Friday, March 4, 2016

மலையரசி மூணாறு

என்னதான் மலைப்பூட்டும் கட்டிடங்களை மனிதன்  கட்டிக் கொண்டாலும், இயற்கையின் சிறுதுளி அழகுக்குமுன் மனிதனின் சாதனை கொஞ்சம் நாணத்தான் வேண்டி யிருக்கிறது.   குறிப்பாக மலைகள் !! இவை ஒவ்வொன்றும், தனக்கென பிரத்யேகமான அழகைக் கொண்டிருக்கிறது.

ஆயிரக்கணக்கான அடிகளுக்கு சரேலென உயரும் செங்குத்துப் பாறைகள்,  நீண்ட பள்ளத்தாக்குகள், சன்னமாக வெள்ளிக் கொலுசுகளாய் எங்கிருந்தோ வந்து  சொட்டும் அருவிகள், ஆர்பரித்து வீழும் அருவிகள்... .அடாடா மலைகள்தான் எவ்வளவு ரம்மியம். ஆச்சர்யமூட்டும் ரம்மியம். மலைக்க வைக்கும் ரம்மியம். தன்னைத் தேடி வந்தவர்களுக்கு மலைகள் வழங்கும் பேரழகு தானே தானே அவற்றின் கொடை?

இந்த வாரம் இரு தினங்கள்  முணாறு சென்றுவரும் வாய்ப்பு கிடைத்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் அள்ள அள்ள குறையாத அழகைக் கொண்டிருக்கும் அட்சய பாத்திரம். மலைகளின் மடியில் இளைப்பாறும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவதே பேரின்பம். அதனால்தான் பெரும் அறிஞர்களும் துறவிகளும் மலைகளை நாடிச் சென்றார்களோ என்னவோ? வெறுமே அழகைப் பருக வேண்டுமா? எடுத்துக்கொள்.  ஆன்ம விசாரணை வேண்டுமா? அதுவும் பெற்றுக் கொள்.

பிருமாண்டமாய், கற்பனைக்கும் எட்டாத வடிவங்களில்,  அடர்ந்த காடுகளையும் அருவிகளையும் உள்ளடக்கிக் கொண்டு, ஓசையின்றி வீற்றிருக்கும் முகடுகளுக்கு நிகர் உண்டா? எனக்கு முன்னால் உனது கர்வம், அகங்காரம், சாதனை இவை யாவும் எம்மாத்திரம் என மௌனமாக மனிதனைப் பார்த்து நகையாடுவது போலிருந்தது மூணாறு அனுபவம்.  எத்துனை முறை சென்றாலும் சலிக்காத மலைகள்.

கவணிப்போருக்கு மலைகள் மௌனமாக ஏதோ சொல்வது புரியும். இலைகளின் ஊடே சூரியக் கிரணங்கள் ஊடுறுவி விழுவது போல அவற்றின் செய்தி நம்மை ஊடுருவிச் செல்கிறது. ஆன்ம சுத்தம் கிடைக்கப் பெறுகிறது. இயற்கையின் இதயத்தை அருகில் தரிசிப்பபது போன்ற தொரு அனுபவம்.

பனி போர்த்திய சிகரங்களும், பசுமைதாங்கிய குன்றுகளும், அதன் மடியில் உறங்கும் மூங்கிற் புதர்களும், சலசலக்கும் ஓடைகளும், சிற்றாறுகளும், சற்றே உள் நோக்கிச் சென்றால் அதன் அச்சுறுத்தும் அமைதியும், மேகங்கள் கூட காதல் கொண்டு முகடுகளை விட்டு விலகிட மனமின்றி அதன் உச்சிகளை ஈரத்தோடு சுற்றிவரும்  ஈர்ப்பு என, இன்னும் எத்தனைதான் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது மலைகள்?

ஆனாலும், மனிதன் தன்னால் ஆனமட்டும் மலைகளை சிதைக்க, விடாமல் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறான்.  மரங்களை வெட்டி வீழ்த்தி, மலைமகளை நிர்வாணப் படுத்திப் பார்ப்பதில்தான்  நமக்கு எவ்வளவு ஆர்வம்?  மலைகள் எங்கும் ‘கேக் வெட்டி வைத்திருப்பது போல டீ எஸ்டேட்கள். எஸ்டேட்களின் ஊடே, இங்கொன்றும் அங்கொன்றுமாக மரங்கள்.  மலைகள் எங்கும் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த ‘டீ எஸ்ட்டேட்கள்’ வரமா சாபமா புரியவில்லை.

சுற்றுவட்டார ஈரத்தை உறிஞ்சித் தள்ளும் யூகலிப்டஸ் மரங்களை ரசிக்க இயலவில்லை.

எல்லா இடங்களையும் போல, இங்கும் ‘வ்யூ பாயிண்கள்’ இங்கும் இருக்கின்றன. சரேலென  ஐந்தாயிரம் அடி சரிந்து, அடிவாரத்தில் இருக்கும் ஊர்களையும் அணைக்கட்டுகளையும் காண முடிகிறது. ஆனால் அந்த ‘வ்யூபாயிண்ட்’ செல்லும்  நூறு மீட்டர் தூரத்திற்குள், மலைகளின் அழகை மறைத்து எத்தனை கடைகள்? அந்த  சிறு தூரத்திற்குள் எவ்வளவு பஜ்ஜி,போண்டா, நிலக்கடலை, தொப்பி, சாக்ஸ், ஐஸ்க்ரீம், விளையாட்டு பொருட்கள், வளையல்கள், தோடு, ஸ்வெட்டர், இளநீர், ஜூஸ், டீ,காப்பி, பழக் கடைகள்?


இதை யாராவது ஒழுங்கு படுத்த மாட்டார்களா? எக்கோபாயிண்ட் என்று ஒரு இடம். கடைகளைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்றால்தான் எதுவும் தெரியும். அத்தனை கடைகள்.  சில படங்கள்:  

" லக்கம் " அருவி 

 ஒரு  தோட்டம் 

சிற்றனை 

எங்கே பார்த்தாலும்  தேயிலைத் தோட்டங்கள் 









தேக்கடி 

தேக்கடி காய்ந்து கிடக்கிறது.


3 comments:

  1. மலையும், பசுமையும், இதமான குளிரும், பல்வேறு வகையான மக்கள் , பூந்தோட்டம், மலர்கள், எங்கெங்கோ இருந்து இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டு மகிழ்ந்த நண்பர்கள், கூடி உணவு, உரையாடி மகிழ்ந்த நட்பு என இனிமை பல காண்பதே மகிழ்வதே சுற்றுலா நோக்கம் என்ற இனிமை கண்டிருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
    திருநாவுக்கரசு

    ReplyDelete
  2. Super trip.thank you for these information

    ReplyDelete
  3. Super trip.thank you for these information

    ReplyDelete