Sunday, May 8, 2016

நீயே உனக்கு என்றும் நிகரானவள்...

சில மனிதர்களின் அருமை, வாழும் காலத்தே புரிவதில்லை. இனி ஒருபொழுதும் அவர்களைக் காண இயலாது என்ற நிலைமை வரும்பொழுதுதான் இழப்பின் தீவீரம் உறைக்க ஆரம்பிக்கும். 

சுயநலம், வேறெல்லாவற்றையும் தாண்டி மனிதர்களை ஆட்கொண்டிருக்கும் இக்காலத்தில் இத்தகைய, பரிதாபக் காட்சிகள் காண்பதற்கு அரியனவும் அல்ல. அன்னையர்களும் இந்தப் பிரிவில் சேர்ந்துவிட்டனர். ஏனெனில் ‘தாய்’ களின் அருமை பலருக்கு இன்னமும் புரியவில்லை. மேற்கத்திய பாணியில், ‘அன்னையர் தினம்’ கொண்டாடத் தயாராகி விட்டோம். அவர்களுக்கு நாம் காட்டும் நன்றி, ஒருதினத்தில் தீர்ந்துபோய்விடும் சமாச்சாரமா என்ன?

இன்று அன்னையர் தினமாம்.  நிஜத்தில் அன்னையைக் கொண்டாடினோமோ இல்லையோ, சமூகஊடகங்களிலும் மீடியாக்களிலும் அன்னையர்கள் வாழ்கிறார்கள்.  

நான், எனது அன்னையைக் கண்டதில்லை. ஏன், தந்தையும் கூட நினைவில் இல்லை. அவர்களை மறந்துவிட்டேன் என்று பொருள் இல்லை. எனக்கு இரண்டு-மூன்று வயதிருக்கும் பொழுதே, அவர்கள் மறைந்துவிட்டனர். எனவே அவர்கள் எப்படியிருப்பார்கள் எனத் தெரியாது.  நானே, விடைபெறத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வயதில், இது நகையூட் டுவதாக இருந்தாலும், சொல்லித்தானே ஆகவேண்டியுள்ளது! இல்லையெனில் நான் நன்றி மறந்தவனாகிவிடுவேனே?

ஒவ்வொரு ஜீவனும் தூய அன்பை இரண்டுபேரிடமிருந்துதான் பெறமுடியும். ஒன்று அப்பா-அம்மா. மற்றொன்று மனைவி.
எனக்கு திருமணமாகும்வரை  என்பால் அன்பைக்காட்டியவர் எவருமிலர். அன்பென்றால் எப்படியிருக்கும் என்றுகூடத் தெரியாது. அன்பு  காட்டக்கூட வேண்டாம். சற்றே காருண்யப் பார்வையைக் கூட சந்தித்ததில்லை. ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே, அடிமட்ட மக்களில் ஒருவனாய், பலரின் தயவில் வளர்ந்ததினால், சமூகத்தின் பால் ஆத்திரமும், வெறுப்பும், அர்த்தமற்ற தடித்த வார்த்தைகளுமே என் வாழ்க்கை முறையாயிருந்தது.  

அச்சமயத்தில்தான் விஜி என்னும் பெண்மணி, என்னை விரும்பி மணந்துகொண்டாள். அவரிடமிருந்துதான் சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொண்டேன்.  35 வருடகாலம் எனக்கு உணவளித்து போஷித்த அன்னை அவர்.  கரடுமுரடான என் சுபாவத்தை கொஞ்சமேனும் மாற்றிய அன்புள்ளம்.

அன்னையர்களின் அன்புள்ளத்தை வேறு எதனுடனும் ஒப்பிட இயலும்?  மகவுகள் விரும்புச் சாப்பிடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு உணவிடுவதிலேயே, தங்களது பசியாறிவிடுவர். சற்றும் அருவருப்பின்றி குழந்தைகளின் மல மூத்திரத்தை உவகையோடு சுத்தப்படுத்தும் மான்பு யாருக்கு சாத்தியப்படும்? 
குடும்பத்தாரின் முகக் குறிப்பொன்றே அவர்களுக்குப் போது மானது. தேவையானதை, தேவைப்படும் நேரத்தில், தேவைப் படும் அளவு வழங்கிவிடுவர்.  தனக்கு வேண்டியவர்கள் துயரத் தை உள்ளுணர்வாலேயே உணர்ந்துகொள்ளும் மதி நுட்பம் அவர்களுக்கு மட்டுமே உரியது. தனக்கில்லாவிடினும், குடும்பத்திற்கு உணவளிக்கும் மாட்சிமை மாத்திரமல்ல; தான் உண்ணாததைக் கூட வெளியே காட்டிக் கொள்ளாத  நிகரற்ற அன்புள்ளம் கொண்டோர் அன்னையர்.

