Sunday, April 10, 2016

வீரபாண்டிய ‘அரவிந்தன்..’

இன்னிக்கு என்ன கிழமை?  சனியா .. ஞாயிறா....

எதுவானா என்னதினங்களும், மாதங்களும் அர்த்தமற்றுப் போய் வெகு நாட்களாகிவிட்டன.  எல்லா தினங்களும் இங்கே, ஒரே தினமே!  கிழமை பேதமற்று, காலை ஐந்து மணிக்கு ப்ரேயர்,  ஆறு மணிக்கு காஃபி, எட்டு மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட்.. ஒரு மணிக்கு  சாப்பாடு...இப்படிச்  செல்கிறது என் வாழ்க்கை.

இங்கே எனக்கு அடங்காப் பிடாரி அரவிந்தன்என்று பெயர்.
உங்களுக்கு வயசு எழுபதாகப் போவுது. நீங்க முன்மாதிரியா இருக்க வேண்டாமா? சகலத்துக்கும் முரண்டு பிடிக்கிறீர்களே,  ஏன்?“ என்பார்  நரசிம்மன்என்ற மேனேஜர் அல்லது பொறுப்பாளர்.

முன்மாதிரின்னா என்ன? உங்க அபத்த உத்தரவுகளுக் கெல்லாம், மறு பேச்சில்லாமல்,  கீழ்ப்படிந்து நடப்பதா? மரவட்டை போல, நீங்க காட்டிய இடத்தில் சுருண்டு படுத்துகிட்டு இருக்கனுங்கறீங்க.. அது என்னால் முடியாது. என்னோட நடவடிக்கை உங்களுக்கு ஏற்றதாக இல்லைன்னா, தாரளமா, என்னைத் துரத்தி விட்டுவிடலாம்..!”  

முறைத்துப் பார்த்துவிட்டு, லெட்ஜருக்குள் தலையைவிட்டுக் கொள்வார் நரசிம்மன்.    

இது என்ன இடம் என்று, உங்களுக்கு நான்  சொல்லவேல்லை பார்த்தீர்களாஇப்படி திடீரென ஆரம்பித்தால் என்னப் பற்றி என்ன நினைப்பீர்கள்?  சொல்கிறேன்.  

இது ஒரு முதியோர் இல்லம். நான் இந்த இல்லத்திற்கு வந்து, ரெண்டு வருஷத்திற்கு மேலே இருக்கும். இந்த ஹோமை நடத்துபவர்கள், தென் சென்னையில் ஒரு பெரிய வீட்டை, வாடகைக்கு எடுத்து, முதியோர் இல்லமாகமாற்றியிருக் கின்றனர். பொதுவாக கட்டணம் வாங்கிக் கொண்டு உணவளித்தாலும், யாருமற்றவர்களுக்கு இலவசமாகவும் உணவு உறைவிடம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது இங்கே, முப்பது பேர்கள் இருக்கிறோம்.  செலவுகள் அனைத் தும் டொனேஷன் மூலமாகத்தான் சமாளிக்கப் படுகிறது. ஒரு காலத்தில் நானே இந்த இல்லத்திற்கு ரெகுலராக நன்கொடையளித்திருக்கிறேன். நானும் இங்கே வரவேண்டிய சூழல் வரும் என எதிர் நோக்கியதில்லை. அடுத்த கனத்திற்காக வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்கள் ஏராளம் அல்லவா?  அப்படி ஒரு திடீர் திருப்பத்தில் இங்கே வந்து வசிக்கும்   நிலை எனக்கு ஏற்பட்டது. அந்தக் கதை இப்போது வேண்டாம். நிறைய டி.வி சீரியல்களில் பார்த்திருப்பீர்கள் தானே? அதில் மிகவும் சோகமான, திடீர் திருப்பங்கள் உள்ள  ஒரு கதையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதுவே போதும்.

இந்த இல்லத்தில் தங்குபவர்களுக்கு,  நிர்வாகத்தில்,  சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். காலை ஐந்துமணிக்கு ப்ரேயர், குறித்த நேரத்தில் தான் உணவு, குறித்த நேரத்தில் தூங்கனும்.. இப்படி பல!

அதில் கனிசமானவற்றிற்கு நான் கட்டுப்பட மாட்டேன்.  அவையெல்லாம் அர்த்தமற்ற, சுதந்திரத்தைப் பறிக்கும் திமிர் மிகுந்த கட்டுப்பாடுகள் என்பது என் கருத்து.

சுபாவத்திலேயே, நான் கொஞ்சம் சுய அடையாளம் இழக்க விரும்பாதவன். கலகக்காரன். சுதந்திர விரும்பி. எவரும் என் கையை கட்டிப்போட அனுமதித்ததில்லை. இந்த சுய அறிமுகம் உங்களுக்குப் போதும் என நினைக்கிறேன்.

