சிறுவயதில் பலவேறு பழமொழிகளைக்
கேட்டிருக்கிறோம். அதன் முழுப் பொருளுணராமல், சடங்காகப் படித்துவைத்ததினால், பல முக்கியமான,
அரிதான விஷயங்களை மண்டையில் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை. பல சொற்றொடர்கள்
இருந்தாலும், அதில் முக்கியமான ஒரு வாக்கியம் ‘ Health is wealth’ என்பது. சிறுவயதில் ஆரோக்கியமே செல்வம் என்பதை உணர்ந்து அதன்படி வாழ்க்கை நெறிகளை
அமைத்துக் கொள்ளாததினால் முதுமையில் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம்.
அதற்கென்ன இப்பொழுது என்கிறீர்களா? காலையும்
இரவும் ‘பல் துலக்கு’ என பெரியவர்கள் சொன்னார்கள்தான். (பலர் இதை ‘பல் தேய்ப்பது’
என தவறாகப் புரிந்து கொண்டு, பாத்திரம்
விளக்குவதைப்போல தேயோ தேய் என தேய்த்து ‘எனாமலை’ உண்டு இல்லை என ஆக்கிவிடுவார்கள்)
அதைக் கடைப்பிடிக்க மறுத்து, வயதானதும் பல் உபாதைகளுக்கு ஆளாகும் போதுதான் அந்த
அறிவுரையின் அருமை புரிகிறது. புத்தி வந்த
போது பற்கள் இல்லையே?
நேற்று இரவு ஒரு விந்தையான வலி. படுத்தால் மேல்
கடைவாய்ப்பல் வலி உயிர் போயிற்று. எழுந்து உட்கார்ந்தால், வலியின் கடுமை குறைகிறது.
இதென்ன அடங்காப்பிடாரி வலி? வேறு வழியின்றி, உட்கார்ந்து கொண்டே இரவுப் பொழுதைக்
கழித்தபின், காலை எழுந்ததும், எப்பொழுது பத்துமணியாகும் எனக் காத்திருந்து ஒரு
பிரபல டென்டிஸ்டிடம் விரைந்தேன். கூடுமானவரை ஆங்கில மருத்துவத்தை விலக்கி விடுபவன்
நான். ஆனாலும் வலிகளிலேயே, இம்சையான பல்வலியைப் தாங்கிக் கொள்வது இயலாமலிருக்கவே,
அல்லோபதியை நாடினேன்.
மருத்துவமனைகளின் ரிசப்ஷனில், இப்பொழுது ஒரு டி.வி யை வைத்துவிடுகிறார்கள். அங்கே
இருக்கும் உதவியாளர் வாயையும் கண்களையும் பிளந்துகொண்டு, டி.வியை விழுங்கிவிடுவது
போல பார்த்துக் கொண்டிருப்பார். அவரை
எழுப்பி என் பெயரைக் குறித்துக் கொள்ளச் சொல்லவே, பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.
விரைவிலேயே எனது முறை வர, உள் நுழைந்து, ஒரு பிரம்மாணமான
நாற்காலியில் அமர(படுக்க)வைத்து, ‘எந்தப் பல் வலிக்கிறது?’ என டாக்டர் கேட்க,
ஆஹா... எல்லாப் பற்களும் வலிப்பது போல தோன்றியது. அவர் ஒவ்வொரு பல்லாக தட்டிக்
கொண்டே வர, ஒரு பல்லைத் தட்டியபோது, வைகுந்தம் தென்பட, அலறிப் புடைத்து....
இதுதான், இந்தப் பல்தான் என்றேன். ஆனால்
அது கீழ்க் கடைவாய் வரிசையில் கடைசிப்பல்!
