Tuesday, March 27, 2012

ராணுவ தலைமை தளபதி!


நமது ராணுவத் தளபதி, திரு. வி.கே சிங், மிகக் கடுமையான குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியுள்ளார். குற்றச்சாட்டு என்பதை விட, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் என்பதே பொருத்தம்.

தரம் குறைந்த வாகனங்களை வாங்குவதை அனுமதிப்பதற்காக, ரூபாய் 14 கோடி லஞ்சம் வழங்க, தரகர் ஒருவர் முன் வந்ததாகக் கூறியுள்ளார். *ஒரு வாகனத்திற்கு, ரூபாய் 88,000 வீதம், 1600 வாகனகளுக்கு 14 கோடி ரூபாய்.

மேற்கண்ட லஞ்ச ஆஃபரை பாதுகாப்பு அமைச்சருக்குத் தெரிவித்து விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்!

இந்தியாவில், கடந்த சில மாதங்களாகவே, ராணுவத்திற்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் ‘உறவு’ சீராக இல்லை என்பது நாடறிந்த ரகசியம். அதுவும், திரு. வி.கே.சிங் அவர்களது, பிறந்த தேதி குறித்த சர்ச்சையில், எவரும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளவில்லை. நல்ல வேளையாக உச்ச நீதிமன்றம் தலையீட்டினால், பிரச்சினை ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்தது.

பெருமுதலாளிகள், உயர் அதிகார வர்க்கத்தினர், தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கள்ளக் கூட்டணி புரையோடிவிட்டது. தொலை தொடர்பு சாதனங்கள் வாங்குவதில் துவங்கி, ரோடு காண்டிராக்ட் வரை லஞ்சம் ஆற்றுவெள்ளமாக ஓடுகிறது. அரசல் புரசலாக இருந்த ராணுவ தளவாட கொள்முதல் ஊழல் இப்போது வெளிவந்து விட்டது.

நமது உயர்அதிகாரிகள், எதைத்தான் விட்டு வைப்பார்கள்! கட்டிக்கொள்ளப் போகும் மனைவிக்கு தாலி வாங்குவதானால் கூட அதற்கும் லஞ்சம் கேட்கும் அளவிற்கு நாறிப் போய்விட்டனர்.எலும்பு பொறுக்கிகளான நமது அதிகார வர்க்கம், லஞ்சம் வாங்குவதை வாழ்க்கை முறையாகவே மாற்றிக் கொண்டு விட்டனர் போலும்!.

நமது ஜி.டி.பி ல் 2..4%, ராணுவத்திற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் எத்தனை சதவிகிதம் உண்மையாகவே, தளவாடங்கள் வாங்கப் பயன்பட்டது என்பதை அறிந்து கொள்ள இந்த நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு! இந்த தொகையில், எவ்வளவு கோடிகளை சுருட்டிக் கொண்டனர் என்பதை பத்திரிக்கைகளும் உளவு நிறுவனங்களும்தான் கண்டு பிடிக்க வேண்டும்.

இது ஒரு புறமிருக்க, ராணுவ ஜெனரல் பதவி என்பது, சர்வ வல்லமை பொருந்திய அதிகார மையம். அவர் சாதாரண 'கிளார்க்' போல 2010-ல் தனக்கு முறைகேடாக, தரம் குறைந்த வாகனங்கள் வாங்க தரகர் லஞ்சம் தர முன்வந்தார் என சொல்வது நகைப்புக் கிடமாக உள்ளது! அந்த தரகர் மேல் வழக்குத் தொடுக்க, இலாக்கா ரீதியான நடவடிக்கை எடுக்க, அந்த நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்ய, ஏன் முயலவில்லை?இவ்வளவு நாள், தளபதி அமைதி காத்தது ஏன்? விஷயத்தை பாதுகாப்பு அமைச்சருக்கு சொல்லிவிட்டதாக தளபதி சொல்கிறாரே? அதுகுறித்து அமைச்சகத்தின் மேல் நடவடிக்கை என்ன? பிறந்த தேதி சர்ச்சைக்கும், இந்த திடீர் ஊழல் புகாருக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? 

வெளி வந்த (?) விஷயமே இவ்வளவு நாராசமாக உள்ளது என்றால், வெளிவராத, மறைக்கப்பட்ட மற்ற விஷயங்கள் எந்த அளவு கீழ்த் தரமானதாக இருக்கும்? நமது விமான,கப்பல் மற்றும் தரைப் படைகளுக்காக வாங்கப்பட்ட, வாங்கப்படும், வாங்கப்படவிருக்கும் தளவாட பேரங்கள் யாவற்றையும் சந்தேகப்பட வேண்டியுள்ளதே?