முதியோர் இல்லம், அனாதை ஆசிரமங்கள்  என்றால், அடிமைகள் முகாமா என்ன?  இங்கே வந்து தங்குபவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான்; அதற்காக அவர்கள் மேல் கட்டுப்பாடற்ற அதிகாரம் செலுத்த உரிமை உண்டா என்ன? 

எனக்கு  கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் தினமும் காலை ஐந்து எழுந்துதான், கடவுள் பக்தியை காண்பிக்கனும் என்பதில் உடன்பாடில்லை.  நாலுக்கும் எழுவேன், ஆறுக்கும் எழுவேன். என் விருப்பம். என் ப்ரேயர் என்பது தியானம் தான். அது உள்ளுக்குள் நிகழ்த்திக் கொள்வேன்.

எட்டு மணிக்கு ப்ரேக் ஃபாஸ்ட் டைம் என்பது சரி. ஆளாளுக்கு விரும்பும் நேரத்தில் சாப்பாடு போடமுடியாதுதான். டிபனை வாங்கி என் ரூமிற்குள் வைத்துக் கொள்வேன். பசிக்கும்தான் போது உண்பேன்.  இதில் நரசிம்மனுக்கு உடன்படில்லை. டைனிங் ரூமில்தான் சாப்பிடனும். ரூமிற்கு எடுத்துப் போகக் கூடாது என்பார். அப்படியானால், எனக்கு சாப்பாடே வேண்டாம், போ.. என்பேன் நான். உலவ மொட்டை மாடிக்குச் செல்வேன். மேலே செல்லக் கூடா தென்பார். இது போன்று பல சில்லறை உபத்திரவங்கள் பல.

மணியடித்து சாப்பாட்டு டைம் என்று அறிவிக்கலாம். தப்பில்லை.  மணியடித்து பசிக்குமா? மணியடித்து தூக்கம் வருமா? அதுவும் வயதான காலத்தில்? இரவு ஒன்பதரைக்கு விளக்கை அணை. புத்தகம் படிக்காதே. பேசாதே. மொபைல் பார்க்காதே. ஒரு குறிப்பிட்ட சாமியாரை கும்பிடு. பொம்மை அடுக்கினாற்போல அனைவரும் மதியம் தூங்கு.. இப்படி பல இம்சைகள். இவை யாவற்றையும் நான் ஏற்றுக்கொள்ள மறுத்து, சண்டித்தனம் செய்ததால், இங்கே நான் அடங்காப் பிடாரி அரவிந்தன்’. 

அந்தமாதிரி பெயர் எடுத்ததில்  எனக்கு வருத்தமெல்லாம் இல்லை.  எப்பொழுதும் நான் நானே”!

சக கிழவர்கள்/கிழவிகள் பார்வையிலும் நான் அடங்காப் பிடாரிதான். அவர்கள் யாவருக்கும் "வாழ்க்கை செக்யூரிட்டி பயம்" சாசுவதமாக இருக்கும்.  ஏதோ இப்படி ஒரு இடம் இருக்கறதனால தான், எங்க  பொழப்பு ஓடுது... இதுவும் இல்லேன்னா, பிச்சைதான் எடுக்கனும். பொது இடம்னா, கொஞ்சம் கட்டுப்பாடு இருக்கும்தான்.  நாமதான் அனுசரிக்கனும். இப்படி திமிர்த்தனம் செய்யறதெல்லாம் கௌரவமாவா இருக்கு? இந்த மனுஷன் (என்னைப் பற்றித்தான்) பண்ணுற அழிச்சாட்டியத்துல,  இந்த ஹோமையே ஒரு நாள், மூடிடப் போறாங்க பாருங்க...என்பர்.  
பிச்சை போட்டாலும் அது கௌரவமாக இருக்கணும்என்ற கோஷ்டி நான். மண்டியிட்டுத்தான் பெறனும் என்றால், எதுவும் எனக்கு தேவையில்லை.  “உங்களுக்கு சுயகௌரவமே இல்லையா? வெறுமே சோறுதான் உலகா? உணர்வு-சுதந்திரம்-தன்மானம் எதுவும் வேண்டாமா” என்ற வினாக்கள் எல்லாம் அவர்களுக்கு புதிராக இருக்கும்.

கனிசமாக டொனேஷன் கொடுத்து இங்கே சேர்ததால், அரவிந்தன் இப்படி தெனாவட்டா பேசறார்..என்ற புகாருக்கு என்னிடம் பதில் இல்லை. டொனேஷன் கொடுக்கவில்லை என்றாலும் இப்படித்தான் இருப்பேன், என்பதை அவர்களுக்கு புரியவைப்பது இயலாத காரியம்.

