல் செய்பவர்கள்; அராஜகம் புரிபவர் கள்;  ஊழலில் திளைத்தவர்கள்;  நில அபகரிப்புக்காரர்கள்; மணற்கொள்ளை யர்கள்;  ஓட்டுக்குக் காசு என்னும் மோசமான கலாச்சாரத்தை ஒரு வழிமுறையாகவே செய்துகாட்டியவர்கள்;  இலவசங்கள் மூலம் தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் சென்றவர்கள்; வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சாதிச் சிக்கல்களை ஊதி-ஊதிப் பெரிதாக்கி குளிர் காய்பவர்கள்;  ஹிந்தி வேண்டாம் என முழங்கி, ஆங்கிலத்திற்கு வரவேற் பளித்து தற்போது தமிழை தமிழகத்திலிருந்தே ஒழித்துக் கட்டி யவர்கள்;   நடைமுறையில் இந்த இரு கட்சிகளுக்குமிடையே ‘அ’ மட்டுமே வித்தியாசம். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மாற்றாக இருகவே முடியாது.  ஆனாலும் ஏன் மக்கள் ஏன் அதிமுகவைத் தேர்ந்தெடுத்தனர்? அதுவும் இரண்டாம் முறையாக?

பத்திரிகைகள் பெருமுதலாளிகள், ஊடகங்கள் ஆகியவற்றின் விருப்பமும் திமுக வாகவே இருந்தது. அவர்களது ‘காய்’ நகர்த்தல்களும் அதற்கேற்றாற்போலவே இருந்தது.

‘நிஜ அரசியல் நோக்கில்’ இருகட்சிகளும் ஒன்றே என இருந்தாலும், மக்கள் எப்படி அதிமுகவை வேறுபடுத்திப் பார்க்கின்றனர் என்பதுதான் முடிச்சு.

இரண்டு பேருமே, காசு  கொடுத்திருக்கின்றனர். எனவே, ‘பணநாயகம்’ என்ற குற்றச் சாட்டு உண்மையில்லை. 

அதிமுகவிற்கு எதிரான (Anti incumbency) ஓட்டுக்கள் சிதறுண்டு போனதும்,  மக்கள் இன்னமும் தி.மு.கவை முழுமையாக நம்பவில்லை-ஏற்கவில்லை என்பதும்தான் காரணம் போலத் தெரிகிறது.  ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், செயலற்ற  நிர்வாகத்திற்கும்  மாற்றாக திமுகவை மக்கள் முழுமையாக ஏற்கவில்லை.

எந்தத் தொகுதியிலும் வெல்ல முடியவில்லை என்றாலும், பா.ம.க தன்னை நிலையான சக்தியாக நிரூபித்துக் கொண்டுள்ளது. ஜாதி அடையாளத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளாவிடில், அக்கட்சிக்கு இது ஒரு Stagnation point தான்.

மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற விஜயகாந்த் கட்சியும், வைகோ கட்சியும் அடுத்த தேர்தல் வரை கரைந்து போகாமலி ருந்தாலே பெரிய விஷயம்.  எதிர்க்கட்சித் தலைவராக விஜய காந்த், சட்டசபைக்கு உள்ளேயும் வெளியாயும் செயலாற்றிய விதம், நிச்சயம் மக்களைக் கவரவில்லை.

மாற்றுச் சக்தியாக ‘மநகூ’ உருவெடுத்துவிடக் கூடாது என்ப தில் ஊடகங்கள் தெளிவாக இருந்தன. தேர்தல்வரையாவது ‘மநகூ’ தாங்குமா, இல்லை ‘புட்டுக்குமா?’ போன்ற  ‘நகைச் சுவைகள்’ யாவும் திட்டமிடப்பட்டவையே. அதற்கேற்றாற் போல,  இருதலைவர்களும் கையில் மைக்கைப் பிடித்தால், எந்த கணத்தில் எப்படிப் பேசிவைப்பார்களோ என்கிற பீதியில்தான சக கட்சியினர் இருந்தனர். மேலும் வைகோ போட்டியிலிருந்து விலகியது மக்களை யோசிக்க வைத்து விட்டது.  

கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை, திமுகவும் வேண்டாம் -அதிமுகவும் வேண்டாம் என்று விலகி, வைகோவையும் விஜயகாந்தையும் தலைமையாக ஏற்றுக் கொண்டதற்கு சரியான காரணம் இன்னமும் விளங்கவில்லை.  இது எந்தமாதிரியான ‘வர்க்க அரசியல்’ என்பதை, மக்களுக்கு அவர்கள் விளக்கியாக வேண்டும்.  ஏனெனில், இடதுசாரி யினர் விஜயகாந்த்தையும் வைகோவையும் ஏற்றுக் கொண்டதன் விலையை கொடுக்கப் போகிறார்கள்.  நாடு விடுதலையானபின் இடது சாரிகள்  அற்ற ஒரு சட்டசபை அமைந்துவிட்டது. ஒரு சுவாரஸ்யமான தகவல் – 1952 வருடத்திய சென்னை மாகான சபையில் 62 உறுப்பினர்களைக் கொண்ட ஒரே எதிர்க்கட்சி  (பிளவு றாத) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. 

மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் இடதுசாரிகளின்  திட்டம்தான் என்ன என்பது புதிர். இந்த நிலையில் அவர்களுக்குள் கோஷ்டிகள் வேறு.  அவர்கள் கேரளத்தைச் சற்றே கவனிக்க வேண்டும். காங்கிரஸின் பேரில் நம்பிக்கை இழக்கும்போது, அதிருப்தி யடையும் பொழுது இடதுசாரிகள் அங்கே ஒரு மாற்றாக காட்டிக் கொள்கின்றனர். எனவேதான் anti incumbency ஓட்டுக்கள் LDF க்கு கிடைத்து, இம்முறை அங்கே அரசு அமைக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில்?

மே-23ற்குப்பின், நமது அன்றாட வாழ்வில் எந்த அதிசயத்தையும் இத்தேர்தல் முடிவு கொண்டுவந்துவிடாது தான் . எனினும் சென்ற தேர்தலை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, முடிவுகளில்  மூன்று நல்ல அம்சங்கள் உள்ளன.  ஒன்று, ஒரு வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது. இரண்டாவது ஆளும்கட்சியின் வலு கணிசமாக குறைந்துள்ளது. இதனால், ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் யாவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்பதும், எதிர்த்துக் கேட்க ஆளே இல்லை என்ற நிலை மாறியதும் மானிலத்திற்கு நல்லதே. மூன்றாவது ஜாதிக்கட்சிகளையும் லெட்டர்பேட் கட்சிகளையும் மக்கள் உதாசீனப் படுத்திவிட்டனர்.


அதைப்போலவே, ஒரு மோசமான ஒரு அம்சம், இடது சாரிகள்  சட்ட சபையில் முழுமையாக இல்லாமற் போனது. 

Sunday, May 8, 2016

நீயே உனக்கு என்றும் நிகரானவள்...

சில மனிதர்களின் அருமை, வாழும் காலத்தே புரிவதில்லை. இனி ஒருபொழுதும் அவர்களைக் காண இயலாது என்ற நிலைமை வரும்பொழுதுதான் இழப்பின் தீவீரம் உறைக்க ஆரம்பிக்கும். 

சுயநலம், வேறெல்லாவற்றையும் தாண்டி மனிதர்களை ஆட்கொண்டிருக்கும் இக்காலத்தில் இத்தகைய, பரிதாபக் காட்சிகள் காண்பதற்கு அரியனவும் அல்ல. அன்னையர்களும் இந்தப் பிரிவில் சேர்ந்துவிட்டனர். ஏனெனில் ‘தாய்’ களின் அருமை பலருக்கு இன்னமும் புரியவில்லை. மேற்கத்திய பாணியில், ‘அன்னையர் தினம்’ கொண்டாடத் தயாராகி விட்டோம். அவர்களுக்கு நாம் காட்டும் நன்றி, ஒருதினத்தில் தீர்ந்துபோய்விடும் சமாச்சாரமா என்ன?

இன்று அன்னையர் தினமாம்.  நிஜத்தில் அன்னையைக் கொண்டாடினோமோ இல்லையோ, சமூகஊடகங்களிலும் மீடியாக்களிலும் அன்னையர்கள் வாழ்கிறார்கள்.  

நான், எனது அன்னையைக் கண்டதில்லை. ஏன், தந்தையும் கூட நினைவில் இல்லை. அவர்களை மறந்துவிட்டேன் என்று பொருள் இல்லை. எனக்கு இரண்டு-மூன்று வயதிருக்கும் பொழுதே, அவர்கள் மறைந்துவிட்டனர். எனவே அவர்கள் எப்படியிருப்பார்கள் எனத் தெரியாது.  நானே, விடைபெறத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வயதில், இது நகையூட் டுவதாக இருந்தாலும், சொல்லித்தானே ஆகவேண்டியுள்ளது! இல்லையெனில் நான் நன்றி மறந்தவனாகிவிடுவேனே?

ஒவ்வொரு ஜீவனும் தூய அன்பை இரண்டுபேரிடமிருந்துதான் பெறமுடியும். ஒன்று அப்பா-அம்மா. மற்றொன்று மனைவி.
எனக்கு திருமணமாகும்வரை  என்பால் அன்பைக்காட்டியவர் எவருமிலர். அன்பென்றால் எப்படியிருக்கும் என்றுகூடத் தெரியாது. அன்பு  காட்டக்கூட வேண்டாம். சற்றே காருண்யப் பார்வையைக் கூட சந்தித்ததில்லை. ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே, அடிமட்ட மக்களில் ஒருவனாய், பலரின் தயவில் வளர்ந்ததினால், சமூகத்தின் பால் ஆத்திரமும், வெறுப்பும், அர்த்தமற்ற தடித்த வார்த்தைகளுமே என் வாழ்க்கை முறையாயிருந்தது.  