முழுமையான களவானிக் கூட்டமான நம் நாட்டு அதிகார வர்க்கம், ராணுவம் கேட்டுக் கொண்ட தளவாங்கள் அனைத்தையும், கேட்ட தரத்தில் வாங்கித் தந்ததா? இல்லை, தங்களது பாக்கட்டுகளை நிரப்பிக் கொண்டு, தரமற்றவற்றை வாங்கிக் கொடுத்ததா?

ஒரு டிரக்கைக் கூட, நம்மால் உற்பத்தி செய்ய முடியாத அளவிற்கு, நமது தொழில் நுட்ப அறிவு ‘சூனியமாகிப்’ போய்விட்டதா? இல்லை நமது தொழில் நுட்பத்தை வளர விடாமல் செய்தால்தான், வெளி நாடுகளிலிருந்து தளவாடங்களை இறக்குமதி செய்து ‘கொள்ளை’ யடிக்க முடியும் என, வாளா விருக்கிறார்களா?

ராணுவத் ‘தேவை’ யாவும், உண்மையிலேயே “தேவை” தானா? இல்லை மூட்டை அடிக்க ‘தேவை’ ஒரு சாக்கா?

ராணுவ கொள்முதல் குறித்து ‘ஆடிட்’ ஏதாவது உண்டா?

நாம் இறக்குமதி செய்யும் ராணுவ தளவாடங்கள் யாவும், ராணுவத்தின் தேவையை பூர்த்தி செய்கின்றனவா? அவற்றின் பர்ஃபார்மென்ஸ் ரிபோர்ட் என்ன? இறக்குமதி செய்யுமுன், கொள்முதல் குறித்து ‘எக்ஸ்பர்ட்’ கமிட்டி ஏதும் போடப்பட்டு, அதன் பரிந்துரை பெறப்பட்டதா?

வாய்ச் சவடால் / வசனம் இல்லாமல், நமது ராணுவம் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க, உண்மையிலேயே தயாராக உள்ளதா?

தற்போது திடீரென போர் ஏற்பட்டால் சண்டைக்குத் தேவையான ‘வெடி பொருட்கள்’, இரண்டு நாள் போருக்குத்தான் போதுமானதாக இருக்கும் என பத்திரிக்கைச் செய்தி வந்ததே? உண்மையா?

சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளுக்குப் பின்னும், ஏன் நமது ராணுவ தளவாடத் தேவைகளுக்கு, முழுமையாக இறக்குமதிகளையே நம்பியுள்ளோம்? 


இத்துறையில் ஏன் கொஞ்சம்கூட முன்னேற்றமில்லை? 

நமது ஆர்.& டி முடங்கிவிட்டதா? இல்லை முடக்கப்பட்டு விட்டதா? 


கேள்விகள் அடுக்கடுக்காய் எழுகின்றன. இதற்கான பதில் பெறப்பட்டே ஆக வேண்டும்! பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ‘கூச்சல்’ போட, இதை ஒரு சந்தர்ப்பமாய் பயன் படுத்திக் கொள்ளாமல், உண்மை நிலைமை வெளிக் கொணரும் விதமாக, தேசப் பற்றுள்ள- பொறுப்பான கட்சிகளாக நடந்து கொள்வார்களா? இந்த விவகாரத்தில் பதில்களைவிட கேள்விகள் தான் அதிகமாகின்றன!

காங்கிரஸின் 'தேசப்பற்று' அவர்கள் போடும் “காந்திக் குல்லாய்’ வேஷத்தில் மட்டும்தான் உள்ளது!


குறிப்பு: டிஃபன்ஸ் டீல் குறித்த செய்தி அனுபவம் பெற்றவர்களுக்கு, இந்த செய்தி அதிர்ச்சியளிக்காது. ஏனெனில், தனது தேசீய வருமானத்தில் கணிசமான பகுதியை “பாதுகாப்பிற்காக” செலவழிக்கும் அனைத்து நாடுகளின் ராணுவ பேரங்களின் பின்னாலும் பன்னாட்டு பகாசூர கம்பெனிகளும், தரகர்களும் இருபார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்! 


கடந்த காலத்தில் கூட இது போன்ற பல குற்றச் சாட்டுகள் (போஃபர்ஸ்) சுமத்தப்பட்டுள்ளன. சி.பி.ஐ –ன் விசாரனைக்கு உத்தரவிடப்பட்டிருந்தாலும், உண்மை வெளிவருமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் இந்த ஊழல் வலையில் சம்பந்தப்பட்டிருப்பது, உயர் அரசியல்வாதிகள், உயர் அதிகார வர்க்கம் மற்றும் சர்வதேச தரகர்கள்.


ஜெய்ஹிந்த்! 

No comments:

Post a Comment