ஒரு முறை, நிர்வாகத்தில் என்னைக் கூப்பிட்டு, அடுத்த மாசம் முதல் நீங்கள் மேனேஜர் பொறுப்பு எடுத்துக்கறீங்களா?”  நரசிம்மனை விட்டு விடலாம்..! என்றனர்.  அது எனக்கு விரிக்கப்பட்ட ட்ராப்.

ஓ..யெஸ்... தாராளமா எடுத்துக்கறேனே!  ஆனால்  இப்ப இருக்கும் ரூல்ஸையெல்லாம் நான் மாற்றிவிடுவேன்.  அடங்குவது மட்டுமல்ல, அடக்குவதும் பிடிக்காது. ப்ரேயர் ஹால் எப்பொழுதும் திறந்திருக்கும்... விருப்பப் பட்டவர்கள், விருப்பப்பட்ட  நேரத்தில் வணங்கலாம்; அல்லது வராமலேயே இருக்கலாம். மாலையில் உலவ அனுமதிப்பேன். இரவு ஒன்பது மணிக்கே விளக்கை அனைக்க வேண்டும் என்பதை மாற்றுவேன். அப்புறம் தினசரி சாப்பாட்டு மெனுவில், இங்கே இருப்பவர்களின் விருப்பத்தையும் கேட்டு  ......”

வேண்டாம்..வேண்டாம்.. நரசிம்மனே இருக்கட்டும்” .  நிர்வாகத்தின் திட்டம் பேக்ஃப்யர் ஆகிவிட்டது.

இறுதியில் ஒருவழியாக என்னை தண்ணீர் தெளித்துவிட்டுவிட்டனர். பாலைக்குள் ஒரு ஓயஸிஸ் போல இங்கே நான். 

அது கிடக்கட்டும், நாம், இப்ப  இந்த ஹோமின் முதல் மாடி ஏறி, பின் மொட்டை மாடிக்கு படியேறிச் செல்வோம், வாருங்கள். 

இங்கே படி முடியும் இடத்தில் கொஞ்சம் நிழலும், நல்ல காற்றும் கிடைக்கும். காற்று  விடாது வீசிக்கொண்டே இருக்கும். எனக்கு அந்தக் கட்டிடத்திலேயே மிகவும் பிடித்த இடம் இது!  மதியம் சாப்பிட்டுவிட்டு, சற்று கண் அயர தோதான இடம். மேமாதம் இன்னமும் துவங்கவில்லை. ஏப்ரலிலேயே வெயில் இந்தபோடு போடுகிறது. கீழே, ஃபேனிலிருந்து வரும் அனற்காற்று சகியாமல், மதியம் ரெகுலராக இங்கே வந்துவிடுவேன். இங்கே மட்டும் எப்படி இப்படி காற்று வீசுகிறது..?

காற்று குறுகலான பாதை  நுழைந்து, அகலமான பாதை வழியே வெளியேறும் தன்மை கொண்டது என, மாணவர் களுக்குச் சொல்லிக் கொடுத்த்து நினைவிற்கு வந்தது.  
சேகரித்த அறிவும் கூட, அர்த்தமற்றுப் போய்விட்டதோ? எல்லாவற்றையும் சேர்த்தே எரித்தோ-புதைத்தோ விடப் போகிறார்கள்!  சரி... இருக்கும்வரை சிலருக்காவது பயன் பட்டதல்லவா? அது போதும்!

வானத்தைப் பார்த்தேன்.  கழுகு ஒன்று  இரண்டாயிரம் மூவாயிரம் அடி உயரத்தில், அபாரமான வேகத்தில், இறகுகளை அடித்துக்கொள்ளாமல், வட்டம் வட்டமாக சுற்றிக் கொண்டிருந்தது.  அவைகளுக்கு வெயில் இல்லையாஅந்தக் கழுகும் கூட வானில் தனியாகத்தான் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.  தனியாய் சுற்ற பயமாய் இருக்காதா? கூர்ந்து பார்த்தால் வெகுதூரத்தில் மற்றொரு கழுகும் வட்டமடித்துக் கொண்டிருந்தது. கழுகு இணையுடன் வாழும் வகையைச் சார்ந்தது.  இணை இறந்துவிட்டால், அந்தக் கழுகு என்ன செய்யும்?  அவைகளுக்கு ஏதேனும் ஹோம்இருக்கிறதா என்ன?

இந்த உயரத்தில், இந்த வேகத்தில், தரையில் மேயும் ஒற்றைக் கோழிக்குஞ்சைக் கண்டுபிடித்துவிடுகிறது. ஸ்ருஷ்டியும் பரிணாமமும் வியப்புதான்.  சிலவகைக் கழுகுகள் 15ஆயிரம் அடி உயரத்தில் நூறு கி.மீ வேகத்தைக் கடந்து பறக்கக் கூடியவை. Bald Eagle பற்றிப் படித்தது எல்லாம், நினைவுக்கு வந்தது.

