Thursday, April 14, 2016

பெட்டி…

பின் மதிய நேரம்.  மாடியில் போர்டிகோ அருகே, ஈஸிச்சேரைப் போட்டுக்கொண்டு, இடைவிடாது வீசும் கடற்காற்றை அனுபவித்தபடி சாய்ந்திருந்தார், அரவிந்தன்.

அப்பொழுது, தெருநாய்கள் சில குரைத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்தார்.
பிராணிகளையும், பறவைகளையும் அதன் போக்கில் வேடிக்கை பார்ப்பது அவருக்கு பிடித்தமான விஷயம். இந்த நாய்களுக்கு அப்படி என்ன பஞ்சாயத்து, இந்த வெயில் நேரத்தில்?

ஒரு குட்டி நாய், எங்கேயோ கிடைத்த ஒரு எலும்புத் துண்டை கவ்விக் கொண்டு பதறி ஓடி வர, அதைத் துரத்திக் கொண்டு மூன்று  வாட்ட சாட்டமான நாய்கள், ஓடி  வந்து கொண்டி ருந்தன. இவ்வளவு பெரிய எலும்புத் துண்டு,  அந்தக் குட்டி நாய்க்கு எப்படிக் கிடைத்ததோ?  சுற்றிச்சுற்றி, போக்குக் காட்டி ஓடியும், பெரிய நாய்களின் வேகத்துக்கும் மூர்க்கத் திற்கும் குட்டி நாயால் ஈடு கொடுக்க முடியவில்லை.  கீழே விழுந்து விட்ட குட்டி நாயின் வாயிலிருந்த எலும்புத் துண்டை, பெரிய  நாயொன்றும் கவ்விக் கொள்ள, மற்ற இரு நாய்களும் தங்கள் பங்குக்கு குட்டி நாயை புரட்டிப் போட்டன.  புழுதி பறக்க, தெருவில் நாய்களின் போர்க்களப் போராட்டம். இரைச்சல்.   ஆச்சர்யம் என்னவென்றால், பெரிய நாய்கள் எவ்வளவுதான் குட்டிநாயை  குதறிக் கொண்டிருந்தாலும், அது தன் வாயில் கவ்விக் கொண்டிருந்த எலும்பை விடாமல் பற்றிக் கொண்டிருந்தது.

கடிபட்டு, காதில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தாலும், போராட்டத்தின் நடுவே கிடைத்த  கண நேர ‘கேப்’பில், விருட்டென பாய்ந்தெழுந்து ஓடிய குட்டி நாய், வாசலில் நிறுத்தியிருந்த ‘இண்டிகா’ வின் அடியில் புகுந்து கொண்டது.

பெரிய நாய்கள் மூன்றும் காரின் அடியில் செல்லத் தயங்கியோ அல்லது உள்ளே புக இயலாமலேயோ, அந்தக் காரை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன.  அவைகளுக்கு நிலை கொள்ள வில்லை. கண்ணெதிரே பெரிய எலும்புத் துண்டு. வலுவில் லாத எதிரி. எனினும் உள்ளே புக முடியவில்லையே? முட்டாள்கள் போல இப்படியும் அப்படியும் பாய்ந்து கொண்டிருந்தனவே தவிர, உட்புகும் யுக்தியொன்றும் புலப்படவில்லை.

கண்களில் பீதியுடன், அடங்கா ஆசையுடனும் அந்தக் குட்டி நாய், வாயில் எலும்பைக் கவ்விக் கொண்டிருந்தது.  “அட.... மூட குட்டி நாயே அந்த பெரிய நாய்கள் உள்ளே வரமுடியாது.. நீ தைரியமாக எலும்பைக் கடித்துக் கொள்ளேன்” எனச் சொல்ல வெண்டும் போல் இருந்தது  அரவிந்தனுக்கு. எச்சில் ஒழுக ஒழுக எலும்பைக் கவ்விக் கொண்டிருந்த்தே தவிர, கடித்து உண்ணலாம் எனத் தோன்றவே இல்லை அந்த குட்டிக்கு.