அச்சமயத்தில்தான் விஜி என்னும் பெண்மணி, என்னை விரும்பி மணந்துகொண்டாள். அவரிடமிருந்துதான் சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொண்டேன்.  35 வருடகாலம் எனக்கு உணவளித்து போஷித்த அன்னை அவர்.  கரடுமுரடான என் சுபாவத்தை கொஞ்சமேனும் மாற்றிய அன்புள்ளம்.

அன்னையர்களின் அன்புள்ளத்தை வேறு எதனுடனும் ஒப்பிட இயலும்?  மகவுகள் விரும்புச் சாப்பிடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு உணவிடுவதிலேயே, தங்களது பசியாறிவிடுவர். சற்றும் அருவருப்பின்றி குழந்தைகளின் மல மூத்திரத்தை உவகையோடு சுத்தப்படுத்தும் மான்பு யாருக்கு சாத்தியப்படும்? 
குடும்பத்தாரின் முகக் குறிப்பொன்றே அவர்களுக்குப் போது மானது. தேவையானதை, தேவைப்படும் நேரத்தில், தேவைப் படும் அளவு வழங்கிவிடுவர்.  தனக்கு வேண்டியவர்கள் துயரத் தை உள்ளுணர்வாலேயே உணர்ந்துகொள்ளும் மதி நுட்பம் அவர்களுக்கு மட்டுமே உரியது. தனக்கில்லாவிடினும், குடும்பத்திற்கு உணவளிக்கும் மாட்சிமை மாத்திரமல்ல; தான் உண்ணாததைக் கூட வெளியே காட்டிக் கொள்ளாத  நிகரற்ற அன்புள்ளம் கொண்டோர் அன்னையர்.

என் மனைவி, எனக்கு தாயுமானவர் அன்றோ? அவர் நோயுற்று மறைவதற்கு முன்னால் இரண்டு கேள்வி கேட்டார்.
ஒன்று இது பரம்பரை நோயா? அந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கும் ஆதங்கம், அன்பு, கருணை, கவலை, பதற்றம் எனக்கு மட்டுமே புரிந்த ஒன்று.

மற்றொரு கேள்வி, என்னைவிட்டால் - உங்களுக்குப் பிடித்தமாதிரி, சோறு எங்கு சாப்பிடக் கிடைக்கும்? 
அடிப்பாவி.. சாப்பாடா பெரிய விஷயம்?  உன் வியாதியை, உன்னிடமிருந்து எனக்கு மாற்றிக் கொடுத்துவிடு, அவர் மகிழ்வாக இருந்து,  நான் இறந்தால், அதுவே  எனக்குப் போதுமானது, நிறைவானது என இறைவனிடம் அனுதினமும் வேண்டிக் கொண்டிருக்கும்பொழுது, என் உணவைப்பற்றி கவலைப்படுகிறாயே? நீயே என் தெய்வம், தாய் என பதில் மொழிந்தேன்.

அவர் நோயுற்றார் என்ற செய்தி தெரிந்த கணத்திலிருந்து நான் பட்ட பாட்டிற்கு உதாரணம் சொல்வதென்றால், அனலிடை யிட்ட மெழுகைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவரே எல்லோருக்கும் எல்லாமாகவும் விளங்கினார்.

அவரிருக்கும் வரை, எனக்கு மாத்திரமட்டுமல்ல... குடும்பத்தார் அனைவருக்குமே ‘தாயாக’ விளங்கியவர்.  நான் கண்டும் - கேட்டுமிராத ஒரு குடும்ப வாழ்க்கையை, அன்புள்ளங்களை அறிமுகப்படுத்தியவர்.      நீண்டஎன்று கூற இயலாவிடி னும், எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு முழுமையானவாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.  அவர், தனது தடத்தை பதியவைக்காத விஷயமே இல்லை என்று சொல்லலாம்.

“விஜி வந்தாச்சா...? இனி எல்லாம் சுபமே.. ஒரு கவலையுமில்லை.. எல்லாப் பிரச்சினை களையும் சமாளிக்கும் சாதுர்யப் பெண்”  என்ற பேச்சை,  பல சந்தர்ப்பங்களில் பலமுறை, பலரிடம் கேட்டிருக்கிறேன்.

இந்த அன்னையர் தினத்தில், எனதன்பு விஜிக்கு என அனந்த கோடி நமஸ்காரங்கள். ஏனெனில் கொஞ்சம் விசித்திரமாகத் தெரிந்தாலும் அவரே எனக்குத் தெரிந்த ஒரே தாய்.

எங்கே என் காலமெல்லாம் கடந்துவிட்டாலும்,
ஓரு இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்,
மங்கை நீ, சட்டென மறைந்துவிட்டாலும்,
மறுபடியும் பிறந்துவந்து மாலை சூடுவேன்.

குடும்ப குலவிளக்கே...
அனைவருக்கும் அன்னையாக விளங்கியவளே,

 நீ வாழ்க!