கழுகுகளுக்கு 45 வயதில் ஒரு கண்டம் வருமாம். அந்த வயதில், அதன் அலகு முதிர்ந்து வளைந்து-இறை தேட முடியாமற் போய்விடுமாம், சிறகுகள் கூட கடினமாகி பறக்க இயலாமல் ஆகிவிடுமாம். பறக்காத கழுகை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையல்லவா?.  

பின் அந்த கழுகு ஒரு தனியிடத்திற்கு, பெறும்பாலும் மலையின் பொந்துகளுக்குச் சென்று, பாறையில் அலகை மோதி-மோதி இடித்து கீழே விழச் செய்யுமாம். பின் புதுசாய் முளைக்கும் புது அலகால், தன் வயதான இறகுகளை ஒவ்வொன்றாய் பிடிங்கி எறியுமாம். பின் புதிதாக இறக்கை முளைக்குமாம். இந்த சித்தரவதைப் பணிகள் முடிய ஐந்துமாதம் ஆகும். இந்த ஐந்து மாதமும் அக்கழுகு உணவின்றி, தாக்குப் பிடித்தால், மீண்டும் ஒரு முப்பது வருடம் உயிர் வாழுமாம். இப்போராட்டத்தைக் கைவிட்டால் இறக்க வேண்டியது தான்.

இதை ஒரு முறை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தபொழுது, ஒருவன் சொன்னான்... “அதைவிட செத்தே போய்விடலாம் சார்..” அவனை நினைத்து சிரிப்பு வந்தது.  வாழ்க்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் அணுகுகிறார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பதால், ஆசிரிய இனத்தின் பால் கொஞ்சம் பச்சாதாபமும் ஏற்பட்டது.  ‘வலைவந்தபின் ஆசிரியர் களுக்கு மரியாதை கொஞ்சம் குறைந்துவிட்டது.



கழுகு என்றதும், கந்தசாமியின் நினைவு வந்தது.   இங்கே நான் வந்த புதிதில், கந்தசாமி வாரம் ஒருமுறை வந்தான். பின் மாதம் ஒருமுறை. அப்புறம் வரவே இல்லை. கடைசியாக அவனைப் பர்த்து ஆறுமாதமாவது இருக்கும்.  ‘கழுகு கந்தசாமிபால்ய சினேகிதன். ஒன்றாகப் படித்து, இருவரும் ஆசிரியர் வேலைக்கு வந்து, ஒரே ஊரில் வேலைபார்த்து.... ம்ம்ம்... இருவருமே ஓய்வுபெற்றுவிட்டோம்.  ரிடயர் ஆனபின்னும் கொஞ்ச நாள் பிஸிக்ஸ்ட்யூஷன் சொல்லிக் கொடுத்தான். வேறுசில பணி சார்ந்த சிக்கல்கள் காரணமாக, பணியில் இருக்கும் ஆசிரியர் களுடன் போட்டி போட முடியாமல் ட்யூஷனை விட்டுவிட்டான்.  பணியில் இருக்கும்போது, அவனுக்குத் தெரியாமல் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது, ஒரு டீ கூட குடிக்க முடியாது உடனே மூக்கில் வியர்த்துவிடும்.  எனவே அவனுக்கு நாங்கள் வைத்த பெயர் கழுகு’.

ஏதேதோ கட்டுப்பாடற்ற சிந்தனைகள், சம்பந்தா சம்பந்த மில்லாமல்.  சை, இந்த மனக் குரங்கை அடக்குவது சுலபமாயில்லை.

சுந்தரிப் பாட்டியின் குரல்,  கனவிலிருந்து என்னை கீழிறக்கிக் கொண்டு வந்த்து.  கொஞ்சம் ஓரமாய் ஈசி சேரைப் போட்டுக்கக் கூடாதோ? இடிச்சுக்கறேன் பாருங்க..” புகாருடன் மேலே ஏறிவந்தாள் சுந்தரிப் பாட்டி. அவளுக்கும் வயது எழுபது இருக்கும். இந்த ஹோமில் சீனியர். இருபது வருடமாய் இருக்கிறாளாம்.  அதன் காரணமாகவே, ஹோமின் அதிகாரமையமாக தன்னை  நினைத்துக் கொள்வாள். இப்பொழுது, மாடியில் காயவைத்திருக்கும் புடவையை எடுத்துப் போக வந்திருக்கிறாள்.

நாந்தான் இந்தப் பக்கம் பாத்து, சாய்ந்து படுத்திருக்கேன். உங்களுக்கு கண்கள்  முன்னாலே தானே இருக்கு, பாத்து வர்ரது.. இல்லேன்னா, கொஞ்சம்  நவுருங்கன்னு சொல்றது.. நகர்ந்துட்டுப் போகிறேன்.  அதவுட்டு, ஏன் இங்க படுத்திருக்கன்னு கேக்கக் கூடாது.. புரியுதா சுந்தரிப் பாட்டி..?”