என் மனைவி, எனக்கு தாயுமானவர் அன்றோ? அவர் நோயுற்று மறைவதற்கு முன்னால் இரண்டு கேள்வி கேட்டார்.
ஒன்று இது பரம்பரை நோயா? அந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கும் ஆதங்கம், அன்பு, கருணை, கவலை, பதற்றம் எனக்கு மட்டுமே புரிந்த ஒன்று.

மற்றொரு கேள்வி, என்னைவிட்டால் - உங்களுக்குப் பிடித்தமாதிரி, சோறு எங்கு சாப்பிடக் கிடைக்கும்? 
அடிப்பாவி.. சாப்பாடா பெரிய விஷயம்?  உன் வியாதியை, உன்னிடமிருந்து எனக்கு மாற்றிக் கொடுத்துவிடு, அவர் மகிழ்வாக இருந்து,  நான் இறந்தால், அதுவே  எனக்குப் போதுமானது, நிறைவானது என இறைவனிடம் அனுதினமும் வேண்டிக் கொண்டிருக்கும்பொழுது, என் உணவைப்பற்றி கவலைப்படுகிறாயே? நீயே என் தெய்வம், தாய் என பதில் மொழிந்தேன்.

அவர் நோயுற்றார் என்ற செய்தி தெரிந்த கணத்திலிருந்து நான் பட்ட பாட்டிற்கு உதாரணம் சொல்வதென்றால், அனலிடை யிட்ட மெழுகைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவரே எல்லோருக்கும் எல்லாமாகவும் விளங்கினார்.

அவரிருக்கும் வரை, எனக்கு மாத்திரமட்டுமல்ல... குடும்பத்தார் அனைவருக்குமே ‘தாயாக’ விளங்கியவர்.  நான் கண்டும் - கேட்டுமிராத ஒரு குடும்ப வாழ்க்கையை, அன்புள்ளங்களை அறிமுகப்படுத்தியவர்.      நீண்டஎன்று கூற இயலாவிடி னும், எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு முழுமையானவாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.  அவர், தனது தடத்தை பதியவைக்காத விஷயமே இல்லை என்று சொல்லலாம்.

“விஜி வந்தாச்சா...? இனி எல்லாம் சுபமே.. ஒரு கவலையுமில்லை.. எல்லாப் பிரச்சினை களையும் சமாளிக்கும் சாதுர்யப் பெண்”  என்ற பேச்சை,  பல சந்தர்ப்பங்களில் பலமுறை, பலரிடம் கேட்டிருக்கிறேன்.

இந்த அன்னையர் தினத்தில், எனதன்பு விஜிக்கு என அனந்த கோடி நமஸ்காரங்கள். ஏனெனில் கொஞ்சம் விசித்திரமாகத் தெரிந்தாலும் அவரே எனக்குத் தெரிந்த ஒரே தாய்.

எங்கே என் காலமெல்லாம் கடந்துவிட்டாலும்,
ஓரு இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்,
மங்கை நீ, சட்டென மறைந்துவிட்டாலும்,
மறுபடியும் பிறந்துவந்து மாலை சூடுவேன்.

குடும்ப குலவிளக்கே...
அனைவருக்கும் அன்னையாக விளங்கியவளே,

 நீ வாழ்க!

3 comments:

  1. உங்கள் இதய அன்னைக்கு எனது இனிய நமஸ்காரங்கள்.!

    ReplyDelete
  2. //சில மனிதர்களின் அருமை, வாழும் காலத்தே புரிவதில்லை.//

    என்னை எப்போதும் அரிக்கும் உண்மை. ஆயினும், பொறுமை கைவருவது மிகச் சிரமமாக இருக்கிறது. இறைவன் காப்பானாக.

    உங்கள் துணைவியார் தம் இறுதிகாலத்திலும் உங்களைக் குறித்து கவலை கொண்டிருந்ததிலேயே, வாழும்காலத்து அவர்களை நீங்கள் எவ்வாறு மதித்து நடத்தியிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

    ReplyDelete
  3. மறைந்த பின்னும் உங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் விஜி அவர்கள்.இது தான் இமைப்பொழுதும் பிரியாதிருத்தல்...

    ReplyDelete