மனிதர்கள் பலரும் அப்படித்தானே இருக்கிறோம்? 
குட்டி நாயைப்போல, ‘பெட்டியைப்’ பாதுகாப்பதில் உள்ள கவனம், சுவைப்பதில், அனு பவிப்பதில் காட்டுவதேயில்லை. 

அடுத்த  நாயின் வாயில் இருக்கும் எலும்புக்கு அசைப்படும் ஜந்துக்கள் போல, பிறரைப் பார்த்துக் கொண்டே, சுற்றிச் சுற்றி வந்து ஆசைப்படுவார்களே தவிர,  தானாகத் தேடும் முயற்சியும் இல்லை.

அரைமணி நேரமாகியும் பெரிய நாய்களும் விலகுவாதா யில்லை. குட்டி நாயும் தின்னுவதாயில்லை. 

அப்பொழுது, வீட்டினுள்ளேயிருந்து வந்த டிரைவர், பெரிய நாய்களை கல்லெடுத்து அடித்து விரட்டினார். குனிந்து பார்த்தார். ‘சனியனுங்க, கண்டதையும் கொண்டுவந்து வீட்டின் முன் போடுதுங்க..’ என சலித்துக் கொண்டு, குட்டி நாய் சக்கரத்தில்  நசுங்கிவிடக்கூடாதென அதையும் விரட்டிவிட்டு, கைபடாமல் ஒரு குச்சிகொண்டு எலும்பைப்  ஒரு பேப்பரினுள் தள்ளிச் சுருட்டி, டிக்கிக்குள் போட்டார். 
‘இதை மறக்காம தெருவைத் தாண்டி வீசியெறியனும்’.

உலகு, நமக்கு இடைவிடாமல், பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. என்ன,  நாம் கண்களைதக் கொஞ்சம் திறந்து  வைத்துக் கொள்ள வேண்டும்.


2 comments:

 1. இப்பொழுதெல்லாம் நாய்களைப் பார்க்கும் போது எனக்கு
  அரசியல் வாதிகளின் பேச்சும் செயல்பாடுகளும் தான் நினைவிற்கு வருகிறது.! நாய்களைப்போலவே அரசியல் வாதிகளும் பெருகிவிட்டனர்.
  சீட்டுக்காகவும் ஜெயிக்க வேண்டும் என்றும் மற்றவர்களை கடித்துக் குதறுகிறார்கள்.! பிறகு ஜெயித்தவன் ஜேஜே என்று கொள்ளையடிக்கிறார்கள்.! மற்றவர்கள் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள். பிறகு 5 வருடம் கழிந்த பிறகு மீண்டும் குறைக்கிறார்கள்.! ஒருவர் மாட்டுக்கறியில் விசம்வைத்து பல தெரு நாய்களை கொன்றுவிட்டு பிறகு மாட்டிக்கொண்டார்.!
  ஆனால், அந்த ஏரியாவில் உள்ள அப்பாவி ஆடுமாடுகளும் குழந்தைகளும் வாகன ஓட்டிகளும் இப்பொழுது நிம்மதியாய் இருக்கிறார்களாம். இப்படி இந்த அரசியல் வியாதிகளையும் யாராவது விசம் வெச்சிக் கொன்னா நாடு அமைதியா இருக்கும்னு தோணுது.! வள்ளலார் மன்னிக்கணும்.!

  ReplyDelete
 2. //மனிதர்கள் பலரும் அப்படித்தானே இருக்கிறோம்?
  குட்டி நாயைப்போல, ‘பெட்டியைப்’ பாதுகாப்பதில் உள்ள கவனம், சுவைப்பதில், அனு பவிப்பதில் காட்டுவதேயில்லை.

  அடுத்த நாயின் வாயில் இருக்கும் எலும்புக்கு அசைப்படும் ஜந்துக்கள் போல, பிறரைப் பார்த்துக் கொண்டே, சுற்றிச் சுற்றி வந்து ஆசைப்படுவார்களே தவிர, தானாகத் தேடும் முயற்சியும் இல்லை.//
  Great! you made my day!

  ReplyDelete