அவளுக்கு  பாட்டிஎன்ற வார்த்தை கோபமூட்டிவிட்டது. ‘ 

நீங்க ரொம்ப குமரனாக்கும்? என்னைப் பாட்டி என்கிறீங்க?” 

நான் தாத்தா என ஏற்றுக் கொள்வதில் எனக்கு ஆட்சே பனையே இல்லை. உங்களுக்கு பாட்டியில்என்ன ஆட்சேபனை? மனதில் என்ன குமரி என்ற நினைப்போ?”

இந்த மனுஷன் கிட்ட பேசினதே தப்பு...முனறியவண்ணம் புடவையை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.

அடுத்த நாள் காலை ரூமில் இருக்கும் பொழுது, அந்த  சுந்தரிப் பாட்டி அழைத்தாள். ஹோமின் டிரஸ்டி வந்தருக்கார். உங் களாண்ட பேசனுமாம். வரச்சொல்றார். போய்ப் பாருங்க.. 

டிரஸ்டி வருகிறார் என்றால், அது கோயில் உற்சவம் போல. சகலரும்  நர்த்தனம் ஆடுவர். இந்த ‘சேவை’ செய்யும் பாசாங்கு எனக்கு ஆகவே ஆகாது. வேண்டுமென்றே ‘அட்டானிக்கால்’ இட்டு அமரத் தோன்றும்.

எதுக்காக என்னைப் பார்க்கனுமாம்.. ஏதாவது யூஷுவல் கம்ப்ளயின்டா..?

யோசித்த வண்ணம்நிதானமாகச் சென்றேன்.

வாங்க அரவிந்தன்... உங்களைக் கூப்பிட்டனுப்பி ஐந்து நிமிஷம் ஆகுது..  நிதானமா வர்ரீங்க?”

அடாடா.. ஓட்டப் பந்தயத்திற்கு கூப்பிடறீங்கன்னு சொல்லியனுப்பியிருந்தீங்கன்னா, ஓடியே வந்திருப்பேனே? “

இந்த பேச்சுதான், உங்களிடம் ஆகாதது.... ஒரு சாரி சொல்லிவிட்டால் வேலை முடிந்த தல்லவா?”

எதுக்கு சாரி சொல்லனும்?  அஞ்சு நிமிஷம்தானே ஆச்சு..? அஞ்சு மணி நேரம் ஆனாப்போல பேசறீங்கஅப்படி உங்களுக்கு ரொம்ப அவசரமாயிருந்தால், நீங்களே வந்து பார்த்திருக் கலாமே?”

“......”

அவர் அனுமதியின்றி ஒரு சேரை இழுத்துப் போட்டு, உட்கார்ந்து கொண்டேன்.

நான் உங்களை உட்காரச் சொல்ல்லை..

இதென்ன ஆண்டான் அடிமை வியாபாரமா என்ன?  நீங்க, வயதில் என்னைவிட முப்பது வருஷம் இளையவர்.  மரியாதைப்படியும் முறைப்படியும்,  நான் வந்ததும்  நீங்கதான் என்னை உட்காரச் சொல்லியிருக்கனும். அதைவிட்டு ஏன் உட்கார்ந்தேன்னு கேக்கறீங்க? நீங்க கடவுளா என்ன?”

உங்க பேர்ல, நிறைய கம்ப்ளெயின்ட் வருது, அரவிந்தன்..

யாரு நரசிம்மனும்.. சுந்தரியும் சொன்னாங்களா..?”

யார் சொன்னால் என்ன.. நீங்க இந்த ஹோமின் கட்டுதிட்டங்களுக்கு கட்டுப்பட மாட்டேங் கறீங்க..

கட்டுப்பாடுகள் நியாயமாய் இருந்தால், யாரும் எனக்கு ஆலோசனை சொல்லவேண்டிய அவசியம் இல்லை.  நானாகவே கட்டுப்படுவேன். எனக்கு டிஸிப்ளின் என்றால் என்னவென்று தெரியும்.  பொறுப்பான பதவியில் இருந்து ரிடயர்ட் ஆன ஆள்தான். எனக்கும்  நிர்வாகம் தெரியும்.. புரியும். ஆனா, அர்த்தமற்ற கட்டுப்பாடுகள் பிடிக்காது..

ப்ரேயரில் உங்களுக்கு பிரச்சினை...?”

மறுபடியும் நீங்கள், தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.. ப்ரேயரில் ஒரு பிரச்சினையும் இல்லை.. ஆனால் கட்டாய ப்ரேயரில் உடன்பாடில்லை. அதென்ன, நிதமும் காலை ஐந்து மணி? சாமி அப்படிக் கேட்டாரா?  இங்கே இருப்பவர்கள் வயசானவர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா என்ன? எதற்கு இந்த வெட்டி கட்டுபாடு?  நான் நாத்திகனாய் இருந்தால் என்ன செய்வீர்கள்? அப்பொழுதும் ப்ரேயர் கட்டாயமா? தனிமனித விருப்பம் என்று ஒன்று உள்ளது, தெரியுமா?