உங்களுக்கு கீழ்க்கடைவாய்ப்பல்லில்தான் பிரச்சினை. அதன் விளைவுதான் மேலே
வலி என்றார். எனக்கென்னவோ இது ஏற்புடையதாக இல்லை. “இல்லை டாக்டர்... வலி மேல் கடைவாய்ப்
பல்லில்தான் ...”. அவர் மீண்டும்
சோதித்து, ஒரு எக்ஸ்-ரே எடுத்து வரும்படி பணிக்கவே, அடுத்த தெருவில் இருக்கும் எக்ஸ்ரே லேபில்
நுழைந்ததும், அங்கிருக்கும் ஒரு டி.வி அம்மணி, பாய்ந்து பிரிஸ்கிருப்ஷனைப்
பிடிங்கிக் கொண்டு, 450 ரூபாய் ஆகும் என்றார். இதில் நோயாளிக்கு ஏதும் தேர்வு (Option) இருக்கிறதா
என்ன? கேட்ட ரூபாயைக் கொடுத்துவிட்டு, காத்திருக்க, எக்ஸ்ரேக்கு அழைப்பதாகத்
தெரியவில்லை. ‘ஏன் நேரமாக்குகிறீர்கள்’ எனக்கேட்க, ‘வெயிட் செய்யுங்கள், ஆள்
வரணும்’ என்றார். இந்த தெனாவட்டான பதில் என்னை சூடேற்றிவிட்டது. ‘இது என்ன திமிர்த்தனமான பதில்? காசு வாங்கும்
பொழுது, ஆள் இல்லை எனத் தெரியாது? எடு என்
பணத்தை....., நான் வேறு இடத்தில் பார்த்துக் கொள்கிறேன்” என ஆங்கிலத்தில் குரல்
உயர்த்தி உரும, ஒரு பொறுப்பாளர் ஓடி வந்தார். அதென்ன தாய்மொழியில் கேட்டால் பதில்
சொல்வதில்லை?
அடுத்த
நொடி எக்ஸ்ரே ரூம் திறந்தது. இது ஒரு விதமான எக்ஸ்ரேயாக இருந்தது. இரு
தகடுகளுக்கு மத்தியில் தலையை நிலையாக வைத்துக் கொள்ள, மெஷின் தலையை அப்பிரதட்சனமாக, ஒரு சுற்று சுற்றி
வந்து 270◦ க்கு ஒரு எக்ஸ்ரே எடுத்துக்
கொடுத்தது.
ஃபில்ம் உடன், மீண்டும், டாக்டரின்
தரிசனத்திற்கு க்யூ. “நான்கு பற்கள்
பாதிக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை எடுத்துவிடலாம். ஆனால், வேர்சிகிச்சை (Root Canal) செய்துகொண்டால், பற்களைக்
காப்பற்றலாம்” என அறிவுறுத்த, பற்களைத் தக்கவைத்துக் கொள்ளும் முறையைத்
தேர்ந்தெடுத்தேன். முதலில் இரு பற்களுக்கு
மட்டும்,
பின்னால் அடுத்த இரு பற்களுக்கு.
‘ரூட் கெனால்’ முறை என்பது அனைவரும் அறிந்த
ஒன்றுதானே?
அடுத்த அரை மணி நேரம், ‘அண்டா காகுஸம்.. அபு
காகுஸம்’ என நான் வாயைப் பிளந்து கொண்டிருக்க, நான்கு கைகளும் பல சுத்தி,குரடு,சிரஞ்ச்
போன்ற உபகரணங்கள் வாய்க்குள் சென்று வந்து கொண்டிருந்தன. வாக்குள் தண்ணீர் பீய்ச்சியடிக்க, அதை வேறு
ஒருவர் மிஷின் மூலம் உறிஞ்சி எடுக்க,
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..க்வீவீக்க் என என்னவோ சப்தம்.
பெருமாளிடன் முழுமையாக தன்னை ஒப்புவித்துக்
கொண்ட வைஷ்ணவன் போல, படுத்திருக்க, முப்பது நிமிடம் கழித்து விடுதலை கிடைத்தது. கதை இதோடு முடியாதாம், மீண்டும் ஒரு எக்ஸ்ரே
எடுத்துக் கொண்டு, ஒருவாரம் சென்று வரவேண்டுமாம். அப்பொழுது அந்த இரண்டு பற்களுக்கும்
‘மகுடம்’ (Crown) சூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்குமாம். மகுடமா? ஆமாம்.. பல்லைப்போலவே
ஒரு மாஸ்க் சிதைந்த பற்களுக்கு அணிவிக்கப் படுமாம்.
இது முடிந்தபின், அடுத்த இரு பற்களுக்கு இது
போன்ற உபசரணைகள். ம்ம்ம்ம்ம்ம் இன்னும் ஒரு மாதத்திற்கு எங்கும் நகர முடியாது.
நன்றாக பற்கள் இருக்கும் நபர்கள், காலையும்
இரவும் பல் துலக்கி (மூலிகை பற்பசை-பொடி உத்தமம்), நாக்கு க்ளீன் செய்து,
சாப்பாடிற்குபின் நன்றாக வாய் கொப்பளித்து கவனமாக உங்கள் பற்களைக் காப்பாற்றிக்
கொள்ளுங்கள். உணவுவேளைகளுக்கு இடையே
பேசுவதற்கு மட்டும் வாயைத் திறந்தால் போதும்.
No comments:
Post a Comment