நாத்திகருக்கு இந்த ஹோமில் இடமில்லை...

அப்படியா? உங்க பை-லாவ, அதற்கு ஏற்றாற்போல, ஆத்திகர்களை மட்டும்தான் சேர்ப்பேன் எனத் திருத்திட்டு அப்புறமா பேசுங்க....

இது, இலவச முதியோர் இல்லம்.. புரிஞ்சுக்க முதலில்.

மரியாதை குறைந்து, ஒருமையில் பேசுவதைக் கவனித்தேன்.

வந்தனம் டா... உன்னை மதிக்கிறேன். உன் உயர்வான சிந்தனைக்கு தலை வணங்குகிறேன் டா. ஆனா, நீ தர்மம் செய்ததினால்,  தர்மம் வாங்கியவர்கள் எல்லாம் உனக்கு கால் கழுவி விடனும்னு எதிர்பாக்குற பாரு, அதுதாண்டா பிரச்சினை..

இந்த ஹோமில் உங்களைச் சேர்த்ததே என் தப்பு...

அது உங்கள் உரிமை.. யாரைச் சேர்க்கனும் அல்லது நிராகரிக்கனுங்கறது  நீங்க முடிவு செய்யவேண்டியது.. எவரும் தலையிட முடியாது..

“ நேற்று சுந்தரியிடம் தகறாறு செய்திருக்கீர்..”

“ஆமாம் அவள் கையைப் பிடித்து இழுத்துவிட்டேன்.. நீர் வந்துட்டீர் வக்காலத்துக்கு..  என்ன நடந்ததுன்னு கூட தெரியாம, பொட்டை மாதிரி இப்ப வம்புக்கு வர்ரீகளாக்கும்?”

‘மாடிக்கு போக அனுமதியில்லை என்று தெரியாது..?”

“மாடியில என்ன பொக்கிஷமா கொட்டிவச்சுருக்கீர்..? அங்கே போனா என்ன குடி முழுகிப்போய்விடும். நல்ல காத்து வருது.. போனா என்ன?”

தேவையில்லாத பேச்சு. எங்க கட்டுப்பாடுகளுக்கு நீர் கட்டுப் பட்டு நடக்கனும்..”

“முடியாது..”

முடிவா சொல்லுங்க... எங்க கண்டிஷங்களுக்கு ஒத்து வரு வீங்களா.. இல்லையா?”

எது உங்க கண்டிஷன்இத்தனை மணிக்கு எழுந்து, இந்த சாமியாரை பூஜை செய்துஇப்படி-இத்தனை மணிக்கு சாப்பிட்டு, இப்படித்தான் தூங்கனுங்கறதா? மாடிக்குப் போகதே.. தலை சீவாதே... இதெல்லாம் ஒரு கண்டிஷன்களா? புரிஞ்சுக்கோங்க... இங்கே இருப்பவர்கள் மனிதர்கள். அனாதை ரொபோக்கள் அல்ல.  அவர்களுக்கும் சுதந்திரம் வேண்டும். ஒரு வரை யறுக்கப்பட்ட சுதந்திரம். ஆனா நீங்க எதிர்பார்க்கிறது, அடிமைத்தனம். நான் உனக்கு சோறு போடுகிறேன்... எனவே,  நான் சொன்னபடியெல்லாம் கேட்டாக வேண்டிய கட்டாயம் இருக்கு. நான் உனக்கு கடவுள்"  என்கிறீர்கள்.  அதற்கு உடன்பட முடியாது.

எங்க ரூல்ஸூக்கு கட்டுப்படவில்லையெனில், ஆக்ஷன் எடுப்போம்..

தாராளமா... எடுத்துக்கோங்க...

நீங்க ஹோமை விட்டுவெளியாறலாம்..

முடியாது..   நானாக வெளியேற மாட்டேன். வேண்டு மானால், உங்களது சட்ட திட்டங்கள் என்னென்ன, அவற்றை நான் எப்படியெல்லாம், எப்போது  மீறினேன்என ஒரு கடிதம் கொடுத்து, பின் வெளி -யேற்றுங்கள். போகிறேன்.”

கடிதம் கொடுத்தால் என்னய்யா செய்வே? மயிரைப் புடுங்குவியா..?

கொடுடா..  நாயே,   கொடுத்துப் பாரேன். நான் ரோடில் உட்கார்ந்து போராடுவேன். உன்னை எதிர்த்து அல்லது என்னை மீண்டும் ஹோமில் சேர்த்துக்கோ என்று அல்ல... உன் சட்ட திட்டங்களை எதிர்த்து போராடுவேன்..

இனி இந்த ஹோமில் உனக்கு இடமில்லை.

இதுதான்யா இந்த நாட்டின் கோளாறு... துதிபாடி-துதிபாடி உன்னை மாதிரி ஆட்களை கடவுளாக்கி விட்டார்கள்.  இடதுகை கொடுப்பதை வலதுகை அறியக்கூடாது; அதுதான் தர்மம், தெரியுமா?   உனக்கு தர்ம போதைஏறிவிட்டது... தர்மத்தையும் ‘தர்மத்தோடுதான்’ செய்யனும். உன்னை மாதிரி மண்டை கொழுத்தல்ல, புரிஞ்சுக்க.   இது உன்னை மாதிரி ஹோம் நடத்துபவர்களுக்கு மட்டுமல்ல.. பலருக்கும் இந்த போதை இருக்கிறது.  ஒருவன் அடுத்தவனுக்கு ஏதாவது செய்துவிட்டால், அவன் காலத்திற்கும் அவர்களுக்கு சேவகம் செய்து, சுய அடையாளம் அழிந்து இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.. நம்புகிறீர்கள்.  என்போன்ற கவரிமான்களுக்குஇவை சரிப்பட்டு வராது.. நான் கேட்டபடி லெட்டர் கொடு. நான் போய் என் மூட்டை முடிச்சுக்களை தயார் படுத்திக் கொள்கிறேன்..  இன்னொரு சமாசாரம். நான் டெபாசிட் செய்த தொகையை எனக்கு  திருப்பிக் கொடு, செக்காக...

பதிலை எதிர் நோக்காமல் என் ரூமிற்கு வந்து என் லக்கேஜ்களை பேக் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.


உங்களுக்குத் தெரிந்து,  நான் விரும்புவது போல ஏதாவது ஹோம்  நம் ஊரில் இருக்கா.... நில்லுங்க..நில்லுங்க.. ஏன் என்னைப் பார்த்து ஓடறீங்க..?

5 comments:

  1. இதுபோன்ற கலக சிந்தனை, இல்லையில்லை சுதந்திர சிந்தனை கொண்டவர்களை இந்த உலகில் பலரும் விரும்புவதில்லை.! உங்கள் கதையை படிக்கும்போது பாரதி கவிதையையும் பாலச்சந்தர் படத்தையும் பார்த்தது போல் உள்ளது.! நாத்திகனும் பிராத்தனை செய்ய வேண்டுமா? என்று கேட்கும் ஞானமும் மனித நேயமும் அபாரம் ஆனால் வார்த்தைகளில் ஒரு நளினம் இல்லாமல் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.!
    இந்தக் கதையில் என்னைக் கூட என்னால் அரவிந்த் அய்யாவில் காணமுடிந்தது.!
    அருமையான படைப்பு.!

    ReplyDelete
  2. வயதான காலத்தில் இப்படி ஆதரவில்லாத நிலையில் வாழவேண்டிய கட்டாயம் யாருக்கும் வரக்கூடாது! வந்துவிட்டது. அதிலும் இப்படி அடிமையாக பயந்து வாழ நிர்பந்திப்பது கோரமாக இருக்கிறது. இரக்கம் மனிதாபமானம் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அதை வேண்டி வாழும் நிலைமை வேண்டாம் நரகம்! வேதனை!

    ReplyDelete
  3. நண்பா !

    ங்கொப்பன் மவனே, வீரபாண்டிய அரவிந்தன் கதைகள் ஜோர்.
    அதென்ன கோபம் எப்போதும் அங்கேயே குடிகொண்ட கதையாகவே ! கடுப்பும் - எரிச்சலும் கூடவே பிறந்த குணமான மனிதரா அரவிந்தன்.
    இதைப்போன்ற இடங்களில் அதன் பிரச்சினைகளை சொல்லி, அதை முதிர்ச்சியால் லாவகமாக கையாளும் அரவிந்தனை காட்டுங்களேன்.
    ஏற்கெனவே குணம் மாறிய நிலையில் உள்ள அனைத்து நண்பர்களுக்கு உதவட்டும்.
    ருத்ர தாண்டவம் போய், ஒரு குணவானை காட்டுங்கள் சார்
    அரசு

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அரசு அவர்களுக்கு!

      ருத்ர தாண்டவம் இல்லை ஐயா இது. பாரதி சொன்ன ரௌத்ரம். இதே ப்ளாக்கில் பல மென்மையான, பாஸிடிவான, தொலை நொக்குடன் கூடிய பல பதிவுகள் இருக்கிறது. ‘ஐம்பது ரூபாய்’ கதை (சில பதிவுகளுக்கு முன்) படித்தீர்கள? அதை எழுதியதும் நான் தான். அக்கதை மென்மையாக, மனித நேயத்தோடு அமையவில்லை?

      என்ன செய்ய? போர்க்களத்தைப் பற்றி எழுதும் பொழுது, இரத்தத்தைப் பற்றி எழுதாமலிருக்க முடியுமா? நான் எழுதியது மிகக் குறைவு. சில முதியோர் இல்லங்களில் வாழுபவர்கள், சேற்றைத் தாண்டி,சிறு நீரைத்தாண்டி நரகலில் கால் வைத்துவிட்டது போலத்தான் உணருகிறார்கள். நாகரீகம் கருதியும், முதியோர் இல்லம் நடத்துபவர்களை டிஸ்கரேஜ் செய்துவிடக் கூடாது, காயப்படுத்திவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டுதான் அடக்கி எழுதியுள்ளேன். உண்மையில் பிரச்சினையின் அளவு தீவீரமானது.

      சென்னையில் ஒரு பிரபல ஆஸ்ரம்ம். அதை நடத்துபவர், ஒரு பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு, அங்கே இருக்கும் அனாதைச் சிறுவர்களைக் கொண்டு தூக்கிக் கொண்டு வரச் சொன்னாராம். எப்படி இருக்கிறது?

      சுதந்திர உணர்வு முக்கியம் நன்பரே! பெரியவர்களுக்கு பசியையும்தாண்டி, தன்மானம் வேண்டும் என நினைப்பவர்கள். நக்கிப் பிழைத்தல் அவர்களுக்கு ஆகாது. அவர்களை கௌரவமாக நடத்த வேண்டியது அவசியம். நான் கோடிட்டுக் காட்டியது ஹோம்களின் அடுத்த பக்கத்தை. கதையும் தேவையும் நோக்கமும் அதுவே!

      எல்லாக் கதைக்கும் ஒரு கருப்பொருள் உண்டு. மற்ற வார்த்தை ஜோடனைகள் எல்லாம், அதைச் சுற்றித்தான் இருக்கும். அந்த வகையில் நான் எழுதியது சரியென்றே கருதுகிறேன்.

      அன்புடன்
      பலராமன்.

      Delete
  4. அன்புள்ள அரசு அவர்களுக்கு!

    ருத்ர தாண்டவம் இல்லை ஐயா இது. பாரதி சொன்ன ரௌத்ரம். இதே ப்ளாக்கில் பல மென்மையான, பாஸிடிவான, தொலை நொக்குடன் கூடிய பல பதிவுகள் இருக்கிறது. ‘ஐம்பது ரூபாய்’ கதை (சில பதிவுகளுக்கு முன்) படித்தீர்கள? அதை எழுதியதும் நான் தான். அக்கதை மென்மையாக, மனித நேயத்தோடு அமையவில்லை?

    என்ன செய்ய? போர்க்களத்தைப் பற்றி எழுதும் பொழுது, இரத்தத்தைப் பற்றி எழுதாமலிருக்க முடியுமா? நான் எழுதியது மிகக் குறைவு. சில முதியோர் இல்லங்களில் வாழுபவர்கள், சேற்றைத் தாண்டி,சிறு நீரைத்தாண்டி நரகலில் கால் வைத்துவிட்டது போலத்தான் உணருகிறார்கள். நாகரீகம் கருதியும், முதியோர் இல்லம் நடத்துபவர்களை டிஸ்கரேஜ் செய்துவிடக் கூடாது, காயப்படுத்திவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டுதான் அடக்கி எழுதியுள்ளேன். உண்மையில் பிரச்சினையின் அளவு தீவீரமானது.

    சென்னையில் ஒரு பிரபல ஆஸ்ரம்ம். அதை நடத்துபவர், ஒரு பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு, அங்கே இருக்கும் அனாதைச் சிறுவர்களைக் கொண்டு தூக்கிக் கொண்டு வரச் சொன்னாராம். எப்படி இருக்கிறது?

    சுதந்திர உணர்வு முக்கியம் நன்பரே! பெரியவர்களுக்கு பசியையும்தாண்டி, தன்மானம் வேண்டும் என நினைப்பவர்கள். நக்கிப் பிழைத்தல் அவர்களுக்கு ஆகாது. அவர்களை கௌரவமாக நடத்த வேண்டியது அவசியம். நான் கோடிட்டுக் காட்டியது ஹோம்களின் அடுத்த பக்கத்தை. கதையும் தேவையும் நோக்கமும் அதுவே!

    எல்லாக் கதைக்கும் ஒரு கருப்பொருள் உண்டு. மற்ற வார்த்தை ஜோடனைகள் எல்லாம், அதைச் சுற்றித்தான் இருக்கும். அந்த வகையில் நான் எழுதியது சரியென்றே கருதுகிறேன்.

    அன்புடன்
    பலராமன்.

    ReplyDelete